முருகனுக்கு அன்று ரொம்பவே அச்சலாத்தியாக இருந்தது. இந்தக் கருமங்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட்டால் தேவலை என்றும் தோன்றியது. ராக்கால பூஜையை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது தீவட்டி பிடித்தபடி ஒருவன் மெல்ல அசைந்தாடி வந்தான். தீவட்டிப் புகையை நாசியினுள் ஏந்தி வாங்கி ‘ஆஹா என்ன மணம்! ஆஹா என்ன மணம்!’ எனச் சொல்வார் வழமையாய். ஆனால் அன்றைக்கு ஒன்றுமே சொல்லவில்லை.
கையைக் காலைத் தடவித் தூங்க வைக்க முயல்கிறார்களாம் என எண்ணிச் சிரித்துக்கொண்டார். அப்படியெல்லாம் தூங்க வைத்துவிட முடியுமா அவரை? வாரக்கணக்கு சொல்ல மணியக்காரர் வந்து நின்றார். நல்ல மனுஷன்தான். கை சுத்தமான ஆள் என்ற கணக்கில் அரைக்காது மட்டும் கொடுத்து அதைக் கேட்டுக்கொண்டு இருந்தார். அவருடைய சிந்தனை எல்லாம் அதைப் பற்றியே இருந்தது. இடையிடையே கணக்கு, கணக்கு என வரும்போது மட்டும், ‘எந்தக் கணக்கைச் சொல்கிறார்கள்? தன்னுடையதைப் பற்றியுமா?’ என்கிற உறுத்தல் ஒன்றும் அவருக்குள் எழுந்தது. சாமியாய் இங்கே உட்காராவிட்டால், எழுந்து போய், “உங்க பொங்கச்சோறும் வேணாம். பூசாரித்தனமும் வேணாம்” எனக் கையெடுத்துக் கும்பிட்டுவிடுவார்.
வேறு வழியில்லாமல்தான் இந்த இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்கிற உறுதியான முடிவையுமே அவர் எட்டியிருந்தார். மணியக்காரர் சீக்கிரம் போகட்டும் என வெறுமனே உம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தார். பெரிய மனுஷனுக்குப் புத்தி இருக்கிறதா? அன்றைக்குத்தான் முழ நீளத்திற்கு நீட்டிக்கொண்டு முழங்கினார்.
‘அப்பாடா, இப்பத்தான் விட்டார்கள்’ எனக் கொட்டாவியைவிட்டு அதைக் குறித்து மறுபடியும் சிந்திக்கத் தொடங்கினார். அவர் சிக்கலில் மாட்டிய அன்றைக்கு உச்சிக்காலப் பூஜைகள் நடந்துகொண்டிருந்தன. ஒருவிதமான கிறக்கமான, பற்றற்ற நிலையிலும் தன்னை உணர்ந்திருந்தார் முருகன். நாதஸ்வரமொன்றிலிருந்து கசிந்த ஒலியில் மூழ்கி, எல்லாம் கடந்த துரிய நிலையில் அவர் உச்சிகொண்டிருந்தபோது அந்தச் சத்தம் அவரது கவனத்தைக் கலைத்தது. சிறிய பெண் குழந்தையொன்றின் சத்தம். “அய், மறிக்குட்டி மாதிரி இருக்கு” என அவளின் பொங்கிப் பிதுங்கிய குதூகலம். ஒரு கணம்தான், சட்டெனக் கிழக்கு நோக்கித் திரும்பி விட்டார். அதைக்கூட அந்த நேரத்தில் அங்கிருந்த மணியக்காரர் பார்த்துவிட்டது போலத்தான் தோன்றியது.
இடும்பன் மலையின் பின்பக்க உச்சியில் இரண்டு பாறைகளுக்கு நடுவே குட்டியாய் உருளையாய்க் கடல் முத்தைப் போல ஒரு பாறை. உடனடியாகவே வாரிக் கட்டிக்கொள்ளவேண்டும் போல இருந்தது. முதலில் குட்டி முயல் ஒன்று அங்கே நிற்பதாகத்தான் உணர்ந்தார். பிறகு அந்தக் குழந்தையின் குரலைப் பின்தொடர்ந்து உணர்ந்தபோது, அதுவொரு மறிக்குட்டியைப் போலவே நின்றிருந்தது. வரையாடு ஒன்று தனது மலைத்தொடரின் உச்சியில் நின்று இந்த உலகத்தை நோக்கும் காட்சி ஒன்றை ஏற்கெனவே பார்த்தும் இருக்கிறார். அதைப் பார்த்த கணத்தில் அவருக்குப் பிடித்துவிட்டது.
நான் யார்? அந்த அடிமைப் பயல் இடும்பன் யார்? ஏதோ நான் தந்த வாக்கில் அங்கே இருந்துகொண்டிருக்கிறான். அவனுடைய மலையில் இப்படி ஒரு அழகா? அந்த எண்ணம் தீவட்டித் தீயைப் போல அவருக்குள் பற்றிப் பரவியது. என்ன செய்தும் அவரால் அதை உதற முடியவில்லை. எல்லாம் நடந்துகொண்டிருக்கிறபோது, அடக்க மாட்டாமல் திடீரெனக் கிழக்குப் பக்கம் அவ்வப்போது யாரும் பார்க்கவில்லை என்கிற நினைப்பில் திரும்பிப் பார்த்துவிடுவார். எப்படியெனில், தலையை அப்படியே நேர் எதிர்திசையில் திருப்பிப் பார்ப்பது. இங்கே காத்திருப்பவர்களுக்குப் பின்மண்டைதான் தெரியும். ஒருசில கணங்கள்தான். சட்டென மறுபடியும் திரும்பிக் கொள்வார்.
இந்தப் பழக்கத்தை அவரால் கைவிடவே இயலவில்லை. கையும் களவுமாக ஒருநாள் மாட்டிக்கொள்வோம் எனவும் பயந்தார். சாமியாய் இருந்துகொண்டு இந்த மாதிரி சோலிகளைச் செய்யக்கூடாது என்ற எண்ணமும் எழுந்தது. இன்னொரு பக்கம் நியாயமாக அந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டுப் பார்த்துக்கொண்டார். எது கெட்ட சோலி? அழகான மறிக்குட்டி ஒன்றைப் பார்க்கும்போது அள்ளி அணைத்துக்கொள்ளத் தோன்றுவது கெட்ட சோலியா? அது தன் கடமை என உறுதியாக உணர்ந்தார். அப்புறம் இன்னொரு நியாயமான கேள்வியும் எழுந்தது. அந்த அழகின் மதிப்பை அவன் உணர்வானா?
சந்தேகம் இருந்தால் இடும்பன் மலையில் ஏறிப்போய்ப் பாருங்கள். இங்கே நான் எப்படி நளினமாக அமர்ந்திருக்கிறேன்! அங்கே அவன் கண்ணையெல்லாம் உருட்டிக் காட்டி ஏதேதோ செய்துகொண்டிருப்பான். ‘ஏன் சாதாரணமாகச் சாந்தமாகப் பார்த்தால் என்ன குடிமுழுகிவிடப் போகிறது? முரட்டு மாடு மாதிரி நிற்பான். அவனுக்கு எப்படி இந்த அழகின் மதிப்பு புரியும்? தவிர, சொன்னால் தந்துவிடுவான்தான். ஆனால் நான் போய் எப்படிக் கேட்பது?’ என்றெல்லாம் சுழற்றி யோசித்தார்.
‘இந்தா இந்த மலையை வைத்துக்கொள்’ என அவனிடம் கொடுத்து மாமாங்க காலம் ஆகிவிட்டது. அடச்சீ, இதென்ன இப்படி ஒரு சிந்தனை? இப்போதெல்லாம் கீழே மனிதர்கள்கூட வலதுகை கொடுப்பது இடதுகைக்குத் தெரியக்கூடாது என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். சாமியாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் எண்ணக்கூடாது எனவும் முருகன் தன்னை எச்சரித்துக்கொண்டார்.
போய் நின்று உரிமையாகவும் கேட்க முடியாது. வேறு எதுவுமே செய்யவும் முடியாது. சாமியாக இருப்பதின் சிக்கலை அன்றுதான் முழுமையாக உணர்ந்தார். இந்த எண்ணத்தை விரட்ட படாதபாடு பட்டார். சீக்கிரம் ஓடிப்போய்த் தூங்கிவிடலாம் என்கிற பரபரப்பில் இருக்கும்போதுதான் நைவேத்தியம் என என்னத்தையோ நீட்டுவார்கள். என்ன இருந்துவிடப் போகிறது அதில்? இத்துணூண்டு நெய்ப் பொங்கல் வைத்திருப்பார்கள். எந்நேரமும் ஒருவனால் இனிப்பைத் தின்றுகொண்டே இருக்க முடியுமா? சாமியாய் இருந்தாலும், ஓர் அளவு வேண்டாமா? ஆனால் இதைக் கேட்கவும் முடியாது, எண்ணவும் கூடாது. ‘சே என்னடா ஒரு சீக்குப் பிடித்த வேலை இது’ எனப் புலம்பவும் செய்தார்.
இதற்கிடையேதான் துப்பு ஒன்றையும் கண்டறிந்தார். மணியக்காரன் இவர் தலைதிருப்பிப் பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டான். “அவர் சித்து வேலை காட்டுறாரு. போய் ஊர் ஆட்கள்ட்ட சொன்னா லூசுப் பயலேம்பாங்க. அப்புறம் சோத்துக்குத் தெருத்தெருவா அடிவாரத்தில அலையணும். நாய்பட்ட பாடு அது” எனத் தனக்குள் புலம்புவதை ஒட்டும் கேட்டார். ஒருவகையில் அவருக்குள் திருப்தி எழுந்தது. சித்துவேலை என்கிற கணக்கில்தான் அதை எடுத்துக்கொண்டிருக்கிறான். மறியின் மீதான தன்னுடைய மையல் யாருக்கும் தெரியாமல் போனதில் ஆசுவாசம் அவருக்கு.
ஆனாலும் அந்தக் காரியத்தைச் சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எந்நேரமும் அதே சிந்தனையாக இருப்பது ஒரு மன்னனுக்கு அழகல்ல. ஒன்று, விரும்பியதைப் போரிட்டு அடைய வேண்டும். இல்லாவிட்டால், ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டில் ஒன்று. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு.
எந்தப் பாதை தன்னுடையது என்கிற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம். அதுபோக, விரும்பும் ஒரு பொருள் தன்னையும் விரும்புகிறது என்பது ஒருநிலை. அதனால்தான் அந்தக் குட்டி அவர் கண்ணில்பட்டது. எத்தனையோ காட்சிகள் இருக்கையில் அது ஏன் தன் கண்ணில் வந்து படுகிறது? அதுவும் தன் மண்டைக்குப் பின்னே இருக்கிற மலையில் இருப்பது? அது தன்னை வந்து அடைய நினைக்கிறது எனப் பூரணமாக உணர்ந்தார் முருகன். ஒரு மன்னனாகவுமே தன்னுடைய பரிபாலனங்களுக்குக் கீழ் வாழவரும் ஒரு பிரஜையை நெஞ்சார ஏற்பதும் ஒரு நிலை. அதில் நியாய தர்மங்களுக்கு இடமே இல்லை. அது ஒரு ஆற்றைப் போலத் தன்மடி நோக்கி ஆடி வருகிறது என்கிற பேரானந்த நிலையை அவர் எட்டினார். இதை மறுபடி முதலில் இருந்து எண்ணிப் பார்த்தார். இதுதான் சரியான நிலை என்கிற முடிவில் நின்றார்.
ராஜதந்திர நடவடிக்கையை யார் மூலமாக நிறைவேற்றுவது? நம்பகமான ஆள் வேண்டும். ஆளும் கொஞ்சம் நைச்சியமாகப் பேசுகிறவராக இருக்க வேண்டும். ஒருதடவை மட்டுமே அவரால் அஸ்திரத்தை வீசமுடியும். மறுபடியும் வீசினால் அதுவே பழக்கமாகிவிடும். சிந்தாமல் சிதறாமல் காரியத்தை முடிக்க வேண்டும் என அவர் காத்திருந்து கொண்டிருந்தபோதுதான் நாச்சிமுத்து அவரது கண்ணில் பட்டார். தன்னை அடிமையாகவே ஒப்புக் கொடுத்தவர். அதுவரை ஒருசொல்கூட மனதால் எதிர்த்துப் பேசியது இல்லை. ஆளும் கட்டை பிரம்மச்சாரி. ஊரில் அவருக்கு நான்கைந்து அண்ணன் தம்பிமார்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கிருத்திகை அன்றும் தவறாமல் வந்துவிடுவார். அவருக்கு ஏதோவொரு மனக்குறை உண்டு என்பது முருகனுக்கும் தெரியும். மனுஷன் மனசுக்குள்ளேயே வைத்து மருகிக்கொண்டிருக்கிறார். என்றைக்காவது சொல்வார் எனவும் அவர் காத்துக்கொண்டிருந்தார். சொத்து சுக வாழ்க்கையில் மனுஷனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த வயதிலும் சங்கோஜம் இல்லாமல் எல்லாச் சகோதரர்கள் வீட்டிலும் எந்நேரம் வேண்டுமானாலும் போய்ச் சாப்பிட்டுக்கொள்வார்.
அவர்களுமே அவரை ஒரு குழந்தையைப் போலத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவருடைய அம்மாவான பெரியாத்தா, இவர் திருமணம் செய்துகொள்ளவில்லையே என்கிற நினைப்பிலேயேதான் போய்ச் சேர்ந்தாள். அதுவும் முருகனுக்கு நன்றாகத் தெரியும். அவருமே கூடுமான மட்டிற்கு அவருக்குள் திருமண ஆசையைத் தூண்டிவிட்டெல்லாம் பார்த்தார். ஆனால் மனுஷன் ஒத்துழைக்கவே இல்லை எதற்கும். செய்ய நினைப்பது சாமியாக இருந்தாலும் செயலுக்கு மனிதனும் ஒத்துழைக்க வேண்டுமில்லையா? ஏதோ வாழாவெட்டி மனநிலையிலேயே பொழுதிற்கும் அமைதியாய்ச் சுற்றிக்கொண்டிருப்பார் நாச்சிமுத்து. அவரே சமையலறையில் போய் எடுத்துப் போட்டுக்கொண்டு அந்த இருளிற்குள் நின்றே சாப்பிட்டு முடித்துவிட்டு வந்துவிடுவார். சம்சாரத்தில் எல்லாம் அவருக்கு ஆர்வமே இல்லை.
தினமும் பாசிப்பயறு குழம்பு வைத்துக்கொடுத்தால்கூட சாப்பிட்டுக்கொள்வார். தொடுகறிகூடக் கேட்க மாட்டார். ஏதோ ஏழை பாழையைச் சொல்வதைப் போல அல்ல இது. நாச்சிமுத்திற்கு அவர் பங்காக மட்டுமே நூறு ஏக்கராவிற்கும் மேல் தென்னந்தோப்புகள் உண்டு. அழகான ஓடுகள் பதிக்கப்பட்ட விஸ்தாரமான சாலை வீடு ஒன்றும் இருப்பதுகூட முருகனுக்குத் தெரியும். ஆனாலும் ஏதோ மனக்குறை. ஆனால் அதை மனுஷன் சொன்னால்தான் உண்டு. நாமாகப் போய் எப்படிக் கேட்பது என்றும் அதுவரை இருந்துவிட்டார் முருகன்.
ஆள் தனிப்பட்ட வகையில் எப்படி எனக் கூர்ந்து நோட்டம் போட்டும் பார்த்தார். சொல்லுக்கு அஞ்சுகிற மனிதராகவும் இருந்தார் அவர். “ஒரு சொல்லுதான். ஆனா அந்த ஒத்தை சொல்லும் ஒழுங்கா இருக்கணும்” என அவரது நண்பர்களிடம் சொல்வதையும் கேட்டார். பெரும்பாலும் பேசுவதில்லை. பேசினால் இந்த மாதிரி ரெட்டை அர்த்தம் வருகிற மாதிரி எதையாவது பைத்தியக்காரன் மாதிரிச் சொல்வது. ஆனால் பக்தி என்கிற விஷயத்தில் மனுஷனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. நெடுஞ்சாண்கிடையான பக்தி. சிலரைப் போல மினுக்கிக்கொண்டு போவது இல்லை.
உன் தாள் பணிந்தேன் என முழுதும் ஒப்புக்கொடுக்கிற நிலை. அந்த நிலையைத் தாண்டி வேறு சிந்தனையே இருக்கக்கூடாது என்கிற மாதிரியான பக்தி. மனதால்கூட ஒருநாளும் அவர் தன்னை நொந்ததில்லை என்பதை உணர்ந்தார் முருகன். ஊருக்குள்ளும் கௌரவமான குடும்பம். யார் வம்பு தும்பிற்கும் போவதில்லை. இவருமே பொட்டாட்டமாகத்தான் போய் வந்துகொண்டிருப்பார். தோட்டத்தில் இருப்பார், இல்லாவிட்டால் கிருத்திகை நாளில் இவரைத் தேடிக் கிளம்பி வந்துவிடுவார். மனிதன் எதையாவது கேட்டுத் தொலைந்துவிட்டால்கூடப் பரவாயில்லை. மனசுக்குள்ளேயே வைத்து மருகிக்கொண்டிருப்பதுதான் முருகனுக்குச் சங்கட உணர்வை ஏற்படுத்தியது.
நிமிஷ நேரத்தில் தீர்த்துவிடுவார் அதை. ஆனாலும் அந்த மனிதனுக்குத்தான் எத்தனை அழுத்தமான நெஞ்சு? தனக்கு ஒரு குறை இருக்கிறது. ஆனால் அந்தக் குறைக்கு யாரையும் குற்றம் சொல்வதில்லை. சாமியாகவே இருந்தாலும் பொறுப்பைத் தூக்கித் தலையில் சுமத்துவதில்லை. பெரியாத்தா பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்த்திருக்கிறாள் என்கிற திருப்தி எழுந்தது முருகனுக்கு. கருணையின் எல்லையிலும் அவர் ததும்பி நின்றுகொண்டிருக்கையில்தான் அவருக்கு நாச்சிமுத்தை ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுத்துவது குறித்த எண்ணமும் உதித்தது.
இரண்டு மூன்று தடவை அதை ஊறப்போட்டு யோசித்தார். மனுஷன் சித்தன் ஆகிற தகுதிக்கு உண்டான ஆள்தான். கொஞ்சப் பேச்சும் நிறைந்த நிதானமும் இருக்கிறது. எத்தனையோ பேரை அவர் இப்படி வளர்த்துவிட்டுப் பார்த்திருக்கிறார். அவருடைய பக்திமானுக்குச் செய்ய மாட்டாரா? ஊரிலேயுமே தங்களது ஊரில் இருந்து ஒரு சித்தர் எனப் பெருமையாக நினைத்துக்கொள்வார்கள். குடும்பப் பேறும் இல்லை. இந்த மாதிரிக் கட்டை பிரம்மச்சாரியால்தான் இல்லறத்தை உலகிற்குக் கற்றுக் கொடுக்கவும் முடியும். வெளியே நின்று பார்த்தவனுக்குத்தான் அந்தப் பாத்திரத்தின் அமைப்பும் செயல்பாடும் தெரியும். விலக விலகத்தான் எப்பொருளும் பூமிப் பந்தைப் போலப் பெருத்துத் தெரியும்.
எல்லா வகையிலுமே நாச்சிமுத்து இந்த நிலைக்குத் தகுதியானவர் என்பதை உணர்ந்தார். நாளைப் பின்னே ஊருக்குப் போய் தனது தோட்டத்தில் அமர்ந்தால்கூட ஆசிரமம் அப்படி இப்படியென மேலே வந்துவிடுவார். காலம் காலமாகத் தன் காலையே கட்டிக்கொண்டிருக்கிற பக்தனுக்கு ஏதோ பார்த்துச் செய்துவிட்ட மாதிரியும் ஆயிற்றே? ஆளும் அதை அனுபவிக்கத் தகுதியானவர்தான். ஒரு கரப்பான் பூச்சியைக்கூட அவர் கொன்றுபோட்டதைக் கண்ணால் பார்த்ததில்லை என்பதும் அவருக்குத் தோன்றியது. கெடா வெட்டில் போய் ஆட்டுக்கறி தின்பதெல்லாம் ஒரு தவறா? தானே போனாலும் வரிசையில் அடையாளத்தை மறைத்து அமர்ந்து சாப்பிட்டு விட்டுத்தான் வருவார் என்பதும் அவருக்குத் தெரியும். எப்படிப் பார்த்தாலும் துரும்பு விழாத மாணிக்கம்தான் நாச்சிமுத்து. தகுதியானவன், அதற்கு முற்றிலும் தகுதியானவன். தகுதி அவனைத் தேர்ந்தெடுத்துவிட்டது. காலம் அவனைத் தேர்ந்தெடுத்துவிட்டது. காலத்தைப் பரிபாலனம் செய்கிற தன் கடமை, அதுவாக இருப்பதை உறுதி செய்வது என்றெல்லாம் சுழற்றியடித்து யோசித்தார்.
இங்கேதான் ஒரு மன்னனுக்கு இருக்கிற கடமையை உணர்ந்து ராஜ தந்திரமாகவும் எண்ணிப் பார்த்தார். நாச்சிமுத்திற்குச் செய்து கொடுத்த மாதிரியும் ஆகிவிட்டது. அவருமே மனதால், தனக்குக் கிடைக்கிற மரியாதைகளால் குளிர்ந்து அமைந்து நிறைந்துவிடுவார். அவரது மனக்குறையை அவரே வென்றுவிடுவார். அப்படியொரு நிறைவான கணத்தில் போய் தனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். செய்து கொடுத்ததற்குப் பதிலாகப் போய்க் கேட்பதாக எல்லாம் மருகிக்கொண்டிருக்கக் கூடாது. மன்னனைப் போல மிடுக்காகப் பேச வேண்டும்.
“இங்க பாரு நாச்சிமுத்து. எனக்குச் செய்றதும் உன் கடமைதான். நான் இல்லாட்டி ஒரு ஆளா வளர்ந்திருப்பீயா? உனக்கும் லாபம். எனக்கும் ஏதோ வந்திச்சுன்னு இருக்கணும். தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறதான்னு உங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்களே? அந்த மாதிரின்னு வச்சுக்கோயேன். அப்புறம் நாம ஒன்னும் கொலைக் குற்றமெல்லாம் பண்ணலை. காதும் காதும் வச்ச மாதிரி செஞ்சு குடுத்திரு. எனக்கு இருக்கற கடைசீ வாய்ப்பு இதுதான். குறுகுறுன்னு இருக்குப்பா. புரிஞ்சுக்கோ. அப்புறம் அதுவும் என்னை வந்தடைய துடிக்குது. அதுவும் நம்ம கடமைதாம்ப்பா. எவ்வளவோ சித்து விளையாட்டுகளைப் பண்ணியிருக்கேன். அன்பின் பாதையை அடைய அப்படீங்கற கணக்கில இது வந்துக்கிடட்டும். அதனால இதுதான் ஒப்பந்தம். செஞ்சு குடுக்கற காரியத்தை பத்தி நீயும் பேசக் கூடாது. நானும் பேசமாட்டேன்” என்றெல்லாம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு எனச் சொல்லிவிடவேண்டும் என்கிற முடிவிற்கும் வந்தார்.
என்னென்னவோ அலங்காரங்கள் எல்லாம் செய்தார்கள். அவர் மனம் எதிலும் ஒன்றவில்லை. எப்போதடா கிருத்திகை வரும் எனக் காத்துக்கொண்டிருந்தார் முருகன். ஏதாவது சிக்கலை உருவாக்கித் தன்னை நோக்கி நாச்சிமுத்தை உடனடியாகவே இழுத்துவிட முடியும் அவரால். ஆனாலும் அது தன்பாட்டிற்கு நிகழவேண்டும் என ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். தவிர இனிமேல் காலத்தில் அவருமே ஒரு கருவிதான். இதில் இன்னொரு முக்கியமான ஒன்றும் இருந்தது. அவரால் நாச்சிமுத்திடம் இவ்வாறெல்லாம் உடைத்துப் பேசிவிடவும் முடியாது.
மனுஷன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர். முகத்தை நோக்கி வேறு எதையாவது எறிந்துவிட்டால் என்ன செய்ய? அமைதியாய் நடப்பது நடக்கட்டும் என்கிற முடிவிற்கு வந்துசேர்ந்தார். அன்றைக்கு வழக்கம் போல நாச்சிமுத்து அதிகாலையிலேயே எழுந்துவிட்டார். அவருடைய அண்ணி, “தேத்தண்ணி போட்டுத் தரவா?” எனக் கேட்கிற சத்தம் முருகனுக்குக் கேட்டது. “இன்னைக்கு வெறும் வயிறோட போன்னு எதுவோ சொல்லுது. அடிவயிற்றில நெருப்பு” என நாச்சிமுத்து பதில் சொல்வதுமே அவருக்குக் கேட்டது. வழக்கமாக இப்படி ஏதாவது பேசக்கூடிய ஆள்தான் என்பதால் அவருடைய அண்ணியுமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருமாதிரிப் பித்து நிலையில்தான் முருகனது அடிவாரத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். அந்தச் சமயத்தில் அதை முருகன் செய்திருக்கக் கூடாதுதான். நாச்சிமுத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அதையுமே செய்தார். மஞ்சநாயக்கன் பட்டிக்காரன் ஒருவன் விருந்து போட்டுக்கொண்டிருந்தான். எப்போதுமே தரமாக ஆடம்பரமாக விருந்தைப் போடுகிறவன். சாம்பார், பொரியல், இனிப்பு எல்லாம் முதல்தரமாக இருக்கிறது என மக்கள் பேசிக்கொள்வதைக் கேட்டும் இருக்கிறார் முருகன். நல்ல நோக்கத்தில் இவர் வேண்டுமென்றே ஒரு ஓரமாக நடந்து போன நாச்சிமுத்தை இன்னொருத்தர் வழியாகச் சாப்பாட்டுப் பந்தலுக்குள் தள்ளினார். சத்தியமாக அவர் களைப்படைந்திருக்கிறார், நல்ல மாதிரியாகச் சாப்பிடட்டும் என்கிற என்ணத்தில்தான் அதைச் செய்தார்.
ஆனால் அவரது பிடிமானத்தை மீறி, காலத்தின் கரத்தில் அந்தச் சொல் குதித்துக்கொண்டு வெளியே வந்து விழுந்துவிட்டது. எவர் கையிலும் இல்லாத வெளியில் அதுவாகவே நிகழ்ந்தது. பந்தியின் வாசலில் நின்ற ஒருவன், “உங்க வாழ்நாள்ல இப்படி ருசியா சாப்பிட்டிருக்க மாட்டீங்க. வாங்க இலவசம்தான்” என்றான். முருகனுக்கே சுருக்கென இருந்தது. நாச்சிமுத்திற்கு எப்படி இருந்திருக்கும்? அவரும் துள்ளிக்கொண்டு சொல்லிவிட்டார் பதில் சொல்லை. “உங்க பகட்டைக் காட்டுறீங்களா? இனிமே அடிவாரத்தில யார்கூடயும் அன்னம்தண்ணி புழங்க மாட்டேன்”. அந்தச் சொல் குத்த வரும் ஈட்டியைப் போல முருகனை நோக்கிப் பறந்து வந்தது. விலகலாமா? விலக முடியாது. பாதாளத்தில் போய் ஒளிந்தாலும் தன்னை நோக்கி அது வந்துவிடும் என உணர்ந்தார் முருகன். கூர்மையான அச்சொல் அவருள் மோதி அவருக்குள் தங்கியும் போனது. அப்புறம் அந்தச் சொல் கற்பூரம் போல நின்று எரியத் தொடங்கியது.
நாச்சிமுத்தின் சித்தமும் அந்தக் கணத்தில் கலங்கிப்போனது. அவர் உடனடியாகவே விநோதமான ஆளைப்போல மாறிப்போனார். ஒரு சொல்லுக்கு அப்படி ஒருவனை உருக்குகிற வலிமை இருக்கிறதா? அவர் மேலும் முதியவனாகவே அக்கணத்தில் தோற்றமளித்தார். அவருடலில் கொஞ்சமாக ஒட்டியிருந்த பகட்டுகூட அப்போது உதிர்ந்து விழுந்ததைப் பார்த்தார் முருகன். நாச்சிமுத்து முற்றிலும் வேறு ஒன்றாக ஆகி இருந்தார். அவர் இனி தன்கையில் இல்லை என்பதை ஆழமாக உணர்ந்தார். முருகனால் அதற்குப் பிறகு தள்ளிநின்று வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.
நாச்சிமுத்து இரண்டு கைகளையும் முதுகிற்குப் பின்னே மடித்து ஒருகட்டம் போலக் கட்டி மிடுக்காக நடந்து போவார் தினமும். “உலகத்தில என் கையில ஒன்னுமே இல்லைன்னு காட்ட ஒரு பிச்சைக்காரன் மன்னன் மாதிரி நடந்து போறான் பாருங்க” எனச் சொல்லிக்கொண்டே நடந்து போகத் தொடங்கினார். வலுக்கட்டாயமாக டீயை வாங்கிக் கொடுத்தவர்களின் காலடியிலேயே மண்ணில் அதைக் கொட்டினார். இப்படி இருந்தால் செத்தே போய்விடுவார் எனத் தோன்றியது முருகனுக்கு.
இடையில் ஒருநாள் நாயின் வடிவத்தில் ஒன்றை அனுப்பி, அவரை அடிவாரத்தைவிட்டு வெளியே இழுக்க முயன்றார் முருகன். அந்த நாயின் கண்ணைக் கூர்மையாகப் பார்த்து, “எந்த வாடையும் என்னை ஈர்க்கலை” என்றார் நாச்சிமுத்து. அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இதைப் பார்த்துவிட்டுத் தலையில் அடித்துக் குத்தவைத்து அழுதார். சங்கட உணர்வு தோன்றியது முருகனுக்கு. அண்ணன் தம்பிகள் எல்லோரும் தலையில் வாயில் அடித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.
கையில் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சினார்கள். எதற்கும் மசியவில்லை மனுஷன். அவர்கள் பேசுவது எல்லாம் அவருடைய காதிலேயே விழவில்லை. சுவரைப் பார்த்துத் திரும்பி, அப்போதும் கையை அந்த மாதிரிக் கட்டிக்கொண்டு ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருந்தார். கட்டக் கடைசியாய் அவர்களும் அஸ்திரம் ஒன்றை எய்து பார்த்தார்கள். நாச்சிமுத்தின் தோளிலேயே புரண்டு விழுந்து வளர்ந்த குழந்தையை அனுப்பி, “தாத்தா என்னைத் தெரியுதா?” எனக் கேட்க வைத்தார்கள். அதற்கு மட்டும் பதில் சொன்னார் நாச்சிமுத்து. “சிவனின் மகன் குமரனைத் தவிர வேறு யாரையும் எனக்கு இங்கே தெரியாது”. அந்தக் குழந்தை மருண்டு விலகி ஓடியது.
எவ்வளவு பெரிய பொறுப்பைத் தலையில் சுமத்துகிறார்? முருகனுக்குள் துயரவுணர்வு எழுந்து உருண்டது. அதேசமயம் இன்னொன்றும் தோன்றியது. பொதுவாகவே அங்கே அப்படி உலவுகிறவர்கள், கொஞ்ச நாள் போனால் மாறிவிடுவார்கள். அப்படி நிறையப் பேரை அடிவாரத்தில் பார்த்துமிருக்கிறார். போதம் எக்கணத்திலும் விலகிவிடும் என்பதையும் உணர்ந்தார். ஆனால் யாருக்கு எது எப்படி என்பதை எவராலும் தீர்மானிக்கவும் முடியாது. அடியாழத்தில் நாச்சிமுத்து கருணை கூடினவர் என்பதால் அந்தக் குழந்தை மருண்டு விலகிய காட்சி என்றைக்காவது பெரும் ஒளிக் கீற்றாய் அவருக்குள் எழுந்து நிற்கும் என்றும் தோன்றியது முருகனுக்கு.
நாளுக்கு நாள் ஆள் சோர்வாகிக்கொண்டே இருந்தார். சாப்பிடாமல் ஒரு மனிதனால் எவ்வாறு இருக்க முடியும்? ஆனால் போதம் உயிருக்குப் பொறுப்பேற்றுக்கொண்டுவிட முடியுமா? கேள்விகள், குழப்பங்கள், முருகனைச் சுற்றி. அதேவேளையில் தான் எண்ணிய காரியமும் ஈடேற வேண்டும். இடும்பனிடம் போய் நிற்க வேண்டும். அந்த மறிக்குட்டியைத் தானமாகக் கேட்க வேண்டும். பிறகு தன்னிடம் வந்து அதைக் காணிக்கையாக ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால் இந்த உலகில் தன் கையில் ஒன்றுமே இல்லை என நாச்சிமுத்து அறிவித்தும் விட்டார். அவரே சொல்லின் முதுகில் ஏறி அமர்ந்து மன்னனாகவும் இருக்கிறார். ‘என்ன செய்வது?’ என்கிற குழப்பம் முருகனுக்குள் உதித்தது.
நைச்சியமாகப் பேசிப் பார்ப்பது என்கிற முடிவிற்கு வந்த முருகன், இரவுகளில் நாச்சிமுத்து கொஞ்சம் சாந்தமாக இருப்பதைப் பார்த்தார். அந்த நேரத்தில் அவரிடம் பேசுவது சரியான பொழுதாகவும் இருக்கும் எனத் தோன்றியது. ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. எப்படிப் போய்ப் பேசுவது? துயரமும் அதை அடையவிருப்பதில் இருக்கிற பேரானந்த உணர்வும் அவருக்குள் மாறிமாறி அலையடித்தன. பேசித்தான் பார்க்கலாம் என்கிற நினைப்பில் ஒருநாள் முருகன், “என்ன நாச்சிமுத்து நல்லா இருக்கீயா? என்னைத் தெரியுதா?” என்றார் காதிற்குள் குரலாய்.
அடுத்த நொடி, “நீ யார்ல என் மசிரே” என்றார் நாச்சிமுத்து. துடிதுடித்துப் போனார் முருகன். அவர் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தையா? அதோடு முடித்துக்கொண்டால்கூடப் பரவாயில்லை, எழுந்து நின்று ஆவேசமாக முருகன் அமர்ந்திருக்கும் இடத்தை வெறித்துப் பார்த்தபடி உலகத்தில் இருக்கிற அத்தனை தூற்றல்களையும் உமிழத் தொடங்கினார். முகத்தில் புளிச்புளிச்செனத் துப்புகிற மாதிரிச் சொற்கள். காதையும் மூடித் தொலைக்க முடியாது. மூச்சு முட்டிவிட்டது முருகனுக்கு. ‘நிறுத்துப்பா’ எனக் கத்தியும் சொல்ல முடியாது. நாச்சிமுத்தின் காதிற்குள்தான் அதைச் சொல்லவும் முடியும்.
“கொஞ்சம் பொறுமையா இரு நாச்சிமுத்து. கொஞ்சம் பொறுமையா கேளு. என்ன நடந்திச்சுன்னா. நான் நல்லமேரியாத்தான்” எனச் சொல்லியும் பார்த்தார். நாச்சிமுத்து அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. ஒருநாளோடு இது போய்த் தொலைந்திருந்தாலும் பரவாயில்லை. தினமும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வந்து நின்று ஏசத் தொடங்கிவிடுவார். இவரும், “சொல்றதைக் கேளு நாச்சிமுத்து. என்ன நடந்திச்சுன்னு ஒரு தடவை கேளேன். காதுகுடுத்தும் கேட்கணும். சித்தன்னா எல்லாத்தையும் கடந்தவனா இருக்கணும்” என்றார் மெதுவாக. அதற்கு மட்டும் ஒருதடவை ஏசுவதை நிறுத்திவிட்டு, “அதைச் சொல்ற தகுதி உனக்கு இருக்கா?” என்றார் கூர்மையாக. பிறகு மறுபடியும் அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி ஏசுவதில் மும்முரமானார்.
அவருடைய செய்கை அடிவாரத்தில் பரபரப்பாகிவிட்டது. “என்னப்பா இது. இவ்ளோநாள் அமைதியா கெடந்த மனுஷன் திடீர்னு இப்டீ வண்டை வண்டையா வைய்யிறாரு. முருகனும் சும்மா இருந்துருக்க மாட்டார்ப்பா. ஏதாச்சும் செஞ்சுவிட்டிருப்பார் போல” என ஒருவன் சரியாகப் புள்ளியைப் பிடித்தான். திடீரென நாச்சிமுத்து யாராவது கொடுத்தால் டீ மட்டும் குடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் முருகன் அளவு கடந்த பதற்றத்தை உணர்ந்தார். “அவனுக்கு உயிர் வாழணும்ங்கற ஆசை வந்ததே என்னை வைய்யிறதுக்காகத்தான்” என அந்த எண்ணம் எழுந்துவந்தபோது அவரது முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள். அதைப் பட்டுத் துண்டால் துடைத்துவிட்டு ஒருவன், “முருகன் ஆக்ரோஷமா உஷ்ணமா இருக்கார் இன்னைக்கு” என்றான்.
முருகனுக்குத் தன்நிலையை நினைத்துச் சங்கடம் வந்தது. அப்புறம் இன்னொரு குழப்பமும் வந்தது. நாச்சிமுத்து அவரைத் தெருவில் அலையவிட்டதால் இப்படிச் சபதம் எடுத்துத் திரிகிறாரா? இல்லையெனில் அவரே சித்தனாக மாறித் தன் மனத்தில் தோன்றியது குறித்து அறிந்து கோபம் கொண்டுவிட்டாரா? வெளிப்படையாக அதைக் கேட்டும் தொலைய முடியாது. அவர் பின்னாலேயே முருகனும் நைச்சியமான வார்த்தைகளால் குரலாய், ஒரு செவலைநாயைப் போல விரட்டிக்கொண்டு ஓடினார்.
“இங்க பாரு. நாச்சிமுத்து. சும்மா நீ எதையாச்சும் பிடிச்சுத் தொங்கறதுக்காக என்னைப் பிடிச்சுக்கிட்டு தொங்கற. ஒழுங்கா வேலையைப் போய் பாரு. உனக்குன்னு குடும்பம் இருக்குதில்ல? பாரு அந்தச் சின்னக் குட்டி எப்படி வந்து தாத்தான்னு பேசுனா? மனுசனோ தெய்வமோ கருணை வேணும். அந்தக் குட்டி கண்ணிலகூட வெறுப்பை கக்கினா அப்புறம் என்ன அர்த்தம்? எல்லாத்துக்கும் ஒரு ஞாய தர்மம் இருக்குப்பா. யாருமே இல்லைன்னாகூட பரவாயில்லை. கடைசி வரைக்கும் காலடியிலயே வச்சு கஞ்சி ஊத்திவிட்டிருவேன். உனக்குன்னு மரியாதை இருக்குல்ல. உங்க குடும்பம் புழுவா துடிக்கிறாங்க. நாளைப்பின்ன அதுக்கும் சேர்ந்து என்னைத்தான் எல்லாரும் வைவாங்க. என்னையும் போட்டு எதுக்கு இப்படி துடிக்க விடற?” என்றார் பொறுமையாக. அவர் அதுவரை கேட்டுக்கொண்டிருந்தார் என்பதே அவருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.
அமைதியாய்க் கேட்டுவிட்டு, “நீ யார்டே அதைச் சொல்றதுக்கு?” என்றார். அதற்கடுத்து மேலும் மேலும் மூர்க்கமாகி, வசைச் சொற்கள், கேட்கக்கூசும் வார்த்தைகள். இப்போதெல்லாம் அவரைக் கண்டிப்பதை விட்டுவிட்டுப் பக்கத்தில் நின்று அதை ரசித்துப் பார்க்கவும் ஆட்கள் கூட்டம் பெருகிவிட்டது. “இந்த டீயை சாத்திட்டு நல்லா வைய்யிண்ணே. நமக்குமே ஒன்னும் செஞ்சு கொடுக்க மாட்டேங்கறாப்பில” என்றான் பக்கத்தில் நின்ற ஒருவன். இது தேவையா எனக்கு? அந்தக் குட்டிக் குழந்தை மட்டும் சொல்லி இருக்காமல் இருந்தால் தலையைக்கூடத் திருப்பிப் பார்த்திருக்க மாட்டேன். அவள் கிடைத்தால் கன்னத்தில் கிள்ள வேண்டும். ஆனால் அவள் பங்கு என்ன அதில்? அவள் உணர்ந்தாள் அதை. அவள் கண்ணிற்குள் இருக்கிற வெளிச்சத்தைத் தன்னுடையதாக உரிமை கொள்ள ஒருகணத்தில் முடிவெடுத்தேன். அதுதான் தவறோ எனக் குழப்பம் வந்தது அவருக்கு.
பிறகு அதைப் பற்றிக் கூர்மையாக என்ணத் தொடங்கினார் முருகன். இங்கே யாருமே எதற்குமே பொறுப்பில்லை என்றால், இங்கு சிதறிக் கிடப்பவை எல்லாமுமே எல்லோருக்குமானதுதானே? அதன்மீது நிற்கும் தன் பொறுப்பைத் தொலைக்கிறவன் யார்? அது பொறுப்பென்பதே அறியாதவன் யார்? அதுதான் துரியநிலை என முருகனுக்குப் புத்தியில் உறைத்தது.
அதன்பிறகு அதைப் பற்றிய நினைப்பையே விட்டுவிட்டார். நாச்சிமுத்து சீக்கிரம் கிளம்பிப் போனால் தேவலை என்கிற கட்டத்திற்கும் வந்து நின்றார். தைப்பூசம் வேறு பக்கத்தில் வருகிறது. அந்த நேரம் இப்படி ஒருவன் வைதுகொண்டே அலைந்தால் மேலும் அவப்பெயர் சேர்ந்துவிடும். இறுதியாய் உறுதியாய் நாச்சிமுத்திடம் பேசிப் பார்ப்பது என்கிற முடிவிற்கு வந்தார்.
“நாச்சிமுத்து, நான் சொல்றதை இன்னைக்கு ஒருநாள் கடைசியாய் கேளு. உனக்கு சமமா இறங்கி வந்து பேசறதாலயே நீ இப்டீ பண்ணக் கூடாது” என்றார். சொல்லிய பிறகு தான் அப்படிச் சொல்லி இருக்கக்கூடாது என்கிற உறைப்பும் வந்தது. “முதல்ல எந்த உயிரையும் சமமா நடத்த கத்துக்கோ” என நாச்சிமுத்து சொன்னபோது, திடுக்கிட்டுப் போனார் முருகன். அங்கே தன்னை உடைத்து முன்வைத்துவிட வேண்டும் என்கிற உணர்வை அடைந்தார் முருகன். “தப்புதான்” என்றார் மெல்லிய முணுமுணுப்பாய்.
நாச்சிமுத்து ஒன்றுமே வாய்வார்த்தையாய்ச் சொல்லவில்லை. நம்புகிறேன் என்கிற மாதிரி பார்த்துவிட்டு எழுந்து நின்றார். தன் உடலில் கோர்த்திருந்த கைகளை விடுவித்துக்கொண்டார். சட்டையைத் தடவி, தலைமுடியை ஒழுங்குபடுத்திய பிறகு, அவர் உள்நுழைந்த திசையில் எதிர்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார். ‘ஒரு சொல்லுக்குக் கிளம்பிட்டானே’ என்கிற உணர்வு வந்தது முருகனுக்கு. கூடவே ஆசுவாசத்தையும் அதிகமாக உணர்ந்தார்.
அதன்பிறகு நாச்சிமுத்து அடிவாரத்திற்கு வரவே இல்லை. வராவிட்டாலும் தேவலை என்கிற மனநிலையில் அதை அப்படியே மறந்துபோய்விடவும் நினைத்தார் முருகன். ஆனால் உள்ளுக்குள் அது ஒரு சிறிய விளக்குச் சுடரைப் போல மிதந்துகொண்டிருப்பதையும் கண்டார். அடியாழத்தில் அது தவளையைப் போலத் துள்ளியும் ஆற்றில் குதித்தது.
எல்லாமும் வழமையாகப் போய்க்கொண்டிருந்த நாளில், யாருமே தன்னைக் கண்காணிக்கவில்லை என்கிற உணர்வு கிடைத்தபோது, முருகனுக்குள் அந்தக் குறுகுறுப்பு விசையெனப் பெருகியது. சட்டெனக் கிழக்கு முகமாகத் தலையைத் திருப்பி மறிக்குட்டியைப் பார்த்தார்.
அதனருகே சிரித்தபடி இடும்பனைப் போலப் பேருருக் கொண்டு எழுந்து நின்றார் நாச்சிமுத்து.
முருகனுக்குமே சிரிப்பு வந்துவிட்டது அப்போது!
1 comment
“முதல்லே எந்த உயிரையும் சமமா நடத்த கத்துக்கோ” இந்தக் கதையின் உயிர்முடிச்சு இந்த வரிகளில்தான் இருப்பதாக நினைக்கிறேன். மேலும் ஒரு உண்மையான பக்தன்தான் கடவுளை உருவாக்க முடியும் என்ற கருத்தை கூறுகிறது. வேடிக்கையாக எழுதப்பட்டிருந்தாலும் அற்புதமான விஷய ஞானம் உள்ள கதை. திரு.சரவணன் சந்திரன் மென்மேலும் எழுத்தில் சிறக்க வாழ்த்துகள்.
Comments are closed.