திரையிசை உலகத்தின் சரித்திரத்தை எழுதிப் பார்க்கையில் முக்கியமான காலகட்டம் 1980கள் எனலாம். இசையின் உள்ளும் புறமும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இசை என்றில்லை, கதை வசனம் தொடங்கிப் படங்களின் வழங்குமுறை வரைக்கும் பற்பல மாற்றங்கள். கருப்பு வெள்ளை என்கிற இருவண்ணப் படங்கள் முற்றிலுமாகத் தம் வீரியத்தை இழந்த காலமும் அதுவே. வண்ணத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமை உருவானது. ஸ்டீரியோபோனிக் ஒலிகள் காற்றை ஆளத் தொடங்கின. வானொலியின் பேரரசில் தொலைக்காட்சி எனும் புதிய அத்தியாயம் தொடங்கியது. இசைத் தட்டுக்களினின்றும் ஆடியோ கேசட்டுகள், வீடியோ கேசட் பிளேயர், டிவி, வாக்மேன் என ஒரு டஜன் உபகரணங்கள் அதிகரித்துக் கிடைக்கலாயின.
உலக இசை, இந்திய இசை, பிராந்திய இசை, திரைசாராத இசை எனப் பல வகைமைகளில் பாடல்கள் கேட்பது அதிகரித்தது. 1980 முதல் 1990 வரையிலான இந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரை உலகத்தில் பாடல்களுக்காகவே படங்கள் உருவாக்கம் பெறுவதும் பெருவெற்றி பெறுவதும் அதிகரித்தது. கதையைக் காட்டிலும் இசையைப் பின்தொடர்ந்து வழிபடுவோர் எண்ணிக்கை கூடியது.
பெருங்காற்றுக் காலம் என்று இந்தக் காலத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கே.வி.மகாதேவன் தொடங்கி வி.குமார் வரை எழுபதுகளில் கோலோச்சிய பல முன்னோடி இசைஞர்கள் ஓட்டக் களத்திலிருந்து வெளியேறலாயினர். இளையராஜா எனும் பெயர் ஒரு மந்திரத்துக்கு நிகராய் உச்சரிக்கப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன் எண்பதுகளின் முதல் பாதியில் நூற்று சொச்சம் படங்களுக்கு இசையமைத்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை முற்றிலுமாகக் குறையலாயிற்று.
இந்தக் காலகட்டத்தில் பல இசையமைப்பாளர்கள் பல வெற்றிப் படங்களைத் தந்ததும் நிகழ்ந்தது. டி.ராஜேந்தர், வி.எஸ்.நரசிம்மன், எல்.வைத்யநாதன், ஏ.வி.ரமணன், சந்திரபோஸ், கங்கை அமரன், எஸ்.ஏ.ராஜ்குமார், சிவாஜி ராஜா, மனோஜ் கியான், சம்பத் செல்வம், சங்கீத ராஜன், தேவேந்திரன், தேவா, மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாலமுரளி கிருஷ்ணா, விஜய் ஆனந்த், பென் சுரேந்தர், ஆபாவாணன், கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன், யுவராஜ், தாயன்பன், எம்.எஸ்.முராரி, குணசிங், ப்ரேமி-சீனி, வித்யாசாகர், உமா கண்ணதாசன், இளைய கங்கை, ராஜேஷ், லதா-கண்ணன், தசரதன் என 32க்கும் மேற்பட்ட இசைஞர்கள் பணியாற்றிய படங்கள் வந்தன. பிற மொழிகளிலிருந்து சலீல் சவுத்ரி, ஷ்யாம், ரவீந்திரன், பாம்பே ரவி, அம்சலேகா, லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால், பப்பி லஹிரி, ஆர்.டி.பர்மன், சத்யம், சக்கரவர்த்தி, ரமேஷ் நாயுடு, கண்டஸாலா விஜயகுமார், விஜய்பாஸ்கர், ஆனந்த் ஷங்கர், ரகு குமார், ப்ரேமஸ்ரீ கேமதாஸா, ஜெரி அமல்தேவ், உஷாகன்னா போன்ற 18க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் தமிழிலும் இசையமைத்தனர்.
இந்தக் காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த பல பெருவெற்றிப் படங்கள் ஆடியோ வானில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றன. மேற்சொன்ன இசைஞர்களில் பலரும் தத்தம் பேர் சொல்லும் பல ஹிட் பாடல்களைத் தந்தனர். இசையின் பெருவெடிப்புக் காலமாகவே எண்பதுகள் திகழ்ந்தது.
இந்தக் காலகட்டத்தில் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் எழுபதுகளிலிருந்து அடுத்த தசாப்தத்துக்குத் தங்களை மேலெழுதி வென்றனர். இந்தக் காலகட்டத்தின் தகர்க்க முடியாத பல பாடல்களை இசையிருவர் உருவாக்கித் தந்தார்கள். பெரும் செலவில் எடுக்கப்பட்ட படங்கள் அவற்றுள் மிகவும் குறைவானவையே. பட்ஜெட் படங்கள் எனப்படும் குறைந்த செலவுத் திரைப்படங்களின் ஆபத்பாந்தவர்களாக சங்கர் கணேஷ் விளங்கினர். இசை என்பது அளந்து இடுவதற்கு வணிகம் போலத் தோன்றினாலும் உண்மையில் அது ஆன்மாவின் தானம். எப்போதும் அளவீடு பார்ப்பதில்லை என்பதை மெய்ப்பிக்கும் பல பாடல்களை சங்கர் கணேஷ் இருவரும் சேர்ந்து உருவாக்கினார்கள்.
கணேஷ் நாயகனாக நடித்து ஒத்தையடிப் பாதையிலே என்ற படம் வெளிவந்தது. இந்தப் படம் ‘போஸ்ட் ரன்னர்ஸ்’ எனப்படுகிற தபால் விரைவாளர்கள் பற்றிய வெகு சில திரைப்படங்களில் ஒன்று. இதன் கதைப்புலத்தை மையப்படுத்தி இரண்டாயிரத்துப் பதினேழாம் ஆண்டில் எடுக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை பெருங்கவனம் ஈட்டிற்று. ஒத்தையடிப் பாதையிலே திரைக்கதை இரண்டாம் பகுதியில் தெளிவற்றுக் குழப்பியதால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் இந்தப் படத்தில் ஜேசுதாஸ் பாடிய ஒரு பாடல் இன்றும் காற்றில் நல்வலம் வருகிற கானமீன். குன்றாத பாடற்செல்வமாகத் திகழ்கிறது.
“செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா, நான் விக்கிப்போறேன் தாகத்துல நில்லம்மா” என்கிற பாடல்தான் அது.
ஜேசுதாஸ் தன் குரலின் பொதுத் தன்மையினின்றும் விலகிப் பாடிய வெகு சில பாட்டுகளில் இதொன்று. சிருங்காரமும் தெம்மாங்குத் தன்மையும் கொண்டு ஒலிக்கிற பாடல். நின்று முடிந்து மீண்டும் தொடங்கும் உழல் தன்மையும் குறிப்பிட்டுக் கூறவேண்டியது. இந்தப் பாடலை அவரோடு சேர்ந்து பாடியவர் வாணி ஜெயராம். காலத்தின் மேனியில் ஒரு அழகான மச்சத்தைப் போல் பதிந்து கிடக்கிறது இந்தப் பாடல்.
ஏ.எல்.ராகவன் ஏற்கெனவே சில படங்களைக் கூட்டாண்மையில் தயாரித்து அவை பெரிதாகப் பொருளீட்டி வெல்லவில்லை. கண்ணில் தெரியும் கதைகள் என்ற படத்தை எடுத்தார். அதற்கு கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ், அகத்தியர், ஜீ.கே.வெங்கடேஷ், இளையராஜா என ஐந்து இசையமைப்பாளர்கள் ஆளுக்கொரு பாடல் நல்கிய படம் அது. ஐந்தில் இரண்டு சோடை போகாமல் நின்றொலித்தன. “நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்” எனும் பாடலைப் புலமைப்பித்தன் எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி ஆகியோர் சுசீலாவோடு சேர்ந்து பாடிய அந்தப் பாடல் இளையராஜா இசையமைத்தது. அதே படத்தில் “நான் உன்ன நினச்சேன்” என்ற பாடல் சங்கர் கணேஷ் இசைத்துத் தந்த பாடல். இதனை வாணி ஜெயராம், ஜிக்கியோடு சேர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார். வாலி எழுதிய லாலி இந்தப் பாடல். சோகப் பாடல்களுக்கென்றே இருக்கும் மெல்லிய கிறக்க நகர்தலும் அதிராத இசைத்தூவலுமாக இரவைத் தாலாட்டித் தருகிற சுய இரக்கப் பாடல்களுக்குப் பொட்டிட்டாற் போன்றதொரு பாடல் திலகமாக இது அமைந்தது.
ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படம் நட்சத்திரம். தெலுங்கில் பெரும் வெற்றியடைந்ததைத் தமிழில் மறு உருவாக்கம் செய்தார். தாசரி நாராயணராவ் இயக்கம். இதில் ஒரு பாடல் அந்த வருடத்தின் முத்திரைப் பாடல்களில் ஒன்றானது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன்னைக் கரைத்துக் குழைத்துப் பாடலாக்கித் தந்தார். “அவள் ஒரு மேனகை”. புலமைப்பித்தனின் அமுதத் தமிழால் அலங்கரித்த பாடலிது. இதே படத்தில் கண்ணதாசன் எழுதிய “வானம் இங்கே மண்ணில் வந்தது” பாடல் ஒரு டூயட். இதைப் பாலுவுடன் சேர்ந்து பாடினார் சுசீலா. “சிவரஞ்சனி” என்று எடுத்துப் பாடும் இடம் பேரழகு.
வண்டிச்சக்கரம் திருப்பூர் மணி தயாரிப்பு. சில்க் ஸ்மிதாவின் முதல் படம். இதில்தான் அவர் சிலுக்கு என்ற பாத்திரத்தை ஏற்றார். வினுச்சக்கரவர்த்தி எழுதிய கதையும் பாத்திரமும் என்பது கூறவேண்டியது. இந்தப் படத்தில் பல பாடல்கள் தேனாய் இனித்தன. படமும் நூறு நாட்களைக் கடந்தோடியது. சாராயப் பாடல்கள் 1980களின் இறுதி வரை அவ்வப்போது தமிழ்ப் படங்களில் இடம்பெற்று அபிமானம் வென்றது வரலாறு. அப்படியான மதுபோதைப் பாடல் “வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட”. பாலு பாடியது அந்த வருடம் முழுக்க ஒலித்தது. படத்தில் சுருளிராஜனுக்குத் தரப்பட்டது. ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கான பாடல் தேர்வுகளில் அந்தக் காலகட்டத்தின் தவிர்க்க முடியாத பாட்டுகளில் ஒன்று இது.
நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் “சித்திரமே உன் விழிகள் கொத்துமலர்க் கணைகள்” பாடல் ஒரு அதிரிபுதிரி. ரஜினிக்கு எங்ஙனம் எஸ்.பி.முத்துராமனும் மகேந்திரனும் அவருடைய முதல் நூறு படங்களில் மிக முக்கியப் படங்களை இயக்கினரோ அப்படி விஜயகாந்தைப் பொறுத்தவரையில் எஸ்.ஏ.சந்திரசேகரையும் ஆர்.சுந்தர்ராஜனையும் சொல்ல இயலும். சந்திரசேகர் இயக்கிய இந்தப் படம் விஜயகாந்தை சாமான்ய ரசிகப் பரப்பினுள் ஆழப் பதியனிட்ட படங்களில் ஒன்றானது. இந்தப் பாடல் பாடகி பி.வசந்தாவோடு ஜேசுதாஸ் பாடிய டூயட் பாட்டு. கம்பீரமும் எள்ளலும் கலந்த விட்டேற்றிக் காதல் பாட்டாக இன்றும் நம்மைக் கவர்ந்திழுக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் அதிகம் அறியப்பெறாத பல நல்ல பாடல்களையும் உருவாக்கியிருந்தனர் இசை இருவர். அவற்றில் சிலவற்றின் வரிசை இங்கே. எங்கம்மா மகாராணி படத்தில் “மாலையில் பூத்த மல்லிகை பூக்களே” பாடல் ஒரு ரொமான்ஸ் பொன்மலர். பாலுவும் வாணியும் உருகியளித்த மெருகுமலர். புலமைப்பித்தனின் பித்தூறிய தமிழ்த்தேன். அன்று முதல் இன்று வரை படத்தில் அழகான சோலோ பாடல் ஒன்று இடம்பெற்றது. “கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி” என்று தொடங்குவதை வாணி ஜெயராம் பாடினார். அழகான உபகுரல் தோரணம் இந்தப் பாடல். சொல்லாதே யாரும் கேட்டால் படத்தில் ஜேசுதாஸ் சோலோ பாட்டு ஒன்று, கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் என்று தொடங்கிற்று. ஒரு மாதிரி மாயா லோக இடையிசையைக் கொண்ட உற்சாகப் பாடல், வாலி எழுதியது. இதிலேயே “பூவாகி இரவு நேரம்” என்று ஆரம்பிக்கும் இன்னொரு பாடல் ரசிப்பதற்குரிய சோலோ. எஸ்.ஜானகி பாடிய மின்னல் மழைப்பாடல் இது. ஆணிவேர் படத்தில் “நான்தானே ஒரு புதுக்கவிதை” பாடல் புகழ்வாய்ந்த மேற்கிசை ஆல்பம் போனி-எம் இலிருந்து “ரஸ்புதின்” என்ற பாடலைத் தழுவி உருவாக்கப்பட்டது. இதிலேயே “முத்து முத்துத் தேரோட்டம்” என்ற பாடல் வாணி ஜெயராமின் ஆகச்சிறந்த பாடல்களில் ஒன்று. நெல்லிக்கனி படத்தில் “பாடு தென்றலே புதுமணம் வந்தது” பாடலும் “நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்” பாடலும் ஈர்த்தன. வாணி சோலோ ஒன்று “சின்னஞ்சிறு தேராக” எனத் தொடங்கியது. மெல்லிய காற்றாய்க் கேட்பவர் செவிகளை வருடித் தாண்டுகிற மென்மல்லிப் பாடல் இது. அவசரக்காரி படத்தில் எஸ்.பி.பாலு பாடிய சோலோ ஒன்று “முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனதெப்போ” எனத் தொடங்கியது. சோகப் பாடல்களில் சற்றே வேகம் பூத்தொலிப்பது அரிதான வகைமை. இந்தப் பாடல் அவ்வகையில் சேர்வது. புலமைப்பித்தனின் அரிய தமிழ் இந்தப் பாடலின் ரசமானது. ஒரு மாணவி என் காதலி படத்தில் “பார்க்க நெனச்சேன் பார்த்துப்புட்டேன்” என்று தொடங்கும் டூயட், லேசான கிண்டல் தொனியில் அமைந்தது. இடையிசைச் சரடுகளை இவ்விருவரும் ஆனமட்டிலும் வித்தியாசம் செய்தனர். பாலுவும் வாணியும் பாடிய காதல் மிகை நாதம் இந்தப் பாட்டு. கேட்டாலே இனிப்பது. வாடகை வீடு படத்தில் பாலு பாடிய சோலோ “நாயகியே வருக” என்று ஆரம்பிக்கிறது. வாலி உருகியது இந்தப் பாடல்.
பக்கத்து வீட்டு ரோஜா படத்தில் இந்தப் பாடலின் ஆரம்பமே அட்டகாசமாய் ஒலித்தது. வாணியும் தீபன் சக்கரவர்த்தியும் பாடியது “இந்தக் கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்”. வாலி எழுதியது. நேரம் வந்தாச்சு படத்தில் ஒரு பாடல், “பன்னீரில் நீராடும் ரோஜா” எனத் தொடங்கியது. ஆரம்பம் மெல்லிசை, பிறகு கோரஸ் குரல்கள், மீண்டும் வேறொரு இசைத்தூவல் பாடலுக்குள் நுழையும். வாணி ஜெயராம் பாடிய சோலோ இது. மு.மேத்தா எழுதியது. இதிலேயே டூயட் ஒன்று, ஜெயச்சந்திரனும் வாணியும் பாடிய “காதல் மந்திரத்தில்”, வாலி எழுதியது. குரோதம் படத்தில் “பாவை இதழ் தேன் மாதுளை” பாடல், ஜானகி ஜேசுதாஸ் இணைந்து பாடியது, வைரமுத்து எழுதினார். இதே படத்தில் “வானம் வருமோ மடியில் விழுமோ” என்ற சோலோ வாணி பாடியது, கேட்க ரசிக்க இனிக்க இருந்தது. “இன்னேரம் பொன்னேரம்” என்ற டூயட் ஜானகியும் மலேசியா வாசுதேவனும் பாடிய மென்மலர் பாடல். மாதுளை முத்துகள் படத்தில் இடம்பெற்றது.
அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக்கரையில்
நீராடும் நீலக் குயில்கள்
எந்த நாளும் வாழ்க
பாலுவும் ஷைலஜாவும் பாடிய டூயட். கண்ணோடு கண் படத்தில் வாலி எழுதியது.
இதே படத்தில் “எனைத் தேடும் மேகம் சபை வந்துசேரும்” என்ற பாடல் வாலி எழுதியது, பாலுவும் வாணியும் சேர்ந்து பாடியது. ரேடியோ காற்றை நெடுங்காலம் தாலாட்டியது. “கண்ணோடு கண்ணும் கையோடு கையும்” என்ற டூயட்டை வாணியும் பாலுவும் பாடினர். என் ஆசை உன்னோடுதான் படத்தில் “தேவி கூந்தலோ பிருந்தாவனம்” பாடல் நல்ல பிரபலம் அடைந்தது. 1967ஆம் ஆண்டின் Turtles இசைக்குழுவின் “Happy together” பாடலிலிருந்து எடுத்தாளப்பட்ட இழையைத் தமிழில் பாடலாக மாற்றியது ரசிக்க வைத்தது.
எஸ்.ஏ.ராஜ்கண்ணு தன் ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் சார்பாகத் தயாரித்த படம் அர்த்தங்கள் ஆயிரம். இதில், “கடலோடு நதிக்கென்ன கோபம்” எனத் தொடங்கும் லாலிபாப் பாடல் இன்று மட்டுமல்ல, என்றென்றும் இனிப்பது. பாலு பாடிய சோலோ செங்காந்தள் இந்தப் பாடல். பாலுவின் ஆயிரக்கணக்கான சோலோ கீதங்களில் ஒரு நூறை மட்டும் வடிகட்டி எடுத்தால் நிச்சயம் இந்தப் பாடலுக்கு இடமிருக்கும். கேட்கச் சலிக்காத தேன் துளித் தூவல் இந்தப் பாடல்.
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலைமண்ணில்
எங்கேயோ பார்த்தாயே என் தோட்டப் பூவே
நீலவானம் மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமனி புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்
(கடலோடு)
குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிடவா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
(கடலோடு)
மோக வீணை என்று உன்னை மீட்டி
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னை சூடிவா
போதை நீயே மேதை நானே
மணம் வீசிடும் கனை பாய்ந்திடும் மலர் மேனியில்
புதிய நீரோடை நீயே வாவா
(கடலோடு)
சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஒரு மாயாம்ருதப் பாடல் இடம்பெற்றது. கங்கை அமரன் எழுத, இதனைப் பாடியவர்கள் எஸ்.என்.சுரேந்தர், எஸ்.ஜானகி. “தனிமையிலே ஒரு ராகம்” எனத் தொடங்கும் பனிக்கூழ்பவனி அந்தப் பாடல். சிவப்பு மல்லி படத்தில் இடம்பெற்ற “ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்” பாடலையும் யாராலும் மறக்க முடியாது.
பாலைவனச் சோலை அந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களைத் தனதே கொண்டொலித்த ஆல்பம். படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஒரு புதிய நதி வளைதலாகவே இந்தப் படத்தின் பாடல்கள் ஒலித்தன. “பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி” பாடல் வான் கிழித்தது. “ஆளானாலும் ஆளு” பாடல் அந்தக் காலத்தின் காலர் ட்யூன் ஆனது. “மேகமே மேகமே” பாடல் மழையாய்ப் பொழிந்து நிலமாய் விரிந்து கடலாய்ப் பெருகி ஒலித்தது. “எங்கள் கதை இது” பாடல் மனதாழ மல்லிகை ஒன்றை மலர்த்தித் தந்தது.
“தூரம் அதிகமில்லை முதல்முறை தொடுவதில்” பாடல் வித்தியாசத் தேன் பாடல். பாலுவும் வாணியும் உருகியது. வைரமுத்து எழுதிய தமிழமுதம்.
ஓ… முதல்முறை தொடுவது சுகம்
இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில்
நீயொரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்
ஓ… முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெய்யில்
நானொரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வரம்.. ஓ..
(முதல்)
இடையொரு பிடி எனமொரு இளையக்கொடி
இவளொரு கிளி
பரவச நிலை இது ஒரு புதிய கலை அனுபவமிலை
தாவணி பூவனம் வாடுவதேனோ வா வா நிலாவே
வாலிப மழை… பருவ மழையாகும்
தாமரை குளம்… அது நிறைந்து போகும்.. ஓ..ஓ..
(முதல்)
இடைவெளி குறையும் விரலது நகர்ந்து வரும்
இருதயம் தொடும்
பழகிய கனி நிலவினில் உறைந்த மணி
பிரிவில்லை இனி
காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது
ரகசிய சுகம்… கனிந்து வரும் வேளை
அழகிய கிளி… சுமந்து வரும் மாலை ஓ…ஓ…
(முதல்)
பனிமலர் படத்தில் “பனியும் நீயே மலரும் நானே” பாடல் முத்துலிங்கம் எழுதி ஜென்சியும் பாலுவும் பாடியது. எண்பதுகளில் வேகமாய் மனம் பற்றிய பாடல்களில் இதுவுமொன்று. அஞ்சாத நெஞ்சங்கள் படத்தில் ஏக் துஜே கேலியே படப்பாடலான “தேரே மேரே பீச்சுமே” என்கிற காலத்தால் அழியாத பாடலைத் தமிழுக்கேற்ப அதே ட்யூனில் “என் காதல் ஓடங்கள்” என்று தொடங்கும் பாடலைப் படைத்தனர் இருவர். ஜானகியும் சுரேந்தரும் பாடினர். வைரமுத்து எழுதியது. இதே படத்தில் “மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு” என்று தொடங்கும் ஜாலிப் பாடலை மலேசியா வாசுதேவனும் பாலுவும் சேர்ந்து பாடினர். கன்னடத்தின் ஆட்டோ ராஜா பாடல்களை ரீமேக் செய்தனர் சங்கர் கணேஷ். “மலரே என்னென்ன கோலம்” என்ற பாடல் சோலோ பாலு பாடியது. இன்றும் நாளையும் ரசிக்கவல்ல பாடல்.
டார்லிங் டார்லிங் டார்லிங், கண்ணோடு கண், குரோதம், துணை, நாடோடி ராஜா, பக்கத்து வீட்டு ரோஜா, ரங்கா ஆகிய படங்கள் பல முக்கியப் பாடல்களைக் கொண்டிருந்தன. அம்மா படத்தில் “மழையே மழையே” பாடல் ஈர்த்தது. கல்யாண காலம் படத்தில் “அதிகாலையில் பனிக் காற்றுகள்” என்கிற அழகான பாடலை வைரமுத்து எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினார். இதே படத்தில், “வாழும் சமுதாயமே” என்கிற இன்னொரு சோலோ பாடலும் எஸ்.பி.பி குரலில் இடம்பெற்றது. ரஜினி படம் ரங்கா. இதில் “பட்டுக்கோட்டை அம்மாளு” என்ற பாடலை எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் இருவரும் சேர்ந்து பாடினர். “புருஷன்தான் இவ புருஷன்தான்” என்னும் டூயட் பாடல் இனிப்பாய் இனித்தது. டார்லிங் டார்லிங் டார்லிங் படம் ஒரு இசையூற்று. “ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்” பாடல் காதலின் மென் சோகத்தைப் பிரியத்தின் ஊற்றாக்கித் தாலாட்டிய பாடல். “அழகிய விழிகளில் அறுபது கலைகளும்” பாடல் இன்றும் அதே புத்துணர்ச்சி குன்றாமல் ஈர்க்கிறது.
நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது” பாடல் கடல் தாண்டிய காற்றானது. தாய் வீடு ரஜினி படம். அந்த வருடத்தின் ஆகச்சிறந்த வெற்றிப் பாடல்களின் பூமாலை இந்தப் பட ஆல்பம். விதி சூப்பர் ஹிட் படமானது. ஓசை, நன்றி, நிரபராதி, வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி ஆகியவற்றில் நல்ல பாடல்கள் இருந்தன. “ஒரு பாடல் நான் கேட்டேன்” பாடல் ஓசை படத்திற்காக வாணி, பாலு பாடிய டூயட். இந்தியின் ஆகச்சிறந்த பாடல்களில் ஒன்றான “எக் ப்யார் கெ நஹ்மா ஹே” பாடல் ஷோர் படத்துக்காக ரஃபியும் லதாவும் பாடியது. அந்தப் படத்தின் மீவுருவான ஓசை படத்தில் அதே பாடலைத் தமிழில் பெயர்த்தனர். திருமதி ஒரு வெகுமதி படத்தின் “ஆவதும் பெண்ணாலே” பாடல் பெரிய வலம் வந்தது. நன்றி படத்தில் ரமேஷூம் வாணியும் பாடிய வித்தியாசமான தாளப்பாடல் ஒன்று அமைந்தது. “மதுரை நகரினிலே” எனத் தொடங்கும் பாடலை வாலி எழுதினார். இடையிசைப் புல்லாங்குழல் தூவல்கள் மிளிர்ந்தன.
அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப்பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான்
வாலியின் தமிழ் விளையாடல் பாடலாயிற்று. ரமேஷின் முன்னர் அறியாப் புதுக்குரல் கவர்ந்தது.
மேற்காணும் பாடல் கார்த்திக், மகாலட்சுமி பாடுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் படம் தமிழில் அர்ஜுனுக்கு முதல் படம். இதில் அவருக்கும் நளினிக்கும் “வா வா என் தலைவா” என்று தொடங்கும் வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் டூயட் பாடலும் இடம்பெற்றிருந்தது.
அந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களை எங்க சின்ன ராசா, ஊர்க்காவலன், திருமதி ஒரு வெகுமதி ஆகிய படங்கள் கொண்டிருந்தன. ஊர்க்காவலன் படம் ரஜினி நடிப்பில் சத்யா மூவீஸ் தயாரித்த படம். இதன் எல்லாப் பாடல்களுமே பெரும் வெற்றியைக் கண்டடைந்தன. “மாசி மாசம்தான் சொல்லு சொல்லு” பாடல் வானொலிகளில் பெரிதும் கேட்கப்பட்ட பாடல்களுள் ஒன்று. என் ரத்தத்தின் ரத்தமே படத்தில் பாக்யராஜ், மீனாட்சி சேஷாத்ரி இணைந்து நடித்த ஒரு டூயட் பாடல், “ஓராயிரம் பவுர்ணமி நிலவு” எனத் தொடங்கும். ஜானகியும் பாலுவும் சேர்ந்து பாடிய பாடல் ஐஸ்க்ரீம் பாயசமாய்த் தித்தித்தது. சட்டத்தின் திறப்பு விழா கார்த்திக், ஷோபனா நடித்த படம். இதில் ஸ்டைலான ஒரு வெஸ்டர்ன் மெலடி அமைந்தது. “ஓ வெண்ணிலா உன் கண்ணிலா” என்று தொடங்கும். அதை பாலுவும் சித்ராவும் பாடினர். புலமைப்பித்தன் எழுதியது இந்தப் பாடல். சந்தனக் காற்று விஜயகாந்த் படம். பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. “ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு”, “சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்” ஆகிய இரண்டும் தனிப்பாடல்கள். இதிலேயே “பட்டுப் பாவாட கட்டி” ஒரு வேகத் தோகைப் பாடல். “ராசாத்தி ராசாத்தி” பாடலும் கிறக்கக் குரலில் பாலு பாடிய பாடல். வாழ்க்கைச் சக்கரம் படத்தில் “எனக்கு நீ உனக்கு நான்” என்று தொடங்கும் மெலடி டூயட் சத்யராஜின் இமேஜூக்குப் பொருத்தமற்ற மென்மலர் பாடலாக அமைந்தது என்றாலும் நல்ல ஹிட் பாட்டானது. ஆடிவெள்ளி படம் அடைந்தது வானுயர் வெற்றி. இதில் பாடல்களும் நன்கு ஒலித்தன. “வண்ண விழியழகி” பாடல் பெரிய ஹிட் அடித்தது. நியாயத் தராசு மறக்கவே முடியாத பாடல்களைக் கொண்டிருந்தது. “The way you make me feel” என்ற எம்.ஜே பாடலின் தழுவல் “வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா”. இன்னொரு பாடல், “வானம் அருகில் ஒரு வானம்” என்ற பாடல்.
இதயத் தாமரை காதல் வெள்ளம். கிட்டத்தட்ட சங்கர் கணேஷின் இசைவாழ்வின் பின்தொடர ஏதுமற்ற கடைக்கோடி அற்புதமாக இந்தப் படத்தின் பாடல்கள் அமைந்தன. “ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” என்ற பாடலானது வைரமுத்து, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், கார்த்திக், ரேவதி, கே.ராஜேஷ்வர், பி.சி.ஸ்ரீராம் எனப் பலருக்கும் நல்முகவரியாய்த் திகழ்ந்தது. சங்கர் கணேஷின் இசை தன்னை உருக்கித் தீபமேற்றினாற் போல் ஒளிர்ந்தது.
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்கள்ளூறும் காலை வேளையில்
{ஒரு காதல் தேவதை}
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய
பிறந்தவன் நான் இல்லையாஇதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடுகட்டி
தந்தவள் நான் இல்லையாஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது
{ஒரு காதல் தேவதை}
யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதோபொன் மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய் மொழியே
பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது
இயல்பானது
{ஒரு காதல் தேவதை}
அடுத்த காலத்தின் பாடல் செல்திசையைத் தீர்மானித்த சில பாடல்களில் “ஒரு காதல் தேவதை” பாடலும் ஒன்று. அந்தக் காலத்தின் தகர்க்க முடியாத பாடலாக மாறியது. கே.ராஜேஸ்வரின் இயக்கத்தில் ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் கார்த்திக், ரேவதி ஆகியோரின் ஆழக்காதல் பரிமளிப்பில் காலத்தின் கிரீடத்தில் ஒரு மாணிக்கக் கல்லெனவே இந்தப் பாடல் நின்று ஒலிக்கிறது. இதே படத்தில் “கண்ணான என் கண்மணி” ஒரு சோக சங்கீதம். “கண்ணே கதவு திறந்திடும் முன்னே” பாடல் இளமைத் தேன் காற்று. “ஏதோ மயக்கம் பாடல்” ஒரு தெம்மாங்குத் தீந்தமிழ்ப் பாடல்.
பெரும் காற்றுமழைக் காலத்தில் உயிர்த்திருப்பதே கடினம் என்கிற நியதிக்குட்பட்டு நீந்திக் கடப்பதே பாக்கியம் என்றாகையில் கை நிறைய முத்துகளோடு கரையேறுவது நிசமாகவே சாகசம்தான். அந்த வகையில் எண்பதுகளின் இசை வரலாற்றைப் பதிவெடுக்கையில் சங்கர் கணேஷ் எனும் இசையிருவரின் பெயர்கள் முதல் வரிசையில் பொறித்து வைக்க வேண்டிய பொன்னெழுத்துப் பெயர்கள் என்பதில் இரண்டாம் கருத்தில்லை.
-தொடரலாம்.