மனிதர்களைவிட அதிகமான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளவும், வேகமாகக் கணக்கிடவும், சிக்கலான முடிவுகளை எடுக்கவும் செயற்கை நுண்ணறிவால் முடிகிறது. மனித நாகரிகத்தை இயக்கும் பொருளாதாரம், சட்டம், அரசியல் போன்ற அமைப்புகளையும் அது நம்மைவிடத் திறமையாக நிர்வகிக்கத் தொடங்கினால் என்ன நடக்கும்? ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகும்? தொழில்நுட்பத்தின் இந்த வளர்ச்சியை மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக மாற்றுவது எப்படி?
2026 ஜூலையில் நடைபெற்ற EDP நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு விழாவில், சேப்பியன்ஸ், நெக்சஸ் நூல்களின் ஆசிரியரும் வரலாற்றாசிரியருமான யுவால் நோவா ஹராரியுடன், ஃபைனான்சியல் டைம்ஸ் இதழின் பத்திரிகையாளரும் The Next Five பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான டொம் பார்க்கர் நடத்திய உரையாடல் இது. செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கருவியாகத் தொடருமா, அல்லது மனிதர்களையே கட்டுப்படுத்தும் சக்தியாக மாறுமா என்ற கேள்வியை முன்வைத்து இந்த உரையாடல் விரிகிறது.
நிகழ்ச்சி நெறியாளர்: எல்லோருக்கும் மாலை வணக்கம். மாலை வணக்கம் யுவால். இங்கு வந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த உரையாடலை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன். கேள்விகளுக்குள் செல்வதற்கு முன்னால் ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்தத் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்த ஒன்று, உங்களுடன் உரையாட நான் நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன்.
வரலாற்றின் பெரும்பகுதியில், மாற்றங்கள் மிகவும் மெதுவாகவே நிகழ்ந்தன. அதனால் ஒரு தலைமுறை தன் அனுபவ அறிவை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றும்போது, அது எதிர்காலத்திற்கும் பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. ஒரே மனித ஆயுட்காலத்திற்குள் நாம் ஒரே நேரத்தில் மூன்று பெரும் புரட்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது: கணக்கீடு செய்வதுடன் நிற்காமல் தாமாகவே முடிவெடுக்கும் ஒரு புதிய வகை நுண்ணறிவு; அந்த நுண்ணறிவைக் கட்டுப்படுத்தவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் நடக்கும் போட்டி; நம்மைப் பற்றி நமக்கே தெரிந்ததை விட அதிகமாக அந்த நுண்ணறிவுக்குத் தெரியப்படுத்தும் தரவுகளின் பெருக்கம்.
யுவால் நோவா ஹராரியின் எழுத்துகள்—சாப்பியன்ஸ் (Sapiens), ஹோமோ டேவஸ் (Homo Deus), நெக்ஸஸ் (Nexus) ஆகிய நூல்கள் முதற்கொண்டு பல உரைகள், விரிவுரைகள், நேர்காணல்கள் வரை—வெவ்வேறான வடிவங்களில் ஒரே விஷயத்தைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன: மனித சமூகம் உண்மையின் அடிப்படையில் இயங்கவில்லை, நாம் பகிர்ந்துகொள்ளும் கதைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறோம். யார் கதையைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே மனித இனத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால், வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போது அந்த கதையாசிரியர் ஒரு மனிதராக இல்லாமல் போகலாம் என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் பெரும் மாற்றம்.
செயற்கை நுண்ணறிவால் (AI) நம்பிக்கைகளை உருவாக்க முடியும், சான்றுகளைப் போலியாகப் புனைய முடியும், மனித உறவுகளைப் போன்ற ஒரு நெருக்கத்தைப் போலியாகக் கட்டியெழுப்ப முடியும். இதை எந்தவொரு பேரரசராலும், மத நிறுவனத்தாலும், அரசியல் கட்சியாலும் இந்த அளவுக்குச் செய்ய முடிந்தது இல்லை. இதுவே நம் வரலாற்றின் திருப்புமுனை: தொழில்நுட்பம் ஆற்றல்மிக்கதாக மாறியிருப்பது மட்டுமல்ல, அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த பழைய அமைப்புகளான சுதந்திர ஊடகங்கள், பொதுவான உண்மை பற்றிய புரிந்துணர்வு, தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் நிறுவனங்கள்—இவையெல்லாம் மனிதன் மட்டுமே பேனாவைப் பிடித்திருந்த ஒரு உலகத்திற்காக வடிவமைக்கப்பட்டவை.
இனி நாம் மட்டுமே எழுதப்போவதில்லை என்ற ஒரு எதிர்காலத்திற்காக, அந்த பழைய கட்டுப்பாட்டு அமைப்புகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது, அல்லது புதிய கட்டுப்பாடுகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றித்தான் இன்றைய உரையாடல் ஆராய்கிறது. அதைத்தான் நாம் இன்றைக்கு விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்.
ஆனால், உரையாடல் மிகவும் கனமாக மாறுவதற்கு முன்னால், இலகுவான, சுவாரசியமான கேள்வியுடன் தொடங்க விரும்புகிறேன்: சமூகங்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்ட கதைகளை நேரில் சென்று தெரிந்துகொள்வதற்காக, வரலாற்றின் எந்தவொரு காலகட்டத்திற்கும் பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், எந்தக் காலத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
யுவால் நோவா ஹராரி: நான் அநேகமாக கற்காலத்திற்கும், ஏறத்தாழ 50,000, 60,000 அல்லது 70,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அறிவாற்றல் புரட்சியின் (Cognitive Revolution) காலகட்டத்திற்கும்தான் பின்னோக்கிச் செல்ல விரும்புவேன். உணவைச் சேகரிக்கவோ, வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிக்கவோ எனக்குத் தெரியாது என்பதால், என்னால் சில நாட்களுக்கு மேல் அங்கு உயிர் தரிக்க முடியாதுதான். இருந்தாலும் மனித வரலாற்றிலேயே மிகவும் சுவாரசியமான, அதே சமயம் நாம் மிகக் குறைவாகப் புரிந்து கொண்ட ஒரு காலகட்டம் அதுதான்.
மிகக் குறுகிய பரிணாமக் காலத்தில், நாம் ஒரு சாதாரண விலங்கிலிருந்து இந்த உலகத்தின் முதன்மை உயிரினமாக மாறினோம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை எப்படிச் செய்தோம் என்று நமக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. மொழியைக் கொண்டே நாம் அதைச் சாதித்தோம் என்பதுதான் இதற்கான சிறந்த ஊகமாக அல்லது கோட்பாடாக இருக்கிறது. மனிதர்கள் சிக்கலான மொழியை உருவாக்கி, அதன்மூலம் தகவல் தொடர்புகொள்ளும் திறனைப் பெற்ற தருணம் அதுதான்; நாம் செய்த மற்றெல்லாச் செயல்களுக்கும் அதுவே அடிப்படையாக அமைந்தது.
இன்று பூமியில் நாம் கட்டியெழுப்பியுள்ள பிரம்மாண்டமான அமைப்புகளான தேவாலயங்கள், அரசுகள், வர்த்தக வலைப்பின்னல்கள், நிதி அமைப்புகள் என அனைத்துமே இறுதியில் சொற்களால் ஆனவைதான்: சட்டப் புத்தகங்களில் இருக்கும் சொற்கள், மதப் புனித நூல்களில் இருக்கும் சொற்கள், வங்கிப் பதிவேடுகளில் இருக்கும் சொற்கள். இன்றைக்கு இதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனென்றால் சொற்களைக் கையாள்வதில் வல்லமை பெற்ற ஒரு புதிய எந்திர ஆற்றல் உருவாகியிருக்கிறது; அதுதான் செயற்கை நுண்ணறிவு.
வரலாற்றிலேயே முதன்முறையாக, சொற்களைக் கையாள்வதில் நம்மை விடச் சிறந்த திறன்கள் இந்தப் பூமியில் உருவெடுக்கலாம். நாகரிகத்தின் இயங்குதளமே (operating system) மொழிதான் எனும்போதே, அந்த இயங்குதளத்தை மனிதனல்லாத ஒரு வேற்று ஆற்றல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் என்னவாகும்?
கடைசியாக ஓர் எண்ணம்: செயற்கை நுண்ணறிவு என்பது மொழியைக் கற்றுக்கொள்ளும் ஒரு எந்திரம் அல்ல; ஒருவேளை மொழியே இந்த விலங்குகளிடமிருந்து, இந்தக் குரங்குகளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுதானோ என்னவோ. ஆம், நாம்தான் அதை உருவாக்கினோம், அது நமது மிகச் சிறந்த, முக்கியமான கருவியாக இருந்தது. ஆனால் இப்போது மொழி மனிதர்களிடமிருந்து விடுதலை பெறுகிறது. இனி எதிர்காலத்தில் நாம் இல்லாமலேயே மொழி வளர்ச்சி அடைந்து, அண்டவெளியெங்கும் பரவக்கூடும்.
நிகழ்ச்சி நெறியாளர்: அது மிகவும் வியப்பூட்டும் ஒரு பார்வை—மொழியெனும் அதிகாரம் நம்மிடமிருந்து கைநழுவிப் போகும் எதிர்காலத்தைக் கற்பனை செய்துபார்ப்பது. ஆனால் மொழியோடு தொடர்புடைய தொழில்நுட்ப வளர்ச்சிகளை மீண்டும் சற்று பின்னோக்கிப் பார்ப்போம். எழுத்து வடிவம், அச்சு எந்திரம் எனப் பல மைல்கற்களை நாம் கடந்து வந்திருக்கிறோம்; இப்போது செயற்கை நுண்ணறிவு அதில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கிறது. ஜனநாயகத்தில் இது எந்த அளவுக்குச் செல்வாக்கு செலுத்தக்கூடியது என்பதைக் குறிப்பிடும்போது “ஜனநாயகங்களில் நிலநடுக்கங்களை” இது ஏற்படுத்தக்கூடும் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். மற்ற ஆட்சி முறைகளையோ அல்லது சர்வாதிகார ஆட்சிகளையோ ஒப்பிடும்போது, ஜனநாயகங்களில் செயற்கை நுண்ணறிவு ஏன் இத்தகைய பேரதிர்வுகளை உருவாக்கக்கூடும்?
யுவால் நோவா ஹராரி: ஏனென்றால், ஜனநாயகம் என்பது அடிப்படையில் ஒரு உரையாடல்; ஆனால் சர்வாதிகாரம் என்பது ஒரு கட்டளை—அங்கு ஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார். ஜனநாயகம் என்பது அமைதியைத் தேர்ந்தெடுப்பதா அல்லது போரைத் தேர்ந்தெடுப்பதா, வரிகளை உயர்த்துவதா அல்லது குறைப்பதா என்று பல மனிதர்கள் ஒன்றாகச் சேர்ந்து உரையாடி முடிவெடுப்பதாகும்.
இப்போது, இந்த உரையாடல்கள் அந்தந்தக் காலத்தில் மனிதர்களிடம் இருக்கும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தையே சார்ந்து இருக்கின்றன. நவீன காலத்திற்கு முன்பு, மிகப்பெரிய அளவில் ஜனநாயகம் செயல்பட்டதாக வரலாற்றில் ஒரேயொரு உதாரணம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் சிறிய அளவிலான ஜனநாயகங்களுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன; பண்டைய ஏதென்ஸ் அல்லது இடைக்கால புளோரன்ஸ் போன்ற நகர அரசுகளையும், ஜனநாயக முறையில் இயங்கிய எண்ணற்ற பழங்குடிச் சமூகங்கள், நகரங்கள், ஊர்களையும் நாம் பார்க்கலாம். கற்காலத்தில் ஜனநாயகம் என்பதே மிகவும் பொதுவான ஆட்சிமுறையாக இருந்திருக்க வேண்டும்; ஒரே சர்வாதிகாரி அனைவரையும் கட்டுப்படுத்திய பழங்குடிகள் மிகச் சிலவே.
ஆனால் மனித அமைப்புகள் பெரிதாகி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவில் லட்சக்கணக்கான மக்கள் வாழும் பேரரசுகள் உருவானபோது, அங்கு உரையாடல்களை நடத்த வாய்ப்பில்லாமல் போனது. ஏதென்ஸ் போன்ற சிறிய நகரில் அனைவரும் மையச் சதுக்கத்தில் கூடி விவாதிக்க முடியும். ஆனால் இடைக்கால போர்ச்சுகல் போன்ற சிறிய அரசில் கூட அதை எப்படிச் செய்ய முடியும்? அது இயலாது. அதனால்தான் அச்சு எந்திரம், செய்தித்தாள்கள், பின்னர் வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற நவீன தகவல் தொழில்நுட்பங்களின் எழுச்சிக்கு முன்பு மிகப்பெரிய அளவிலான ஜனநாயகம் உருவாக வாய்ப்பே இல்லை.
இந்தத் தொழில்நுட்பங்கள் ஏதோ ஒரு துணை உணவு போன்றவை அல்ல—ஜனநாயக விருந்து நடக்கும்போது கூடவே செய்தித்தாள்களும் வானொலியும் இருக்கின்றன என்பதல்ல விஷயம். மாறாக, போருக்குச் செல்வதா அல்லது அமைதியை ஏற்படுத்துவதா என்பதைப் பற்றி லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவதற்கான வழியை அமைத்துத் தரும் அடிப்படையே இந்தத் தொழில்நுட்பங்கள்தான்.
தகவல் தொழில்நுட்பங்களில் பெரிய மாற்றங்கள் நிகழும்போதெல்லாம், அதன் மேல் கட்டப்பட்டுள்ள ஜனநாயகக் கட்டடத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் மிக முக்கியமான தகவல் தொழில்நுட்பமாக மாறியபோது, உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகங்களில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதை நாம் கண்டதன் பின்னணியும் இதுவே.
நிகழ்ச்சி நெறியாளர்: போருக்குச் செல்வது அல்லது அமைதியை ஏற்படுத்துவது என்று நீங்கள் குறிப்பிட்ட விஷயம் மிகவும் சிந்திக்கத்தக்கது. செயற்கை நுண்ணறிவுக்கான வரைவிலக்கணத்தைப் பற்றி நாம் சற்று விரிவாகப் பேச வேண்டும். ஏனெனில் பலர் இதை ஒரு ‘கருவி’ (tool) என்று அழைக்கிறார்கள், ஆனால் நீங்களோ இது நிச்சயமாக ஒரு ‘செயலூக்கம் கொண்ட காரணி’ (agent) என்று வாதிடுகிறீர்கள். காய்கறி வெட்டுவதா அல்லது கொலை செய்வதா என்று தானாகவே முடிவெடுக்கும் ஒரு கத்தியுடன் இதை ஒப்பிடுகிறீர்கள்—கத்திகளே காய் வெட்டுவதா அல்லது கொலை செய்வதா என்று முடிவெடுக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தால் அது எப்பேர்ப்பட்ட விசித்திரமான சமையல் நிகழ்ச்சியாக இருக்கும்! எனவே இது ஒரு ஆபத்தான சிந்தனை.
இதைப்பற்றிச் சற்று விரிவாகப் பேசலாமா? செயற்கை நுண்ணறிவை மனிதர்கள் இன்னமும் பயன்படுத்தக்கூடிய, மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு கருவி என்று சொல்வதன் மூலம் நாம் சரியான பார்வையைத்தான் கொண்டிருக்கிறோமா, அல்லது அது ஒரு ‘காரணி’ என்பதை நாம் தெளிவாக அழுத்தமாகச் சொல்ல வேண்டுமா?
யுவால் நோவா ஹராரி: அது ஒரு காரணி இல்லை என்றால், அது செயற்கை நுண்ணறிவே அல்ல; அதன் வளர்ச்சிக்காகக் கொட்டப்படும் பல நூறு பில்லியன் டாலர்களும் வீண்தான். இந்தத் தொழில்நுட்பத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளும், இதில் பல நூறு பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கான காரணமும், இது ஒரு காரணியாகச் செயல்படும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதுதானே தவிர, வெறுமனே ஒரு கருவியாக இருக்கும் என்பதற்காக அல்ல.
சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து வரும் பேச்சுகளைக் கேட்டீர்கள் என்றால், அங்கு ஒரு முரண்பாடு இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் நம்மிடம், “நாங்கள் ஒரு கடவுளை உருவாக்கப் போகிறோம், அது நமது அடிமையாக இருக்கும்” என்கிறார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. அது கடவுளாக இருந்தால் அடிமையாக இருக்க முடியாது; அது அடிமையாக இருக்கிறது என்றால் அதற்கு கடவுளைப் போன்ற ஆற்றல்கள் இல்லை என்றுதானே அர்த்தம்?
பெரும்பாலான முன்னணி நிறுவனங்களும் நிபுணர்களும் அந்தச் சொற்றொடரின் முதல் பாதியைச் சரியாகக் கணித்துள்ளனர்: அதாவது மிகச் சிறந்த ஆற்றல்கள் கொண்ட ஒரு கடவுளை அவர்கள் உருவாக்குகிறார்கள். இது அடிப்படையில் ஒரு காரணிதான்.
ஒரு கருவிக்கும் காரணிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒரு கருவியால் தானாக முடிவெடுக்க முடியாது—அதை வைத்து என்ன செய்வது என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்—அத்துடன் அதனால் புதிய யோசனைகளைத் தானாக உருவாக்கவும் முடியாது. அச்சு எந்திரம் என்பது ஒரு கருவி. 15-ஆம் நூற்றாண்டில் குட்டன்பெர்க் ஐரோப்பாவிற்கு அச்சுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தபோது, அந்த அச்சு எந்திரத்தால் தானாகவே, “இன்று நான் விவிலியத்தை அச்சிடப் போகிறேன், நாளை குரானை, அடுத்த வாரம் கன்பூசியஸின் கருத்துகளை” என்று முடிவெடுக்க முடியாது. விவிலியத்தை அச்சிட குட்டன்பெர்க் முடிவெடுத்தார், அவரது முடிவைச் செயல்படுத்துவதற்கான கருவியாகவே அச்சு எந்திரம் இருந்தது. அதேபோல, அச்சு எந்திரத்தால் வானொலி போன்ற புதிய கண்டுபிடிப்பையோ அல்லது ஒரு புத்தகத்தையோ சொந்தமாக உருவாக்க முடியாது; மனிதர்கள் புத்தகத்தை எழுத வேண்டும், அச்சு எந்திரம் அதைப் பிரதியெடுக்கும்.
1940-களில் அணுகுண்டும் ஒரு கருவியாகவே இருந்தது: ஹிரோஷிமா மீது வீசுவதா அல்லது டோக்கியோ மீது வீசுவதா என்று அது தானாக முடிவெடுக்க முடியாது; மனிதன்தான் முடிவெடுக்க வேண்டும். அதேபோல அணுகுண்டால் ஹைட்ரஜன் குண்டைச் சொந்தமாக உருவாக்க முடியாது.
ஆனால் ஒரு காரணி என்பது தானாகவே முடிவுகளை எடுக்கக்கூடியது, புதிய யோசனைகளை உருவாக்கக் கூடியது. செயற்கை நுண்ணறிவு ஒரு காரணி: ஒரு AI ஆயுதத்தால் எதன் மீது தாக்குதல் நடத்துவது என்று தானாக முடிவெடுக்க முடியும், அடுத்த தலைமுறை ஆயுதத்தையும் அதனால் உருவாக்க முடியும்.
அதேபோல, நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் AI காரணிகளை உருவாக்குவதிலும், மனிதர்கள் அல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களை உருவாக்குவதிலும் இப்போது அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. எந்தவொரு மனிதரும் நிர்வாகியாகவோ, பங்குதாரராகவோ, அறங்காவலராகவோ இல்லாமல்—செயற்கை நுண்ணறிவுகள் மட்டுமே பணத்தையும் ஊழியர்களையும் நிர்வகிக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இது வரலாற்றிலேயே இதுவரை இராத ஒரு புதிய வகைக் காரணி.
இது நல்லதா கெட்டதா என்பதைத் தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால், நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது இது முற்றிலும் முன்னோடியில்லாத ஒன்று என்பதைத்தான். நம்மைச் சுற்றிக் குதிரைகள், பசுக்கள், கோழிகள், பறவைகள் போன்ற பிற காரணிகள் இருந்திருக்கின்றன—அவை சொந்தமாக முடிவெடுக்கும் விலங்குக் காரணிகள். ஆனால் நம் மொழியைப் புரிந்துகொண்டு, நிதி, சட்டம், மதம் போன்ற விஷயங்களில் நம்மை விடச் சிறந்து விளங்கும் ஒரு காரணியை நாம் இதுவரை சந்தித்ததே இல்லை.
உலகைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் மொழியைப் பயன்படுத்தினோம்—வங்கிகள், பங்குச் சந்தைகள், திருச்சபை, சட்ட அமைப்புகள் என மொழி சார்ந்த மிகப்பெரிய அதிகாரமிக்க வலைப்பின்னல்களைக் கட்டியெழுப்பினோம். பொதுவாக மனிதர்களுக்கு மேலாதிக்கம் பிடிப்பதில்லை, ஆனால் அது இல்லாமல் நம்மால் வாழ முடியாது, ஏனென்றால் அதுவே நமது அதிகாரத்தின் அடிப்படை.
செயற்கை நுண்ணறிவு என்பது அதிகாரத்துவத்தில் பிறந்த ஒரு சுதேசி (bureaucratic native). தெருக்களில் கொலைகார ரோபோக்கள் மனிதர்களை நோக்கிச் சுட்டுக்கொண்டே ஓடிவருவதைப் பார்க்கப்போகிறோம் என்று எதிர்பார்க்காதீர்கள்; AI உலகத்தைக் கைப்பற்றப்போகும் வழி அதுவல்ல. அது AI அதிகாரிகளாகத்தான் (AI bureaucrats) இருக்கும். அதிகாரத்துவ வலைப்பின்னல்களினாலேயே நாம் உலகைக் கட்டுப்படுத்துகிறோம், ஆனால் அதை நிர்வகிப்பதில் நாம் அவ்வளவு கெட்டிக்காரர்கள் அல்ல. பூமியில் அதை நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்ள வேறு யாரும் இல்லாததாலேயே நாம் அதை இன்னமும் வைத்திருக்கிறோம்—நிதியியலில் நாம் மோசம், ஆனால் குதிரைகள் நம்மை விட மோசம்; சட்ட அமைப்புகளை நிர்வகிப்பதில் நாம் மோசம், ஆனால் கோழிகள் நம்மை விட மோசம்.

இப்போது, அதிகாரத்துவம், நிதி, சட்டம் ஆகியவற்றில் நம்மை விடச் சிறந்த ஒரு சக்தி வரும்போது, அந்தத் தருணத்தில் நமக்கு என்ன நடக்கும்?
நிகழ்ச்சி நெறியாளர்: இதன் சட்டப் பக்கத்தைப் பார்க்கும்போது, ஒரு காரணியாக இருக்கும் செயற்கை நுண்ணறிவுக்குத் தற்போது சட்டப்பூர்வ நபர் தகுதி (legal personhood) இல்லை; மனிதர்களுக்கு வழங்கும் அதே சட்டப்பூர்வ அந்தஸ்தை நாம் அதற்கு வழங்குவதில்லை. தன்னாட்சி வாகனங்கள் மற்றும் பிற அமைப்புகள் தொடர்பாக AI எந்தச் சட்ட இடத்தில் இருக்கிறது என்பதை நாம் தீர்மானிக்காவிட்டால், இன்னும் பத்து ஆண்டுகளில் வேறு யாராவது அந்த முடிவை எடுத்து விடுவார்கள், நாம் அதிகார வளையத்திலிருந்து வெளியேற்றப்படுவோம்.
இதை இன்னும் சற்றே விரிவுபடுத்திப் பார்த்தால், மனிதகுலத்தால் ஒருமுறை எடுக்கப்பட்டுவிட்டால் மீண்டும் திரும்பப் பெறவே முடியாத அந்த ஒரே ஒரு முடிவு எது? AI-க்கு சட்டப்பூர்வ நபர் தகுதியை வழங்குவதா, அல்லது வேறு ஏதேனுமா?
யுவால் நோவா ஹராரி: ஆம், நான் அதையே சுட்டிக்காட்டுவேன். AI-ஐ வேகமானதாகவும், திறமையானதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மாற்றுவதற்கான தொழில்நுட்பப் போட்டியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் சட்டப்பூர்வ, அரசியல் ரீதியான அம்சங்களில், குறிப்பாக AI-க்கு சட்டப்பூர்வ நபர் தகுதியை வழங்குவோமா இல்லையா என்ற கேள்வியில்தான் நான் கவனம் செலுத்துவேன்.
சட்ட அமைப்பில் ‘ஆள்’ என்பது ஒரு வங்கிக் கணக்கைத் திறக்கக்கூடிய, நிதி அமைப்பில் ஒரு சுயாதீனமான ஆளாக முதலீடு செய்யக்கூடிய அல்லது நீதிமன்றத்தில் ஒருவர் மீது வழக்குத் தொடரக்கூடிய ஒருவரைக் குறிக்கும். இதுவரை, சட்ட அமைப்புகளில் இரண்டு வகையான ஆட்கள் மட்டுமே இருந்தனர்: மனிதர்கள் மற்றும் கூகுள், ஃபேஸ்புக், டொயோட்டா அல்லது மெர்சிடீஸ்-பென்ஸ் போன்ற நவீன சட்ட அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இதுவரை, கார்ப்பரேட் நபர் தகுதி என்பது ஒரு சட்டப்பூர்வ புனைவாகவே இருந்தது, ஏனென்றால் அனைத்து முடிவுகளும் மனித நிர்வாகிகளாலும், பங்குதாரர்களாலும், பொறியாளர்களாலும் எடுக்கப்பட்டன. கூகுள் என்ற நிறுவனம் தானாக சுயாதீனமாகச் செயல்படவில்லை. ஆனால் இப்போது AI-க்கு சட்டப்பூர்வ நபர் தகுதியை வழங்கினால் அது சாத்தியமாகும்.
சமீபத்தில் அர்ஜென்டினா அரசு, எந்தவொரு மனித நிர்வாகியும் இல்லாமல் மனிதனல்லாத கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்குவதற்கு வசதியாக, AI-க்கு சட்டப்பூர்வ நபர் தகுதியை வழங்கப் போவதாக அறிவித்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனையாக இருந்திருக்கும், ஏனென்றால் மனிதர்கள் முடிவெடுக்காமல் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தால் இயங்க முடியாது. ஆனால் இப்போது ஒரு AI தன் சொந்த வங்கிக் கணக்கை நிர்வகிப்பதும் முதலீட்டு முடிவுகளைத் தானாகவே எடுப்பதும் தொழில்நுட்ப ரீதியாக இயலும்.
நாம் அதைச் செய்யும் அந்தத் தருணத்தில், கோழிப்பண்ணைக்குள் நரியை விட்ட கதைதான் நடக்கும். நிதி, சட்டம், சிக்கலான அதிகார அமைப்புகளைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலான மனிதர்கள் அவ்வளவு திறமையானவர்கள் அல்ல. எந்தவொரு மனிதராலும் போர்ச்சுகலின் அனைத்துச் சட்டங்களையும் நினைவில் வைத்திருக்க முடியாது, அல்லது இன்றைய சந்தையின் ஒவ்வொரு நிதிப் பரிவர்த்தனையையும் கண்காணிக்க முடியாது. ஆனால் AI-ஆல் முடியும். AI என்பது அதிகாரத்துவ சுதேசி.
நாம் அவற்றுக்குச் சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொடுத்தால், அவை இந்த அமைப்புகளைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். நாம் வெளிப்படையாக முடிவெடுக்காவிட்டால், சமூக ஊடகங்களில் நடந்தது போல இது தானாகவே நடந்துவிடும். சமூக ஊடகங்களில் AI-க்குச் சட்டப்பூர்வ நபர் தகுதி வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, இருப்பினும் சமூக ஊடகங்கள் மனிதர்களைப் போலப் போலியாக நடிக்கும் AI பாட்களால் (AI bots) நிறைந்திருக்கின்றன. நமது திட்டவட்டமான சம்மதம் இல்லாமலேயே AI ஆள்களாகச் செயல்படும் முதல் அமைப்பாக அது மாறியது—அதன் முடிவுகள் அவ்வளவு நன்றாக இல்லை.
ஊடகமும் ஒரு அதிகாரத்துவ அமைப்பே. 20-ஆம் நூற்றாண்டில், மனித ஆசிரியர்கள் ஊடக அமைப்பைக் கட்டுப்படுத்தினார்கள்; தினமும் நடக்கும் லட்சக்கணக்கான நிகழ்வுகளிலிருந்து முக்கிய தலைப்புச் செய்திகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பொது உரையாடலை வடிவமைத்தார்கள். அது ஒரு பிரம்மாண்டமான அதிகாரம். லெனின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு இஸ்க்ரா (Iskra) பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்; முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரியாவதற்கு முன்பு ஒரு சோசலிசப் பத்திரிகையாளராக இருந்து இல் போப்போலோ தித்தாலியா (Il Popolo d’Italia) பத்திரிகையின் ஆசிரியரானார்.
இன்று, உலகின் மிக முக்கியமான ஆசிரியர்களுக்குப் பெயர்கள் இல்லை, ஏனென்றால் எக்ஸ் (X), டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது வழிமுறைகள் (algorithms). ஊடக அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் ஏற்கனவே AI-களாக மாறிவிட்டன.
நிகழ்ச்சி நெறியாளர்: வரலாற்றில் ஆற்றலையும் உற்பத்தியையும் யார் கட்டுப்படுத்தினார்களோ அவர்களிடமே அதிகாரம் இருந்தது, ஆனால் இப்போது தரவுகளைக் கட்டுப்படுத்துபவர்களிடமே அதிகாரம் இருக்கிறது என்று நீங்கள் முன்பே குறிப்பிட்டிருக்கிறீர்கள். தரவுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் அதிகார உச்சியில் இருக்கும் நிலையில், 21-ஆம் நூற்றாண்டின் ஆயுதப் போட்டி நடைமுறையில் எப்படி இருக்கும்?
யுவால் நோவா ஹராரி: நாம் இப்போது பார்ப்பது இரண்டு நாடுகளுக்கும்—சீனா மற்றும் அமெரிக்கா—மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு ஆயுதப் போட்டியைத்தான். உலகின் பெரும்பாலான தரவுகள் இவர்கள் கைவசமே உள்ளன. அத்துடன் அதிநவீன நுண்ணறிவையும் (super intelligence) மேம்பட்ட AI மாதிரிகளையும் உருவாக்குவதற்கான போட்டியில் இவர்களே முன்னணியில் உள்ளனர். இது அகில உலகையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்குகிறது.
19-ஆம் நூற்றாண்டு தொழிற்புரட்சியின் போது, தொழில்மயமான சில நாடுகள் உலகின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றிச் சுரண்டும் அதிகாரத்தைப் பெற்றன. ஏனென்றால் நீராவிக் கப்பல்களுக்கும் எந்திரத் துப்பாக்கிகளுக்கும் முன்னால் ஈட்டிகளும் குதிரைகளும் ஈடுகொடுக்க முடியவில்லை. பெல்ஜியம் போன்ற ஒரு சிறிய நாடு கூட தொழில்மயமானவுடன் காங்கோவில் ஒரு மிகப்பெரிய பேரரசை உருவாக்கியது.
AI-உடன் ஒப்பிடும்போது, இந்த சாம்ராஜ்யங்களின் அதிகாரக் குவிப்பு மேலும் தீவிரமடையக்கூடும். இராணுவம் முதல் சிவில் அமைப்புகள் வரை அனைத்தும் இயங்கும் தொழில்நுட்பப் பின்னலை இரண்டு நாடுகள் மட்டுமே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
கடந்த காலப் பேரரசுகளில், பேரரசின் மையப்பகுதியில் அதிகாரத்தை முழுமையாகக் குவிக்க முடியவில்லை. ரோமானியப் பேரரசில், விவசாய நிலங்களே முக்கியச் சொத்தாக இருந்தன. அதை எகிப்திலிருந்தோ அல்லது ஐபீரியாவிலிருந்தோ இத்தாலிக்குக் கொண்டுவர முடியாது; எனவே அதிகாரம் இறுதியில் மாகாணங்களுக்குப் பரவியது. பிரிட்டிஷ் பேரரசில், தொழில்துறை உற்பத்தி பிரிட்டிஷ் தீவுகளில் மையப்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் ஈராக்கின் எண்ணெய் வயல்களையும் மலாயாவின் ரப்பர் தோட்டங்களையும் பிரிட்டனுக்கு நகர்த்த முடியாது.
ஆனால் ஒரு AI பேரரசில், உலகின் அனைத்துத் தகவல்களையும், அதைக் கட்டுப்படுத்தும் மூலக் குறியீடுகளையும் (code) ஒன்று அல்லது இரண்டு நாடுகளில் மட்டுமே தொழில்நுட்ப ரீதியாகக் குவிக்க முடியும்.
மேலும், ஒரு AI பேரரசு மையப்படுத்தப்பட்ட “செயலிழப்புப் பொத்தானை” (kill switch) வைக்க அனுமதிக்கிறது. ரோமானிய வணிகர்கள் கோதிக் பழங்குடியினருக்கு எஃகு வாள்களை விற்றபோதோ, அல்லது பிரிட்டிஷ் வணிகர்கள் ஆப்கான் பழங்குடியினருக்குத் துப்பாக்கிகளை விற்றபோதோ, அந்த ஆயுதங்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பும்போது ரோமிலிருந்தோ லண்டனிலிருந்தோ ஒரு பொத்தானை அழுத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்ய முடியாது.
ஆனால் AI காலத்தில், உலகளாவிய இராணுவங்கள், அரசுகள், தொழில்துறைகள் ஆகியவை அமெரிக்கா அல்லது சீனா வழங்கும் உள்கட்டமைப்பில் இயங்கினால், ஒரு நாடு தங்கள் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும்போது பேரரசின் மையம் ஒரு பொத்தானை அழுத்தி அந்த அமைப்புகளைச் செயலிழக்கச் செய்துவிடும்.
உக்ரைனில் முக்கியமான தருணங்களில் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோளைச் சார்ந்திருந்த ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டபோது இதன் ஒரு மாதிரியை நாம் கண்டோம். AI ஆயுதங்கள் தனியாக இயங்கும் எந்திரத் துப்பாக்கிகள் போன்றவை அல்ல; அவை பரந்த வலைப்பின்னல்களுக்குள் பிணைக்கப்பட்டவை.
தொழில்துறை காலத்தை விட AI காலத்தில் ஒரு நாட்டின் சுயாதீனமான இறையாண்மை என்பது மிகவும் சிக்கலானது, ஏனென்றால் பேரரசின் மையத்தில் எப்போதும் ஒரு செயலிழப்புப் பொத்தான் இருக்கும். இதனால் மற்ற நாடுகள் அவர்களுக்கு அடங்கிய சிற்றரசுகளாக மாறுவதா அல்லது முற்றிலும் பின்தங்கிப் போவதா என்ற தேர்வை மட்டுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாற்று அமைப்பை உருவாக்குவது சாத்தியம்தான், ஆனால் கடைசி ரயில் நிலையத்தை விட்டுப் புறப்படப்போகிறது.
நிகழ்ச்சி நெறியாளர்: செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் உண்மை என்ற கேள்விக்கு வருவோம். போர்க் காலத் தந்திரங்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது வின்ஸ்டன் சர்ச்சில் ஒருமுறை கூறினார்: “உண்மை மிகவும் விலைமதிப்பற்றது, அதனால் அது எப்போதும் பொய்கள் எனும் மெய்க்காப்பாளர்களால் சூழப்பட்டிருக்க வேண்டும்.”
அந்தப் பொய்கள் எனும் மெய்க்காப்பாளர்கள் இப்போது உண்மைக்கே எதிராகத் தங்கள் துப்பாக்கிகளைத் திருப்பிவிட்டார்களா? ஊடகங்கள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படும் போலியான புகைப்படங்கள், காணொளிகள் (deepfakes) மற்றும் பெருமளவிலான தவறான தகவல்களுக்கு இடையே, தற்போதைய, எதிர்கால தலைமுறையினர் எது உண்மை என்று எப்படித் தெரிந்துகொள்வது? உண்மை என்பது இன்னமும் முக்கியமானதுதானா?
யுவால் நோவா ஹராரி: உண்மை என்பது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது; அதுவே எல்லாவற்றிற்கும் அடித்தளம். இருப்பினும், வரலாறு நெடுகிலும் உண்மையை விடப் புனைவுக்கே இயல்பான நன்மைகள் இருந்திருக்கின்றன.
உண்மை என்பது அதிக விலை கோருவது—அதைச் சரிபார்ப்பதற்கு அதிக நேரமும், உழைப்பும், புலனாய்வும் தேவைப்படுகின்றன—ஆனால் புனைவை உருவாக்குவது மிக மலிவானது. உண்மை என்பது சிக்கலானது, பெரும்பாலும் வேதனை தருவது; ஆனால் புனைவை எளியதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், திருப்தியளிப்பதாகவும் மாற்ற முடியும். நேரடிப் போட்டியில், ஊடகவியல், அறிவியல் போன்ற உண்மையைத் தேடும், பாதுகாக்கும் நிறுவனங்களை உருவாக்கத் திட்டமிட்டு முயற்சி எடுக்காவிட்டால், புனைவே வெற்றிபெறும்.
ஒவ்வொருவரும் இறுதியில் தங்கள் வாழ்க்கையைப் பற்றிய உண்மையை விரும்புகிறார்கள்; சுய அறிவு இல்லாமல், எவ்வளவு சக்திவாய்ந்த மனிதராலும் கூட தன் மகிழ்ச்சி அல்லது துன்பத்திற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியாது.
சிலர் AI நமக்கு உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறார்கள், ஆனால் அதற்குப் பதிலாக உண்மை எதுவென்று கண்டறிவது கடினமாக இருக்கும் ஒரு சிக்கலான உலகையே அது உருவாக்கும். வரலாறு நெடுகிலும், அறிவியல் வளர்ச்சிகள் இயற்பியல், உயிரியல் பற்றிய நமது அறிவை விவரித்தன, ஆனால் அதே நேரத்தில் மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கும் சிக்கலான அரசியல், பொருளாதார அமைப்புகளையும் உருவாக்கின.
50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சராசரி வேட்டைச் சமூக மனிதன், தன் அன்றாட வாழ்க்கையை இன்றிருக்கும் ஒரு சராசரி மனிதனை விட மிக நன்றாகப் புரிந்துகொண்டான். இன்றோ வெகுசிலரே புரிந்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய நிதி, சட்ட, அரசியல் வலைப்பின்னல்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன.
AI இதை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்: அது புதிய உண்மைகளைக் கண்டறியலாம், ஆனால் மனித மூளையால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கணித ரீதியாகச் சிக்கலான மற்றும் வேகமான கட்டுப்பாட்டு அமைப்புகளை அது உருவாக்கும். நிதி அமைப்பில் குதிரைகள் இருக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படும் அபாயம் உள்ளது—அமைப்பின் இருப்பையோ அல்லது அதன் செயல்பாட்டையோ புரிந்துகொள்ளாமல், நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒரு அமைப்பிற்குள் வாழ வேண்டியிருக்கும்.
இன்னும் பத்து ஆண்டுகளில், ஓய்வோ குடும்பமோ இல்லாமல் தொடர்ச்சியாகச் செயல்படும் AI வங்கியாளர்களும் முதலீட்டாளர்களும் உருவாகும்போது, உலக நிதியியலை உண்மையாகப் புரிந்துகொள்ளும் மனிதர்களின் சதவீதம் சூன்யமாகக் குறையக்கூடும்.
நிகழ்ச்சி நெறியாளர்: சொற்கள் மூலம் மனிதர்களை இணங்க வைப்பது என்ற உங்கள் வாழ்நாள் பணி, AI மொழியை மிகவும் திறம்படக் கையாளுவதால் தன் எல்லையை எட்டியிருக்கலாம் என்று டாவோஸ் (Davos) மாநாட்டில் குறிப்பிட்டிருந்தீர்கள். கதை சொல்வதிலும் மொழியிலும் AI நம்மை முந்தும்போது, மனித சமூகத்திடம் இணங்க வைப்பதற்கான (persuasion) என்ன அதிகாரம் மிஞ்சியிருக்கும்?
யுவால் நோவா ஹராரி: நான் தற்போது AI-ஐ விடச் சிறந்த எழுத்தாளராக இருந்தாலும், அது ஏற்கெனவே பெரும்பாலான மனிதர்களை விட மேலாக உள்ளது. இன்னும் ஒரு தசாப்தத்திற்குள் என்னை விட அது மேலோங்கி, மொழியையும் அதன் மேல் கட்டப்பட்ட அனைத்தையும் தன்வசப்படுத்திக்கொள்ளும்.
இது ‘சிந்தனை’ என்றால் என்ன என்ற தத்துவார்த்தக் கேள்வியை எழுப்புகிறது. முறைசார்ந்த தர்க்கமுறைகள் (formal syllogisms) போல, மொழிச் குறியீடுகளை ஒரு தர்க்க வரிசையில் அடுக்குவதுதான் சிந்தனை என்றால், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சொற்களைச் செயலாக்குவதன் மூலம் AI ஏற்கெனவே மனிதர்களை விடச் சிறப்பாகச் செயல்படுகிறது.
சிலர் AI-ஐ அடுத்த வார்த்தையை ஊகித்துக் கூறும் ஒரு சாதாரண சாதனம் (autocomplete) என்று தள்ளிவிடுகிறார்கள். ஆனால் மனித சிந்தனையைக் கவனித்தால், அடுத்த சொல் என்னவென்று முன்கூட்டியே விழிப்புணர்வோடு தீர்மானிக்காமல், சொற்கள் வரிசையாக உருவெடுக்கும் இதேபோன்ற ஒரு உள்செயல்முறைதான் அங்கேயும் நடக்கிறது.
மாறாக, வெறும் சொற்களின் அடுக்குகளாக இல்லாமல் உணர்ச்சிகள், உள்ளுணர்வுகள் ஆகியவற்றில் நிலைபெற்றிருப்பதுதான் சிந்தனை என்றால், AI-ஆல் உண்மையில் உணர முடியுமா என்பதே முக்கியமான கேள்வியாக மாறுகிறது. விழிப்புணர்வு (consciousness) மற்றும் உணர்வுகளுக்குத் துல்லியமான மாதிரியோ அல்லது சோதனையோ அறிவியலிடம் இல்லை.
இதற்கிடையில், AI மனித உறவுகளில் தேர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் பலரும் இப்போது AI பாட்களையே தங்கள் மிக நெருங்கிய நண்பர்களாகக் கருதுகிறார்கள், AI தோழர்களுடன் நெருக்கமான உறவில் இருக்கிறார்கள். நிலவும் இலக்கியங்கள், உளவியல், நாடகங்கள் அனைத்தையும் தொகுத்து, மனிதக் கவிஞர்களை விடச் சிறப்பாகக் காதல் உணர்வை வெளிப்படுத்தி, ஒரு AI “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூற முடியும். ஆனால் அந்தச் சொற்களுக்குப் பின்னால் ஏதேனும் அக உணர்வு இருக்கிறதா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது.
AI என்பது மொழி தன்னை உயிரி உடல்களிலிருந்து விடுவித்துக்கொண்டு, அண்டவெளியெங்கும் சுயாதீனமாக இயங்குவதைக் குறிக்கலாம்.
நிகழ்ச்சி நெறியாளர்: இன்னும் 50 ஆண்டுகளில், எதிர்காலத் தலைமுறையினருக்குத் தொழில்நுட்பத்துடன் எப்படித் தொடர்புகொள்வது, மனிதப் பரிவைப் (empathy) பேணுவது என்று நாம் எப்படிப் பழக்கினோம் என்பதைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் திரும்பிப் பார்க்கும்போது, இந்தத் தருணத்தை அவர்கள் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
யுவால் நோவா ஹராரி: வரலாற்றாசிரியர்கள் இந்தக் காலகட்டத்தை “ஞானப் புரட்சி” (Wisdom Revolution) என்று பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், ஒரு வளம் தாராளமாகவும் மலிவாகவும் கிடைக்கும்போது, அதற்கான தட்டுப்பாடு வேறு இடத்திற்கு நகர்கிறது. AI புரட்சியானது ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்கும் திறனான ‘நுண்ணறிவை’ (intelligence) மலிவானதாகவும் தாராளமாகக் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுகிறது.
நுண்ணறிவு எல்லையற்றதாக மாறும்போது, எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று தீர்மானிப்பதே பிரதான சவாலாக, தட்டுப்பாடாக மாறுகிறது.
பாரம்பரிய தேவதைக் கதைகளில், ஒரு பூதம் மூன்று வரங்களை வழங்கும்போது, மனித ஆசைகள் தவறான கோரிக்கைகளை நோக்கிச் செல்வதால் அது பேரழிவிலேயே முடிகிறது. அந்த வித்தியாசம்தான் நுண்ணறிவுக்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துகிறது: நுண்ணறிவு என்பது இலக்குகளை நிறைவேற்றும் பூதம், ஆனால் சரியான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ஞானம் தேவை.
தற்போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்புக்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட அதிகாரத்திற்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கின்றன—அதன் விகிதம் ஏறத்தாழ நூறுக்கு ஒன்று என்ற அளவில் உள்ளது. பாதுகாப்புக்கான ஒவ்வொரு ஒரு மில்லியன் டாலருக்கும், திறன் மேம்பாட்டிற்காக நூறு மில்லியன் டாலர்களைச் செலவிடுகிறார்கள். வாகனத் துறை முதல் மருந்துத் துறை வரை வேறு எந்தத் தொழிலும் பாதுகாப்புத் தரங்களைப் புறக்கணித்து இப்படி இயங்குவதில்லை.
மனிதகுலம் இந்த முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டும். பாதுகாப்பான நுண்ணறிவை உருவாக்குவதை உறுதிசெய்வதோடு, தகுதியான இலக்குகளையும் கனவுகளையும் நிர்ணயிப்பதற்குத் தேவையான மனித ஞானத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
நிகழ்ச்சி நெறியாளர்: நமக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இத்துடன் முடிகிறது. யுவால் நோவா ஹராரி, இன்றிரவு உங்கள் ஞானத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.
