1836-இல் வெளியான ‘மூக்கு’, கோகோலின் விசித்திரக் கற்பனையும் சமூக நையாண்டியும் இணைந்த சிறுகதை. ஒருநாள் காலை தனது மூக்கு காணாமல் போயிருப்பதைக் கண்ட கோவல்யோவ், அதைத் தேடிச் செல்கிறார். அவரது மூக்கோ அவரைவிட உயர்ந்த பதவியிலுள்ள அதிகாரியாக நகரத்தில் உலவுகிறது. தனது உடலின் ஓர் உறுப்பையே அதிகாரத்துக்குரிய பணிவுடன் அணுக வேண்டிய அவரது நிலை, பதவியும் வெளித்தோற்றமும் மனித மதிப்பை நிர்ணயிக்கும் சமூகத்தின் அபத்தத்தை வெளிப்படுத்துகிறது.
I
1918 – ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மிகவும் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்தது. அசென்ஷன் நிழற்சாலையில் ஒரு சவரத் தொழிலாளி வாழ்ந்துவந்தான். இவான் யாக்கவ்லெவிச். அவனுக்குக் குடும்பப்பெயர் இல்லை. எப்படியோ தொலைந்து போய்விட்டது. அவனது கடையின் பெயர்ப்பலகையே வேடிக்கை! ஒரு கன்னத்தில் சோப்பு நுரையுடன் ஒரு கனவான் முகம். அந்த வரைபடத்தின் கீழே ஒற்றை வரி: ‘இங்கு கட்டிகளைக் கீறி ரணசிகிச்சை அளிக்கப்படும்.’
அன்று காலையில் அவன் வீட்டில் சீக்கிரமாகவே விழித்துப் புரண்டு படுத்தான். வாட்டும் ரொட்டியின் தீயும் வாடை அவன் மூக்கைத் தாக்கியது. புதுமணத்தை முகர்ந்ததும் படுக்கையில் சற்றே எழுந்து உட்கார்ந்து நீட்டிமுறித்தான். அவன் வீட்டுக்காரி அப்போதுதான் அடுப்பிலிருந்து சுட்டரொட்டிகளை உருவிக்கொண்டிருந்தாள்.
“பிரஸ்கோவ்னா, எனக்குக் காபி வேண்டாம். சுடசுடச் சூடான ரொட்டியை இப்போதே ஒரு பிடி பிடிக்கிறேன். கடிக்க உறித்த வெங்காயம் போதும் ” என்றான்.
அவன் இல்லத்தரசிக்கோ காபியின் மீதுதான் அபாரக் காதல். ‘வெறும் ரொட்டியா! இந்த மடையன் அதையே தின்று தொலையட்டும். அப்போதுதான் அவன் பங்கு காபி எனக்குக் கூடக் கிடைக்கும்’ என்று எண்ணியவாறே மேஜையின் மீது ஒற்றை ரொட்டியை விட்டெறிந்தாள்.
அவளுக்கான மரியாதையாகச் சட்டைக்கு மேலே கோட்டை மாட்டிக்கொண்டு வந்து இவான் மேசையருகில் அமர்ந்தான். தொட்டுக் கொள்ளக் கொஞ்சம் உப்பை எடுத்துக்கொண்டான். இரண்டு வெங்காயங்களை உரித்துத் தயாராக வைத்தான். முகத்தைக் கம்பீரமாக வைத்துக்கொண்டான். மேஜையில் வீசப்பட்டுக் கிடந்த ரொட்டியை எடுத்து அரியத் தொடங்கினான். அதை இரு கூறாக அறுக்க முனையும்போது, உள்ளே ஏதோ ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு திகைத்தான். முள்கரண்டியால் அதைச் சுற்றிக் கவனமாகக் குத்திப் பார்த்துவிட்டு, விரல்களால் நிமிண்டினான்.
“நன்றாகவே பதிந்திருக்கிறதே! என்னவாக இருக்கும்?” என்று தனக்குள் முணுமுணுத்தான்.
விரல்களை உள்ளே நுழைத்து வெளியே இழுத்தான் – ஒரு மூக்கு!
திகைத்தான். கைகள் துவண்டு தொங்கிப் போயின. பிறகு கண்களைத் தேய்த்துக்கொண்டு அதைத் தடவிப் பார்த்தான். மூக்கே தான். மெய்யான மனிதமூக்கு. அதுவும் தனக்குத் தெரிந்த ஒருவருடைய மூக்கைப் போலிருக்கிறதே! அச்சம் ஆட்கொண்டது. அவனது முகத்தில் பீதி படர்ந்தது. ஆனால் அந்த அச்சமெல்லாம், அதைக் கண்ட அவன் மனைவிக்கு ஏற்பட்ட அருவருப்போடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.
அவள் சினமேறிக் கனன்றெரிந்தாள். எகிறினாள் “அட பாவிப் பயலே… எவன் மூக்கை அறுத்துட்டு வந்த? ஏன்டா இப்பிடி எழவு கூட்டுற? பாவி படுபாவி?” என்று மூக்கு சிவக்கக் கத்தினாள். “சல்லிப் பயலே! குடிகார நாயே! நானே போலீசுக்குப் போறேன். நானே காட்டிக் கொடுப்பேன். அட கொடுமையே! இப்படியுமா இருப்பான் ஒரு போக்கிரிப் பய! ஏன்டா… சிரைக்கும்போது மூக்கை அப்படி இறுக்கிப் பிடிக்கிறாயாமே, உட்காரவே முடியல்லைன்னு உங்கிட்ட சவரம் பண்ற எத்தனை பேர் எங்கிட்ட ஆவலாதிப் படறாங்க!”
இவான் பிணம் போல நின்றான். சவக்களை!
அந்த மூக்கு… ஆம், அடையாளம் பிடிபட்டது. அது வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது என்பது அவனுக்கு உடனே தெரிந்துவிட்டது. பிரதி ஞாயிறும் புதனும் தான் சவரம் செய்யும் நகராட்சிக் குழு உறுப்பினர் கோவல்யோவின் மூக்குதான் அது.
“பொறு பொறு, பிரஸ்கோவ்னா ஒசிப்பவ்னா! நீ பொறுமையின் சிகரமாச்சே! இதை ஒரு துணியில் சுற்றி மூலையில் வீசிவிடுகிறேன். இப்போதைக்கு அங்கே கிடக்கட்டும். பிறகு எடுத்துக்கொண்டு போய்விடுகிறேன்.”
“முடியாது, கூடாது. அங்கே இங்கே எங்கேயும் வைக்காதே! அறுத்தெடுத்த சவ மூக்கு என் வீட்டுக்குள்ள கிடக்கிறத நான் சகிக்கணுமா? சவரக்கத்தியைத் தீட்டுறதைத் தவிர உனக்கு வேற என்ன தெரியும்? புத்தி கெட்ட பயலே… கண்ணியம்னா எத்தனை காசுக்குன்னு கேக்குற பயலே… கடமைன்னா என்ன பொறுப்புன்னா என்ன? உனக்குத் தெரியுமா? பொறுக்கித் திங்கிற பயலே! உதவாக்கரைப் பன்றியே! போலீஸ் தேடி வந்தா உனக்காக நானாடா பதில் சொல்லணும்? சோப்பு தடவுற பயலே! வாத்து மடையனே! இந்தக் கண்றாவி என் கண்முன்னால மட்டும் இருக்கக்கூடாது! எங்கேயும் எடுத்துட்டுப் போ. எம் முன்னால நிக்காத … போ.”
இவான் யாக்கவ்லெவிச் திகைத்துப்போய் நின்றான். யோசித்தான், யோசித்துக்கொண்டே இருந்தான். எதை யோசிக்கிறான் என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.
“இது எப்படி நடந்ததென்று பேய்பிசாசுக்குத்தான் தெரியும்!” என்று கடைசியில் காதுக்குப் பின்னால் தலையைச் சொறிந்தபடி சொன்னான். “நேற்று ராத்திரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேனா இல்லையா என்றே தெரியவில்லை. ஆனால் இது மிகவும் அசாதாரணமான சம்பவம் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் ரொட்டி என்பது மாவில் சுட்டுத் தயாரிப்பது; மூக்கு என்பது முகத்துக்குரியது. எனக்கு எதுவுமே புரியவில்லையே.” பிறகு இவான் மௌனமானான். சட்டவிரோதமாக ஒரு மூக்கை வைத்திருப்பதற்காகப் போலீசார் தன்னைக் கைது செய்யக்கூடும் என்ற பயத்தில் அவனுடைய புத்தியே தடுமாறியது. வெள்ளிச்சரிகை பதித்த சிவப்புக் காலர் காவலர் சீருடை அதற்குள்ளாகவே அவன் கண்முன் தோன்றியது. கூடவே தொங்கும் உறைவாள் . உடம்பெல்லாம் நடுங்கியது.
கடைசியாக உடையணிந்து முடித்தான். மூக்கைத் துணியில் சுற்றிக்கொண்டு தெருவில் இறங்கினான். வீட்டு அம்மணியின் அழுத்தந்திருத்தமான அறிவுரைகள் வாசல் தாண்டியும் கேட்டபடியிருந்தன.,
யாருடைய வீட்டு வாசலிலாவது, பொதுச் சதுக்கத்திலாவது, முட்டுச் சந்திலாவது அதை நழுவவிடும் திட்டம். ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம்… அப்போது பார்த்து அவனுக்குத் தெரிந்த ஒருவர் எதிரே வந்து கேள்வி மாரி பொழிந்தார். “என்ன இவான், இவ்வளவு காலையில் யாருக்குச் சேவை செய்யப் போகிறாய்?” என்றெல்லாம் நாசூக்காகக் கேட்டார்.
செய்ய நினைத்ததைச் செய்வதற்கு அவனுக்கு வாய்ப்பே இதுவரை கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளிப்போய் தெருவோரம் மூக்கைக் கீழே நழுவவிட்டான். ஈட்டிக்கோடரியுடன் தூர நின்ற காவலன் ஒருவன் அவனை நோக்கி விரைந்து வந்தான். “பார்த்துப் போ! எதையோ கீழே போட்டுவிட்டாய்!” என்றான். இவான் அதை எடுத்துத் திரும்பவும் பைக்குள் ஒளித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
அவனை விரக்தி சூழ்ந்தது. தெருக்களில் கூட்டம் அதிகரிக்க, வியாபாரிகள் கடைகளைத் திறக்கத் தொடங்கினர். மேலும் மேலும் பரிதவித்தான். கடைசியாக ஐசக் பாலத்துக்குப் போவதென்று முடிவெடுத்தான். ஒருவேளை அங்கிருந்து அதை நேவா ஆற்றுக்குள் எறிந்துவிட முடியும்.
பல வகையிலும் மதிப்புக்குரிய மனிதனான இவான் யாக்கவ்லெவிச்சைப் பற்றி இன்னும் விரிவாக ஏதும் சொல்லவில்லையே என்று என் மனசாட்சி சற்றே உறுத்துகிறது. நேர்மையான ஒவ்வொரு ரஷ்யக் கைவினைஞனையும் போலவே இவானும் ஒரு பேய்க் குடிகாரன். அன்றாடம் பிற முகங்களை மழித்தாலும் தன்னைத் தான் மழிப்பதில்லை. முகம் மயிர் மண்டிக் கிடக்கும். அவன் ஒருபோதும் மேலங்கி அணிந்ததில்லை. அவன் அணிந்திருந்த கோட் திட்டுத்திட்டாக நிறம் மங்கியிருந்தது. அதாவது கருப்பு பழுப்பாகி விட்டது. காலரில் முதுமை ஏறியிருந்தது. மூன்று பொத்தான்களும் இல்லை; இருந்த தடம் மட்டுமே எஞ்சித் தெரிந்தது.
இவான் எதையும் விட்டேற்றியாகப் பார்க்கிறவன். நகராட்சிக் குழு உறுப்பினர் கோவல்யோவ் சவரம் செய்துகொள்ளும்போது வழக்கம்போல, “இவான், உன் கைகள் எப்போதும் நாறுகின்றனவே!” என்பார்.
“என்ன மணம் வருகிறது?” என்று அவன் இதமாகக் கேட்பான். “என்னவென்று தெரியவில்லை நண்பா. ஆனால் கூடுதல் நெடி.” உடனே இவான் ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சுவான். அதற்குப் பழிவாங்குவதுபோல விரல்களைக் கழுவாமல் துடைக்காமல் அவரது கன்னத்திலும் மேலுதட்டிலும் தாடையிலும் முகமெல்லாமும் தடவியபடி சோப்பைப் பூசுவான்.
நமது மதிப்புக்குரிய இந்த மனிதன்தான் இப்போது ஐசக் பாலத்தில் நின்றிருந்தான். முதலில் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு, கீழே எத்தனை மீன்கள் நீந்திச் செல்கின்றன என்று பார்க்க விரும்புகிறவன் போலப் பாலத்தின் கைப்பிடியில் சாய்ந்து குனிந்து, துணிப் பொட்டல பொக்கிஷமாம் மூக்கை யாருக்கும் தெரியாமல் நீருக்குள் வீசினான். ஒரு டன் பாரம் தன் மேலிருந்து இறங்கியதுபோல உணர்ந்தான். மகிழ்ந்து சிரித்தான். எனினும், அதிகாரிகள் யாருக்காவது சவரம் செய்யப் போவதற்குப் பதிலாக, இதைக் கொண்டாட ஒரு குவளை மதுக்கலவை குடிக்கலாமென்று ஒரு குட்டி ஆசை. ‘இங்கு தேநீர் கிடைக்கும்’ என்ற பலகை தொங்கிய கட்டடத்தை நோக்கி நடந்தான். அப்போது திடீரெனப் பாலத்தின் மறுமுனையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கண்டான். நீண்ட கிருதா, மும்முனைத் தொப்பி, இடுப்பில் தொங்கிய வாள் என அவர் கம்பீரமாகத் தோன்றினார். இவானுக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. இன்ஸ்பெக்டரோ அவனைக் கையசைத்து “இங்கே வாருமய்யா” என்றுஅழைத்தார்.
ஒரு கனவான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்த இவான் சட்டெனத் தொப்பியைக் கழற்றிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் போனான். “தாங்கள் நலமே என்று நம்புகிறேன்” என்றான்.
“என் நலத்தை விடும். நண்பரே, பாலத்தின் மீது ஏன் நின்றிருந்தீர் என்று சொல்லும்.”
“கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன் ஐயா, வாடிக்கையாளர்களைப் பார்க்கத்தான் போய்க்கொண்டிருந்தேன். ஆற்றில் நீர் வேகமாக ஓடுகிறதா என்று கீழே எட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்.”
“பொய்! அப்படியெல்லாம் கதைவிட்டுத் தப்பிவிட முடியாது. உண்மையை ஒப்புக்கொள்ளும்.”
“தங்களுக்கு வாரத்தில் இரண்டு முறை, ஏன் மூன்று முறைகூட, கட்டணமில்லாமல் சவரம் செய்துவிடத் தயாராக இருக்கிறேன்” என்றான் இவான்.
“வேண்டாம் நண்பரே, உமக்குச் சிரமம் வேண்டாம். ஏற்கெனவே மூன்று பேர் எனக்குச் சவரம் செய்துவிடுகிறார்கள். தங்கள் திறமையைக் காட்டுகிறார்கள். அதற்கு நான் அனுமதிப்பதையே பெரிய கௌரவமாக நினைக்கிறார்கள். சரி, இப்போது சொல்லும். அங்கே என்ன செய்துகொண்டிருந்தீர்?”
இவான் முகம் வெளிறியது. ஆனால் இங்கே இந்த விசித்திரமான சம்பவம் தவழ்ந்து வந்த பனிமூட்டத்துக்குள் மறைந்துவிடுகிறது. அதன்பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை.
II
நகராட்சிக் குழு உறுப்பினர் கோவல்யோவ் அன்று காலையில் சீக்கிரமாகவே விழித்து விட்டார். கண்ணைக் கசக்கியதும் உதடுகளால் “ப்ர்ர்… ப்ர்ர்!” என்று ஓசை எழுப்பினார். எப்போதும் இதுவே வழக்கம்; ஏன் இந்தப் பழக்கம் என்று அவராலேயே சொல்ல முடியாது. உடலை நீட்டிமுறித்தவாறே, மேஜை மீதிருந்த முகம் பார்க்கும் சிறிய கண்ணாடியை எடுத்துத் தரும்படி பணியாளனிடம் சொன்னார். முந்தைய மாலை மூக்கில் தோன்றியிருந்த சூட்டுக்கட்டியைப் பார்க்க விரும்பினார். அது வீங்கிப் பழுத்தால் சவரக் கடைக்குப் போய்க் கீறிவிட வேண்டும். ஆனால் பார்த்தபோது, மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் முகம் வழுவழுப்பாக இருந்தது. வெறுமையாகத் தட்டையாக இருந்தது. அதைக் கண்டதும் திகைத்தார். பயந்துபோய்த் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். துண்டால் கண்களைத் தேய்த்துக்கொண்டார். சந்தேகமே இல்லை. மூக்கு இல்லவே இல்லை! படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தார். உடலைப் பலமாக உலுக்கிக்கொண்டார். இல்லை, மூக்கு இல்லவே இல்லை! உடையணிந்துகொண்டு உடனே காவல்துறைக் கண்காணிப்பாளரைப் பார்க்கக் கிளம்பினார்.
ஆனால் இதற்குமேல் செல்வதற்கு முன், இந்த நகராட்சிக் குழு உறுப்பினர் எப்படிப்பட்டவர் என்பதை வாசகர் அறிய ஆவல் கொள்ளலாம். கோவல்யோவின் சில குணங்களை அவசியம் சொல்லியாக வேண்டும். கல்விச் சான்றிதழ்களின் தகுதி மூலம் நகர்மன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றவர்களை காகசஸ் பிரதேச நியமன உறுப்பினர்களோடு ஒப்பிடக்கூடாது. அவர்கள் முற்றிலும் வேறு வகையினர். ரஷ்யா தான் எவ்வளவு அற்புதமான நாடு! ஓர் உறுப்பினரைப் பற்றிப் பேசினாலே ரீகாவிலிருந்து கம்சட்கா வரை இருக்கும் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அது தங்களைப் பற்றியதுதான் என்று எடுத்துக் கொள்கிறார்கள். மற்றப் பதவிகளைக் கைப்பற்றிய அதிகாரிகளுக்கும் இதுவே பொருந்தும். கோவல்யோவ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காகசஸில் நிர்வாகிக் குழு உறுப்பினராக இருந்தார். அந்தப் பதவியில் இருந்ததை அவரால் மறக்க முடியவில்லை. எனினும், தன்னைப் பெரிய மனிதனாகக் காட்டிக்கொள்வதற்காக அவர் தன்னை ‘குழு உறுப்பினர்’ என்று சொல்லிக் கொள்ளாமல், எப்போதும் ‘மேஜர்’ என்றே சொல்லிக்கொண்டார்.
சட்டைகளின் மார்புப் பகுதியில் அணியும் துணிப்பட்டைகளை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு கிழவியைத் தெருவில் சந்திக்கும்போது “இதோ பார் அம்மா… சதோவயா தெருவில் போய் ‘மேஜர் கோவல்யோவ் இங்கேதானே வசிக்கிறார்?’ என்று கேள். எந்தக் குழந்தையைக் கேட்டாலும் வீட்டைக் காட்டிவிடும்” என்பார்.
ஆகவே இனிமேல் நாமும் அவரை மேஜர் கோவல்யோவ் என்றே அழைப்போம். நாள்தோறும் நெவ்ஸ்கி நிழற்சாலையில் உலாவுவது அவரது வழக்கம். அவரது சட்டைக் காலர் எப்போதும் படுசுத்தம், விறைப்பாகவும் இருக்கும். மாவட்டத் தலைமை நிர்வாகிகள், கட்டடக் கலை நிபுணர்கள், படைப்பிரிவு மருத்துவர்களது பாணியில் கிருதா வைத்திருந்தார். சுருக்கமாகச் சொன்னால், உப்பிய செங்கன்னங்கள் உள்ளவர்கள், ‘விஸ்ட்’ சீட்டாட்டத்தில் வல்லவர்கள் அனைவரும் வைத்திருக்கும் பாணி. இந்தக் கிருதாக்கள் கன்னத்தைக் குறுக்காக வெட்டி நேரே மூக்கை நோக்கி விரையும்.
மேஜர் கோவல்யோவ் தன் நிமிர்நெஞ்சில் பல முத்திரைச் சின்னங்கள் அணிந்திருந்தார். சிலவற்றில் குலக்குறிகள், பிறவற்றில் வார நாள் பெயர்கள் அலங்கரித்தன. தன் அந்தஸ்துக்கேற்ற ஒரு பதவியைப் பெறுவதற்காகவே அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்திருந்தார். முடிந்தால் உச்சமாக மாநிலத் துணை ஆளுநர் பதவி; இல்லாவிடில் ஏதாவது ஒரு பெரிய துறையில் சிறிய பதவி கிடைத்தாலும் சரி, திருப்தியடையத் தயாராக இருந்தார். திருமணம் செய்துகொள்ளவும் அவருக்கு விருப்பம்தான். அவரது மூக்கும் ஓரளவு சீரான வடிவம் கொண்ட மூக்கு தான். ஆகவே இரண்டு லட்சம் ரூபிள் வரதட்சணை தரும் பெண் தான் வேண்டும். ஆனால் அந்த மூக்கு இருந்த இடம் மழுங்கித் தட்டையாக வெறுமனே கிடப்பதைக் கண்டதும் அவருக்கு எப்படி இருந்திருக்கும்! அதை வாசக ஊகத்துக்கே விடலாம்.
அவரது துரதிர்ஷ்டம்! தெருவில் ஒரு வாடகைக் குதிரைவண்டிகூடத் தென்படவில்லை. எனவே நடந்துதான் போக வேண்டியிருந்தது. மேலங்கியை உடலைச் சுற்றி இறுக்கி விட்டு, மூக்கிலிருந்து இரத்தம் வடிவதைப்போல முகத்தில் கைக்குட்டையை வைத்துக்கொண்டார். ‘ஒருவேளை இதெல்லாம் என் கற்பனையாக இருக்குமோ? ஒரு மூக்கு இவ்வளவு முட்டாள்தனமாக உதிர்ந்துவிட முடியாதே’ என்று நினைத்தார். மீண்டும் கண்ணாடியில் முகம் பார்ப்பதற்காக ஓர் இனிப்புக் கடைக்குள் நுழைந்தார். நல்லவேளையாகக் கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. தூக்கம் கலையாத முகங்களுடன் சிறுவர்கள் சிலர் கடையைச் சுத்தம் செய்தனர். மேஜை நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினர். இன்னும் சிலர் புதிய கேக்குகளைத் தட்டுகளில் எடுத்து வந்தனர். காபிக் கறை படிந்த நேற்றைய செய்தித்தாள்கள் அங்கேயே கிடந்தன. ‘கடவுளுக்கு நன்றி! யாரும் இல்லை. இப்போது நிதானமாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
தயங்கியபடியே கண்ணாடியருகே சென்று பார்த்தார்.
“என்ன கோரம்! என்ன முகம்!” என்று அருவருப்புடன் துப்பினார். “மூக்குக்குப் பதிலாக வேறு ஏதாவது இருந்தாலும் பரவாயில்லை. ஒன்றுமே இல்லையே!”
எரிச்சலில் உதட்டைக் கடித்தார். இனிப்புக் கடையிலிருந்து வெளியேறினார். வழக்கத்துக்கு மாறாக, தெருவில் யாரையும் பார்க்கவோ, யாரைப் பார்த்தும் புன்னகைக்கவோ கூடாதென்று முடிவு செய்தார். நடந்தார்.
திடீரென ஒரு வாசலுக்கு முன்னால் வேரூன்றியதுபோல நின்றுவிட்டார். அங்கே ஒன்று நடந்தது. அது அசாதாரணமானது. ஒரு வாசல் முன்பு சாரட்வண்டி ஒன்று வந்து நின்றது. கதவு திறந்தது. சீருடை அணிந்த கனவான் ஒருவர் இறங்கினார். அவசரமாகப் படிகளில் ஏறினார். அது யாரோ கனவான் அல்ல, தனது சொந்த மூக்கே என்று மேஜர் கண்டார். கோவல்யோவுக்கு ஏற்பட்ட பயத்தையும் திகைப்பையும் என்னவென்று சொல்வது!
அந்த அசாதாரணக் காட்சியைக் கண்டதும் சுற்றியுள்ள அனைத்தும் சுழல்வது போலிருந்தது. கால் ஊன்றி நிற்பதே சிரமமாக இருந்தது. ஜன்னிக் காய்ச்சல் வந்ததுபோல உடல் உதறி நடுங்கியது.
மூக்கு வண்டிக்குத் திரும்பிவரும்வரை அங்கேயே காத்திருப்பதென்று முடிவுசெய்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அது வெளியே வந்தது. நிஜமாகவே அது அவர் மூக்குதான். அம் மூக்கு மனித உருப் போல உயர்ந்த விறைத்த காலர் பொற்சரிகைச் சீருடையும், பதனிட்ட மென்தோல் கால்சட்டையும் அணிந்திருந்தது. இடுப்பில் உடைவாள் தொங்கியது. இறகுத் தொப்பி, அரசு உயர் ஆலோசகர் பதவியில் மூக்கு இருப்பதைக் காட்டியது. ‘அலுவல் நிமித்த மரியாதைச் சந்திப்புகளை’ மூக்கு தற்போது மேற்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இருபுறமும் திரும்பிப் பார்த்துவிட்டு, வண்டிக்காரனிடம் “கிளம்பு!” என்று உத்தரவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டது. வண்டி புறப்பட்டது.
பாவம், கோவல்யோவுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இந்த அசாதாரண நிகழ்வுதான் என்ன? எப்படிப் புரிந்துகொள்வது! எதுவுமே தெரியவில்லை. நேற்றுவரை அவரது முகத்தில் இருந்த மூக்கு, நடக்கவோ வண்டியில் செல்லவோ முடியாத மூக்கு, இப்போது சீருடை அணிந்திருப்பது எப்படி? வண்டிக்குப் பின்னால் ஓடினார்.
நல்லவேளையாக அது சற்றுத் தள்ளியிருந்த மாஸ்கோ பெரிய அங்காடிக்கு முன்னால் நின்றிருந்தது. அங்கே விரைந்து சென்றார். கண்களுக்கு மட்டும் திறப்பு விட்டு முகத்தை வெள்ளைத் துணியால் சுற்றிக் கட்டியிருந்த பிச்சைக்காரப் பெண்களின் கூட்டத்துக்குள் இடித்துப் புகுந்து முன்னேறினார். முன்பெல்லாம் அவர்களைக் கண்டால் அவர் கொள்ளாத எள்ளலா!
அங்காடியின் முன்னால் சிலரே நின்றிருந்தார்கள். எதையும் தீர்மானிக்க முடியாத அளவுக்குப் பதற்றத்தில் இருந்தார் கோவல்யோவ். மூக்கை எட்டுத் திசைகளிலும் தேடினார். கடைசியில் அது ஒரு கடைக்கு முன்னால் நின்றிருப்பதைக் கண்டார். விறைப்பான காலருக்குள் பாதி புதைந்திருந்தது போலத் தோன்றிய அது, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைக் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தது.
‘அதை எப்படி நெருங்குவது?’ என்று கோவல்யோவ் தயங்கினார். ‘சீருடை, தொப்பி, மற்ற எல்லாமே அது அரசு ஆலோசகர் அந்தஸ்தைத்தானே காட்டுகின்றன!’
‘என்ன எழவு இது! எப்படி நேர்ந்தது இது!’
மூக்கின் அருகே சென்று நின்றார். மெதுவாக இருமினார். மூக்கோ அவரைச் சற்றும் பொருட்படுத்தவில்லை.
கடைசியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “மதிப்புக்குரிய ஐயா… பெருமதிப்புக்குரிய ஐயா…” என்றழைத்தார் கோவல்யோவ்.
“உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபடி மூக்கு திரும்பியது.
“எனக்கு இது விசித்திரமாகத் தோன்றுகிறது. பெருமதிப்புக்குரிய ஐயன்மீர்! தாங்கள் இருக்க வேண்டிய இடம் தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே… திடீரென்று உங்களை நான் இங்கே தெருவில் பார்க்கிறேன்… எங்கே? நீங்களே எண்ணிப் பாருங்கள்.”
“மன்னிக்கவும். நீர் என்ன பேசுகிறீர் என்று எனக்குப் புரியவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்லுக.”
‘இவனுக்கு இன்னும் தெளிவாக எப்படி நொட்டுவது?’ மீண்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தொடர்ந்தார்: “ ஐயன்மீர்! இயல்பாகவே… தவிர, நான் ஒரு மேஜர். மூக்கு இல்லாமல் நான் நடமாடுவது பொருத்தமில்லை என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அசென்ஷன் பாலத்தில் ஆப்பிள் விற்கிற கிழவி மூக்கு இல்லாமல்கூடத் தன் வியாபாரத்தை நடத்தலாம். ஆனால் நானோ ஒரு பதவிக்காக முயலும் கனவான். அதோடு, பல மாளிகைகளில் உயர்குடிச் சீமாட்டிகளோடு எனக்கு நற்பழக்கம். அரசு ஆலோசகரின் மனைவி சீமாட்டி செக்திரியேவ் இன்னும் பலர். ஆகவே, நீங்களே பாருங்கள்… எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெருமதிப்புக்குரிய பிரபுவே! நீங்கள் என்னை…” இங்கே மேஜர் குரலிடற தோள்களைக் குலுக்கினார் “மன்னியுங்கள் ஐயா… கடமை, கௌரவம் என்ற கண்ணோட்டத்தில் என்னைப் பார்த்தால்… உங்களுக்கே புரியும்…”
“எனக்கு எதுவும் புரியவில்லை” என்றது மூக்கு. “மீண்டும் கேட்கிறேன். தயைகூர்ந்து இன்னும் தெளிவாகச் சொல்லும்.”
“வணக்கத்துக்குரிய பெருந்தகையே” என்று கண்ணியத்துடன் அழைத்த கோவல்யோவ் “உங்கள் வார்த்தைகளை நான் எப்படிப் புரிந்துகொள்வதென்று தெரியவில்லை. விஷயம் மிகவும் தெளிவாக இருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அல்லது நீங்கள் விரும்புவது… ஆனால், நீங்கள் என்னுடைய சொந்த மூக்குதானே!”
மேஜரைப் பார்த்து மூக்கு நெற்றியைச் சுருக்கியது. “கனவானே, அங்கேதான் நீர் ஏதோ தவறு செய்கிறீர். நான் நான்தான். மேலும், நமக்கிடையே தொடர்பு எதுவும் இருக்க முடியாது. உமது சீருடையின் பொத்தான்களைப் பார்த்தால், நீர் என் துறையைச் சார்ந்தவரல்ல; முற்றிலும் வேறு துறை சார்ந்தவர் போலிருக்கிறது.” இப்படிச் சொல்லிவிட்டு மூக்கு மறுபக்கம் திரும்பிக்கொண்டது.
கோவல்யோவ் முற்றிலும் குழம்பிப்போனார். என்ன செய்வதென்றே தெரியவில்லை; அதைவிட என்ன நினைப்பதென்று கூடத் தெரியவில்லை. அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் உடை எழுப்பிய இனிய சரசரப்பைக் கேட்டார். பின்னல் பின்னலாய் மின்னும் அலங்கார ஆடையில் அம்மணி ஒருவர் அருகே வந்துகொண்டிருந்தார். அவருடன் பருவ மகள்! மெல்லியள்! நளின நடையை மேலும் எடுப்பாக்கிக் காட்டியது வெள்ளுடை. இலகுவான வைக்கோல் தொப்பி. என்னவோர் அழகு! உயரமான நீள் கிருதாப் பணியாளன் ஒருவன் அவர்களுக்குப் பின்னால் பவ்யமாக நடந்துவந்தான்.
கோவல்யோவ் சில அடிகள் முன்னேறி, மென் பருத்தித் துணிக் காலரைச் சரிசெய்து கொண்டார். சிறிய தங்கச் சங்கிலியில் தொங்கிய முத்திரைச் சின்னங்களை வருடினார். புன்னகையுடன் அந்த அழகுக் குமரி மீது பார்வையைப் பதித்தார். அவள் தலைகுனிந்து மென்னடையில் வசந்த மலர் போல் வந்தாள். மென்மையான வெளிர் நிறக் கையை நெற்றிக்கு உயர்த்தினாள். ஒளி ஊடுருவும் லில்லிப்பூ விரல்கள்! தொப்பியின் ஆரத்துக்குக் கீழே அவளது சிறிய நீள்வட்டத் தாடையையும், ரோஜாக் கன்னத்தையும் கண்டதும் அவரது புன்னகை இன்னும் விரிந்தது.
ஆனால் திடீரென்று நெருப்புப் பட்டவர்போலப் பின்னால் துள்ளினார். மூக்கு இருக்க வேண்டிய இடம் வெறுமையாகக் கிடப்பது நினைவுக்கு வந்துவிட்டது. மூக்குக் கனவானைத் தேடினார். கண்களில் நீர் துளிர்த்தது. சீருடை அணிந்த அந்தக் கனவான் வெளித்தோற்றத்தில்தான் அரசு ஆலோசகர் போல் தெரிகிறார். நிஜத்தில் நீ ஓர் அயோக்கியன், போக்கிரி, தனது சொந்த மூக்குதானே தவிர நீ வேறொன்றுமில்லை என்று சொல்லிவிடத் திரும்பினார். ஆனால் மூக்கு அங்கே இல்லை. கிடைத்த இடைவெளியில் அது போய்விட்டிருந்தது. மகாபிரபு தனது உயர்மட்டச் சந்திப்பு அவசரத்தில் போய்விட்டதோ! கேடு கெட்டது!
அது அங்கிருந்து காணாமல் போனதும் கோவல்யோவ் மனமுடைந்தார். திரும்பிச் சென்று, தாழ்வாரத்தில் வரிசைத் தூண்களோடு தூணாகக் கண நேரம் துணைநின்றார். மூக்கு எங்கேனும் தென்படாதா என்ற ஏக்கத்துடன் நாற்புறமும் பார்த்தார். மூக்கு உயர்பதவியைக் குறிக்கும் இறகுத் தொப்பியும் பொற்சரிகைச் சீருடையும் அணிந்திருந்தது மட்டும் அவருக்கு நன்றாக நினைவிருந்தது. ஆனால் மேலங்கியின் வடிவத்தையோ, வண்டியின் குதிரைகளின் நிறத்தையோ கவனிக்கவில்லை. சாரட் வண்டியின் பின்தடுக்கில் பாதுகாவலன் நின்றிருந்தானா, அவன் என்ன சீருடை அணிந்திருந்தான் என்பதைக்கூடக் கவனிக்கவில்லை. அதோடு, ஏராளமான வண்டிகள் எதிரெதிரே சென்றுகொண்டிருந்தன. அவற்றுள் அந்த ஒரு வண்டியை அடையாளம் காண்பதே சிரமம். கண்டாலும் அதை நிறுத்த வழியில்லை.
வெயில் ஒளிர்ந்த அழகான நாளது. நெவ்ஸ்கி நிழற்சாலையில் பெருங்கூட்டம் வந்துபோய்க் கொண்டிருந்தது. நடைபாதையில் வண்ண வண்ண உடைகளில் பெண்டிர் ஓர் ஓடையைப்போல ஒழுகிப் போயினர். அவருக்குத் தெரிந்த அந்தரங்க ஆலோசக நண்பர் ஒருவர் நெவ்ஸ்கி சாலையில் இருந்தார். குறிப்பாகப் புதியவர்கள் முன்னிலையில் அவரை ‘ஜெனரல்’ என்று அழைப்பது ‘மேஜர்’ கோவல்யோவின் வழக்கம். இரவு நேர விஸ்ட் சீட்டாட்டத்தில் எப்போதும் தோற்றுப்போகும் நெருங்கிய நண்பர் யாரிகினும் அங்கேதான் இருந்தார். காகசஸில் குழு உறுப்பினர் பதவி பெற்றிருந்த இன்னொரு ‘மேஜர்’ அவரைக் கையசைத்து அழைத்தார். “நாசமாப் போச்சு!” என்று கோவல்யோவ் தாழ்ந்த குரலில் முனகினார். அவரிடமிருந்து தப்பிக்க அருகே வந்த வாடகை வண்டியில் பாய்ந்தேறினார். “ஏய் வண்டிக்காரா! நேராகப் போலீஸ் கண்காணிப்பாளரிடம் வண்டியை விடு.” வழியெல்லாம் “வேகமா ஓட்டு!” என்று விரட்டிக் கொண்டிருந்தார்.
“காவல் துறைக் கண்காணிப்பாளர் வீட்டில் இருக்கிறாரா?” என்று முன்கூடத்தில் நுழைந்ததுமே கேட்டார்.
“இல்லை ஐயா. இப்போதுதான் வெளியே போனார்” என்றான் வாயிற்காப்போன்.
“ஆகா, நான் நினைத்தபடியேதான்!”
“ஆமாம். இப்போதுதான் போனார். சற்று முன்னதாக வந்திருந்தால் ஒருவேளை பார்த்திருக்கலாம்” என்று அவன் தொடர்ந்தான்.
இன்னமும் கைக்குட்டையை முகத்தோடு ஒற்றிப் பிடித்தபடி கோவல்யோவ் மீண்டும் வண்டியில் ஏறி, சலிப்பாகச் சொன்னார் “ஓட்டு!”
“எங்கே?” என்றான் வண்டிக்காரன்.
“நேராக!”
“ நேராக… ஆனால் எப்படிப் போய் முட்டுவது? இங்கே சாலை பிரிகிறதே. வலப்பக்கமா, இடப்பக்கமா?”
இந்தக் கேள்வி கோவல்யோவை யோசிக்க வைத்தது. இந்த நிலையில் போலீசை நாடுவதே நல்லது. இந்த விவகாரத்துக்கும் அவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதால் அல்ல; மற்ற அதிகாரிகளைக் காட்டிலும் அவர்கள் விரைவாகச் செயல்படுவார்கள் என்பதற்காக. மூக்கு எந்தத் துறையைச் சேர்ந்ததாகத் தன்னைச் சொல்லிக்கொண்டதோ, அந்தத் துறையிடம் விளக்கம் கேட்பதில் பயனில்லை என்றே அவருக்குத் தோன்றியது. அந்தக் ‘கனவான்’ அளித்த பதில்களைப் பார்த்தால், அவன் எதையுமே மதிப்பவனில்லை என்றுதான் தெரிகிறது. கோவல்யோவை முன்பின் பார்த்ததில்லை என்று சொன்னானே… தன் துறையைப் பற்றியும் பொய் தான் சொல்லியிருப்பான்.
போலீஸ் நிலையத்துக்குப் போகும்படி வண்டிக்காரனிடம் சொல்ல வாயெடுத்தபோது, இன்னொரு எண்ணம் தோன்றியது. முதல் சந்திப்பிலேயே தனக்கு இவ்வளவு துரோகம் செய்த அந்தப் போக்கிரி, இந்தத் தாமதத்தைப் பயன்படுத்திக்கொண்டு நகரத்திலிருந்து ரகசியமாக வெளியேறிவிட்டால்? பிறகு தன் தேடல் எல்லாம் வீணாகலாம். அல்லது ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கலாம். கடைசியாக, கர்த்தர் கிருபையால் ஒரு யோசனை உதித்தது. நேராக செய்தித்தாள் விளம்பர அலுவலகத்துக்குப் போவதென்று முடிவெடுத்தார். அவர் மூக்கு காணாமல் போனதை விளம்பரப்படுத்த வேண்டும். அதன் தனித்த அடையாளத்தைக் குறிப்பிட்டு அறிவிக்க வேண்டும். கண்டுபிடிப்பவர் உடனே அதைத் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்கலாம்; அல்லது குறைந்தபட்சம் அது வசிக்கும் இடத்தையாவது தெரியப்படுத்தலாம். இப்படித் தீர்மானித்ததும் நாளிதழ் அலுவலகத்துக்கு வண்டியை விடச் சொன்னார். வழி நெடுக வண்டிக்காரனின் முதுகில் தட்டிக்கொண்டு, “வேகமாக, போக்கிரி! வேகமாக!” என்றார்.
“சரி ஐயா!” என்ற வண்டிக்காரன், சடைபிடித்த தன் குதிரையைச் சாட்டையால் அடித்தான். ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள்.
கோவல்யோவ் மூச்சிரைக்க விளம்பரப் பிரிவின் சிறிய அறைக்குள் பாய்ந்தார். அங்கே நரைமுடியுடன், பழைய கோட்டும் மூக்குக்கண்ணாடியுமாக அலுவலர் ஒருவர் மேசையருகில் உட்கார்ந்திருந்தார். பேனாவைப் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டு, குவிந்து கிடந்த செப்புக் காசுகளை எண்ணிக்கொண்டிருந்தார்.
“இங்கே விளம்பரங்களை வாங்குவது யார்?” என்று கோவல்யோவ் கேட்டார்.
“சொல்லுங்கள் ஐயா” என்று தலை உயர்த்திப் பதிலளித்த அந்த நரைத்த அலுவலர், மீண்டும் தனக்கு முன்னாலிருந்த காசுக்குவியலில் கண் பதித்தார்.
“உங்கள் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும்…”
“தயவுசெய்து ஒரு நிமிடம் பொறுங்கள்” என்று அலுவலர் பதிலளித்தார். ஒரு கையால் தாளில் எண்களை எழுதிக்கொண்டே, மற்றொரு கையால் கணக்குச் சட்டத்தில் இரண்டு மணிகளை நகர்த்தினார்.
வெள்ளிச்சரிகை பதித்த கோட் அணிந்த பணியாள் ஒருவன் கையில் ஒரு குறிப்புத் தாளுடன் மேசையருகில் நின்றிருந்தான். ஏதோ பிரபுவின் வீட்டில் வேலை செய்கிறவன் என்பதை அந்தக் கோட் காட்டியது. தான் பழகுவதற்கு இனியவன் என்று காட்டிக்கொள்ள உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான். “சொன்னால் நம்புவீர்களா ஐயா? இந்தச் சின்ன நாய் உண்மையில் இருபத்துநான்கு கோபெக்குகள் கூடப் பெறாது. என்னைக் கேட்டால் அதற்கு சல்லிக்காசும் தரமாட்டேன். ஆனால் சீமாட்டிக்கு அதன்மீது ஒரே பைத்தியம். கண்டுபிடித்துத் தருகிறவருக்கு நூறு ரூபிள் பரிசு தருவதாகச் சொல்கிறார். உண்மையைச் சொன்னால், இவர்களுடைய ரசனை நம்முடையதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நல்ல ஜாதி நாய்க்குட்டியாக இருந்தால் போதும், பூடில் குட்டிக்கோ பாயின்டர் குட்டிக்கோ ஐந்நூறு ஆயிரம் ரூபிள் கொடுக்கக்கூடத் தயங்கமாட்டார்கள்.”
அவன் தந்த விளம்பரக் குறிப்பில் இருந்த எழுத்துகளை எண்ணியவாறே அலுவலர் கம்பீரமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மேசையின் இருபுறமும் வீட்டு நிர்வாகிகள், எழுத்தர்கள், வாயிற்காப்போர் எனப் பலர் கைகளில் விளம்பரக் குறிப்புகளுடன் நின்றார்கள். ஒரு குறிப்பை எழுதியவர், 1814-இல் பாரிஸிலிருந்து வந்த, மிகக் குறைவாகவே ஓடிய , திறந்த சாரட் வண்டி ஒன்றை விற்க விரும்பினார். மற்றவர்கள், ஒரு தாங்குவில் மட்டும் உடைந்த, உறுதியான வாடகைவண்டி, பதினேழு வயதான துடிப்புள்ள குதிரை எனப் பலவற்றை விற்க விரும்பினார்கள். இவர்கள் கூடியிருந்த அறை மிகவும் சிறியது; காற்றோட்டமின்றி மனித வாடையில் புழுங்கியது. ஆனால் கோவல்யோவை அது எட்டவில்லை. ஏனென்றால் அவர் முகத்தைக் கைக்குட்டையால் மூடியிருந்தார்; அதோடு, அவருக்குதான் மூக்கே இல்லையே! அது எங்கே ஓடியதென்று கன்னி மரியே அறிவாள்!
“ஐயா, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். எனக்கு மிக மிக அவசரம்” என்று பொறுமையிழந்து சொன்னார்.
“ஒரு கணம்! ஒரு கணம்! இரண்டு ரூபிள், இருபத்துநான்கு கோபெக்குகள்… ஒரு நிமிடம்! ஒரு ரூபிள், அறுபத்துநான்கு கோபெக்குகள்!” என்று சொல்லிக்கொண்டே நரை அலுவலர் வீட்டு நிர்வாகிகளிடமும் வாயிற்காப்போரிடமும் அவர்களது குறிப்புகளைத் திருப்பி வீசினார். பிறகு கோவல்யோவின் பக்கம் திரும்பி “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
“எனக்கு வேண்டியது…” என்று இழுத்த கோவல்யோவ் “என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்கள். அதைச் செய்தவனை என்னால் பிடிக்க முடியவில்லை. அந்தப் போக்கிரியை என்னிடம் கொண்டுவருகிறவருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று ஒரு விளம்பரம் போட்டால் போதும்.”
“தங்கள் பெயர் என்ன?”
“என் பெயர் எதற்கு? எனக்கு மேட்டுக்குடித் தோழிகள் பலர் இருக்கிறார்கள். அரசாங்க ஆலோசகரின் மனைவி சீமாட்டி செக்திரியேவ், கர்னலின் மனைவி சீமாட்டி பொத்தோச்சினா…” ‘கடவுளே! அவர்கள் காதுக்கு இது போய்விடக்கூடாது!’ என்ற முனகல். பிறகு தொடர்ந்தார். வெறுமனே ‘நகர் மன்றக் குழு உறுப்பினர்’ என்று குறிப்பிடலாம். அதைவிட ‘மேஜர்’ என்று எழுதுவதே நல்லது.”
“ஓடிப்போனவன் உங்கள் பண்ணையடிமை, அப்படித்தானே?”
“பண்ணையடிமையா! அப்படி இருந்தால் இது இவ்வளவு பெரிய மோசடியாக இருக்காதே! தலைமறைவாகியிருப்பது மூக்கு.”
“ம்! விசித்திரமான பெயராக இருக்கிறதே. இந்தத் திருவாளர் மூக்கு உங்களிடமிருந்து பெரிய தொகை ஏதாவது திருடிவிட்டாரா?”
“திருவாளர் மூக்கா! ஐயோ, நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையே! என் சொந்த மூக்குதான் எங்கேயோ ஓடிவிட்டது. பிசாசு என்னிடம் விளையாடிவிட்டது.”
“அது எப்படிக் காணாமல் போனது? எனக்குப் புரியவில்லை.”
“எப்படி என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அதைவிட முக்கியமான விஷயம், அது இப்போது அரசாங்க ஆலோசகராக நடித்து நகரத்தில் நடமாடுகிறது. அதனால்தான், அதைப் பிடிப்பவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் என்னிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று விளம்பரம் தர விரும்புகிறேன். யோசித்துப் பாருங்கள். முகத்தில் இவ்வளவு எடுப்பாகத் தெரியும் ஓர் அங்கம் இல்லாமல் நான் எப்படி வாழ்வது? இது ஒன்றும் காலின் சுண்டுவிரல் அல்லவே. அதுவாக இருந்தால் காலணிக்குள் காலை நுழைத்துவிட்டால் போதும், அது இல்லாததை யாரும் கவனிக்கமாட்டார்கள். ஒவ்வொரு வியாழனும் அரசாங்க ஆலோசகர் செக்திரியே பிரபுவின் மனைவியைச் சந்திப்பேன். கர்னலின் மனைவி சீமாட்டி பொத்தோச்சினாவும் எனக்குப் பழக்கமானவர்; அவருக்கு மிக அழகான ஒரு மகள் இருக்கிறாள். இப்போது நான் என்ன செய்வது? இப்படியே அவர்கள் முன்னால் போய் நிற்க முடியாதே.”
அலுவலர் உதடுகளை இறுக்கிக்கொண்டு யோசித்தார். நீண்ட மௌனத்துக்குப் பிறகு, “இல்லை. இப்படியொரு விளம்பரத்தை வெளியிட முடியாது” என்றார்.
“என்ன! ஏன் முடியாது?”
“பத்திரிகையின் நற்பெயருக்குக் கேடு வரலாம். ஒவ்வொருவரும் தங்கள் மூக்கு காணாமல் போய்விட்டதாக விளம்பரம் கொடுக்க ஆரம்பித்தால் என்னாவது? ஏற்கெனவே எல்லாவிதமான அபத்தங்களையும் பொய்களையும் வெளியிடுகிறோம் என்று மக்களிடம் நற்பெயர்.”
“ஆனால் இது உண்மையே. அபத்தமல்ல! இந்த விஷயத்தில் அப்படி ஏதுமில்லை.”
“அப்படியா நினைக்கிறீர்கள்? ஒரு நிமிடம் கேளுங்கள். போன வாரம் இதேபோல் ஒரு விநோதம் நடந்தது. உங்களைப்போலவே ஓர் அதிகாரி ஒரு விளம்பரத்துடன் வந்தார். அதை வெளியிட இரண்டு ரூபிள் அறுபத்துமூன்று கோபெக்குகள் கொடுத்தார். கருப்புப் பூடில் நாயொன்று காணாமல் போனதாகத்தான் அந்த விளம்பரம் அச்சில் வந்தது. அதில் விநோதமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் உண்மையில் அது ஒரு கேலி. அதில் பூடில் என்று குறிப்பிட்டது நாயல்ல, காணாது போனது ஏதோ ஒரு பெருநிறுவனத்தின் காசாளர்தான்.”
“ஆனால் நான் நாயைப் பற்றிப் பேசவில்லை. என் மூக்கு… சொந்த மூக்கைப் பற்றியே பேசுகிறேன். அதாவது ஏறத்தாழ என்னைப் பற்றியே.”
“இல்லை. உங்கள் விளம்பரத்தை வெளியிட முடியாது.”
“ஆனால் என் மூக்கு உண்மையாகவே காணாமல் போய்விட்டதே!”
“அதற்கு மருத்துவரிடம் போக வேண்டும். நீங்கள் விரும்புகிறபடி எவ்வடிவிலும் மூக்கை அறுத்துத் திருத்தி அழகூட்டித் தரக்கூடியவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் உங்களைப் பார்த்தால் நகைச்சுவை உணர்வுள்ளவராகத் தெரிகிறீர்கள். கொஞ்சம் வேடிக்கை காட்ட விரும்புகிறீர்கள் போலிருக்கிறது.”
“என் கௌரவத்தின் மீது ஆணை! நீங்களே என் முகத்தைப் பாருங்கள்.”
“எதற்குச் சிரமப்படுகிறீர்கள்?” என்று ஒரு சிட்டிகை மூக்குப்பொடியை எடுத்துக்கொண்டே அலுவலர் ஆர்வத்துடன் சொன்னார் “இருந்தாலும், தங்கள் விருப்பம் அதுவானால், நானும் ஒருமுறை பார்க்கிறேனே!”
குழு உறுப்பினர் முகத்தைப் பொத்தியிருந்த கைக்குட்டையை விலக்கினார்.
“சரி, இனியும் தயங்குவீர்களா? காணாமல் போன என் மூக்கைப் பற்றி விளம்பரம் வெளியிட மறுக்க முடியாது என்று இப்போது தெரிகிறதல்லவா? உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பேன். இந் நிகழ்வின் மூலம் நீங்கள் அறிமுகம் ஆனதற்காகவும் மகிழ்வேன்.”
பார்த்தீர்களா, நமது மேஜர் கொஞ்சம் தாழ்ந்துபோகக்கூடத் தயங்கவில்லை.
“விளம்பரம் செய்வது நிச்சயமாகச் சிரமமில்லை” என்று அலுவலர் பதிலளித்தார். “ஆனால் அதனால் உங்களுக்கு என்ன பயன்? அதுதான் எனக்குப் புரியவில்லை. இருந்தாலும், இவ்வளவு வற்புறுத்துகிறீர்கள் என்றால், நன்றாக எழுதக்கூடிய ஒருவரை அணுகுங்கள். இயற்கையின் விசித்திரமான விளையாட்டாக இதை விவரித்து ‘நார்தர்ன் பி’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதலாம்…” இங்கே இன்னொரு சிட்டிகைப் பொடியை எடுத்துக்கொண்டார். “இளம் வாசகர்களின் புத்தறிவுக்காக…” மூக்கால் உறிஞ்சி விட்டுத் துடைத்துக்கொண்டார். “அல்லது பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு விஷயமாகக்கூட கருதி வெளியிடலாம்.”
குழு உறுப்பினர் முற்றிலும் மனமுடைந்தார். நாடக விளம்பரங்கள் வந்த ஒரு நாளிதழில் அவரது பார்வை தற்செயலாகப் பட்டது. பேரழகி என்று அவர் போற்றிய ஒரு நடிகையின் பெயரைப் பார்த்ததும், தன்னையறியாமல் புன்னகைத்தார். நீலநிற நுழைவுச்சீட்டு இருக்கிறதா என்று பார்க்க அவரது கை பையைத் துழாவியது. ஏனென்றால், தன்னைப்போன்ற உயரதிகாரி குறைந்த விலை இருக்கைகளில் அமரலாகாது என்பது கோவல்யோவின் சங்கல்பம். ஆனால் காணாமல் போன மூக்கின் நினைவு சட்டென வந்தது. அது புன்னகையை நசித்துவிட்டது. எல்லாவற்றையும் தான்.
அலுவலருக்கே அவரது இக்கட்டான நிலையைப் பார்த்து இரக்கம் ஏற்பட்டது போலிருந்தது. ஆறுதல் சொல்ல விரும்பினார். சில சம்பிரதாய மரியாதை வார்த்தைகளால் தன் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் முயன்றார். “தங்களுக்கு நேர்ந்த இந்த அசாதாரணமான துரதிர்ஷ்டத்துக்காக மிகவும் வருந்துகிறேன். மூக்குப்பொடி ஒரு சிட்டிகை இழுத்துக் கொள்கிறீர்களா? தலையைத் தெளிவாக்கும்; மனச்சோர்வைப் போக்கும்; மூலநோய் வராமலும் தடுக்கும்” என்று
சொல்லிக்கொண்டே தன் பொடிடப்பியைக் கோவல்யோவிடம் நீட்டினார். அதே நேரத்தில், ஏதோ ஓர் அழகியின் முகம் பதிந்திருந்த அதன் மூடியைச் சாதுரியமாக மறைத்துக்கொண்டார். எந்தத் தீய நோக்கமும் இல்லாத இந்தச் செயல் கோவல்யோவைச் சீற்றமடையச் செய்தது. “இதை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்? உங்களுக்கு நக்கலா? இந்த நையாண்டி ஏன் என்று எனக்குப் புரியவில்லை” என்று கோபமாகச் சொன்னார். “பொடி போடுவதற்கு எது அவசியமோ, அந்த மூக்குதான் என்னிடம் இல்லை என்பது புரியவில்லையா? இப்போது மூக்குப்பொடியைப் பார்க்கவே சகிக்கவில்லை. அற்புதப் பொடியாக இருந்தால்கூட வேண்டாம். அதிலும் உங்கள் பொடி மட்ட ரகம். நிச்சயமாக வேண்டாம்! இதைப் பேய் மூக்கு உறிஞ்சட்டும்! இந்தப் பொடி டப்பியைச் சாத்தான் பிடுங்கிப் போகட்டும்!” சபித்துவிட்டுக் கடுப்புடன் வெளியேறினார்.
காவல்துறை ஆணையரிடம் சென்றார். அவர் போய்ச் சேர்ந்தபோது அந்தப் பெரிய மனிதர் சோபாவில் மலைபோல் சாய்ந்திருந்தார். சுயதிருப்தியாகப் பெருமூச்சுவிட்டபடி “ஆம், அதில் ஒரு நல்ல தொகை என் பங்காக வரும்” என்று தனக்குள் பூரித்துக்கொண்டிருந்தார்.
ஆகவே, நமது குழு உறுப்பினர் வருகைக்கு அது சற்றும் ஏற்ற நேரமாக இருக்கவில்லை என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
இந்த ஆணையர் எல்லாத் தொழில்களையும் பெரிதும் ஆதரிப்பவர். கலைகளை ஊக்குவிப்பவர். ஆனால் காவல்துறை மிடுக்கையும்விட அவர் அதிகம் விரும்பியது அன்பளிப்புப் காசோலையைத்தான். “அதற்கு இணையான ஜீவனைக் காண்பதரிது. அதற்குத் தீனி தரத் தேவையில்லை; அதிக இடத்தை அடைக்காது; கட்டிப்போட்ட கோட்டுப் பைக்குள் பத்திரமாக இருக்கும்; கீழே விழுந்தாலும் கிழியாது; குட்டிகளும் ஈனும்” என்பார்.
ஆணையர் கோவல்யோவைச் சற்று மந்தமாகவே வரவேற்றார். “ஒரு வில்லங்கத்தைக் கொண்டுவருவதற்கு பின்மதிய நேரம் ஏற்றதல்ல. உண்ட பிறகு ஓய்வு என்பதே இயற்கை நியதி” என்று சொன்னார். பண்டைய ஞானியர் அறவுரைகள் ஆணையர் அறந்ததே என்று இதிலிருந்து நமது மேஜர் புரிந்துகொண்டார்.
கதையைக் கேட்ட பிறகு, “கண்ணியமான மனிதர்களின் மூக்குகள் இப்படிக் களவு போவதில்லை” என்று ஆணையர் தன் கருத்தைக் கூறினார். அவர் கடைசியாகச் சொன்னது மிகவும் நேரடியானது. அதிரடி மூர்ச்சைக் குத்து. மேஜர் எளிதில் மனம் நோகக்கூடியவர் என்பதை நாம் மறக்கலாகாது. தனிப்பட்ட முறையில் தன்னைப் பற்றி என்ன சொன்னாலும் அவர் பொருட்படுத்த மாட்டார். ஆனால் தனது பதவியையோ சமூக அந்தஸ்தையோ கேலியாய்க் கிண்டினால் தாங்கமாட்டார். நகைச்சுவை நாடகங்களில்கூட இளநிலை அதிகாரிகளைக் கிண்டல் கேலி செய்வதை அனுமதிக்கலாம், அவர்களுடைய மேலதிகாரிகளை எள்ளல் செய்ய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பது அவரது திடமான கருத்து.
ஆணையர் தன்னை நடத்திய விதத்தில் அவ்வளவு புண்பட்டுப் போனார்; மேஜர் தலையை இறுமாப்புடன் உயர்த்தினார். “ஐயன்மீர்! இவ்வளவு தூரம் அவமானப்படுத்தும் விதமாக நீங்கள் அநாகரீகமாகப் பேசிவிட்ட பிறகு, தங்களிடம் நான் சொல்வதற்கும் கேட்பதற்கும் இனி அர்த்தம் ஏதுமில்லை” என்று கண்ணியத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
நைந்த நூலாகி நொந்துபோய் வீடு திரும்பினார். இருட்டத் தொடங்கியது. பயனற்ற தேடல். அவமானம். அவரது அறை கூட அழகற்றுச் சோகையாகத் தோன்றியது. முன்கூடத்தில், அவரது பணியாள் இவான் தோல் சோபாவில் நீட்டிப் படுத்துக்கொண்டு, கூரையை நோக்கி ஏசித் துப்பி விளையாடிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அதே இடத்தில் தாக்குதல். வசை ஆட்டத்தில் கெட்டிக்காரன். பணியாளனின் அலட்டிக்கொள்ளாத நிதானம் அவருக்குக் கடுஞ் சினமூட்டியது. தொப்பியைத் தூக்கி அவனது மூக்கோடு சேர்த்து முகத்திலடித்தார். “உதவாக்கரைப் பன்றியே! எப்போதும் உனக்கு விளையாட்டுத்தானா!” என்றார்.
இவான் துள்ளியெழுந்து, எஜமானரின் மேலங்கியைக் கழற்றிவிட வந்தான்.
அறைக்குள் நுழைந்ததும், உடற்சோர்வும் உளத்தளர்ச்சியும் மேலிட, மேஜர் நாற்காலியில் பொத்தென்று விழுந்தார். சிறு ஆசுவாசம். சற்று நேரம் கழிந்ததும் பெருமூச்சுவிட்டார். பிறகு தனக்குத்தானே பேசத் தொடங்கினார்:
“கர்த்தரே! இப்படி அவலம் எனக்கு ஏன் வர வேண்டும்? ஒரு கையையோ காலையோ இழந்திருந்தால்கூடப் பரவாயில்லை. இதைவிட அதைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் மூக்கு? நாசியற்ற மனிதன்! நாதியற்றவன்! சனியனே சாத்தானே… மூக்கில்லாதவன் என்னவென்று எதற்குத்தான் ஆவான்? வெறுங் குப்பை. சன்னல் வழியாகத் தூக்கி எறியத்தான் லாயக்கு. போரிலோ, ஒற்றைக்கு ஒற்றை ஆணவச் சண்டையிலோ மூக்கைப் பறிகொடுத்திருந்தால் சரி. என் ஏதாவது தவறினால் இழந்திருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால் எப்படி என்றே தெரியாமல் காணாமல் போய்விட்டதே! இல்லையில்லை, அதற்கு வாய்ப்பில்லை. அப்படி நடக்க முடியாதே…” சில கணங்கள் யோசித்துவிட்டுத் தொடர்ந்தார். “ஒரு மூக்கு இப்படிக் காணாமல் போய்விடும் என்பதை நம்பவே முடியவில்லை. இல்லை. நடக்காது. நடக்க முடியவே முடியாது. நான் கனவு காண்கிறேன். ஏதோ மனபிரமை. சவரம் செய்த பிறகு தாடையில் தடவும் பிராந்தியைத் தண்ணீர் என்று நினைத்துக் குடித்துவிட்டேனோ? அந்த மடையன் மழிப்பாளன் இவான் அதை எடுத்துவைக்க மறந்திருப்பான். நான் குடித்திருப்பேன்.”
உண்மையிலேயே போதையில்தான் இருக்கிறோமா என்று தெரிந்துகொள்ள, மேஜர் தன்னையே கிள்ளிப் பார்த்தார். ஆனால் வாத்தி போல் பலமாகக் கிள்ளியதில் தன்னையறியாமல் அலறிவிட்டார். நன்றாக விழித்திருக்கிறோம் என்பதை அந்த வலி உறுதிப்படுத்தியது. எழுந்து பைய கண்ணாடியருகே நடந்தார். முதலில் கண்களை மூடிக்கொண்டார். திறக்கும்போது மூக்கு திடீரென்று உரிய இடத்தில் தோன்றிவிடும் என்ற நம்பிக்கை! ஆனால் கண் திறந்ததும் திடுக்கிட்டுப் பின்னால் நகர்ந்தார். “என்ன கோரம்!”
உண்மையாகவே புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பொத்தானைத் தொலைக்கலாம்; வெள்ளிக் கரண்டியை, காசை, கடிகாரத்தைத் தொலைக்கலாம். ஆனால் இது? இப்படியொரு இழப்பு! அதுவும் சொந்த மூஞ்சியிலேயே! எல்லாச் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் யோசித்துப் பார்த்தார் மேஜர். தனக்கு நேர்ந்த துன்பம் அனைத்துக்கும் கர்னலின் மனைவி சீமாட்டி பொத்தோச்சினாதான் காரணமாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் முளைத்தது. ஐயம் வலுவாகியது. தன் மகளை மேஜர் மணந்துகொள்ள வேண்டுமென்று அந்தச் சீமாட்டி விரும்பினார். தாய்க்காரிக்கு மேஜர் உறுதிதரவில்லை. ஆனால் கோவல்யோ மகளிடம் விருப்பக் காதல் போல் ஈர்த்து விலக்கிப் செல்லப்பேச்சில் சீண்டி விளையாடுவார்; ஆனால் விஷயத்துக்கு வருவதை மட்டும் எப்போதும் தவிர்த்துவிடுவார். ஒருநாள் அந்த அம்மணி, தன் மகளை அவர் மணந்தே தீரவேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டபோது, மேஜர் மெல்லப் பின்வாங்கினார். மணத்துக்குரிய வயது வரவில்லை; தான் இன்னும் இளமையாக இருப்பதாகவும், நாற்பத்திரண்டு வயதை எட்டுவதற்கே இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கூறித் தப்பித்து வந்தார். அதனால்தான் பழிவாங்குவதற்காகத் தன்னை அவமானத்துக்கு ஆளாக்க அந்தப் பெண்மணி தீர்மானித்து, இரண்டு சூனியக்காரிகளைக் கூலிக்குப் பிடித்து ஏவியிருக்க வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம்: அவரது மூக்கு அறுக்கப்படவில்லை. அவரது அறைக்குள் யாரும் நுழையவில்லை. இவானிடம் புதன்கிழமைதான் சவரம் செய்துகொண்டார். அன்று முழுவதும், வியாழக்கிழமை முழுவதும்கூட மூக்கு இருந்தது. அது அவருக்குத் தெரியும்; நன்றாக நினைவுமிருக்கிறது. மேலும் மூக்கு அறுபட்டிருந்தால் வலித்திருக்கும். காயமும் இவ்வளவு விரைவாக ஆறியிருக்க முடியாது. அந்த இடமும் இவ்வளவு தட்டையாக இருந்திருக்காது. “அடையைப்போல!” என்னவோர் உவமை! அந்த நரைத் தலையன் ஒழிக!
விதவிதமான எண்ணங்கள் யோசனைகள் அவர் மனத்தில் ஓடின. கர்னல் மனைவி மீது வழக்குத் தொடர்வதா? அல்லது நேரில் போய் துரோகி என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுவதா?
கதவின் இடுக்குகள் வழியாகத் திடீரென ஒளி பாய்ந்து அவரது சிந்தனையைக் கலைத்தது. முன்கூடத்தில் இவான் மெழுகுவத்திகளை ஏற்றியிருந்தான். சற்று நேரத்தில் அவனே மெழுகுவத்திகளுடன் உள்ளே வந்தான். தன் எஜமானரின் விசித்திரமான தோற்றத்தைக் கண்டு அந்த மடையன் வாயைப் பிளந்து பார்க்காமலிருக்க, கோவல்யோவ் அவசரமாகக் கைக்குட்டையை எடுத்து, முந்தைய மாலைவரை மூக்கு இருந்த இடத்தை மூடிக்கொண்டார்.
இவான் முன்கூடத்துக்குத் திரும்பியதுதான் தாமதம், அங்கே ஒரு புதியவரின் குரல் கேட்டது.
“மேஜர் கோவல்யோவ் இங்கேதான் வசிக்கிறாரா?”
“உள்ளே வாருங்கள்!” என்று சொல்லிக்கொண்டே வேகமாக எழுந்து கதவைத் திறந்தார் மேஜர்.
நரைக் கிருதாவும் ஓரளவே உப்பிய கன்னங்களுமாக, இணக்கமான தோற்றம் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி நின்றிருந்தார். இந்தக் கதையின் தொடக்கத்தில் ஐசக் பாலத்தின் முனையில் நின்றிருந்த அதே அதிகாரிதான். “உங்கள் மூக்கு காணாமற்போய்விட்டதா?” என்று கேட்டார்.
“ஆமாம், அதேதான்.”
“இப்போதுதான் அது கிடைத்தது.”
“என்ன… என்ன சொல்கிறீர்கள்?” என்று மேஜர் திக்கித் திணறினார்.
மகிழ்ச்சி சட்டென அவரது நாவைச் செயலிழக்கச் செய்துவிட்டது. மெழுகுவத்தியின் அசைந்தாடும் ஒளி அந்தக் காவல் அதிகாரியின் கன்னங்களிலும் தடித்த உதடுகளிலும் விழுந்தது. அவரை வெறித்துப் பார்த்தார்.
“எப்படிக் கிடைத்தது?” என்று கடைசியில் கேட்டார்.
“விசித்திரமான ஒரு தற்செயலால்தான். ரீகாவுக்குச் செல்லும் வண்டியில் ஏறிக்கொண்டிருந்தபோது அந்த மூக்கு கைது செய்யப்பட்டது. அதன் பயண அனுமதிச்சீட்டு ஏற்கெனவே ஓர் அதிகாரியின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இன்னும் விசித்திரம் என்னவென்றால், நானே முதலில் அந்த மூக்கைக் கனவான் என்றுதான் நினைத்தேன். உயர்மட்ட ஆலோசர் என்றும். நல்லவேளையாக என்னிடம் புலனாய்வுக் கண்ணாடி இருந்தது. அதை மாட்டிக்கொண்டதும், அது மூக்குதான் என்று உடனே தெரிந்துவிட்டது. எனக்குக் கிட்டப்பார்வை, தெரியுமா? இப்போது நீங்கள் எனக்கு முன்னால் நிற்கிறீர்கள். ஆனால் உங்கள் மூக்கோ தாடியோ வேறெதுவுமோ எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. என் மாமியாருக்கு ஏறக்குறையக் கண்ணே தெரியாது.”
கோவல்யோவுக்குப் பரபரப்பில் தலைகால் புரியவில்லை. “எங்கே இருக்கிறது? எங்கே? உடனே அங்கே ஓடுகிறேன்.”
“சிரமப்பட வேண்டாம். உங்களுக்குத் தேவைப்படும் என்று தெரிந்து, நானே கொண்டுவந்திருக்கிறேன். இன்னொரு விசித்திரம் என்னவென்றால், இந்த விவகாரத்தின் முக்கியக் குற்றவாளி அசென்ஷன் நிழற்சாலையில் வசிக்கும் ஒரு போக்கிரிச் சவரக்காரன். இப்போது பத்திரமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். அந்தக் குடிகாரன் திருடவும் கூடும் என்று எனக்கு வெகுநாளாகவே சந்தேகம். முந்தாநாள்கூட ஒரு கடையில் சில பொத்தான்களைத் திருடியிருக்கிறான். சரி. உங்கள் மூக்குக்கு ஒரு சேதமும் இல்லை.” இப்படிச் சொன்ன அதிகாரி பைக்குள் கையை விட்டு, காகிதத்தில் சுற்றியிருந்த மூக்கை வெளியே எடுத்தார்.
“ஆமாம் ஆமாம், இதுதான்!” என்று கோவல்யோவ் கத்தினார். “என்னுடன் ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டுப் போகலாமே?”
“விருப்பம்தான். ஆனால் முடியாது. உடனே சீர்திருத்தச் சிறைக்குப் போக வேண்டும். இப்போதெல்லாம் வாழ்க்கைச் செலவு மிகவும் கூடிவிட்டது. என் மாமியாரும் என்னுடன்தான் இருக்கிறார். நிறையப் பிள்ளை குட்டிகள். மூத்தவன் வெகுபுத்திசாலி, நன்றாக வரக்கூடியவன். ஆனால் அவர்களைப் படிக்க வைக்க என்னிடம் வசதி இல்லை.”
அதிகாரி திருப்தியாகச் சென்ற பிறகும் கோவல்யோவ் சற்று நேரம் தெளிவற்ற கனவுநிலையில் மூழ்கியிருந்தார். எதிர்பாராத இந்த நற்செய்தியின் தாக்கம் அவ்வளவு அதிகமாக இருந்ததால், இயல்பு நிலைக்குத் திரும்பவே சில கணங்கள் பிடித்தன. மீண்டும் கிடைத்த மூக்கை உள்ளங்கையில் கவனமாக வைத்துக்கொண்டு, மிகுந்த அக்கறையுடன் மறுபடியும் ஆராய்ந்தார்.
“ஆம், இதுதான்… என்னுடையது தான்!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். “நேற்று வந்த சூட்டுக்கட்டி இதோ இடப்பக்கத்தில் இருக்கிறதே.” மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்துவிடலாம் போலிருந்தது.
ஆனால் இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை. வந்த முதல் கணத்தில் இருந்த மகிழ்ச்சியின் பூரிதம் மறுகணத்திலேயே வற்றுகிறது. மூன்றாம் கணத்தில் மேலும் மங்குகிறது. நீரில் கூழாங்கல் விழுந்ததும் எழும் வட்ட அலைகள் மெல்ல அடங்குவதைப்போல, இறுதியில் அது நமது இயல்பான மனநிலையோடு கலந்துவிடுகிறது. மேஜர் யோசிக்கத் தொடங்கினார். சிரமங்கள் இன்னும் முடிந்துவிடவில்லை என்பது புரிந்தது. மூக்கு கிடைத்துவிட்டது. ஆனால் அதை மறுபடியும் உரிய இடத்தில் பொருத்தியாக வேண்டுமே.
ஒருவேளை பொருத்த முடியாவிட்டால்? இந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டதும் கோவல்யோவின் முகம் வெளிறியது. விவரிக்க முடியாத அச்சத்துடன் ஒப்பனை மேஜைக்கு விரைந்தார். மூக்கைக் கோணலாகப் பொருத்திவிடக் கூடாதென்று கண்ணாடி முன்னால் நின்றார். கைகள் நடுங்கின.
முன்பு இருந்த இடத்தில் அதை மிகக் கவனமாக வைத்தார். என்ன கொடுமை! அது அங்கே நிற்கவில்லை. வாயருகில் கொண்டுபோய் மூச்சுக்காற்றால் சற்றே சூடாக்கி, மீண்டும் பொருத்தினார். அப்போதும் ஒட்டவில்லை.
“மூக்கே! ஒட்டிக்கொள் முட்டாளே!” என்று கத்தினார்.
ஆனால் மூக்கு மரத்தால் ஆனது போலிருந்தது. தக்கை விழுவதைப்போன்ற ஒரு விசித்திரமான ஓசையுடன் மீண்டும் மேசையில் விழுந்தது. மேஜரின் முகம் படபடவெனத் துடித்தது. “இது ஒட்டவே ஒட்டாதா?” என்று அச்சத்துடன் கேட்டுக்கொண்டார். ஆனால் எத்தனை முறை முயன்றாலும் அத்தனை முயற்சிகளும் வீணாயின.
இவானைக் கூப்பிட்டார். அந்த வளாகத்தின் மிகச் சிறந்த குடியிருப்பில் வசித்த மருத்துவரை அழைத்துவரச் சொன்னார். இந்த மருத்துவருக்கு அபாரமான கருநிறக் கிருதா. கம்பீரமான தோற்றம். ஆரோக்கியமான மனைவி. அவளுக்கு அப்படியோர் அற்புத அழகு! நாளது காலையிலும் புத்தம்புதிய ஆப்பிள்களைக் கடிப்பார். தினமும் ஐந்து விதமான பற்தூரிகைகளைப் பயன்படுத்தி இரவில் முக்கால் மணி நேரம் மிகு கவனமாகப் பற்களைத் துலக்குவார் என்று கேள்வி. மனைவியா மருத்துவரா?
மருத்துவர் உடனே வந்தார். இந்த இடையூறு எப்போது நேர்ந்தது என்று மேஜரிடம் கேட்டுவிட்டு, அவரது தாடையைப் பிடித்து உயர்த்தி, மூக்கு இருந்த இடத்தில் விரலால் ஒரு சுண்டு சுண்டினார். மேஜரின் தலை சட்டெனப் பின்னால் சென்று சுவரில் மோதியது. அதைப் பொருட்டாக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறினார். பிறகு முகத்தை வலப்பக்கம் திருப்பச் சொல்லி, வெற்றிடத்தைத் தடவிப் பார்த்து “ம்!” என்றார். இடப்பக்கம் திருப்பச் சொல்லியும் அதையே செய்தார். கடைசியில் மறுபடியும் விரலால் சுண்டினார். பற்களைச் சோதிக்கும்போது குதிரையைப்போல இளித்த மேஜர் திடுக்கிட்டுத் துள்ளினார். இந்தச் சோதனைக்குப் பிறகு மருத்துவர் தலையைக் குறுக்காக அசைத்து மறுத்தார். “இல்லை. முடியாது. இதைவிட மோசமாக ஏதும் நேராமல் இருக்க, இப்போது இருப்பதுபோலவே இருந்துவிடுவது நல்லது. நிச்சயமாக உடனே அறுத்துப் பொருத்தித் தைத்துவிடலாம். ஆனால் நோயைவிடச் சிகிச்சை மோசமாகிவிடும். அது உறுதி” என்றார்.
“அதெல்லாம் சரிதான். ஆனால் மூக்கு இல்லாமல் நான் எப்படி வாழ்வது?” என்று மேஜர் கேட்டார். “இதைவிட மோசமானது வேறென்ன இருக்கிறது? இப்படியொரு அவலட்சணத்துடன் நான் எப்படி வெளியே தலைகாட்ட முடியும்? உயர்மட்ட கனவான்களோடு பழகுகிறவன் நான். இன்று மாலையே இரண்டு விருந்துகளுக்கு அழைப்பு. பல மேட்டுக்குடிப் பெண்களை எனக்குத் தெரியும். அரசாங்க ஆலோசகர் மனைவி சீமாட்டி செக்திரியேவ், கர்னல் மனைவி சீமாட்டி பொத்தோச்சினா… என்றாலும், அவள் செய்த காரியம்! இனி போலீசிடம் போவேன். நீதிமன்றம் மூலமாகவே பேசுவேன். அவளது சங்காத்தமே வேண்டாம்.”
“உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மன்றாடும் குரலில் தொடர்ந்தார் “எப்படியாவது மூக்கைப் பொருத்த ஒரு வழி கண்டுபிடியுங்கள். முழு உறுதியாக நிற்காவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ கொஞ்சம் ஒட்டிக்கொண்டால் போதும். ஆபத்தாக விழும் என்று தோன்றும்போது கையால் பிடித்துக்கொள்கிறேன். அவ்வப்போது தொல்லை என்றாலும் சரி. தவிர, நான் நடனம்கூட ஆடுவதில்லை. எனவே திடீர் அசைவால் மூக்கு நிலை பிறழ வாய்ப்பில்லை. உங்கள் கட்டணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். என்னால் குளிரக் கொடுக்க முடியும்.”
“என்னை நம்புங்கள்” என்று மருத்துவர் பதிலளித்தார். உரக்காமல் தணியாமல் ஒலித்தது அவர் குரல். மென்மையான மயக்கும் தன்மையான குரல். “பணத்தாசையில் நான் நோயாளிகளுக்குக் குணமளிப்பதில்லை. அது என் கொள்கைக்கு மாறானது, என் கலைக்கும் எதிரானது. கட்டணம் வாங்குவேன் என்பது மெய்தான். ஆனால் அதை மறுப்பதால் நோயாளிகளின் மனத்தைப் புண்படுத்தலாகாது என்பதற்காகத்தான். உங்கள் மூக்கை என்னால் நிச்சயமாகப் பொருத்த முடியும். ஆனால் என் கௌரவத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்! அது உங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும். இயற்கை தன் வேலையைச் செய்யட்டும். அந்த இடத்தை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுங்கள். மூக்கு இருந்தால் எப்படி நலமாக இருப்பீர்களோ, மூக்கு இல்லாமலும் அப்படியே இருப்பீர்கள் என்று உறுதியளிக்கிறேன். மூக்கைப் பொறுத்தவரை, அதைச் சாராயம் நிரப்பிய பாட்டிலில் பாதுகாத்து வையுங்கள். இரண்டு கரண்டி பிராந்தி கலந்த வெதுவெதுப்பான வினிகரில் போட்டு வைத்தால் இன்னும் நல்லது. பிறகு நல்ல விலைக்கு விற்கலாம். அளவுக்கு அதிகமாகக் கேட்காவிட்டால் நானே விலைக்கு வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”
“வேண்டாம் வேண்டாம். எந்த விலைக்கும் நான் விற்கமாட்டேன். அதற்குப் பதில் மறுபடியும் தொலைந்தே போகட்டும்.”
“மன்னிக்கவும்” என்று மருத்துவர் விடைபெற்றார். “உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இதற்குமேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என் நல்லெண்ணத்தை மட்டுமாவது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்.” கம்பீரமாக அறையிலிருந்து வெளியேறினார்.
அவர் வெளியேறுவதைக்கூட கோவல்யோவ் கவனிக்கவில்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த அவரது பார்வையில், மருத்துவரின் கருப்புக் கோட்டுக் கைகளுக்கு வெளிப்புறமாக நீண்டிருந்த பனிவெண்மையான சட்டை மணிக்கட்டுப் பட்டைகளின் விளிம்புகள் மட்டுமே பட்டன.
மறுநாள், முறையாக வழக்குத் தொடர்வதற்கு முன்பாகக் கர்னலின் மனைவிக்குக் கடிதம் எழுதிப் பார்ப்பதென்று மேஜர் முடிவுசெய்தார். தன்னிடமிருந்து பறித்துக்கொண்டதை மேலும் சச்சரவில்லாமல் அவள் திருப்பித் தருகிறாளா என்று பார்க்கலாம்.
கடிதம் பின்வருமாறு:
திருமதி அலெக்சாந்திரா பொத்தோச்சினா அவர்களுக்கு,
தாங்கள் நடந்துகொள்ளும் விதத்தை என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வழியில் தாங்கள் எதையும் சாதிக்க முடியாது. தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும்படி வற்புறுத்துவதிலும் நிச்சயமாக வெற்றிபெற முடியாது. இதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய மூக்கு சம்பந்தப்பட்ட விவகாரம் இப்போது பலரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. அதில் முக்கியப் பங்கு வகித்தவர் தாங்கள்தான், வேறு யாருமல்ல. இதை நம்புங்கள். அது இருந்த இடத்திலிருந்து எதிர்பாராமல் பிரிந்துபோனது, தப்பியோடியது. சில நேரங்களில் ஓர் அதிகாரியின் வேடத்திலும் பிற வேளைகளில் சொந்த உருவத்திலும் தோன்றியது. இவையெல்லாம் தாங்களோ தங்களைப்போலவே இத்தகைய கண்ணியமான தொழில்களில் ஈடுபாடுடையவர்களோ செய்த துர்மந்திரங்களின் தீயவிளைவே அன்றி வேறல்ல. மேற்கூறிய மூக்கு இன்றைக்குள் அதன் உரிய இடத்தில் மீண்டும் பொருத்தப்படாவிட்டால், சட்ட நடவடிக்கையை நாட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படும் என்பதை என் தரப்பிலிருந்து தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
மற்றபடி, எல்லா மதிப்பு மரியாதைகளுடனும் தங்களின் பணிவான ஊழியனாக இருப்பதைப் பெருமையாகக் கருதும்,
பிளாத்தோன் கோவல்யோவ்.
பதில் வருவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அது பின்வருமாறு இருந்தது:
மேஜர் பிளாத்தோன் கோவல்யோவ் அவர்களுக்கு,
தங்கள் கடிதம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. இவ்வளவு அநியாயமான குற்றச்சாட்டுகளைத் தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தாங்கள் குறிப்பிடும் அதிகாரி வேடமிட்டோ, சொந்த உருவத்திலோ என் வீட்டுக்கு யாரும் வரவே இல்லை என்று உறுதியளிக்கிறேன். பிலிப் இவானவிச் பொதான்சிகோவ் என் வீட்டுக்கு வந்துபோயிருக்கிறார் என்பது உண்மைதான். அவர் உண்மையாகவே என் மகளைப் பெண் கேட்டிருக்கிறார். நல்வளர்ப்பும் கண்ணியமும் அறிவும் உடையவர்தான். இருந்தாலும் அவருக்கு நான் எந்த நம்பிக்கையையும் அளிக்கவில்லை.
மேலும், ஏதோ ஒரு மூக்கைப் பற்றி என்னவோ சொல்கிறீர்கள். அதாவது என் மகளை ஏற்க மறுப்புத் தெரிவித்ததற்காகத் தங்களை அவமதிக்க, தங்கள் மூக்கை நான் அறுத்ததாகச் சொல்கிறீர்கள் என்றால், அது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் என் எண்ணம் அதற்கு முற்றிலும் நேர்மாறானது என்பதைத் தாங்களே நன்கு அறிவீர்கள். இதற்குப் பிறகும் தாங்கள் என் மகளைப் பெண் கேட்க விரும்பினால், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சியடைவேன். அதுவே என் பெருவிருப்பாகவும் இருந்து வருகிறது. அது நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன், தங்களுக்கு உண்மையுள்ள,
அலெக்சாந்திரா பொத்தோச்சினா.
“இல்லை” என்று கடிதத்தை மறுபடியும் வாசித்துவிட்டுக் கோவல்யோவ் முனகினார். “நிச்சயமாக அவள் குற்றவாளி இல்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு குற்றவாளியால் இப்படியொரு கடிதத்தை எழுத முடியாது.” இம்மாதிரியான விவகாரங்களில் குழு உறுப்பினரான நமது மேஜர் அனுபவம் உள்ளவர். காகசஸில் இருந்தபோது குற்றவியல் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரபூர்வமாகப் பலமுறை போயிருக்கிறார். “அப்படியானால், இது எப்படி நடந்தது? விதியின் எவ்வசம்? எந்தச் சூழ்ச்சியால் நடந்தது?” என்று சோர்வுடன் சைகை செய்தபடி தனக்குள் கேட்டுக்கொண்டார். “இதன் பின்னால் சாத்தானின் கைதான் இருந்திருக்கும்.”
இதற்கிடையில் இந்த அசாதாரணச் சம்பவத்தைப் பற்றிய வதந்தி நகரமெங்கும் பரவிவிட்டது. வழக்கம்போலவே ஏராளமான பிற்சேர்க்கைகளும் புனைவாற்றலும் அவற்றில் இருந்தன. அந்தக் காலத்தில் அதிசயங்களை நம்பும் மனப்போக்கு பொதுவாகவே நிலவியது. அண்மையில் நடைபெற்ற காந்த சக்தி குறித்த சோதனைகள் மக்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன. கொன்யுஷென்யா தெருவில் நாற்காலிகள் மிதந்த கதை இன்னும் பழையதாகி விடவில்லை. அதன் பிறகு, தினமும் மூன்று மணிக்கு மேஜர் கோவல்யோவின் மூக்கு நெவ்ஸ்கி நிழற்சாலையில் உலாவுவதைக் காணலாம் என்று சொல்லப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. அதைப் பார்க்கும் ஆர்வத்தில் தினந்தோறும் கூடிய கூட்டம் கூடுதலாகவே இருந்தது. ஒருமுறை மூக்கு யுங்கரின் கடையில் இருப்பதாக யாரோ சொல்லிவிட்டார்கள். உடனே அவ்வளவு கூட்டம் அந்தக் கடையை முற்றுகையிட்டது; போலீசார் தலையிட்டு ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியதாயிற்று. நாடக அரங்கின் வாசலில் கேக் விற்கும் சந்தர்ப்பவாதி ஒருவர் இருந்தார். கிருதாவுடன் கம்பீரமான முகம் கொண்ட அவர், உறுதியான மரப்பெஞ்சுகள் சிலவற்றைச் செய்வித்து, கடையின் கண்ணாடிச் சன்னலுக்கு முன்னால் போட்டார். அவற்றின் மீது ஏறி உள்ளே பார்க்கும்படி பொதுமக்களை அன்புடன் அழைத்தார். கட்டணம் வெறும் இருபத்துநான்கு கோபெக்குகள். அனுபவமிக்க கர்னல் ஒருவர், இதைப் பார்ப்பதற்காகவே வழக்கத்தைவிடச் சீக்கிரமாக வீட்டைவிட்டுக் கிளம்பி வந்தார். மிகுந்த சிரமத்துடன் கூட்டத்தை முழங்கைகளால் விலக்கிக்கொண்டு முன்னேறினார். ஆனால் கடைச் சன்னலில் சாதாரணமான ஒரு கம்பளி அரைக்கோட்டும் வண்ணக் கல்லச்சுப் படமும் மட்டுமே இருப்பதைக் கண்டு கடுங்கோபமடைந்தார். அந்தப் படத்தில் ஓர் இளம்பெண் காலுறையின் கிழிசலைத் தைத்துக்கொண்டிருந்தாள். அகலமான மடிப்புகளைக் கொண்ட அரை கோட் அணிந்த நேர்த்தியான இளைஞன் ஒருவன், மரத்துக்குப் பின்னாலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் படம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில்தான் தொங்கியது. “இப்படிப்பட்ட முட்டாள்தனமான கதைகளைக் கேட்டு இந்த மடையர்கள் எப்படி இவ்வளவு பரபரப்படைகிறார்கள்?” என்று உரத்து முணுமுணுத்துக்கொண்டே கர்னல் திரும்பிப் போனார்.
பிறகு இன்னொரு வதந்தி பரவியது. மேஜர் கோவல்யோவின் மூக்கு நெவ்ஸ்கி நிழற்சாலையில் அல்ல, தாவ்ரிஸ் தோட்டத்தில்தான் வழக்கமாக உலாவுகிறதாம். அறுவை சிகிச்சைக் கல்விக்கழகத்தின் மாணவர்கள் சிலர் அதைப் பார்ப்பதற்காகவே அங்கே போனார்கள். உயர்குடிச் சீமாட்டி ஒருவர், இந்த அரிய அதிசயத்தைத் தன் குழந்தைகளுக்குக் காட்டி, அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான விளக்கங்களையும் அளிக்க வேண்டுமென்று தோட்டப் பொறுப்பாளருக்குக் கடிதம் எழுதினார்.
இந்தச் சம்பவங்களை எல்லாம் நகரத்தின் நகைச்சுவைப் பேச்சாளர்கள் ஆர்வமாகச் சேகரித்துக் கொண்டார்கள். பெண்களை மகிழ்விக்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்குத் தற்சமயம் அவர்களிடம் பெரும் தட்டுப்பாடு இருந்தது. மாறாக, நிதானமும் விவேகமும் கொண்ட சொற்பமானவர்களுக்கோ கடும் அதிருப்தி ஏற்பட்டது. அறிவொளி பெற்ற நமது காலத்தில் இப்படிப்பட்ட அபத்தங்கள் எப்படிப் பரவுகின்றன என்பது தனக்குப் புரியவே இல்லை என்று ஒரு கனவான் மிகுந்த கோபத்துடன் கூறினார். அரசாங்கம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாதது அவருக்கு வியப்பளித்தது. எல்லாவற்றிலும், கணவன் – மனைவி அன்றாடப் பிணக்குகளில்கூட, அரசாங்கம் தலையிட வேண்டும் என்று விரும்புகிற வகையைச் சேர்ந்தவர் இந்தக் கனவான் என்பது தெளிவு.
ஆனால் இங்கே நிகழ்வுகளின் போக்கை மீண்டும் ஒரு திரை மறைத்துவிடுகிறது.
III
இந்த உலகத்தில் விசித்திரமான நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. சில வேளைகளில் முற்றிலும் நம்ப முடியாதவையும் நடக்கின்றன. அரசாங்க உயர் ஆலோசகராக வேடம் போட்டுக்கொண்டு, நகரத்தில் இவ்வளவு பரபரப்பை உண்டாக்கிய அதே மூக்கு, ஒருநாள் காலையில் ஒன்றுமே நடக்காததுபோலத் தனது உரிய இடத்தில் இருந்தது. அதாவது, மேஜர் கோவல்யோவின் இரண்டு கன்னங்களுக்கு நடுவில்.
இது நடந்தது ஏப்ரல் 7 அன்று. விழித்தெழுந்த மேஜர் தற்செயலாகக் கண்ணாடியைப் பார்த்தார். ஒரு மூக்கு தெரிந்தது. சட்டெனக் கையை வைத்துப் பார்த்தார். சந்தேகமே இல்லை. அது அங்கேதான் இருந்தது!
“ஓ!” என்று கோவல்யோவ் கத்தினார். மகிழ்ச்சி மிகுதியில் வெறுங்காலுடன் அறையெங்கும் நடனமாடிவிட இருந்தார். இவான் உள்ளே வந்தது அவரைத் தடுத்துவிட்டது. தண்ணீர் கொண்டுவரச் சொல்லி முகத்தைக் கழுவிக்கொண்டு, மீண்டும் கண்ணாடியில் பார்த்தார். மூக்கு இருந்தது! பிறகு துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தார். ஆம், தவறே இல்லை! அது அங்கே இருந்தது!
“இவான், இதோ பார். என் மூக்கில் ஒரு சூட்டுக்கட்டி இருப்பதுபோலத் தோன்றுகிறது” என்று பணியாளனிடம் சொன்னார்.
அதே நேரத்தில் ‘இல்லை ஐயா, கட்டி இல்லை என்பது மட்டுமல்ல; உங்கள் மூக்கே இல்லை’ என்று இவான் சொல்லிவிட்டால் கதை கந்தலாகிவிடும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்.
ஆனால் இவான் “ஒன்றுமில்லை ஐயா. உங்கள் மூக்கில் கட்டி எதுவும் தெரியவில்லை” என்று பதிலளித்தான்.
“நல்லது! நல்லது!” என்று மேஜர் மகிழ்ச்சியுடன் விரல்களைச் சொடுக்கினார்.
அந்த நேரத்தில் சவரக்காரன் இவான் யாக்கவ்லெவிச் வாசல் வழியாகத் தலையை நீட்டினான். பன்றிக்கொழுப்பைத் திருடி இப்போதுதான் அடி வாங்கிய பூனையைப் போல அஞ்சி ஒடுங்கியிருந்தான்.
“முதலில் இதைச் சொல். உன் கைகள் சுத்தமாக இருக்கின்றனவா?” என்று அவனைக் கண்டதும் கோவல்யோவ் கேட்டார்.
“ஆமாம் ஐயா.”
“பொய் சொல்கிறாய்.”
“சத்தியமாகச் சொல்கிறேன் ஐயா. அதிசுத்தம்.”
“சரி. அப்படியானால் இங்கே வா.”
கோவல்யோவ் உட்கார்ந்தார். யாக்கவ்லெவிச் அவரது தாடைக்குக் கீழே துணியைக் கட்டி, இமைப்பொழுதில் தாடியிலும் கன்னங்களிலும் பாலேடு போன்ற சோப்பு நுரையைப் பூசினான்.
‘இதோ இருக்கிறதே!’ என்று மூக்கைப் பார்த்துக்கொண்டே சவரக்காரன் தனக்குள் சொல்லிக்கொண்டான். பிறகு தலையைச் சற்றே சாய்த்து, ஒரு பக்கமாக ஆராய்ந்தான். ‘ஆம், உண்மையாகவே மூக்குதான். நினைத்துப் பார்த்தால், நிஜமாகவே…’ அதையே பார்த்தபடி மனத்துக்குள் பேசிக்கொண்டிருந்தான். பிறகு வழக்கம்போல அதன் நுனியைப் பிடிப்பதற்காக, மிக மெதுவாகவும் அதி எச்சரிக்கையுடனும் இரண்டு விரல்களை உயர்த்தினான்.
“ஏய், பார்த்து!” என்று கோவல்யோவ் கத்தினார்.
இவான் யாக்கவ்லெவிச் கையைத் தாழ்த்திக்கொண்டான். வாழ்நாளிலேயே உணர்ந்திராத அளவுக்குச் சங்கடமாக இருந்தது. கடைசியில் மேஜரின் தாடையில் மிக மெதுவாகக் கத்தியால் மழிக்கத் தொடங்கினான். முகரும் உறுப்பைப் பிடிமானமாகப் பயன்படுத்தாமல் சவரம் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. இருந்தாலும் சுருக்கம் விழுந்த தன் கட்டைவிரலை மேஜரின் கீழ்த்தாடையிலும் கன்னத்திலும் ஊன்றிக்கொண்டு, எல்லாத் தடைகளையும் வென்று, வேலையைச் சீராக முடித்தான்.
சவரம் முடிந்ததும் கோவல்யோவ் அவசரமாக உடையணிந்து, வாடகைக் குதிரைவண்டியில் ஏறி நேராக இனிப்புக் கடைக்குச் சென்றார். உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பை சாக்லெட் பானம் கொண்டுவரச் சொன்னார். பிறகு நேராகக் கண்ணாடியருகே சென்றார். மூக்கு இருந்தது!
மகிழ்ச்சியுடன் திரும்பி, கடையிலிருந்த யாரோ இரண்டு அதிகாரிகளையும் ஏளனமாகப் பார்த்தார். அவர்களில் ஒருவரின் மூக்கு, அரைக்கோட்டுப் பொத்தானைவிடப் பெரிதாக இல்லை.
அதன்பிறகு மாநிலத் துணை ஆளுநர் பதவிக்கோ வேறு அரசாங்கப் பதவிக்கோ விண்ணப்பித்திருந்த துறையின் அலுவலகத்துக்குச் சென்றார். வரவேற்புக் கூடத்தைக் கடக்கும்போது கண்ணாடியில் ஒரு பார்வை பார்த்தார். மூக்கு இருந்தது! பிறகு இன்னொரு குழு உறுப்பினரைச் சந்திக்கப் போனார். கிண்டலாகப் பேச ஆசைப்படுகிறவர் அவர். அவரது கேலிக்குப் பதிலாக “ஆம், தெரியும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலேயே நீங்கள்தான் மிகப் பெரிய நகைச்சுவையாளர்” என்று சொல்வது கோவல்யோவின் வழக்கம்.
போகும் வழியில் தனக்குள் சொல்லிக்கொண்டார்: ‘என்னைப் பார்த்ததும் அந்த மேஜர் விழுந்து விழுந்து சிரிக்காவிட்டால், எல்லாமே வழக்கமான இடத்தில் இருக்கின்றன என்பதற்கு அதுவே உறுதியான அடையாளம்.’
ஆனால் அந்த மேஜர் எதுவும் சொல்லவில்லை. ‘மிகவும் நல்லது!’ என்று கோவல்யோவ் நினைத்துக்கொண்டார்.
திரும்பி வரும்போது திருமதி பொத்தோச்சினாவையும் அவரது மகளையும் சந்தித்தார். அவர்களுடன் பேச்சுக் கொடுத்தார். அவர்களும் இயல்பாக அன்பாகப் பேசினார்கள். உரையாடல் நீண்ட நேரம் தொடர்ந்தது. இடையிடையே சிட்டிகை சிட்டிகையாக மூக்குப்பொடியை எடுத்து இழுத்துக்கொண்டே ‘இல்லை, மாய்மாலக்காரிகளே! இன்னும் நான் உங்கள் வலையில் சிக்கவில்லை. வசியக்காரிகளே! மகளை என்ன செய்யப் போகிறீர்கள்? நான் இவளை மணந்துகொள்வதா? மாட்டவே மாட்டேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
அதன்பிறகு, ஒன்றுமே நடக்காததுபோல மேஜர் நெவ்ஸ்கி நிழற்சாலையில் உலாவுவதையும் நாடக அரங்குக்குச் செல்வதையும் மீண்டும் தொடர்ந்தார். மூக்கும் ஒருபோதும் அந்த இடத்தைவிட்டுப் போகாததுபோல அங்கேயே இருந்தது. அப்போதிலிருந்து எப்போது பார்த்தாலும் அவர் புன்னகையும் குதூகலமுமாக இருந்தார்; அழகான இளம்பெண்களிடம் நாட்டம் காட்டிக்கொண்டிருந்தார்.
IV
நமது பரந்த சாம்ராஜ்யத்தின் வடக்குத் தலைநகரில் நடந்த சம்பவம் இதுதான். இதைக் கவனமாகப் பரிசீலித்தால் நம்ப முடியாத பல அம்சங்கள் இதில் இருப்பது தெரிகிறது. மூக்கு விசித்திரமாகக் காணாமற்போனதையும், அரசாங்க ஆலோசகர் வேடத்தில் பல இடங்களில் தோன்றியதையும் விட்டுவிடுவோம். தொலைந்த மூக்குக்கு விளம்பரம் கொடுப்பது கண்ணியமான காரியமல்ல என்பது கோவல்யோவுக்கு எப்படிப் புரியாமல் போனது? விளம்பரத்துக்கு அதிகம் பணம் செலவாகியிருக்கும் என்று நான் சொல்லவில்லை. அது அற்ப விஷயம். பணத்துக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பவன் நானல்ல. ஆனால் இப்படிப்பட்ட விஷயத்தில் விளம்பரம் கொடுப்பது முறையானதுமல்ல, பொருத்தமானதுமல்ல.
இன்னொரு சிக்கல்: சுட்ட ரொட்டிக்குள் மூக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தது? இவான் யாக்கவ்லெவிச்சே எப்படி… இல்லை, எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
ஆனால் எல்லாவற்றையும்விடப் புரிந்துகொள்ள முடியாதது, எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட விஷயங்களைத் தங்கள் கதைகளுக்கு எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான். அது என் புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. முதலாவதாக, இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. இரண்டாவதாக, எந்தத் தீமையும் இல்லை.
இருந்தாலும் நன்றாக யோசித்தால், இதில் உண்மையாகவே ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எதிராக என்னதான் சொன்னாலும், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன. அபூர்வமாகத்தான் அவை உண்மையானவை. ஆனால் அவ்வப்போது நிஜமாகவே நடக்கின்றன.
– தமிழில்: அ. ராஜேந்திரன்
நிக்கொலாய் கோகோல்
நிக்கொலாய் கோகோல் (1809–1852), உக்ரைனில் பிறந்து ரஷ்ய மொழியில் எழுதிய சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், நாடகாசிரியர். நகைச்சுவையையும் விசித்திரக் கற்பனையையும் இணைத்து அதிகாரத்தின் அபத்தங்களையும் மனிதர்களின் அந்தஸ்து மோகத்தையும் சித்தரித்தவர். ‘மூக்கு’, ‘மேலங்கி’, ‘ஒரு பைத்தியக்காரனின் நாட்குறிப்பு’, ‘இறந்த ஆன்மாக்கள்’ ஆகியவை அவரது முக்கியப் படைப்புகள்.