சமீப காலமாக, எந்தவொரு நவீன கஃபேவிற்குள் நுழைந்தாலும், சமூக வலைத்தள பக்கங்களை ஸ்க்ரோல் செய்தாலும், மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் பின்னோக்கிய நினைவுகளில் பயணிப்பதைக் கவனிக்க முடிகிறது.மில்லினியம் தொடக்கத்தில் மழலையாக இருந்த யுவதிகள், இளைஞர்கள், இன்று இடுப்புக்குக் கீழே கார்கோ பேன்ட்களை அணிந்துகொண்டு, பழைய டிஸ்போசபிள் கேமராக்களில் படமெடுத்து, கிராமஃபோன் இசைத்தட்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஃபிலிப் ஃபோன்களை (Flip phones) மீண்டும் சந்தைக்குக் கொண்டுவருகின்றன. திரைப்படத்துறையோ கடந்த காலத்தின் தொடர்ச்சிகளிலும் (reboots) மறு ஆக்கங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதை ஒரு ‘நொஸ்டால்ஜியா பொருளாதாரம்’ (Nostalgia Economy) என்று சொல்லலாம். அதாவது, கடந்த காலத்தைப் பார்ப்பதும் அதை வாங்குவதும் இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறியுள்ளது.
கடந்த காலத்தை மீட்டெடுப்பது என்பது எல்லாக் காலத்திற்கும் உரிய மனநிலை என்றாலும், சமீபத்தில் அதனைச் சுற்றியுள்ள பொருளாதாரம் முன்பெப்போதையும் விட அதிக அளவில் விரிவடைந்துள்ளது. ஆனால், நாம் ஏன் நம் கடந்த காலத்தை மீண்டும் விலைக்கு வாங்குவதில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறோம்? நேற்றைய மீதான நமது இந்த மோகம், இன்றைய யதார்த்தத்தைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது? என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். இங்கே நான் பார்க்கும் நொஸ்டால்ஜியா என்பது வெறுமனே பழைய பொருட்கள் மீதான ஈர்ப்பு மட்டுமல்ல. அது நினைவு, நுகர்வு, தொழில்நுட்பம், மனித உளவியல் ஆகியவை ஒன்றையொன்று சந்திக்கும் ஓர் இடமாகத் தெரிகிறது. கடந்த காலத்தின் மீதான நமது ஏக்கம் எவ்வாறு சந்தையால் வடிவமைக்கப்படுகிறது, சமூக வலைத்தளங்களால் பெருக்கப்படுகிறது, இறுதியில் தரவாகவும் மாற்றப்படுகிறது என்பதே என்னை அதிகம் சிந்திக்க வைக்கும் கேள்வியாக இருக்கிறது.
நொஸ்டால்ஜியா அல்லது கடந்த கால நினைவலைகள் என்பது ஒரு வலிமையான உளவியல் கருவி என்பேன். ‘நொஸ்டாஸ்’ (nostos – இல்லம் திரும்புதல்), ‘அல்கோஸ்’ (algos – வலி) என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து உருவான இந்த உணர்வு, ஓர் உளவியல் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது. தனிமை, அந்நியப்படுதல், பதற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ள இதுவொரு தற்காப்பு உத்தியாக விளங்குகிறது. அதே நேரத்தில், அது நமது கடந்த காலத்துடனான தொடர்ச்சியையும், சமூகத் தொடர்பையும், வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருப்பதாக உணரும் அனுபவத்தையும் மீட்டெடுக்கக்கூடிய உணர்வாகவும் இருக்கிறது.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிவேக தொழில்நுட்ப மாற்றங்கள் டிஜிட்டல் சோர்வு போன்ற உலகளாவிய அழுத்தங்கள் நிறைந்த இந்த நவீனக் காலத்தில், நிகழ்காலம் மிகவும் சோர்வூட்டுவதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கிறது. ஆனால், கடந்த காலம் அப்படிப்பட்டதல்ல. அந்தக்காலத்தில் சில கசப்பான உண்மைகள் இருந்திருந்தாலும், நமது கூட்டு நினைவகம்( collective memory) அதன் கடினமான விளிம்புகளை மெருகூட்டி, பாதுகாப்பு, எளிமை ,சீரான அமைப்பு முறை கொண்ட ஒரு கதகதப்பான நிலமாக அதனை நமக்குக் காட்டுகிறது. கடந்த காலப் பொருட்களையோ பாணிகளையோ விலைக்கு வாங்குவது என்பது வெறும் பொருளுக்கானது மட்டுமல்ல. அது ஓர் உணர்வுப்பூர்வமான பாதுகாப்பை வாங்கும் முயற்சியும் கூட.
தாங்கள் அனுபவிக்காத காலத்தின் மீதான வேட்கை, நொஸ்டால்ஜியா பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைய தலைமுறையான ஜென் சீ (Gen Z) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பல லட்சக்கணக்கான பதின்ம, இருபது வயதினர் 1990களின் பிற்பகுதியையும் 2000களின் தொடக்கத்தையும் (Y2K) ஒருவித மயக்கத்தோடு கற்பனை செய்து கொண்டாடுகிறார்கள். இந்தத் தலைமுறையை அந்தப் பழைய காலம் ஈர்ப்பதற்கு முக்கியமான காரணம், ஒன்றுதான். ‘திறன்பேசி’. இன்றைய இளைஞர்கள்தான் அல்காரிதம்களின் கட்டுப்பாட்டில், தொடர் கண்காணிப்பில், டிஜிட்டல் உலகத்துடன் பிணைக்கப்பட்டு வளர்ந்த முதல் தலைமுறையினர். இவர்களைப் பொறுத்தவரை, Y2K அழகியல் என்பது அல்காரிதம் இல்லாத ஒரு வெகுளித்தனமான பொற்காலம். கம்பிப் பொருத்தப்பட்ட ஹெட்செட்டுகள், பட்டன் ஃபோன்கள், ஆஃப்லைன் கலாச்சாரம் ஆகியவை தனிமனித சுதந்திரத்தையும், கண்ணாடித் திரைகளால் சூழப்படாத மனித உறவுகளையும் குறிக்கின்றன. எனவே அவர்கள் 2003-ம் ஆண்டின் உடையை மட்டும் அணியவில்லை. அதன் மூலம் நவீன டிஜிட்டல் சோர்விலிருந்து விடுபட்ட ஒரு வாழ்க்கை முறையை அவர்கள் நடித்துப் பார்க்கிறார்கள்.
அதே நேரத்தில், இங்கே ஒரு சுவாரஸ்யமான முரண்பாடும் இருக்கிறது. அவர்கள் கடந்த காலத்தைச் சமூக வலைத்தளங்களின் வழியாகவே மீண்டும் கண்டுபிடிக்கிறார்கள். அதாவது, டிஜிட்டல் உலகிலிருந்து தப்பிப்பதற்கான அழகியலையே டிஜிட்டல் உலகம் அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு காலத்தில் தனிப்பட்ட நினைவாக இருந்த ஒன்று, இப்போது அல்காரிதம் மூலம் பரிந்துரைக்கப்படும் கலாச்சாரமாக மாறுகிறது. நாம் எதை நினைவுகூர வேண்டும் என்பதை அல்காரிதம் நேரடியாகத் தீர்மானிக்கவில்லை என்றாலும், நாம் மீண்டும் மீண்டும் பார்க்கும் கடந்த காலத்தின் எந்தப் பகுதிகள் அதிகமாக நம் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை அது பெரிதும் பாதிக்கிறது.
அடுத்தது உணர்வுகளை மூலதனமாக்குதல். மனிதர்களின் உணர்வுகளைப் பணமாக்குவதில் முதலாளித்துவம் எப்போதும் சளைத்ததல்ல. வாடிக்கையாளர்களின் விசுவாசம் அவர்களின் நினைவுகளோடும் அடையாளத்தோடும் பிணைக்கப்பட்டிருக்கும்போது அது வலுவாக இருக்கும் என்பதை வணிக நிறுவனங்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் ஒருபுறம் பெருகி வளர, மறுபுறம் நிறுவனங்கள் இப்போது பழைய நினைவுகளைத் தூண்டும் உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
80-90கள், 2000களின் நினைவுகளை மீட்டெடுக்கும் தொடர்கள் (sequels), முன்கதைகள் (prequels), திரைத்துறை பிரபஞ்சங்களால் ஓடிடி தளங்களும் திரையரங்குகளும் நிரம்பி வழிகின்றன. ஃபேஷன், அழகு சாதனங்களைப் பிரபலப்படுத்தும் ஆடம்பர பிரான்டுகள் பழைய கால நாகரிகங்களை மின்னல் வேகத்தில் சுழற்சி முறையில் மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை எடுத்துக்கொண்டால், போலராய்டு கேமராக்கள், ரெட்ரோ பாணி கேமிங் கன்சோல்கள் எளிமையான ‘டம்ப்ஃபோன்கள்’ ஆகியவற்றின் மறுவருகையானது, நவீன தோற்றம் கொண்ட வன்பொருள்களை விட, மனிதத்தன்மை வாய்ந்த, தொட்டுணரக்கூடிய உணர்வைத் தரும் பழைய வன்பொருளுக்காக நுகர்வோர் கூடுதல் விலை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை நிரூபிக்கிறது. இப்படி வணிகமயமாக்கல் என்பது மனிதர்களின் ஏங்குதலை ஒரு லாட்டரித் திட்டமாகவே மாற்றுகிறது என்பேன். நாம் ஒரு பொருளை வாங்கும்போது, அந்தப் பொருளை மட்டும் வாங்குவதில்லை. அது நமக்குள் உருவாக்கும் நினைவையும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் வாழ்க்கை முறையையும் வாங்குகிறோம்.
இந்த நொஸ்டால்ஜியா பொருளாதாரம் உடைகள், திரைப்படங்கள் அல்லது மின்னணு சாதனங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. நாம் வாழும் இடங்களுக்குள்ளும் அது ஊடுருவத் தொடங்கியுள்ளது. பழைய கால வீடுகளின் மொசைக் தரை வடிவங்கள், டெரஸோ (terrazzo) தரைகள், வண்ணமயமான தரை ஓடுகள் (tiles) மரக் கதவுகள், இரும்புக் கம்பி ஜன்னல்கள், வளைந்த மாடிப்படிகள், பழைய விளக்குகள் போன்றவை மீண்டும் நவீன வீடுகளிலும் கஃபேக்களிலும் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்த தரை வடிவமே இன்று பழமையான அழகியல் பாணியாக (vintage aesthetic) மாறுகிறது. பழைய நகரங்களின் தெருக்கள், டிராம்கள் (tram lines) நீயான் குறியீடுகள் (neon signs) , குறைந்த உயரக் கட்டிடங்கள் (low-rise buildings), பழைய கடை முகப்புகள், குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த தெரு மரச்சாமான்கள் ஆகியவையும் சமூக வலைத்தளங்களில் ஒரு ரெட்ரோ நகரத்தை (retro city) அழகியலாக மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இதில் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றுவது, நொஸ்டால்ஜியா இப்போது ஒரு பொருளை மட்டும் விற்கவில்லை என்பதுதான். அது ஒரு முழுமையான சூழலை விற்கிறது. நாம் ஒரு பொருளை வாங்காமல், ஒரு காலகட்டத்திற்குள் நுழையும் அனுபவத்தையே வாங்குகிறோம். நகரங்களும் இதிலிருந்து விலகவில்லை. நகரம் வளர வேண்டும் என்ற நவீன தேவைக்கும், நகரத்தின் பழைய முகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனித ஏக்கத்திற்கும் இடையே ஒரு புதிய சந்தை உருவாகிறது. இதனால் கட்டிடக்கலை கூட நினைவின் பொருளாதாரத்திலிருந்து தப்ப முடியாத நிலை உருவாகிறது
இந்த வரிசையில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றொரு காரணமாக நான் பார்ப்பது அதிகம் விவாதிக்கப்படாத ஓர் ஆழமான அம்சம். “அல்காரிதமிக் வகுப்பறை”. செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு நமது கடந்த காலத்தைக் கற்றுக்கொள்கிறது? என்பதை யோசித்துப் பாருங்கள். இங்குதான் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் மிக முக்கியமான திட்டம் அடங்கியுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல. ஏஐ நிறுவனங்கள் தான் நொஸ்டால்ஜியாவை உருவாக்குகின்றன என்று பொதுப்படையாகக் கூற முடியாது. ஆனால் ஏற்கெனவே மனிதர்களுக்குள் இருக்கும் இந்த ஏக்கத்தை டிஜிட்டல் தளங்களின் அல்காரிதம்கள் எவ்வாறு கண்டறிந்து, பெருக்கி, மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். அதன் பின்னணி என்னவென்று ஆராய வேண்டும்.
அதில் முதன்மையானது டிஜிட்டல் உணவை உருவாக்குதல் (Feeding the AI Data). பெரிய மொழி மாதிரிகள் (LLMs) மற்றும் ஜெனரேட்டிவ் AI அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்கப் பல்வேறு வகையான மனிதத் தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனால், நிகழ் நேர நவீன உலகத் தரவுகள் சிக்கலானவை. தனியுரிமை, பதிப்புரிமை, தரவுப் பயன்பாடு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. இதற்கிடையில், மக்கள் தாங்களாகவே ஆர்வமுடன் கடந்த கால நினைவுகள், பழைய புகைப்படங்கள், வின்டேஜ் பாணி கதைகள், உணர்வுப்பூர்வமான ஏக்கங்களை இணையத்தில் பகிரும்போது, அவை மிகப்பெரிய டிஜிட்டல் தடயங்களாக மாறுகின்றன.
நிறுவனங்கள் பழைய காலப் பிரான்டுகள், ரெட்ரோ விளம்பரங்கள், பழைய கலாச்சார மீம்ஸ்களை மீண்டும் சந்தைப்படுத்துகின்றன. மக்கள் சமூக வலைத்தளங்களில் இதற்கு உணர்வுப்பூர்வமாக எதிர்வினையாற்றி, பல்லாயிரக்கணக்கான பதிவுகளை உருவாக்குகிறார்கள். இந்தப் பதிவுகள் அனைத்தும் ஒரே நேரடிப் பாதையில் ஏஐ பயிற்சிக்கான தரவுகள் ஆகிவிடுகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும், இத்தகைய டிஜிட்டல் தடயங்கள் மனிதர்களின் உணர்வுகள், விருப்பங்கள், பழக்கவழக்கங்கள், கடந்த காலத்தைப் பற்றிய கூட்டு நினைவுகள் குறித்த மிகப்பெரிய தரவுச் சூழலின் ஒரு பகுதியாக மாறுகின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.
இதில் நான் பார்க்கும் முக்கியமான மாற்றம் இதுதான். நொஸ்டால்ஜியா முதலில் ஒரு தனிப்பட்ட நினைவு. பின்னர் அது ஒரு சமூக வலைத்தள பதிவு. அதன் பிறகு அது ஒரு சந்தைப்படுத்தக்கூடிய கலாச்சாரப் பொருள். இறுதியில், அதற்கான நமது எதிர்வினையும் ஒரு தரவுப் புள்ளியாக மாறுகிறது. ஒருவர் தனது பழைய புகைப்படத்தைப் பதிவிடுகிறார். இன்னொருவர் 2000களின் பாடலைப் பகிர்கிறார். மற்றொருவர் பழைய கேமராவைப் பற்றிப் பதிவிடுகிறார். அவற்றுக்குக் கிடைக்கும் எதிர்வினைகள், பகிர்வுகள், பார்வைகள், அந்த உள்ளடக்கம் இன்னும் அதிகமான மனிதர்களைச் சென்றடைய வழிவகுக்கின்றன. இவ்வாறு தனிப்பட்ட நினைவு, கூட்டு நினைவாகவும், கூட்டு நினைவு ஒரு சந்தைப்படுத்தக்கூடிய கலாச்சாரப் பொருளாகவும் மாறுகிறது. அதனால் நாம் கடந்த காலத்தை நினைவுகூர்கிறோமா, அல்லது நமக்குக் காட்டப்படும் கடந்த காலத்தை நினைவுகூர்கிறோமா என்ற கேள்வி சில நேரங்களில் எழுகிறது. எனவே இதில் ஓர் ஆபத்தான விளைவு இருபதையும் நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
“அழகியல் மயமாக்கப்பட்ட வரலாறு (Sanitized History)”. அதாவது ஏஐ அமைப்புகள் மனித வரலாற்றின் முழுமையான, சிக்கலான, கடினமான உண்மைகளைக் கொண்ட உலகத்தைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, இணையத்தில் மனிதர்கள் அதிகமாகப் பகிர்ந்த, அதிகமாகப் பார்த்த, அதிகமாக ரசித்த கடந்த காலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவங்களையே அதிகமாக எதிர்கொள்ளும் சூழல் உருவாகலாம்.மனிதர்கள் கடந்த காலத்தைத் தேர்ந்தெடுத்து நினைவுகூருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மீண்டும் பெருக்குகின்றன. வணிகம் அவற்றில் விற்பனைக்குத் தகுதியான பகுதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. இறுதியில், இயந்திரங்கள் கற்றுக்கொள்ளும் டிஜிட்டல் தடயங்களிலும் அந்தத் தேர்வுகள் பிரதிபலிக்கலாம்.
இதுதான் என்னை “அழகியல் மயமாக்கப்பட்டவரலாறு” என்ற கருத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. ஒரு காலத்தின் வறுமை, சமத்துவமின்மை, வன்முறை, பாலினப் பாகுபாடு அல்லது சமூக அநீதிகளும் கூட அந்தக் காலத்தின் இசை, உடை, விளம்பரங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலமே புரிந்துகொள்ளப்படும்போது , வைரலாகும்போது, வரலாற்றின் உணர்ச்சிகரமான அழகியல் அதன் சிக்கலான உண்மைகளை மூடி மறைக்கும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. அப்போது நொஸ்டால்ஜியா பொருளாதாரம் என்பது கடந்த காலத்தை நினைவுகூர்வது மட்டுமல்ல. கடந்த காலத்தின் எந்தப் பதிப்பை எதிர்காலம் நினைவுகூர வேண்டும் என்பதையும் தீர்மானிக்கத் தொடங்குகிறது.
எனவே நொஸ்டால்ஜியா என்பது நமது உடல் ரீதியான ஒரு போராட்டத்துடனும் தொடர்புடையது. நமது வாழ்க்கை மேகக் கணினிகள் (Cloud) வழியாக ஓடிக்கொண்டிருக்கும் போது, மக்கள் தொடு உணர்வுக்கான பசியை அனுபவிக்கிறார்கள். எல்லாமே டிஜிட்டல் ஆகும்போது, எதுவும் நம்முடையதாக இருப்பதில்லை.இசைத் தொகுப்பை நாம் சொந்தமாக வைத்திருக்கவில்லை. அதை வாடகைக்கு எடுக்கிறோம். புகைப்பட ஆல்பங்களைத் தொட்டுப் பார்ப்பதற்குப் பதிலாக ஸ்வைப் செய்கிறோம். வினில் இசைத்தட்டுகளும், காகிதப் புத்தகங்களும், ஃபிலிம் கேமராக்களும் இந்தப் புலனாகாத (invisible world) உலகத்திற்கு எதிரான மனிதர்களின் உள்ளார்ந்த எதிர்ப்பின் அடையாளங்கள் என்றே நான் சொல்வேன்.
பட்டன் ஃபோனில் குறைவான செயல்பாடுகள் இருந்தன. ஃபிலிம் கேமராவில் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு வரம்பு இருந்தது. காகிதப் புத்தகத்தில் எல்லையற்ற ஸ்க்ரோல் (infinite scroll) இல்லை. இசைத்தட்டில் அடுத்த பாடலை உடனடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. இவை அனைத்தும் தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடுகள். ஆனால் அந்தக் குறைபாடுகளே மனித அனுபவத்திற்கு ஒரு வேகத்தையும் எல்லையையும் கொடுத்திருக்கலாம். எனவே நொஸ்டால்ஜியா பொருளாதாரம், கடந்த காலத்தின் பொருட்களை மீண்டும் விற்பனை செய்வதைவிட, நிகழ்காலத்தில் நாம் இழந்ததாக உணரும் சில அனுபவங்களான மெதுவான வாழ்க்கை, தனியுரிமை, தொடு உணர்வு, காத்திருப்பின் அனுபவம், கவனம் சிதறாத மனித உறவு ஆகியவற்றையே மீண்டும் விற்பனை செய்கிறது என்று கூட நான் நினைக்கிறேன்.
ஆகவே நொஸ்டால்ஜியா பொருளாதாரம் என்பது தற்காலிகமான ஒரு விளம்பர உத்தி மட்டுமல்ல. அது நவீனத்தை உள்வாங்கி மூச்சுவிடத் திணறும் ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அது பழைய தொலைப்பேசியாக இருக்கட்டும், வின்டேஜ் ஆடையாக/ அணிகலன்களாக இருக்கட்டும், அல்லது பழைய திரைப்படமாக இருக்கட்டும், நிகழ்காலம் தரத் தவறும் பாதுகாப்பை நேற்றைய நாளிலிருந்து நாம் தேடிப் பெறுகிறோம்.வணிகங்களும் டிஜிட்டல் தளங்களும் நம்முடைய இந்த ஏக்கத்தையே தங்களுக்குச் சாதகமான மூலதனமாக மாற்றிக்கொள்கின்றன. அதே நேரத்தில், நாம் உருவாக்கும் நினைவுகள், பதிவுகள், எதிர்வினைகள், விருப்பங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் நினைவகமாகச் சேர்கின்றன. அந்த நினைவகத்திலிருந்து எதிர்கால இயந்திரங்கள் மனிதர்களைப் பற்றியும், நமது கலாச்சாரத்தைப் பற்றியும், நமது கடந்த காலத்தைப் பற்றியும் கற்றுக்கொள்ளப் போகின்றன.
அந்த வகையில் நொஸ்டால்ஜியா பொருளாதாரம் என்பது நாம் கடந்த காலத்தை எவ்வாறு விற்கிறோம் என்பதற்கான கதை மட்டுமல்ல. நாம் எந்தக் கடந்த காலத்தைத் தேர்ந்தெடுத்து நினைவுகூர்கிறோம், எந்தப் பகுதிகளை மறந்துவிடுகிறோம், அந்த நினைவுகளை யார் பெருக்குகிறார்கள், அவை எவ்வாறு தரவாக மாறுகின்றன, எப்படி அவை கூட்டு அறிவாக (collective intelligence) பரிணாமம் அடையப் போகிறது நாளை அது எப்படிப்பட்டச் சமுதாயத்தை உருவாக்கப் போகிறது என்பதற்கான கதையும் கூட. மனித வரலாற்றையும் நமது உணர்வுகளையும் எதிர்காலம் எவ்வாறு நினைவுகூரும் என்பதைத் தீர்மானிப்பதில், நாம் நினைப்பதைவிட நமது இன்றைய டிஜிட்டல் நடத்தை மிகப் பெரிய பங்கை வகிக்கக்கூடும் என்பதே எனது பார்வை.
