நவீன கன்னட இலக்கியத்தின் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவரான எஸ். எல். பைரப்பா (20 ஆகஸ்ட் 1931 – 24 செப்டம்பர் 2025), இந்திய மொழிகளில் பரந்த வாசகர்களைப் பெற்ற எழுத்தாளர். தத்துவம், வரலாறு, சமயம், குடும்ப உறவுகள், சாதி, மனித மனத்தின் சிக்கல்கள் ஆகியவற்றைத் தனது நாவல்களில் தொடர்ந்து ஆராய்ந்தவர். வம்சவிருக்ஷா, தாட்டு, பர்வா, கிருஹபங்கா ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். தமிழில் குடும்பம் சிதைகிறது என்ற பெயரில் வெளிவந்த கிருஹபங்கா, அவரது நாவல்களில் முக்கியமான ஒன்று. ஒரு குடும்பத்தின் சிதைவினூடாக மனிதர்களின் துயரத்தையும் உறுதியையும் நுட்பமாகச் சித்தரிக்கும் அற்புதமான நாவல் அது.
பைரப்பாவின் இலக்கியப் பார்வையையும் படைப்பாக்க முறையையும் அறிந்துகொள்ள உதவும் இரண்டு நேர்காணல்களை இங்கே வெளியிடுகிறோம். முதலாவது, தேசகுல்கர்னி 1997 ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் மைசூரில் பைரப்பாவின் இல்லத்தில் நிகழ்த்திய உரையாடல். இது சாகித்ய அகாதெமியின் Indian Literature இதழில் 1998 நவம்பர்–டிசம்பர் வெளியீட்டில் இடம்பெற்றது. இரண்டாவது, ஆர். சுரேந்திரன் (அர்சு) மேற்கொண்ட My Life, My Work என்ற நேர்காணல். இது அதே இதழின் 2010 நவம்பர்–டிசம்பர் வெளியீட்டில் பிரசுரமானது.
தத்துவத்தின் வழியாக விடை காண முடியாத வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளை இலக்கியத்தின் வழியாக எதிர்கொள்ளத் தொடங்கியதாக பைரப்பா கூறுகிறார். ஒரு நாவலுக்கான கரு எவ்வாறு உருவாகிறது, அனுபவம் எவ்வாறு புனைவாக மாறுகிறது, கதாபாத்திரங்கள் எப்படித் தங்களுக்கான அக வாழ்க்கையைப் பெறுகின்றன, முதல் வரைவை எழுதிய பிறகு ஒரு நாவலை எவ்வாறு திருத்தி அமைக்கிறார் என்பவற்றைப் பற்றி இந்த உரையாடல்களில் விரிவாகப் பேசுகிறார். மகாபாரதத்தை மனிதர்களின் வாழ்க்கையாக மறுபுனைவு செய்த பர்வா குறித்த அவரது விளக்கங்களும் கவனத்திற்குரியவை.
அதே நேரத்தில், இலக்கிய இயக்கங்கள், மார்க்சியம், பெண்ணியம், சாதி, இந்தியப் பண்பாட்டு ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றிய பைரப்பாவின் கருத்துகள் விவாதத்திற்குரியவை. குறிப்பாக, இலக்கியப் படைப்பாக்கம் சித்தாந்தங்களிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்ற அவரது வாதமே, ஒரு படைப்பாளி தனது பண்பாட்டு நம்பிக்கைகளிலிருந்தும் சமூகப் பார்வையிலிருந்தும் எந்த அளவிற்கு விடுபட முடியும் என்ற எதிர்க்கேள்வியை எழுப்புகிறது.
பைரப்பாவின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதற்காக மட்டுமல்ல, அவற்றுடன் முரண்படுவதற்கும் இந்த நேர்காணல்களில் இடமிருக்கிறது. இலக்கியம் குறித்த அவரது நம்பிக்கைகள், படைப்பாக்க அனுபவங்கள், விமர்சனங்களுக்கான பதில்கள் ஆகியவற்றின் வழியாக ஒரு நாவலாசிரியரின் சிந்தனை உலகை அறிந்துகொள்ளவும், இலக்கியம் குறித்த நமது சொந்தக் கேள்விகளை விரிவுபடுத்திக்கொள்ளவும் இந்த இரண்டு உரையாடல்களும் உதவக்கூடும்.

1
வாழ்க்கையின் கேள்விகளுக்கு இலக்கியமே என் வழி
படைப்பாக்கம், தத்துவம், இலக்கியச் சுதந்திரம் குறித்து..
நேர்காணல் தேசகுல்கர்னி
தேசகுல்கர்னி: எழுத்திலிருந்து தொடங்குவோம். அருவமான, உருவமான (நுண்மையான, பருண்மையான) தளங்களில் ‘எழுதுதல்’ என்ற செயல்பாடு உண்மையில் என்ன?
எஸ். எல். பைரப்பா: அழகியலாளர்களும் கவி இயல் (காவியக் கோட்பாடு) குறித்த நூல்களை எழுதாதவர்களும் இப்பொருளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்; இலக்கியம் பயிலும் ஒவ்வொரு மாணவரும் அதை வாசித்திருப்பார். ஆனால், ஒவ்வொரு எழுத்தாளனும் தனது எழுத்தின் நோக்கத்தைத் தானே கண்டடைய வேண்டும். வாழ்க்கையின் பல்வேறு முரண்பாடுகள், மரணம், நமக்கு நாமே பேணும் நீதி போன்ற அடிப்படைச் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்காக நான் தத்துவக் கல்வியைத் தீவிரமாகப் பயின்றேன். ஏறத்தாழப் பத்தாண்டுகள் அதைக் கற்ற பிறகு, அது என் தேடலை நிறைவு செய்யவில்லை என்பதைக் கண்டுகொண்டேன். இந்தக் காலத்தில்தான் நான் எனது முதல் நாவலான வம்சவிருக்ஷா (Vamshavriksha) வை எழுதினேன். இலக்கியப் படைப்பாக்கம் என்னை அலைக்கழிக்கும் பல சிக்கல்களுக்கு உணர்வுரீதியான தீர்வைக் காண உதவுகிறது. அதை எழுதும்போது இதை உணர்ந்தேன்.
தேசகுல்கர்னி: உங்கள் சுயசரிதையில் விவரிக்கப்பட்டுள்ள சிக்கல்களை, உங்கள் கல்விப்புலச் சூழல் இறுதியாகத் தீர்த்து வைக்கவில்லையா?
பைரப்பா: இல்லை. அதனால்தான் நான் இலக்கியத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்வின் மெய்மையை அதன் உணர்வுபூர்வமான, லட்சியபூர்வமான தளங்களில் கண்டடைவதற்கான ஒரு வழியாகவே இலக்கியம் இருக்கிறது. இயற்பியல், கணிதம், தத்துவம் அளவுக்கு அதுவும் தீவிரமானது.
தேசகுல்கர்னி: அப்படியென்றால், இலக்கியத்தால் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காகக் குரல் கொடுக்க முடியுமா? அதில் ஏதேனும் அர்ப்பணிப்பு தேவையாக இருக்கிறதா?
பைரப்பா: நவீன காலத்தில், இந்தியாவில் முற்போக்கு இயக்கம், நவீனத்துவ இயக்கம், தலித் இயக்கம், மார்க்சிய இயக்கம், கலக இயக்கம் எனப் பல்வேறு இலக்கியப் போக்குகள் இருந்துள்ளன. அடிப்படையில், ஓர் இயக்கம் என்பது எப்போதுமே குழுச் செயல்பாடு என்றே நம்புகிறேன். ஆனால் இலக்கியமோ தனது படைப்பாக்கத்தில் முற்றிலும் தனி ஒருவர் சார்ந்தது. ஒரு குழுவால் உருவாக்கப்பட்டு, படைப்பு மனத்தின் மீது திணிக்கப்படும் எந்தவொரு சித்தாந்தமும், ஒருவரது படைப்பாற்றலின் முழுமையான, சுதந்திரமான வெளிப்பாட்டை முடக்குகிறது. எனவே நான் இந்த இயக்கங்கள் எதிலும் அங்கம் வகிக்கவில்லை. இதற்காக, இந்த இயக்கங்கள் முன்வைக்கும் அறவியல் கருத்துகள் மீது எனக்குப் பரிவு இல்லை என்று அர்த்தமல்ல. இருப்பினும், இந்த இயக்கங்கள் தத்தமது கருத்துகளைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுவதில்லை; அவை தமக்கான தத்துவத்துடன் கூடிய ஒரு சமூக – அரசியல் கோட்பாட்டைக் கட்டியமைக்கின்றன. இது, மெய்மையின், மனிதப் பட்டறிவின் பிற பரிமாணங்களைக் காண விடாது; பின்பற்றுபவர்களைக் குருடர்களாக்கி விடுகிறது.
தேசகுல்கர்னி: இது எவ்வாறு செயல்படுகிறது?
பைரப்பா: உதாரணத்திற்கு, அர்ப்பணிப்புள்ள மார்க்சிய எழுத்தாளர் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். வர்க்கப் போராட்டச் சூழலுக்கு வெளியே ஒரு பணக்காரரின் கதாபாத்திரத்தை நேர்மையான முறையில் அவரால் அணுகி ஆராயவோ சித்திரிக்கவோ முடியுமா? அதேபோல, பாலினச் சூழலில் ஓர் ஆண் கதாபாத்திரத்தைப் பெண்ணிய எழுத்தாளர் ஒருவர் அனுதாபத்துடன் சித்தரிக்க முடியுமா? இந்தச் சித்தாந்தச் சட்டகங்களிலிருந்து வெளியே வராதவரை ஒருவரால் சிறந்த எழுத்தாளராக முடியாது.
தேசகுல்கர்னி: இதை இன்னும் சற்று விரிவாக விளக்க முடியுமா?
பைரப்பா: பர்வா (Parva) நாவலில் குந்தி, திரௌபதி ஆகியோரை நான் சித்தரித்துள்ள விதம், தங்களைப் பெண்ணிய எழுத்தாளர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்களின் முயற்சிகளை விட, கதையின் பண்பாட்டு மோதல்களில், லட்சிய ஈடேற்றத்தில் வலிமைமிக்கதாக உள்ளது என்று பல பெண்ணிய வாசகிகளும், சிந்தனையாளர்களும், விமர்சகர்களும் தெரிவித்தனர். ஆனால் நான் அக் கதை மாந்தரைப் பெண்ணியக் கோணத்திலிருந்து சித்தரிக்கவே இல்லை; ஒரு தூய கலைஞனாகவே ஆராய்ந்து ஆக்க முயன்றேன்.
தேசகுல்கர்னி: மீண்டும் எழுத்தாக்கத்திற்கு வருவோம்; ‘இந்திய இலக்கியம்’ என்று ஒன்று உண்மையில் இருக்கிறதா? அதை நாம் எவ்வாறு பொதுவாக உணர்வது?
பைரப்பா: ‘இந்திய இலக்கியம்’ என்று ஒரு தனித்த அடையாளம் இருக்கிறது என்றே நம்புகிறேன். (எந்தவொரு இந்திய மொழியிலும் எழுதப்பட்ட) இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் கதைமாந்தரின் பண்பாட்டுச் சிக்கல்களும் மனோபாவமும் பொதுவாகப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அதனால்தான் இந்திய மொழி ஒன்றின் படைப்பு மற்றொரு இந்திய மொழியாக்கத்திற்கு எளிதாக இருக்கிறது; ஏனெனில் பண்பாட்டுக் கருத்துக் கூறுகள் பெருமளவில் ஒத்ததாக இருக்கின்றன.
ஆனால், ஏதேனும் ஒரு இந்திய மொழியிலிருந்து சீன, ஸ்பானிய, அரபு, ஆங்கிலம் பிற மொழிக்கு மொழிபெயர்க்க முயன்று பாருங்கள். அது மிகவும் கடினமானது; ஏனெனில் பண்பாட்டுக் கருத்துருக்கள் முற்றிலும் வேறுபடுகின்றன. நம்முடைய கடவுளரும், சடங்குகளும், திருமணம் போன்ற மரபுப் பழக்கவழக்கங்களும் பிற பண்பாடுகளுடையதைப் போன்றவை அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டினதும் அதன் வாழ்க்கை முறையினதும் வெளிப்பாடு மட்டுமே.
தேசகுல்கர்னி: இங்கேயும்கூட, வெளியீடு சார்ந்த பிரச்சனை இருக்கிறதே.
பைரப்பா: ஆம், கொடுமை என்னவென்றால், ஒரு வங்காள நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில்தான் வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கூட ஆங்கில மொழிபெயர்ப்புதான் அடிப்படையாக இருக்கிறது. (இந்த இடத்தில், ஓர் இந்தியப் படைப்பை அந்நிய மொழிக்கு மொழிபெயர்ப்பதில் ஏற்றுபடும் சிரமங்களே, இந்திய இலக்கியத்தின் ‘இந்தியத் தன்மை’யைச் சுட்டிக்காட்டுகின்றன என்று பிரபு குறிப்பிட்டார்.)
தேசகுல்கர்னி: வாழ்க்கையின் அலைக்கழிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு தேடித் தத்துவத்திலிருந்து இலக்கியத்திற்கு மாறியபோது நீங்கள் இளைஞராக இருந்தீர்கள். அறுபது வயதைக் கடந்த நிலையில், இலக்கியம் உங்கள் தேடல்கள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டதாக உணர்கிறீர்களா?
பைரப்பா: நான் சற்றுப் பின்னோக்கிச் செல்கிறேன். வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சனைகளையும் மதிப்பீடுகளையும் பகுப்பாய்வு செய்வதற்குத் தத்துவம் வல்லமை வாய்ந்ததுதான், ஆனால் அது எனக்கு உணர்வுப்பூர்வமான நிறைவைத் தரவில்லை. ஒருவேளை நான் ‘சாதனா’ (ஆன்மீகப் பயிற்சி)வின் பாதையைப் பின்பற்றியிருந்தால் அது சாத்தியமாகி இருக்கலாம். அதற்கு மனோபாவ ரீதியாக நான் தயாராக இருக்கவில்லை. மேலும் தத்துவத்தில் என்னால் படைப்பூக்கத்துடன் இயங்க முடியாது என்பதையும் உணர்ந்தேன்; அதாவது, அத்துறையில் புதிய சிந்தனைகள் எதையும் என்னால் ஆக்கியளிக்க முடியாது. ஆனால் இலக்கியத்தில் என்னால் அசலாக இயங்க முடிந்தது, அது எனக்கு உணர்வுபூர்வமான நிறைவைத் தந்தது.
ஆனால், இலக்கியம்கூட முழுமையான நிறைவைத் தருவதில்லை. கோட்பாட்டு இயற்பியல் உட்படப் பல்வேறு அறிவியல் துறைகள் இருப்பின் இரகசியத்தை அவிழ்க்க முயல்கின்றன. மேலும், மரணம் என்ற பேருண்மை இருக்கிறது; அதை அறிய நீங்கள் எவ்வளவு முயன்றாலும், அதை எவ்வளவு நெருங்கிச் சென்றாலும் அது தன் இயல்பை வெளிப்படுத்துவதில்லை. அறிவுபூர்வமான தத்துவமோ இலக்கியமோ இந்தச் சூழலுக்கு விடை தருவதில்லை. தத்துவக் கல்வி அதைப் புரிந்துகொள்ள உதவும் என்று நமது தத்துவ மரபு கூறுகிறது. ஆனால் நான் ஏற்கெனவே தெளிவுபடுத்தியது போல, அது எனக்கு உகந்த மனோபாவம் அல்ல. இலக்கியமே எனக்கு ஒரே படைப்பாக்க வழியாக இருந்து வருகிறது.
தேசகுல்கர்னி: இந்த வேறுபாட்டிற்கு உடனடியான உதாரணம் ஏதேனும் சொல்ல முடியுமா?
இபைரப்பா: உதாரணத்திற்கு, கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் பல்வேறு தத்துவ மரபுகளில் ‘சத்தியம்’ பற்றிய கருத்தாக்கத்தை நான் வாசித்திருக்கிறேன். ஆனால் எனது சாக்ஷி (Sakshi) நாவலை எழுதியபோது, சத்தியம் அசத்தியம் பற்றிய கருத்தையும், வாழ்க்கையின் பிற மதிப்பீடுகளுடனான அதன் தொடர்பையும், வேறு எங்கு வாசித்ததை விடவும் நான் மிகத் தீவிரமான முறையில் காட்டியிருந்தேன். மெய்யியல் இலக்கு எதுவும் இல்லாமல் உணர்வுபூர்வமாக ஒரு கதையை எழுதத் தொடங்கினேன். ஆனால் அது மெய்யியல் சாயல்கள் நிறைந்த ஆக்கமாக உருப்பெற்றது.
தேசகுல்கர்னி: இலக்கியத்தை நீங்கள் தேர்ந்தெடுத்ததை எவ்வாறு விவரிப்பீர்கள்? பெரும்பாலான புனைவெழுத்தாளர்கள் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லையே?
பைரப்பா: என் மனத்தில் ஒரு கருப்பொருள் தோன்றும் போதெல்லாம், அது ஒரு பரந்த பின்புலத்தைக் கொண்டதாகவே தோன்றுகிறது; மேலும் அது இடரீதியாக இன்னும் பெரிதாக வளர்ந்து நாவலாக முடிகிறதே தவிர சிறுகதையாக அல்ல. இந்த மனவியல்பைப் பொறுத்தே ஒருவர் கவிதையோ உரைநடையோ எழுதுகிறார் என்று நம்புகிறேன். நான் சில கவிதைகளை எழுத முயன்றேன், ஆனால் அது என் மன இயல்புக்கு ஏற்றதல்ல என்பதை விரைவில் உணர்ந்தேன். ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் இந்துஸ்தானி செவ்வியல் இசையைக் கற்கவும் முயன்றேன். ஆனால், என் முழு நேரத்தையும் அதற்காக ஒதுக்காவிட்டால் மேற்கொண்டு முன்னேற முடியாது என்ற நிலையை அடைந்தேன்; அதற்கு இலக்கியத் தேடலையும் வரலாறு, தத்துவம், உளவியல் போன்ற பிற துறைகளில் உள்ள ஆர்வத்தையும் துறக்க வேண்டியிருக்கும். ஓவியம், இசை, சிற்பம் போன்ற நுண்கலைகளில் எனக்குள்ள ஆர்வம், உண்மையில் ஒரு எழுத்தாளனாக எனது கற்பனையாற்றலை வளப்படுத்தியுள்ளது.
தேசகுல்கர்னி: சுயசரிதை சார்ந்த பட்டறிவுகளை எழுத்தில் வடிப்பதற்கான சில ஆரம்பகட்ட உந்தல்கள் இருந்ததாகத் தெரிகிறதே.
பைரப்பா: எனது ஆரம்பகால நாவல்களான தர்மஸ்ரீ (Dharmashree), தூரா சரிதாரு (Doora Saridaru) ஆகியவற்றில் சுயசரிதைக் கூறுகள் மேலோங்கியிருந்தன. மேலும் படைப்புக் கற்பனை தேவையான உயரத்திற்கு எழவில்லை. வம்சவிருக்ஷா நாவலில்தான் முதல்முறையாக எனது கற்பனை, எந்தவொரு சுயசரிதைக் கூறுடனும் பொருந்தாத, முற்றிலும் புதிய சூழல்களையும் கதைமாந்தரையும் உருவாக்கியது. இதன் மூலம், ஒரு எழுத்தாளன் தனது சொந்த அனுபவத்தை நேரடியான அடிப்படையாகக் கொள்ளாமல் முற்றிலும் புதியவற்றை உருவாக்கும் போது மட்டுமே தேர்ந்த எழுத்தாளனாக மாறுகிறான் என்பதைக் கண்டறிந்தேன். ஆனால் பின்னர், கிருஹபங்கா, அன்வேஷணா (Anveshana) ஆகியவற்றை எழுதியபோது, சுயசரிதைக் கூறுகளைக் கூட முற்றிலும் படைப்பாக்க முறையில் உரு மாற்றும் அளவிற்குத் தேர்ச்சி பெற்றிருந்தேன்.
தேசகுல்கர்னி: ஆனால் பின்னர், நாவல்கள் கூட கூட, அவற்றில் ஏதேனும் ஒன்றை விதப்பாக முன்மொழிய நினைத்தீர்களா?
பைரப்பா: இல்லை. நான் எந்தச் சித்தாந்தத்தையும் முன்மொழிய முயலவில்லை; எனது கதைமாந்தரும் எந்தக் கோட்பாட்டுக்கும் அடிபணிந்தவர் அல்லர். கன்னடத்தில் மார்க்சியம், லோகியாயிசம், லாரன்சியிசம், ஃபிராய்டிசம், சோசலிசம் போன்ற சித்தாந்தங்களால் கட்டுண்ட சில எழுத்தாளர்களும் விமர்சகர்களும் உள்ளனர். அவர்கள் கண்டடைய விரும்புவதை எனது நாவல்கள் அவர்களுக்குத் தருவதில்லை. என்றாலும் தங்களது பார்வையிலிருந்து எனது நாவல்கள் வேறுபடுவதால் ‘சித்தாந்தம் சார்ந்தவை’ என்று ஏனோ குறிப்பிடுகிறார்கள். அடிப்படையில் எழுத்தாளன் சித்தாந்த ரீதியாகக் கட்டுண்டு இருப்பதை நான் விரும்புவதில்லை.
தேசகுல்கர்னி: முக்கியமாக, வம்ச விருக்ஷா, தப்பலியு நீனாதே மகனே (Tabbaliyu Neenade Magane) ஆகிய நாவல்கள், தற்போதைய காலத்திற்குத் தேவையான முற்போக்கு நோக்கத்திற்கு மாறாகப் பழமைவாதமானவை என்ற விமர்சனத்திற்கு இலக்காகின்றன.
பைரப்பா: வம்ச விருக்ஷா, தப்பலியு ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர்தான் கிருஹ பங்கா, பர்வா, சாக்ஷி, அஞ்சு (Anchu) ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். ஆனால் உள்நோக்கம் கொண்ட விமர்சகர்கள் இந்தப் பிந்தைய நாவல்களைப் பற்றி மெளனம் காக்கின்றனர். இந்த இரண்டு நாவல்களை மட்டுமே பிடித்துக்கொண்டு, அவை அடிப்படைவாத நாவல்கள் என்று குறை கூறுகிறார்கள். வம்ச விருக்ஷா பற்றிய அவர்கள் கூற்று என்னவெனில், பைரப்பா விதவை மறுமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை; மறுமணத்திற்குப் பிறகு மூன்று முறை கருச்சிதைவு ஏற்படச் செய்து அவளைத் திட்டமிட்டுத் துன்புறுத்தியுள்ளார் என்பதே. எனது பதில்: அந்த நாவலின் கருப்பொருள் விதவை மறுமணம் அல்ல, குடும்ப வம்சம். மறுமணம் செய்து கொண்ட அந்த இளம் விதவை மனப்போராட்டங்களைச் சந்திக்கிறாள், ஏனென்றால் அவளது மாமனார் மரபான மதிப்பீடுகளால் வளர்க்கப்பட்ட ஒரு வலுவான ஆள். அனுபவமிக்க மனநல மருத்துவர்கள் கூட இந்நாவலை வாசித்த பிறகு, அவளது மனப்போராட்டங்களும் கருச்சிதைவுகளும் இயல்பானவையே என்று என்னிடம் கூறினர். எனது விமர்சகர்களை விடவும் இந்த மனநல மருத்துவர்களுக்கு (அவர்களில் சிலர் பெண்கள்) அவளது மனப்போராட்டங்கள் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.
தப்பலியு நாவலுக்கு வருவோம். அதில் உள்ள அடிப்படைக் கருதுகோள் என்னவென்றால், மனிதனுக்குப் பிற உயிரினங்களுடனான உறவுப் பிணைப்பைக் கூறுவது. பாரம்பரிய இந்தியக் கருத்தாக்கம் என்னவெனில், நாம் பசுவின் பாலைக் குடித்து அதனூட்டத்தால் வாழ்வதால், அது ஒரு இயற்கையான தாய் – சேய் உறவாகும். எனவே மனிதன் தன் தாய்க்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்க வேண்டுமோ, அவ்வளவு நன்றியுள்ளவனாகப் பசுவிற்கும் இருக்க வேண்டும். ஆனால் செமிடிக் மதங்கள் விலங்குகள் அனைத்தும் மனித நன்மைக்காகக் கடவுள் படைத்தவை எனக் கூறுகின்றன. இருப்பினும் இந்திய மரபு, அனைத்து விலங்குகளுக்கும் மனித உயிரைப் போலவே மதிப்புமிக்க உயிர் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறது. இத் தத்துவத்தை எதிர்ப்பவர்கள் தப்பலியு நாவலைப் பழமைவாதமானது என்று குற்றம் சாட்டலாம், ஆனால் இந்தியத் தத்துவ மரபுகள் பற்றிய அவர்களின் அறியாமையைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன்.
தேசகுல்கர்னி: ஆனால் ‘முன்னேற்றம்’ பற்றிய கேள்வியும் இருக்கிறதே…
பைரப்பா: முன்னேற்றம் என்பது பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் மனிதனின் வரம்பற்றற்ற வல்லாதிக்கத்தைச் செலுத்துவது அல்ல. சுற்றுச்சூழல் சமநிலைக்காகக் குரல் கொடுக்கும் நவீன மேற்கத்தியச் சூழலியலாளர்கள் அதே வேளையில், நற்சூழலுக்காகவும் மனிதர்களின் உணவுத் தேவைக்காகவுமே விலங்குகளையும் மரங்களையும் விரும்புகிறார்கள். இந்த மனிதமைய மனோபாவம் செமிடிக் பண்பாட்டின் அற மதிப்பீடுகளிலிருந்தே பிறக்கிறது. இந்தியப் பண்பாட்டின்படி, பிற விலங்குகள் மீது மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை.
॥ सुप्रभातं वदार्याणां सर्वेषां प्राणिनामपि ॥ [சான்றோர்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நற்காலை / நல்வாழ்வு உண்டாகட்டும்.]
கோடை வெப்பத்தில் மூச்சிரைக்கும் தவளைக்கு, அது தன் இரையாக இருந்தபோதிலும், நாகம் ஒன்று தனது படத்தை விரித்து நிழல் தரும் இடமாகவே இந்தியத் ‘தபோவனம்’ விவரிக்கப்பட்டுள்ளது. சமண மதம் இந்தியாவின் இந்த அறவியல் லட்சியத்தை உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்துகிறது. மனிதன் உலகின் மனிதமையவாதியாக இல்லாமலே முன்னேற்றமடைய முடியும், செவ்வாய் கிரகத்திற்கும் அதற்கு அப்பாலும் பயணம் செய்ய முடியும்.
எனவே, தப்பலியு பழமைவாதமானது அல்ல, மாறாக அது பாரம்பரிய லட்சியங்களுக்கும் நவீன ‘முன்னேற்றத்திற்கும்’ இடையிலான மோதலைச் சித்தரிக்கிறது.
தேசகுல்கர்னி: உங்கள் நாவல்களுக்குப் பெருந்திரளான வாசகர்கள் இருக்கும் அதே வேளையில், ‘அரவாளிகள்’ என்று சொல்லப்படுபவர்கள் அலட்சியமாக இருக்கிறார்களே.
பைரப்பா: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னணி வழக்கறிஞர்கள், டி.ஐ.எஃப்.ஆர் (TIFR) ஐ.ஐ.எஸ்.சி (IISC) அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், இராணுவத் தளபதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எனது வாசகர்களாகவும் ரசிகர்களாகவும் உள்ளனர். இவர்கள் அறிவாளிகளின் ஒரு பகுதி இல்லையா?
தேசகுல்கர்னி: உங்கள் விமர்சகர்களில் சிலர் பகிரங்கமான பகைமையுடன் இருக்கிறார்கள், ஆனால் உங்கள் எழுத்துகளின் மீது ‘இலக்கியத் தீண்டாமை’ என்றே சொல்லத்தக்க ஒன்று பெரும்பான்மையாக நிலவுகிறதே.
பைரப்பா: விமர்சகர்கள் அனைவரும் என் படைப்புகளைப் பற்றி மௌனமாக இல்லை. எனது நூல்களைப் பற்றி திட்டமிட்டு மெளனம் காக்கும் விமர்சகர்களின் ஒரு குழு இருக்கிறது. சிலர் ஏன் என் மீது பகைமை கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் வேறொரு இடத்தில் விளக்கியுள்ளேன். சில விமர்சகர்கள் ஆங்கிலப் பேராசிரியர்கள். கல்வித் துறை நியமனங்கள், பதவி உயர்வுகள், தேர்வாளர் பதவிகள் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்துபவரும், பரிசுகளிலும் விருதுகளிலும் ஆதிக்கம் செலுத்துபவருமான ஒருவருக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பவர்கள். அடிப்படையில் இந்த விமர்சகர்கள் கோழைகள். அதனால் அவர்கள் என் படைப்புகளுக்கு எதிராக ஒருவித இரகசிய அவதூறுப் பிரச்சாரத்தை (whispering campaign) நடத்துகிறார்கள். இந்தக் கும்பலுடன் மார்க்சிஸ்ட்டுகள், ‘பண்டாயாகாரர்கள்’ (Bandayagars) போன்ற சித்தாந்த ரீதியாக உந்தப்பட்ட குழுக்களும் சேர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு சமூகவியல் ஆய்விற்கான பொருளாக இருப்பதால் நான் உண்மையில் வேடிக்கையாக உணர்கிறேன். ஆனால் கன்னடத்திலும் பிற மொழிபெயர்ப்புகளிலும் உள்ள உயர் கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உட்பட எனது வாசகர்களின் அளப்பரிய அன்பே எனக்கு உண்மையான பலமாக இருக்கிறது. இந்த விமர்சகர்களில் பலர் என் நூல்கள் வெளியானவுடன் முதன்முதலாக வாசிப்பவர்களாகவும், அதைத் தனிப்பட்ட முறையில் ரசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்; அதைக் காட்டிக் கொள்ளாது மறைக்கிறார்கள் என்பதும் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
தேசகுல்கர்னி: உங்கள் மொழிபெயர்ப்பு நூல்களது வாசகர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்?

பைரப்பா: வழக்கம் போலவே பாராட்டப்படுகின்றன. உண்மையில் மகாராஷ்டிராவில், “கன்னடத்தில் எழுதும் மிகவும் பிரபலமான மராத்தி எழுத்தாளர் பைரப்பா” என்று ஒரு நகைச்சுவை உலா வருகிறது.
சமீபத்தில் ஒரு வெளிநாட்டு மாநாட்டில் நான் சில நேபாள எழுத்தாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் இந்தியில் வாசித்த நூல்களின் ஆசிரியர் நான் என்பதை அடையாளம் கண்டுகொண்டார்கள். அந்த நூல்களை ஆழமாக வாசித்திருக்கிறார்கள் என்பதை உரையாடல் வெளிப்படுத்தியது.
தேசகுல்கர்னி: ஆங்கில மொழிபெயர்ப்புகள் பற்றி?
பைரப்பா: பிரித்தானியாவில் உள்ள தீவிர வாசகர்களும் அறிவாளிகளும் வம்ச விருக்ஷா வைப் பாராட்டுகின்றனர். ஆழத்தில் இது தங்களது சமூகப் பிரச்சினைகளும் கூட என்று அவர்கள் நினைக்கிறார்கள். சாக்ஷி செப்டம்பர் 97-இல் கனடாவில் வெளியாகும்; ஆங்கிலம் பேசும் உலகில் அதிகவாசகர்களைச் சென்றடையும் என்று பதிப்பாளர் எதிர்பார்க்கிறார்.
தேசகுல்கர்னி: அன்வேஷணா எழுதிய போதும் பிந்தைய காலத்திலும் உங்கள் நாவல்களின் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது உங்கள் விழிப்புணர்வுமிக்க முயற்சியால் வந்ததா? நீண்டகாலமாக நீங்கள் தள்ளி வைத்திருந்த ‘நவீனத்துவ’ப் போக்கின் செல்வாக்கு இதற்குக் காரணமா?
பைரப்பா: உண்மையில் நான் அன்வேஷணா நாவலின் முதல் வரைவை எழுதியபோது, கிருஹ பங்காவில் (அதன் தொடர்ச்சியாக இது அமைந்தது) செய்தது போல முற்றிலும் விவரிப்பு பாணியில்தான் எழுதினேன். ஆனால் அன்வேஷணாவில் கதை அரசிகெரே, ராணேபென்னூர், பேடகி, பம்பாய், ஹூப்ளி, மைசூர் போன்ற பல்வேறு இடங்களில் நடக்கிறது. முதன்மை ஆளான விஸ்வநாத் ஒவ்வொரு இடத்திலும் பலரைச் சந்திக்கிறான், இதனால் அவன் அடுத்த இடத்திற்கு நகரும் போது முந்தைய கதைமாந்தர் முற்றிலும் அகல்கின்றனர். இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. முதல் வரைவு தந்து (Thanthu) நாவலைப் போலப் பெரியதாக, ஏறத்தாழ 900 அச்சுப் பக்கங்கள் கொண்டதாக இருந்தது. கையெழுத்துப் பிரதியை வாசித்தபோது எனக்குச் சலிப்பாக இருந்தது. மையக் கருப்பொருளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்து முழு நாவலையும் மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் என்று நினைத்தேன். கிருஹ பங்காவில் அனைத்துக் கதாபாத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று உரையாடி அதன் ஒருமைப்பாட்டிற்குப் பங்களிக்கின்றன. இடம்சார்ந்த தொடர்ச்சி சுத்தமாக இல்லாததால் அன்வேஷணாவில் அது நடக்கவில்லை. ஏறத்தாழ ஒரு வருட காலம் இதைப் பற்றி யோசித்தபோது ஒரு புதிய உத்தி என் மனத்தில் தோன்றியது. விஸ்வநாத் பழகும் நான்கைந்து பேரின் அனுபவங்கள் மூலமாக அவனைத் தேடத் தொடங்கினேன், இவ்வாறுதான் நாவல் தனது புதிய வடிவைப் பெற்றது. உண்மையில் இந்த உத்தியைப் பர்வா நாவலை எழுதும் போது முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்தியிருக்கிறேன். பர்வாவில் வெவ்வேறு கதைமாந்தர் தங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கின்றனர், இதனால் பிற ஆட்களும் உருவாகின்றனர். என் எழுத்துப் பாணியில் ஏற்பட்ட இந்தத் திருப்பம் என் வளர்ச்சியின் ஒரு பகுதி. உத்திகளில் எனது பரிசோதனை இந்த நாவலுக்குப் புதியதல்ல. அது நிச்சயமாக அன்வேஷணாவிலிருந்து தொடங்கவில்லை. அதற்கு முன்பே, ஜலபாதா (Jalapatha) நாவலில் இரண்டு பேர் தம் அனுபவங்களை மாற்றி மாற்றி விவரிக்கும் உத்தியைப் பயன்படுத்தினேன். தாட்டு (Daatu) என்பது விவரிப்பையும் நாடகத்தையும் மிடைந்த உத்திகளின் கலவையாகும். புராணத்தையும் தற்காலத்தையும் அருகருகே வைப்பதற்கான (ஒப்பிடுவதற்கான) உத்தியாக நாயகனின் பித்து நிலைப் பிதற்றலைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
தேசகுல்கர்னி: இது நம்மைப் புனைவுத் திறன் பற்றிய கேள்விக்கு இட்டுச் செல்கிறது. நீங்கள் எவ்வாறு புனைந்து எழுதுகிறீர்கள்?
பைரப்பா: ஒரு நாவலின் விதை என் மனத்தில் எப்போது முளைவிடுகிறது என்று என்னால் சொல்ல முடியாது. ஒரு கதாபாத்திரம் அல்லது சூழலின் மின்னல்கீற்று என் கற்பனையை இரண்டு மூன்று நாட்களுக்கு வளர்க்கும். பிறகு அது மறைந்துவிடும். பல நாட்கள், மாதத்திற்குப் பிறகு, முந்தையதுடன் தொடர்பில்லாத மற்றொரு மின்னல்கீற்று தோன்றும். சற்று நேரம் என் மனத்தில் நிலவிய பிறகு இதுவும் மறைந்துவிடும். இது ஓரிரு முறை மீண்டும் நிகழலாம். சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த மின்னல்கீற்றுகள் அனைத்தும் ஒரே சீரான கருப்பொருளின் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதைக் கண்டறிகிறேன். இது முழுமையாக உருவாகத் தனக்கான காலத்தை எடுத்துக்கொள்கிறது, வாரங்களோ மாதங்களோ ஆகலாம். ஒரு கருப்பொருள் நாவலாக மாறக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு வரும். அது தெளிவை அடைய ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாகும்.
அது வரலாறு சார்ந்த கருப்பொருளாக இருந்தால், அதற்குத் தேவையான ஆராய்ச்சியைத் தொடங்குவேன்; அது நாவலுக்குத் தேவையான விவரங்களை வழங்கும். இதுவரை மகாபாரதக் கருப்பொருள் கொண்டு ஒரு நாவலைத்தான் எழுதியிருக்கிறேன். மற்ற அனைத்து நாவல்களும் சமகாலக் கருப்பொருள்களைக் கொண்டவை. கருப்பொருள் அடிக்கடி என் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும், பின்னர் அதன் உத்திகள், பாத்திரப் படைப்பு பற்றி யோசிக்கத் தொடங்குவேன்.
அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு நான் எழுத அமர்வேன். நான் பேராசிரியராக இருந்தபோது, விடுமுறையுடன் முன்னும் பின்னும் விடுப்புச் சேர்த்துக்கொள்ளக் (சில சமயங்களில் சம்பளமில்லா விடுப்பு) காத்திருப்பேன். ஏனென்றால், எந்தவிதக் கவனச்சிதறலும் இல்லாமல் அதிகாலை முதல் மாலை வரை எழுதுவது என் வழக்கம். ஒரு அமர்வில் நான் 2 மணி நேரம் எழுதுவேன், பின்னர் ஓய்வு. சிறு தூக்கம். வெளியே உலா. மீண்டும் எழுதத் தொடங்குவேன். ஒரு நாளில் இதுபோன்ற ஐந்து ஆறு அமர்வுகள். ஆறு நாட்கள் எழுதிய பிறகு, ஓரிரு நாள் இடைவெளி. இந்த இடைவெளியின் போது கூட எந்த கவனச்சிதறலும் இன்றி எனக்குள் தனித்திருப்பேன்.
அதன் அளவைப் பொறுத்து, இரண்டு மூன்று மாதங்களில் ஒரு நாவலை முடித்துவிடுவேன். பர்வா எழுதப் பதினான்கு மாதங்கள் தந்து எழுத ஒரு வருடமும் ஆயின.
முதல் வரைவை எழுதிய பிறகு, குறைந்தது ஒரு வருடமாவது அதை வைத்திருந்து, பின்னர் எனது நெருங்கிய நண்பர்கள் இருவரிடம் கொடுத்து வாசித்து, அதை அக்குவேறு ஆணிவேறாக ஆக்கபூர்வமாக விமர்சிக்கச் சொல்வேன். படைப்பாளி எம். எஸ். கே. பிரபு ஒருவர்; அவர் படைப்புக் கோணத்திலிருந்து பிரதியை ஆய்வு செய்வார். மற்றொருவர் ஆங்கிலம், கன்னடம் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள், இந்தியத் தத்துவ மரபுகள், மேற்கத்திய சிந்தனைகளில் வல்லுநரான பேராசிரியர் என். பாலசுப்பிரமணியா. அவரது பகுப்பாய்வு கல்விப்புலக் கோணத்தில் இருக்கும். இருவருமே விரிவான குறிப்புகளை எழுதித் தருவார்கள். மிறகு நான் அவர்களுடன் தனித்தனியாக அமர்ந்து அவர்களின் கருத்துகளைக் கேட்பேன்.
அதற்கு முன்பு நான் எழுத்துப் பிரதியை மீண்டும் மீண்டும் மூன்று முறையாவது வாசிப்பேன். அவர்களது கருத்துகளை உள்வாங்கிய பிறகு, அவர்களின் பரிந்துரைகளைச் சேர்ப்பதோ அல்லது எனது சொந்த பாணியில் பிரதியை மாற்றுவதோ அது எப்போதுமே எனது முடிவுதான். அந்த சில கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.
மேலும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நான் கையெழுத்துப் பிரதியை மீண்டும் எடுத்து வாசிப்பேன், அதற்குள் நான் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து எனக்குத் தெளிவு ஏற்பட்டுவிடும். சில நேரங்களில், நான் சில பகுதிகளை மாற்றித் தொகுப்பேன், சில அத்தியாயங்களை மீண்டும் எழுதுவேன் அல்லது பிரதியைக் கைவிட்டுவிட்டு அதே கருப்பொருளில் முற்றிலும் வேறுபட்ட உத்தியில் புதிய நாவலை எழுதுவேன்.
தேசகுல்கர்னி: திருப்தியளிக்காத பிரதிகளை முற்றிலும் கைவிட்டதுண்டா?
பைரப்பா: ஆம். அவற்றில் இரண்டை ஒதுக்கி விட்டேன்.
தேசகுல்கர்னி: பிற சந்தர்ப்பங்களில், பிரதியை மாற்றியமைக்கும் போது முதல் வரைவை மீண்டும் வாசிப்பீர்களா?
பைரப்பா: இல்லை. மாற்றியமைக்கும் போது, முந்தைய வரைவைக் கலந்து நான் எதையும் செய்வதில்லை. உத்தியைப் பொறுத்தவரை இரண்டாவது வரைவு பொதுவாக முதலாவதை விடச் சிறந்ததாக இருக்கும். சில சமயங்களில் நான் மூன்றாவது வரைவை எழுதுவேன், அதுவே நாவலின் இறுதி வடிவமாக இருக்கும்.
இந்தக் கட்டத்தில், பிரபு மீண்டும் நாவலின் முதல் வரைவோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கருத்துரைப்பார்.
தேசகுல்கர்னி: அனைத்து நாவல்களுக்கும் இந்தச் செயல்முறையை நீங்கள் ஒரே மாதிரியாகப் பின்பற்றியிருக்கிறீர்களா?
பைரப்பா: நான் அனைத்திற்கும் இதுபோன்றே வரைவுகளை எழுதியதில்லை. ஐந்து நாவல்களுக்கு இந்தச் செயல்முறையைப் பின்பற்றியிருக்கிறேன். எனது முக்கிய நாவல்கள் சில, முதல் வரைவிலேயே இறுதி வடிவத்தை அடைந்துவிட்டன. இது தற்செயலான விஷயம். விளக்க முடியாதது.
தேசகுல்கர்னி: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழில்முறை ஒழுக்கம் தன் பங்கை ஆற்றுகிறது.
பைரப்பா: ஒரு நாவலை எழுதுவது என்பது வாழ்க்கையின் பல்வேறு வசதி வாய்ப்புகளைத் தவறவிடுவது. ஒழுக்கம், பொறுமை, அர்ப்பணிப்புடன் கூடிய மன அழுத்தமிக்க அனுபவம். இது ஒரு சிறுகதை அல்லது கவிதை எழுதுவது போன்றது அல்ல. இறுதி வரைவு தயாராகிப் பதிப்பகத்திற்கு அனுப்பப்படும் போதுதான் மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும். இருப்பினும் இந்த நேரத்திற்குள் அதன் தரத்தைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருப்பேன். ஆனால் நாவல் வெளியாகி, நம்பகமான, நேர்மையான சில வாசகர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்கும் வரை எனக்குச் சில கவலைகள் இருக்கும்.
தேசகுல்கர்னி: சரி, எழுதும் போது எந்தப் படைப்பு உங்களுக்கு மிகவும் நிறைவளித்தது?
எஸ். எல். பைரப்பா: வம்ச விருக்ஷா, கிருஹ பங்கா, தாட்டு, பர்வா, சாக்ஷி சார்த்தா. எனது தேடலின், உணர்ச்சிகளின், கற்பனையின் ஆழமான தளங்களை வெளிக் கொணர்ந்தவை இவை.
ஆனால் உணர்ச்சிகளோடு சேர்த்து என்னுள்ளிருந்த புதிரான சிக்கல்களையும் உறிஞ்சி எடுத்த ஒரே ஒரு படைப்பைக் குறிப்பிடுமாறு கேட்டால், பர்வாவைக் குறிப்பிடுவேன். பர்வா என்னை மலைக்க வைத்தது. என்னைப் பிழிந்து எடுத்தது. என்னிடமிருந்து எவ்வளவோ எடுத்துக்கொண்டது. இதன் பிறகு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் எழுதுவதற்கு இனி எதுவும் இல்லை என்று நான் உணர்ந்தேன்.
தேசகுல்கர்னி: உங்கள் நாவல்கள் இரண்டு திரைப்படமாகியுள்ளன. அவற்றை உருவாக்குவதில் உங்களுக்குப் பங்கு இருந்ததா?
பைரப்பா: இல்லை. திரைப்படமாக்குவதற்கு அனுமதி அளித்தவுடன், அது இயக்குநர்களின் பொறுப்பாகிவிட்டது; அதன் விளைவுகளோ மற்றவையோ எனக்குப் புறம்பானவை.
தேசகுல்கர்னி: வெளிவரவிருக்கும் உங்கள் நாவலைப் பற்றிச் சொல்லுங்கள்.
பைரப்பா: டிசம்பர் 1997-இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் சார்த்தா (Saartha), உண்மையில் எனது முதல் முழுமையான வரலாற்று நாவலாகும். பர்வாவை வரலாற்றுப் பார்வையில் எழுதியிருந்தாலும், வியாசர் கதையின் புறக் கட்டமைப்பையே அதற்குப் பயன்படுத்தியிருந்தேன். சார்த்தாவின் கதை எனது சொந்தப் படைப்பாகும். இதன் கருப்பொருளுக்காக மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தேன். கி.பி. 8-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் கதையை இது கையாள்கிறது; நாளந்தா, கட்டடக்கலை, வைதிக புராணங்கள், அரசியல் பொருளாதார நிலைமைகள், பௌத்தப் படைப்புகள் வடமேற்கு எல்லைகள், வாமமார்க்கம் உட்படச் சமயச் சிந்தனைகளை உள்ளடக்கியதாக இது அமைகிறது. சங்கராச்சாரியார், மண்டன மிஸ்ரர், உபய பாரதி மற்றும் குமாரில பட்டர் ஆகிய நான்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரங்களைச் சுருக்கமாக இருப்பினும் எனது கற்பனையால் சித்தரித்துள்ளேன்.
தேசகுல்கர்னி: இப்போது இலக்கியத்தில் அடையாளச் சட்டகங்கள் (லேபிள்கள்) எதுவும் இல்லாத நிலையில், உங்கள் சமகால நாவலாசிரியர்களின் படைப்புகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பைரப்பா: வியாசராய பல்லால், யஷ்வந்த் சித்தால், யு. ஆர். அனந்தமூர்த்தி, பூர்ணசந்திர தேஜஸ்வி போன்ற புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் அனைவரும் என்னைப் போலவே அறுபது வயதுகளில் இருக்கிறார்கள். அறுபது வயதிற்கு உட்பட்ட குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்கள் எவரையும் நான் காணவில்லை. இதற்கான காரணங்களை விளக்குவது கடினம்.
படைப்பாற்றலின் மலர்ச்சி எந்தவொரு கலை விதிக்கோ சமூக நிபந்தனைக்கோ கட்டுப்படுவதில்லை. ஆனால் சில காரணிகளைக் கவனிக்க முடியும். பல சமகால எழுத்தாளர்கள் பண்டாயா (கலக இயக்கம்), தலித், மார்க்சியம் போன்ற இயக்கங்களாலும் இசங்களாலும் கோட்பாடுகளாலும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். நமது பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் பெண்ணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். கலைக்கு முழுமையான கவனம், பொறுமை, அர்ப்பணிப்பு தேவை. நேரம், முன்னுரிமைகள் சார்ந்த ஆயத்தம் தேவைப்படுகிறது. பல்வேறு இசங்கள், கோட்பாடுகள் அவர்களது வழியில் தடைகளாக இருக்கின்றன.

தேசகுல்கர்னி: உங்கள் படைப்புகள் பற்றி நிறைவாக உணர்கிறீர்களா? அல்லது ஏதேனும் வருத்தம் இருக்கிறதா?
பைரப்பா: நான் 35 ஆண்டுகளுக்கு முன்பு தத்துவத்திலிருந்து இலக்கியத்திற்கு மாறினேன். அந்த முடிவை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன், அதற்காக நான் வருந்தவில்லை. ஆனால் இப்போது அறுபதுகளில் இருக்கும் போது வாழ்க்கையின் ஒட்டுமொத்தப் பொருளையும் பார்த்தால், நான் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறேன்; அதாவது எனது இலக்கியப் படைப்புகள் வாழ்க்கையின் தத்துவக் கேள்விகளைத் தீர்த்துவைத்துவிடவில்லை என்பதே இதன் பொருள்.
2
புராணத்திலிருந்து மனிதனை நோக்கி..
அனுபவம், கதாபாத்திரங்கள், நாவலின் அக உண்மை குறித்து
நேர்காணல் ஆர். சுரேந்திரன்
ஆர். சுரேந்திரன் (அர்சு): உங்கள் கல்வியின் ஒரு பகுதியாக இருந்த தத்துவம், உங்கள் படைப்பிலக்கியத்திற்கு உதவியிருப்பதாகத் தோன்றுகிறது. தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பைரப்பா: ஆழமான ஒவ்வொரு இலக்கியப் படைப்பிற்கும் தத்துவ இயல்புடைய ஒரு பார்வை இருக்கும். ஏதேனும் ஒரு மகத்தான இலக்கியப் படைப்பை எடுத்துக் கொள்ளுங்கள்; அது பேரார்வமூட்டுவதாயிருக்கும், பெருந்தரிசனத்தைக் கொண்டிருக்கும், புதிய அற உணர்வை நல்கும். நமது மரபில் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், கதைசொல்லிகள் ஆகியோர் வேதங்கள் (Vedas), உபநிடதங்கள் (Upanishads), வேதாந்தம் (Vedanta) இன்ன பிற தத்துவங்களில் புலமை கொண்டிருந்தனர்.
அர்சு: உங்கள் முதல் நாவலான தர்மஸ்ரீ யின் மையம் வெவ்வேறு மதத்தினர் இடையிலான காதல். அந்நாவலில் காதலும் மதமும் எதிர்எதிரே வைத்துப் பார்க்கப்பட்டிருந்தது. வாசக ஏற்பு எவ்வாறு இருந்தது?
பைரப்பா: தர்மஸ்ரீ மிகச் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; இப்பொழுதும் கூட அது நன்றாக விற்பனையாகிறது. அதன் ஒன்பதாவது பதிப்பு வெளிவந்துள்ளது. மதமாற்றம், பண்பாட்டு வேதனைகள் பற்றிய கருத்துப்பொருள் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், தங்களின் மதம் மட்டுமே இரட்சிப்பைத் தரும் என்ற நம்பிக்கையுடன் மிஷனரிகள் இரக்கமின்றி இயங்கிவரும் உலகம் முழுவதற்கும் இன்றைக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது.
அர்சு: வம்ச விருக்ஷா என்பது ஒரு குடும்ப வம்சாவழியைப் பற்றிய நாவல். இந்நாவலின் வித்து உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? மேலும், இரு முக்கிய கதாபாத்திரங்களில் ஷ்ரோத்ரியா, காத்யாயனி ஆகிய இருவரில் யார் உங்களுக்கு நெருக்கமானவர்? இந்நாவல் ஒரே நேரத்தில் மரபானதாகவும் நவீனமானதாகவும் இருக்கிறது; இரண்டையும் சமவயப்படுத்துவது கடினமாக இல்லையா?
பைரப்பா: தத்துவ மாணவனாக இருந்ததால் நான் தர்ம சாஸ்திரங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். பி. வி. காணே எழுதிய ஏழு தொகுதிகள் கொண்ட History of Dharma Shastras நூலை நான் படித்துக்கொண்டிருந்தபோது வம்சம், திருமணம், சிரார்த்தம், சொத்துரிமை, தாயாதி, நாமகரணம், கோத்திரம், சந்நியாசம் போன்ற கருத்துருக்களும் அவற்றின் பரஸ்பர உறவுகளும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. இக் கருத்துருக்கள் அனைத்தின் பிரதிநிதியாகவே ஷ்ரோத்ரியாவின் கதாபாத்திரம் என் மனதில் உருப்பெற்றது. ஷ்ரோத்ரியா ஒரு கம்பீரமான உன்னதக் கதாபாத்திரம், காத்யாயனியோ மென்மையானவள். ஒரு படைப்பாளியாக நான் விலகியிருந்தேன்; பற்றற்ற தன்மையையும் பேணினேன்.
அர்சு: வம்ச விருக்ஷா-வின் நாயகியான காத்யாயனியின் தந்தை, காதலன், ஆசிரியர், மாமனார் ஆகிய அனைவரும் மறுமணம் குறித்து வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிக்கும்போது, அவளுக்குள் ஏற்படும் குழப்பம் அவ்வளவு நம்பகமானதாகத் தோன்றவில்லையே.
பைரப்பா: காத்யாயனி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறாள்; அக்காலத்தில் நவீன மேலைச் சிந்தனைகள் மெல்ல நுழைந்திருந்த போதிலும், பாரம்பரிய வேர்கள் வலுவாகவே இருந்தன. அதனால்தான் அவள் தடுமாறுகிறாள், துயருறுகிறாள். 21ஆம் நூற்றாண்டின் வாசகருக்கு அவளிடம் முரண்பாடு இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் அவளுடைய காலத்தில் அந்த அனுபவம் உண்மையானது.
அர்சு: தலைமுறை இடைவெளிப் பிரச்சினையும் கீழைத்தேய – மேற்கத்திய நாடுகளின் வாழ்வியல் பார்வையில் உள்ள வேறுபாடும் கோதூளி நாவலில் ஆராயப்பட்டுள்ளது. இந்நாவலை எழுத உங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்த யோசனை அல்லது சம்பவம் எது?
பைரப்பா: குஜராத்தில் அமுல் டைரி அமைந்திருக்கும் ஆனந்த் நகருக்கு அருகில் உள்ள சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில் தத்துவ விரிவுரையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த டைரியுடன் இணைந்து ஐந்து கால்நடை மருத்துவர்கள் பணியாற்றினர். அவர்களில் ஒருவர் எனது நண்பர்; அவர் செயற்கை முறைச் சினைப்படுத்துதல், பால் உற்பத்தியைப் பெருக்கும் வழிமுறை, பால் உறிஞ்சும் குழாயில் வெற்றிடக் கோட்பாட்டைப் பயன்படுத்தி இயந்திரம் மூலம் பால் கறப்பது ஆகிய செயல்முறைகளை எனக்கு விரிவாகக் காட்டினார். சுருங்கச் சொன்னால், அவர்கள் அந்த விலங்கை (எருமையை) வெறும் பால் உற்பத்தி செய்யும் இயந்திரமாகக் குறைத்துவிட்டனர். இது நமது சமூகத்தில் பசுவுக்கு இருக்கும் மாறிவரும் இடத்தைப் பற்றி என்னை யோசிக்க வைத்தது; அதுவே இந்த நாவலாக உருப்பெற்றது.
அர்சு: கிருஹ பங்கா பல வகைகளில் தனித்துவம் வாய்ந்தது. இந்நாவலில் அறிஞரோ சிந்தனையாளரோ எவருமில்லை. படிப்பறிவில்லாத மனிதர்கள் போற்றிப் பேணிய நற்பண்புகளும் கதாபாத்திரங்களின் வழியே அற்புதமாக வெளிக்கொணரப்பட்டுள்ளன. எழுதப்படிக்கத் தெரியாத நஞ்சம்மா என்ற கதாபாத்திரம், அசாத்தியமான இலட்சியவாதத்தைக் கொண்டவள், மரியாதைக்குரியவள், தைரியமானவள். இந்நாவலை எழுதுவதற்கும் இந்த லட்சியக் கதாபாத்திரத்தைப் படைப்பதற்கும் உங்களுக்கு எங்கிருந்து ஊக்கம் கிடைத்தது?
பைரப்பா: கிருஹ பங்கா நாவல் எனது பெற்றோர், தாத்தா-பாட்டியரின் அனுபவங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கன்னடத்திலும் ஹிந்தியிலும் வெளியான பித்தி என்ற எனது சுயசரிதை இந்த அனுபவங்களை விரிவாகக் கூறுகிறது. சொல்லப்போனால், பெருமளவில் நஞ்சம்மாவே என் தாய் தான்.
அர்சு: தாட்டு சில சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இதில் சாதி அமைப்பின் தீமைகளில் கவனம் செலுத்தி, படித்தவர்களும் இந்தத் தீமைக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறீர்கள். ஆனால் கதாநாயகி சத்யாவின் விதி வேதனையானது. எனினும் அவள் தடைகளைக் கடந்து வரவில்லை. இது விசித்திரமானது. இது ஒரு நாவலாசிரியராக உங்களுக்கிருந்த வரம்பினாலா?
பைரப்பா: சத்யா சாதித் தடையைத் தாண்டவே செய்தாள்; ஆனால் மோகன்தாஸை மணம் முடிக்க அவள் மறுக்கிறாள். ஏனெனில், கடந்த காலத்தில் மேல்சாதி ஆண்கள் தலித் பெண்களுக்குச் செய்ததைப் போல, மேல்சாதிப் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது உட்பட, மேல்சாதியினரைப் பழிவாங்கும் எண்ணங்களை மோகன்தாஸ் மனத்தில் வளர்த்து வருகிறான். பாலியல் வல்லுறவு கொள்ளும் அளவிற்கு வெறுப்பும் பழிவாங்கும் உணர்ச்சியும் நிறைந்த ஒருவனுடன் வாழ்வது தன் வாழ்க்கையைத் துயரமாக்கிவிடும் என்று அவள் நினைக்கிறாள். இது நாவலாசிரியரின் வரம்பு அல்ல; மாறாகச் சத்யா மேலும் உயர்நிலைக்குப் பரிணமிக்கிறாள் என்ற உண்மையையே இது சுட்டிக்காட்டுகிறது.
அர்சு: பர்வா உங்கள் தலையாய படைப்பு. காதல் கதைகள், சமூக யதார்த்தங்கள், குடும்பக் கதைகளை விரிக்கும் நாவல்களை எழுதிய பிறகு, புராணப் பொருளுக்கு மாறினீர்கள். இந்நாவலின் அடிப்படைத் தூண்டுதல் என்னவாக இருந்தது? புராண நாவல்களை எழுதும்போது நாவலாசிரியர் சில குறிப்பிட்ட அம்சங்களில் தன் கவனத்தைக் குவிக்க வேண்டியிருக்கும். இவ்வகைமையில் எழுத்தாளருக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்காது. மகாபாரதம் போன்ற ஓர் இதிகாசத்தை மறுவாசிப்பு செய்து மீளப் புனைந்த அனுபவம் எப்படிப்பட்டது?
பைரப்பா: சிறுவயதிலிருந்தே மகாபாரதக் கதை என்னை ஈர்த்தது. ஏறத்தாழ அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள கவிஞர்களும் நாடகாசிரியர்களும் புராணப் பரிமாணங்களையும் சம்பவங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி மகாபாரதத்தின் சில பகுதிகளையோ முழுமையையோ எழுதியுள்ளனர். புராணப் போர்வையைக் கிழித்துக்கொண்டு கதை, கதைமாந்தர், சம்பவங்கள் ஆகியவற்றின் அக உண்மைகளை ஆராய நான் விரும்பினேன். திரௌபதியின் இல்லற வாழ்க்கையில் அவளுடைய உணர்வுபூர்வமான அனுபவம் என்னவாக இருந்தது? குந்தியின், பிற கதாபாத்திரங்களின் மன உளைச்சல்களும் துயரங்களும் என்னென்ன? புராண அதிநாயகர்களை மானுடச் சட்டகத்திற்குள் அமைப்பதன் மூலம், முந்தைய எழுத்தாளர்கள் தவறவிட்ட பல பல புதிய பார்வைகளை என்னால் வெளிக்கொணர முடிந்தது.
அர்சு: மகாபாரதம் என்பது ஒரு போர்க்கதை. ஆனால் உங்களின் பர்வா இறுதியில் போருக்கு எதிரான கதையாக மாறுகிறது. வெற்றி பெற்றவர்களும் பேரழிவைக் குறித்துக் கவலைப்படுகிறார்கள்.
பைரப்பா: மரபுவழி மகாபாரதத்தில் போர் மகிமைப்படுத்திக் காட்டப்படுகிறது. நீங்கள் அதை நடைமுறையில் பார்க்கும்போது அது பேரழிவு என்பதை உணர்கிறீர்கள். ஆனால் நாம் அந்த உண்மையிலிருந்து தப்பி ஓடிவிட முடியாது.
அர்சு: பர்வா-வில் காந்தாரி, குந்தியின் இறுதிக் கணங்கள் நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன. அவர்கள் உங்கள் ஆத்மாவில் அண்டை வீட்டாராக மாறவில்லையா? பர்வா-வில் பெண்களே மிகவும் சக்திவாய்ந்தவர்களாகத் தோன்றுகின்றனர்.
பைரப்பா: அந்தப் பெண்களில் ஆராய்வதற்கும் வளர்ப்பதற்கும் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதை நான் கண்டேன். உணர்வுரீதியாக அவர்கள் மிகவும் செழுமையானவர்கள்.
அர்சு: இந்திய இலக்கியங்களில் ஓர் அடிப்படை ஒற்றுமையை நீங்கள் காண்கிறீர்களா?
பைரப்பா: நான் வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தேன். கிராமப்புறங்கள் உட்பட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாகப் பயணம் செய்திருக்கிறேன். தொலைதூரக் கிராமங்களில் தங்கியிருக்கிறேன். கர்நாடகம் முழுவதையும் நான் மிக நெருக்கமாக அறிவேன். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன். உள்ளூர் வேறுபாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால், அடிப்படை ஒழுக்க நெறிகளும் வாழ்க்கை முறையும் இந்தியா முழுவதிலும் ஒன்றுதான். ஏனெனில் ராமாயண, மகாபாரதக் கதைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆழமாக வேரூன்றியுள்ளன. வேதங்கள், உபநிடதங்கள், யோகா, வேதாந்தம், இலக்கியம், இசை, நடனத்தின் செவ்வியல் மரபுகள், திருக்கோயில் உருவாக்கம் – இவை அனைத்துமே இந்தியாவை ஒன்றிணைத்தன. எந்தவொரு இந்திய மொழியிலும் எழுதும் தீவிரமான நவீன இலக்கியப் படைப்பாளியும் இந்த ஒற்றுமையைக் காண முடியும், அதை மேலும் வலுப்படுத்த முடியும்.
