நிழல் இலா ஒளி (பகுதி 4)

by பாதசாரி
0 comment

1. யோசனை எனும் ஆறாப் பசிக்குப் பெருந்தீனிதான் சொற்கள். புசித்துப் புசித்தும் அடங்குதில்லை. சொற்கள், சொற்கள், சொற்கள் – மொழி கடந்ததோர் உலகம் வேண்டுகிறேன்.

*

2. ஒரே கதைதான் உலகில்; சித்தரிப்புகளில் மட்டுமே அழகியலின் பன்முகம்.

*

3. தனக்குத்தானே அடிமையாதல் என்பதுதான்
தனிமைக்கு முக்கியக் காரணம்.

*

4. உடுப்பும் வேசம். உடலும் வேசம். உள்ளமும் வேசம்.
உயிர் ஒன்றே வேசம் வேண்டாதது.
இயற்கை மட்டுமே ஒருபோதும் வேசம் பூணாதது.!

*

5. காற்றடைத்த பைக்குள் என்ன சத்தம்?
கொஞ்சம் சொற்கள் அடைத்த கிலுகிலுப்பையை ஆட்டி மனம் விளையாட்டு காட்டுகிறது.

*

6. தோட்டத்திலே பாதி கிணறுங்கற மாதிரி,
ஒடம்புலே பாதி மனசு!

*

7. எல்லா தப்பித்தல்களும் சென்று சேருமிடம்
அபத்தத்தின் முட்டுச்சந்துதான்!
இனி வேறு வழி? அங்கிருந்தும் தப்பித்தாகணும்!

*

8. அகங்கார நுண்கட்டளைகளைப் பிற உயிர்கள் மீது செலுத்தாமல் விட்டாலே மனிதன் மெய்யான நிம்மதி பெறுவான் – அவனும் பிற ஜீவராசிகளும்!

*

9. ஒருவர் மீதான பயத்தைப் போக்கிக்கொள்ள ஒரே வழி அவரை நேசிப்பதுதான். மரணத்தின் மீதான பயத்துக்கும் இது பொருந்தும்!

*

10. ஒளிந்துகொள்ள மனிதன் கொண்டிருக்கும் இரகசியப் பொந்து, வார்த்தைக் கிடங்கு என்பதே மனித உறவுகளின் அடிப்படைத் துயர்!

*

11. இகழ் அள்ளி வீசிடும் கூச்சவலி போலுமே
புகழ் அள்ளித் தெளிக்கும் கூச்சவலியும்!

*

12. நினைத்தது நிறைவேறாமல் அன்றிரவு
முதிரா மனம் தூங்கவே இல்லை.
நினைத்தது நிறைவேறியும் அன்றிரவு
முதிர்ந்த மனம் தூங்கவே இல்லை.

*

13. ஒன்றை நெஞ்சு நிறைய நெகிழ்ந்து வியந்தால்,
அங்கே பொறாமைக்கு இடமில்லை!

*

14. நீ புகழப்பட வேண்டுமானால் அங்கே ஒரு சாதாரணன் அவசியம். எனில், இருவர் இருப்பிற்கும் தனி அர்த்தமில்லை!

*

15. அவரவர் தம் சொந்தக் காலில் விழுந்தாலே போதும்!

*

16. மூளைச் சிலந்தி விரித்த மாயவலைப் பின்னலில் சிக்கிய ஒரு ஈயோ இந்த மனம்?

*

17. எழும்பி எரியும் தீக்கொழுந்தின் வடிவத்தை
யாரால் தீர்மானிக்க முடியும்?

*

18. உடல் எனும் படைப்புக்கு மீறின அதிசயம் பூமியில் வேறுண்டோ? இயற்கையே பரிசளித்த அந்த அதிசயத்தைப் புறம் என ஒதுக்கினேன். எனக்கு இனி பெற்றுக்கொள்ள அற்ப மனிதனிடமிருந்து எதுவுமில்லை. அரிது அரிது மானுட உடலாய்ப் பிறத்தல்தான் அரிது ஞானக் கிழவியே!

*

19. நான் சும்மாதான் போய்க்கொண்டிருக்கிறேன். என் நிழல் குதித்துக் குதித்தாடிக்கொண்டே என்னைப் பின்தொடர்கிறது. என்ன மாயச் சேட்டையடா இந்த வாழ்க்கை!

*

20. பஞ்ச பூதங்களுக்குள்ளும் அடங்கி,
ஒரு சாட்சி பூதமாக என்னை உணருகிறேன்.

*

21. ஒருவர் இன்னொருவர் மீது கொள்ளும் வெறுப்பு – அது அவரளவில் நியாயமான வெறுப்பாயினும் – நீங்காது நீண்டகாலம் நீடிக்கும் பட்சத்தில், வெறுப்பாளருக்கு மனதில் புற்றுநோய்க்கு வாய்ப்புள்ளது! அந்த நெடுங்கால வெறுப்புணர்விலிருந்து மீளமுடியாத துன்பம் திரண்டு, அவ்வெறுப்பானது தன் மீதே ஏறித் தன்னைத்தானே வெறுக்க வைத்து தற்கொலை வரை துரத்தக்கூடியது!

*

22. மெய்யாலுமே இந்தத் துக்கத்துக்குக் காரணம், எனக்கும் எனக்குமான மோதல்தான்!

*

23. வளர வளர மரம் வைரமாகும்… வளர வளர மனம் துருப்பிடித்த  தகரமாகும்!
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை… என்கிறான் கவி கண்ணதாசன்.

*

24. பச்சிளங்குழந்தைக்கு நகம் வெட்டிவிடும் போதான கவனத்தையும் கலக்கத்தையும் போலவே ஆனது இவ்வாழ்வு.

*

25. வெளியிலிருந்து திறக்கும் கதவு என்றும் கூண்டுக்கானது.
உள்ளிருந்து திறக்கும் கதவு பறத்தலுக்கானது.

*

26. மருள் சூழ் உலகை எதிர்கொள்ள
நமக்கு அருள் வாழும் இதயமே வழி.
நீருக்குள் உப்பு உலகு
உப்புக்குள் நீர் இதயம்.

*

27. தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது.
நன்மையின் கனிகள் உயிரில் கனிந்து தானே உதிர்வது.

*

28. பூமித் தரையில் நிற்கிறதா சுழல்கிறதா எனத் தெரியாது
ஒரு மௌன கணத்தில் பம்பர இயக்கம்.
தலைசாயும் முன் ஒரே சுண்டில் அள்ளி உள்ளங்கையில் சுழலவிட வேண்டும் அவ்வடக்கத்தை.
அடக்கம் அமரருள் உய்க்கும்.

*

29. சில காட்சிகள் அதனளவில் கவிதையாகிவிடும்.
மொழி அவசியமில்லை.
மேலும் கருத்தூன்றுபவர்களுக்கு
அந்தக் கவிதை காட்சிப்படாது.

*

30. கடைசிச் சொல்லோடு எந்தக் கவிதையும்
முடிந்துவிடுவதில்லை.

*

முந்தைய பகுதிகள்:

  1. பகுதி 1
  2. பகுதி 2
  3. பகுதி 3