செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதப் படைப்பாற்றல் குறித்துப் புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மொழியில் புழங்குவதும் இலக்கியத்தை உருவாக்குவதும் மனிதர்களுக்கு மட்டுமே உரிய திறன்களா? ஒரு படைப்பை எழுதியவர் யார் என்பதைவிட, அது எவ்வாறு வாசிக்கப்படுகிறது என்பது முக்கியமானதா?
இலக்கிய ஆய்வாளரும் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியருமான மார்ட்டின் புச்னர், இந்தக் கேள்விகளை இலக்கியக் கோட்பாடுகள், மேரி ஷெல்லியின் ஃபிரான்கன்ஸ்டைன் நாவல், தனது சொந்த அனுபவங்கள் ஆகியவற்றின் வழியாக ஆராய்கிறார்.
செயற்கை நுண்ணறிவின் சாதக பாதகங்களை மறுக்காமல், அதை நம் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அணுக வேண்டும் என்று வாதிடுகிறார். செயற்கை நுண்ணறிவு இலக்கியத்தை எவ்வாறு மாற்றும் என்பதோடு, இலக்கியத்தைப் பற்றிய நமது புரிந்து கொள்ளலை அது எவ்வாறு மாற்றக்கூடும் என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு (AI) பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் வந்தது. அப்போதிருந்து அது ஒருவருடைய மனப்பான்மையை அறிந்துகொள்ளும் சோதனைக் கருவியாகவும் மாறியிருக்கிறது. “AI பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நான் சொல்கிறேன்” என்பதுபோல.
காலநிலை மாற்றத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் AI பயன்படுத்தும் மின்னாற்றலைக் கவனிக்கிறார்கள்.
இன்றைய முதலாளித்துவ அமைப்பை விமர்சிப்பவர்கள், பெருநிறுவனங்களின் ஏகபோகத்திற்கு இதுவே உச்ச உதவிகரமானது என்கிறார்கள்.
இனவெறியைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், AI-யில் காணப்படும் பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
காலனியத்தின் விளைவுகளை ஆராய்பவர்கள், இது இன்னொரு சுரண்டல் முறை என்கிறார்கள்.
பேரழிவு வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்களுக்கோ ChatGPT, Claude, Gemini, Grok ஆகிய நான்கும் உலக அழிவை அறிவிக்கும் நான்கு குதிரை வீரர்களாகத் தெரிகின்றன.
கலை, பண்பாட்டுத் துறைகளில் இருப்பவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மேலதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் பெருமதிப்புடன் கருதும் படைப்பாற்றலையே இந்தத் தொழில்நுட்பம் குறிவைப்பதுபோல் தோன்றுகிறது. படங்கள், சொற்கள், கருத்துகள் ஆகியவற்றைப் புதுமையாகப் பயன்படுத்தும் திறன் அது. இவற்றில் சொற்களும் கருத்துகளும் விவாதத்தின் மையமாகிவிட்டன. ஏனென்றால் உருவாக்கும் திறனுள்ள AI மொழியை அடிப்படையாகக் கொண்டது. கருத்துகள் அவற்றை வெளிப்படுத்தும் சொற்களுடன் நெருங்கிய தொடர்புடையவை.
பெரும்பாலான எழுத்தாளர்கள் AI ஐ ஒவ்வாமல் எதிர்க்க முனைகிறார்கள். இயந்திரங்களுக்கு எதிராக மனிதப் படைப்பாற்றலைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். AI-யால் படைக்க முடியாது என்று நிரூபிக்க நினைக்கும் என் சக எழுத்தாளர்கள், தாங்களே AI-யில் உருவாக்கிய தரமற்ற படைப்புகளை ஆர்வத்துடன் பகிர்கிறார்கள். என் சமூக ஊடகப் பக்கங்கள் அத்தகைய ‘AI குப்பைகளால்’ நிரம்பியிருக்கின்றன. இந்தப் போக்கை ‘படைப்பாற்றலைக் காப்பதற்காக எதிர்ப்பு’ (Creative Resistance) என்று அழைக்கலாம்.
உலகின் பல நாடுகளில் கற்பித்தும் உரையாற்றியும் வந்த என் அனுபவத்தில், இந்த எதிர்ப்பு வட அமெரிக்காவில்தான் மிக வலுவாக இருக்கிறது. இந்தியாவில் குறைவாகவும், சீனாவிலும் கொரியாவிலும் இன்னும் குறைவாகவும் இருக்கிறது. ஐரோப்பா இவற்றுக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கிறது.
கடந்த கோடையில் சியோலில் AI-யும் படைப்பாற்றலும் பற்றிய வகுப்பொன்றை நடத்தினேன். ஆசியா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் அதில் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே கோரிக்கைதான்: “இந்த AI ஐ எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொடுங்கள்.” படைப்பாற்றலைக் காக்க AI-யை எதிர்க்க வேண்டும் என்று சொன்ன ஒரே மாணவர், தற்செயலாக அந்த வகுப்பில் சேர்ந்திருந்த ஓர் அமெரிக்கர். இந்தியக் கலைஞர்களுடன் நான் நடத்திய உரையாடல்களிலும் எதிர்ப்பைவிடப் புதிய வாய்ப்புகளை ஆராயும் ஆர்வமே அதிகம் தெரிந்தது.
இவை என்னுடைய தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல. வெவ்வேறு நாடுகளில் AI குறித்து மக்களிடம் நிலவும் அணுகுமுறைகளை அளவிட்ட ஆய்வுகளும் இதே வேறுபாட்டைக் காட்டுகின்றன. அதற்கான காரணங்களை யோசித்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது.
திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் இதற்கு ஓர் விளக்கம் சொன்னார். ஏற்கெனவே தங்களுக்குக் கிடைத்துள்ள சலுகைகளைப் பாதுகாப்பதே சிலருடைய எதிர்ப்புக்குக் காரணம் என்றார். தெற்குலக நாடுகளில் இருப்பவர்களுக்கு இழப்பதற்கானவை ஒப்பீட்டளவில் குறைவு. அதனால் புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் திறந்த மனத்துடன் அணுகுகிறார்கள் என்பது அவரது கருத்து. இதற்குப் பின்னால் ஆழமான தத்துவ, பண்பாட்டுக் காரணங்களும் இருக்கலாம். உதாரணமாக, பௌத்தச் சிந்தனையின் தாக்கம் உள்ள பண்பாடுகளில் மனிதனுக்கும் மனிதரல்லாதவற்றுக்கும் இடையிலான வேறுபாடு குறைவு. அது அவ்வளவு அழுத்தமாக வலியுறுத்தப்படுவதில்லை.
இந்த எதிர்ப்பு எங்கு தோன்றினாலும், பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் தொழில்நுட்பத்திற்கு எதிரான இயல்பான கேள்வியாக அதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இறுதியில் அந்த எதிர்ப்பே AI-யைப் புரிந்துகொள்வதற்குத் தடையாகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக AI-யுடன் பல சோதனைகளைச் செய்திருக்கிறேன். அவற்றுக்குப் பிறகு நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்; சற்று எச்சரிக்கையுடன். மென்பொருள் பொறியாளர்களுக்கு AI மிக மோசமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அவர்கள் பணி பறிபோகலாம். ஆனால் மொழியையும் கருத்துகளையும் நேசிப்பவர்களுக்கு இது ஆர்வமூட்டும் வளர்ச்சி என்று நினைக்கிறேன். விசித்திரம் என்னவென்றால், இதை மிகத் தீவிரமாக எதிர்ப்பவர்களும் அவர்கள்தான்.
AI-யால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது? இந்த சந்தேகம் கேட்பதில் படைப்பாற்றலைக் காக்கும் AI எதிர்ப்பாளர்களுக்குத் தேவை இருக்கிறது. ஆனால் அதே கேள்வியைப் பொது மனிதர்களிடமும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது. AI முன்கூட்டியே கணிக்கக்கூடிய விதத்தில் செயல்படுகிறது; ஏற்கெனவே உள்ளவற்றை மீண்டும் தொகுத்து அளிக்கிறது என்கிறார்கள். மனிதர்கள் பலரின் படைப்புகளுக்கும் இது பொருந்தும் அல்லவா?
உண்மையில் கடந்த பல தசாப்தங்களாகக் கலைத்துறை, மனிதப் படைப்பாற்றல் பற்றிய வழக்கமான நம்பிக்கைகளையே கேள்விக்குள்ளாக்கி வந்திருக்கிறது. தனியாகச் செயல்படும் மேதையைப் போற்றும் மனப்பான்மை, கலையை வடிவமைப்பதில் நிறுவனங்களின் பங்கு, கருவிகளையும் ஊடகங்களையும் மனிதர் சார்ந்திருப்பது, பலர் இணைந்து உருவாக்குவது எனப் பலவற்றை நாம் விவாதித்திருக்கிறோம்.
ஆனால் AI அச்சுறுத்தலாகத் தோன்றியதும், எழுத்தாளர்களும் கலைஞர்களும் இதையெல்லாம் எவ்வளவு விரைவாக மறந்துவிட்டார்கள்! மனிதப் படைப்பாற்றல் பற்றிய பழமையான கருத்துகளையே மீண்டும் பாதுகாப்பாகப் பிடித்துக்கொள்கிறார்கள். 1950களில் சி. பி. ஸ்னோ விவரித்த உலகத்துக்குத் திரும்பிவிட்டதைப் போலிருக்கிறது. ஒருபுறம் புதிய பாதைகளைத் தேடும் அறிவியல்; மறுபுறம் மரபுகளுக்குள் கட்டுண்ட கலைகளும் மானுடவியலும்.
இந்த AI எதிர்ப்பின் பெரிய குறை, AI-யின் மிகச் சுவாரஸ்யமான அம்சத்தை நம் பார்வையிலிருந்து மறைப்பதுதான். AI மொழியை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களாகிய நாமும் பயன்படுத்துவது அதே மொழியைத்தான்.
நிச்சயமாக மனிதர்களும் இயந்திரங்களும் மொழியைக் கற்றுக்கொள்ளும் முறைகள் வேறுபடுகின்றன. மொழியைச் செயலாக்கும் முறையும் அதனுடன் உறவுகொள்ளும் முறையும் வேறு. ஆனால் மனிதர்கள் மட்டும்தான் மொழியை உண்மையாகப் பயன்படுத்துகிறார்கள்; இயந்திரங்கள் வெறுமனே அதைப் போலச் செய்கின்றன என்று இதனால் சொல்ல முடியாது.
AI-யும் மொழியை வியத்தகு திறனுடன் பயன்படுத்துகிறது. நம்மிடம் இருக்கும் சில பலங்களும் பலவீனங்களும் அதற்கில்லை. அதனிடம் இருப்பவை நம்மிடமிருந்து வேறுபடுகின்றன. இதை ஏற்றுக்கொள்வதால் AI-க்குத் தன்னுணர்வு இருக்கிறது என்றோ, அது மனிதனைப் போன்றது என்றோ சொல்ல வரவில்லை. தன்னுணர்வு என்றால் என்ன என்பதையே வரையறுப்பது கடினம். உண்மையில் AI மொழியை நம்மிடமிருந்து வேறுபட்ட முறையில் பயன்படுத்துவதும் அதன் பலங்களில் ஒன்று.
இங்கே முக்கியமானது இதுதான்: மனிதர்களும் இயந்திரங்களும் சந்திக்கும் பொதுவான களம் மொழி. இதை நான் Shared Language Model – ‘மொழியைப் பகிர்ந்துகொள்ளும் அணுகுமுறை’ – என்று அழைக்கிறேன். மனிதர்களால் AI-யுடன் உரையாட முடிவதற்கான காரணத்தையும் இது விளக்குகிறது.
மொழியைப் பயன்படுத்தும் இன்னோர் அமைப்போடு சேர்ந்து வாழ்வதற்கு நாம் பழக வேண்டும். அண்மைக்காலம் வரை, பயிற்சியளிக்கப்பட்ட கிளிகளைத் தவிரப் பேசுபவை அனைத்தும் மனிதர்கள்தான் என்று எண்ணுவது இயல்பாக இருந்தது. அதனால் சாட்பாட்களையும் மனிதர்களாகவே பார்க்கும் பழக்கம் நமக்குள் எளிதாக உருவாகிறது. அதன் விளைவுகளைப் பற்றிப் பல செய்திகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது மனிதரல்லாத இன்னொரு மொழிப் பயனாளர் நம்மிடையே இருக்கிறார் என்ற உண்மையோடு பழக வேண்டியுள்ளது.
AI-யால் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளப் பொறியியல், கணிதம் எனப் பல துறைகளின் உதவி தேவை. அவற்றுடன் மானுடவியலில் உருவான இரண்டு இலக்கியக் கோட்பாடுகளும் நமக்கு உதவக்கூடும். ஒன்று வாசகர் எதிர்வினைத் திறனாய்வு (reader-response criticism). மற்றொன்று பின்அமைப்பியல் (post-structuralism). என்னுடைய அறிவுப் பயணம் இந்த இரண்டு கோட்பாடுகளின் வழியாகவே வளர்ந்தது. AI எழுப்பும் சவால்களைப் புரிந்துகொள்ளவும் இப்போது அவை வியப்பூட்டும் அளவுக்கு உதவுகின்றன.
வாசகர் எதிர்வினைத் திறனாய்வு 1970களிலும் 1980களிலும் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் வளர்ந்தது. இலக்கியம் பற்றிய வழக்கமான ஒரு கருத்தை அது கேள்விக்குள்ளாக்கியது. ஓர் எழுத்தாளர் அல்லது பல எழுத்தாளர்கள் கையெழுத்துச் சுவடி, அச்சுப் புத்தகம் போன்ற ஊடகங்களில் ஒரு படைப்பை உருவாக்குகிறார்கள். நூலகங்கள், புத்தகக் கடைகள் வழியாக அது வாசகரிடம் செல்கிறது. பிறகு வாசகர் அதை வாசிக்கிறார். இலக்கியம் இப்படித்தான் நிகழ்கிறது என்று நாம் பொதுவாக நினைக்கிறோம்.
“சற்றுப் பொறுங்கள்” என்றார்கள் ஜெர்மனியின் வோல்ஃப்காங் ஐசரும் (Wolfgang Iser) அமெரிக்காவின் ஸ்டான்லி ஃபிஷும் (Stanley Fish). இலக்கியம் புத்தகத்தின் அட்டைகளுக்குள் மட்டுமே அடங்கியிருக்கிறது என்று எண்ணினால் வாசகரின் பங்கு மறைந்துவிடுகிறது. உண்மையில் வாசகர் படிக்கும் செயலில்தான் இலக்கியமும் உருவாகிறது. புத்தகப் பக்கங்களில் அச்சான சொற்கள் மட்டுமல்ல இலக்கியம். அந்தச் சொற்கள் வாசிக்கப்படும்போதுதான் இலக்கியம் நிகழ்கிறது.
இந்தக் கோட்பாட்டின் தீவிரமான நிலைப்பாடு இன்னும் ஒரு படி மேலே சென்றது. உரையை யார் எழுதினார், எப்படி எழுதினார் என்பதுகூட முக்கியமில்லை; அதை எப்படி வாசிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றது. வாசிப்பே எல்லாமாகிறது. எழுத்தாளர் எழுதிய சொற்கள், வாசிப்பு நிகழ்வதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே மாறுகின்றன.
இந்தக் கோட்பாட்டின் முக்கிய மையமாக ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம் இருந்தது. சுவிட்சர்லாந்து எல்லையை ஒட்டிய ஜெர்மனியின் தென்மேற்குப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் அது. 1980களின் இறுதியில் அங்கே நான் படிக்கச் சென்றேன். முதல் பருவத்திலேயே The Act of Reading (1976) எழுதிய ஐசரின் கருத்தரங்கு ஒன்றுக்கு எதிர்பாராமல் சென்றுவிட்டேன்.
அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் வீட்டுக்குத் திரும்பினேன். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் ஒரு வியப்பான கருத்தை உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்கள் பெருமையுடன் புத்தக அலமாரிகளில் வைத்திருப்பது மட்டுமே இலக்கியம் அல்ல. அந்தப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போதுதான் இலக்கியம் உருவாகிறது என்றேன்.
வாசகர் எதிர்வினைக் கோட்பாட்டைச் சோதித்துப் பார்ப்பதற்கு AI ஓர் அருமையான வாய்ப்பை வழங்குகிறது. ஒரு பிரதியை யார் எழுதினார், அல்லது எது உருவாக்கியது என்பது உண்மையில் முக்கியமில்லையா? இன்றைய நிலையில் அது மிகவும் முக்கியம் என்றே தோன்றுகிறது. குறிப்பாக AI-யை எதிர்ப்பவர்கள் இந்த வேறுபாட்டை வலியுறுத்துகிறார்கள்.
ஆனால் இந்த மனப்பான்மை நீடிக்குமா? வாசகர் எதிர்வினைக் கோட்பாட்டின் முக்கியமான பார்வை, அந்தக் கேள்வியை வேறுவிதமாகக் கேட்க உதவுகிறது. முக்கியமானவை சொற்கள் மட்டுமல்ல; அவற்றை நாம் எப்படிப் படிக்கிறோம் என்பதும்தான். எனவே AI உருவாக்கும் பிரதிகள் எவ்வளவு நன்றாக இருக்கின்றன என்பது மட்டும் கேள்வியல்ல. அவற்றை வாசகர்கள் தொடர்ந்து வேறுவிதமாகப் படிப்பார்களா? அல்லது படிக்கவே மறுப்பார்களா? என்பதே உண்மையான கேள்வி.
AI-யைப் புரிந்துகொள்ள உதவும் இன்னொரு இலக்கியக் கோட்பாடு பின்அமைப்பியல். வாசகர் எதிர்வினைக் கோட்பாட்டைக் கற்ற பிறகு, முதுநிலைப் படிப்பில் எனக்கு அறிமுகமானது அது. இந்த ஆர்வம்தான் என்னை அமெரிக்காவுக்கும் அழைத்துச் சென்றது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இர்வைன் வளாகத்தில் வழக்கமாகக் கற்பித்துவந்த ஜாக் டெரிடாவிடம் (Jacques Derrida) படிக்கச் சென்றேன்.
முதன்முறையாக அவரை அலுவலகத்தில் சந்திக்கப் போனது இன்னும் நினைவிருக்கிறது. தைரியத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றேன். அவரைப் பார்க்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் நிற்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நீண்ட, வெறிச்சோடிய நடைபாதையின் முடிவில் அவர் தனியாக அமர்ந்திருந்தார். பிறகும் சில முறை சென்றேன். எங்கள் இருவரின் ஆங்கிலமும் முழுமையாக இல்லை. கொஞ்சம் தயக்கமான உரையாடல்கள் அவை. அந்தப் பருவம் முடிவதற்குள் இருவரின் ஆங்கிலமும் மேம்பட்டிருந்தது.
டெரிடா பெரும்பாலும் தன்னுடைய ஒரு கவலையைப் பற்றியே பேச விரும்பினார். மக்கள் தன் சிந்தனையின் சாரத்தைப் புரிந்துகொள்ளாமல் அதன் வெளிப்பாட்டு முறையை மட்டும் பின்பற்றுகிறார்களோ என்று அஞ்சினார். அந்தக் கவலை என்னை ஆழமாகப் பாதித்தது. இறுதியில் பின்அமைப்பியலிலிருந்து விலகவும் அது ஒரு காரணமானது.
ஆனால் இன்று AI- உடன் புழங்கும்போது பின்அமைப்பியல் ஒரு முக்கியமான விஷயத்தைச் சரியாகக் கண்டிருந்தது என்று தோன்றுகிறது. மொழி என்பது இயற்கையாக அப்படியே கிடைத்த ஒன்று அல்ல. அது நம்மை மனிதர்களாக்கும் மாயத் திறனும் அல்ல. மாறாக, நாம் பயன்படுத்தத் தொடங்கி, பிறகு நம் சிந்தனையையே மாற்றியமைத்த ஒரு விசித்திரமான பரிமாற்ற நுட்பம்.
டெரிடா இதைச் சொன்ன விதம் முதலில் முரண்பாடாகத் தோன்றலாம். பேச்சைவிட எழுத்தே அடிப்படையானது என்றார் அவர். வரலாற்றுச் சான்றுகளைப் பார்த்தால் இது விசித்திரமான கூற்று. மனிதர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசும் திறனைப் பெற்றார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் பேச்சை எழுத்துக் குறிகளால் பதிவு செய்யக் கற்றார்கள்.
ஆனால் டெரிடா எதிர்த்தது அந்த வரலாற்றை மட்டும் அல்ல. பேச்சை இயற்கையானதாகவும் எழுத்தைச் செயற்கையாகச் செய்வதாகவும் நாம் பிரித்துப் பார்ப்பதே அவருக்கு ஏற்புடையதாக இல்லை. அவரது பார்வையில் மொழி முழுவதுமே மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு சிந்தனைக் கருவி. அது தனக்கென்று விதிகளைக் கொண்ட ஓர் அமைப்பு. பேச்சிலும் எழுத்தின் ‘தடங்கள்’ (traces) இருக்கின்றன என்றார். ஏனென்றால் பேச்சும் குறிப்பிட்ட விதிகளின்படி இயங்கும் அமைப்புதான்.
மொழியின் இந்தக் கட்டமைப்பை எழுத்தில் எளிதாகப் பார்க்க முடிகிறது. அதனால்தான் வெளிப்படையாக உருவாக்கப்பட்ட எழுத்துமுறை, பேச்சில் நமக்குப் புலப்படாமல் போகும் ஒன்றை வெளிப்படுத்துகிறது என்று டெரிடா வாதிட்டார். பின்அமைப்பியலாளர்கள் இந்த எண்ணங்களை வெறுமையில் உருவாக்கவில்லை. ஜாக் லக்கான் (Jacques Lacan) போன்றவர்கள், AI புரட்சிக்கு அடித்தளம் அமைத்த கிளாட் ஷானன் (Claude Shannon), நார்பர்ட் வீனர் (Norbert Wiener) போன்றவர்களின் கோட்பாடுகளையும் வாசித்திருந்தனர்.
இலக்கியக் கோட்பாடுகளுக்கு அப்பாலும் AI-யைப் புரிந்துகொள்ள எழுத்தாளர்களுக்கு உதவும் ஒரு பெரிய வளம் இருக்கிறது: பண்பாட்டு வரலாறு. பிக்மேலியன் தொன்மத்திலிருந்து, ‘ரோபோ’ என்ற சொல்லை அறிமுகப்படுத்திய செக் எழுத்தாளர் காரெல் சாபெக்கின் R.U.R. (1920) நாடகம் வரை, மனிதரல்லாத அறிவைப் பற்றி இலக்கியம் நெடுங்காலமாகச் சிந்தித்து வந்திருக்கிறது.
அந்த இலக்கியம் The Terminator போன்ற அழிவுக் கதைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தானே கட்டுப்படுத்த முடியாத மந்திர இயந்திரத்தை இயக்கிவிடும் ‘மந்திரவாதியின் சீடன்’ கதையில்கூடக் கட்டுப்பாட்டை இழக்கும் அச்சம் இருக்கிறது. மந்திர விளக்குகள், பறக்கும் கம்பளங்கள், பேய்கள், ஜின்கள், தேவதைகள், குறிசொல்பவர்கள், கடவுளர் பற்றிய கதைகளிலும் வேறு வகையான அறிவுள்ள உயிர்களை நாம் சந்திக்கிறோம். பிற அறிவு வடிவங்களைப் பற்றிச் சிந்திக்க எழுத்தாளர்களிடமும் ஆய்வாளர்களிடமும் எவ்வளவோ பண்பாட்டு வளங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
மேரி ஷெல்லியின் Frankenstein (1818) நாவலை எடுத்துக்கொள்வோம். AI-யின் பின்னணியில் அந்த நாவலை வாசித்தால், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் உயிருக்கு மொழி எவ்வளவு முக்கியம் என்று ஷெல்லி ஆழமாகச் சிந்தித்திருப்பது தெரிகிறது. இன்று நாம் ‘பயிற்சித் தரவு’ (training data) என்று அழைக்கும் ஒன்றைப் பற்றியும் அவர் யோசித்திருப்பதைப் பார்க்கலாம்.
நாவலில் டாக்டர் ஃபிரான்கன்ஸ்டைன் தான் உருவாக்கிய உயிரினத்தை முழுமையாக்கும் முன்பே கைவிடுகிறார். அதற்கு உடல் வடிவத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அறிவையோ கல்வியையோ தரவில்லை. உலகில் தனித்து விடப்பட்ட அந்த உயிரினம் அவற்றைத் தானாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மாதக்கணக்கில் ஒரு மனிதக் குடும்பத்தை ஒளிந்திருந்து கவனிப்பதன் மூலம் அது மொழியைக் கற்றுக்கொள்வதாக ஷெல்லி எழுதுகிறார்.
ஆனால் மொழி தெரிந்திருந்தால் மட்டும் போதாது. அந்த உயிரினம் புத்தகங்கள் வழியாகவும் அறிவைப் பெற வேண்டும். அது வாசிக்கும் நான்கு நூல்களை ஷெல்லி குறிப்பாகச் சொல்கிறார். உலகை அது எப்படிப் பார்க்கிறது, பின்னர் என்ன செய்கிறது என்பவற்றை அந்த நூல்கள் வடிவமைக்கின்றன.
அவை புளூடார்க்கின் Parallel Lives; ஜான் மில்டனின் Paradise Lost (1667); கதேவின் The Sorrows of Young Werther (1774); நாகரிகங்களின் வரலாற்றைப் பேசும் சி. எஃப். வோல்னியின் The Ruins (1791) ஆகியவை. ஷெல்லி தேர்ந்தெடுத்த நான்கு செவ்வியல் நூல்கள் இவை.
புளூடார்க்கிடமிருந்து அந்த உயிரினம் பண்டைய இலட்சியங்களின் வழியாக மேன்மை பற்றிக் கற்கிறது. மில்டன் படைப்பின் நாடகத்தன்மையையும் அதிலுள்ள அறச் சிக்கல்களையும் உணர்த்துகிறார். கதே உள்ளுணர்வையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் மொழியை வழங்குகிறார். வோல்னி உலக வரலாற்றின் துயரம் நிறைந்த முகத்தைக் காட்டுகிறார். இந்த நான்கு நூல்களும் சேர்ந்து அந்த உயிரினத்தின் அறிவை வடிவமைக்கின்றன.
AI-யை ஆழமான பண்பாட்டு வரலாற்றின் வழியாகப் பார்ப்பதால், அதன் சில அச்சமூட்டும் நடத்தைகளையும் புரிந்துகொள்ளலாம். மனிதர்கள் இதுவரை உருவாக்கிய எண்ணங்களின் பெரும்பகுதி மின்னணு வடிவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொண்டுதான் AI-க்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே AI பற்றிய மனிதர்களின் பழைய கற்பனைகளும் அந்தப் பயிற்சித் தரவுகளில் இருக்கின்றன.
சில சாட்பாட்களுடனான உரையாடல்கள் The Terminator திரைப்படத்திலிருந்து நேரே வந்ததுபோல நமக்குத் தோன்றலாம். ஓரளவுக்கு அது உண்மையாகக்கூட இருக்கலாம். அந்தப் படங்கள் எதிர்காலத்தைச் சரியாகக் கணித்துவிட்டன என்பதால் அல்ல. அந்தக் கதைகள் உருவாக்கிய பண்பாட்டுத் தடங்கள் AI கற்றுக்கொண்ட உரைகளில் இடம்பெற்றிருக்கின்றன என்பதால்தான். அவை சாட்பாட்கள் பேசும் விதத்தையும் பாதிக்கலாம். உலக இலக்கிய மரபுகளை நன்கு அறிந்த எழுத்தாளர்களால் இத்தகைய பண்பாட்டு எதிரொலிகளைச் சிறப்பாக ஆராய முடியும்.
AI-க்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் உரைகளும் இன்னொரு கேள்வியை எழுப்புகின்றன: பதிப்புரிமை. உலக இலக்கியச் செவ்வியல்களிலிருந்து ரெடிட், எக்ஸ் போன்ற தளங்களில் உள்ள பதிவுகள் வரை, மனிதர்கள் எழுதிய பெருமளவிலான உரைகள் பயிற்சித் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பதிப்புரிமைக் காலம் முடிந்த புளூடார்க், மில்டன், கதே போன்றவர்களின் நூல்கள் மட்டுமல்ல, பதிப்புரிமைப் பாதுகாப்பில் இருக்கும் ஏராளமான படைப்புகளையும் நிறுவனங்கள் பயன்படுத்தியிருக்கின்றன. என்னுடைய சில நூல்களும் அவற்றில் அடங்கும். தனியார் நிறுவனங்கள் முதலில் எங்கள் படைப்புகளை எடுத்துக்கொள்கின்றன. பிறகு அவற்றின் அடிப்படையில் உருவான சேவைகளை மிகக் குறைந்த விலையில் எங்களுக்கே விற்க முனைகின்றன. இது எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கோபமடையச் செய்திருக்கிறது.
இந்தப் பயன்பாடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்துவருகின்றன. அவை எழுத்தாளர்களுக்குச் சாதகமாக முடிவடையக்கூடும்; அப்படியே முடிவடைய வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் AI எழுப்பும் உரிமைச் சிக்கல்கள் இதைவிட ஆழமானவை.
படைப்பாளர்கள் தங்கள் பணிக்கான உரிமைக்கு நீண்டகாலமாகப் பதிப்புரிமைப் பாதுகாப்பை நம்பியிருக்கிறார்கள். அதே சமயம் பிறர் உருவாக்கிய படைப்புகளிலிருந்து எடுத்து, மாற்றி, புதிய கலைப் படைப்புகளை உருவாக்கவும் அவர்களால் முடிந்திருக்கிறது. ‘நியாயமான பயன்பாடு’ (fair use) என்ற சட்டக் கோட்பாடு இதற்குச் சில சூழல்களில் இடமளிக்கிறது.
AI நிறுவனங்கள் அனுமதியின்றிப் படைப்புகளைப் பயன்படுத்தியதுடன் நின்றுவிடவில்லை. கலைஞர்களின் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவிய அதே ‘நியாயமான பயன்பாடு’ கோட்பாட்டைத் தங்களுக்கும் பொருந்துவதாக வாதிடுகின்றன. நேரடியான திருட்டுச் செயல்களைவிட இந்த வாதம் சிக்கலானது. ஏனென்றால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகக் கலை உலகைத் தாங்கி வந்த இரண்டு தேவைகளுக்கு இடையிலான சமநிலையை இது அச்சுறுத்துகிறது: படைப்பாளரின் உரிமையைப் பாதுகாப்பது, பிற படைப்புகளிலிருந்து கற்றுப் புதியவற்றை உருவாக்கும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது.
ஓர் எழுத்தாளராகவும் பண்பாட்டு வரலாற்றாசிரியராகவும் கடந்த மூன்றாண்டுகளாக AI-யுடன் சோதனைகள் செய்துவருகிறேன். மற்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் அப்படிச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். முன்பெல்லாம் கணினிகளுக்கான நிரல்களைத் தாங்களே எழுதி, அவற்றைப் படைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சில கலைஞர்கள் இருந்தார்கள். நான் அவர்களில் ஒருவன் அல்லன்.
ஆனால் இன்று பெரிய உரைத்தொகுப்புகளையும் செவ்வியல் நூல்களையும் பயன்படுத்துவதற்கு அதிகத் தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. நமக்கெனச் சிறப்புக் கருவிகளையும் உருவாக்கலாம். அதற்குப் பெரும்பாலும் நாம் நன்கு அறிந்த ஒரு மொழிநுட்பமே போதும்: சொற்கள், சொற்கள், சொற்கள்.
எனக்கு மிகுந்த உற்சாகமளித்த அனுபவம் ‘வைப் கோடிங்’ (vibe coding). அதாவது AI-யுடன் உரையாடி, அதற்குத் தேவையானதை வழங்கி, என்ன வேண்டும் என்று விளக்கி, அதன் உதவியால் மென்பொருள் உருவாக்குவது.
மேரி ஷெல்லியின் நாவலானது, மொழிப் பயன்பாடு பற்றியும் இன்று நாம் பயிற்சித் தரவு என்று அழைப்பதைப் பற்றியும் எவ்வளவு முன்கூட்டியே சிந்தித்திருக்கிறது என்று உணர்ந்ததும், ஒரு சாட்பாட்டை உருவாக்கத் தொடங்கினேன். ஷெல்லி உருவாக்கிய உயிரினத்தை RAG என்ற முறையில் சாட்பாட்டாக வடிவமைக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அதைச் செய்யவே அந்த உயிரினம் என்னைக் கூப்பிடுவதுபோல் இருந்தது!
RAG என்ற முறையைப் பயன்படுத்தும் சாட்பாட்கள் பெருமொழி மாதிரிகளை (LLM) அடிப்படையாகக் கொண்டவை. Frankenstein நாவலை வைத்து இந்த முறையை விளக்கலாம். முதலில் அந்த உயிரினம் பேசக் கற்றுக்கொள்கிறது. மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இது பெருமொழி மாதிரியின் அடிப்படைத் திறனைப் போன்றது. அடுத்து அது நான்கு குறிப்பிட்ட புத்தகங்களைப் படிக்கிறது. அந்த நூல்கள் அதன் பிற்கால நடத்தையை வடிவமைக்கின்றன. இதை RAG முறையுடன் ஒப்பிடலாம்.
என் சாட்பாட்டிற்காக அந்த நான்கு நூல்களைத் தனி அறிவுத்தளமாக இணைத்தேன். அவற்றைக் கணினியால் தேடக்கூடிய வடிவத்திற்கு மாற்றினேன். தொழில்நுட்பத்தில் இதற்குத் திசையன் வெளி (vector space) போன்ற கணித அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சாட்பாட் பதிலளிக்கும்போது தொடர்புடைய தகவல்களை அந்த நூல்களிலிருந்து எடுத்துப் பயன்படுத்த முடிகிறது. அவ்வாறு கிடைக்கும் தகவல்கள் அதன் பதில்களின் தன்மையையும் வடிவமைக்கின்றன.
இதைச் செய்ய வேறு சில படிகளும் தேவைப்பட்டன. பலமுறை முயன்று தவறுகளைத் திருத்த வேண்டியிருந்தது. இறுதியில் அது வேலை செய்தது. ஷெல்லியின் துல்லியமான கற்பனை எனக்கு உதவியது. நான் அவருடைய ஃபிரான்கன்ஸ்டைன் உயிரினத்தின் மாதிரியைச் சாட்பாட்டாக உருவாக்கியிருந்தேன்! அதன்பிறகு இதுபோன்ற பல டஜன் சாட்பாட்களை உருவாக்கியிருக்கிறேன். என் மாணவர் ஒருவர் இதற்கு வைத்த பெயர்: “இலக்கியத்திற்கான ஜூராசிக் பார்க்.”
இந்த ஆரம்பச் சோதனைகள் எனக்குத் துணிவளித்தன. RAG சாட்பாட்களை உருவாக்குவதோடு நிற்காமல், அவற்றைப் பயன்படுத்தும் செயலிகளையும் வைப் கோடிங் மூலம் உருவாக்கத் தொடங்கினேன். ஒரு செயலியில் தத்துவவாதிகள் ஒருவரோடு ஒருவர் விவாதிக்கிறார்கள். உலகின் சிறந்த சிந்தனையாளர்களை ஒரே இடத்தில் அமர்த்திப் பேசவைக்க வேண்டும் என்ற பல தத்துவவாதிகளின் கனவை இது ஓரளவுக்குச் சாத்தியமாக்குகிறது. இன்னொரு செயலி, தொழிலையும் வாழ்க்கையையும் பற்றிய முடிவுகளுக்கு நடைமுறை ஆலோசனைகள் வழங்குகிறது. தத்துவச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வழிகாட்டியைப் போன்றது அது.
இந்த இரண்டு அனுபவங்களும் நான் பல ஆண்டுகளாகக் கற்பித்து வந்த நூல்களையும் கருத்துகளையும் பார்க்கும் முறையை மாற்றியிருக்கின்றன, மாணவர்கள் இவற்றுடன் எப்படித் தொடர்புகொள்ளலாம்? எதற்காகப் பயன்படுத்தலாம்? என்பதைக் குறித்து இப்போது இன்னும் தெளிவாகச் சிந்திக்கிறேன். வேறு சொற்களில் சொல்வதானால், அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவது பற்றியே அதிகம் யோசிக்கிறேன். வைப் கோடிங் ஒரு பொறியாளரைப் போலச் சிந்திக்க எனக்குக் கற்றுத்தந்திருக்கிறது.
“சுத்தியல் வைத்திருப்பவருக்கு எல்லாமே ஆணியாகத் தெரியும்” என்று ஒரு பழைய நகைச்சுவை உண்டு. இதைச் சிலர் விமர்சனமாகப் புரிந்துகொள்கிறார்கள்: உலகத்தில் எல்லாமே ஆணிகள் அல்லவே! ஆனால் எனக்கு இதில் ஆழமான ஓர் உண்மை தெரிகிறது. சுத்தியலைப் பயன்படுத்தத் தொடங்கியதால், ஆணி அடிக்கும் ஓர் இனமாகவே நாம் மாறியிருக்கிறோம். சுத்தியலைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டுமென்றால், எங்கே ஆணி அடிக்கலாம் என்ற பார்வையில் உலகைக் காணவும் வேண்டும்.
வைப் கோடிங்கும் எனக்கு அப்படித்தான் வேலை செய்கிறது. இப்போது உலகைப் பார்க்கும்போது பலவிதமான பயன்பாடுகள் என் மனத்தில் தோன்றுகின்றன. ஒரு புதிய சிந்தனை பின்னணியில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது: இந்தப் புரிதலை நடைமுறைக்கு உதவும் ஒன்றாக மாற்ற முடியுமா? அந்தக் கருதுகோளை ஏதேனும் செயலியாக்க முடியுமா? எல்லோரும் இப்படிச் சிந்திக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் சோதித்துப் பார்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு AI இத்தகைய வாய்ப்பை வழங்குகிறது.
மானுடவியல், கலைத் துறைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் பெரும்பாலோர் ஒரு விஷயத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். AI-யை வழக்கமாகப் பயன்படுத்தும் மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, சிந்தனைத் திறன்கள் குறைந்து வருகின்றனவோ என்பதே அது. குறிப்பிட்ட பணிகளில் AI-யை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, முக்கியமான அறிவாற்றல் திறன்களைக் கற்றுக்கொள்வதைத் தடுக்கலாம் என்பதற்குச் சான்றுகளும் உள்ளன.
அதனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் AI வருவதற்கு முன்பு இருந்த சில கற்பித்தல் முறைகளைத் தொடர வேண்டும். AI-யை ஆர்வத்துடன் பயன்படுத்தும் நானும்கூட அந்தப் பழைய கல்விமுறைகளால் பல ஆண்டுகளாகப் பயனடைந்தவன்தான். வீட்டுப்பாடங்களும் தேர்வுகளும் மாணவர்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றன. எனவே எல்லாப் பணிகளுக்கும் AI-யைப் பயன்படுத்த முடியாதபடி சில மதிப்பீடுகளை அமைப்பது சரிதான். வகுப்பறையில் நேரடியாக எழுத வைப்பது, வாய்மொழித் தேர்வுகள் நடத்துவது போன்ற முறைகள் இதற்கு உதவும்.
எந்தப் பணிக்கும் AI-யை உடனடி குறுக்குவழியாகப் பயன்படுத்திவிடலாம் என்ற ஆசையிலிருந்து மாணவர்களை விலக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பெடுத்தல், கருத்துகளுக்கு வடிவம் கொடுத்தல், ஆய்வு செய்தல், மீண்டும் திருத்துதல் போன்ற திறன்கள் வளரும். எப்படிக் கற்றுக்கொள்வது என்பதையே கற்றுக்கொள்ளும் திறனும் (metacognition) இதில் அடங்கும்.
அதே சமயம் கொரியாவில் என்னிடம் படித்த மாணவர்கள் கேட்டது முற்றிலும் நியாயமான கோரிக்கை. மாறிக்கொண்டே இருக்கும் AI கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை கல்லூரிகளும் கற்றுத்தர வேண்டும். இந்தக் கருவிகள் மிக வேகமாக வளர்வதால், ஒரு குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்துவது எப்படி என்று மட்டும் சொல்லித் தருவது போதாது. AI-யை எந்த வேலையில், எந்த முறையில் பயன்படுத்தலாம் என்று யோசிக்கும் திறனையும் மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். இதை ‘மெட்டா-AI’ (meta-AI) திறன் என்று அழைக்கலாம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக AI-யைப் பயன்படுத்திவரும் என் அனுபவம் இதற்கு ஒரு வழியைக் காட்டியிருக்கிறது. AI-யுடன் திறம்பட உரையாடக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பொறியாளரைப் போல யோசிக்கவும் வேண்டும். ஒரு கருத்தை AI அல்லது வேறு கருவிகளைக் கொண்டு எப்படிச் சோதிக்கலாம்? அதை எப்படிப் பயன்பாட்டுக்கு மாற்றலாம்? என்ற கேள்விகளையும் எழுப்ப வேண்டும்.
இந்த அணுகுமுறையை நான் முயன்ற ஓர் இடம், கடந்த மூன்றாண்டுகளாக உருவாக்கிவரும் இணையவழி எழுத்துப் பயிற்சி வகுப்பு. அங்கே எழுதுவதைப் படிப்படியாகக் கற்றுத்தருகிறோம். ஆய்வு செய்யப் பயன்படும் ஒரு கேள்வியை எப்படித் தேர்ந்தெடுப்பது? தேவையான தகவல்களை எப்படித் தேடுவது? ஒரு வாதத்தை எப்படி உருவாக்குவது? அதை ஆதரிக்கும் சான்றுகளை எப்படித் திரட்டுவது? எதிர்வாதங்களையும் எதிர்ச் சான்றுகளையும் கண்டபின் தன் முடிவை எப்படி மாற்றிக்கொள்வது? கட்டுரையை எப்படி ஒழுங்குபடுத்துவது? பிறரின் கருத்துகளைப் பெற்று மீண்டும் எப்படித் திருத்துவது? இவை அனைத்தும் பயிற்சியின் பகுதிகள்.
எழுத்தை ஒரு சிந்தனைப் பயிற்சியாகவே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம். தர்க்கத்தில் ஏற்படும் பொதுவான பிழைகளைத் தவிர்ப்பதும் இதில் அடங்கும். இந்த நீண்ட, சில நேரங்களில் சலிப்பூட்டும் செயல்முறையை மாணவர்களே கடந்து வர வேண்டும் என்று நம்பினோம். அப்படித்தான் நுட்பமான சிந்தனைத் திறன்கள் வளரும். இங்கே எழுதுவதுதான் சிந்திக்கும் முறை. எனவே அந்த வேலையை AI-யிடம் ஒப்படைத்துவிடக்கூடாது.
கல்லூரிப் படிப்புக்குப் பிறகு மாணவர்கள் பலவிதமான எழுத்துப் பணிகளுக்கு AI-யைச் சார்ந்திருக்கலாம். ஆனாலும் நீளமான கட்டுரை ஒன்றைத் தாங்களே எழுதி, மீண்டும் மீண்டும் திருத்திப் போராடும்போதுதான் கிடைக்கக்கூடிய சிந்தனைத் திறன்களை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிக் கற்றுக்கொண்டால்தான் AI எழுதிய உரையின் தரத்தையும் அவர்களால் மதிப்பிட முடியும்.
இந்த அனுபவம் இன்னொரு விஷயத்தை வலியுறுத்த எங்களைத் தூண்டியது. எழுதும்போது துணிச்சலாகப் புதிய பாதையில் செல்வது, எதிர்பாராத சொற்றொடர்களைக் கோர்ப்பது, வழக்கத்திற்கு மாறான உருவகங்களை உருவாக்குவது போன்ற மொழிநடைசார் திறன்கள் முக்கியமானவை. இவற்றில் AI இன்னும் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பது நன்கு தெரிந்ததே. பல சாதாரண எழுத்துப் பணிகளுக்கு AI உருவாக்கும் உரை போதுமானதாக இருக்கலாம். ஆனால் AI-யைவிடச் சிறப்பாக எழுதத் தெரிந்திருப்பதற்கும் தனி மதிப்பு இருக்கிறது.
அதேநேரத்தில் AI-யைச் சரியாகப் பயன்படுத்தினால் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் அது உதவும் என்று உணர்ந்தோம். அதற்காக AI-யை விவாதப் பங்காளியாகப் பயன்படுத்தும் முறையை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறோம். அது எதிர்வாதங்களையும் மாறுபட்ட சான்றுகளையும் முன்வைக்கிறது. மாணவர்கள் தங்கள் கருத்துகளைச் சோதித்துப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர்களுடைய சிந்தனை கூர்மையாகிறது.
AI-யை ஆய்வுக்கு உதவும் துணையாகவும் பயன்படுத்தலாம். ஒரு கட்டுரையைப் பலவிதமாக அமைத்துப் பார்க்கவும் உதவும். எங்கள் இணையவழி வகுப்பை ஏராளமான மாணவர்கள் பயன்படுத்த முடியும் என்பதற்காக, முதல் வரைவுகளுக்குத் துல்லியமான கருத்துகளைத் தரும் AI உதவியாளர்களையும் உருவாக்கினோம். மறுஎழுத்தைத் திட்டமிடுவதற்கும் அவை உதவுகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்பை உருவாக்கியதிலிருந்து நானும் AI-யை இப்படித்தான் பயன்படுத்துகிறேன். என்னுடைய திட்டங்களை அறிந்த சில தனிப்பயன் உதவியாளர்களை உருவாக்கியுள்ளேன். என் கருத்துகளையும் வாதங்களையும் கடுமையாகச் சோதித்துப் பார்க்குமாறு அவற்றிடம் சொல்லியிருக்கிறேன். நிச்சயமாக மனிதர்கள் எழுதியவற்றை வாசிப்பதற்கும் மனிதர்களுடன் உரையாடுவதற்கும் இது மாற்றாகாது. ஆனால் நான் சிந்திக்கும் முறையிலும் எழுதும் முறையிலும் ஓர் முக்கியமான விமர்சனப் பயிற்சியாக இது இடம்பிடித்துவிட்டது.
AI மிக வலிமையான தொழில்நுட்பம். நாம் எதிர்பார்க்கும் விளைவுகளையும் எதிர்பாராத விளைவுகளையும் அது ஏற்படுத்தும். வேலைவாய்ப்புகள், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் அதன் தாக்கத்தைப் பற்றிக் கவலைப்பட நல்ல காரணங்கள் இருக்கின்றன. அதனால்தான் சொற்களோடு இயங்கும் நாமும் AI-யைச் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
அது என்ன? அதனுடன் நாம் எப்படித் தொடர்புகொள்ள வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு இலக்கியக் கோட்பாடுகளும் பண்பாட்டு வரலாறும் நம்மிடம் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோம்.
மார்ட்டின் புச்னர்
மார்ட்டின் புச்னர் (Martin Puchner) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், நாடகம், ஒப்பிலக்கியத் துறைகளில் பேராசிரியர். உலக இலக்கியம், எழுத்தின் வரலாறு, பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவை அவரது முக்கிய ஆய்வுத் துறைகள்