மரத்தில் மறைந்தது
பைன் மரங்களினூடாகக் காற்று ஊளையிட்டுக் கடந்தது. சுழன்று சீழ்க்கையடித்தது. இன்னும் விடியவில்லை. எங்கோ அடிவானில் சன்னமாய் வெள்ளிக் கீற்றுபோல சிறு வெளிச்சம். மரவீட்டின் கூரையில் என்னவோ விழுகிறது. சரசரவென உருள்கிறது. பைன் மரக்காட்டின் நடுவே ஊன்றிய கால்களின் மேலே கட்டப்பட்ட மரவீடு. காட்டின் ஒவ்வொரு அசைவுக்கும் இந்த வீடும் அசைந்து சத்தம் எழுப்புகிறது. சாத்தியிருக்கும் ஜன்னல் கதவு கிறீச்சிட்டு அசைகிறது. அதைக் கட்டியிருக்கும் சணல் கயிறு தளர்ந்திருக்க வேண்டும். கனத்த போர்வையை விலக்க மனமில்லாமல் புரண்டான் சசிதரன். […]
