நாவல் பகுதி

மழைவில்

சுஜாதா: 

ஏதோ பள்ளி ஆண்டு விடுமுறையைப் போல மாதக் கணக்கில் வீட்டிலேயே இருந்துவிட்டேன். கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டது. வெறுமையும் முழுமையும் ஒருசேர என்னுள் புகுந்தது. சுவர்க்கடிகாரத்தையும் தொலைக்காட்சியையும் குடும்பத்தாரையும் மாறி மாறிப் பார்த்தும் படித்தும் பொழுதுகள் கழிந்தன. மெல்ல மெல்ல தோழிகளுடன் பேசுவதும் குறைந்தது. ஆளாளுக்கு வெவ்வேறு கமிட்மெண்டில் கலந்துவிட்டார்கள். 

முதலாண்டுப் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நண்பர்களின் முகங்களில் ஏற்பட்ட மாற்றத்தை ரசித்தேன். களர்ந்த மீசையுடன் ஒல்லியாக நின்றான் அப்பு. இப்போது பெரிய ஆம்பிளையாகத் தோன்றுகிறான். தாடி முளைத்து தசை கொஞ்சம் பூசிய உடலை மனத்தில் எழுப்பிப் பார்த்தேன். அவன் அழகெல்லாம் கனவில் அளித்த ஊட்டமே என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது. 

விழுப்புரத்தில் இருந்த சந்திரா கலை அறிவியல் கல்லூரியில் உடற்செயலியல் வகுப்பெடுக்க ஆசிரியர் தேவை என்று சித்ரா சொன்னாள். கெஸ்ட் லெக்சரர். அங்கு சென்று ரெசமே தரலாம் என்று யோசித்தேன். ராஜேஷ் சொன்ன டேட்டா என்ட்ரி ஜாபுக்கு இது எவ்வளவோ தேவலை. 

இடையிடையே சாரல் போல் தீண்டிச் சென்றன அப்புவின் நினைவுகள். இல்லை அவனைத்தான் அதிகமாக நினைத்தேன். கருணையற்ற கேள்விகள் மனத்தைப் பிசைந்தன. நான் இன்னும் அவனைக் காதலிக்கிறேனா அதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா நான் தோற்றவளா என்ற கேள்விகளுக்கு என்னிடமே பதிலில்லை. காதலில் ஈடுபடாமலேயே தோற்றவள் என்பதற்கு என்னை எடுத்துக்காட்டலாம். காதலுக்காக ஒருமுறையேனும் அவனிடம் உறுதியாகப் பேசி மன்றாடினேனா இல்லையே. நனவினால் நல்காதவனைக் கனவினால் கண்டு தோற்றவள். 

அப்புவிடம் பேசுவதே இல்லை. தயக்கமா திமிரா? இரண்டும் இல்லை. அச்சமா? அவன் மீதான உணர்வுகள் மரத்துவிட்டனவா? அவனும் என்னுடன் பேசுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எப்போது பேசினாலும் நறுக்கென்று பேசிவிட்டு வைத்துவிடுகிறான். ஏதோ கஸ்டமர் கேர் சர்வீஸ் போல நானே மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டியதாக இருந்தது. 

தாஹிராவை வீட்டுச் சிறை வைத்துவிட்டார்கள். ஒருமுறை அழைத்தபோது அவள் எண்ணுக்கு அழைப்பு செல்லவில்லை. எல்லாக் காதல் கதையும் இப்படித்தான் கண்ணீரில் முடியும். தாஹிக்கும் அப்படித்தான் நிகழப்போகிறது. மகிழ்ச்சியில் முடியும் வாய்ப்புள்ள காதல்கள் ஏறத்தாழ எதுவுமே இல்லை.  

பிரவீண் முரட்டுத்தனமான தோற்றத்துடன் அலைந்தான். போட்டித் தேர்வுகளுக்குப் படித்தான் என்றுகூட கேள்விப்பட்டேன். ரம்யா போல் ஒரு பேரழகியை இழந்த ஏக்கத்தை அவனால் ஒருபோதும் ஈடுகட்ட முடியாது. காதலிக்கின்ற எல்லோரும் பாவம். நான் கனவில் அடிவாங்கியதோடு பிழைத்தேனே. எவ்வளவோ பரவாயில்லை. ஒரு நம்பிக்கையின் கீற்று எப்போதும் என் முன் விழித்திருந்தது.

சுஷ்மிக்குச் சம்மந்தமே இல்லாமல் வந்து சேர்ந்தது கெடுவினை. இல்லாவிடில் அவர்களுடைய காதல் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும். இலகுவாக ஈடேறி இருக்கும். அப்பு தாஹிரா அத்தியாயம் ஏறத்தாழ முடிந்துவிட்டது. வீட்டுச் சிறை என்றால் அதுதானே பொருள். தாஹிக்குத் திருமணம் நிகழும் புள்ளியில் எங்கள் மூவரின் தள்ளாட்டமும் முடிந்துவிடும். 

என்னை ராஜேஷும் அம்மாவும் சேர்ந்து பூட்டி வைத்தால் என்னால் என்ன செய்துவிட முடியும். தூக்கு மாட்டி உயிரை விடுவேனா. அப்புவின் பெயரை எழுதி அந்தத் தாளைக் காபியில் கலக்கி அருந்துவேனா. ஒத்திகை செய்து சினிமாவில் நிகழும் காதல்களில் மட்டுமே அத்தகைய காட்சிகள் சாத்தியம். புகைப்படத்தில் அவனுடைய தோற்றத்தை மட்டும் கத்தரித்து எரித்து காபியில் அருந்துவதை கண்மூடி நான்கைந்து முறை கற்பனை செய்து பார்த்தேன். நிஜத்திலும் சாத்தியம்தான்! சினிமாவில் இவ்வளவு காதல்கள் பேசப்படுவது நிஜத்தில் நாம் ஒன்று திரண்டு அவற்றைத் தோற்கடிப்பதால்தான். பெற்றோர் சமூகம் காதலர் உறவினர் என ஊர்கூடிக் காதலெனும் தேரை இழுத்துச் சேற்றில் தள்ளுகிறோம். இந்த நிலையில் மனத்தில் வளர்த்த ஒருதலைக் காதலுக்கெல்லாம் ஏது மரியாதை.

கல்பனாவிடம் பேசியபோது வினோதினிக்கும் சம்பத்துக்கும் இடையே இருக்கும் நெருக்கம் பற்றிச் சொன்னாள். சம்பத்தை நன்கு அறிந்தவள் என்ற முறையில் அவர்களிடையே வெறும் காமம் மட்டும்தான் இருக்கும் என்று உறுதிபடச் சொன்னாள். அது எவ்வளவோ பரவாயில்லை. வயிற்றை நிரப்பிக் கொள்ளாமல் காமப் பசியை மட்டும் தீர்த்துக்கொள்வது அவரவர் பாடு. மாய்ந்து மாய்ந்து காதலை வழிபட்டுக் கடைசியில் என்னதான் எஞ்சுகிறது. குறைந்தது உடலிச்சைகளேனும் தீரட்டும். வினோவால் அப்படி இருக்க முடியும். அதுவும் ஒருவித மனவலிமைதான். என்னால் அப்படி இருக்கவே முடியாது. உடல் ஓரிடம் மனம் வேறிடம்! சாத்தியமே இல்லை.

என் காதலும் கண்ணீரைத்தான் கொண்டுவந்தது. ஒருதலைக் காதல் என்பதால் கண்ணீரின் அளவும் வலியின் அளவும் செம்பாகம்தான். ஊமைக் குத்துகளை உள்ளேயே மறைத்துக் கொள்ளலாம் என்கிற வசதி இதில் உண்டே. ஆனால் இதன் பெருவலி எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிப்பதில் உண்டாகிறது. சமன்பாட்டில் தேவையில்லாத குறியை பொருட்படுத்துவார் யார். 

சில நாள் முன்பு செண்பகத்தோடு பேசினேன். அவள் ஏதோ மெடிக்கல் கோடிங் அலுவலகத்தில் சேரப்போவதாகச் சொன்னாள். இப்போதும் குண்டாவதற்கென அன்றாடம் மாத்திரை எடுத்துக்கொள்கிறாளாம். ‘நீ ரொம்ப யோசிச்சி ஆற்றலச் செலவிடாம இரு. தன்னால குண்டாகிடுவ’ என்றேன். 

ராபினிடம் பேசினேன். அவன் ஒருவன் மட்டும்தான் என்னிடம் இயல்பாகப் பேசினான்.  என் குடும்பத்தில் ஒருவர் விடாமல் நலம் விசாரித்தான். நிறையவே மாற்றம் தெரிந்தது அவன் பேச்சில் அணுகுமுறையில் தெளிவில். ஏற்கெனவே அவன் நிதானமானவன்தான். இருந்தாலும் இப்போது கூடுதல் முதிர்ச்சி கனிந்திருந்தது. வாழ்க்கை வெகு குறுகிய காலகட்டத்திலேயே அவனை அடித்து துவைத்துவிட்டது. அவனுக்கும் நண்பர்களிடம் பேசி மகிழ்வது தேவைதான். 

‘சுஷ்மி எப்டிடா இருக்கா?’ அந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதைத் தவிர்த்துவிட்டு என்ன கேட்டாலும் அபத்தமாகவே இருக்கும். முதலிலேயே நேரடியாகக் கேட்டுவிடுவது நல்லது. 

‘சி.எம்.சி.க்குப் பிறகு அவளோட சிந்தனையும் உடம்பும் தெம்போட இருக்க மாதிரி இருக்கு. கொஞ்ச கொஞ்சம் கஷ்டப்பட்றா. ஓவர் ஆல் லாட் பெட்டர். உனக்கு எப்டி ப் போகுது?’ அதற்கு மேல் அந்தப் பகுதியில் உரையாடலை நீட்டிக்க அவன் விரும்பவில்லை. 

‘ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. காலேஜ்ல இருந்த வரைக்கும் அதோட அருமை புரியல. முடிஞ்சதும் இன்னம் கொஞ்ச நாள் அந்த லைப் வேணும்னு அடிக்கடி தோணுது.’

‘தோணும் தோணும்’ பொருள் கூர்மையுடன் சிரித்தான். ‘மாப்பிள்ளை பார்க்கும் படலம்லாம் எப்டி இருக்கு?’

’அந்த இம்ச இல்லாம இருக்குமா? நானாதான் அதையும் இதயும் சொல்லி தவிர்த்திட்டு வரேன். அப்பா மட்டும்தான் எனக்கு சப்போட். விழுப்புரத்துல ஒரு பிரைவேட் காலேஜ்ல பிசியாலஜி வகுப்பு எடுக்கலாம்னு பேசிருக்கேன். சும்மா டெம்போரரியாதான்.’

‘நல்ல விசயம்தான்..’ கவனம் அளிப்பதற்காக மெளனமானான். ‘எனக்கும் கிரேஸ் பார்மால பிளேஸ்மெண்ட் கெடச்சிருக்கு. கிரவுண்ட் வொர்க் பண்ணிட்டிருக்கேன். பத்து நாள்ல டிரெயினிங். லோனாவாலா போறேன்.’ 

‘செம்மடா. கங்கிராட்ஸ்.’ அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. மெளனமாக இருந்தேன். எனக்குள் தேவையில்லாத கேள்விக் கயல்கள் துள்ளின. ஒன்று என்னை மீறி ஜாடிக்கு வெளியே தாவியது. ‘அப்பு என்னடா பண்றான்?’

‘அவன் என்ன பண்றான். அப்டியே செல மாதிரி கெடக்குறான். அவனுக்குள்ள ஒரே பதற்றம் சுஜா. வெளிய பெருசா காட்டிக்கிறது இல்ல. இருக்காதா பின்ன? டாடா சுமோ எடுத்துட்டு போய் தாஹிராவ தூக்கிடலாம்னு சொன்னோம். வேண்டாங்கிறான்.’ சிரித்தான். ’எதுக்கும் தெளிவா பேசறது இல்ல. படமா பாத்துத் தள்ளுறான். உனக்கொன்னு தெரியுமா மூன் பார்மால செலக்ட் ஆகிருந்தான்ல. இந்த மாசக் கடைசிக்குள்ள வரலன்னா ஜாப் ஆஃபர் போர்பிட் ஆகிடும்னு இமெயில் வந்திடுச்சி. அதப் பத்திக் கேட்டா தொண்டை அடைச்ச பூனை எலிய புடிக்கிறமாதிரி முழிக்கிறான்.’

‘ஏன் வேலைக்குப் போறதுக்கு என்னா அவனுக்கு?’

’தாஹிரா நெனப்புதான். நாளக்கி என்னாவப் போவுதோன்ற பயம்தான்.’ 

‘பைத்தியக்காரன்.’

‘நீ வேணும்னா பேசிப் பாரேன்.’

‘எனக்கெதுக்கு வம்பு? நான் சொன்னா மட்டும் உன் ஃபிரெண்டு கேட்டுட்டுதான் மறுவேல பாப்பான்..’

‘அதுவும் சரிதான்.’ 

“கண்ணெல்லாம் கருவளையமா இருக்கு. வேலைக்குப் போற மாதிரி ரூம்ல வந்து கெடக்குறான். படம் பாக்குறான். பொழுத ஒட்டிட்டு ரெண்டு நாளைக்கு ஒரு தடவதான் வீட்டுக்கே போறான்.” 

ராபினிடம் பேசியதில் இருந்தே மனம் நிலைகொள்ளவில்லை. மீண்டும் அப்புவின் கிளைகளைச் சுற்றிப் படபடத்தன எண்ணக் குருவிகள். அவற்றின் மெளனம் ஓசையை விடக் கடுமையாகச் செவிப்பறையை அறுத்தது. கிறுக்கன்.. யாரேனும் உரியவர்கள் எடுத்துச் சொன்னால் ஏற்பான். நான் சொன்னால் கேட்பானா.. நான் உரியவளா.. முடிந்துபோன தாஹியின் காதலை மறந்துவிட்டு என்னிடம் பேசலாம். இப்போதும் என் மனம் அவனுக்காக அன்றாடம் எரிவதை அறிவானா.. எப்படி அறிவான்..  

நெடுநேரம் மனம் கொள்ளாமல் அப்புவை அழைத்தேன். போனை எடுக்கவில்லை. நோஞ்சான் தோற்றத்தில் படுக்கையில் படுத்திருந்தபடி செல்பேசியைக் கையில் எடுத்து என் பெயரைப் பார்த்ததும் உச் கொட்டிவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்திக் கொள்ளும் அவனது சித்திரம் மனத்தில் எழுந்தது. எரிச்சலாக இருந்தது. அவனைக் கரித்துக் கொட்டியபடியே நானும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்தேன். அவனாக அழைக்கட்டும். நாளை காலை எட்டு மணிக்கெல்லாம் சந்திரா கல்லூரிக்குச் சென்று பயோ டேட்டாவையும் விண்ணப்பக் கடிதத்தையும் தந்து வர வேண்டும். 

அன்றிரவு விறுவிறுவென விண்ணப்பத்தை எழுதி முடித்து மடித்து வைத்தேன். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து புறப்பட்டாக வேண்டும். அம்மாவிடம் சொன்னேன். சாதம் ஆக்கி உருளைக் கிழங்கு வறுவல் செய்து தருவதாகச் சொன்னாள். அப்போதும் என்னிடம் புது மாப்பிள்ளை பற்றிய பேச்சு வந்தது. ஜெயங்கொண்டத்தில் ஒரு முந்திரிக் காடு உண்டாம். டிகிரி படித்தவர் என்றார்கள். இல்லாத ஒரு காரணத்தைத் தேற்றியெடுத்து சொல்லிச் சொல்லி திருமணத்தைத் தள்ளிப் போட்டேன். 

இதெல்லாம் எதற்காக? ஏதோ ஒரு அற்ப நம்பிக்கை என் நெஞ்சின் ஓரம் ஒட்டிக் கிடந்தது. அப்பு கண்ணிமைத்தால் போதும், எல்லாம் தலைகீழாகிவிடும். அப்படியா என்ன? பத்துப் பேர் இருக்கும் வீட்டில் ஒரு ஓட்டாவது எனக்குச் சாதகமாக விழாமலா போய்விடும். அப்படியே எல்லோரும் எதிர்த்தாலும் வீட்டை விட்டு வெளியேறுவேன். சின்னத்தனமான சிந்தனைகள்! 

எனக்கு முந்திரிக் காடு முக அழகு படிப்பு என எதுவும் பொருட்டில்லை. மனசு குழம்பிக் கிடக்கிறதே. அந்தக் குழப்பத்துடனே ஏன் தண்டவாளத்தில் தலைவைக்க வேண்டும். அன்றும் கறாராக மறுத்தபோது அம்மா ஒப்பாரி வைத்தாள். அண்ணன் குற்றம் சாட்டினான். இதெல்லாம் இப்போது தினசரி நிகழ்வாகிவிட்டன. எனக்கும் பெரிதாக வருத்தம் வருவதில்லை. அவர்களும் பெயருக்குத் திட்டிவிட்டு தத்தம் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். எல்லை மீறும்போதெல்லாம் அப்பாதான் துணை வந்தார். 

‘தோ பாருடா. என் பொண்ணு கண்ணு முன்னாடிதான இருக்கா. நீயும் உன் அம்மாவும் பயந்த மாதிரி தப்பு பண்றவளா இருந்தா எப்பவோ ஓடிப் போயிருப்பா. பேசாம அவங்கவங்க வேலையப் பாருங்க. அவளா தோணும்போது கல்யாணத்துக்கு ஒப்புவா.’ அப்பாவின் கூற்றில் மனத்தாங்கலோடு என் மீதான மறைமுக அழுத்தமும் இருந்தது. அவர் குறிப்புணர்த்தியதில் பிழையில்லை. என்றைக்காயினும் வேறோர் இல்லம் சென்றாக வேண்டியவள்தானே நான். 

அறைக்குள் வந்ததும் ஒரு சிறு நிம்மதி. தனிமைதான் இப்போதைக்கு ஓரளவுக்கு நலம் பயத்தது. படுத்தபடியே தலையைத் தூக்கி நிலைக் கண்ணாடியைப் பார்த்தேன். முகச் சோர்வு அகத்தின் நிலையைக் காட்டியது. மையள்ளிக் கண்ணைச் சுற்றி கருவளையங்களை வரைந்தேன். கதகளி தோற்றம் வந்தது. வேண்டுமென்றே பழிப்பு காட்டுவதைப் போல வாயை அகட்டினேன். நா நீட்டிச் சிரித்தேன். பைத்தியம்போல் தலையைச் சொறிந்தேன். எழுந்தாடினேன். குதித்தபோது முலைகள் எம்பின. கைகளை நுழைத்து மார்க்கச்சையைக் கழற்றி ஓரத்தில் போட்டேன். விரும்பியவனின் நினைவுகளையும் எளிதாகக் கழற்றி எறிய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். தொப்பென்று படுக்கையில் விழுந்தேன். இரவு நீளுமென்று தோன்றியது. காலையில் சீக்கிரம் விழித்தெழ வேண்டும் என்ற தன்னுணர்வு உறக்கத்தை மேலும் துரத்தியது. பகலிலும் தூங்கிவிட்டேனே. பழைய புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்தேன். காலையில் பார்த்த அதே அப்புவின் அதே சிரிப்பு இப்போது என்னைத் தகர்த்தது. அவனுக்குள் என்னைப் புகுத்தி ஊட்டமேற்றும் வழிகளைக் கண்டேன். மெல்ல மெல்ல விரல்களில் பிசுபிசுத்த ஈரம் என்னை நெடுநேர உளைச்சலில் இருந்து காப்பாற்றி இலகுவான இசைமைக்குள் தள்ளியது. உச்சத்தின் மேகத்தில் என்னைத் தாலாட்டி உறங்கச் செய்தது உடல் இளகச் செய்த துலா முள். 

*****

ஏழுமணிக்கெல்லாம் விழுப்புரம் போயாக வேண்டும். ஆறு மணிக்குதான் விழித்தேன். பரபரப்பாகக் கிளம்பினேன். ஹாஸ்டலில் இருந்தபோது பதினோரு நிமிடத்தில் என்னால் கிளம்ப முடியும் என்று அலாரம் வைத்துச் செய்து காட்டியதுண்டு. அந்த ரெக்கார்டை பிரேக் செய்யும் தீவிர மோடுக்குச் சென்றேன். அப்படியும் இருபது நிமிடங்கள் ஆகிவிட்டன. 

சித்ரா பஸ்ஸ்டாண்டில் இருந்து கல்லூரிக்கு என்னை அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருந்தாள். ஏதோ சம்பளம் வரும். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் போனால் போதும். பணத்தில் என்ன இருக்கிறது, வெறுமையைக் கொஞ்சமேனும் போக்க வேண்டும் அவ்வளவுதான். வேலை தருபவரிடம் நன்மதிப்பைப் பெறுவதற்கு உகந்த தோற்றத்தை வரித்துக்கொண்டேன். 

தலை குளித்தேன். பச்சை நிறத்தில் பிங்க் தெளித்த ஓரம் கொண்ட வாயல் சேலை அணிந்தேன். கழுத்தெலும்பு கிடைமட்டக் கோடாகத் தெரிந்தது. குறைவான முகச் சுன்னம் எளிமையான சிகை அலங்காரம் மென்னிறத்தில் உதட்டுச் சாயம். ஒப்பனையில் மிகை தவிர்த்தேன். இந்த அழகு போதும்! பழைய கண்ணாடியைப் போட்டதும் ஆசிரியர் களை முகத்தில் முளைத்தது. கழற்றிக் கூட்டில் வைத்தேன். அழையா விருந்தாளியாய் மனக் கண்ணாடியின் பிம்பமாக முகம் பார்க்கும் கண்ணாடியில் அப்பு தோன்றினான். ”சுஜா, உனக்கு இந்த மேக்கப்லாம் நல்லா இல்ல. சிம்பிளா இரு. அதுதான் கிரேண்டியர்” என்றான். ”பட் ஹேர்ஸ்டைல் நல்லா இருக்கு.” 

வாய்விட்டு ‘செருப்பு.. உன்ன யார் கேட்டா இப்ப?’ என்றேன். மனம் காரணமின்றி இனிமையில் துள்ளியது. 

காலையில் புறப்பட்டபோது தியாகு அண்ணன் ‘வாம்மா. நான் விழுப்புரம்தான் போறேன். வண்டிலயே போயிடலாம்’ என்றான். 

‘அண்ணே. நீ பிசியா இருப்ப.. உன் வேலையப் பாருண்ணே. நான் பஸ்ல போயிக்கிறேன்.’

‘அட நீ வேற. நானும் அங்கதான் போய் ஆகணும்.’ அண்ணனின் உதவி மகிழ்வளித்தது. உடை கசங்கக் கூட்டத்தில் போக வேண்டியதில்லை.

‘சரிண்ணா. எனக்கும் நேரம் ஆயிடுச்சி. பஸ் ஸ்டாப் கிட்ட விட்ரு. போயிக்கிறேன்.’ மதிய உணவைக் கட்டுகையில் அம்மா இட்லிகளை ஊட்டினாள். இருவரும் வண்டியில் புறப்பட்டோம். ஸ்பெளண்டர் பிளஸ். பெரிய அண்ணனின் யமஹாவில் இன்னும் நிறைய இடமிருக்கும். 

ஏழு மணிக்கு முன்பாகவே அண்ணன் என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டான். வண்டியை ஓரம் கட்டி ஸ்டாண்ட் போட்டுவிட்டு என்னருகே வந்து நின்றான். சித்ரா வரட்டும் என்று அவனும் காத்திருந்தான். 

தெருவோரம் கிளிக் கூண்டுகளோடு நின்றவன் அப் பறவைகளைப் பேரம் பேசினான். விற்கப் போகிறான். விற்பதால் வரும் பணம் அவனுக்கு உணவாகப் போகிறது. தான் வளர்த்த பறவைகளை விற்பது பிழையில்லை என்று நினைக்கிறான். பறவை நினைப்பதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்கிறது வியாபார உலகம்.. 

‘நீ கெளம்புண்ணே’ என்றேன். 

‘இருக்கட்டும்’ என்றான். கிளியின் குரல் பரிதாபமாகக் கேட்டது. 

வாழ்க்கைச் சக்கரத்தில் மயிர்போல் சிக்கிய மனத்தில் சிந்தனைகள் தடுமாறி நின்றன. அப்புவோடு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்ற நாள் நினைவுக்கு வந்தது. என்னென்ன இம்சை தந்தான். அழகன். கவிஞன். காதல் என்பது பூவா தலையா விளையாட்டு என்று ஒருமுறை சொன்னான். இதெல்லாம் அவனுக்கு யார் சொல்லித் தந்தது? அன்று அவனை ஏன் என்னால் திருப்பி அனுப்ப முடியவில்லை. வீடு வரைக்கும் எந்தத் தைரியத்தில் அழைத்துச் சென்றேன். ரொம்பவே பயமாக இருந்தது. இருந்தாலும் அந்த பயத்தின் திகில் மீண்டும் வேண்டும் என்று திடீரென்று தோன்றியது. 

அதே நேரம் சரியாக என் கண் முன் ஒரு திருச்சி பேருந்து நின்றது. தேங்கிய நீரை மேலே பீய்ச்சியடிப்பது போல வந்து நிதானமாக வேகம் குறைத்து ஓரம் கட்டினார் ஓட்டுநர். சகுனங்கள் ஆழ்மனத்தில் தேங்கிய நினைவுகளில் குதித்து விளையாடின. மட்காத நினைவுகள். அவனைத் துவட்டிவிட்டது. அவனோடு தனிமையில் பேசியது. கோயில்களை ரசித்தது. கடலில் ஆடியது. வம்பிழுத்தது. மாண்டேஜ்களிலேயே வாழ்ந்துவிடலாம் போல. கற்பனையைவிட உண்மையாக நிகழ்ந்தவற்றின் நினைவுத் தொகுப்புக்கு அதிக இனிமை உண்டு. 

மீண்டும் அண்ணனைப் பார்த்து ‘நீ போண்ணே. நான் வெயிட் பண்ணிப் போறேன்’ என்றேன். அவன் என் அகச் சிந்தனைகளைக் கண்காணிப்பது போல அசெளகரியமாக இருந்தது. 

அண்ணன் நகர்வதாய்த் தெரியவில்லை. ‘இருக்கட்டும்மா. உன்னைத் தனியா விடாம பத்திரமா உன் ஃபிரெண்டு வந்த உடன விட்டுட்டுக் கெளம்பச் சொல்லிச்சி அம்மா.’. 

என்னை உளவு பார்க்கிறார்கள். கிளியைத் தானியமும் விதைகளும் போட்டு வளர்த்தாயிற்று. சேதாரம் இல்லாமல் யாருக்கேனும் விற்க வேண்டுமே. அவ்வளவுதான் இவர்கள் கணக்கு. பறவையின் வானம் பற்றி இவர்களுக்கென்ன. சிறகுகளின் கனவுகள் பற்றி இவர்களுக்கென்ன. அந்த எண்ணம் வந்ததும் தியாகு அண்ணன் வில்லனாய்த் தெரிந்தான். 

‘சரிண்ணா, நான் அடுத்த வாரத்திலேர்ந்து வேலைக்குப் போய்டுவேன். அப்ப தெனமும் இப்டி என்ன கொண்டுவந்து விட்டுட்டுதான் போவியா. நான் எத்தன வருசம் தனியா டிராவல் பண்ணிருக்கேன். திருச்சியிலயே நாலு வருசம் இருந்தவ. சின்னப் பொண்ணா நானு?’ ஆத்திரத்தையும் கொஞ்சமாக முகத்தில் காட்டினேன். 

’பரவால்ல. வெயிட் பண்றேம்மா’ என்று ஒரே சொல்லில் வாயடைத்தான். 

ஐந்து நிமிடத்தில் சித்ரா வந்து சேர்ந்தாள். பிறகே புறப்பட்டான். எனக்குத் தொண்டை அடைத்தது. அப்படி என்ன ஒரு பெண்ணடிமைத்தனம். ‘சாமி பேர அதிகமாச் சொல்றவன் எல்லாம் சுரண்டல் பேர்வழிங்கதான்னு’ அப்பு சொன்னது சரிதான். இவர்களைப் போன்ற ஒருத்தனுக்குதான் என்னைப் பிடித்துத் தரப் பார்க்கிறார்கள். நல்ல மாப்பிள்ளை என்று இவர்கள் சொல்வதெல்லாம் என் விடுதலையை அடைக்கிறவன் என்ற பொருளில்தான். 

சித்ராவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என நினைவு வந்ததும் அவள் முகத்தில் பரிதாபக்களை தெரிந்தது. அவளும் தான் விரும்பியவனையும் கட்டவில்லை, தன்னை விரும்பியவனையும் கட்டவில்லை. 

’என்னடி அண்ணன் என்னா சொல்றாரு?’ எனக் கேட்டாள். 

‘அவருக்கென்ன’ சோர்வைக் காட்டிக் கொடுத்தது குரல். 

‘ஏன்டி ஒருமாதிரி பேசுற. உடம்பேதும் சரியில்லையா?’ 

‘ஆமாம்டி. திடீர்னு வயிறு வலிக்குது. நாளைக்கு வந்து உங்க காலேஜ் மேனேஜ்மெண்ட பாக்கட்டுமா? ஏதும் கோவிச்சுக்குவாங்களா? நீ கொஞ்சம் எனக்காகப் பேசுறியா?’ பற்களை நறநறவெனக் கடித்தேன். கண்களைச் சுருக்கினேன். 

‘அட இது ஒரு பிரச்சனையா? நீ வீட்டுக்குப் போடி. அவனுங்க கெடக்குறானுங்க. குறைஞ்ச சம்பளத்துக்கு அடிமை சிக்குமான்னு உக்காந்திருக்கானுங்க. நீயெல்லாம் லட்டு மாதிரி அவனுங்களுக்கு. நாளைக்குப் பாத்துக்கலாம்.’ திடமாகச் சொன்னாள். ‘சரி நீ எப்டி தனியா போவ? நானும் வீடு வரைக்கும் வரட்டுமா?’ 

’இல்லடி அதெல்லாம் வேணாம். பஸ் ஏறினா போதும் தியாகதுர்கத்துல அண்ணனே வந்து பிக்கப் பண்ணிக்குவார்.’ 

’குடுத்து வச்சவடி ஏத்திவிட ஒரு அண்ணன். இறக்கிவிட இன்னோரு அண்ணன். ஸ்பேருக்கு மூணு பேர்.’ அவள் மட்டும் பேருந்து ஏறினாள். 

அவள் நகர்ந்ததும் தந்திர ரேகைகள் முகத்தில் படர்ந்தன. எங்கிருந்து உருவானது இந்தப் பொய். திருச்சியில் இருந்துதான் ஊற்றெடுத்திருக்கிறது. தீர்வை விரும்பும் தந்திரங்கள் பளீரென்று விழித்தன. நெற்றிச் சுருக்கங்களில் நானாக வலிந்து உருவாக்கிய வயிற்றுவலியின் பாவனைகள் மறைந்தன. உடலில் உற்சாகம்.  

என்முன் இப்போது இரண்டு பாதைகள். எப்போதும் எனக்கென வழங்கப்பட்டவற்றையே ஏற்று வாழ்கிறேன். சுயமாகத் தேர்ந்தெடுத்ததே இல்லை. நான் வேண்டிய எதற்காகவும் முழுமனத்துடன் போராடவில்லை. இந்த முறை சரியோ தப்போ ஒரு கை பார்த்துவிட வேண்டும். அப்போது சரியாகத் தத்தி தத்திப் புறப்பட்ட திருச்சி வண்டியின் முன்பு ஓடிச் சென்று கைகாட்டினேன். மெதுவாகி நின்று என்னை ஏற்றது. ஒரு கையில் ஹேண்ட் பேகையும் கொசுவத்தையும் பிடித்தபடி மறுகையில் படிக் கம்பியைப் பிடித்து முயல் துள்ளலில் விரைந்து ஏறினேன். எல்லாம் என் எண்ணப்படி நடக்கும் நாள் இது என்ற நம்பிக்கை பூத்தது. பதற்றம் என்னுள் சுத்தமாக இல்லை. வேறொரு புதுக் களிப்பு. கிளர்ச்சியால் பிறந்த உற்சாகம். 

முந்தைய இனிய பயணங்களை மீண்டும் செய்வதைப் போன்ற இன்னுணர்வு. காலி இருக்கையில் அப்புவை மானசீகமாக அமரவைத்துப் புன்னகைத்தது உள்ளம். மூச்சு வாங்கியது. முகத்தை முந்தானையால் ஒற்றித் துடைத்துத் தோளில் போட்டேன். பாதை தெளிவாகத் தெரிந்தது. நேரத்தைக் கணக்கிட்டேன். பதினோரு மணிக்குள் சத்திரம். அப்புவை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும். அவனிடம் விரிவாகப் பேசி என் சொற்களைப் புரிய வைக்க வேண்டும். அது போதும். மனம் வெகு நம்பிக்கையோடு கணக்குகள் இட்டது. அவன் புரிந்துகொள்வான். அதன் பிறகு ஒரேயொரு முறை நிதானமாக அவன் முடிவைக் கேட்டுவிட வேண்டும். இரண்டு பாதையில் ஒன்று தானாக மறைந்துவிடும். என்னை ஏற்காவிடில் அவன் நின்ற பாதை அழிந்துவிடும். ஒருவேளை ஏற்றால் குடும்பமும் சமூகமும் நிற்கும் இன்னொரு பாதை இல்லாமல் போய்விடும். தீராத கணக்குகளைப் போட்டபடியே கிளர்ந்து வழுக்கியது மனம். வானம் தெளிவாக இருந்தது. வெயிலற்ற வெளிச்சம். 

இறங்கும்வரை போன் செய்யக்கூடாது. அழைத்தால் வேண்டுமென்றே தப்பி ஓடுவான். அவனுக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும்.

*****

சத்திரம். இறங்கியதும் நீர்ப்புட்டியை எடுத்து முகம் கழுவினேன். ஹேண்ட்பேகின் சிறிய கண்ணாடியில் முகத்தைக் கோணித் திருப்பி அவசரமாக அழகு பார்த்தேன். ராபினை அழைத்தேன். அறையில் இருப்பதாகச் சொன்னான். ராபின் கிரேஸ் பார்மாவில் இன்டக்சனில் இருந்தான். ‘வேலைக்குப் போகலையா?’ 

‘தோ போய்ட்டுதான் வந்தேன். எங்களுக்குதான் ஆஃபிஸே கெடையாதே. அப்டியே தெருத்தெருவாத் திரிய வேண்டியது. போர் அடிச்சா ரூம்ல வந்து உக்கார வேண்டியது. அதுவும் போரடிச்சா வீட்டுக்குப் போக வேண்டியது.’ 

’அப்ப சுஷ்மிய பாக்குறத பத்தி சொல்லவே இல்ல. இரு இரு அவகிட்ட போட்டுவிட்றேன்.’

‘நான் போர் அடிக்கிற விசயங்கள மட்டும்தான சொன்னேன். சுஷ்மிய பாக்குறது எப்டி அதுல வரும்?’ சமாளித்துவிட்டான்!

‘டேய் டேய் இந்த ரோமியோஸ் எல்லாரும் எங்கேர்ந்துடா இப்டி சட்டு சட்டுன்னு அடிச்சிப் பேசக் கத்துக்கிட்டீங்க. அப்பு எங்க இருக்கான்?’ 

‘என் கூடதான் ரூம்ல.’ 

‘நான் சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல ரம்பா ஊர்வசி தியேட்டர் பக்கம் நிக்கிறேன். உங்களப் பாக்கணும். நான் வந்தத அப்புகிட்ட சொல்லிடாத. சர்ப்ரைஸ்.’ 

‘என்ன சொல்ற? திடீர்னு.’

‘அரியலூர் வரைக்கும் ஒரு வேலையா வந்தேன். அந்த வேல நடக்கல. அதான் திருச்சி வரை வந்து உங்கள பாத்துட்டுப் போலாமேன்னு’ என்றேன். பொய்கள் எளிதாகவும் சரளமாகவும் வந்தன. 

’என்னைப் பாக்கவா? சரி நம்பிட்டேன்’ சிரித்தான். ‘அண்ணா சிலைக்குப் பக்கத்துலதான் ரூம். இரு வெளிய வரேன்’ என்று இறங்கி வந்தான். 

அவன் அறையிருந்த திசையை நோக்கி உத்தேசமாக நடந்தேன். இரண்டு நிமிடத்தில் ஒல்லியாக வான்கோழி எழும்பித் தாழும் நடையில் என்னருகே வந்து சேர்ந்தான் ராபின். என்னைக் கண்டவன் முகத்தில் மலர்ச்சி. 

‘சுஷ்மி எப்டி இருக்கா?’ மீண்டும் அதே கேள்வி தன்னிச்சையாக வெளிவந்தது. 

ராபின் முகத்தில் சுஷ்மியின் சாயல் தெரிந்தது. தன்னை இவன் முகத்தில் ஒட்ட வைத்துவிட்டாள். எல்லாம் பார்ப்பவர் மனத்தின் விசித்திரம்தான். 

‘நல்லா இருக்கா. அதான் சொன்னனே.’ 

’ம்..? அப்பறம்’ விழியில் கேள்வியோடு நின்றவனை ‘வா போகலாம்’ என்றேன். ’நான் ரொம்ப குண்டாயிட்டனாடா?’

‘என்ன உண்டாயிட்டியா!’ வழக்கம் போல் மட்டி ஜோக்கு சொன்னான். கல்லூரி ஞாபகம் வந்தது. அவனைத் திட்டத் தோன்றவில்லை. பெயருக்கு முறைத்தேன். 

‘சரி உங்க ரூமக் காட்டு.’

‘பேசில்லர் ரூமுக்கா.. வேணாமே’ என்றான்.  

’அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. இனி திருச்சில எனக்குத் தெரிஞ்ச ஒரே இடம் இதுதான். வேற போக்கிடம் இல்ல. ஜஸ்ட் அப்புவ பாத்து கொஞ்ச நேரம் பேசிட்டுப் போறேன்.’ அப்போதும் புன்னகைத்தான். 

ஆள் அகலத்துக்கு அளவெடுத்ததைப் போலக் குறுகிய படிகள். முதல் ஆண்டு மாணவியாக இருந்தபோது எளிதாக நடந்திருப்பேன். இப்போது நிதானமாக நடக்க வேண்டி இருந்தது. என்னைவிட தாஹிரா குண்டு. அவளால் இதைக் கடந்து அப்புவின் அறைக்கே ஏறி வர முடியாது. பிறகெங்கே அவனுக்கான வாழ்வில் நுழைந்து வருவது. கேனத்தனமான சுய பிரமைகள். படிகள் வளைந்து திரும்பி மேலேறின. இரண்டாவது திருப்பத்தில் இடித்துவிடாமல் குனிந்து வரச் சொன்னான். மேலே போனதும் ராபினை எனக்கு முன்பாகப் போகச் சொல்லி அனுப்பினேன். 

‘டேய் என்னடா பேந்த பேந்த முழிக்கிற?’ உள்ளிருந்து பேசிய அப்புவின் குரலைக் கேட்கையில் ஏலியனைப் போல் இருந்தது. 

அந்நியன் ஒருவனைக் காணவா இவ்வளவு தூரம் வந்தோம். எனக்குள் பதற்றம் எழுந்தது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம்தான் மனமும் உடலும் செய்யத் துடித்தன. நடுங்கினேன். வியர்த்தது. திரும்பிப் போய்விடலாம். பற்களை இறுகக் கடித்தேன். மேலும் படபடப்பு. 

‘உன்னைத் தேடி ஒருத்தங்க வந்திருக்காங்க’ என்றான் ராபின். சொல்லிவிட்டானா!

‘யாரு அது?’ கேட்டுக்கொண்டே எழுந்தான். இருக்கைகள் அசையும் சத்தம். 

படியிறங்கி ஓடிவிடலாமா?

மூச்சை இழுத்துப் பிடித்தபடி பாய்ந்தேன். அவன் வெளியே வருவதற்குள் அவன் முன்னால் குதித்தேன். லுங்கியும் பனியனுமாக நின்றான். வெளிறிய கைகள் பெண்ணுடையவை போல் இருந்தன. அக்குள் முடி வெளியே தெரியுமளவு நீண்டிருந்தது. டெல்டாய்டில் கொழுப்புக் கோடுகள். உடல் இளைத்திருக்கவில்லை. நான் கற்பனையில் நினைத்ததைப் போல ஒடுக்கமில்லை. ஒரு சுற்று பெருத்திருந்தான். அந்நியனேதான். 

”என்னைப் பார்த்ததும் முகம் திருப்பப் போகிறான்!” மைக்ரோ நொடியில் சிறுசிறு துணுக்குறல்கள் உண்டாகின. ஆனால் அவன் அப்படி ஏதும் செய்யவில்லை.

‘ஏய் சுஜி’ விழி இயல்பாக விரிந்தது. “சுஜி”யில் இருந்த நீட்சியும் அழுத்தமும் எனக்கு மகிழ்ச்சி அளித்தன. ‘என்னதிது இன்ப அதிர்ச்சிலாம் கொடுக்கிற!’ என்னைச் சுஜி என்றழைக்கையில் எல்லாம் மனத்தில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இயல்பாக அழைப்பதாகத் தோன்றும். பாவனையுடன் பேசும் சமயங்களில் சுஜா, கடுப்பில் சுஜாதா! 

அப்பாடா என்றிருந்தது. இது எனக்கான நாளேதான். 

‘வா வா வா உக்காரு’ என்றான். ‘என்ன சாப்பிட்ற ஜூஸ் பன்னீர் சோடா.. இல்ல பொவாண்டோதான் உனக்குப் பிடிக்கும்.’ எதையும் அவன் மறக்கவில்லை. 

சட்டை அணியப் போனவனிடம் ராபின் ‘நீ பேசிட்டிரு மச்சி. நான் வாங்கிட்டு வரேன்’ என்றான். ’உனக்கேதும் வேணுமா?’

அப்பு யோசித்து ‘டைரி மில்க் பெரிய பேக் ஒண்ணு’ என்று விழி சுருக்கிச் சிரித்தான். ராபின் அவனை முறைப்பதுபோல் பார்த்தான். ‘அப்டியே ஒரு கோல்ட் ஃபிளாக் கிங்கும்’ என்றான். என்னைப் பார்த்து ‘அது எனக்கில்ல பிரவீணுக்கு’ என்று கண்ணடித்தான். ’ரெண்டுமே கெட்ட பழக்கம்தான்.’ அவனே சொல்லிக்கொண்டு அசடு வழியச் சிரித்தான்.

’பிரவீண் எங்க?’ அறையைச் சுற்றி நோட்டமிட்டபடி கேட்டேன். சுவரில் கிழிந்து ஒட்டுப் போட்ட அர்னால்ட் இருந்தார். பக்கத்தில் கரண்ட் அடுப்பு. அதற்கும் பக்கத்தில் புஜபலம் காட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டிய பெரிய பெரிய டப்பாக்கள். பகவத் கீதை புத்தகம். 

‘அதுதான் ஆன்மீக அர்னால்டுடைய செல்ஃப்’ என்றான் அப்பு. 

‘அவர் நம்ம காலேஜ்ல மாஸ்டர்ஸ் டிக்ரி ஆத்தப் போறார்’ என்று சொல்லியபடி படியில் இறங்கினான் ராபின். ‘அடுத்த மாதம் அட்மிசன்.’ ஆமாம். நினைவுக்கு வந்தது. அப்ப போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பது யார்?

‘அவன் என்கூட சரியா பேசுறதெல்லாம் இல்ல. நான் இப்டி உக்காந்திருந்தா அவன் அப்டி போவான். அந்தக் காலத்துல மாமியார் மருமகன் முன்னாடி திரும்பிக்குவாங்கல்ல அந்த மாதிரி.’  உதடு பிதுக்கிச் சொன்னான். 

புன்னகைத்தேன். ராபின் வெளியே சென்ற பின்னும் என்னால் இயல்பாக முடியவில்லை. இங்கு ஏன் வந்தேன். மடத்தனம். மகா மடத்தனம்! வெளியே கழற்றிவிட்டிருந்த செருப்பைத் தன்னிச்சையாகப் பார்த்தன விழிகள். ”என்னை எடுத்து அடித்துக்கொள்” என்று சொல்வது போலிருந்தது. 

எப்படி எதை ஆரம்பிப்பது என்று தெரியாமல் கேவலமாக ஆரம்பித்தேன். ‘என்னடா ஒரு சுத்து பெருத்துட்ட?’ பதிலே தராமல் புன்னகை செய்தான்.

தேவையில்லாமல் வளவளவென்று பேசினான். அவன் பேச்சை முழுமையாக என்னால் கவனிக்க முடியவில்லை. தன் மனப்பாரத்தை மறைக்க முயன்றான். இல்லை ஆளே மாறிவிட்டானா? அவன் முகத்தில் தாஹியின் சாயல் துளியும் இல்லை. அப்படியானால் இருவருக்கும் ஆத்மார்த்தமான காதலே இல்லை. மனம் தனக்கேற்ற அல்பக் கணக்குகளைப் போட்டது. ‘அப்பறம்?’ என்றவனைத் துணுக்குற்றுப் பார்த்தேன்.

‘என்னடா கேட்ட?’ 

‘தெரில.. நேரத்த ஓட்டணும்ல.’ ஒன்றுக்கொன்று ஒத்திசையாமல் பேசினான். 

‘டேய் வாய மூட்றா ப்ளீஸ்.’ 

‘சரி’ என்றான். டிராயரில் இருந்த சாக்லெட்டை ஒரு கடி கடித்தான். எனக்கும் ஒன்று நீட்டினான். 

‘ம்.. ஜாலியா இருக்க?’

‘உண்மைய சொல்லணும்னா கஷ்டத்துலதான் இருக்கேன். அதுக்காகப் பக்கத்துலயே ஒரு பொட்ட நாயக் கட்டிப் போட்டு காதலி பேர அதுக்கு வச்சி அலும்பு பண்ணச் சொல்றியா. காலங்காலமா தாடி வளத்து தண்ணி அடிச்சாதான் ஒருத்தன் சோகமா இருக்கான்னு ஒத்துக்குவீங்களா..’ என்று இடைவெளி விட்டவன் ‘ஜாலியாலாம் இல்லடி.. சாரி இல்லப்பா’ என்றான். 

எனக்கு அந்தத் திருத்தம் பிடிக்கவில்லை. 

அவன் லொட லொடவென்று பேசியதும் அப்புவின் அந்நியத் தன்மை மறைந்தது. ’இந்த தேவதாஸ் இருக்கானே அவன் ஒரு தேவையில்லாத தாஸ். நாய்க்குக் காதலி பேர வச்சி யார கேவலப்படுத்துறான் நாயையா இல்ல காதலியையா?’

‘அய்யோ விட்றா சாமி.’ 

‘தேவதாஸ் படம்தான் அதிகமா ரீமேக் பண்ணி எடுத்த படமாம். எங்கயோ படிச்சேன். உண்மதான். அதே கதைய தேவதாஸ்னு கேரக்டரா எடுக்காம இன்டேரக்டா ஆயிரம் படம் எடுத்திருப்பானுங்க. ஆனா உண்மைல தேவதாஸ் கதையே நம்மகிட்டேர்ந்து சுட்டதுதான்.’ குரல் கம்மிற்று. பக்கத்தில் இருந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்தான். 

என்னிடம் நீட்டவே ‘வேணாம்’ என்றேன். 

‘சிலப்பதிகாரத்த அப்டியே சுட்டானுங்க. இங்க திருட்டுப் பழி விழுந்து சாவான் கோவலன். அங்க அவன் குடிச்சே சாவான். தன் வதைக்கும் ஒரு காவிய மரியாத இருக்கு பாரேன். சிலப்பதிகாரம் மொழியாலயும் கற்பனையாலையும் உயர்வா தெரியுது. ஆனா தேவதாஸ் கதைல இருக்க ஒரு சோகம் இதுல இல்ல. ரெண்டுமே முக்கோணக் காதல் கதை..’ என்றவன் சட்டென நாவைக் கடித்து அமைதியானான். 

‘அவ வீட்ல என்ன சொல்றாங்க?’

‘என்ன சொல்லப் போறாங்க. வாரம் ஒரு தடவ அவங்க அம்மா கிட்டேர்ந்து எனக்கொரு போன் வரும்.’

‘என்ன நல விசாரிப்புகளா?’

‘ஆமா குற்றியலுகரமா சொல்லி கண்டபடி என்னைத் திட்டுவாங்க.’ புரியாமல் விழித்தேன். ‘அதான் கெட்ட கெட்ட வார்த்தைகளா பறக்கும். எல்லாம் தீந்த உடன வச்சிடுவாங்க. அவளோட பெரிய தம்பி ஒண்ணு ரெண்டு தடவ பேசினான். கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி பேசுனான். ஆனா எனக்குச் சிரிப்பா வரும். சின்னப் பயதான போகப் போக பயமுறுத்துற மாதிரி மிரட்டக் கத்துக்குவான். இதனால எல்லாம் எனக்குப் பிரச்சன இல்ல. எங்கயோ இருக்க என்னத் திட்றவங்க தாஹிய என்னவெல்லாம் சொல்வாங்கன்னு நெனச்சாதான் கஷ்டமா இருக்கு.’ கண்களில் நீர் மின்னியது. ’ஆனா இப்பயும் என்னைக் கூப்பிட்டு திட்றாங்கன்னா தாஹிய அவங்களால ஒண்ணும் பண்ண முடியலன்னுதான அர்த்தம்.’ 

‘ஏன்டா உனக்கு இந்த நிலைமை? சரி அதப் பத்தி பேசவே வேணாம்.’ 

நீண்ட மெளனம் இடையே பாறாங்கல்லாய்க் கிடந்தது. எனக்கும் வேறு எதைப் பற்றிப் பேசுவதென்று தெரியவில்லை. ஏறத்தாழ செத்துப் போன காதலைப் புணைபோல் பற்றிக் கடலில் மிதந்தான். 

நான் மட்டும் ஒழுங்கா? அப்படியொரு நசிந்த நூலைப் பிடித்துதான் இவ்வளவு தூரம் ஏறி வந்தேன். அந்த உயிரற்ற புனையை விட்டுத் தொலை என் படகில் ஏறிக்கொள் என்று உருவகமாகச் சொல்லலாமா? இல்லை அணி ஏதும் இல்லாமல் இயல்பாகச் சொல்லலாமா? தாடையில் கைவைத்துப் பிடித்து மீண்டும் செருப்புக்கே என் முகத்தைத் திருப்பியது மனசாட்சி.

‘அதுவும் சரிதான். என் வலி என்னோட போகட்டும். நீ சொல்லு. மாப்பிள்ள பார்க்கும் படலம் இந்நேரம் முடிஞ்சிருக்கணுமே?’

‘என்னடா எல்லாரும் இதையே கேக்குறீங்க?’ தலையில் கைவைத்தேன். ‘ஆமாம். ஏறத்தாழ.’ 

‘உனக்கென்ன குறைச்சல் கண்ணாடிக்குப் பதில் லென்ஸ் போட்ட உடன ஒரு மாடர்ன் களை வந்துடிச்சி. புடவைல டிரெடிசனல் அழகுல இன்னும் பல படிகள் மேல ஏறிட்ட. யு  டிசர்வ் எவ்ரிதிங்க்!’ 

மனம் சிறகடித்தது. எல்லாம் உனக்காகத்தான டா! சொல்லிவிட வேண்டியதுதான். ஒரு மெளனத்தை வலிந்து ஏற்படுத்தினேன். ‘ஆனா.. எனக்குப் பிடிக்கல..’ இதைத் தெளிவாகச் சொல்ல உதவியது அந்த மெளனம். 

‘எனக்குக் கூடத்தான் தாஹிரா வீட்டுல இப்டி பண்றது பிடிக்கல. ஆனா அதுக்கென்ன பண்ண முடியும். நமக்குப் பிடிக்காத நிறைய விசயத்த நாம செய்தாக வேண்டிய நிலைமைக்குப் பேர்தான் வாழ்க்க.’ ஈறு தெரியச் சிரித்தான். 

மழைவில்

‘விரக்தியா பேசாதடா’ சடுதியில் என் சலிப்பு வெளிப்பட்டது. என் மெல்லிய எதிர்ப்பைப் புரிந்து அமைதியானான். ‘ராஜேஷ் ஒருத்திய லவ் பண்றான். அவங்க வீட்ல அவளுக்கும் அண்ணன்னு ஒருத்தன் இருக்கான். பொண்ண கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு சொன்னாங்க. நான் மூஞ்சில அடிச்ச மாதிரி முடியாதுன்னுட்டேன். அதிலேர்ந்தே பிரச்சனதான். அந்தப் பையனும் என்னை வேணாம்னு சொல்லிட்டான். சரி இம்ச ஒழிஞ்சிதுன்னு நெனச்சேன். ஆனா இப்ப ஜெயங்கொண்டத்திலேர்ந்து ஒருத்தன புடிச்சிருக்காங்க. அய்யோ அய்யோ!’ இழுவையாகச் சொன்னேன்.    

‘ஏன் மாப்பிள்ள புடிக்கலயா?’ 

எப்படிடா பிடிக்கும் மடையா. இந்தக் கேள்வி உன் வாயில் வருவது அபத்தம் கூட இல்லை அருவருப்பு ஆபாசம். ஒன்றும் அறியாதவன் போல் எத்தனை இயல்பாக இருக்கிறான். இல்லை இயல்பாக இருப்பதாக நடிக்கிறான். மழை வரும்போலச் சட்டென வானம் மாறியது. 

‘புடிக்கல. முன்னாடி பேசினது தட்டிப் போச்சி. இப்ப ஜெயங்கொண்டான வச்சி நெதம் ஒரு சண்ட. எனக்கு அவன் மூஞ்சிய பாக்க கூடத் தோணல.’ 

‘நமக்குப் பிடிக்காதத நம்மள செய்ய வைக்கறதுக்குப் பேர்தான் குடும்பம்! எப்டி தத்துவம்..’ மீண்டும் சிரித்தான். 

‘வயித்தெரிச்சல கொட்டிக்காதடா.’

’ஏய் லூசு. எப்டியும் கல்யாணம் பண்ணிதான ஆகணும்?’

‘இப்ப நீ தாஹிரா கெடக்கலன்னா இன்னொருத்தியக் கல்யாணம் பண்ணுவியா?’ அவன் வாயை அடைக்க இப்படியொரு  கேள்வியைக் கேட்டேன். கேட்ட பிறகு நாமே ஏன் அவர்கள் இருவரையும் சேர்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. 

‘என் கதையே வேற. ரெண்டு பேரும் சேரணும்னு போராடிக்கிட்டு இருக்கோம். இதுல வெற்றி தோல்வி ரெண்டுக்குமே வாய்ப்பு இருக்கு. ஏறத்தாழ ரெண்டு மாசமா தோல்விய நோக்கிதான் கிராஃப் எறங்கிட்டிருக்கு.. ஒருவேள தோத்துட்டா உயிரோட இருந்தா காலம்தான் பதில் சொல்லணும். எப்டியும் ஒரு நாலைஞ்சு வருசம் கழிச்சாச்சும் வேறொரு கல்யாணம் பண்ணிடுவேன்னுதான் தோணுது.’   

‘ஒருவேள என்ன ஒருவேள..’ வாய்ச் சொல் தடித்தது. அடக்கிக்கொண்டேன். ‘அவ உங்கிட்ட பேசவே இல்லல்ல?’

’அத விடேன். அப்பறம் சொல்றேன்.’ தவிர்த்தான். அவனால் தன் காதலின் தோல்வியை ஏற்க முடியவில்லை. 

வேண்டுமென்றே அவன் உளவியலைக் கையகப்படுத்த வினோவின் கதையைச் சொன்னேன். ‘சம்பத்துக்கும் வினோதினிக்கும் மிங்கிள் ஆயிடிச்சாமே’ என்றேன். அதைச் சொல்வதற்கு முன் வெட்கமாக இருந்தது. 

‘என்ன மீன் பண்ற? லவ்வா?’ 

‘அதெல்லாம் தெரியாது. எல்லாம் முடிஞ்சிடுச்சாம்.’ 

’ச்சீ நாயே.. ஏதாச்சும் உளறாத. யார் சொன்னா?’ 

கல்பனாவைச் சொல்ல மனம் வரவில்லை. மெளனமாக இருந்தேன். 

’அவன் அடிக்கடி அவளோட பேசுனது எனக்கே தெரியும். செகண்ட் இயர்லேர்ந்தே நெருக்கமா பேசிட்டுதான் இருக்காங்க. பட் பிசிக்கல் இன்டிமசிலாம் எதுவும் இல்ல. நாமளா எதையாச்சும் கெளப்பிவிடக் கூடாது. கண்ணால் பார்த்த சாட்சிகள் இருக்கா பிராசிக்யுட்டர்?’

‘ச்சீ மானங் கெட்டவனே. ஒரு கெஸ்ஸிங்தான் டா. ரெண்டு பேரும் பல இடங்களுக்குத் தனியா ரகசியமாப் போயிட்டு வந்திருக்காங்க. அது கன்ஃபார்ம்.’ 

‘இப்ப நீயும் நானும்தான் ரூம்ல இருக்கோம். அதுக்காக?’ சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தான்.  

’அட போடா லூசு. நீயும் நானும்தான் வேஸ்ட். அவ அவ எமோசன்லெஸ் கனெக்‌ஷன்ல வாழ்ந்துட்டு ஈசியா போறாளுங்க..’ 

’நான் லூசெல்லாம் இல்ல. நான் காதலன்’ என்றான். ’அட ஆமா ரெண்டும் ஒண்ணுதானே!’ என்று சொல்லிச் சிரித்தான். 

சட்டென விழியறியாக் கோட்டைத் தாண்டினேன். ‘அப்டின்னா என்னைக் காதலியேன்’ என்றேன். விளையாட்டாகச் சொல்வதைப் போல முகத்தை வைத்துக்கொண்டேன். ஆயினும் உண்மையை வெளிப்படுத்திய என் உள்ளம் குமுறியது. 

உடலை ஒருமுறை சாப்ளினைப் போல் குலுக்கி பல் தெரியச் சிரித்தான். ‘ஏய் சும்மா இரேன்ப்பா’ என்றான்.

‘என்ன சும்மா இரேன். டிரெஸ்ஸோடதான் இருப்பேன்’ என்றேன். என் குரலையும் நெளியச் செய்தேன். 

திருட்டு முழி முழித்தான். 

மீன் தூண்டிலைக் கடிக்கிறது. இழுத்துப் போட வேண்டும். 

‘சரி விடு.. நீ வினோ சம்பத் பத்தி சொல்லு.’ தந்திரக்கார மீன். நழுவுகிறது. 

’வயசுப் பசி இல்லாமயா போயிடும். வினோவுக்கும் பெருசா ஃபிரெண்ட்ஸ் இல்லாமப் போயிடுச்சி. அவளே விலகிட்டா. அவங்க ரெண்டு பேரும் தனிமைல சந்திச்சிக்கிட்டா இதெல்லாம் ஆகாம எப்டி இருக்கும்..’ அந்தத் தொனியைப் பயன்படுத்தி எங்கள் தனிமையைப் பெருமூச்சால் அடிக்கோடிட்டேன். 

அவன் பதிலே சொல்லவில்லை. கமுக்கமான ஏமாற்றுக்கார மீன். அவன் வேறேதோ பேச்சை மாற்றுவதற்குள் முந்த வேண்டும். 

‘இப்ப நாம தனியா இருக்கோம். உனக்குக் காய்ச்சல்னா நான் பாராசிடமால் ஆக மாட்டேனா’ என்றேன். அளவு மீறிவிட்டோம் என்ற எண்ணத்தில் ‘ஒரு பேச்சுக்குதான்டா சொன்னேன். பயந்துடாத’ என்றேன். 

இப்போது என்னை என்ன நினைப்பான். சொல்லிவிட்ட பிறகு மனக்கண்ணில் மீண்டும் தாவிக் குதித்தது செருப்பு. ”ஒரு இடத்தில் தைரியமாக நின்று தொலையேன்டி. உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா.”  

ஒருவேளை அவனுக்கும் இப்படிப் பேசுவது பிடிக்குமோ? என்னை அவனுக்குப் பிடிக்காமலா இருக்கும். அவன் தனிமையின் வாட்டத்தை என் இருப்பு துளியேனும் அகற்றாமலா போய்விடும். மனம் என்னென்னவோ சொன்னது. எழுந்தேன். உடையைச் சரிசெய்தபடி அவனைப் பார்த்துச் சிரித்தேன். ‘புடவ நல்லா இருக்கா?’ 

குனிந்தபடியே பாராமுகத்துடன் ‘ம்’ என்றான். 

ஒற்றையெழுத்து என்னை அவமதித்தது. பொறுத்துக் கொண்டேன். முண்டா பனியன் பளபளப்பான அவன் தோளைக் காட்டியது. என்னே நிறம்! 

‘அப்பு..’  என்றழைத்த வாறே அருகில் போனேன். தயங்கிஉள்ளங்கையால் தோளைத் தொட்டதும் எடைக்கல்லை மேலே வைத்ததைப் போல நழுவினான். சட்டென விலகினான். மீண்டும் தொட முயன்றபோது படபடவென கையைத் தட்டிவிட்டான். வெளியே படியேறும் சத்தம். ராபின். 

நான் மீண்டும் விரைந்தோடி இருக்கையில் அமர்ந்தேன். கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருந்த என்னிடம் அசெளகர்யம் வெளிப்படையாகத் தெரிந்தது. என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ராபின் கண்டிருப்பானோ. 

‘ஹேய்’ என்று மென்மையாக அழைத்து ’இந்தா’ என்று பன்னீர் சோடாவைத் தந்தான். ’சாரி பொவன்டோ கிடைக்கலை.’ 

‘சுஜிக்குப் பிடிக்காதுடா’ என்றான் அப்பு. 

’பரவால்ல..’ மடமடவென பன்னீர் சோடாவைக் குடித்தேன். என் தாகம் ஒருபோதும் தீராது. டைரி மில்க்கை வாங்கி இரண்டாகப் பிளந்து மிச்சத்தை மடித்து மேசை ஓரம் வைத்தான். கையில் எடுத்த தன் பங்கை நொடியில் தின்று முடித்தான். புதிதாக இருந்தது. அப்பு எதையும் ரசித்துச் செய்பவன். ஏன் இப்படிக் கொலைப் பசி கொண்டவனைப் போல சாக்லேட்டை அமுக்குகிறான்! 

‘மச்சி, நான் ஒரு கால் பாக்கணும். தில்லை நகர் வரை போறேன்’ என்றான் ராபின். 

‘மழ வர்ற மாதிரி இருக்கேடா’ என்றேன்.

‘நமக்கு மழதான் சீசன். சளி காய்ச்சல் பெருகும். பிரிஸ்கிப்சன் மழை பெய்யும்.’ 

’ராபி, இவள போற வழில பஸ்ஸ்டாண்டில எறக்கிவிட்ரு’ என்று கருணையே இல்லாமல் சொன்னான் அப்பு. அப்படியே தலைமுழுகத் திட்டம்! உயிர் உள்ளே வெடித்தது. ’பை சுஜி!’ போலியான புன்னகை தீயில் எண்ணெய் ஊற்றியது. 

‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எனக்கு ஒரு மணிக்குதான் பஸ்’ என்றேன். ‘ராபின் நீ போயிட்டு வாடா. நான் ஒண்ணும் உன் ஃபிரெண்ட தின்ற மாட்டேன்.’ 

அவன் ‘சரி’ என்பதில் சிரிப்பையும் சேர்த்தான். வெளியே சென்ற ராபினிடம் ‘என்னடா இப்டி சாக்லெட் தின்றான்?’ எனக் கேட்டேன். 

ரகசியக் குரலில் ‘ஒரு நாளைக்கு ஏகப்பட்ட சாக்லேட் சாப்பிட்றான். இல்லனா தூங்குறான். இல்லனா படம் பாக்குறான். இதுதான் அவனோட டிஃபென்ஸ் மெக்கானிசம் போல. சரக்கடிக்கிற பழக்கம் வேற இல்ல. சாப்பாடே எறங்குறது இல்ல’ என்று சொல்லிப் புறப்பட்டான். 

ஹேண்ட்பேகில் இருந்த கட்டுச்சாதம் நினைவுக்கு வந்தது. 

‘சரி நான் வரேன். ஒரு மணிக்கு வந்து உன்னை பிக்கப் பண்றேன்.’ படிகளில் இறங்கியபடி சொன்னான்.

‘டேய் அதெல்லாம் ஒண்ணும் வர வேணாம். இறங்கின எடத்துல ஏறப்போறேன். பத்துக் கிலோமீட்டரா இருக்கு. நீ வேலையப் பாரு. சுஷ்மியக் கேட்டதா சொல்லு. கொஞ்ச நேரம் இந்த லூசுகிட்ட பேசிட்டு போயிடுவேன்.’

‘பை’ என்றான். 

‘பை டா.  இனிமே உங்களலாம் பாப்பனோ இல்லையோ’ என்றேன். 

‘ஏன் உன் கல்யாணத்துக்குப் பத்திரிக்க வைக்க மாட்டியா?’ பேசிக்கொண்டே ரெயின் கோட்டை அணிந்தான்.

இவன் வேறு என் நிலைமை புரியாமல். ‘உஷ்ஷப்பா..’ தலையில் அடித்துக் கொண்டேன். பேச்சை வளர்க்காமல் வெறுமையாகத் தலையாட்டி வைத்தேன். 

டிபன்பாக்ஸை வெளியே எடுத்து வைத்தேன். அவனுக்கு என் கையால் ஊட்டிவிட வேண்டும் என்ற ஆசை மிகுந்தது. காரட் உருளை தயிர்சாதம். அவனுக்குக் காரட் பிடிக்கும். திரும்பியபோது சட்டை அணிந்து வெளியே புறப்படுகிறவனைப் போல் தயாராக நின்றான் அப்பு. ‘இப்ப எங்க போற?’

‘உன்ன பஸ் ஏத்தி விடத்தான்.’ 

கடுங்கோபம் வந்தது. ‘நான் கேட்டனா?’ என்றேன். குரலில் இருந்த கடுமை அவனைப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. 

‘வேணாம் சுஜி’ என்றான். சோர்வு வெளிப்பட்டது. 

‘என்ன வேணாம். என்ன வேணாம்?’ இப்போது சுதி ஏற்றிக் கத்தினேன். அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினேன். மடங்கி இருக்கையில் அமர்ந்தான். 

‘நானே நொந்து போயிருக்கேன். நீயும் மேல மேல நோகடிக்காத.’ 

‘உனக்கென்ன பெரிய நோவு வேண்டிக் கெடக்கு. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டுட்ட?’

‘ப்ளீஸ் இந்தப் பேச்ச விடேன்’ என்றான். 

பேசவில்லை நான். மெல்ல மெல்ல சினம் தணிந்தது. மீதமிருந்த சோடாவைக் கவிழ்த்துத் தீர்த்தேன். அது போதவில்லை. எதுவும் போதாது. ‘தோ பாருடா. உன்னைக் கடைசியா ஒருதடவ பாக்கணும்னு தோணுச்சி. வந்தேன். அவ்ளதான்’ என்றேன். 

‘ம் சரி!’ அவன் தசைகள் எனக்காக ஆடவில்லை. அமைதியாகக் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ’கடைசியான்னுலாம் சொல்லாத சுஜி’ என்றுதானே அவன் சொல்லி இருக்க வேண்டும். 

மீண்டும் பொருமல் தீப்போல் எரிந்தது. இறந்தாலும் பொருட்படுத்தாத மடையனுக்காகவா இத்தனை தூரம் வந்தேன். இந்த உலகில் என்னை விடப் பெரிய மடச்செருக்கி யார்?

‘அதுக்கு மட்டும் வரல. தனியாக் கெடந்து சாகிறவனக் காதலிச்ச பாவத்துக்கு..’ அதற்குமேல் பேச்சு வரவில்லை. மழை செறிவாகத் தூறியது. அந்தச் சத்தம் காதில் விழுந்ததும் தொண்டை அடைத்தது. சொற்கள் கைவிட்டன. 

ரொம்ப நேரம் இருவருமே பேசவில்லை. காலையில் ஊரிலிருந்து வந்தபோது அடித்த வெயிலும் வெளிச்சமும் உடனடியாக மீண்டும் தேவைப்பட்டன. இந்த மழை என்னைக் கரைத்துவிடும். இந்த மந்தாரம் என்னை உடைத்துவிடும். அஞ்சினேன். எதுவும் பேசாமல் மெளனத்தை நீட்டித்தேன். அர்த்தமிழந்த மெளனம். மழைச் சரங்களின் ஊற்றுக்கோல் மெளனம். 

‘தோ பாரேன். உன்னை எனக்குப் பிடிக்கும்..’ அவன் விட்ட இடைவெளி வலித்தது. 

‘ஆனா..?’ நானே கேட்டேன். 

‘ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல. உன்னை எனக்குப் பிடிக்கும் அவ்ளோதான்.’ இப்போது மீண்டும் குயுக்தியான இடைவெளி விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தபடி ‘ஆனா..’ என்றான்.

தோலெல்லாம் எரிந்தது.

‘ஆனா உன்ன காதலிக்க முடியல. ப்ளீஸ். நான் தாஹிராவ லவ் பண்றேன். அதான் உண்ம. ரொம்ப சிம்பிள். புரிஞ்சிக்கயேன். ஆனா ஃபிரெண்ட்ஷிப்ல உன்னை அவளுக்கும் ஒருபடி மேல வச்சிருக்கேன்.’

‘தாஹிரா தாஹிரா தாஹிரா! அவ கத முடிஞ்சி போச்சி. இன்னும் ஏன் அத ஏத்துக்க மாட்டேங்கிற. அந்த நிஜத்த ஒத்துக்க முடியாமதான ரூம்ல அழுக்கு லுங்கியக் கட்டிகிட்டு பைத்தியம் மாதிரி கெடக்குற.. எல்லாத்தையும் யதார்த்தமா டீல் பண்றவன் நீ. நீயே இப்டி சொதப்புறியேடா. தாஹி மேலே உனக்கு இருக்கிறது லவ் இல்ல டிஸீஸ்!’

அவனிடம் சலனமே இல்லை. ‘நீ சொன்னதுல பாதி உண்ம இருக்கு ஏத்துக்கிறேன். கடவுள் மேட்டர்ல கூட ஒருத்தன் தெளிவா இருந்திடுவான். ஆனா காதல் ஒரு பயலாஜிகல் மிஸ்டரி. பயலாஜிகலா மட்டும் இருந்திருந்தா செக்ஸ் மட்டும் போதும்னு போயிருக்கும். ஆனா ஒருவகையான ஸ்பிரிச்சுவல் ட்ரூத்தும் காதல்ல ஒட்டி இருக்கு.’

’என்னது ஸ்ப்ரிச்சுவலா. தெனமும் அவளோட ஆவி கூட பேசிட்டிருக்கியா.’

‘உனக்கு என் நிலைம ஜோக்கா இருக்கலாம். நான் பல நேரங்கள்ல பலர அப்டி ஏளனமா பாத்திருக்கேன். அதனால எனக்கு ஒன் மேல கோவம் வராது. கைல பிளேடால கிழிச்சிக்கிறது. மணிக்கணக்கா அழுகுறது. இதெல்லாம் மடத்தனம்னு வெளிய இருந்து பாக்குறவங்க ஈசியா சொல்லாம். ஆனா பகுத்தறிவ மிஞ்சி ஒரு ஃபீல் இருக்குன்னா அது காதல்தான். இந்தப் பிரிவுலதான் காதலோட பவர்புல்னஸ் தெரியுது. நாங்க சேராமலே போனாலும் காதல் நிக்கும். காதல்தான் மனுசனோட பர்பஸ். அதுக்கு நேர்மையா இருக்குறதுல தப்பே இல்ல.’ 

‘இப்டியெல்லாம் பேசிட்டே இருந்தீன்னா அறைஞ்சிருவேன். நிறையப் பேசினாதான் அது அப்பு. ஒத்துக்கிறேன்! ஆனா கொஞ்சம் இல்லல்ல ரொம்பவே குழப்பத்தில இருக்கியோன்னு தோணுது. உன் பொய்களோட நீ அடாப்ட் ஆகப் பாக்குற. டெய்லி மூணு சினிமா, வலியை ஃபேஸ் பண்ணாம இருக்குறதுக்கு தூக்கம், ஹைப்பர்பேஜியா சிம்டம்ஸ் எல்லாம் அதத்தான் காட்டுது.’ 

‘இல்லல்ல. தாஹிரா ஆவிகூட மட்டுமில்ல. அவளோடயே பேசிட்டுதான் இருக்கேன்.’ 

வியப்பாக இருந்தது. என்னை ஏய்க்கப் பொய் சொல்கிறான். 

‘யாருக்கும் தெரியாது. உங்கிட்ட சொல்றேன். அவளோட ரெண்டாவது தம்பி ஒரு பழைய போன அவகிட்ட தந்திருக்கான். நான் ஏற்கெனவே தனியா இன்னொரு சிம் அவளுக்குத் தந்திருந்தேன். ஐடியா ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃபிரி ஆஃபர். உங்க ஹாஸ்டலுக்கு வெளிய வித்தானுங்கள்ள ஞாபகம் இருக்கா?’ 

‘அவ தம்பி ஏன் உங்க காதலுக்கு ஹெல்ப் பண்றான்? நம்புற மாதிரியா இருக்கு.’

‘நீ நம்பாட்டியும் அதான் உண்ம. அவன் காலேஜ்ல ஒரு கிறிஸ்டீன் பொண்ண காதலிக்கிறான்’ என்று சொல்லிச் சிரித்தான். ‘காதலே ஜெயம்.’ சலனமின்றி இருந்த என் முகத்தைப் பார்த்து ‘சத்தியமா உண்ம’ என்றான். 

‘சரி சொல்லு.’

‘அவன் அப்பப்போ தகவல் சொல்லிட்டுதான் இருக்கான். யாருமே இல்லன்னா அவள பேச வைப்பான். அவள போட்டு தெனமும் திட்டி டார்ச்சர் பண்றாங்களாம். ரெண்டு மூணு தடவ அடியும் விழுந்திருக்கு. நாலு நாள் எதுவுமே சாப்பிடாமக் கெடந்திருக்கா. அவங்க அத்தாதான் மனசு இரங்கி சாப்பிட வச்சிருக்காரு. ஆனா அவரும் எமோசனலா அதையும் இதையும் சொல்லி இவள கொழப்பப் பாத்திட்டுதான் இருக்காராம். ”அக்காதான் ஸ்ட்ராங்கா நிக்கிது”ன்னான். அந்த ஒரு வாக்கியம் போதாதா எனக்கு? இப்பிடியே நீட்டி மொழக்கி எங்களோட வீரியத்த கொறச்சிடலாம்னு அவங்களுக்கு ஐடியா போல. ரொம்ப சைல்டிஷா இருக்குல்ல. அவங்களுக்குத் தெரியாது நாங்க எல்லாத்துக்கும் ரெடின்னு.’ 

‘டேய் இதெல்லாம் உண்மையா இல்ல உன்னோட கற்பனையா.’

‘தோ பார் சுஜா. எனக்குத் தெரியும். சில விசயங்கள அடை காக்குற மாதிரி மனசுல வச்சி காத்திட்டு வரேன். இத நான் வாய்விட்டு சொன்னதுமே என் காதல் கொஞ்சம் வீக்கா ஆகிட்ட மாதிரி பீல் ஆகுது. உனக்காகத்தான் இதையே சொன்னேன். என்னால தாஹிராவ விடவே முடியாது. அப்டி நாங்க பிரிஞ்சாலும் உன்னை லவ் பண்ண முடியாது.’ 

‘என்ன மயிருங்குறேன்?’

’அடேங்கப்பா! கோபத்தைப் பாரு..’ உடலைப் பின்னோக்கி இழுத்தான். விழி விரிய முன்னே வந்து குனிந்து ‘ஏன்னா..’ என்று விளக்குபவன் போல் வந்து ‘ எனக்கே தெரியாது’ என்றான். ‘மழை வேகமாப் பிடிக்குது. அப்பயே பஸ்ஸப் பிடின்னு சொன்னேன் கேட்டியா?’ 

‘மயிரு மழ!’

‘என்ன என் தலையிலேர்ந்துதான் கொட்டிருக்குன்னு பாத்தா உன் வாயிலேர்ந்து நெறயா கொட்டிருக்கே!’ தரையைப் பார்த்தபடி சொன்னான். அவனைச் சுற்றி ஏராளமாக முடி கொட்டி இருந்தது. 

‘உன்ன நம்பி வந்தேன் பாரு..’ 

‘என்ன நம்பி ஏம்பா வந்த..’ ஒன்றும் தெரியாத குழந்தை போல பாவமாகக் கேட்டான். ஏளனம் செய்கிறானா இல்லை இயல்பாகக் கேட்கிறானா?

பேச்சை எப்படித் தொடர்வதென்றே தெரியவில்லை. மூளை ஸ்தம்பித்து நின்றது. நிமிடங்கள் முடியாமல் நீண்டன. சுத்தியல் வினாடிமுள் மண்டையில் அடித்தது. 

திடீரென்று என்னை மீறி ஏதோ நடந்தது. கடிவாளம் இன்றித் தன் போக்கில் விட்டேன். கையேந்திய நிலையில் ‘டேய் டேய்.. ப்ளீஸ்டா.. என்ன விட்றாத. கெஞ்சிக் கேட்டுக்கிறேன் டா. மனசார உன்ன நெனச்சி உங் கூட நாலு வருசமா வாழ்றேன்டா.’ 

‘அய்யோ.. புரியலயாடி உனக்கு?’ கத்தினான். ‘சனியனே.. சாவடிக்காதடி.’  

அழுதான். எனக்காகத்தான் அழுதான்! அவன் உடைந்தழுவது பிடித்தது. 

சிறிய விரிசல் கிடைத்தாலும் பூரானைப் போலப் புகுந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையின் ஒளிக்கீற்று. காத்திருந்தேன். தாமதியாமல் ஓடிச் சென்று அவன் முன்னால் நின்றேன். முழங்காலிட்டதும் அவனது தாழ்ந்த முகம் என் நிமிர்ந்த முகத்துக்கு நெருக்கமாய் இருந்தது. 

அவன் முகக்கனியைக் கையில் ஏந்தினேன். எச்சில் வழிய அழுதான். துடைத்து விட்டேன். 

‘ஏய் சாரிப்பா. சாரி’ கெஞ்சினேன். அவன் என்னைக் கண்கொண்டு பார்க்கவே இல்லை. குழந்தையைச் சிரிக்க வைப்பதைப் போல என் உதட்டுக்குக் கீழ் இருந்த பருவில் நாவைச் சுழற்றி ஆட்டிப் பேசினேன். ‘அழுத புள்ள சிரிக்குது.. கழுத பால குடிக்குது..’ 

’ஆமா கழுத..’ ஏதோ கெட்ட வார்த்தை பேச வந்துவிட்டு மெளனமானான். 

‘முழுசா சொல்லுடா’ என்றேன். ‘மனசுல தோணுறதெல்லாம் பேசு. எங்கிட்ட பேசாம வேற யார்ட்ட பேசப் போற?’

‘நீயும் இப்டி என்னைப் புரிஞ்சிக்கலன்னா நான் எங்கதான் போவேன்?’ 

சற்று நேரத்தில் நிதானமானான். என்னிடம் அத்துமீறக் கூடாது என்ற தன்னுணர்வை அவன் இழக்கவில்லை. காரியத்தில் கவனமாக இருக்கிறான். சென்டிமென்டலாகப் பேசி என்னை விலக்கி வைக்கவே முயல்கிறான். முடியாது. இவனா நானா.. ஒரு கை பார்க்கிறேன்.  

‘சரிடா சொல்லு. நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்.’ அவன் கையை எடுத்து மாலைபோல் என் கழுத்தில் வைத்தேன். சில நொடிகள் அப்படியே வைத்தவன் கைகள் நடுங்கின.வெடுக்கென உதற முயன்றான். அழுத்திப் பிடித்தேன்.

‘சுஜா, இதெல்லாம் இப்டி சிக்கலாகும்னு நீயோ நானோ நெனக்கல. குருவாயூர்ல நீ இந்தக் குழப்பத்தப் பண்ணதும் எனக்கே என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியலை. பயம்தான் வந்தது. ஆனா போகப்போக உன் மனசு எவ்ளோ வலிக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. ஆனா ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ. உள்ளத்தால் உள்ளியதை கண்டிப்பா எய்த முடியும். இவ்வளவு தீவிரமா லவ் பண்ணிட்டேன். என்னால ஒருபோதும் தாஹிய விட முடியாது. அதயும் புரிஞ்சிக்கோ. தயவுசெஞ்சி நீ வீட்டுக்குப் போ. நீ மனசு வச்சா அமைதி கெடக்கும். அப்பாம்மா சொல்றவர கல்யாணம் பண்ணு.’

‘அந்த ஒண்ண மட்டும் சொல்லாத. வேற எத வேணும்னா சொல்லு.’ 

பட்டெனத் தலையில் அடித்தான். எதுவுமே பேசவில்லை. 

‘இப்ப எதுக்குடா இப்டி நடந்துக்கிற? உள்ளத்தால் உள்ளியதைக் கண்டிப்பா எய்தறதுக்குத்தான் இப்படி உன் முன்னால வந்து நிக்கிறேன். கெஞ்சுறேன்.’ எரிந்து விழுந்தேன். கண்ணீர் தானே வழிந்தது.

மென்மேலும் இறுகி மெளனத்திலேயே அடைக்கலம் புகுந்தான். 

‘நீ என்னை கூப்புடல. நானாதான் மானங்கெட்டு வந்தேன். அதனால நீயே துரத்தினாலும் போக மாட்டேன்.’ நிதானமாகச் சொன்னேன். 

தலையின் இருபுறமும் கைவைத்துக் குனிந்தநிலையிலேயே இருந்தான். 

‘கல்லுளி மங்கன் மாதிரி இருக்காதடா. பேசு.’ கட்டாயப்  படுத்தினேன். 

சோர்வுடன் நிமிர்ந்தவன் ‘சுஜி, எனக்கு ஒண்ணுமே புரியல. மண்ட குழம்பிக் கெடக்குறேன். தயவுசெஞ்சி அமைதியா இரு’ என்றான். 

சில நிமிட மெளனத்துக்குப் பிறகு ‘பொறப்பட்டு வீட்டுக்குப் போம்மா’ என்று அழுதான். 

வலுவாக எதையேனும் சொல்ல வேண்டும். ‘ நீயே இப்படி என்னைத் தொரத்தினா நான் செத்துத்தான்டா போகணும்.’ 

‘சாவு. யார் வேணாம்னா?’ உலர்ந்த முகத்துடன் பொருட்டின்றிச் சொன்னான். 

எனக்கு இப்போது அழுகை பொங்கி வந்தது. கண்ணீர் சீசா விளையாடுகிறது. தளர்ந்து தரையில் அமர்ந்தேன். ‘நீ அத மீன் பண்ணலன்னு தெரியும். இருந்தாலும் ரெண்டாவது தடவ இப்டி கேஷுவலா சொல்றடா. ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்றேன். 

எனக்குத் தொடர்ந்து ஆறுதல் சொல்வான் என்று ஏங்கினேன். இம்முறையும் மீண்டும் மெளனம் சாதித்தான். அவன் கோபத்தை விட அவன் செய்யும் ஏளனத்தை விட அவனுடைய கல்லான மெளனமே என்னை வெகுவாக நோகச் செய்தது. தொடர்ந்து விலக்கத்தையே அவன் அறிவிப்பது போல் உணர்ந்தேன். 

’சரிடா’ விருட்டென எழுந்தேன். உடையைச் சரிசெய்தேன். கண்களைத் துடைத்தேன். ’எனக்கென்ன நீதான் கண்டவன் கையில அடிபட்டுச் சாகப் போற. இல்லன்னா சாக்லேட் தின்னே சாகப் போற. நான் ஏன் சாவணும்..’ மூக்கை உறிஞ்சினேன். மிஸ்டு காலைப் பார்த்தேன்.

‘ஆமாம் கரெக்டுதான் சுஜா. சிகரெட்ட விட இந்தச் சாக்லேட்தான் ரொம்ப கெடுதி. படிச்சிருக்கேன்.’ மண்டை குழம்பியவன் போல் சொன்னான். 

‘இந்த மாதிரி சம்மந்த சம்மந்தமில்லாம பேசுறதுதான் எரிச்சலா வருது.’ போன் மீண்டும் அடித்தது. 

‘சம்மந்தம் இல்லாம..’ முணுமுணுத்தான். ‘வேற என்னதான் பேசறது?’ சலித்தான். 

மீண்டும் போன் அடித்தது. அண்ணன்தான் அழைத்தார். விடாமல் மூன்றாவது முறையும் அழைத்தார். 

‘எடுத்துப் பேசு.’ 

நான்காவது முறையும் அடித்தது. எடுத்தேன்.

‘பாப்பா எங்க இருக்க?’

‘சொல்லுண்ணா.’

‘எங்க இருக்கன்னு கேட்டேன்?’

‘சொல்லு. அதான் அந்தக் காலேஜ் இன்டர்வியுல..’

‘பொய் சொல்லாத பாப்பா. நான் அங்கேர்ந்துதான் பேசுறேன். வயித்து வலின்னு சொல்லிட்டு காலைலயே போயிட்டியாமே. என்னாச்சி உனக்கு?’

‘ஆமாம் வயித்து வலிதான். உங்கிட்ட சொன்னா பயப்படுவியேன்னுதான் சொல்லல. சித்ராவக் கேட்டியாக்கும். அப்பறம் கூப்பிட்றேன். டாக்டர பாக்கணும். வரிசைல ஒக்காந்திருக்கேன். பாத்த உடன வந்திட்றேன். நீ வீட்டுக்குப் போ.’

அப்பு என்னைப் பார்த்து ’இது தேவையா’ என்பதைப் போல கை காட்டினான். 

அண்ணன் விடாமல் ‘எந்த ஆஸ்பத்ரி?’ எனக் கேட்டார். நான் பதில் அளிக்கவில்லை. அப்பு பின்னோக்கிச் சாய்ந்தான். அவனது சிறு சிறு அசைவும் என்னுள்ளத்தைக் கொளுத்தியது. கீழ் உதட்டைப் பல்லில் ஒட்டி கன்னத்தைக் குழி செய்தான். உலைபோல் கொதித்தேன். 

‘எந்த ஆஸ்பத்திரின்னு கேட்டேன்’ என்றார். 

‘வரேன்னு சொல்றேன்ல. சும்மா நொய் நொய்னு’ என்று வெடுக்கென பேசி கைப்பேசியைத் துண்டித்தேன். 

‘இப்ப ஏன் அவர்கிட்ட எரிஞ்சி விழற?’

‘உனக்கு அதெல்லாம் தேவயில்ல. எனக்கொரு பதில சொல்லுடா.’ 

அதற்கும் மெளனம். புன்னகைக்கும் குறைவான அளவில் அவன் முகத்தசைகள் அசைந்து நிலைத்தன. வெறுப்பேற்றி வெளியே துரத்தும் அரைப் புன்னகை. 

மீண்டும் போன் அடித்தது. ’எடு’ என்று கண்ணால் சைகை காட்டினான். நான் எடுக்கவில்லை. மறுமுறை அடித்ததும் துண்டித்து ஆஃப் செய்தேன். போன் பொறுமையிழக்கச் செய்தது.

‘ஒரே கேள்வி. என்ன கட்டிக்கிவியா மாட்டியா?’

‘சுஜி.. சுஜி.. உனக்கு ஏம்மா இந்தக் கஷ்டமெல்லாம்..’

‘டேய்.. அதெல்லாம் நீ நொட்ட வேணாம். கட்டிக்கிவியா மாட்டியா. அதுக்கு மட்டும் பதிலச் சொல்லு.’ 

‘கொஞ்சம் அமைதியாகு.’ பார்வையால் என்னை வருடினான். 

கோபம் பொங்கியது. வெளியே மழை சுழன்றடித்தது. சன்னல் வழியே பார்த்தான். ‘நல்ல மழ.’ 

சாரலடித்தது. சன்னலை மூடினான். சட்டென அறை இருளானது. அவன் முகத்தில் விழி மட்டுமே தெரிந்தது எனக்கு. 

‘வேணாம். பொறுமைய சோதிக்காத. பதில சொல்லு. நான் போறேன்.’ 

‘பதில் இல்ல சுஜி. ப்ளீஸ் வீட்டுக்குப் போ. ஆனா மழ விட்டதும் போ.’ 

‘என்ன சொன்ன?’

‘மழ விட்டதும் போன்னு சொன்னேன்.’

‘கட்டிக்க மாட்டேன்னு சொன்னியா?’

‘ஆமா. ச்சி இல்ல. பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். நான் தாஹியதான் கட்டிக்குவேன்.’

‘பரவால்ல. அவள கட்டுவியா இல்லயான்னு நான் கேக்கல. என்னைக் கட்டிக்குவியான்னுதான் கேட்டேன்.’

சிரித்தான். ‘என்ன லூசு மாதிரி கேக்குற.’

‘சீரியஸாத்தான் கேக்குறேன்.’ மீண்டும் ஒருமுறை கெஞ்சுவோம். மண்டியிட்டேன். அவன் தாடையைப் பிடித்து என் கண்களுக்கு நேரே நிறுத்தினேன். ‘நீ அவள கட்டிக்கோ. எனக்குப் பிரச்சனை இல்ல. என்னையும் கட்டிக்கோ’ என்றேன். ’உனக்குப் புடிச்ச மாதிரி அவளே இருந்துட்டுப் போகட்டும். உன்னப் பாத்துக்க, ஏதாவது வேலைக்குப் போய் உனக்குச் சோறு போட, உன்னோட சேர்ந்து புத்தகம் படிக்க, பணிவிடை செய்ய நான் இருந்துட்டு போறேன்.’ என் சொற்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை. 

‘இரு லைட்ட போட்றேன்’ என்று எழுந்தவனை இழுத்து சேரில் போட்டேன். என் கண்களில் கேள்வி எஞ்சி இருந்தது. என் தோளில் கைவைத்தான். எதுவுமே பேசவில்லை. குளிர்ந்த உள்ளங்கை என்னைச் சிலிர்க்க வைத்தது. 

ஒரேயொரு ‘ப்ச்’ கொட்டினான்.   

அதை என்னால் தாங்க முடியவில்லை. விருட்டென எழுந்தேன். இங்குமங்கும் நடந்தேன். சன்னதம் வந்தவளைப் போல் என் முடியைப் பிடித்திழுத்துக் குதித்தேன். டிபன்பாக்ஸை எடுத்துக் கீழே எறிந்தேன். தலையில் அடித்துக்கொண்டேன். 

அமைதியாகவே அமர்ந்திருந்தான். சிறு சலனமும் இல்லை. என் பைத்தியக்காரத் தனத்தை ஏதோ அகத்தாளம் கொட்டி ரசிப்பவனைப் போல தோன்றினான். 

விருட்டென வாசல் நோக்கிப் போனேன். என்னைப் பிடிக்கத் தாவி ஓடி வந்தான். மழையில் நனைந்து விடுவேனாம். மனம் என்னைப் பேய்த்தனத்தின் உச்சத்தில் ஏற்றிவிட்டது. சட்டெனக் கதவை மூடி மேல் தாழிட்டேன். அவன் இப்போது என்னைப் பிடிக்க அருகில் வந்து நின்றிருந்தான். அவனை இறுக்கிக் கட்டியணைத்தேன். ஆக்கிரமித்து ஏழெட்டு முத்தங்களைத் தந்தேன். என் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை அவனால். 

‘ஏய் ஏய் விடு சுஜா’ என்றான். உயிரைத் திரட்டி உடற்பிடியை இறுக்கினேன். 

‘விடணுமா விடணுமா?’ என்றதற்கு ஆமெனத் தலையசைத்தான். ‘அப்ப என்னைக் கட்டிக்கோடா’ என்றேன். 

சிரித்தான். ‘தோ பாரு ஹிஸ்டீரியா கேஸ் மாதிரி பண்ணாத. வீட்ல சொல்லாம கொள்ளாம ஒரு பிரஷர் சிச்சுவேசன்ல வந்திருக்க. அதனாலதான் இப்டி கண்டபடி பேசுற. கொஞ்சம் அமைதியா இரு. இன்னொரு நாள் பேசலாம். இதெல்லாம் நினைச்சா உனக்கே சிரிப்பா வரும்!’ மீண்டும் சிரித்தான். 

‘என்னடா சிரிக்கிற பைத்தியமே. அவன் நெற்றியில் அடித்தேன். கன்னத்தில் அடித்தேன். வா’ என்று இழுத்துச் சென்றேன். நகர்வில் பிடிவிலகித் தப்பினான். அவன் சட்டை கைலியை கண்டபடி இழுத்தேன். கைலி கீழே விழாமல் பிடித்துக்கொண்டான். சட்டை கிழிந்தது.

என்னை இயக்கியது காமம் இல்லை. இயலாமை. அவனை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற செருக்குணர்வு காலிலிருந்து தலைக்கு ஏறியது. குறிப்பாக அவனது வலிந்து கட்டமைத்த நிதானத்தை எப்படியாவது தகர்க்க வேண்டும். இவன் என் அப்புவே அல்ல. அவனைக் கொந்தளிக்க வைக்க வேண்டும். சொற்களால் உணர்ச்சிகளால் என் போக்கிற்கு ஏற்ப அவன் சுழன்றாட வேண்டும். 

அவனுடைய தற்காப்பில் சலித்துப் போய் ஓய்ந்து நின்றேன். திரியைக் கிள்ளிய வெடிபோல் மூச்சை இழுத்து இழுத்து விட்டேன். 

‘சுஜி ப்ளீஸ். நான் சொன்னா கேப்பியா மாட்டியா’ என்று நெற்றி சுருக்கிப் பார்த்தான். 

பன்மடங்கு எரிச்சல் பெருகியது. கைகள் நடுங்கி உடலில் குளிர் பரவியது. பதற்றத்தில் தாறுமாறாக இயங்கினேன். எதுவுமே நானாகச் செய்ததாகத் தோன்றவில்லை. புயலை ஒத்த பேய்த்தனம் என்னை இயக்கியது. லஜ்ஜை கெட்ட அப் புயலின் போக்கில் சக்கைபோல் மிதந்தபடி பறந்தேன். ஆவேசத்தோடு பாய்ந்து அணைத்தேன். 

ஏதோ சொல்லியபடி என் கையைப் பிடுங்கினான். அவனது வலிமை மிகுதியாக இருந்தது. என்னை அறைய ஓங்கிய கையை உடனே மடக்கினான். என் இரு கைகளையும் பிடித்து ஆட்டினான். தோளைப் பிடித்து உலுக்கினான். அவன் கைகள் பட்ட இடங்களில் தீ எரிந்தது. 

பிரமையில் நெடுநேரம் கழித்து  ஓய்ந்து போனேன். நின்றபடி சுவரில் சாய்ந்தேன். அப்படியே சரிந்தேன். கால்மடக்கிக் கைகளால் வளைத்துப் பிடித்து என்னை என்னில் குவித்து நெடுநேரம் அழுதேன். ஊரே சேர்ந்து அடித்ததைப் போல் தளர்ந்தேன். என்னுள் எண்ணங்களோ கேள்விகளோ பதற்றமோ எதுவுமே இல்லை. அகலாத ஒற்றை வலி மட்டுமே நிறைந்திருந்தது. நிலைத்திருந்தது.

எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை.

மரணத்திற்குப் பின் மட்டுமே தோன்றக்கூடிய உவகைபோல் இருந்தது அழுகைக்குப் பிறகான இலகு. யாரோ நெருங்கிய ஒருவர் செத்ததற்காக அழுதேன். அம்மா அப்பாவை விட நெருங்கியவர். ஒருவேளை என் மனத்தில் நான் கட்டி வைத்த அப்பு செத்துவிட்டானா! இல்லை செத்தது நான்தான். நான் செத்ததற்காக நானே அழுதேன். என்னுள் நிறைந்திருந்த மாபெரும் காதல் செத்துவிட்டது. 

கொஞ்ச நேரத்தில் மீண்டும் என்னுள் ஆற்றல் சேகரமானது. எழுந்தேன். கண்ணீர்த் தடத்தோடு என்னையே பார்த்தான். என் கண்களில் அதுவரை ஆடிய பேய் காணாமல் போனதை அறிந்தவன் போல் இலகுவானான். புன்னகைத்தான். 

‘சாரி சுஜி’ என்றான். கண்கள் குளமாக இருந்தன.  

எதற்கு என்று நான் கேட்கவில்லை. . 

‘சாரி டா’ என்றேன். 

‘பரவால்ல விடு’ என்றான். அவனைப் பார்த்துப் பாவமாக இருந்தது. என் பரிதாப நிலையை எண்ணியதும் அழுகையாக வந்தது. 

‘ஆச ஆசயா உன்ன பாக்க வந்தேன். இந்தப் புடவ உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னு நூறு தடவ தவிச்சேன். இப்டியெல்லாம் கேவலமா என்னை நடந்துக்க வச்சிட்ட. சாரி சாரி.. நீ நடந்துக்க வைக்கல. நானாதான் நடந்துகிட்டேன். எல்லாமே புரியுது. தெளிவாப் புரியுது. புரிய ஆரம்பிக்குது.’ 

‘தயவுசெஞ்சி ஃபிரியா விடு சுஜி.’ என் தோளைத் தயக்கத்துடன் தொட்டான். 

’ப்ளீஸ் சுஜின்னு சொல்லாத.’ என்னைச் சூழ்ந்து தாங்குவதற்கு மெளனம் தேவைப்பட்டது. சோறு சிந்திச் சிதறிக் கிடந்தது. வெள்ளை ஓவியம் போல. ஆங்காங்கே மஞ்சள் கண்கள். பிங்க் உதடு. எத்தகைய குழப்பத்திலும் ஒரு ஒருங்கைக் கண்டடைந்து விடுகிறது உள்ளம். 

‘ஏன்டா என் வாழ்க்கைல வந்த?’ சோர்வாகக் கேட்டேன். 

‘விடு. தெரியாம வந்துட்டேன்.’ 

பதில் பேசாமல் என்னைப் புலம்பவாவது விடேன் என்று கெஞ்சத் தோன்றியது. மறுகணமே பேசிப் பயனில்லை என்றும் தோன்றியது. வெறுமையாலான பார்வை பார்த்தேன். 

சற்று நேரத்தில் மூச்சு சீரானது. ஏதோ தெளிவு வந்ததாகத் தோன்றியது. மீதமிருந்த சாக்லெட்டைப் பாதி தந்தான். பசித்தது. முழுவதையும் பிடுங்கித் தின்றேன். 

‘ரெஸ்ட் ரூம்?’

கை நீட்டிக் காட்டினான். 

உள்ளே சென்று கால் மடக்கி அமர்ந்தேன். உடல் கொதிப்பில் மென்மஞ்சளாய் எரிச்சலுடன் வெளிப்பட்டது. முகம் திருப்பினேன். மேல் மூலையில் ஒட்டடை அடைந்திருந்தது. முகம் கழுவி உடை திருத்தி வெளியே வந்தேன். 

‘இந்தா’ என்று ஏதோ ஒரு புத்தகத்தைத் தந்தான். அட்டையில் கருப்புப் பின்னணியில் தீ எரிந்தது. தலை வலித்தது. நூலின் தலைப்பைக் கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை. வாங்கி அப்படியே மேசையில் போட்டேன். கெட்டி அட்டை சத்தமெழுப்பியது. 

‘நான் போறேன்.’ 

’ஏய் என்னாச்சி?’ என்றான். 

‘டோன்ட் வொர்ரி. என் மேல பரிதாபம்லாம் காட்டாத. வாழ்க்கைலயே இன்னக்கிதான் நல்ல பாடம் கத்துக்கிட்டேன். நேரா வீட்டுக்குதான் போறேன். எந்தக் குழியிலயும் விழுந்து சாகப் போறதில்ல. இப்ப பொறப்பட்டாதான் ஆறு ஆறரைக்காச்சும் போய்ச் சேர முடியும். மழ விட்ருச்சி.’ 

‘சுஜி.. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு. இப்படியெல்லாம் கேட்க உனக்கு எல்லாத் தகுதியும் இருக்கு. எனக்கு தான் எதுவுமில்லை.’

மெளனமாகக் கதவை நோக்கி நடந்தேன்.

‘சாப்பாடு வாங்கிட்டு வரேன். இல்லன்னா ஹோட்டல்ல சாப்பிட்டுப் போலாமே.’ 

சிரித்தேன். ‘ரொம்பிடுச்சி’ என்றேன். 

அவன் புருவத்தை ஆட்டினான். அவனோடு சேர்ந்து உண்ண வேண்டும், ஓரிரு வாய்கள் அவனுக்கும் ஊட்டி விட வேண்டும் என்று அப்போதும் ஆசையாக இருந்தது. அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தினால் அபத்தமாக இருக்கும். எஞ்சியிருக்கும் மானத்தைக் காத்துக்கொண்டு திரும்பிவிடு என்று மூளை அறிவுறுத்தியது. அதற்கு இணங்கினேன். 

கதவின் தாழ்ப்பாளை விலக்கினேன். செருப்பை மாட்டும் போது உள்ளே புத்தகத்தை ஓங்கி அடிக்கும் சத்தம். உள்ளிருந்து மெலிதாய்க் குரல் கேட்டது. ‘ஆரம்பத்துலேயே சொல்லியிருந்தா இந்தப் பிரச்சனையே இல்ல.’ முற்றிலும் அந்நியமான குரல். 

ஒரே நாளில் மழை வெயில் கண்ணீர் அழுகை சினம் ஏக்கம் எல்லாம் உச்சம் சென்று வடிந்து போயிருந்தது. முன்னும் பின்னுமாக எட்டு மணி நேரப் பேருந்து அலைச்சல் என்னை மேலும் வெதும்ப வைத்திருந்தது. விடிந்த நாள் இருண்ட நேரத்துக்கு வந்திருந்தது. 

வீடே பரபரப்பாக இருந்தது. கெளரி அண்ணிதான் முதலில் என்னைப் பார்த்தாள். ஓடி வந்து ‘என்னம்மா என்னாச்சி?’ என்று பதறினாள். 

நான் உணர்ச்சியே இன்றி தலையாட்டியபடி உள்ளே நுழைந்தேன். வீட்டுக்குள் போனதும் என்னை நடுவில் அமர வைத்து ஆளாளுக்கு என்னென்னவோ பேசினார்கள். யாரோ ஒருவன் அடிக்க கை ஓங்கி ஓங்கி நகர்ந்தான். முதியவள் ஒருத்தி நெஞ்சில் அடிப்பதும் ஆண்கள் திட்டுவதும் தந்தை உறைந்து நிற்பதும் பிள்ளைகள் ஒளிந்து என்னை வேடிக்கை பார்ப்பதும் தெரிந்தன. ஆனால் அவற்றால் எந்த உணர்ச்சியும் எழவில்லை. நெடுநேரம் சிலையாக அமர்ந்திருந்தேன். ஊழி தேர்ந்தெடுத்த ஒரு கணத்தில் எழுந்தேன். எல்லோரும் அமைதியானார்கள். 

‘அப்பா..’ என்றழைத்தேன். ‘அந்த ஜெயங்கொண்டம் மாப்பிள்ளையவே பெண் பார்க்க வரச் சொல்லிடுங்க’ என்று சொல்லி பெயருக்குச் சிரித்துவிட்டு அறைக்குள் சென்று தாழிட்டேன். 

கோ.கமலக்கண்ணன்

கோ.கமலக்கண்ணன்

கோ. கமலக்கண்ணன் (ஆகஸ்ட் 03, 1986) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர். கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

Font size
Line spacing
Background