மேகி கேரிஸன் – செய்வன தில்லாய்ச் செய்!

0 comment

உலகைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்க சூப்பர் ஹீரோக்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளைப் (இன்றும்) பறைசாற்றும் இரகசிய உளவாளிகள், இத்தாலிய கௌபாய்கள், துப்பறிவாளர்கள் என்று கடிவாளமிட்ட குதிரை போலத் தொடர்ச்சியாகக் காமிக்ஸ் வாசிப்பு சலிப்பூட்டும்போது வசந்தமாக ஒருசில படைப்புகள் வந்து நமது எண்ணத்தைச் சற்றே திசை திருப்பும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் மேகி கேரிஸன் என்ற பெண்ணை மையப்படுத்தி சென்ற மாதம் வந்த முத்து காமிக்ஸ் இதழ் “செய்வன தில்லாய்ச் செய்!” இரண்டு பிரெஞ்சுப் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் லண்டனில் நடப்பதுபோல இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இரட்டை எழுத்தாளர்கள் சுபாவின் படைப்புகளில் சூப்பர் ஹிட் ஜோடியான நரேந்திரன் – வைஜெயந்திக்குப் பிறகு மிகவும் பிரபலமான இன்னொரு ஜோடி எதுவென்றால், அது ஜான் சுந்தர் – அனிதா இல்லை. சொல்லப்போனால், இந்த ஜோடியில் பெண்ணே இல்லை. துப்பறிவாளர் செல்வா – அவரது உதவியாளன் (‘ன்’தான், ‘ர்’ இல்லை) முருகேசன் தோன்றும் கதைகளைப் படித்திருந்தீர்கள் என்றால், இந்த மேகி கேரிஸன் காமிக்ஸ் கதை உங்களுக்குப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.

அதிர்ஷ்டத்தின் ஜென்ம விரோதியான செல்வாவையும், அவரது உதவியாளன் முருகேசனையும் ஒரே பாத்திரமாக மாற்றி, அதையும் ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதுவும் செல்வாவின் கதைகளில் வரும் First Person Narrative-லேயே கதையைச் சொன்னால்?

Hold On.

மேகி கேரிஸனுடனாக உங்கள் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

கதை – அறிமுகம்: வேலையில்லாமல் இரண்டு ஆண்டுகளைக் கழித்த மேகிக்கு அவரது பக்கத்து வீட்டுக்காரரின் முயற்சியால் ஒரு தனியார் துப்பறிவாளரிடம் வேலை கிடைக்கிறது. ஆனால், வேலையின் முதல் நாளே மேகிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. போதையின் மறு உருவமாகத் துப்பறிவாளர் ஆந்தனி வைட் அலுவலக மேஜையிலேயே மட்டையாகிக் கிடக்கிறார். அவரது உதவியாளராகச் சேர்ந்துள்ள மேகியின் முதல் வேலை என்ன தெரியுமா? அப்போது வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் ஆந்தனியின் தொழில்முறை “நண்பர்” ஒருவர் ஆந்தனியின் முகத்தை உடைப்பேன் என்று அன்பாகச் சொல்வதைக் குறிப்பெடுத்துக்கொள்வதுதான்.

சற்று நேரத்தில் அந்தக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் குடியிருக்கும் வயதான மிஸஸ் சிம்மன்ஸ் வந்து ”ராட்ரிகோவைத் தேடும் புலனாய்வில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா?” என்று விசாரித்துவிட்டுச் செல்கிறார். சிறிது நேரத்தில் போதை தெளிந்து எழும் துப்பறிவாளர் வைட், ராட்ரிகோவின் கதையை மூன்றாவது மாடியிலிருக்கும் ஸ்டீவி முடித்துவிட்டதாகவும், இதுபோல பல முடிவுரைகளை ஸ்டீவி எழுதி இருப்பதாகவும் சொல்லிவிட்டு, இப்போதைக்கு எதுவும் வேலையில்லை, அதனால் நீ வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறிவிட்டுப் புறப்படுகிறார்.

அடடே, ஏதோ கொலை, புலனாய்வு, துப்பறியும் கதை போல இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தால், அடுத்த பக்கத்திலேயே ஸ்டீவி என்பது மூன்றாவது மாடியிலிருப்பவரின் பூனை என்றும் ராட்ரிகோ என்பது நான்காவது மாடியிலிருப்பவரின் வளர்ப்புப் பறவை என்பதும் தெரிய வருகிறது. இப்படி கதை முழுக்க வாசகராக நாம் ஒன்றை எதிர்பார்க்க, படைப்பாளிகள் நமக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அளிக்கிறார்கள்.

யார் இந்த மேகி?

  • (காசில்லாததால்) புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டு
  • வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிகரெட்டைத் திருடிப் புகைத்து
  • பாரில் சென்று உற்சாக பானம் அருந்தியபடி பொழுதைக் கழித்து
  • ஆண்களை சைட் அடித்து அவர்களின் அங்கங்கள் பற்றி கமெண்ட் அடித்து

சராசரி இளைஞன் செய்யும் அனைத்தையும் செய்கிறார் மேகி. சொல்லப்போனால், ஓவராகவே செய்கிறார். மேகியைப் பற்றி முழுமையாக வாசகர்களுக்குப் புரிய வைக்க இரண்டு சம்பவங்களை முன்வைக்கிறார், கதாசிரியர் ட்ராண்ட்ஹைம்.

ஹமாம்ன்னா என்ன?

கதையின் ஆரம்பத்திலேயே மேகியின் Street Smartness-ஐ வெளிப்படுத்தும் வகையில் முதல் சம்பவம் வருகிறது. மிஸஸ் சிம்மன்ஸ்-ன் வளர்ப்புப் பறவையைக் கண்டுபிடித்தால் எழுபது பவுண்ட் வெகுமதி கொடுப்பதாகச் சொன்னதைக் கேட்டு, அவரிடம் சென்று அந்த வளர்ப்புப் பறவையின் புகைப்படத்தைக் கேட்டுப் பெறுகிறார். உடனே, அதை ஆன்லைனில் போட்டு, பேப்பரில் விளம்பரம் கொடுத்துத் தேடுவார் என்றுதானே யோசிக்கிறீர்கள்?

அதுதான் இல்லை. நேராகப் பறவைகள் விற்பனையகத்திற்குச் சென்று அச்சு அசப்பில் புகைப்படத்தில் இருப்பதைப் போலவே ஒரு வளர்ப்புப் பறவையை இருபது பவுண்ட் கொடுத்து வாங்கிவந்து அந்தக் கிழவியிடம் கொடுத்து வெகுமதி பெற்று துப்பறிவாளியாக முதல் நாளிலேயே ஐம்பது பவுண்ட் சம்பாதிக்கிறார் மேகி. இந்த நீதி, நேர்மை, நியாயம் போன்ற அருங்காட்சியகத்தில், மன்னிக்கவும், ம்யூசியத்தில் வைக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்தையும் தில்லாகச் செய்கிறார்.

மேகி வேலைக்குச் சேர்ந்த ஐந்தாவது நாளிலேயே ஆந்தனியை யாரோ அடித்து நொறுக்க, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் துப்பறிவாளர். அலுவலகத்தில் வேலையில்லாததால், போலிஸ்காரி ஷீனாவுடன் பாருக்குச் செல்லும் மேகிக்கு இன்னொரு வெகுமதிக்கான வாய்ப்பு கிடைக்கிறது. பாரில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ ப்ளிண்டாஃப் ஆட்டோகிராஃப் போட்ட பந்தை யாரோ திருடிவிட, போலிசுக்குப் போக விரும்பாத பார் ஓனர் அறுபது பவுண்ட் தருவதாகச் சொன்னவுடன் மேகி இரண்டாவது சாகசத்திற்குத் தயாராகிறார். என்ன, அனைவரையும் நிற்க வைத்து சோதனை செய்வார், வெளியே வருபவர்களைக் கண்காணிப்பார் என்றுதானே எதிர்பார்க்கிறீர்கள்?

அதுதான் இல்லை. ”இன்று எனக்குப் பிறந்தநாள். அதனால், அனைவருக்கும் ஒரு ரவுண்ட் உற்சாக பானம் இலவசம் + அனைத்து ஆண்களுக்கும் ஒரு கட்டிப்பிடி வைத்தியம்” என்று சொல்லி அனைத்து ஆண்களையும் கட்டிப்பிடித்து அவர்களது உடலைத் தடவியபடி சோதனை செய்கிறார். அலட்டல் இல்லாமல் திருடனைக் கண்டும் பிடிக்கிறார். ஓர் ஆணழகன் வீட்டிற்குச் செல்லும்போது அவனை வலிய அழைத்துக் கட்டிப்பிடிக்கும் மேகி, இன்னொரு மதுப்பிரியர் வியர்வை மழையில் நனைந்து தானாக முன்வரும்போது இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. அதனால், பிறந்தநாள் ஆஃபர் முடிந்துவிட்டது என்று தட்டிக்கழிக்கவும் செய்கிறார். கதையில் ரசிக்க இதுபோன்ற பிரிட்டிஷ் ஹ்யூமர் ஏகப்பட்டது உண்டு.

லண்டன்: கதையில் மேகிக்குப் பிறகு துப்பறிவாளர் ஆந்தனி, போலிஸ்காரி ஷீனா, லோக்கல் ரவுடி அலெக்ஸ் என்று மூன்று முக்கியக் கதாபாத்திரங்கள் இருந்தாலும், இவர்கள் யாருமே (மேகிக்குப் பிறகான) இரண்டாவது முக்கியப் பாத்திரமாகப் படைக்கப்படவில்லை. கதையின் இரண்டாவது மிக முக்கியமான பாத்திரம் லண்டன் மாநகரம்தான். வடமேற்கு லண்டனின் நாட்டிங்ஹம்ஷையர், அங்கே கென்ஸல் ரைசிலிருந்து டாட்டன்ஹாம் கோர்ட் ரோட் வரை ஒவ்வொரு பகுதியையும் கதைக்குள் கொண்டுவந்து ஒரு பாத்திரமாகவே உலவவிடுகிறார்கள் படைப்பாளிகள்.

ஓவியப் பாணி: ஒரு பக்கத்திற்கு நான்கு வரிசை, ஒவ்வொரு வரிசையிலும் மூன்று கட்டங்கள் என்று ஒரு பக்கத்திற்கு 12 ஓவியக் கட்டங்களைக் கொண்ட பழைய பாணியில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டிருந்தாலும் இது வழக்கமான காமிக்ஸ் ஓவியப் பாணியைக் கட்டுடைப்பு செய்துள்ள ஒரு படைப்பாகும். காமிக்ஸ் என்றாலே அழகான ஓவியங்கள், அருமையான வண்ணக்கலவை என்ற எண்ணத்தைக் கடந்து, அமெச்சூர் பாணியில் Clean Style-ல் கார்ட்டுன் போன்ற பாத்திர வடிவமைப்புகளுடன் கொண்ட கதாபாத்திரங்களால் நிரம்பியுள்ள இந்தக் கதையில் வண்ணக்கலவை ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நேரத்தை, இடத்தை, கதாபாத்திரங்களின் மனப்பாங்கை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களின் வண்ணக்கலவை அமைந்துள்ளது ஓவியர் ஸ்டீஃபன் வாஹியின் திறமைக்குச் சான்று.

இப்போதெல்லாம் போட்டோக்களை ரெஃபரன்ஸ் ஆகக்கொண்டு ஓவியர்கள் வரைகிறார்கள். இன்னும் சிலர் கூகிள் மேப்களின் உதவியுடன் நேரில் பார்ப்பதைப் போன்று அருமையாக வரைகிறார்கள். ஆனால், இதுபோன்ற டெக்னிக்குகளைக் கடந்து கதையில் இரசிக்கும்படியாக ஓவியத்திலேயே தனி ராஜ்ஜியம் நடத்தியுள்ளார், ஓவியர் ஸ்டீஃபன் வாஹி. சொல்லப்போனால், கதையின் ஒவ்வொரு இடமும் (ஆந்தனியின் அறை, மிஸஸ் சிம்மன்ஸ்சின் வீடு, மேகியின் வீடு, பார்) அந்தக் கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது. உதாரணமாக, மேகி வசிக்கும் ஓர் ஒண்டுக்குடியிருப்பின் உள்பகுதிகள்.

மேல் பகுதி சமதளப் பலகையால் ஆன இடுப்பளவிலான கிச்சன் கேபினட்டுகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், டேபிளின் மேல்பகுதி கிச்சன் டேபிளைவிட வெளியே துருத்திக்கொண்டிருப்பதை மேகியின் வீட்டில்தான் பார்க்க முடிகிறது. வசதியின்மையின் அடையாளமாக இதைப் பார்த்தாலும் இருப்பதைக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து அனைத்து சூழல்களிலும் Innovate செய்து வாழ்பவராக, எதையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவராக, மிகவும் அழகாக மேகியின் கேரக்டரையே அந்த அறையின் அமைப்பின் மூலமாக நமக்குக் கோடிட்டுக் காட்டிவிடுகிறார் ஓவியர். இதைப் போல, கதையின் ஆரம்பத்தில் ஆந்தனியின் அறையில் உலக உருண்டையின் மீது வைக்கப்பட்டுள்ள தொப்பி மேகியின் வருகைக்குப் பிறகு காணாமல் போவது, மிஸஸ் சிம்மன்ஸ் வீட்டு மேஜைக்கு இந்தப் பக்கமிருக்கும் தனி இருக்கை, பாரின் பெயர் + அதன் டிஸைன் என்று இடங்களை அதன் சொந்தக்காரர்களின் குணாதிசயங்களால் நிரப்பியுள்ளார், ஓவியர் ஸ்டீஃபன்.

ஓவியர் ஸ்டீஃபன் வாஹி (Stephan Oiry)

முதல் பாகத்தின் இறுதியில்தான் அலெக்ஸ்சின் பெயரையே வாசகர்கள் (+ மேகி) தெரிந்துகொள்வது, பீச்சில் கோல்ஃப் சீருடையில் இருக்கும் நாய் பொம்மை வரையப்பட்டிருக்கும் ஆங்கிள் மூலமாக கதையின் போக்கை உணர்த்துவது, கடற்கரை இருட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு நகைமுரணாக மேலே அலங்கார விளக்குகளில் இருக்கும் பெயர் என்று இந்தக் கதையில் இன்னமும் பல குறியீடுகள் உள்ளன.

ஆனால், கதையில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி மூன்று பாகங்களைக் கொண்ட இத்தொடர் முடிந்த உடனே இன்னொரு விரிவான கட்டுரையில் பார்ப்போம். (நான் மூன்று பாகத்தையும் உடனே படித்துவிட்டேன். மீதம் இருக்கும் இரு பாகங்களும் தமிழில் வரட்டும், பிறகு நிதானமாக அலசுவோம்). ஆனால், இந்தக் கதையின் மைய நாடியான தனிமையை ஓவியர் ஸ்டீஃபன் வாஹி அழகாகக் காண்பிக்கிறார். கதையின் 493 ஓவியங்களிலுமே கதை மாந்தர்களின் தனிமை வெளிப்படுகிறது.

தலைப்பு: மேகி கேரிஸன் – செய்வன தில்லாய்ச் செய்!

அமைப்பு: பிரெஞ்சு கிராஃபிக் நாவலின் தமிழ் மொழியாக்கம் – முதல் பாகம்

கதாசிரியர்: லூயி ட்ராண்ட்ஹைம் என்கிற லோஹான் சபொஸி

ஓவியர்: ஸ்டீஃபன் வாஹி

வெளியீடு: முத்து காமிக்ஸ், ஃபெப்ருவரி 2022

விலை: 100 ரூபாய், 48 வண்ணப் பக்கங்கள்.

மையக் கரு: ஒரு துப்பறிவாளி உருவாகிறார்.

கதை உருவான கதை: ஸ்பிரோ என்ற பிரெஞ்சு காமிக்ஸ் வார இதழில் சிறுகதையாகத் திட்டமிடப்பட்டுத்தான் முதலில் மேகி கேரிஸன் உருவாக்கப்பட்டது. வாசகர்களின் ஆதரவு பெருக, இது தொடர்கதையானது. தொடர்கதையும் 32 பக்கங்களுடனே முடிந்துவிட்டது. ஆனால், எடிட்டோரியலில் தொடரச் சொல்லிக் கேட்க, இதை 138 பக்கக் கதையாக்கினார் கதாசிரியர் லூயி. இதை 48 பக்கங்கள் கொண்ட மூன்று தொகுப்புகளாக ஃப்ரான்சில் வெளியிட்டுள்ளனர். இதில் முதல் 48 பக்கத் தொகுப்பின் தமிழாக்கம்தான் இந்தக் கதை. 2019ல் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீள் வாசிப்பின்போது திரைக்கதை 32 பக்கம் வரை ஒரு வேகத்திலும் அதன் பிறகு கடைசி 16 பக்கங்கள் இன்னொரு மேம்படுத்தப்பட்ட வேகத்திலும் இருப்பதைக் கவனித்தால், இந்தக் கதை எப்படி நீட்டிக்கப்பட்டது என்பதை உணரலாம். ஒருவேளை நீட்டிக்கப்பட்டால், அதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று கதையின் ஆரம்பத்திலேயே ஒரு மர்மத்தை வைத்த கதாசிரியரின் புத்திசாலித்தனத்தையும் பாராட்டலாம்.

தமிழுக்குத்தான் இதை செல்வா + முருகேசன் கூட்டணி என்று சொன்னேன். ஆனால், ஒரிஜினலாக பிரிட்டனின் நாவல் + திரைப்பட நாயகியான பிரிஜ்ஜெட் ஜோன்ஸ்-ன் குணாதிசயம் + அமெரிக்கத் துப்பறிவாளர் பிலிப் மார்லோவின் பின்னணியுடன்தான் இத்தொடர் படைக்கப்பட்டிருக்கிறது. மீள் வாசிப்பின்போது மேலே சொன்ன இரு பாத்திரங்களையும் மனதில் வைத்துப் பாருங்கள், மேகி கேரிஸன் உங்கள் கண் முன்னே தெரிவார்.

லூயி டிராண்ட்ஹைம் 

கதாசிரியர் லூயி ட்ராண்ட்ஹைம்: போரடிக்கும் பதின்பருவத்தைக் கடந்து, டெக்னிகல் தேர்வில் தனது உறவினரைப் பார்த்துக் காப்பியடித்து, மெக்கானிக்ஸ் படிக்கச் சென்று, அது தனக்கு செட் ஆகாதென்று தத்துவம் படித்து, பிறகு வாழ்க்கையில் எதுவுமே உருப்படியாகச் செய்யவில்லையே என்று 25ஆவது வயதில் ஒரு தனிச்சுற்று இதழை ஆரம்பித்தார் லூயி (Lewis Trondheim). அதன் பின்னர், ஓவியராக முயன்று வேண்டாமென்று கதாசிரியராகி 10 ஆண்டுகளில் 35 கதைகள், கலை மற்றும் இலக்கியத்திற்கான Knight பட்டம், பிரான்ஸ்சின் மிக உயரிய அங்குலேமின் கிராண்ட் ஃப்ரீ விருது என்று அனைத்து வகையான உச்சங்களையும் பெற்றார். நடுவில் ரிட்டையர் ஆகி, Fake IPL Player போல இவரும் ஆன்லைனில் ஒரு வருடம் கழித்தார் (என்று ஒரு வதந்தி). 57 வயதான இவரின் கதைகள் பலவற்றுக்கும் இவரது மனைவியே வண்ணம் தீட்டுகிறார்.

ஓவியர்: ஆர்க்கிடெக்சர் படித்த ஸ்டீஃபன் தன் பெற்றோர்களிடம் செய்த இரண்டாவது ஜோக் காமிக்ஸ் ஓவியரானதுதான். முதல் ஜோக் என்னவென்றா கேட்கிறீர்கள்? ஏப்ரல் ஒன்றாம் தேதி பிறந்தது. இந்த ஆண்டு 52 வயதைத் தொடும் வாஹியின் ஓவியப் பாணி மெல்லிய உறுதியான நேர்க்கோடுகளால் ஆனது. மேகி கேரிஸன் காமிக்ஸ் தொடருக்காக மட்டும் நான்கு விருதுகளைப் பெற்றுள்ள வாஹி, பத்திரிகை எடிட்டர், ஓவியப் பேராசியர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும்? நிறைய இடங்களில் மொழியாக்கம் சிறிதே தடுமாற வைத்தாலும் ஆண்டிறுதியில் ஓர் ஆங்கில வெப் சீரிஸ் ஆகப் பார்க்கும் முன்பாக இந்தக் கதையை தமிழில் படிக்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணிக்கொள்ளுங்கள்.

தீர்ப்பு: மிஸ் செய்யாமல் படிக்க வேண்டிய காமிக்ஸ் புத்தகம்.