இசையின் முகங்கள் (பகுதி 7): தனிமையின் பாடகன் – ஹரீஷ் ராகவேந்திரா

0 comment

தனிப்பாடல்களுக்குத் திரைப்படங்களின் உள்ளே பேரிடம் உண்டு. இன்னும் சொல்வதானால் காதல் பாடல் என்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தை எல்லாப் படங்களிலும் எடுத்துக்கொள்ளக்கூடிய டூயட் சேர்ந்திசை பாடல்கள்கூட கதையில் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் தனிப்பாடல்களை முழுவதுமாக அப்படிச் சொல்லித் தள்ளுவதற்கில்லை. கதையோடு கூடியெழுகிற மனத்தின் குரலாக ஒலிப்பவை தனிப்பாடல்கள். கதாபாத்திரத்தின் எண்ண வெளிப்பாடாக உள்ளார்ந்த உதடுகளைத் திறந்து பாட முனைவதாக அமைக்கப்பட்டவை பல தனிப்பாடல்கள். இரசிகன் ஒருவன் பெரும்பாலும் டூயட் பாடல்கள் வரும்போது எழுந்து செல்வதைக் காட்டிலும் தனிப்பாடல்களின் போது எழுந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். இது துல்லியமான கணக்குகளின் அடிப்படையில் சொல்லப்படுவதில்லை. தனிப்பாடல்கள் பொதுவாக நம்பகத்தன்மைக்கு வெகு அருகில் இயங்குவதாகக் கருதுகிறேன். வாழ்வில் டூயட் பாடல்களின் வருகை என்பது அரிதினும் அரிது. ஆனால் தனிப்பாடல்கள், குழுப் பாடல்கள் அப்படி அல்ல.

அதீதமான கொண்டாட்டத்தை, அதிக சோகத்தை காட்சிக்குள் கொண்டுவருவதற்கு மற்ற எந்தப் பாடல்களைவிடவும் தனிப்பாடல்கள் அதிகம் இடம் தருபவை.

“உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா” என்பதாகட்டும், “எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்கிற பாடல் ஆகட்டும், “பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்” என்ற பாட்டாகட்டும், “புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற பாடல் ஆகட்டும், நட்சத்திர பிம்பங்களைப் பராமரிப்பதற்கும் கதையின் மத்தியில் அவற்றைத் துல்லியமாய் நிலைநிறுத்துவதற்கும் பெரிதும் உதவி புரிவது தனிப்பாடல். கதைக்குள் நடிகனைத் தோற்ற ஏற்றம் செய்து பொருத்துவதற்கும் அவை செயலாற்றுகின்றன.

எண்பதுகளில் இலக்கின்றி இருந்த தனிப்பாடல்கள் எழுபதுகளில் எதார்த்தமாக இடம்பெற்றன. அவையே அறுபதுகளில் ஆங்காங்கே தென்பட்டன. ஐம்பதுகளில் மிகக் குறைவான தனிப்பாடல்களே படத்தின் ஆரம்பத்தில் இடம் பிடித்தன. அதற்கு முன்னால் அப்படி இல்லவே இல்லை என்றுகூட சொல்ல முடியும். தொண்ணூறுகளில் ஒரு படத்தின் வடிவத்துக்குள் தனிப்பாடல் என்பது அதன் தொடக்க அரைமணி நேரத்தில் கட்டாயம் இடம்பிடித்து விடக்கூடிய ஒன்றாகவே மாறிவிட்டது.

தொண்ணூறுகளில் ஒரு படத்தின் கதை பெரும்பாலும் நாயகனைச் சார்ந்து ஓடி நிறைவதாகவே அமைக்கப்பட்டது. நாயகன் சர்வ வல்லமை பொருந்தியவன், அவன் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அடித்து நொறுக்கி இல்லாமலாக்கி ஜெயிப்பான். யாராலும் வெல்ல முடியாத வில்லனை வெல்லக்கூடிய ஒரே ஒருவனாக நாயகன் இருப்பான். இப்படித்தான் பார்த்துப் பார்த்து இந்தியப் படங்களின் கதைகள் உண்டு பண்ணப்பட்டன. சண்டைக் காட்சிகளுக்குச் சமமான வீரதீர சாகச உணர்தலை நாயகனைப் போற்றிப் பாடப்பட்ட தனிப்பாடல்கள் மாற்றின. கதையின் வேறு வழியேதுமற்ற ஒற்றைப் பேரருளாக நாயகன் மாற்றம் பெற்றான். குழுப்பாடல்கள் ஒருவிதமான அடங்கிச் செல்லும் மனோபாவத்தை, தலைமையை அங்கீகரிக்கும் பணிதலை உணர்த்தும் வண்ணம் அமையப் பெற்றன. குழுப்பாடல்கள் இங்ஙனமிருக்க தனிப்பாடல்களோ “நான் யார் தெரியுமா? என்னால் எல்லாமே முடியும் தெரியுமா? நான் எப்படிப்பட்டவன் என்பதை நீ உணர்ந்துகொண்டால் பிழைப்பாய்” என்று சங்கேத எச்சரிக்கை கலந்து சவால் செய்யும் பாடல்கள். விவரணை, எடுத்துச்சொல்லல், விளக்கம் எனப் பல அடுக்குகளைக் கொண்டு அத்தகைய தனிப்போற்றிகள் அமைந்தன. ரஜினி, கமல் எனப் பெரும் நட்சத்திரங்களுக்கு உருவாக்கப்பட்டாற் போலவே நாளடைவில் எல்லோருக்குமான புனைவாக இத்தகைய பாடலுருவாக்கம் நிலைபெற்றது.

பாட்டுகள் திரைப்படத்தின் செயற்கை ஜரிகைத் தூவல்களாகவே இன்றுவரை தொடர்பவை. அவற்றுக்கு அவற்றின் உருவம், வடிவம், வழங்கப்படும் விதம் என எல்லாமும் பார்த்துப் பார்த்து மாற்றம் கொள்வதைப் போல் தோற்றமளித்தாலும் உண்மையில் தனிப்பாடல், குழுப்பாடல், சேர்ந்திசை டூயட் பாடல் என்பவை பெரும் வகைகள். சந்தோஷம், துக்கம் என இரண்டாக உடைக்கலாம். இன்று பாடல்கள் திரைப்படங்களைத் தாண்டி வெளியே வந்துவிட்டன. கலந்துகட்டியாகப் பாடல்களின் உருவம் பார்த்துப் பார்த்து அமைக்கப்படுகின்றன. நாயகன் ஒற்றைப் பிம்பமாகப் பேருருக்கொண்டு நிற்கிறான். எல்லா மதிப்பீடுகளையும் தன் புறம் திருப்பிக்கொள்ளும் சர்வாதிகார மனோபாவம் நாயக பிம்பத்தின் மேல் கட்டமைக்கப்பட்டு இன்று தன்னைத்தானே எண்ணவும் வெல்லவும் முடியாத ஒரே ஒருவனாக நாயகன் உலாவுகிறான். கதை மிகவும் குவிந்ததாகப் பெரிய விரிவும் நகர்தலுமின்றி ஒற்றை அல்லது சில புள்ளிகளை நோக்கிய ஓட்டங்கொண்டு நிறைவதாக மாற்றம் பெற்றிருக்கிறது. நாயகன் இப்போது முன்பிருந்தவன் அல்லன். அவன் மிகத் தனிமையானவன். மனம் குவிந்தவன். அதிகம் பேசாது என்ன நினைக்கிறான் என்று கொஞ்சமும் யூகிக்கத் தராத ஒருவன். தனக்கு என்ன வேண்டுமென்று தெரியாதவனாக, குழப்பம் மிகுந்தவனாக அவன் மாறிவிட்டான். எல்லோருமே இருளுக்குள் சென்று கலந்த பிற்பாடு வெளிச்சம் ஒரு புள்ளியாய்த் தோன்றினாலும் கண்கள் கூசுகின்றன. கதைகள் மாறிவிட்டன. பாடல்களும்தான்.

பாடல்கள் தன் க்ளைமாக்ஸை அடைந்துவிட்டன எனத் தோன்றுகிறது. திரைப்படம் பாடல்களை முற்றிலும் வெளித்தள்ளுவதற்கு இன்னும் அதிகம் போனால் பத்து ஆண்டுகள் பிடிக்கலாம். அதன் பின் பாடல்களற்ற படங்களே அதிகம் வரும். பெரிதாய்ப் போனால் சில படங்களில் பின்புலப் பாடல்கள் ஒன்றிரண்டு தென்படலாம். திஸ் இஸ் தி எண்ட் ஆஃப் சாலமன் கிரண்டி.

இருக்கட்டும். தனிப்பாடல்களுக்கு மறுபடி வரலாம்.

தனிப்பாடல்களின் பேருலகம் மிகப்பெரியது. உண்மையில் அது ஒரு பொன்னுலகம். எந்த விதமான நாயகச் சாயலும் இல்லாமல் புத்தம் புதிய நடிக முகங்களுக்குக் கிட்டிய பல்வேறு தனிப்பாடல்கள் காலம் கடந்து நின்றதையும் மறக்க முடியாத, மறுக்க முடியாத நிமிகர் பிம்பங்களாக அவையே மாறி நிறைந்ததும் வரலாறு. இதுவொரு முரண் சுவைதான். முன்சொன்ன எல்லாவற்றிற்கும் மாற்றாக அமைந்தவை அல்லது அமைய முற்பட்டவை இத்தகைய பாடல்கள். எந்தப் பின்புலமும் இல்லாமல் நாயகன் மிகப் புத்தம் புதியவனாக ஒரு அல்லது சில படங்கள் நடித்த அல்லது முதல் பட நாயகனாக இத்தகைய தனிப்பாடல்கள் காலம் கடப்பதற்குக் காரணம் என்னவாயிருக்கும்? நாயக பிம்பத்தைக் கட்டமைக்கவும் வழிபடவும் முற்பட்ட முந்தைய பாடல்களிலிருந்து அவை தனித்தது பெருங்காரணம். மற்றவை பலவும் உப காரணங்கள்.

வசந்தம் பாடி வர வைகை ஓடிவர என டி.ராஜேந்தர் இசையில் பாலு பாடிய பாடல் ஒருதலை ராகம் படத்தில் சங்கர் எனும் கேரள வரவுக்குக் கிடைத்தது. பின் வந்த காதல் ஓவியம் தொடங்கிப் பல படங்கள், பல முகங்கள், எத்தனை ஆயிரம் பாடல்கள்! இத்தகைய கானநதியின் குரலலைகளாய்ப் அவை பெருக்கெடுத்துப் பயணிக்கின்றன.

ஒரு பாடல் படத்தையும் அதில் நடித்த நடிகரையும் தாண்டிப் பார்க்கப்படுவது ஒருவகையில் ஆரோக்கியமான விஷயம் என்றாலும் ஒரு நாயகப் பிம்பம் தூக்கி நிறுத்தப்படாமல் போகையில் அதுவே அந்தப் படம் தோற்பதற்கான இடரையும் ஏற்படுத்தக்கூடும். இதனால்தான் ஓடும் குதிரையின் பின்னாலேயே தொடர்ந்து ஓட முனைந்தவர்களின் பெருங்கூட்டமாய்த் தவித்தது சினிமா. ‘ரிஸ்க் எதுக்கு?’ என்ற இரண்டே சொற்களில் முடித்து வைக்கப்பட்ட முயல்வுகள் ஏராளம், கலை மிகவும் குறுகலான வணிக விதிகளுக்கு உட்பட்டுத் தன்னை நிலைநிறுத்தப் போராடுகிறது. மறுபக்கத்தில் தைரிய மீறல்கள் கலையை நாளும் உச்சத்தில் அமர்த்தப் பிரயத்தனம் செய்தபடி நேர்கின்றன. எல்லா அமைப்புகளிலும் இந்த இரட்டைத்தன்மை உண்டு. சினிமா எனும் பெருமக்கள் கலையின் எல்லா உப சங்கதிகளுமே இருபுறக் கூர்மையுடனான வாள்பிடி நடவுகளே.

தொண்ணூறுகளில் இந்த நிலை இன்னும் இறுக்கமாக மாறியது நாயகன் தனிப்பாடலில் மிக இலகுவான எழுச்சி அடைய முற்பட்டான். நாயகனைப் போற்றிப் பாடுவதை எல்லாப் படங்களுக்குமான ஆகமமாகவே கைக்கொள்ளத் தொடங்கியது சினிமா. எல்லாப் படங்களிலுமே அனேகமாக இப்படியான ஒரு பாடல் அமைக்கப்பட்டது. அது பில்டப் பாடலாகவும் கொண்டாட்ட பாடலாகவும் துக்கத்தைப் பறைசாற்றும் சோகப் பாடலாகவும் மாறி மாறி அமைக்கப்பட்டன. சில படங்களில் இவை எல்லாமே இடம்பெற்றதும் உண்டு.

அடையாளமற்ற தனிப்பாடல்கள் நிச்சயமாய் தனக்கென்று ஒரு இலக்கியத் தரத்தை ஒளித்து வைத்திருப்பதை உணரலாம். எல்லாக் கூட்டங்களிலும் தனிக்கும் விலக்க மலர்கள். அவற்றை நம்மால் தனியே இனம் பிரித்து கொண்டாட யாதொரு தடையும் இல்லை.

இந்தப் பாடலை நான் மிகத் தற்செயலாகக் கேட்டேன். இந்தக் கட்டுரையின் ஆதிநாதம் இந்தப் பாடலாகத்தான் அமைய முடியும். எத்தனையோ பாடல்கள் இருக்க, ஏன் இந்தப் பாடல் என்பதற்கு எப்படி விடை இல்லையோ, அதே போலதான் எத்தனையோ பாடகர்கள் இருக்கும்போது ஏன் இந்தப் பாடகர் என்பதும் மிகத் தற்செயலான, ஒன்றோடொன்று பிணைந்து கூடிய காரணிகளே.

ஹரீஷ் ராகவேந்திராவின் குரல் அலாதியானது. அத்தனை ஒழுங்கான, பிசிறற்ற குரலைக் கண்டறிவது கடினம். அந்த நேர்தன்மையே அதிகப் பாடல்களைப் பாடுவதிலிருந்து சற்றே நகர்த்திச் சென்றிருக்கவும் கூடும். தான் பாடுகிற பல பாடல்களின் ஆன்மாவாகவே ஒலிக்கத் தலைப்பட்டார் ஹரீஷ். முகமற்ற பல பாடல்களின் முகமாக மாறியவர். துல்லியமும் செல்திசை ஒழுங்கும் கொண்ட பாடல்கள் ஹரீஷ் ராகவேந்திராவின் குரலைத் தனிக்கச் செய்கின்றன. இந்த நூற்றாண்டின் சிறப்பான பல பாடல்களைப் பாடி வருபவர் ஹரீஷ். அவருடைய குரல், ‘சோலோ’ எனச் சொல்லப்படுகிற தனிப்பாடல்களோடு பெரிதும் ஒட்டி இயங்கத் தலைப்படுவது. தனிப்பாடல்களைப் பாடும்போது ஹரீஷின் குரல் பன்முகத்தன்மையோடு விரிவடையத் தொடங்குகிறது. சில பாடல்கள் ஒரு புனித யாத்திரை போன்ற கனமும் மிருதுவுமாய்ப் பெருக்கெடுக்கின்றன. வலியும் இன்பமும் பிரித்தறிய முடியாத கீற்றுக்களைப் போல் ஒட்டிச் செல்கின்றன. அத்தகைய பாடல்களை நேசிப்பதன் மூலம் நேயர் மனங்களில் ஒரு செல்லப் பிடிவாதமாகவே ஹரீஷின் குரல் அப்பிக்கொள்கிறது. பாடலாகவே குரலும் குரலாகவே வரியும் இசையாகவே மனமும் மாறுகிற அணுக்கமான புள்ளி அது. அங்கே இருந்து விலகி ஒலிக்கத் தொடங்குவதுதான் ஹரீஷின் குரல். அவரோடு சேர்த்துப் பார்ப்பதற்கு இன்னொரு குரல் இல்லவே இல்லை என்பது என் கருத்து.

நெளிதலேதுமற்ற நதியாய்ப் பெருகுவது சுவையா, பிழையா? ஹரீஷின் குரல் ஏற்ற இறக்க மாறுபாடுகளுக்கானது அல்ல. சின்னச் சின்ன நுட்பங்களுக்கானது. வேறு யாராலும் திருப்பித் தரமுடியாத நளினங்களாய்ப் பல்குவது அதன் தனித்துவம். தன் குரலைத் தன் உரிமையாக மாத்திரமல்ல, ஒரு ஒழுங்கென நிர்ணயிப்பது அவரது ஸ்டைல். இந்த யுகத்தின் குரலாகப் பல பாடல்களை ஒலித்து வருபவர் ஹரீஷ். என் தேர்வில் அவருடைய ஆகச்சிறந்த பாடல் “மெல்லினமே மெல்லினமே” எனத் தொடங்குவது. ஷாஜஹான் படப்பாடல். மணிஷர்மா இசை. வைரமுத்து எழுதியது. இதன் பல்லவி முழுக்க மழையின் முன் கணம் நேர்கிற துளித்தூறல்களைக் குரலின் வழி தூவினாற்போல் ஹரீஷ் பாடினார்.

சரணத்தில் காதல் ஏக்கத்தின் முடிவறியாத் தன்மை ஒன்றினைத் தொட்டெடுத்து மிகுதிப் பாடல் முழுவதிலும் அதனைப் படர்த்திச் சென்றிருப்பார். நிகழ்வினூடான பதற்றம் ஒன்றைப் பாடலுக்கான குரலுக்குள் கொணர்ந்ததெல்லாம் செவ்வியல் அற்புதம்.    

இந்தப் பாடலின் கிளாஸ் ஆன இடம் என இந்தப் பத்தியைச் சொல்வேன்

மண்ணிலே செம்மண்ணிலே

என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு

துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி

கனவுப் பூவே வருக

உன் கையால் இதயம் தொடுக

எந்தன் இதயம் கொண்டு

நீ உந்தன் இதயம் தருக.

அதிலும் “மண்ணிலே செம்மண்ணிலே” எனும்போது குரல் குழைவதாகட்டும், “ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி” எனும் வரியின் கவித்துவத்தைத் தன் உள்ளத்தில் நனைத்தாற் போல் பாடித் தந்ததாகட்டும்,

கனவுப் பூவே வருக

உன் கையால் இதயம் தொடுக

எந்தன் இதயம் கொண்டு

நீ உந்தன் இதயம் தருக

எனும்போது முற்றிலும் தன்னைக் கரைத்தழித்துக் காதலாகவே மாறி உயிர்க்கின்ற இடம் அபாரம்.

ஹரீஷ் என்றால் நினைவுக்கு வரும் அடுத்த பாடல் “முதல் கனவே முதல் கனவே” என்று ஆரம்பிக்கிற மஜ்னு பாடல்.

இந்தப் பாடல் ஒரு வனாந்திர லாலி. வேகமும் சோகமும் ஒன்றிணையும் வினோத இதம் இதன் அடித்தளம். ஹாரிஸ் ஜெயராஜ் இசைத்த ஸ்ருதி சுத்தமான இசைக்கோவை கொண்ட பாடல் இது. பலமான தாள இசையும் சாய்ந்தொலிக்கும் துணைத் தூவல்களுமாக அட்டகாசம் செய்திருப்பார். பொங்கிப் பெருகும் உடனொலிக் குரல்களின் தொகை பாடலைப் பேரழகாக்கித் தரும். காதலின் தொடக்க காலத்தில் ஏற்படக்கூடிய விலக்கமும் அடைதல்களுமாகவே தன்னளவில் பெருகி முடிவதாக இதனை அமைத்திருந்தது இன்னொரு நளினம். ஓ.எஸ்.அருண், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரீஷ் ராகவேந்திரா ஆகிய மூவரும் இணைந்து பாடிய மெல்லிசை ஜாமூன் இது.

வைரமுத்து ஹாரீஸோடு இணைந்த முதற்படம் மஜ்னு. இதன் பின்னணியில் வேறொரு சுவை உண்டு. இந்தப் படம்தான் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகிப் பணியாற்றிய முதற்படம். ஆனால், வெளிவந்த முதற்படம் மின்னலே. இரண்டிலுமே பாடல்கள் அனாயச உயரந்தொட்டவை. இரண்டிலுமே ஹரீஷ் பாடினார். ஆரம்பங்கள் அழகானவை என்பதைப் பகிர்ந்துகொண்ட இருவராக ஹாரீஸூம் ஹரீஷும் ஒன்றிணைந்தனர். மின்னலே படத்தில் “நெஞ்சைப் பூப்போல் கொய்தவளே” என்று அசகாயம் செய்கிற பாடல் காதலின் வீழ்ச்சியைத் தொட்டுக் காட்டும் கானத்திரள். அதிலேயே “அழகிய தீயே” என மற்றொரு பாட்டும் ஹரீஷூக்குக் கிட்டியது.

திருவிளையாடல் ஆரம்பம் தனுஷின் முக்கியமான தொடக்ககாலப் படம். இதில் ஹரீஷ் பாடிய துல்லியத் தேன் நிரவல் பாடல் “விழிகளில் விழிகளில்” எனத் தொடங்கிற்று. இந்தப் பாடல் காதலை ஒரு சொல்லென்று அறியாத வேற்றுமொழிக்காரர்களின் காதுகளுக்குள்ளேயும் காதலைப் பற்ற வைக்கும் வல்லமைத் தீ கொண்டு ஒலிப்பது. இதன் நகர்வு இசை இன்னொரு பேரழகு. கூடியும் குன்றியும் மாறி மாறி ஆட்டம் காட்டியபடி நகர்ந்துசெல்வது “விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்” பாடல். ஒரு பல்லாங்குழி கோரஸ் தன்மையில் உடனொலிக்கும் குரல்களோடு இயைந்து இதனைப் பாடினார் ஹரீஷ். இந்தப் பாடலெங்கும் அத்தனை காதலை எங்கிருந்து பெயர்த்துத் தந்தார் என்பது வியப்பைத் தரும். சின்னச்சின்ன நகாசு வேலைகளில் நம்மையெல்லாம் பித்தாக்கித் தீர்வார் ஹரீஷ். அத்தனை அந்தரங்கமாய்த் தன் காதலைச் சொல்ல முடியுமா என்கிற வியப்பாகவே பாட்டு முழுவதும் ஒலித்துச் செல்லும்.

பூவிலே செய்த சிலையல்லவா

பூமியே உனக்கு விலையல்லவா

தேவதை நின்றன் அருகினிலே

வாழ்வதே எனக்கு வரமல்லவா?

மேகமாய் இங்கு நீயடி

தாகமாய் இங்கு நானடி.

உன் பார்வைத் தூறலில் விழுந்தேன்

அதனால் காதலும் துளிர்த்தடி.

விவேகா முன்பில்லாத் தமிழை அமுதாக்கித் தந்த பாடல் இது. சொற்களெல்லாமும் பூதோறும் தீப்பற்றும் வார்த்தைக் கோலம்.

பித்தைப் பத்து மடங்காக்கித் தந்த சுளைபலா சுவையூறிய பாடல் நிலா. காதலின் தீராப் போதாமைகளை இந்த அளவுக்குப் பாட்டுள் புகுத்துவது அசாத்தியம். சன்னமான விலக்கமும் புதிரூடிய ஐயங்களும் புரிதல் போதாமையும் விட்டுக்கொடுக்க மனமற்ற பிரியப் பிடிவாதமும் இன்னபிறவுமெல்லாம் இந்தப் பாடலின் ஆன்மாவிலிருந்து ஊற்றெடுத்து மனங்கெடுத்ததென்றால் அது மெய்யே. ஹரீஷ் பாடிய தனிப்பாடல்களில் அத்யந்தமான நேசத்தைப் பேசிய பாடல் இது. மறுஜென்மங்களிலும் மறக்கவிடாத மாயச்சன்னம் இந்தப் பாடல்.

சர்க்கரை நிலவே பாடல் சோகத்தின் கூட்டுப் பிரார்த்தனை. தனிமையின் பேருரு. அலைதலின் ஆவேச மீறல். எதுவும் செய்ய இயலாத கையறுநிலையின் கான மல்லிகை. இப்படி ஒரு பாடலை முதன்முறை கேட்கக் கிடைத்தபோதே நேய மனம் சுக்குநூறாய் உடைவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஹரீஷ் ராகவேந்திரா தனிப்பாடல்களின் இளவரசன் என்பதை நிறுவ ஒரு அழகிய உதாரணம் இந்தப் பாடல். அவரது குரல் ஒரு தாளக்கருவி போல் ஒலிக்கப் பார்ப்பதும் இணைப்பிசைத் தூவல்கள் அவர் குரலாகவே மாற முனைவதும் இந்தப் பாடலின் பெரிய வெளிச்சங்கள். பல்லவியைத் தொட்டெடுத்துப் பாடி நிறைக்கும் புள்ளி ஒரு முடிவற்ற பகலைப் போல் விரிகிறது. ‘நீ இல்லையே’ என்ற சொல்லால் திசைதோறும் பெருகுகிறது.

மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே

அதைப் பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்க்கை என்னும் காட்டை எாித்து

குளிா் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

இந்த இடத்தைக் கடக்கையில் பாடல் இரவாகிறது. தூரத்தே தென்படுகிற நிலவை நோக்கிய ஏக்கப் பொழிவாகவே மாறுகிறது.

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும்

அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே

சொல்ல வார்த்தை இல்லை

இந்த இடத்தில் மலை வாசஸ்தலத்தை நோக்கி மெல்ல உயர்ந்தேறுகிற வாகனத்தின் வளைதல்களாகவே பாடல் மாற்றமெடுக்கும். வலியூடிய புன்னகை ஒன்றைப் பாட்டுக்குள் கொணர்ந்தாற் போல் பாடினார் ஹரீஷ். இறங்கி இறங்கி உயர்ந்தேறுவது இந்தப் பாடலின் அமைப்பு. அதனை இசையாலும் குரலாலும் பிரித்து நிர்வகித்த வகையில் பாடல் காலம் கடக்கிறது. ஒரு பாதி மழை ஹரீஷின் பெயர் சொல்லிப் பொழிந்தது. “சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்” என்ற வரியைப் பாடும்போது ஹரீஷின் குரல் சொல்லொணா மிருதுக் குழைவொன்றைத் தோற்றுவித்திருக்கும். பொதுவாகவே வாலியும் வைரமுத்துவும் ஒரே படத்தில் பாடல் எழுதும் போதெல்லாம் இருவரின் பாடல்களுமே கூடுதலாய்ச் சிறக்கத் துடிக்கும். அது இயல்பாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ரைவல்ரி. வைரமுத்து தன்னைத் தாண்டி ஓடிய பல பாடல்கள் அப்படியான பகிர்பணிப் படங்களில் இடம்பெற்றவையே. எதிரே ஆடும் ஆட்டக்காரனைப் பொறுத்ததுதானே விறுவிறுப்பும் விரைந்தெழுதலும்?

ஹரீஷின் இன்னொரு மின்னிப் பொன் மரகதப் பாட்டு சாமுராய் படத்தில் ஆகாயச் சூரியனை எனத் தொடங்கும் டூயட். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் எல்லாப் பாட்டையும் வைரமுத்து எழுதிய படம். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்தது. ஹரிணியும் ஹரீஷும் பாடிய டூயட் சேர்ந்திசைப் பாடல். ஒரு மாதிரிக் குழைவான மிதச் சிதிலத்தோடு எப்போதும் ஒலிக்கும் குரல் ஹரிணியுடையது. சந்தோஷத்தை அதிகரித்துத் தருவதை மிக எளிதாகச் செய்துவிடும் லாகிரித் தன்மை அவரது குரலில் பெரும்பலம் என்றால் சோகத்தைக் கட்டுக்குள் நிறுத்தவல்ல இயல்பு கூடுதல் பலம். ஹரிணி தன் குரலால் நடப்புக் காலத்தை ரத்துசெய்து வேறொரு நிழல் காலத்தை நிஜமென்றாக்கித் தருகிற மாயம் கைகூடிய குரலாளினி. “நிலா காய்கிறது” என்று அவர் தொட்டுத் தொடங்கும் போது காலம் கைகட்டி வேடிக்கை பார்க்கும். “டெலிஃபோன் மணி போல்” பாடலில் வழிய வழிய ஹரிணி தோற்றுவித்த காதலேக்கமும் பொஸ்சிவ்னஸ் எனப்படுகிற பேரன்புப் பெரும்பற்றும் வேறு பாடலில் இன்னொருவர் உண்டாக்க முடியாத தனியழகு. இந்தப் பாடலை ஒரு பல்லக்கைப் போல் ஆக்கித் தன் குரலை அதில் அமர்வித்து அழகு பார்த்தார் ஹரிணி. இசையும் குரலும் பல்லக்கைத் தாங்கிப் பயணித்தன. ஹரீஷின் குரல் இந்தப் பாடலில் காதலின் பிரிய ஒழுங்கோடு ஒலித்து நிறைந்தது. ஹரிணியின் குரலோ அதற்கு நேரெதிர் திசையில் காதலின் பொன்னுரிமைகளைக் கைப்பற்றுகிற விடாப்பிடிவாதத்தோடு தொனித்தது.

என்னைக் கண்டதும்
ஏன் நீ ஒளிகிறாய்

டோரா போரா மலை சென்றாலும்
துரத்தி வருவேனே

என்று ஹரீஷ் பாடுகிற இடம் ஒரு ரயில் நிறைய லாலி எனலாம்.

உன்னை நீங்கினால்
எங்கே செல்வது
உன் உள்ளங்கையில்
ரேகைக்குள்ளே ஒளிந்துகொள்வேனே

இந்த இடத்தில் ஹரிணியின் மென் குரல் வருடல் புயல் காற்றின் பசிகணம் போல் ஒலித்தது விசேடம்.

சோகச்சார்பும் தனிமைத் தேடலும் கொண்ட பல பாடல்களைப் பாடுகிற வாய்ப்பு ஹரீஷூக்கு கிடைத்தது. Amma Nanna O Tamila Ammayi என்கிற படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியை ருசித்தது. அதில் இடம்பிடித்த “சென்னை சந்த்ரமா” பாடலை அதற்கு இசையமைத்த மறைந்த இசையமைப்பாளர் சக்ரி சொந்தக் குரலில் பாடியிருந்தார். படத்தைப் போலவே அந்தப் பாடலும் அப்படியொரு பெருவெற்றிப் பாடல். காதலின் அந்தகாரத்தை, கணகால இம்சித்தலை, உள்மனக் குமுறல்களை சுயபகடியாக்கி, ஒட்டாத மகிழ்வொன்றாக்கிப் பாடப்பட்ட பாடல் இது. படம் தமிழில் மீவுருக் கண்டது. இங்கே ஸ்ரீகாந்த் தேவா இசையில் தெலுங்கின் ‘சென்னை சந்த்ரமா’ பாடல் அப்படியே “சென்னை செந்தமிழ்” என்று மாற்றம் கண்டது. இங்கே பாடியவர் ஹரீஷ். சக்ரியால் உருவாக்க முடியாத அல்லது அவர் உருவாக்காத வேறொரு மனவுலகத்தைத் தன் குரலால் உண்டாக்கினார் ஹரீஷ். நுட்பமான காதல் உறுதியும் சந்தோஷத்தின் மீது நம்பகம் கொள்ளாத புதிர்கண வியத்தலுமாகப் பாடினார் ஹரீஷ் இந்தப் பாடலின் பல்லவியின் நிறைகணத்திலிருந்து முழுப்பாடலையும் விண்ணேகும் வித்தகமாக்கித் தந்தார் என்றால் சரிவரும். “காதல் கதகளி” என்ற இரண்டு சொற்களைக் கொண்டு தன் கானக் கையொப்பத்தைக் காற்றெலாம் இட்டிருப்பார்.

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே

எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே

காணாத துயரம் கண்ணிலே ஓயாத சலனம் நெஞ்சிலே

இறைவா சிலநேரம் எண்ணியதுண்டு

உன்னைத் தேடி வந்ததுமுண்டு

சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா 

என்ற பாடல் மயக்கம் என்ன படத்துக்காக ஹரீஷ் பாடிய வித்தியாசமான பாடல். இதற்கு இசை ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இளையராஜா இசையில் “குண்டுமல்லி” எனத் தொடங்கும் ஒரு பாடலைச் சொல்ல மறந்த கதைக்காக ஹரிஷ் பாடினார். இலேசான கிறக்கக் குரலில் நகர்ந்து நிறைந்த பாட்டு இது.

சிற்பி இசை. கோடம்பாக்கம் என்றொரு படம். வந்ததே பலருக்குத் தெரியாமற் போயிருக்க வேண்டும். இன்றைக்கும் அந்தப் படத்தின் ஒற்றை ஞாபகமாகப் பேருருக்கொண்டு ஒலித்து நிறைவது இந்தப் பாடல்.

“ரகசியமானது காதல், மிகமிக ரகசியமானது காதல்” எனத் தொடங்கும் பாடல். ஹரிணியும் ஹரீஷூம் சேர்ந்து பாடிய டூயட். விஜய் சாகர் இந்தப் பாடலை எழுதினார்.

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் 

முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்

ஒருதலையாகவும் சுகம்அனுபவிக்கும் சுவாரசியமானது

காதல் மிக மிக சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது

சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை

மனமானது சொல்லும் சொல்லை

தேடித் தேடி யுகம் போனது

இந்த சோகம்தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தை போல

அது சுதந்திரமானதும் அல்ல

ஈரத்தை இருட்டினைப் போல

அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

(ரகசியமானது காதல்)

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது

கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது

கேட்கும் கேள்விக்காகத்தானே பதில் வாழுது

காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல

காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல

 (ரகசியமானது  காதல்)

இந்த நூற்றாண்டுக்கென நூறு பாடல்களை எடுத்துக் கோப்பதானாலும் சரி, இந்தப் பாடலை விட்டுவிட என் மனம் ஒப்பாது. இந்தப் பாடலில் அடங்கிய நதியாய்ப் பின்புல இசையும் திமிறிப் பாயும் குதிரையென்று இதன் வரிகளும் முரண் கூட்டாய் மிளிர்பவை. தன் குரல் மாயத்தால் இரண்டையும் கட்டிப் போட்டது ஹரீஷின் குரல். உடன் பாடிய ஹரிணியின் குரலையும் உறுத்தாமல் பயன்படுத்தினார் சிற்பி. இருவருமே பாடலின் இரண்டு பகுதிகளைப் பகிர்ந்து பாடிய பாடல் இது. ஹரீஷைத் தவிர வேறு யார் பாடி இருந்தாலும் இப்படிப் பாடித் தரவே முடியாது என்பதான மேலும் ஒரு பாடல் இது. அத்தனை காதல், அத்தனை பவ்யம், அத்தனை ஈர்ப்பு, அத்தனை ஒழுங்கு. எல்லாவற்றையும் யாரால் கலந்து இப்படி ஒரு குரல் மலர்க்கொத்தாக்க முடியும். ஹரீஷைத் தவிர?

அடுத்த வைரம், “தொட்டுத் தொட்டு போகும் தென்றல்” பாடல். காதலின் மாபெரிய முறையிடல். இந்த மாயத்தை யார் நிகழ்த்தினார்கள்? இதனை இசைத்த யுவனா பாடிய ஹரீஷா என்று யாராலும் பகுத்தறியவே முடியாது. இந்தக் காதல் அப்படியான இருமடல் பூத்த மலர் என்றால் பொருந்தும். தன் குரலாகவும் தானே நிழலாகவும் பாடினார் ஹரீஷ். சின்னதொரு அடைதலும் அதன் இறுதியிலொரு விலக்கமுமாக இந்தப் பாடல் முழுவதையும் தன் குரலால் தாங்கி நகர்ந்தார் ஹரீஷ். இதன் இசை ஒரு ஓயா மழை. யுவனின் உச்சவுயரத் தாக்குதல் இந்தப் பாடல். ஹரீஷின் தனித்துவம் பாடலெங்கும் துகள்களாய், மலர்தலாய் விரவிக் கிடந்தது. பலமான இணைப்பிசை எழுப்புகிற அதே தீவிரத் தன்மையைத் தன் குரலால் வார்த்துக் காட்டினார் ஹரீஷ். அவருடைய பாடக மேதைமை முற்றிலுமாய் வெளிப்படும் பாடல் இது.

இந்தப் பாடல் படிப்படியாக வளர்ந்தோங்கும் ராட்சஸ மரமொன்றின் ஆகிருதியைத் தனதே கொண்டது. உயரமும் ஆழமுமாய் மாறி மாறித் தீராமல் தொடர்ந்துகொண்டேயிருக்கும் மாய அலைச்சலைத் தன் குரல்வளையிலிருந்து தோற்றுவித்துக் காட்டினார் ஹரீஷ். உயிரையே சொற்களாக்கினார் நா.முத்துக்குமார். காதலின் கடைசிவரை சென்று திரும்புவது எனக் கட்டியம் கொண்டாற்போல் இசைத்தார் யுவன். எல்லாரையும்விடவும் இந்தப் பாடலைத் தன் ஆன்மாவை உருக்கிப் பாடித் தந்தார் ஹரீஷ்.

“இந்தக் கனவு நிலைக்குமா? தினம் காணக் கிடைக்குமா? உன் உறவு கிடைத்ததால் புது உலகம் கிடைக்குமா?” என்ற வரிகளை ஹரீஷ் கடப்பதெல்லாம் அசாத்திய வசீகரம். “நேற்றுப் பார்த்த நிலவா?” எனும்போது ‘போதும்’ என்று கல் மனவாசிகளுக்குக்கூடக் காதலைத் தாங்காமல் கதறத் தோன்றும். பித்தும் தொன்மமும் கலந்து இசையமைத்தார் யுவன். செல்வராகவனுக்கு இசைக்கும் தருணங்களில் யுவன், செல்வராகவன், நா.முத்துக்குமார் மூவருக்கும் படைப்பூக்கம் உச்சம் தொட்ட பாடல்கள் பல பிறந்தன.

7ஜி ரெயின்போ காலனி படத்தில் ஒரு பாடல் “கனா காணும் காலங்கள்” எனத் தொடங்கும். இதைப் பாட முடியாத பாட்டுமுறைகளைத் திறந்து பாடினாற் போல் தோற்றம் தந்தார் ஹரீஷ். எந்த நூற்றாண்டிலிருந்தோ தொனியை அள்ளி வந்து நம் தருணங்களின் மீதெல்லாம் படர்த்தினார். தன் பின்புல இசையைக் கொள்ளைத் தீவிரத்தோடு படைத்தார் யுவன். நா.முத்துக்குமாரின் பேனா தங்கத்தைத் தீர்த்து வைரத்தை விளையச் செய்தாற் போல் வண்ணமும் வாசமுமாய்ப் பாடல் புனைந்தது.

“தனிமையில் கால்கள் எதைத் தேடிப் போகிறதோ, திரி தூண்டிப் போன விரல் தேடி அலைகிறதோ?” என்ற இரு வரிகளில் குரலால் ஒரு யாகம் வளர்த்தார் ஹரீஷ். சரிந்த பிறகும் ஆத்திரம் தாளாமல் எதிரியைத் தாக்கி நொறுக்கத் தலைப்படும் குத்துச்சண்டை வீரனைப் போல் இந்தப் பாடலின் இசையை அமைத்திருந்தார் யுவன். அந்த வருடத்தின் வருடலாகவே அந்தப் பாடல் அமைந்தொலித்தது. மனமான் வேட்டை ஒன்றைக் காணத் தந்தார் செல்வராகவன். கனவு விட்டுக் கனவு பாய்ந்து ஒரு கனவில் கொன்ற மானை இன்னொரு கனவில் எழுப்பித் தந்தாற் போல் மாந்த்ரீகம் செய்தார் யுவன். இந்த இருவரின் உச்சபட்சத்தைத் தன் குரலால் சாட்சி சொல்லிச் சான்றாவணம் செய்தார் ஹரீஷ் ராகவேந்திரா.

காதலுக்கான குரலைப் பலரும் தோன்றச் செய்திருக்கிறார்கள். ஹரீஷினுடையது ஆழ்மன ஆளுமை ஒன்றின் வெளிப்படுதலுக்கானது. மேலும் அவர் பாடுமுறைகள் துல்லியமான தாக்குதலாகவே கேட்பவர் நெஞ்சங்களைக் கீறியவண்ணம் பாய்ச்சலெடுத்தன. இந்த நூற்றாண்டில் பாடத் தொடங்கிய வேறு யாரைவிடவும் ஹரீஷ் ராகவேந்திரா குறைவற்ற குரல்வளமும் தொனிப் பற்றும் லய ஒழுங்கும் வரிகளைக் கையாள்வதில் காதலும் பாடலுக்குள் கரைந்து போவதில் ஆழ்ந்த ஒப்புத் தரலும் கொண்டவராக விளங்குவது எளிய விஷயமல்ல. அவருக்குப் பாடத் தரப்பட்ட பல பாடல்கள் நாயகப் பிம்பத்தை வழிபட்டுப் போற்றும் பாடல்கள் அல்ல. அவர் காதலில் எளிய பாடல்களைப் பாட வந்தவர். தனிமையை, காதல் ஏக்கத்தை, சொல்லில் கூடி வராத காதல் கோருதலை, அன்பின் முடிவற்ற பக்கங்களை, பொஸசிவ்னெஸ் எனப்படுகிற பேரன்புப் பற்றதிகத்தை இன்னபிறவற்றை எல்லாம் நளினம் பொங்கப் பாடித் தந்தவர் ஹரீஷ்.

சென்ற நூற்றாண்டைப் போலில்லை, இப்போது இருக்கும் நூற்றாண்டு. ஆயிரக்கணக்கான பாடல்களைக் குறிப்பிட்ட வெகு சில பாடகர்கள் எல்லா மொழிகளிலும் பாடுவதெல்லாம் இப்போது அசாத்தியம். எல்லாத் துறைகளிலும் ஏற்படக்கூடிய அதே மாற்றங்கள் திரைப்பாடல் உலகிலும் ஏற்பட்டன. ஹரிஷ் ராகவேந்திரா தொழில்முறைப் பாடகராகத் தமிழில் பாடிய பல பாடல்கள் என் மனம் கவர்ந்து ஒலிப்பவை.

பூவெல்லாம் உன் வாசத்தில் செல்லா நம் வீட்டுக்கு எனத் தொடங்குவதும், பாரதி படத்தில் இசைஞானி இசையில் நிற்பதுவே நடப்பதுவே பாட்டாகட்டும், மம்பட்டியானுக்காகத் தமன் இசையில் சின்னப் பொண்ணு சேலை பாடலின் மீவுருவாகட்டும், ஹரீஷின் பேர் சொல்லி ஒலிப்பவை. திருப்பாச்சி படத்தில் கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு, ரேணிகுண்டாவில் மழைபெய்யும், டும்டும்டும்மில் தேசிங்கு ராஜா, எங்கேயும் காதல் படத்தில் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ, காதலில் விழுந்தேனில் தோழியா என் காதலியா போன்றவையும் நன்கு விளைந்த கானமணிகளே. சற்று முன் கிடைத்த தகவல்படி பாடலும் நூதனா நீ பாடலும் எனக்குப் பிடிக்கும் வேறு சில பாட்டுகள்.

இன்னும் ஒரு பாட்டு, பரணி இசையில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த பார்வை ஒன்றே போதுமே படத்தில் “திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு” என்கிற ம்யூசிகல் ஹிட் பாடல். சித்ராவும் ஹரீஷும் பாடிய டூயட். இந்தப் பாடல் காலம் கடந்து ஒலிப்பதற்குக் காரணம் காதலின் பிரிவுத்துயரைச் சாட்சியப்படுத்திய விதம். மேலும் காதல் ஏற்படுத்துகிற அழுத்தம், வேறு எதிலும் திருப்தியுறாத அலைந்து திரியும் பறவை போல் ஊடலைத் தாங்க முடியாமல் மனம் நொந்து பாடுவதாக இந்தப் பாடலை அமைத்தார் பரணி. ஒரு மாபெரும் காதல் அறிவிக்கையைப் போல் இந்தப் பாடல் மனங்களில் ததும்புகிறது. இன்றும் வானொலி நேயர்கள் வேண்டி விரும்பிக் கேட்கக்கூடிய பாடல்களில் ஒன்றாக இருபது வருடங்களைக் கடந்து ஒலித்து தீராத பெரும்புகழ் பாடலாக விளங்குகிறது.

பெரும்பாலும் ‘solo’ எனப்படும் தனிப்பாடல்களை அதிகம் பாடியவர். காலம் கடந்து நிலைக்கவும் ஒலிக்கவும் தகுதி படைத்த பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்னும் காலம் அவர் பாடுவதற்கெனப் பல அரிய பாடல்களை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. மென்மேலும் காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடுவதன் மூலமாக இன்னும் மக்கள் மனங்களை வென்று எடுப்பார் என்பது வெறும் நம்பிக்கை மாத்திரம் அல்ல, அவர் குரலுக்கு அதற்கான தகுதியுண்டு.

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்
  2. வீ.குமார்
  3. ஷ்யாம்
  4. மலேசியா வாசுதேவன்
  5. ஹரிஹரன்
  6. பி.ஜெயச்சந்திரன்