நான் என்பதன் அடிப்படைதான் என்ன? அது வெறும் எண்ணத்திரளா அல்லது இருப்பா? அவ்வாறாயின் நித்தியத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படுவதாலேயே அது இருப்பென்று உணரப்படுகிறதா அல்லது நித்தியத்தின் ஒரு துகள் என்பதாலேயே நான் என்று உணர்கிறேனா? அநித்தியத்தின் அங்கமா அல்லது அதன் மீதான எதிர்ப்பா? நான் இல்லாமலே என் வாழ்வு சங்கிலித் தொடர்ச்சி பெறும் என்பதை ஒரு படைப்பாளியால், ஒரு மதலை பெற்றெடுத்தவனால் நம்ப முடிகிறதே! அரூப வடிவில் தோன்றிப் பெருகும் எண்ணங்கள் அனைத்துமே பரு வடிவில் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்பதன் பேருண்மையை எப்படி நிச்சயச் சிந்தை கொள்வது? உண்மை என்பதன் அமீபாய்டு தோற்றத்தை எப்படி நிறுத்தி பொருள்கொள்வது? நூற்றாண்டுகளுக்கு முன் கவி மனமும் புனைவும் சிந்தித்த உற்ற கற்பனைகள் பலவும் பரு வடிவில் நிகழ்ந்துவிட்டன என்பதைத் தெளிவான் போல காண முடியும் அதே சமயம், குறியீடுகளின் இடுக்குகளைக் கிளறிக் கிளறி இன்னும் அடிப்படை சமைத்தலின் அடிமுடியைத் தொட்டுவிட முடியாத திரிசங்கு நிலையில் இருக்கின்றோம் என்பதையும் வியந்துகொள்ள முடிகிறது.
திரவமாகித் ததும்பி வழிந்து ஒவ்வொரு முறையும் வெல்லத் துடிக்கையில் இந்த இருப்பு நிழற்பாவைக் கூத்தாடுகிறது. ஒவ்வொரு மனமும் மூளையின் மேடு பள்ளங்களுக்கேற்ப சிந்திக்கின்றது என்றபோதும் மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களின் ஆழத்தை கொஞ்சம் பயிற்சிக்குப் பிறகு எந்த ஒரு சாமான்யனாலும் உணர முடியும் என்பதே இயல்பு. அப்படியே கீழைத் தத்துவங்களும் தவழ்ந்து பரவி உலகெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றன. அத்தனை ஒற்றை கூறினால் உருவாகிக் கிடக்கிறது உலக மனங்கள். வானத்தை உலகின் எங்கிருந்தும் காணலாம் என்பதால் மனத்தொடர்ச்சியை மறைவானம் என்றும் கருதிட முடியும்.
வாழ்க்கை என்ற சொல்லே மாபெரும் எளிமையாக்கம். அதிகபட்சம் ஒரு தனிமனிதனது குறிப்புகள் மட்டுமே அதில் கம்பீரமாக இடம்பெறக் கூடும். அதையும் அவன் ஆடிபிம்பத்தில் சங்கடத்துடன் பார்த்துச் சிரித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆயினும் அவனது மனம் கொண்டலைந்த அவசங்களை அப்படி குறைமதிப்பிட்டுவிட முடியாது. அதைக் கதைப்படுத்தி ஒரு வாழ்க்கைச் சரிதத்தில் சொல்லி பூர்த்தி செய்துவிடவும் முடியாது. அது நெருப்பின் கரையில் நின்றபடி இருப்பதால் தனது அந்தி இதுவே என்று நினைத்துக்கொண்டிருக்கும். மறுகணமே, வீரித்தெழுந்து எதிர் விளிம்பை நோக்கிப் பறக்கும் அல்லது தீநீச்சல் செய்து தன் பொக்கிசத்தினை எதிர் கரையில் இருப்பவனிடம் ஒப்படைத்துவிட்டு, சாகா வரத்துடன் எழுந்துகொள்ளும். அந்தத் தத்தளிப்பை அளக்க சாதாரண அளவீடுகள் பயன்தரப் போவதில்லை.
சார்லி காஃப்மேனின் திரைப்படங்களில் சில இழைகள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. அவர் அதனைக் கையாளும் வழிமுறைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. ஆயினும் கையாளும் விதத்திலும் மெல்லிய வேற்றுமைகளிலும் (strains) ஒவ்வொரு முறையும் பெரும் பாரத்தை எளிதாகச் சுமந்து முன் நகர்கிறார். அவ்வேறுபாடுகள் ஒரு வகையில் பாக்டீரியாவில் இருக்கும் மெல்லிய நுண்ணோக்கி அளவிலான வேறுபாடுகளைப் போலச் சிறுத்தவை. ஆனால், மொத்தமாகப் பார்க்கையில் மெல்ல வேறு வடிவத்தையும் வேறு விளைவினையும் ஏற்படுத்தும் ஒன்றாகி பெருகிவிடுகிறது. அவரது திரைப்படங்களின் இடையிடையும் வெவ்வேறு தொடர்புகளைக் கண்டுகொள்ள முடிகிறது. ஒரு கதையின் நாயகனது அவசங்கள் அடுத்த நாயகனின் அடிப்படை குணங்களாக மாறுகின்றன. காட்சி அளவில் தொடர்புகள் இல்லாவிடினும் ஆழ்மனக் கூறுகளில் தொடர்புகள் இருப்பதை அடையாளம் கொள்ள முடிகிறது.
மீயெதார்த்தக் கூறுகளையும் மெய்யியல் கேள்விகளையும் அடுக்குகள் சிதைந்த முறையில் வரிசைப்படுத்துவதன் வழியே இருத்தலின் பிடிமானமற்ற தன்மையை முன்வைக்கிறார் சார்லி. விசித்திரமான கதாபாத்திரங்களை ஒற்றை வரியிலான துணுக்குறும் கதைகளுக்குள் உட்புகுத்தி, திரைக்கதைகள் அமைப்பதில் விற்பன்னராக 2000ற்கு முன்பு அறியப்பட்ட சார்லி, தனது திரைப்படங்களின் மூலம் தனித்துவமிக்க இயக்குநராகவும் இன்னும் சில படிகள் மெய்யியல் தளத்தில் மேலெழும்பிய புன்குமிழாகவும் மிளிர்கிறார். அவரது இயக்கங்களில் அறிவின் முடிவிலி நோக்கிப் பயணிக்கத் தேவையான கூடுதல் சுதந்திரமும் தைரியமும் வெளிப்படுகின்றன.
மானுடர்கள் ஒருவரை ஒருவர் அகம் நுழைந்து ஆட்டிப்படைப்பது, அதன் வழியே இறவாமை அடைவது ஆகியவை குறித்து சார்லி காஃப்மேனைப் போல் சமகாலத்தில் திரைப்படங்களின் மூலம் பேசியவர் அநேகமாக எவரும் இருக்கப் போவதில்லை. அவ்விதத்தில் தனித்துவமானவராகவும், கவனிக்கத்தக்கவராகவும் ஆகிறார். 2000ற்கு முந்தைய இவரது படைப்புகளில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பெருக்கும் உளவியலின் ஆழமும் மிகச்சிறந்தவை என்று தண்டனிட்டுச் சொல்லிவிட முடியாது. எனினும், தொடர்ந்து கதாபாத்திரங்களைக் கைப்பாவை போல ஆட்டுவிக்கும் படைப்பாளர் பணியை அரிய செய்நேர்த்தியுடன் வனைந்து வந்திருக்கிறார். தான் பிற்காலத்தில் போக நினைத்த ஆழங்களுக்கு அச்சாரம் செய்பவையாக அவரது ஆரம்பகாலத் திரைக்கதைகள் இருக்கின்றன.
Being John Malkovich-இல் (1999) தற்பாலின உணர்வுகள், மாறுபாலினத் தேர்வு, ஒருவரது தோலடுக்கிற்குள் நுழைந்து அவனாக அனுபவப்படும் இலக்கியத் தன்மை போன்ற தீவிரமான இழைகளை மெல்லிய நகைச்சுவைத்தனத்துடனும் ஒரு தேவதைக் கதையின் வியப்புடனும் சொல்ல முயன்றிருப்பார். அப்படிப்பட்ட திரைக்கதைகளை எழுதித் தீர்த்துவிட்ட வெறுமையிலிருந்தே சத்தியமான கதை எழ முடியும். அப்படித்தான் 2000க்குப் பிறகான அவரது படைப்புகள் இருந்து வருகின்றன. Adaptation (2002) திரைப்படத்தில் ஒரு நாவலைத் தழுவல் செய்வதன் அலைக்கழிப்பையும் அதற்காக எழுத்தாளனது அகம் சிறுவன் போலத் தாவிக் குதிப்பதும் நெஞ்சு விம்மி அழுவதும் எனத் திரிபுகொள்வதை வணிகத் தன்மையுடன் முன்வைத்திருப்பார். திரைக்கதை எழுதுபவர்களுக்கு உலகளாவிய குருவாக கருதப்படும் Robert McKee-ஐ இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அவரது மாணவர்களுள் ஒருவனான சார்லி தன்னையே கதாபாத்திரமாக வைத்திருக்கிறார். சுய சோதனை. எந்தத் திரைக்கதை சூத்திரத்தையும் உடைத்து விட வேண்டும் என்ற உத்வேகம் அவருள் துடித்தபடி இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அவரது திரைப்படங்களில் நான் கவனித்த சில பொதுவான பண்புகளை இங்கே பகிர்கிறேன்.
நினைவுகள் அகத்திலிருந்து உருவாகி, அங்கேயே அலைந்து, உறங்கி, கொதித்து எழுபவை. அதில் புறத்தின் பங்கு இன்றியமையாதது. இரு கரங்களை ஒன்றோடொன்று இறுக்கிப் பிடித்துக்கொள்வதைப் போன்ற பிணைப்பு அகப்புறத்திற்குண்டு. புறத்தின் மின்மினித் துகள்கள் அகத்தின் நினைவுகள். அகத்தின் சமர் பயிற்சிக்களம் புறம். இயல்பாகவே நினைவுகள் புறத்தின் துண்டுண்ட பாதைவனம், முகத்தோற்றம், வெய்யில் மழை போன்றவற்றிலிருந்து திரண்டெழுபவை. புற விருட்சத்தினை மண்ணுக்கடியில் உணர்ந்து நிற்கும் மென்வேர்ப்படலம் போன்றது அகம். அகத்தின் மடியில் புறம் சற்று கதகதப்பு கொள்கிறது அல்லது அகத்தின் கொதிப்பில் புறம் கொஞ்சம் நெய் வளர்க்கிறது. தன் படைப்புகளில் அதைப் பயன்படுத்திப் பார்க்கிறார் சார்லி. அவரது திரைப்படங்களில் அகத்திற்கும் புறத்திற்குமான விழிபடாத கோடுகள் மறைந்துவிடுகின்றன. ஒருவனது மூளையின் சல்கைகளுக்குள் பெரிய நகரங்களோ, நாடக மேடைகளோ வாழ்வின் சஞ்சலங்களைப் போல ஒளிந்துகொண்டிருக்கின்றன. ஏன் பிரபஞ்சங்கள் கூட!
தன் கால்களில் வனத்தைத் தூக்கி அலையும் வண்ணத்துப்பூச்சியைப் போல மூளையின் நுணுங்கல்களில் பிரபஞ்சங்கள் விரியக்கூடும் என்பதை திரைப்படுத்துகிறார். பணியையும் உறவினையும் பிரித்துணர முடியாது என்பதை உணர்த்தக்கூடிய காட்சிகள் – சிறப்பு வரைகலைகள் பயன்படுத்தப்படாமல் மேடையமைப்பு மூலமாகவே ஆங்காங்கே விரவி வருகின்றன. அவை ஏற்படுத்தும் தாக்கம் தனித்துவமானதாகவும் ஆழமானதாகவும் இருக்கின்றன. Synecdoche, Newyork-இல் (2008) தனது பிரம்மாண்டமான மேடை வடிவமைப்பில் ஒவ்வொருவரது பிழையைச் சுட்டிக் காட்டியபடியும், ஒவ்வொருவரது வசனங்கள் குறித்து கருத்து தெரிவித்தபடியும் நகர்ந்தபடியே இருக்கிறார் கோதார்ட். அங்கும் அவரது குறைபாடுகளைத் தெரிவிக்கும் வண்ணம் அவரது மனைவி தன் மகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அதை வலியுடன் கடந்து சென்றுதான் தன் அடுத்த சங்கிலித் தொடர்நினைவுகளைப் பற்ற வேண்டியிருக்கிறது. அறுபடாத எண்ணங்கள் வாய்ப்பது வரம், வீரமும் கூட. போலவே Eternal Sunshine of the Spotless Mind (2004) திரைப்படத்தில் தன் நினைவுத் தொகுப்பில் இருந்து க்ளெமண்டைனின் நினைவுகள் தேர்ந்து அழிக்கப்படும் போது அவளை எப்படியாவது தன்னுள் புதைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் மனத்தவிப்பை அற்புதமான மீயெதார்த்தக் காட்சிகளில் கனவுத்தன்மை கொண்ட துண்டுகளில் உருவாக்கியிருப்பார்.
முந்தைய திரைப்படங்களில் குறிப்பிட்ட எண்ணங்கள் போதிய அளவிற்கு வளர்த்தெடுக்கப்படாமல் போகும் போது அவற்றைத் தனது மெய்யியல் குறித்த பரிசோதனைக்காக தொடர்ந்து வரும் படங்களிலும் நிறைத்துக் கொள்வது சார்லியின் வழக்கம். Being John Malkovich திரைப்படத்தில் மால்கோவிச்சே தனது மூளைக்குள் சென்று சேர்ந்துவிடும் போது தனது அச்சம் நிறைந்த இருண்மைக்குள் வீழ நேரிடுகிறது. அவர் தனது முகத்தினைக் கொண்ட பல்வேறு மனிதர்களை அல்லது மனிதத் திரளைக் கண்டு பயந்து ஓடுகிறார். தனது நிழலே வீறு கொண்டெழுந்து கழுத்தை நசுக்கிப் பிடிப்பது போல உணர்கிறார். பிறருக்கோ ஒருவனது மூளைக்குள் நுழையும் காட்சி பரவசமானதாக இருக்க, தன் அந்தரங்கத்தில் தானே நுழைவதென்பது எத்தனை துயர் என்பதன் உருவகம் அது. அந்தக் காட்சி சில நிமிடங்களே வருவது.
இந்த ஐடியாவை நீட்டி வளர்த்தெடுத்து Anomalisa-வில் (2015) ஒரு முழு திரைக்கதையினை உருவாக்குகிறார். என் கண்களால் பார்க்கப்படும் அனைத்துமே அந்த ஒன்றுதான் என்பதன் அச்சமும் நெருடலும் பற்றி விரிகிறது அந்தக் கதை. அதில் தன்னைத் தவிர வேறு யாராகவும் இருக்கும் எவரும் – ஒருவராகவே இருக்கின்றனர். அவர்களிடம் தனித்துவமோ மாறுபாடோ இல்லை என்ற துயரத்தில் தனியொருத்தியைக் கண்டு மலைமுகடுகளுக்கு ஏறும் பரவசத்திற்குச் சென்று தன் மனத்தின் இழுப்பினால் மீண்டும் உருண்டு பாதாளத்தில் வீழும் கதையாக அது விரிகிறது.
பதற்றங்களின் சேர்க்கை அத்தனை எளிதாக எழுதப்பட இயலாத தொகை. காட்சிகள் ஒவ்வொன்றும் முன்னிருக்கும் காட்சியின் வளத்தை தனது ஆக்ரோசத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாயின் அது வீரியமிக்கதாகிறது. மேலும் பதற்றங்கள் ஆழி என விரிந்திருக்க அதில் கரை கண்ட கலைஞன் என எவரும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் சார்லி என்பதால் மீண்டும் மீண்டும் மானுடத்தின் இயலாமையையும் முழுமையின்மையையும் அவரால் பேச முடிகிறது. அவர் சிறுவனின் அகம் கொண்டுதான் உணர்ச்சிகளையும் உள ஆழங்களையும் எதிர்நிறுத்தி கேள்விகள் கேட்டுக் கொள்கிறார். சார்லி தனது திரைக்கதைக்காக அகாதமி விருது வென்ற Eternal Sunshine of the Spotless Mind முதலாக சமீபத்தில் வெளியான I’m Thinking of Ending Things (2020) வரையிலான படங்களில் அப்படியாக இருத்தல் குறித்த விதிர்ப்பும் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தபடியே இருப்பதைக் காணலாம். விசும்பெனும் அந்தரக்கடல் எந்நேரமும் தன்னைச் சூழ்ந்து மூழ்கடித்து மூர்ச்சையாக்கலாம் என்ற பீதி. காற்று கூர்மைகொண்டு ஈரல்களைக் கிழித்து வெளியேறி தன் துஷ்டத்தனத்தைக் காட்டலாம் என்ற கற்பனை. சந்தர்ப்பங்கள் என்பதையே இல்லாமல் ஆக்கிவிடுகின்ற மரணம் இரண்டாக இருந்திருக்கக் கூடாதா என்ற தீர்விலா ஏக்கம் என அத்தனையும் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆயினும் தீராநோயாக இருக்கும் வாழ்வின் முடிவிலியைச் சொல்லாமலேயே நின்றும் விடுகிறது.
பொதுவாக இலக்கிய – திரைப்பட மேற்கொள்களைத் தருவதில், அதில் இருக்கும் நுண்ணிய செய்திகளையோ கருத்தாக்கங்களையோ முன்வைப்பதில் சார்லி தயக்கம் காட்டுவதில்லை. டார்சல் ரூட் கேங்கிலியாவில் சென்று குடித்தனம் சேரும் வைரஸிற்கான நியாயங்களைப் பரிந்து பேசுவதும், மை டார்லிங் க்ளெமண்டைன் பாடல் குறித்து நினைவூட்டுவதுமாக ஒரு அறிவியல் ஆர்வலருக்கும் அரட்டை பேசும் நண்பனுக்கும் இடையில் அமர்ந்து கொள்கிறார்.
சார்லி, கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுகையில் அந்தந்த கதாபாத்திரங்களின் குணத்தைப் பிரதிபலிக்கும் பெயர்களைச் சூட்டத் தவறுவதில்லை. ‘க்ளெமண்டைன்’ என்பது Eternal Sunshine of the Spotless Mind திரைப்படத்தில் Kate Winslet-இன் பெயர். முதன்முதலில் தாங்கள் இருவரும் தொலைத்து விட்ட நினைவுகள் ஆழத்திலிருந்து உந்தம் தந்து இருவரையும் ஓரிடத்தில் நிலைக்க வைத்துவிடுகிறது. அங்கு பெயர் பரிமாற்றம் நடந்துகொண்டிருக்கையில் க்ளெமண்டைன் என்பது நாயகியின் பெயர் என்று தெரியவருகிறது. ‘Oh , My Darling Clementine’ என்ற தன் மகளை இழந்தது குறித்த பிரசித்தி பெற்ற நாட்டுப்புற பாடல். இதில் பலவிதமான நோக்குகள் கொண்ட பாடல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. ஜான் ஃபோர்டின் My Darling Clementine- இல் (1946) இந்தப் பாடல் டைட்டிலில் வருகிறது. அங்கிருந்து படம் முழுவதும் இப்பாடலின் இசை விரவிக் கிடக்கிறது. அங்கு ஒரு தலைக்காதலின் உணர்வுக்குள் சென்று அடைந்து கொள்கிறது. அப்படி மரபாகிவிட்ட ஒரு கருத்தாக்கத்தை, குறியீட்டினை, தன் திரைக்கதையில் பயன்படுத்திக் கொள்வதில் சார்லிக்குத் தயக்கங்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
சார்லி காஃப்மெனின் சமீபத்திய திரைப்படமான I’m Thinking of Ending Things பற்றி பேசுவோம். எந்த அடிப்படையும் இல்லாத போதும், முதுமையின் கணக்கீடு எப்போதும் நிறைவின்மையைச் சென்று அடைந்தபடியே இருக்கிறது. வாழ்வின் நெடிய வரிகளில் ஆங்காங்கே நம்பிக்கை முகிழ்த்திருந்திருக்கிறது. எனினும், வழமையாக நாம் வெறுப்பைத்தான் யாருக்கும் முன்வைத்திருக்கிறோம். ஆணவத்தின் அணி மூலமாகத்தான் ஒவ்வொருவரும் தன் சுயத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணவம் கட்டுப்பாடு இழக்கையில் வெறுப்பாக வடிவம் மாறுகிறது. ஏழாயிரம் ஆண்டு மெய்யியல் தேடலுக்கும் கூட, கைகளுக்குச் சிக்காத நாட்டியனான காற்றினைப் போல, பிடிதராமல் வழுக்கியபடியே இருக்கிறது வாழ்வு. வெறுப்பின் மூலத்தினைக் கண்டறிவதற்குத் துணையாக இருக்கும் எந்த வழிகாட்டியும் உற்றவரை இழந்த வாழ்வில் பொருளற்றுப் போகின்றது. அதைக் கண்டறிந்து சரிசெய்துகொண்டு எந்தக் கோட்டையைப் பற்றப் போகிறோம் என்ற எண்ணம் எழுகையில் புன்கண்ணீர் சொரிந்து மார்பை நனைக்க ஓலமெழுகிறது. தன்னையோ தன்னைச் சுற்றி இருப்பவரையோ, கருக்கும் தீ மழையைப் பொழிந்து பொழிந்து தணியவேண்டிய கட்டாயம் உருவாகி விடுகிறது.
நிகழ்வுகளைப் போலவே சிந்தனைகளும் வலுவானவை. முதுமையைச் சுட்டி, தன்னை ஏளனம் செய்யும் உரிமை இளைஞர்களுக்கு அகவையின் வேறுபாட்டால் அளிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் எனது நடையை, வயிறை, சுருங்கிய தோலை எள்ளிச் சிரிக்க முடியும். என் சிதிலமடைந்த சுவரில் என்றோ புத்துணர்வுடன் மிளிர்ந்து வந்த சித்திரங்களை மெல்ல துலக்கி, ஒளிபாய்ச்சி, கண்டு வியக்க எவரும் முன்வரப் போவதில்லை. காலத்தின் நிர்தாட்சண்யம் என்னைக் கிழித்துப் போய்விட்டது. ஆனால், என் மூளையின் எச்சமிருக்கும் கட்டுப்பாடுகள் நான் என்ற ஒரு கருத்தாக்கத்தின் கீழ் இருக்கையில் காலத்தை மடித்து, கலைத்துப் போட்டு, என்னுள் விளையாடி மகிழும்.
அது நான் படைத்த பிரபஞ்சம் என்பதாலேயே அங்கு வாழும் மாந்தர்களை எனக்குத் தோன்றியவாறு உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களது வசனங்களை நான் எழுத முடியும். நான் மனதில் நினைத்ததை இன்னும் அழகாகவும் செறிவாகவும் பேசுபவர்களாக அவர்கள் இருக்கின்றனர். எனக்கு துக்கம் தரும் செய்திகளைக் கூட கூடுதல் அழுத்தத்துடனேயே தருகின்றனர். யதார்த்தத்தின் இருளில் திரிகின்ற எவரையும் என் பிரபஞ்சத்தின் கம்பத்தில் கட்டி வைத்து நாய்க்குட்டி போல் ஊளையிட வைக்க என்னால் முடியும். அவ்வப்போது வந்து குறுக்கீடு செய்யும் நிஜத்தை மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் என்னால் இந்த இறைவன் வேடத்தை திருப்திகரமாக நிகழ்த்த முடியும்.
மரணத்தை தத்துவத்தில் சமன் செய்ய நினைப்பதே மனிதத்தின் குழந்தைத்தனமான விளையாட்டுதான். அதற்கு தீர்வு காண முடிவது இயல்வதல்ல எனினும் தீர்வு காண்போமேயானால் அது நிஜமான தீர்வாக இருக்கப் போவதில்லை. மரணம் இறப்பவருக்கு சுமை நீக்கம், அவரால் இன்புற்றிருந்தவர் கணக்கில் சுமை கூட்டல். ஆனால் இருக்கையிலேயே தனது அறிவின் தன்மையாலும் கறார்தனத்தின் உச்சத்தினாலும் அந்நியனாகிவிடுகின்ற ஒருவனது மரண எதிர்நோக்கு என்பது மெய்யியலுக்கும் தேவையற்ற சுமை. அது கல்லைக் காலால் எத்தி எத்தி நடக்கும் விளையாட்டு மட்டுமே. ஆனால் அதையும் கலாபூர்வமாக நிகழ்த்திப் பார்ப்பதென்பது கலைஞர்களின் பிரயர்த்தனம். நிஜத்தில் அப்படி அவர்கள் மெய்யியலை அகழ்கிறார்களா என்பதை விட நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையேயான சமன்பாட்டைத் தீர்க்க முயன்றிருக்கிறார்களா அல்லது அத்தகைய முயற்சியில் ஒற்றை பிம்பத்தையேனும் நம்பகத்தன்மையுடன் கட்டமைத்திருக்கிறார்களா என்பதே கவனத்திற்குரியது.
அறிதல், சுதந்திரம் என அத்தனையும் தந்துவிடுவதாக ஆசையின் சுண்டுதல் அழைக்கிறது. ஆனால் அது எந்தப் புள்ளியில் அகங்காரமாகவும் தனித்தலாகவும் மாறத் தொடங்குகிறது என்பது புரிவதே இல்லை. அது போலவே ஆன்ம பலம் நம்முள் இறங்கத் துவங்குவதற்கு உண்டான ஒரு வரையறைக் கோடு புலப்படுவதில்லை. எப்போதோ மீன் துள்ளலுடனான பாதங்களும் மலர்மணல்கள் நிரம்பிய பாதையும் நம்மை வந்து சேர்ந்துவிடுகிறது. அதைத் திறந்து பார்க்க மனம் தயாராகும் போது தனிமையும் முதுமையும் மட்டும் துணை இருக்கிறது.
தணிந்திருக்கையில் காலம் குளிர்ந்து விறைப்புகொண்டு சூழ்கிறது. கொந்தளிப்பின் போது திரைச்சீலைகளுக்குப் பின் நிழலாகி ஓடி ஒளிந்துகொண்டு வழிவிடுகிறது. மொத்தத்தில் காலம் நாய்களுக்கு பிஸ்கட்டை காட்டி வலைக்குள் வீழ்த்தும் ஈர்ப்புத்தன்மையை தனக்குள் வைத்திருக்கிறது. அழகியின் முலைக்குவை போல, புன்னகையில் விரியும் மலரைப் போல நம்மைச் சுருக்கி மடித்து மடியிலிட்டுக் கொள்ளும் சுகந்தம் போலவெல்லாம் காலம் பல்வேறு வேடமேற்று அலைகிறது.
சில வகை எண்ணங்கள் நம்மை அழகின் வயம் தள்ளி இன் தாழிடுகிறது. அவற்றுடன் தொடர்புகொண்டு அடிமைப்படுதல் சுகம். குறைந்தது நம்மை அழகாய் கற்பனை செய்யும் திறனேனும் மீதமிருக்க வேண்டும். அத்தகைய கற்பனைகளில் கூட உலர் தோலும் பீழை ஒழுகும் விழிகளும் தோற்றம் கொள்ளும் அளவிற்கு இயல்பின் துயர் வீரியம்கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தில் முதல் அரைமணி நேரத்தில் வரும் மகிழுந்து பயணக் காட்சிதான் எத்தனை வியக்கத்தக்கது. அதில் வரும் உரையாடல்கள் மெல்ல முழுக் கதைக்குமான திறப்பாகவும் புதிர்களாகவும் அமைந்திருக்கின்றன. பெண் சொல்லும் கவிதையும் (Bonedog) மனப் பிரதிபலிப்புகளும் ஜேக் தன்னைப் பற்றியவை என்று குறிப்பிடுகிறான். அவள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளின் மீதத்தை இவன் சொல்லி தன் சொற்றொடரைப் பேசுகிறான். அவள் மனதில் பேசுவது இவனுக்குச் செவியில் விழுகிறது. தன்னுள் தானே உரையாடுவது போல, பிம்பப் பேச்சு நிகழ்கிறது. அத்தகைய கற்பனை திரையில் விரியும் தோறும் மனம் பிரம்மிக்கிறது. நம்முள் நிகழும் சஞ்சலங்களையும் நினைவுப் பிறழ்வுகளையும் நினைவு மீட்டல்களையும் கதாபாத்திரங்களாக மாற்ற மேதைகளால் இயல்வது எத்தனைச் சிறியதாக நம்மை உணரச் செய்வது! யானையால் யானை யாத்தற்று என்பது போல மனத்தின் பைத்தியக்காரத்தனத்தை மனதால் மடக்கிப் பிடிக்கப் பார்க்கும் வித்தை, விந்தை!
ஒரு கற்பனை தோன்றும் போதே, அதன் உயர்வு அகலம் திண்மையுடன் உருவாகி வரும் போதே, அது புனைவின் தன்மைக்கு இடம் கொடுத்து விடுகிறது. உண்மை என்பதே இப்பிரபஞ்சத்தின் மாபெரும் பொய். உண்மை என்பதும் கூட கற்பனையின் ஒரு சிறு பகுதி என்றே கொள்ள முடிகிறது. அப்படி தொடர்ந்து நிகழும் கற்பனைக்கு சிறு கருணை உண்டு. உடலில் முட்கீறி கிழிபடும் போதும் கொஞ்சம் கற்பனையில் நாம் அன்னையின் மடி துயில, மலரின் ஸ்பரிசத்தை நயக்க வாய்பிருக்கிறது. தவளையின் நாவில் ஒட்டிக்கொண்ட பூச்சியைப் போல் நாம் அதற்கு நம்மை ஒப்பளிக்க வேண்டும். எப்போதேனும் இயல்பிருப்பு நம்மை எழுப்புமாயின் கற்பனைத் தவளை நம்மை வெடுக்கென துப்பி, துயரில் ஆழ்த்த வாய்ப்பிருக்கிறது.