அகம் சுட்டும் முகம் (பகுதி 6): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
1 comment

“சார், சினிமாவில் சினிமாவா?“ என்றொரு முகச்சுழிப்பு உண்டு. என்ன பிரச்சினை என்று கேட்கப்போனால் முதலில் ராசி இல்லை என்ற பதில் வரும். எந்தப் படங்களும் ஓடியதில்லை என்று ஒரே வீச்சு. அப்படி இல்லையே என்று துவங்கி நாம் இருவர், சர்வர் சுந்தரம், சினிமாப் பைத்தியம், ஏணிப்படிகள், நட்சத்திரம் என்று பட்டியல் போட முற்பட்டால், இறுகின முகத்துடன் சினிமாவில் சினிமா வேண்டாம் என்று காரணம் கூறாமல் மறுத்துவிடுவார்கள். ராசியில்லை போன்ற இன்ன பிற சொல்லாடல்கள் பற்றி என்ன சொல்லுவது? அது தொன்றுதொட்டு சும்மாவேனும் பேசி வருகிற ஒரு கட்டுக்கதை. பேய்க்கதைகள் போல. முக்கியமாக, சினிமா பற்றி விமர்சிக்க சினிமாவிற்கு முதுகெலும்பு இருந்ததில்லை. அப்படி இருந்தாலும், அதை நொறுக்கிவிடுவார்களோ என்பது சுலபமான பீதி இல்லை. நடைபாதையில் தொண்டை நீர் வற்றக் கத்தி அன்றாடப் பிழைப்பு நடத்தும் சாதாரண மனிதன் துவங்கி கார்ப்பரேட் திமிங்கலங்கள் வரை யார் சுரண்டினாலும் நாங்கள் அறம் முழங்குவோம் என்று பெருமிதம் கொள்கிறவர்கள், தாங்கள் அன்றாடம் புழங்குகிற உலகின் மோசடிகள் பற்றி வாய் திறக்க விரும்புவதில்லை என்பதுதான் இதில் உள்ள முக்கிய நிஜம். குறைந்தபட்சம், அவர்கள் ஒரு விமர்சனத்துக்குக்கூட இடம் வைக்காமல் தங்களைப் பிசியாகக் காட்டிக்கொண்டு முகம் மறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கே.ஜி.ஜார்ஜ் ஒரு கதையைச் சொல்ல வந்து, குறுக்கே வந்து விழும் எதையுமே ஏறிட்டுப் பாராமல் மேலே, மேலே போகிறார். அவர் சினிமாவுக்கு என்று எதையும் பொருட்படுத்தவில்லை. எதையும் தனியாக நிறுத்தி ஒளி பாய்ச்சவுமில்லை.

பாலு மகேந்திரா ஷோபாவைக் கொன்றார் இல்லையா, இதைப் பற்றி ஒரு மலையாள இயக்குநர் படம் எடுத்திருக்கிறார் என்கிற செய்தியை நானும் படித்திருக்கிறேன். பின்னால் பாலுதான் ஷோபாவின் தற்கொலைக்குக் காரணம் என்று அந்தப் படம் சொல்லுவதாகப் பலரும் சீரியசாக எழுதித் தங்கள் மார்பை நிமிர்த்தி இருக்கிறார்கள். படம், இது எதுவுமே அல்ல. படம் அவர் இயலாமையைச் சொல்லுகிறது. அவளுடைய கஷ்டங்கள் யாவையும் தாங்கிக்கொள்கிற வண்ணம் அவருக்கு வலு இல்லை என்று சொல்லுகிறது. அவர் ஆண்களாக உள்ள உன்னையும் என்னையும் போன்றவர். அவருக்கு நழுவிச் செல்லுவதைக் காட்டிலும் வேறு மார்க்கம் இல்லை. சொல்லப்போனால், படம் சொல்லி முடித்ததைத் தாண்டின பெரிய துயர்கள் அவருக்கு இருந்தன. அந்தக் காலம் முழக்க ஒரு இடத்தைப் பற்றிக்கொள்ள முடியாத தனிமையில் அவர் இருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட லேகா என்கிற சினிமா நடிகையின் கதை இது. அதை பிளாஷ்பேக்கில் சொல்லித்தான் விளங்கிக்கொள்ள முடியும்.

லேகயுடே மரணம், ஒரு பிளாஷ்பேக் (1983)

இந்தப் படத்தில் லேகாவிற்கு ஒரு அம்மா இருக்கிறாள். சினிமா அவளுடைய கனவு. அதைத்தான் அவள் தனது மகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ளப் பார்க்கிறாள். யாருடைய தூண்டுதலால் அவர்கள் சென்னைக்கு வந்தார்களோ, அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான் என்கிறார்கள். அவன் ஒரு பெண் புரோக்கராக இருந்திருக்கிறான். அதற்கு அப்புறம் சந்தித்த சிலருள், பேசாமல் ஊருக்குக் கிளம்பிவிடுங்கள் என்று சொன்னவர்களும் இருந்திருக்கிறார்கள். லேகாவின் அப்பா ஊருக்குக் கிளம்பலாம் என்று சொல்லும்போது அதற்குச் சம்மதிக்கிற லேகா, அப்படிக் கிளம்புவதற்கு முடியவில்லை. அவள் சந்திக்க வேண்டிய வாழ்க்கைக் காட்சிகள் பலவும் இருந்தன.

மனம் தொட்டு, அதன் மூலம் உடல் தொட்டு, ஒரு சீரழிவை ஒருவன் துவங்கி வைக்கிறான் என்றால், அப்புறம் வெறுமனே, நேரடியாக உடல் தொடுபவர்களால் பெரிய சுரணை எழுவதில்லை. ஜார்ஜ் அவைகளை மிகச் சாதாரணமாகக் கடக்கிறார். அன்றாடங்களை நகர்த்தி, சாப்பிட்டு, பிழைத்துக்கொண்டு சென்று சினிமாவைத் தொட வேண்டுமென்றால், சிற்சில நேரங்களில் வழங்கிக் கொடுத்து காசு வாங்குவது தவிர வழியில்லை.

எல்லாம் ஒரு தொழில்தான் என்பதை எந்த நரகத்திலுள்ளோரும் தத்தம் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் உயிர் தரிக்க காரணங்கள் இல்லாமல் முடிந்துவிடும்.

லேகா ஒரு நடிகையாக வளர்ந்து வருவது திரைக்கதையில் அற்புதமாக வந்திருக்கிறது. எந்த முன்னறிவிப்பும், மும்முரங்களும் இல்லாமல் அதை லேகாவின் மனம்கொண்டு நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். அவளுக்கு, தான் ஒரு நடிகை என்பதனால், அதில் ஒளிர்ந்துவிட வேண்டும் என்கிற துடிப்பிருக்கிறது. மிகவும் சல்லிசான பாதைகளில் நடந்து வந்து, பசி விலகிப் போனதும், மனித முகங்களில் சலிப்பு தோன்றி, சொல்லப்போனால்- பிற சக்திகளால் அவள் உந்தப்படுகிறாள். அவளை வட்டமிட்டுக் கொத்திக் கொத்தி மாமிசம் தின்னுகிற உறவுகளை எவ்வளவு காலம் கள்ளமுள்ள புன்னகையால் ஏறிட்டுக்கொண்டிருக்க முடியும்?

அம்மாவின் பேராசை அவளைப் பாதாளத்தில் அழுத்துகிறது.

பழைய மாமா பயல்களை அவளது அம்மா கவனமாகக் கையாளுகிறாள். மகளை அனுப்பி வைக்கும்போது, எழ வேண்டிய குற்ற உணர்ச்சியைக் காட்டிலும் முக்கியமானது வந்து சேரப்போகிற தொகை.

கட்டி எழுப்பி முடிக்க வேண்டிய வீடு.

தங்க முட்டையிடும் வாத்தைப் பராமரிப்பது, பாதுகாப்பது என்கிற பதற்றத்தில் லேகா அடியும் உதையும்கூட படுகிறாள். அவளுடைய உழைப்பு பொருட்படுத்தப்படுவதில்லை. ஒரு சினிமா ஆர்டிஸ்டின் வேலையை யார்தான் சரியாக அறிவர்? அதன் ஜீவனை உணர்ந்தோர் யார்? ஜனக்கூட்டத்தின் களிப்பைக் குறிவைத்து பொய் புனைகிற அத்துமீறலுக்கு, என்னென்ன ஜாலம் வனைய வேண்டியிருக்கிறது? ஒரு பாடலின் வளைவுக்கு அப்புறம் வரவேண்டியிருந்த ஒரு வேசித் தளுக்கலுக்கு எத்தனை முறை காத்திருந்தோம், எத்தனைக் கோணங்களை மாற்றி வைத்தோம் என்று யாரோ ஒரு இயக்குநர் ஜனங்களை நோக்கி சாகசம் பேசுகையில், ஆயிரம் முறை இடுப்பு திருகி, சிரிப்பை வெறுக்கிற நடிகைக்கு வரும் சோர்வை, ஒரு இரசிகன் நினைத்துப் பார்க்க வேண்டியிராது. அப்புறம் இந்த ரசிகர்கள் என்பவர்கள் யார்? ஒரு பெரும் மக்கள் திரள். அதற்கு ஒரு வாய் இருக்கிறது. அது எதுவும் பேசும். அதை விடுங்கள், அதற்கு என்று ஒரு மர்ம உறுப்புகூட இருக்கிறது. தனது தேவைக்கு அது எதையும் கற்பனை செய்யும். பதினாறாயிரம் தலைகள் கொண்டு சுழலுகிற அசுரத்தின் முன்னால் ஒற்றைப் பெண் நின்று கொடுப்பதற்குத் தேவையான ஆத்ம வலிமை, அது சாத்தியம்தானா?

எல்லாத் துயரையும், வலியையும், வதையையும் அவள் சுரேஷ் பாபு என்கிற இயக்குநரின் மீது சாய்ந்து, உதற விரும்பினாள். 

தனது இருப்பின் பயத்தில் அவர் அவளை உதறினார்.

அங்கே அவள் முடிகிறாள்.

அவளுடைய வாழ்க்கை முடிகிறது.

அவள் உயிர் தரிக்கக் காரணங்கள் இல்லை.

பாதியில் நிறுத்தப்பட்ட சிறுகதை போல லேகாவின் மரணம் நடக்கிறது என்பதை ஜார்ஜின் சினிமா அப்படியே பிரதிபலிக்கிறது. நாம் வெட்டவெளியில் கைவிடப்பட்டவர்கள் போல நிற்பதைப் படம் பார்த்த பலரும் உணர்ந்திருப்பார்கள். அவள் மனதைக் கல்லாக்கி, நம்பிக்கையை மீட்டெடுத்து, கோழைத்தனத்தை விலக்கி, கசந்த தொழிலை மறுபடி செய்து, அதன் போலித்தனங்களைத் தழுவிக்கொண்டு எதற்கு வாழ வேண்டும்? படத்தில் அவளுடைய அம்மாவைத் தவிர வேறு அண்டிப்பிழைக்கும் கூட்டம் ஒன்று உண்டு. லேகா ஓடிவிட்டாள் என்பதை ஒரு நிமிடம்கூட சகித்துக்கொள்ள முடியாத அவர்களில் ஒரு சோத்து தடியன் அவளது முகத்தில் ஆசிட் ஊற்றப் போவதாகச் சொல்லும் காட்சியில் எனக்கு மனம் திடுக்கிட்டது. அவளால் மறுபடி சினிமாவில் நடிக்க முடியாது என்பதினால் அல்ல, கூட்டத்தின் பொக்கிஷமாகக் கொள்ளப்பட்டிருந்த ஒருத்தி, அதில் இருந்து புகை போல ஆவியாகி மறைவது வந்து போயிற்று, அதனால்.

படத்தில், திலகன் ஒரு கதாபாத்திரம் செய்திருக்கிறார். ஜர்னலிஸ்ட். அவருடைய நடை, உடை, பாவனைகளைப் பார்க்க வேண்டுமே? அவர் தன்னை அறம் பாவிக்கிற நீதிமானாகக் கருதிக்கொண்டிருப்பது தெரியும். சொல்ல முடியாது, எந்தத் துப்பாக்கியை மார்பினால் தள்ளிக்கொண்டு முன் சென்று தர்பார் வசனம் பேசி உயிரைத் தியாகம் செய்வாரோ, ஆனால் சுரேஷ் குமாருடன் வாழ வந்துவிட்ட லேகா, ‘இப்போது கர்ப்பமாக இருக்கிறாளா?’ அது அவருக்குத் தெரிய வேண்டும். ஏனென்றால் மக்கள் அதைத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என்கிறார் அவர். அதை அவர் மிகவும் கண்டிப்புடன் சொல்லுகிறார்.

படத்தில் ஒரு நடிகனாக மம்முட்டி செய்திருக்கிறார். அவருக்கு ஒரு நடிகையை எப்படி உபதேசித்து வளர வைப்பது என்பது தெரியும். வெளிவருகிற எந்தப் படங்களின் பேட்டியாக இருக்கட்டும், அதன் கதாநாயகி, கதாநாயகன் நடிப்புக்குத் தரும் டிப்சுகளைப் பாராட்டிச் சொல்லுவது ஒரு மரபல்லவா? அவள் தன்னைப் பற்றி என்ன பேச வேண்டும் என்பதற்காக அவர் தன்னையும் மீறி பாடுபடுகிறார்தான். நான் எப்போதும் புதுமுகங்களை வரவேற்கும் ஆள் என்றுமே சொல்லுகிறார். அவள் கை மீறிப் போகும்போது அவர் கவலைப்படவில்லை. அதைக் காட்டிலும், லேகாவை அவ்வப்போது விபச்சாரத்துக்கு அழைக்கிற ஒரு பெரும்புள்ளி மாமா, அவள் நான் இனிமேல் தொழிலுக்கு வர மாட்டேன் என்பதை உறுதியாகக் கூறும்போது, அவர் ஆல்பத்தில் இருக்கிற அவளுடைய புகைப்படத்தைக் கிழித்துக்கொண்டே சிரிக்கிறார்.

அவர்கள் யாருக்குமே தெரியும், ஒரு லேகா போனால் ஆயிரம் லேகாக்கள்.

அதுதான் வரிசையாக வந்துகொண்டேயிருக்கிறார்களே?

படத்தில் எனக்குப் பிடித்தது வேணு நாகவள்ளி செய்த கேரக்டர். அது அந்தத் திரைக்கதையின் விதி போல இருந்தது அல்லது லேகாவின் வாழ்வில் இருந்து தவறிப்போன விதி. கழுத்தைப் பிடிக்கிற கூட்டத்தைத் தள்ளிவிட்டு அவளை விரும்பிய அவனுடன் சென்றிருந்தால், அவள் ஒருவேளை நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியும் என்பதைச் சொல்ல விரும்புகிறது படம். ஆயின் என்ன செய்வது? அவள் பெரிய டிராபிக்கின் நடுவே இருந்தாள். யார் எப்படி இருப்பார்கள் என்பதைத் தீர்மானித்துகொள்ள அங்கே ஒரு அவகாசமும் இல்லை. யார் யாரையோ நம்புவதும், நம்பாமல் போவதுமெல்லாம் அப்போதிருக்கிற அதிர்ஷ்டத்தை மட்டும் பொறுத்திருக்கிறது. சினிமா ஆசாமிகள், நட்சத்திரங்கள் எல்லாம் கடவுளைத்தான் நம்பிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களை நம்ப வேண்டுமென்றால், ஜோசியம் சொல்கிறவர்களை மட்டுமே அவர்களால் நம்ப முடியும்.

பரத் கோபியைப் பற்றித் தனியாக ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லை. முழுமையான கற்பனையிலும் இல்லாமல், யதார்த்தத்திலும் உடன்பட ஆகாமல், தன்னை விடுதலையான ஒருவனாக நினைத்துக்கொள்கிற அந்த அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்லுவது? இந்த இணைய காலத்தில் சரியான ரோமியோவாக வந்துவிட ஆகாமல், அதே நேரம் டொமஸ்டிக் பிடுங்கல்களை வெறுத்துக்கொண்டு அசடு வழிகிற பெரும் கூட்டத்தையே அவர் எனக்கு நினைவுறுத்திக்கொண்டிருந்தார். அந்த மாதிரி அவ்வளவு அலட்சியமான உடல்மொழி. 

லேகாவாக நளினி. அவரைக் கண்டிப்பாக இயக்குநர்தான் கொண்டு வந்திருக்கிறார். ஷோபா நடித்த படத்தை இயக்கினவர் இல்லையா? அவரை இவரில் எடுத்து வைத்திருக்கிறார்.

எஸ்.எல்.புரம் சதானந்தன் என்பவர் திரைக்கதை செய்திருக்கிறார். பல இடங்களிலும் வியந்தேன். எவ்வளவு கச்சிதம்? எடிட்டர் உடனிருந்திருக்கிறார். வழக்கம் போல எம்.பி. சீனிவாசனின் இசை. அடக்கமான செயற்பாடு. எனக்கு எப்போதுமே பிடித்த ஷாஜி என். காருனின் ஒளிப்பதிவு. இயக்குநர் எல்லோரையும் வைத்துக்கொண்டு ஒரு பெரிய அவலத்தின் காவியத்தைச் சொல்லி முடித்திருக்கிறார்.

சினிமாவை அறிந்தோர் மறுக்க முடியாத படம். அறிய முற்படுவோரும் மறக்க முடியாது.

*

முந்தைய பகுதிகள்:

  1. ஸ்வப்னாடனம்
  2. உள்கடல்
  3. மேள
  4. கோலங்கள்
  5. யவனிகா

1 comment

எம் முரளி December 14, 2021 - 12:37 pm

நான் இந்த படத்தை தூர்தர்ஷன் ஒளிபரப்பும் போது பார்த்ததுண்டு. இந்தக் கட்டுரை அந்த நினைவுகளை மீட்டன. கோபியின் நடிப்பும் டைரக்டரும் அணுகுமுறையும் எனக்கு பிடித்திருந்தது. இந்தக் கட்டுரை மேலும் சில நுண்ணிய கருத்துக்களை புரிந்துகொள்ள மிகவும் உதவி செய்தது. நன்றி

Comments are closed.