நாவல் பகுதி

மனையறம், இரண்டு அத்தியாயங்கள்

அத்தியாயம் 20

கார் வாசலை நெருங்கக் காத்திருந்ததுபோல அந்த ஆள் ஓடிவந்தார். கதவைத் திறந்த காவலர் அவசரமாக அவரைப் பிடித்துப் பின்னுக்கிழுத்தார். “சொல்லிட்டே இருக்கேன். மறுபடியும் நீ வந்துட்டியா. போய்யா அந்தப் பக்கம்.” தொப்பியை சரிசெய்துகொண்டே கதவைச் சாத்தினார். மீண்டும் அவர் உள்ளே கைகாட்டி வாதிடுவதைத் துர்காவால் கண்ணாடியில் பார்க்க முடிந்தது.

“அது யார்னு கேளு.” துர்கா நானியிடம் சொல்லிவிட்டு இறங்கினாள்.

“யாராச்சும் சான்ஸ் கேட்டு வந்துருப்பாங்க. இதென்ன புதுசா? தினம் நடக்கறதுதானே? நீ போ. பாத்துக்கலாம்.” நானி அலட்சியமாக விரலிடுக்கில் சாவியைச் சுழற்றியபடி படிகளில் ஏறினான்.

துர்கா வாசலைப் பார்த்து நின்றாள். காவலரைக் கைகாட்டி அழைத்தாள். ஓடிவந்தார். 

“யார் அது? என்ன வேணுமாம்?”

“அந்த ஆள் ரெண்டு நாளா வந்துட்டு ஒரே தொந்தரவும்மா. ராவ் சாரோட பிரெண்டுன்னு சொல்றாரு. நம்ப முடியலை. அதான் விரட்டி விட்டேன்.”

துர்காவுக்கு அந்த ஆளைப் பார்க்க வேண்டும் போல் ஆவல் எழுந்தது. “என்ன வயசிருக்கும்?”

“ ஐம்பதுக்கும் மேல இருக்கும். அழுக்கு வேட்டி. பழைய சட்டை. ராவ் சார் இங்க இருக்கறத தெரிஞ்சிட்டு வந்துருப்பார்.”

“நீங்க போயி அவரக் கூட்டிட்டு வாங்க.” 

காவலர் ஓடினார். கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். சில நிமிடங்களுக்குப் பின் அந்த ஆள் உள்ளே வந்தார். கூன் விழுந்தாற்போன்ற குனிந்த நடை. ஆனால், சோர்வில்லை. நரைத்த தலையும் தாடியுமாக கந்தலான பையைத் தோளில் மாட்டிக்கொண்டு ஒரு கையால் வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்தபடி ஓடி வந்தார். காவலர் அவசரமாக அவரைப் பின்தொடர்ந்தார் “இருய்யா. மெதுவாப் போ. அம்மாதான் வரச் சொல்லிருக்காங்க.”

கூடத்தில் காத்திருந்தாள் துர்கா. இத்தனை காலமாய் உடனிருந்தும் ராவ் சாரைப் பற்றித் தெரிந்தவை அனைத்தும் நேரில் பார்த்து அறிந்தவை மட்டுமே. இதற்கு முன்னால் அவர் யார், என்ன என்பதைப் பற்றி அவரும் சொன்னதில்லை, துர்காவும் கேட்டதில்லை. இப்போது எதுவும் தெரிய ஒரு வாய்ப்பு என்ற எண்ணத்தில்தான் காத்திருந்தாள்.

“நமஸ்காரமண்டி.” தெலுங்கைக் கேட்டதும் ஒருகணம் திகைத்தாள். கைகூப்பினாள்.

“கூச்சண்டி.”

“நேனு பாலய்யா. வெங்கி ஸ்நேகிதடு.”

அவள் அனுமதிக்காகக் காத்திருந்த காவலர் தலையசைத்ததும் விலகி வெளியேறினார். வெங்கி என்றதும் ஒரு நிமிடம் துர்கா சொன்னவரை உற்றுப் பார்த்தாள். பணிவுடன் வந்து நின்றார் பணியாள். 

“என்ன குடிக்கறீங்க?”

“எது குடுத்தாலும் குடிப்பேன். உங்க விருப்பம்.” இப்போது சுத்தமான தமிழ் ஒலித்தது. 

“காப்பி குடிப்பீங்கதானே?” 

அவர் தலையாட்டியதும் பணியாள் உள்ளே மறைந்தார். 

“அம்மாவுக்குக் கொழப்பம்னு புரியுது. தெலுங்குல ஆரம்பிச்சான். இப்ப தமிழ் பேசறான். ராவ் சாரை வெங்கிடுங்கறான். இவனை நம்பலாமான்னு சந்தேகம். சரிதானே?”

துர்கா பதில் சொல்லவில்லை. 

“நியாயந்தான். உங்க கூர்க்கா ரெண்டு நாளா பக்கத்துல நிக்கவே விடலை. அவரைச் சொல்லியும் தப்பில்லை. தெனம் எத்தன பேரு இப்பிடி சொல்லிட்டு வர்றாங்க. உங்களுக்கும் தொந்தரவுதான். ஆனா நான் அப்பிடியில்லை. இப்பிடி அழுக்கும் கந்தலுமா இருக்கறதுதான் என் தப்பு. மத்தபடி நான் சொல்றதை நீங்க நம்பலாம். வெங்கிடுவை நீங்கதான் வெச்சு பாத்துக்கறீங்கன்னு முன்னாடியே எனக்குத் தெரியும். தெரியறது என்ன? லோகத்துக்கே தெரியுந்தானே. ஆனா நான் வந்து பாக்கலை. அவன் நல்லா இருக்கும்போது அப்பப்ப சந்திப்பேன். பணமும் கொடுப்பான். இங்கதான், இப்பத்தான்னு கெடையாது. தோணும்போது. ஒண்ணு ரெண்டு தடவை என்னைய திருப்பதிக்கு அழைச்சிட்டுப் போயிருக்கான். அவனுக்கு இப்பிடி ஆயிடுச்சுங்கறதே கொஞ்ச நாளைக்கு அப்பறந்தான் தெரியும். கேட்டதுமே நம்பலை. அவனுக்கு இப்பிடியெல்லாம் ஆகாதுன்னு உறுதியா நம்பினேன். அதனால அதை சீரியஸா எடுத்துக்கலை. ஒண்ணு ரெண்டு தடவை திரும்பவும் கேட்டபோது, படிச்சபோதுதான் உண்மைன்னு தெரிஞ்சுது. தாங்கலை எனக்கு.”

அவர் முகத்தைப் பார்த்து பேசவில்லை. வட்ட மேசையின் மீதிருந்த பூக்குவளையைப் பார்த்தபடி பேசினார். கண்கள் அலைபாய்ந்தன. விரல்கள் காற்றில் எழுதின. கேட்டாலும் கேட்காது போனாலும் நான் சொல்வேன் என்பதுபோல சொற்களைக் கொட்டினார்.

ஆவி பறக்க காபி வந்ததும் ஆவலுடன் எடுத்துப் பருகினார்.  சூடு ஆறுவதற்காக அவர் காத்திருக்கவில்லை. கோப்பையை கீழே வைத்தவர் தயக்கத்துடன் ஏறிட்டார் “தப்பா நெனக்கலேன்னா இன்னொரு கப் கெடைக்குமா?”

இன்னொரு கோப்பையையும் பருகி முடித்தார் “வெங்கிடுவப் பாக்கலாமா?”

“பாக்கலாம். உங்களுக்கு எப்பிடிப் பழக்கம்?”

பாலய்யாவின் கண்கள் விரிந்தன “என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க? வெங்கிடுவும் நானும் காலேஜ்ல ஒண்ணா படிச்சோம். அவன் சொல்லலையா? அதெப்படி சொல்ல முடியும்? என்னைப் பத்தி உங்க கிட்ட அவன் ஏன் சொல்லணும்?”

“காலேஜ்ல படிச்சாரா? எங்க?”

“அப்ப உங்களுக்கு எந்த விவரமுமே தெரியாது. சரியாப் போச்சு.”

துர்கா சோர்வுடன் கைவிரித்தாள் “நீங்களே சொல்லுங்க.”

“ஒரு நிமிஷம். வெத்தல போட்டுக்கலாமா? ஒண்ணும் பிரச்சனையில்லையே.” பையிலிருந்து இன்னும் அழுக்கான சிறிய பையை எடுத்து வாடிப்போன வெற்றிலைகள் இரண்டை எடுத்தார். பாக்கையும் சுண்ணாம்பையும் சேர்த்து மடித்து வாயில் போட்டார். 

“வெங்கிடு மாசாமாசம் திருப்பதி போவாரே. அது தெரியுமா?”

“தெரியும்.”

“எதுக்கு?”

“அவருக்கு தேவுடுவைப் பிடிக்கும்.”

“அது சரி. ஆனா, இன்னொரு முக்கியமான காரணம், அதுதான் அவரோட சொந்த ஊர்ங்கறதுதான்.”

துர்கா நிமிர்ந்தாள். இப்படியொரு காரணத்தை அவள் இதுவரை உத்தேசித்திருக்கவில்லை.

“சொந்த ஊர்னா திருப்பதி பக்கத்துல சந்திரகிரி. ஒரு பழைய கோட்டை இருக்கே. அங்கதான். அவங்கப்பா அங்க கடை வச்சிருந்தார். ஒரு அண்ணன், ரெண்டு அக்காக்கள். ஸ்கூல் முடிஞ்சதும் திருப்பதி காலேஜ்ல சேந்தப்பதான் எனக்குப் பழக்கம். நான் சித்தூர்காரன். ஊர்லேர்ந்து சைக்கிள்ல வருவான். படிப்புல ரெண்டு பேருமே சுமார்தான். ஆனா ரெண்டு பேருக்கும் சினிமான்னா உசுரு. எப்பிடியோ காசு தேத்தி படம் பாத்துருவோம்.”

அதற்குள் வாய்க்குள் சாறு ஊறியிருந்தது. எழுந்து கழிப்பறைக்கு வழிகேட்டு போனார். வாயைத் துடைத்தபடியே திரும்ப வந்தார். “வெத்தலையப் போட்டுருக்கக் கூடாது. நெனச்சதைச் சொல்ல முடியலை.”

துர்கா அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தாள்.

“காலேஜ் ரெண்டு மூணாவது வருஷம் படிக்கும்போது அக்காக்களுக்கு கல்யாணம் நடந்துச்சு. பெரிய அக்காவுக்கு வளையல் கடையும், சின்னக்காவுக்கு பூக்கடையும் வெச்சுக் குடுத்தாரு அவங்கப்பா. அண்ணனுக்கு தேவஸ்தானத்துல வேலை ஏற்பாடு பண்ணினாரு. அவரால முடிஞ்சது அவ்வளவுதான். வெங்கிடுதான் கடைசி. அதனால அவரைப் பத்தி அப்ப யாரும் கவலைப்படலை. காலேஜ் முடிஞ்சதும் மெட்றாஸ்க்கு கௌம்பி வந்துட்டான்.

“அவனுக்கு முன்னாடியே நான் வந்துட்டேனா. ரெண்டு பேரும் சேர்ந்து கோடம்பாக்கத்துல அலைஞ்சோம். சினிமாவுல தெலுங்குக்காரங்க செல்வாக்கா இருந்த காலம் அது. ஆறு மாசம் ஒண்ணுமே நடக்கலை. நானாச்சும் அப்பப்ப ஊருக்கு போயிட்டு வருவேன். வெங்கிடு அதப் பத்தி யோசிக்கவே இல்லை. அப்பறம் திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட்ல முக்கியமா இருந்த ஒருத்தரோட சிபாரிசுல டைரக்டர் ஆவுல ராஜேஸ்வரராவ் கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டர்களா சேந்தோம். நாங்க சேந்தப்பறம் அவர் எடுத்த ரெண்டு படமும் ஹிட். அதனால எங்களக் கூடவே வச்சிக்கிட்டார். எப்பிடியும் ஒரு பட வாய்ப்பு வாங்கித் தருவார்னு நெனச்சோம். அப்பறம் அவருக்குப் படம் கெடைச்சிட்டே இருந்துச்சு. ஒண்ணு ஹிட் ஆகும், அடுத்த ரெண்டு சுமாரா போகும். ஆனா பெரிய டைரக்டர்னு பேரு எடுத்துட்டாரு. ரெண்டு வருஷமா அவர் கூடஇருந்தும் எந்த மாற்றமும் இருக்கல. எனக்கு நம்பிக்கை விட்டுருச்சு. வெளில வேற ஒரு டைரக்டர்கிட்ட போயிட்டேன். அங்க ஒரு வருஷம் இருந்து சரியா வரலைன்னு இன்னொரு ஆள்கிட்ட சேந்தேன். நாலு வருஷத்துல ஆறு டைரக்டர்கிட்ட வேல பாத்தேன். ஒண்ணும் அமைஞ்சு வரலை. ஆனா, இவன் ராஜாராவ்கிட்டயே ஐஞ்சு வருசம் விசுவாசமா இருந்தான். படம் இருந்தாலும் இல்லாட்டியும் அவர்தான் கெதின்னு கெடந்தான். வீட்டு வேலைகளையும் கவனிப்பான். ஷூட்டிங் இல்லேன்னா அவனுக்கு சாப்பாடு அந்த வீட்ல தான். வெளிய வர்றதப் பத்தி நெனச்சுக்கூட பாக்கலை.

“நல்லா பெருசா வளர்றவங்களுக்கு சொந்தமா படம் எடுக்கற ஆசைதான் வெனையா வரும். ராஜாராவுக்கும் அப்பிடித்தான். பெரிசாத் திட்டம் போட்டாரு. நெறையக் கடன் வாங்கினாரு. முக்காவாசி படம் முடிஞ்ச நெலையில ஹீரோவோட சின்னதா ஒரு வாக்குவாதம். நீ பெரியவனா, நான் பெரியவனான்னு சண்டையில முடிஞ்சுது. அந்த ஹீரோ போட்டுப் பாத்துட்டான். படத்தை முடிக்க முடியலை. பணம் குடுத்தவனெல்லாம் நெருக்க ஆரம்பிச்சாங்க. வட்டிக்கு மேல வட்டி, அதுக்கு மேல வட்டின்னு கிறுகிறுன்னு ஏறுச்சு. ஒண்ணுமே பண்ண முடியல. இருந்த பங்களா, கார், நகைன்னு எல்லாத்தையும் குடுக்கற நெலமை.

“இதுல பெரிய அளவு கடன் குடுத்தவங்க தெக்கத்திக்காரங்க. சேட்டுக காலம் முடிஞ்சு இவனுக புதுசா நுழைஞ்சானுங்க. கட்சி செல்வாக்கு, அடியாள் பலம், போலீஸ் சப்போர்ட் எல்லாம் உண்டு, அவங்கள ஒண்ணுமே பண்ண முடியாது. பணத்தைக் குடுக்கணும் இல்லையா அவங்க சொல்றதைக் கேக்கணும். விடிஞ்சா வீட்டுக்கு வந்து நிப்பாங்க. வீட்ல இருக்கற பொம்பளைங்க பிள்ளைக முன்னாடி அசிங்கமா பேசுவாங்க. ஹாலையே கக்கூஸ் ஆக்கிருவாங்க. இதுல அவமானப்பட்டு தற்கொலை பண்ணிட்டவங்க உண்டு. 

“இதெல்லாம் பரவால்லே. பணம் வராதுன்னு தெரிஞ்சா நடிகைகளை,  வீட்ல இருக்கற பொண்ணுங்களக் கடத்திட்டுப் போயிருவாங்க. ஒரு மாசம் ரெண்டு மாசம் வெச்சி சம்பாதிச்சுட்டு அனுப்புவாங்க. கேட்ட கதைங்க நெறைய. காதுக்கே வராம போன கதைங்க நெறைய.

“ராஜாராவோட கெட்ட நேரம் அவருக்கு ஒரு அழகான பொண்ணு இருந்தா. காலேஜ் படிக்கற பருவத்துல. அள்ளிட்டுப் போயிட்டாங்க. அவங்கதான்னு தெரியும். ஆனா கிட்ட நெருங்கவே முடியல. காசு இருந்தா பேசுன்னு ஒரே வார்த்தைதான் பதில். எங்க வெச்சிருக்காங்க என்ன செய்யறாங்கன்னு எதுவும் தெரியாது. அந்த சமயத்துலயும் நம்ம வெங்கிடு டைரக்டர்கூடவேதான் இருந்தான். சம்பளம் கெடையாது. ஆனாலும் அவன் வெளியில வரலை.

“கடங்காரங் கால்ல விழுந்து கெஞ்சி அழுதான். அங்கயும் இங்கயுமா ஓடினான். யாரும் உதவிக்கு வரலை. ஒரு மாசம் ஓடிப் போச்சு. கடைசியா இதுல பணம் தேறாதுன்னு தெரிஞ்சு அவங்களே புள்ளய கொண்டு வந்து விட்டுட்டாங்க. தேனிக்கு பக்கத்துல ஏதோவொரு தோப்பு பங்களாவுல வெச்சிருந்தாங்களாம். ராத்திரியோட ராத்திரியா அழைச்சிட்டு வந்தாங்க. வெங்கிடு அன்னிக்கு அங்கதான் இருந்தான். அந்தப் பொண்ண கண்ணால பாக்க முடியலை. பேயறைஞ்ச மாதிரி முழிக்கறா. தொவண்டு போய் கெடந்திருக்கா. அந்தம்மாவும் வெங்கிடவும் ஹாஸ்பிடல்ல காட்டி மருந்து மாத்திரை வாங்கிட்டு வீட்டுக்கு வந்திருக்காங்க.

மனையறம், இரண்டு அத்தியாயங்கள்

“பெரம்பூர்ல ஒரு வாடகை வீட்டுலதான் அப்ப இருந்தாங்க. அலுத்துப்போய் எல்லாரும் தூங்கறாங்க. அந்தம்மா துக்கமும் அவமானமும் பொறுக்காமத் தூக்குல தொங்கிருச்சு. அதப் பாத்த டைரக்டருக்கு தாங்கலை. முன்னயே ஆஞ்சியோ பண்ணவரு. மாரடைப்பு. அவரும் போய்ச் சேந்துட்டாரு. என்ன நடக்குதுன்னே புரியாம பிரமத்தி அடிச்ச நிலையில பொண்ணு. டைரக்டரோட அம்மா மட்டுந்தான் பொண்ணுக்கு துணை. எப்பிடியிருக்கும் யோசிச்சு பாருங்க.

“ரெண்டு பேரையும் அடக்கம் பண்ணிட்டு வந்தா வீட்டுக்காரன் உடனே காலி பண்ணச் சொல்றான். எங்க போறது, என்ன பண்றதுன்னு தெரியாம அவ்வாவும் பேத்தியும் நிக்கறாங்க. அவரு காக்கிநாடா . ரொம்ப தூரம். இவரு நொடிச்சிட்டாருன்னு தெரிஞ்சதும் சொந்த பந்தம் யாரும் எட்டிப் பார்க்கல. பிறகு வெங்கிடுதான் ஒரு வீடு ஏற்பாடு செஞ்சு ரெண்டு பேர்த்தையும் தங்க வெச்சான். சாப்பாட்டுக்கு வேணுங்கறதை வாங்கிக் குடுத்தான். இதுக்கு நடுவுல வெங்கிடுவோட குணத்தப் புரிஞ்ச, தெறமையப் பத்தி தெரிஞ்ச தயாரிப்பாளர் ஒருத்தர் மேனேஜரா சேத்துக்கிட்டார். படம் எடுக்கற ஆசையில வந்தான். விதி அவனை புரொடக்சன் மேனேஜரா ஆக்கிடுச்சு. அதுக்காக சோர்ந்து போகலை. குடுத்த வேலைய சின்சியரா செஞ்சான். 

“பொண்ணு மனநிலையில ஒரு மாத்தம் இருக்கட்டும்னு அவளை மறுபடி காலேஜ்ல சேத்துவிட்டான். எத்தனைதான் மூடி மறைச்சாலும் இதுமாதிரி விஷயங்கள் ஈஸியா வெளியில வந்துருமே. அந்தப் பொண்ணுக்கு நெருக்கடி. குடியிருந்த வீடு, படிச்ச காலேஜ் எல்லாப் பக்கமும். இவனும் சலிக்கலை. வேற பக்கமா வீடு மாத்தினான். வேற காலேஜ்ல மறுபடியும் பீஸ் கட்டி சேத்துப் படிக்க வச்சான். 

“அந்தக் கெழவி ரொம்ப நாள் தாங்கலை. கண்ணை மூடிட்டா. இனி என்ன செய்ய முடியும்? அநாதையா நிக்கிற பொண்ண என்ன செய்ய? அப்பதான் அப்படி ஒரு முடிவெடுத்தான். இரக்கமா கருணையா.. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். என்ன நெனச்சி செய்தானோ அந்த பத்மாவதித் தாயாருக்குத்தான் தெரியும். அந்தப் பொண்ணுகிட்ட சம்மதமான்னு கேட்டான். அவ எதுவும் சொல்லலை. வேற வழி? நெருக்கமான நாலஞ்சு நண்பர்கள அழைச்சிட்டு திருப்பதிக்கு போனான். திருச்சானூர்ல பத்மாவதி அம்மகாரி குடில தாலியக் கட்டினான். நானுந்தான் கூட இருந்தேன்.

“ஆனா ஒண்ணு. எங்கிட்ட அவன் சொல்லிருக்கான். இல்லை, நான்தான் அவங்கிட்ட ஒருநாள் போதையில கேட்டேன் ‘அவ இப்ப உன் பொண்டாட்டி. அந்த ஒரு மாசம் என்ன நடந்துச்சுன்னு கேட்டியா?’ அவன் கோவிச்சுக்கல. ஆத்திரப்படலை. நியாயமா பாத்தா என்னை அடிச்சிருக்கணும். ஆனா அவன் சொன்னான் ‘அத தெரிஞ்சுட்டு நான் என்ன பண்ணப் போறேன்? எனக்குத் தெரிய வேணாம்.’ 

“அப்படிப்பட்ட மனுஷன் அவன்! யாருக்கும் சின்னதாகூட கெடுதல் நெனக்காதவன். இன்னிக்கும் அவனோட அண்ணா அக்கால்லாம் திருப்பதிலதான் இருக்காங்க. தன்னால முடிஞ்சதை செஞ்சிட்டுதான் இருக்கான். பெருமாள் பாத்துக்குவான்னு சொல்வாங்க. அவனும் அதுக்காகத்தான் மாசாமாசம் அவரப் போய் பாக்கறான்னு நெனக்கறோம். ஆனா, அவன் அதுக்கெல்லாம் மேல. 

“அவனுக்கே இப்பிடின்னா இது நிச்சயமா கலிகாலந்தான். அவனை என்னால இப்பிடி ஒரு நிலைமையில பாக்க முடியாதுன்னுதான் வராமயே இருந்தேன். ஆனா, ரெண்டு வாரம் முன்னாடி எங்களோட அஸிஸ்டெண்ட் டைரக்டா இருந்து என்னைய மாதிரியே சீரழிஞ்சு போன இன்னொரு பிரெண்ட் செத்துப் போனான். வெங்கிடுவுக்கும் அவனத் தெரியும். அவனுக்கு ஒடம்புக்கு வந்து ஆஸ்பத்திரிலயே இருந்தபோது இந்த மாதிரி நெனச்சுட்டு பாக்காமயே இருந்துட்டேன். கடேசில ஒருநா கண்ணை மூடிட்டான். இப்ப நான் நெனச்சாலும் பாக்க முடியாது. ரொம்ப வருத்தமாயிடுச்சு.  வெங்கிடுவை இனி பாக்காம இருக்கறது கூடாதுன்னு நெனச்சேன். தேடி வந்தேன்.”

தரையை வெறித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். பெருகி வழிந்த கண்ணீரைத் துடைக்க முற்படவில்லை. அங்கங்கே அவள் இட்டிருந்த புள்ளிகள் அனைத்தும் சேர்ந்து கோலம் முழுமை பெற்றிருந்தது. அவளால் அதைத் தாங்க முடியவில்லை. கையறு நிலையில் ஷ்ரவ்யாவை ஏந்தியபடி மழையில் நடுத்தெருவில் கதியற்று நின்ற துயரம் வேறு யாருக்கும் நிகழ்ந்திருக்காது என்றெண்ணியது எத்தனை பிசகு? அதற்கும் மேலே சுமக்க முடியாத பாரத்தை ஏற்றிக்கொண்டு அதைப் பற்றி எதையுமே வெளியில் காட்டாமல் வாழ்ந்திருக்கும் மனிதன் தன் அருகிலேயே இருந்திருக்கிறார். என்னுடைய துக்கம் எனக்கு வாய்த்தது. பிருத்வியால் உண்டானது. ஆனால், அவர் ஏற்ற துக்கம் இன்னொருவருடையது. எந்த விதத்திலும் அவர் சம்பந்தப்படாதது. இது பெருந்தன்மையா? தியாகமா? இல்லை. அவற்றையெல்லாம் விட மேலானது. அதற்குப் பெயரில்லை. ஒருவேளை, பெயரிட வேண்டுமென்றால் பொருத்தமான ஒரே சொல், ‘ராவ் சார்’தான்.

“மனசுல இருந்ததை கொட்டிட்டேன். அவனைப் பாக்கலாமா?” பாலய்யா வெற்றிலையை எடுத்தார்.

“ஒரு நிமிஷம். இன்னொரு காபி குடிச்சிட்டு அப்பறமா வெத்தலை போடுங்க.”

முகம் மலரத் தலையாட்டினார்.

“உங்களப் பத்தி ஒண்ணுமே சொல்லலை. நீங்க என்ன செய்யறீங்க?”

கைகளை விரித்தார். தலையாட்டினார். உதடுகளைப் பிதுக்கினார். “எதுவுமே நடக்கலை. அத்தனை காலமும் வீணாப் போச்சு. சினிமாவை நம்பி வந்தவங்க கதிதான் தெரியுமே. கொஞ்சம் பேர் சுதாரிச்சுட்டு வெளியில போயிடுவாங்க. எங்கள மாதிரி நெறையப் பேரு இன்னிக்கு இல்லேன்னா நாளைக்கு, நாளைக்கு இல்லேன்னா இன்னொரு நாள்னு இதுக்குள்ளயேதான் காத்துக் கெடப்பாங்க. ஒவ்வொருத்தனுக்கும் தெரியும் எதுவும் நிச்சயம் இல்லேன்னு. ஆனா, தனக்கு மட்டும் ஏதோ ஒண்ணு நிச்சயமா நடக்கும்னு நம்புவான். எத்தனை தடவை தோத்துப் போனாலும் ஓஞ்சுற மாட்டான். அடுத்த நொடி ஒரு போன் வந்தா போதும், அத்தனையையும் மறந்துட்டு கதை சொல்ல ஓடுவான். நானும் அப்பிடித்தான் ஓடிட்டே இருந்தேன். திரும்பிப் பாத்தா சொல்றமாதிரி உருப்படியா எதுவுமே பண்ணிருக்கலை. வயசுமாயிருச்சு. ஊருக்குத் திரும்பிப் போகவும் மனசில்லை. அங்க போய்தான் என்ன செய்ய? வேறென்ன செய்யறது. கெடைக்கற வேலையெல்லாம் செஞ்சேன். இதுதான்னு இல்லை. ஒருவேளை சோறுன்னா போதும், என்ன வேணாலும் செய்வேன். இப்ப வளசரவாக்கத்துல ஒரு கல்யாண மண்டபதுல இருக்கேன். மேனேஜர்னு வேணா சொல்லிக்கலாம். தங்கறதுக்கு எடமும் சோறும் நிச்சயமா இருக்கும். அதான் வசதின்னு அப்படியே இருந்துட்டேன். மீதி காலத்தையும் அப்பிடியே ஓட்டிற வேண்டிதுதான்.”

போண்டாவை ஆசையுடன் தின்றார். காபியை சூடாகப் பருகி முடித்துவிட்டு நிறைவுடன் எழுந்தார்.

“இதை வச்சுக்குங்க.” ஐநூறு ரூபாய் தாள்களை மடித்து நீட்டினாள்.

“எதுக்கும்மா? உங்களுக்குப் பெரிய மனசு. அவனை மாதிரியே. நல்லா இருங்க.” ஆவலுடன் வாங்கிப் பையில் பத்திரப்படுத்தினார்.

“அவுட் ஹவுஸ்ல இருக்கார். வாங்க, போலாம்.” வாசலில் விளக்கெரிந்தது. தோட்டத்துப் பாதையில் நடக்கும்போது பால்கனி விளக்குகளும் ஒளிர்ந்தன. தேஜா கதவைத் திறப்பது தெரிந்தது.

அத்தியாயம் 25

கரைதொட்டு ஓடியது கோதாவரி. பழுப்பு நிறத்தில் புரண்டும் நெளிந்தும் பொங்கிப் பெருகியது. வெயில் காய்ந்த படிகளில் கால்களின் ஈரத்தடங்கள். தத்திப் பறந்த காக்கைகள் பிண்டங்களில் கண் வைத்திருந்தன. செண்பகலட்சுமி தலையில் முக்காடிட்டிருந்தாள். ரூபாவும் ரம்யாவும் அருகே அமர்ந்து சாஸ்திரிகளின் காரியத்தில் கவனமாயிருந்தனர். உதிர்ந்த சாமந்தி இதழ்கள் நீரில் மிதந்தன. 

கரையோரத்தில் நின்ற அரசமரத்தின் நிழலில் துர்கா காத்திருந்தாள். எலும்பும் சதையுமாய் உயிரும் உணர்வுமாய் நடமாடித் திரிந்த வெங்கடேஸ்வரராவ் என்ற மனிதரின் சாம்பல் கோதாவரியில் கலந்துவிட்டது. நெருப்பில் வெந்த உடல் இப்போது நீரில் கரைந்தும் போனது. பிறவி எடுத்த நதியின் மடிக்கே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. 

காரியங்கள் முடிந்து மூவரும் மேலே வந்தபோது களைத்திருந்தார்கள். சாஸ்திரிகள் கைகூப்பி வணங்கிவிட்டு நானியுடன் நடந்தார். தேஜா ஓடும் நதியைப் பார்த்தபடி கார் அருகில் நின்றான். 

எல்லாம் முடிந்துபோனது என்று எண்ணிய கணத்தில் நெஞ்சு வலித்தது துர்காவுக்கு. கொளுத்திய வெயிலின் உக்கிரத்துடன் யதார்த்தம் சுட்டது. ரூபாவும் ரம்யாவும் தயங்கி நிற்க செண்பகலட்சுமி அவளை நோக்கி வந்தாள். எழுந்து நின்றாள் துர்கா. எத்தனை நாட்களாயிற்று இப்படி அருகில் பார்த்து? வீட்டிலிருந்து விரட்டிய அன்று கண்ட முகம் இல்லை இப்போது. வெகுவாகத் தளர்ந்து போயிருந்தாள். என் மீது இன்னும் தீராத கோபத்தில்தான் இருக்கவேண்டும். சென்னையிலிருந்து இன்னொரு காரில் அழைத்து வரும்போதும் நேருக்கு நேர் பார்க்கவேண்டாதது போல விலகியே இருந்துவிட்டாள். இப்போது என்னை நோக்கியே வருகிறாள். என்ன செய்யவேண்டும். 

அருகில் நின்றவள் வெயிலில் மின்னி அசைந்தோடிய நதியைப் பார்த்தாள். கண்களில் நீர் துளிர்த்தது. மூக்கைச் சுழித்து உறிஞ்சினாள். படபடப்பை அடக்கியபடி துர்கா காத்திருந்தாள். 

‘‘உசுரு போற வரைக்கும் மூஞ்சில முழிக்காதயே போயிட்டார். அஸ்தியை கரைக்கற பாக்கியத்தையாவது குடுத்தியே மகராசி..’’ சொற்களை முடிக்கவிடாது அழுகை பொங்கியது. 

அருகில் சென்று தோளோடு அணைத்துக்கொள்ளத் துடித்தாள் துர்கா. அஞ்சினாள். மிகவும் உடைந்து போயிருந்தாள் செண்பகா. 

‘‘என்ன பாவம் பண்ணினேன்னு தெரியலை. அவருக்கு என்னைப் பிடிக்கலை. அதுவும் நீ வந்ததுக்குப் பிறகு எங்கிட்ட அவர் பேசறதைக்கூட நிறுத்திட்டார். உன்னை நான் குறை சொல்லிட்டே இருந்தேனே ஒழிய அவரைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணவே இல்லை.’’ துக்கத்தை அடக்கிக்கொண்டு வெகு நிதானமாகச் சொன்னாள்.

இப்போது சொல்லித்தான் ஆகவேண்டும். இனி வாய்ப்பில்லை. இந்த சந்தர்ப்பத்தில் பேசமுடியாது போனால் இனி எப்போதுமே பேசமுடியாமல் போய்விடும். இது இவளைச் சமாதானப் படுத்துவதற்காக இல்லை. ராவ் சாருக்காக. அவரது ஆன்மசாந்திக்காக.

‘‘அக்கா.. இத்தனை நாள் உங்ககிட்ட சொன்னதில்லை. உங்களுக்கு பிடிக்கலை. அதனால உங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான் நான் எதிலேயுமே தலையிடலை. உங்களுக்கே நல்லாத் தெரியும். சார் இல்லேன்னா நான் இல்லை. கையில குழந்தையோட மெட்றாஸில வந்து நின்னப்ப யாரையுமே தெரியாது எங்களுக்கு. சாரோட நம்பர் மட்டுந்தான் கையில இருந்துச்சு. சாருக்கு என்ன தோணிச்சோ தெரியாது. நேரா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தார். அவன் அப்பிடி என்னையும் பெத்த பொண்ணையும் விட்டுட்டுப் போவான்னு நான் நெனச்சுக்கூடப் பாக்கலை. சாருக்கும் அது பெரிய அதிர்ச்சிதான். ஆனா அந்த நேரத்துல சார் மட்டும் இல்லேன்னா என்ன ஆயிருப்பேன்னே தெரியாது. எனக்கும் அப்ப வேற வழியில்லை. உங்க வீட்ல இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலைங்கறதை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது. யாரா இருந்தாலும் அப்படித்தான். பத்து நாள் பாப்பாங்க. ஒரு மாசம் பாப்பாங்க. அதுக்கும் மேலேன்னா யாருக்கும் சங்கடந்தான். ரெண்டு பெண் குழந்தைங்களை வச்சிட்டு கஷ்டப்பட்டீங்க. அப்பிடி நீங்க விரட்டினதும் ஒரு வகையில நல்லதுதான். என்னால அப்ப செத்துப்போக முடியலை. கையில இருந்த குழந்தையை அநாதையாப் போட்டுட்டு போக மனசு வர்லை. அதையும் சாகடிச்சிட்டு செத்துப்போகவும் தைரியம் இல்லை. சார் என்னை மாலா வீட்டுக்கு அழைச்சிட்டு போறதுங்கறது அந்த நிமிஷத்துல எடுத்த முடிவு. அந்த முடிவுதான் என்னை இப்ப வாழ வெச்சிருக்கு. வார்த்தைக்கு வார்த்தை சார்னு சொல்றதே எனக்கு உறுத்தலாத்தான் இருக்கு. நியாயமா பாத்தா நான் நாணான்னுதான் சொல்லணும். எங்க நாணாவோட முகம் எனக்குத் தெரியாது. ராவ் சார்தான் எல்லாம்..’’ கண்ணீரைத் துடைத்தாள். என்னவோ பேசியதுபோல களைப்பாக தோன்றியது. சொல்ல வந்ததை சொல்லிவிட்டேனா?

செண்பகா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அழுவதை உணர்ந்து மெல்ல தோளில் கைவைத்தாள். உடல் குலுங்கியது.

‘‘உங்களுக்கு நிறைய கஷ்டத்தைக் குடுத்துட்டேன். அதுக்கான பரிகாரங்களையும் என்னால முடிஞ்சளவுக்கு செய்யறேன். செய்வேன். ராவ் சார் இருந்து என்ன செய்யணும்னு நெனச்சாரோ அதையெல்லாம் நான் செய்வேன். நீங்க தைரியமா இருக்கணும். இதெல்லாம் ராவ் சாரோட மகள்ங்கற எடத்துல இருந்துதானே ஒழிய நீங்க நெனக்கற மாதிரி உங்களுக்கு போட்டியான எடத்துலருந்து இல்லை. அத மட்டும் புரிஞ்சிக்கங்க.’’

செண்பகா உடைந்தழுதாள். ரூபாவும் ரம்யாவும் தேம்பினர். கட்டுக்கடங்காத துக்கம் அவர்களை மூழ்கடித்திருந்தது. ரூபா தோளில் சாய்த்துக்கொண்டதும் அழுகை இன்னும் வலுத்தது.

அனைத்தையும் கரைத்தோடிய கோதாவரியை நிமிர்ந்து பார்த்தாள் துர்கா.

0

சிறுகுன்றின் மீது வெள்ளைக் கோபுரங்களுடன் வீரபத்ரசாமி கோயில் கடல் போன்ற நதி நீருக்கு அப்பால் தூரத்தில் தெரிந்தது. ஆற்றின் நடுவே குட்டித் தீவுக் கோயில். பயணிகளுடன் அந்த இருதளப் படகு பட்டிசீமாவின் கரையை நெருங்கியது. கரையையொட்டி எண்ணற்ற சிறு படகுகள். மந்தமான வெயிலில் கோதாவரி நிதானமாக நகர்ந்தது. இடுப்பளவு நீரில் ஆட்கள் முங்கி எழுந்தனர். கரையில் ஈரத்துடன் வண்ணத் துணிகள் காற்றில் அசைந்தன. 

“தண்ணி இவ்வளவுதான் இருக்குமா?” ரம்யா ஆர்வத்துடன் படகின் நுனியில் அமர்ந்திருந்தாள். 

“மழைக்காலத்துல இப்பிடி வரமுடியாது. தண்ணி கரை புரண்டோடும். கோதாவரிய அப்பிடிப் பாக்கும்போதுதான் அழகா இருக்கும்.” செண்பகா பூக்களைத் தொடுத்தபடியே குன்றின் மீதிருந்த கோபுரத்தைப் பார்த்தாள்.

 “நாணாவோட வந்திருக்கியா நீ?” ரூபா கூந்தலை அள்ளிப் பற்றி கிளிப்பைப் பொருத்தினாள்.

“ஒரு  தடவ அழச்சிட்டு வந்திருக்கார். ராஜமுந்திரில ஏதோ சூட்டிங். எனக்கு மங்கலா ஞாபகமிருக்கு.”

விரல்கள் பூக்களை எடுத்து நூலில் கோர்த்திருக்க செண்பகாவின் பார்வை ஓடும் ஆற்று நீரைத் தொட்டது. அந்த நாள் மெல்ல நினைவில் துலங்கி எழுந்தது. ‘அதுவொரு சிறிய படகு. அதிகம் பேரில்லை. அவர் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். அருகில் நான். அப்போது எதையும் பார்க்கும் ரசிக்கும் மனநிலையில் இருக்கவில்லை நான். எதைப் பார்த்தாலும் பயம். யாரைப் பார்த்தாலும் அச்சம். வாழ்வின் இனிமையை இளமையின் குதூகலத்தைக் கொண்டாடி அனுபவிக்க வேண்டிய பதினேழு வயதில், விதி எனக்குக் கொண்டுவந்து சேர்த்தது வல்லிருட்டும் வலியும் கொடுவேதனையும். அப்பாவின் புகழும் செல்வாக்கும் சரிந்து பெரும் கடன் சிக்கலில் தவித்தபோதும் சமாளித்தார். அண்ணன் சமர்த்து. அப்பாவின் போக்குக்கு நேர் எதிரானவன். திரைத்துறையின் மேடுபள்ளங்களை முன்பே கணித்தவன். படித்து முடித்தவுடன் தனக்கான பாதையைத் தீர்மானித்து விலகி ஸ்ரீகாகுளத்துக்குப் போய்விட்டான்.. அப்பா இப்படியொரு நிலைக்கு வந்துவிடுவார் என்பதை அறிந்தவன்போல எல்லோரிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டான். அப்பாவின் கடன் சுமை இருந்த எல்லாவற்றையும் விழுங்கியது. ஒன்றுமில்லாமல் ஆக்கியது. கடன்காரன்கள் காது கொடுத்துக் கேட்க முடியாதபடி திட்டித் தீர்த்தனர். அம்மாவும் அவ்வாவும் இரவில் தூங்காமல் கண்ணீர்விட்டு அழுவதைப் பலநாள் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் மாலை கல்லூரி விட்டு வந்த போது வீட்டை பினாயில் ஊற்றிக் கழுவிக் கொண்டிருந்தனர், புலம்பி அழுதவாறே. என்னால் அந்த நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் என்ன செய்யப் போகிறோம் என்று புரியவில்லை. ஆனால், அது என்னையும் வந்து காவு வாங்கும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. 

கல்லூரியின் பாட இடைவேளையில் ஒருவன் தேடி வந்தான். அப்பாவுக்கு மாரடைப்பு என்றான். ஏதோ மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகப் பதற்றத்துடன் சொன்னான். என்ன ஏதென்று யோசிக்காமல் அவனுடன் காரில் ஏறினேன். வழியில் அப்பாவைப் பற்றி மரியாதையுடன் என்னென்னவோ சொன்னான். அவரை நன்கறிந்தவன் போலப் பேசினான். என் தவிப்பையும் பதற்றத்தையும் பயன்படுத்திக் கொண்டான். ஆசுவாசப்படுத்துவது போல குளிர்பானம் ஒன்றைக் கொடுத்தான். நானும் பருகினேன். முழுசாகக் கூட இல்லை. கொஞ்சம்தான். அதன் பிறகு நான் எதையும் பார்க்கவில்லை. 

அதன் பிறகு கண்விழிக்கும்போதே உடல் வலித்தது. ஏதோ பெரும் எடை என் மீது கவிழ்ந்திருந்தது. என்னால் விலக்க முடியாத எடை. அதற்கு ஆவேசம். எனக்கு ரத்த ஒழுக்கு. நடக்கவே முடியாத வலி. கண்ணில்பட்டது பாத்ரூம் ஜன்னலூடே தென்னை ஓலைகள்தான். ஒரு டாக்டர் வந்து பார்த்தான். மருந்திட்டான். சில நாள் கழித்து அவனே ஆக்ரமித்தான். பசியில்லை. பயம்தான் எந்நேரமும். அருவருப்பு குமட்டலில் வாந்தி. பேதியும்.

எங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாத மயக்க நிலை எப்போதும். கொடுங்கனவுபோல நிழல்களின் நடமாட்டம். பயம். உடல்நடுக்கம். மயக்கம். பயம்.. பயம்.. பேயுலகம். என்னென்னவோ நடந்தது. எனக்குத் தெரிந்ததெல்லாம் வலியும் இருட்டும். உடம்பில் எப்போதும் தாங்க முடியாத பாரம். 

எத்தனை நாள் கழித்து என்று தெரியாது. ஒருநாள் கண்விழித்தபோது அவ்வாவின் மடியில் கிடந்தேன். வெளிச்சமில்லாத ஒற்றை அறை. தலைபாரம் அழுத்த மீண்டும் படுத்துக்கொண்டேன். என்னென்னவோ கேட்க நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.

எத்தனை நாள் தூங்கினேன் தெரியாது. மீண்டும் ஒருநாள் விழித்து எழுந்தபோது பாட்டி அருகில் ஓடி வந்தாள். உடலில் வலி குறைந்திருந்தது. ‘அம்மா எங்கே?’ என்றுதான் கேட்டேன். பாட்டி அழுதாள். எனக்குப் புரியவில்லை. ‘இது என்ன எடம்?’ நான் எழுந்து சுயநினைவுக்கு வந்து பேசினேன்.  

எல்லாவற்றையும் சொன்னாள். அம்மாவும் பிறகு அப்பாவும் போய்ச் சேர்ந்ததை. இது எதுவுமே தெரியாமல் நான் நினைவின்றிக் கிடந்ததை, பரிதாபப்பட்ட ஒரு நல்ல ஆத்மா இன்னும் வந்து எங்களைப் பராமரிப்பதை எல்லாம் சொன்னாள். வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அழவில்லை. இவை எதுவுமே எனக்கு உறைக்கவில்லை. அவள் சொல்லிக் கொண்டிருந்த போதெல்லாம் நான் அந்த இருட்டைத்தான் கண்டேன். என்மீது பாரத்துடன் வெறியுடன் கவிந்த பேயிருட்டு. என் உடலைத் துண்டு துண்டாக அரிந்து பிளந்த இருட்டு. அவ்வாவைப் பார்க்கத்தான் பாவமாக இருந்தது. மீண்டும் அவள் மடியில் படுத்தேன். 

தொடர்ந்த இரவுகளில் பயங்கரக் கனவுகள் வந்து வந்து வதைத்தன. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவளைக் கனவு உலுக்கி எறிந்தது. வெறியுடன் அணைத்து மூச்சை நிறுத்தியது. பயத்தில் சிறுநீர் கழிந்தது. எத்தனை நாள்.. எத்தனை இரவுகள்.. கண் மூடவே பயம். இருள் கவியும்போதே அந்த நடுக்கம் தொற்றிக்கொள்ளும். அவ்வா விளக்கை அணைக்கவே மாட்டாள். இரவு முழுக்க விளக்கு எரிந்தபடியே இருக்கும். 

எழுந்து நடமாடத் தொடங்கிய பிறகுதான் வெங்கடேஸ்வரராவ் எத்தகைய மனிதர் என்று தெரிந்தது. யாராக இருந்தாலும் அப்போது எதையும் பொருட்படுத்தும் மனநிலையில் நான் இருக்கவில்லை. என்னை வெளியில் கொண்டுவர முயன்றார். மறுபடி கல்லூரியில் விட்டார். தையல் வகுப்புக்கு போகச் செய்தார். இரவில் கனவுகளாய் என்னைக் கொல்லும் அந்தக் கொடும் இருட்டு பகலிலும் என்னை எங்கும் பின்தொடர்ந்தது. இப்போது குத்தும் பார்வையுடன் கேலிப் பேச்சுடன் நகைத்தது.  

நான் கல்லூரி மூன்றாம் ஆண்டில் அரியர்ஸ்களோடு போராடிக் கொண்டிருந்த போது அவ்வாவும் வைகுந்தம் போய்ச் சேர்ந்தாள். அப்போது உறவினர் யாரும் தொடர்பில் இல்லை. ராவ் மட்டும்தான். நான் அநாதை. மிரண்டேன். செய்வதறியாது திகைத்துப் போனேன்.

அவர் என்னைக் கேட்டாரா என்று கூட எனக்குத் தெரியாது. நான் ஏதும் பதில் சொல்லியிருப்பேன் என்றும் நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே எண்ணமாய் எஞ்சியிருந்தது. திருப்பதிக்கு ஒருநாள் ரயிலில் போனோம். கூட நாலைந்து பேர். என் கழுத்தில் மாலை. தாலி கட்டினார். மனைவியானேன். கனவு போலிருந்தது. அக்காக்களின் கடைகளுக்கு என்னைக் கூட்டிப் போய் காட்டினார். சந்திரகிரியில் அவர் அண்ணன் வீட்டுக்குப் போனோம்.

அந்தக் கோட்டையின் தெப்பக்குளக் கரையில் பச்சைப் பெயிண்ட் அடித்த இரும்பு பெஞ்சில் அரசமர நிழலில் அமர்ந்திருந்தோம். அருகில் அமர்ந்து அவர் நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார். குரங்குகளின் பெருங்கூட்டம். பக்கத்து ஆலமரக் கிளைகளிலிருந்து குளத்து நீருக்குள் குதித்து விளையாடின. விழுதுகளைத் தாவிப் பற்றி மேலேறின. நீரில் பாய்ந்தன. ஒன்றை ஒன்று விரட்டிப் பிடித்து விளையாடின. தொப் தொப்பென்று தொடர்ந்து நீரில் விழும் சத்தம் ஓயவேயில்லை. என்னவொரு உற்சாகம்! ஆட்டம்! கவலையே அறியாதவை போல! எனக்கு முன்னால் மெதுவாக நடந்து வந்து நின்று ஆலம்பழத்தை எடுத்துப் புட்டுப் பார்த்த தாய்க்குரங்கின் நெஞ்சோடு சின்னக்குட்டி. வட்டக்கண் விரித்து என்னையே ஆச்சரியமாய் பார்த்தது. பார்வை விலகாமல் நிலையாய் இருந்தது. அப்போது வரை எனக்கு இருந்த பயமெல்லாம் சட்டென விலகியது. பத்மாவதி தாயார் தான் ஏழுமலையான் வடிவத்தில் வெங்கடேஸ்வர ராவ் என இவரை என்னிடம் அழைத்து வந்திருக்கிறாள். இவரிடம் என்னை ஒப்படைத்திருக்கிறாள். கிழக்கே ஊர்ப்பக்கமிருந்து ஏதோ கல்யாண வீட்டுப் பாடல் காற்றில் கசிந்து வந்தது. ‘சீதாம்ம வாகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு ஸ்ரீமல்லி செட்டு…. ஸ்ரீ சின்னாதி.. கொம்ம கொம்மகி ஒக கும்மடி பூவு கும்மடி பூவு.. பங்காரு பூவு.. ஆ பூவு கோஸ்தாரு மா அய்யாகாரு..’ என் தலையில் சூடியிருந்த மல்லியின் வாசத்தை அப்போதுதான் உணர்ந்தேன். நானும் வாழ்ந்து விடுவேன் என்ற நம்பிக்கை பிறந்தது. நாளிதழை மடித்துவிட்டுப் புன்னகையுடன் என் கைப்பற்றி எழுந்தார். இதோ கண்ணெதிரே நின்றிருக்கும் செம்பாறைக் குன்றைப் போல வாழ்ந்திருப்பேன். அதைப் போல.. அவ்வளவு உறுதியாக நம்பினேன்.

ரூபா பிறந்த பிறகுதான் அந்தப் பேய் இருட்டு விலகியது. முழுமையாக இல்லையென்றாலும் கனவுகளில் முன்புபோல தீவிரம் இல்லை. ஏதேனும் ஒரு நாள் திடீரென்று தன்னைக் காட்டும். வதைக்கும். பிறகு கொஞ்ச நாட்கள் காணாமல் போகும். அது என் மீது வந்து கவியும் நாட்களில் அந்த வேதனையை வலியை நான் ராவிடம்தான் காட்டினேன். வெறுப்பாக சண்டையாக. அலட்சியமாக அவமானப்படுத்தும் விதமாக. 

அதன் பிறகு ரம்யா பிறந்தாள்.. அந்தக் கனவுக் கொடுமை குறைந்தது.

ஆனால் இத்தனைக்கும் நடுவில் அந்த மனிதர் என்னை எதுவுமே கேட்டதில்லை. பாக்கை மென்றபடி எதுவுமே பேசாமல் நாளிதழை, எழுதிய தாள்களைப் புரட்டியபடி உட்கார்ந்திருப்பார். எனக்கும் மகள்களுக்கும் அவர் எந்தக் குறையையும் வைக்கவில்லை. நான்தான் அவரை மரியாதையாக நடத்தவில்லை. படுக்கையில் அவருடன் கிடந்தபோதும் என் மனம் கல்லாக இருந்ததை நினைத்தால் என்னையே எனக்குப் பிடிக்கவில்லை.

எங்கிருந்தோ வந்தவள் இந்த துர்கா. கைக்குழந்தையுடன் நிர்கதியாய் நின்றவள். கட்டியவனும் அவளைக் கைவிட்டுப் போய்விட நானும் விரட்டினேன். அவர்மட்டும் அந்த நேரத்தில் அதைச் செய்திராவிட்டால் என்னவோ நடந்திருக்கும். அதற்காக அவரைப் பழித்தேன். இருவரையும் சேர்த்துப் பேசி அசிங்கப்படுத்தினேன். எனக்குள் அந்த இருட்டு அப்படி உருவெடுத்திருந்தது. என்னை வதைத்த துர்கனவுகளும் அவை எனக்குள் உருவாக்கிய வெறுப்பையும் கசப்பையும் ஒன்றுசேர்த்து அவள்மீது கொட்டினேன். 

ஆனால், அவரை அப்படியே ஆஸ்பத்திரியில் போட்டுவிட்டு வந்தபோது அவள்தான் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பராமரித்தாள். கடைசிவரை சிறிதும் மனம் கோணாது பார்த்துக் கொண்டாள். அவர் நடமாடி குடும்பத்துக்குச் செய்திருக்க வேண்டிய காரியங்கள் எதுவுமே சிறிதும் தடைப்படாமல் எடுத்துச் செய்தாள். 

அவரை மிகுந்த மரியாதையுடன் மேலே அனுப்பிவைத்தாள்.

இத்தனைக்கும் எனக்கு நடந்தவை அனைத்தும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. காரியம் முடிந்தபின் துக்கம் விசாரிக்க வந்த பாலய்யா சில நாட்களுக்கு முன்பு துர்காவின் வீட்டுக்குச் சென்றதைப் பற்றிச் சொன்னார். அவர் நிச்சயமாக எல்லாவற்றையும் சொல்லியிருப்பார். ஆனாலும், இப்போதுவரை அவள் எதையுமே காட்டிக் கொள்ளவில்லை. 

என் மீதுள்ள மரியாதை சிறிதும் குறையவில்லை. இப்போது இன்னும் கரிசனையுடன் அணுகுகிறாள். தேவைகளைப் பார்த்துக் கொள்கிறாள். மகள்கள் இருவரையும் அத்தனை அக்கறையுடன் கவனிக்கிறாள். 

அவரை இழந்துதான் இவளின் அருமையைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.’

கண்ணில் துளிர்த்த துளியைத் துடைத்துக்கொண்டு திரும்பினாள். ரூபாவும் ரம்யாவும் படகைத் தொடரும் பறவைகளை வேடிக்கை பார்த்தார்கள். 

“நீ இங்க வந்தப்பவும் இப்பிடிக் கூட்டமா இருந்துச்சாம்மா?” ரம்யா விளிம்பிலிருந்து குதித்து அருகில் வந்தாள்.

“அப்பல்லாம் இவ்ளோ கூட்டமும் இல்லை. போட்டும் இல்லை. கடல்மாதிரி பெருசா இருந்துச்சு கோதாவரி. இங்கேர்ந்து போட்லயே பத்ராச்சலம் வரைக்கும் போனோம்.” செண்பகா தொண்டையைச் செருமினாள்.

தலையைத் துவட்டியபடி வந்தமர்ந்தாள் துர்கா “பத்ராச்சலத்துலேர்ந்து ரம்பசூடாவரத்துக்கு காட்டுப் பாதையில கார்ல போகணும். பிரமாதமா இருக்கும். ஒரு தடவ எல்லாரும் போலாம்.”

“எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. ஆனா அந்தப் பத்ராசலப் பாட்டெல்லாம் கேட்டிருக்கேன்.” செண்பகா மலர்ச்சரத்தைத் துண்டித்து எடுத்துத் துர்காவிடம் நீட்டினாள்.

“எங்க அவ்வா ஹரிகதா பாட்டுக்காரி. தௌலேஸ்வரத்துலதான் அவகிட்ட வளந்தேன். என்னையும் அவ மாதிரியே ராமநாமம் பாடறவளா, பாட்டுக்காரியா ஆக்கணும்னுதான் அவளுக்கு ஆசை. ஆனா விதி என்னை எங்கெல்லாமோ இழுத்துட்டுப் போயிருச்சு. இப்ப எங்க அவ்வாவோட நான் இருந்த ஊருக்குப் போயே பல வருஷமாயிருச்சு. மனசுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் அவ சொல்லிக் குடுத்த ராம நாமந்தான் துணையா இருந்திருக்கு.”

துர்கா கண்களைத் துடைத்தாள். ரூபா தோளை அணைத்தபடியே கேட்டாள் “எனக்கு சொல்லிக் குடேன்க்கா. நானும் பாடறேன்.”

“ம்.. எனக்கு ஞாபகமிருக்கறத சொல்லித் தரேன். இப்ப இந்த நிமிஷம் நல்லா யோசிச்சுப் பாத்தா எங்க அவ்வாவும் ராவ் சாரும் வேற வேற இல்லேன்னு தோணுது.”

படகு கரையை நெருங்குந்தோறும் மஞ்சள் கலந்த வெள்ளைக் கோபுரம் இன்னும் துலக்கமடைந்தது.

செண்பகா நிமிர்ந்து பார்த்தாள். துர்காவின் கையைப் பற்றினாள். 

“கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் சரி பண்ணிட்டு அவ்வா இருந்த தௌலேஸ்வரத்துக்கு போயிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன். வீட்டையெல்லாம் சரி பண்ணி வெச்சிருக்கேன். ஷ்ரவ்யாவும் ரொம்ப பிஸியா இருக்கா. அவ காரியத்தை அவளே பாத்துக்கறா. துணைக்கு நானி இருக்கான். நான் பக்கத்துல இருக்கணும்னு அவசியம் இல்லை. இனி இருக்கற காலத்துல அவ்வா இருந்த அதே வீட்ல அவ சொல்லிக் குடுத்த ராம நாமத்தைப் பாடிட்டே இருந்துட்டா போதும். வேற ஒண்ணும் வேண்டாம்.”

கோதையின் நீர்மடித் தாலாட்டில் படகு கரையை அணைந்திருந்தது. 

எம்.கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணன் (டிசம்பர் 2, 1966) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுகிறார். ஆங்கிலத்தில் இருந்தும் இந்தியில் இருந்தும் மொழியாக்கங்களும் செய்கிறார். திருப்பூர் பின்புலத்தில் தொழில்மயமாக்கம் உருவாக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை சித்தரிக்கும் படைப்புக்களால் முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.

f

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

Font size
Line spacing
Background