கடிதம்

மகாத்மா டால்ஸ்டாய்

இப்போதுதான் உங்களுக்கு ஒரு கடிதத்தை அஞ்சலில் சேர்த்தேன். அதற்குள் “டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்” என்று தந்திகள் வந்தன. மீண்டும் உங்களுடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இதோ இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அந்தச் செய்தியைப் பற்றி நான் சொல்லப்போவதெல்லாம் உங்களுக்குக் குழப்பமாகத் தோன்றலாம். கடுமையாகவும். எரிச்சலில் பேசுவதாகக்கூடத் தோன்றலாம். என்னை மன்னியுங்கள். யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல் இருக்கிறது.

அவருடன் பலமுறை நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன். கிரிமியாவின் காஸ்ப்ராவில் அவர் தங்கியிருந்தபோது அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன். அவரும் நான் வருவதை விரும்பினார். அவரது நூல்களை ஆசை ஆசையாக ஆர்வமாக ஆழ்ந்து வாசித்திருக்கிறேன். ஆகவே அவரைப் பற்றி நான் நினைப்பதை எல்லாம் சொல்ல எனக்கு உரிமை உண்டு. அது துணிச்சலான கருத்தாக இருந்தாலும் சரி; பிறரது பொதுவான கருத்துகளிலிருந்து வெகுவாக விலகியிருந்தாலும் சரி.

‘மேதை’ என்று போற்ற அவரைவிடத் தகுதியானவர் யார்? யாருமில்லை என்பதை நானும் அறிவேன். அவரைவிடச் சிக்கலானவர் யார்? அவரைவிட முரண்கள் நிறைந்தவர் யார்? யாவற்றிலும் அவர் மகத்தானவர். ஆம் ஆம், எல்லாவற்றிலும்! அந்த மகத்துவம் விசித்திரமானது; பரந்து விரிந்தது; சொற்களால் சுட்ட முடியாதது. “பூமியில் எத்தகைய அற்புதமான மனிதர் வாழ்கிறார், பாருங்கள்!” என்று அனைவரிடமும் உரக்கச் சொல்லத் தோன்றும். அப்படி ஏதோ ஒன்று அவரிடம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மனிதர். மனிதகுலம் முழுவதற்குமான மாமனிதர்.

ஆனால் என்னை எப்போதும் விலகச் செய்த ஒரு பண்பு அவரிடம் இருந்தது. பிரபு லியோ நிகொலாயெவிச் டால்ஸ்டாயின் வாழ்க்கையை, ‘நமது புனிதத் தந்தை லியோவின் தூய வாழ்க்கை’ யாக மாற்றிவிட வேண்டும் என்ற அவரது பிடிவாதம் அது. அதில் ஒருவித அதிகார வெறியும் இருந்தது.

நீங்களே அறிவீர்கள். நீண்டகாலமாக அவர் துன்பப்பட விரும்பினார். இதுவரை அப்படித் துன்பப்பட முடியவில்லையே என்று எ. சொலோவியோவிடமும் சுலேரிடமும் வருத்தப்பட்டிருக்கிறார். தன் மனவுறுதி எவ்வளவு தாங்கும் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக அவர் துன்பத்தை விரும்பவில்லை; தன் மதக் கருத்துகளின் செல்வாக்கைக் கூட்டவே துன்பப்பட விரும்பினார். தன் போதனைகளுக்கு இன்னும் மேலதிக வலிமை கிடைக்க வேண்டும்; தன் துன்பத்தின் வழியாக அவை மனிதர்களுக்குப் புனிதமாகத் தோன்ற வேண்டும்; அவற்றை யாரும் மறுக்க முடியாமல் ஆக வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்ள மனிதர்களை வற்புறுத்த வேண்டும். ஆம், நான் மீண்டும் சொல்கிறேன்: கட்டாயப்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

தன் போதனைகளைப் போதிய அளவு மக்கள் ஏற்கவில்லை என்பதை அவரே உணர்ந்திருந்தார். அவரது நாட்குறிப்புகளை என்றாவது வாசித்தால், தன் போதனைகளையும் தன் ஆளுமையையும் அவரே சந்தேகித்ததற்கான பல சான்றுகளைக் காண்பீர்கள். “அரிதான விதிவிலக்குகளைத் தவிர, தியாகிகளும் துயர் சுமப்பவர்களும் அடக்குமுறையாளர்களாகவே இருக்கிறார்கள்” என்பதும் அவருக்குத் தெரியும். எல்லாமே அவருக்குத் தெரியும்! இருந்தும், “என் கருத்துகளுக்காக நான் துன்பப்பட்டால் அவற்றின் செல்வாக்கு பெருகும்” என்று நினைக்கிறார்.

இதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. என் மனசாட்சியின் மீது வன்முறை செலுத்த முயல்வதுபோல் அது எனக்குத் தோன்றியது. நீதிக்காகச் சிந்திய இரத்தத்தின் மகிமையால் என் மனசாட்சியை மயக்கி, ஒரு மதக்கோட்பாட்டின் நுகத்தடியை என் கழுத்தில் மாட்டிவிட விரும்புகிறார் என்பதுபோல் உணர்ந்தேன்.

மறுமையில் கிடைக்கும் அழியாமையை அவர் எப்போதும் உயர்த்திப் பேசினார். ஆனால் இம்மையில் இவ்வுலகிலேயே அழியாமல் நிலைத்திருப்பதைத்தான் அதிகம் விரும்பினார். அவர் ஒரு தேசிய எழுத்தாளர். இவ்வரியின் முழு அர்த்தத்திலும். அவரது மகத்தான உள்ளத்தில் ரஷ்யாவின் குறைகள் அனைத்தும் இருந்தன. நமது வரலாறு சந்தித்த துயர்கள் நம்மில் ஏற்படுத்திய சிதைவுகள் அவரையும் பாதித்திருந்தன.

“செயல்படாமல் இருத்தல்”, “தீமையை எதிர்க்காமல் இருத்தல்” என்பன பற்றிய அவரது மங்கலான போதனைகள் அனைத்தும் செயலற்றிருக்கும் நிலையைச் சேர்ந்தவை. மங்கோலிய விதிவாதம் நஞ்சூட்டிய பழைய ரஷ்ய இரத்தத்தின் நலமற்ற கொதிப்பு அது. ஓயாத உழைப்புக்கும், படைப்பாற்றலுக்கும், வாழ்வின் தீமைகளை எதிர்த்து அடங்காமல் போராடும் மனத்திற்கும் ஊக்கமளிக்கும் மேற்குலகச் சிந்தனைக்கு அது முற்றாக எதிரானது. டால்ஸ்டாயின் ‘அரசின்மைவாதம்’ என்று பிறரால் சொல்லப்படுவதும் அடிப்படையில் நமது ஸ்லாவிய அரசு எதிர்ப்பு மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. நிலைத்திருக்காமல் நாடோடிபோல் அலைந்து திரிய வேண்டும் என்ற விருப்பம் நம்மில் பழங்காலத்திலிருந்தே ஊறிக்கிடக்கிறது. இது நம் தேசியப் பண்பாகிவிட்டது. அந்த விருப்பத்திற்கு இதுவரை நாம் எவ்வளவு ஆர்வத்துடன் இடமளித்திருக்கிறோம் என்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்.

ரஷ்யர்களாகிய நமக்கு அது தெரிகிறது. இருந்தும் எப்போதும் எதிர்ப்புக் குறைவான வழியிலேயே விலகிச் செல்கிறோம். அது தீங்கானது என்பதை அறிந்திருந்தும் ஒருவரைவிட்டு ஒருவர் மேலும் மேலும் தனித்துப் பிரிகிறோம். அந்தச் சோகமான கரப்பான்பூச்சிப் பயணங்களுக்குத்தான் ‘ரஷ்யாவின் வரலாறு’ என்று பெயரிட்டிருக்கிறோம். வர்யாகியர்கள், தாத்தாரியர்கள், பால்டிக் ஜெர்மானியர்கள், சின்னஞ்சிறு காவல் அதிகாரிகள் ஆகியோரது வலிமையால் ஏறத்தாழத் தற்செயலாக, எந்திரம்போல் உருவாக்கப்பட்ட அரசின் வரலாறு அது. நேர்மையான குடிமக்களில் பலருக்கு அந்த அரசு உருவான தே ஆச்சரியமாக இருந்திருக்கிறது. ஏனெனில் நாம் எப்போதும் சிதறிப் போய்க்கொண்டே இருந்தோம். இதைவிட மோசமான இடம் வேறெதுவும் இல்லை; இதற்கு அப்பால் போகவும் வழியில்லை என்ற நிலை வந்தபோதுதான் நின்று நிலைத்துக் குடியேறினோம். பனியிலும் சதுப்புகளிலும் எர்ஸா, சூத், மேரெய், வெஸ், முரோமா போன்ற பழங்குடிகளின் அருகே குடியேறுவது நமது விதியாகிவிட்டது.

ஆனால் நமக்கு ஒளி கிழக்கிலிருந்து அல்ல, மேற்கிலிருந்துதான் வரவேண்டும் என்று உணர்ந்த மனிதர்களும் தோன்றினார்கள். இப்போது நமது பண்டைய வரலாற்றின் உச்சியில் நிற்கும் டால்ஸ்டாய், தெரிந்தோ தெரியாமலோ, ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் ரஷ்யாவின் பாதையில் ஒரு பெருங்குன்று போல் குறுக்கே படுக்க விரும்புகிறார். அந்தப் பாதை செயலூக்கமுள்ள வாழ்வை நோக்கிச் செல்கிறது. மனிதனுடைய உயிராற்றல் முழுவதையும் செலுத்துமாறு அது வற்புறுத்திக் கோருகிறது.

அறிவியலைப் பற்றிய அவரது அணுகுமுறையிலும் ரஷ்யத் தேசியப் பண்புதான் தெரிகிறது. அறியாமையிலிருந்து பிறக்கும் பழைய ரஷ்ய கிராமத்தின் சந்தேகம் அவரிடம் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. அவரிடம் எல்லாமே ரஷ்ய தேசியத்தன்மை கொண்டவை. அவரது போதனைகளும் கடந்தகாலத்திற்குத் திரும்பும் முயற்சிகளே. நாம் ஏற்கெனவே உதறிவிட்டு வெளியேறத் தொடங்கிய பழைய பண்புகளின் மீள்வருகை அவை.

1905இல் அவர் எழுதிய ‘அறிவாளிகள், அரசு, மக்கள்’ என்ற கடிதத்தை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு தீங்கான, நச்சுத்தன்மை கொண்ட எழுத்து அது! “நான் அப்போதே சொன்னேனே!” என்று சீறும் மதவாதியின் குரல் அதில் ஒலிக்கிறது. அப்போது அவருக்குப் பதில் தர நானும் ஒரு கடிதம் எழுதினேன். ரஷ்ய மக்களைப் பற்றியும் அவர்களுடைய சார்பிலும் பேசும் உரிமையை அவர் எப்போதோ இழந்துவிட்டார் என்பதையே அதில் சொன்னேன். அவரிடம் மனம்விட்டுப் பேச வந்தவர்களைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் அவர் முயலாததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். எனது அந்த பதில் கடுமையாக இருந்தது. கடைசியில் அதை அவருக்கு அனுப்பவில்லை.

இப்போது தன் கருத்துகளுக்கு இயன்ற அளவு உயர்ந்த மதிப்பை அளிக்க அவர் ஒரு இறுதித் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கலாம். வாஸிலி புஸ்லாயேவைப் போல. இத்தகைய தாக்குதல்கள் அவருக்குப் பிடிக்கும். ஆனால் அவற்றின் வழியாகத் தனது புனிதத்தை நிறுவி, தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைப் பெறுவதுதான் அவரது விருப்பம். அது சர்வாதிகாரப் போக்கு. ரஷ்யாவின் பழைய வரலாறும் மேதையாகிய அவர் அனுபவித்த துன்பங்களும் அவரது போதனைகளுக்கு ஒரு பின்னணியை அளிக்கின்றன என்பதும் உண்மைதான்.

பாவத்துடன் விளையாடி வாழ வேண்டும் என்ற ஆசையை அடக்குவதன் வழியாகப் புனிதத்தை அடைய முயல்கிறார். மனிதர்களோ வாழ விரும்புகிறார்கள். அவர்களிடம் அவர், “இந்தப் பூமியில் வாழ்வதெல்லாம் வீண்” என்று சொல்லி நம்பவைக்க முயல்கிறார். ரஷ்யனை இதை நம்பவைப்பது எளிது. அவன் சோம்பேறி; செயல்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் கிடைத்தால் அதைவிட அவனுக்கு வேறென்ன வேண்டும்?

எல்லா ரஷ்யர்களும் அவர் படைத்த கரத்தாயெவ்களோ, அகீம்களோ, பெசோன்கிகளோ, நெக்லியூதோவ்களோ அல்ல என்பது உண்மை. அந்த மனிதர்களை வரலாறும் இயற்கையும்தான் உருவாக்கின. டால்ஸ்டாய் விரும்பிய வார்ப்பில் அவர்கள் முழுமையாக உருவானவர்கள் அல்ல. தன் போதனைகளுக்கு வலுச்சேர்க்க அவர் அவர்களை மேலும் செம்மைப்படுத்தினார். இருந்தாலும் ரஷ்யா முழுவதும் மேலே தியூலினும் கீழே ஒப்லோமோவும் சேர்ந்த ஒன்றுதான். மேலேயுள்ள தியூலினைக் காண 1905ஆம் ஆண்டைப் பாருங்கள். கீழேயுள்ள ஒப்லோமோவைக் காண கவுண்ட் அ. ந. டால்ஸ்டாயையும் இ. புனினையும், சுற்றிலும் இருப்பவற்றையும் பாருங்கள்.

மிருகங்களையும் ஏமாற்றுக்காரர்களையும் இப்போது விட்டுவிடலாம். நமது நில விலங்குகளுக்கும் தனித்த ரஷ்யப் பண்பு உண்டு. அது எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அது எவ்வளவு அருவருப்பான கோழை! ஏய்த்துப் பிழைப்பவர்களுக்கோ எந்தத் தேசிய எல்லையும் இல்லை.

லியோவிடம் சில பண்புகள் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்தின. சில நேரங்களில் அந்த வெறுப்பு என் உள்ளத்தை நசுக்கும் அளவுக்குக் கனத்திருந்தது. மட்டுமீறி வளர்ந்த அவரது தனித்த ஆளுமை கிட்டத்தட்ட அருவருப்பூட்டும் ஒரு பிரம்மாண்டம். பூமியாலேயே தாங்க முடியாத ரஷ்ய வீரன் ஸ்வியாதோகோரின் சாயல் அவரிடம் இருந்தது. ஆம், அவர் மகத்தானவர்.

அவர் சொன்னவற்றைக் காட்டிலும் சொல்லாமல் மறைத்தவை அதிகம் என்று நம்புகிறேன். தன் நாட்குறிப்பில்கூட அவர் சொல்லாதவை இருக்கின்றன. அவற்றை ஒருவேளை யாரிடமும் சொல்லமாட்டார். அந்தச் சொல்லப்படாத ஏதோ ஒன்று, எப்போதாவது அவரது பேச்சில் மறைமுகமாக வெளிப்படும். எனக்கும் சுலேருக்கும் அவர் வாசிக்கக் கொடுத்த நாட்குறிப்பின் இரண்டு குறிப்பேடுகளிலும் அதன் தடயங்கள் இருந்தன.

அது ‘எல்லா உறுதிப்பாடுகளையும் மறுக்கும்’ ஏதோ ஒன்று. தீராத பெருவிரக்தியிலிருந்து பிறந்த மிக வலுவான, கொடிய சூன்யவாதம். அவர் மட்டுமே அத்தனை தெளிவுடன் உணர்ந்திருக்கக்கூடிய தனிமைதான் அதற்கு அடிப்படை. மனத்தின் ஆழத்தில் மனிதர்களைப் பற்றிய அலட்சியம் அவரிடம் பிடிவாதமாக இருக்கிறதோ என்று பலமுறை நினைத்திருக்கிறேன். 

மற்றவர்களைவிட அவர் அவ்வளவு மேம்பட்டிருக்கிறார். அதிஉயரத்திலும் வெகுதொலைவிலும் இருக்கிறார். மனிதர்கள் அவருக்குக் கொசுக்களைப் போன்றவர்கள்; அவர்களது செயல்கள் கேலிக்குரியதாகவும் பரிதாபகரமாகவும் அவருக்குத் தோன்றுகின்றன. அவர்களை விட்டுவிட்டு வெகுதூரத்தில் ஏதோ ஒரு பாலைநிலத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கே தனியாக, தன் ஆன்மாவின் சக்தி முழுவதையும் செலுத்தி, ‘மிகவும் அடிப்படையான ஒன்றை’ ஆராய்கிறார்: மரணத்தை.

வாழ்நாள் முழுவதும் அவர் மரணத்தை அஞ்சினார்; வெறுத்தார். ‘அர்சமாஸ் திகில்’ அவரது உள்ளத்தில் இடைவிடாமல் பதைத்தது. அவர் இறந்தே ஆக வேண்டுமா? உலகம் முழுவதும் அவரையே நோக்குகிறது. சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் உயிர்ப்பான தொடர்பு இழைகள் அவரை நோக்கி நீள்கின்றன. அவரது ஆன்மா அனைவருக்கும் உரியது; என்றென்றைக்கும் உரியது. அப்படியிருக்க இயற்கை தன் விதியில் ஓர் விதிவிலக்கைச் செய்யக்கூடாதா? இந்த ஒரே ஒரு மனிதனுக்கு உடல் அழியாத வாழ்வை அளிக்கக்கூடாதா? ஏன் கூடாது?

அற்புதங்களை நம்பாத அளவுக்கு அவர் தர்க்கமும் பகுத்தறிவும் கொண்டவர். மறுபுறம் அவர் ஒரு பெருவீரர்; அறியாதவற்றைத் தேடிச் செல்பவர். தனக்குத் தெரியாத ஒரு எதிர்வியூகத்தின் முன் நிற்கும் இளம்வீரனைப் போல, பயத்தாலும் விரக்தியாலும் கட்டுக்கடங்காமல் பரபரக்கிறார்.

காஸ்ப்ராவில் அவர் ஷெஸ்தோவ் எழுதிய நீட்சே, டால்ஸ்டாயின் போதனைகளில் நன்மையும் தீமையும் என்ற நூலை வாசித்தார். அந்தோன் செகாவ் அந்த நூல் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னபோது டால்ஸ்டாய் கூறினார் “எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. தன்னைப் பெரிதாகக் காட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார். இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நேர்மையாகப் பேசும் எள்ளல்வாதிகளை எனக்குப் பிடிக்கும். ‘உண்மை தேவையில்லை’ என்று அவர் சொல்கிறார். சரிதானே. அவருக்கு உண்மை எதற்கு? எப்படியும் அவர் இறந்துவிடப்போகிறார்.”

அப்படிச் சொன்னது யாருக்கும் புரியவில்லை என்பதை உணர்ந்தவர்போல் சடுதியில் புன்னகைத்து மேலும் சொன்னார்:

“ஒரு மனிதன் சிந்திக்கக் கற்றுக்கொண்டுவிட்டால், எதைப் பற்றிச் சிந்தித்தாலும் அவன் சிந்தனையின் பின்னணியில் அவனது மரணம் இருக்கிறது. எல்லாத் தத்துவஞானிகளும் அப்படித்தான். மரணம் இருக்கும்போது என்ன உண்மை இருக்க முடியும்?”

உண்மை அனைவருக்கும் ஒன்றுதான்; அது கடவுளை நேசிப்பது என்று தொடர்ந்து சொன்னார். ஆனால் அதைப் பேசும்போது அவர் குரல் குன்றிச் சோர்ந்தது. மதிய உணவுக்குப் பிறகு வராந்தாவில் மீண்டும் ஷெஸ்தோவின் நூலை எடுத்தார். “டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, நீட்சே ஆகியோரால் தங்களது கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் வாழ முடியாது; எப்படிப்பட்ட பதிலாக இருந்தாலும் சரி. பதிலே இல்லாததைவிட வந்த பதில் அவர்களுக்கு மேல்” என்ற பகுதியை வாசிக்கக் கேட்டதும் சிரித்தார்.

“என்ன துணிச்சலான சிகை அலங்காரக்காரன்! நான் என்னையே ஏமாற்றிக்கொண்டேன் என்று நேராகச் சொல்கிறான். அப்படியானால் மற்றவர்களையும் ஏமாற்றியிருக்கிறேன் என்பதுதானே பொருள்!”

“அவன் ஏன் ஒரு சிகையலங்காரக்காரன்?” என்று சுலேர் கேட்டான்.

“அப்படித்தான் தோன்றியது” என்று யோசித்தபடி சொன்னார். “இவன் நாகரிகமானவன்; அலங்காரமானவன். மாஸ்கோவிலிருந்து ஒரு கிராமத்துக்கு, தன் வேளாண்குடி மாமனின் திருமணத்திற்கு வந்த சிகையலங்காரக்காரன் ஒருவனை நினைத்தேன். எவ்வளவு நேர்த்தியான பழக்கவழக்கங்கள்! எவ்வளவு நாகரிகமாக நடனமாடுகிறான்! அதனால் எல்லோரையும் இளக்காரமாகப் பார்க்கிறான்.”

இந்த உரையாடலைக் கிட்டத்தட்ட சொல் பிறழாது நினைவிலிருந்து கூறியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். இது என் நினைவில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. என்னைக் கவர்ந்த பலவற்றைப் போலவே இதையும் அப்போது எழுதிவைத்தேன். 

நானும் சுலேரும் டால்ஸ்டாய் சொன்னவற்றைப் பல வேளைகளில் குறித்துக்கொண்டோம். ஆனால் சுலேர் அர்சமாஸில் என்னிடம் வந்தபோது தனது குறிப்புகளைத் தொலைத்துவிட்டான். அவனுக்கு இயல்பாகவே கவனக்குறைவு. லியோவை ஒரு பெண்ணின் பரிவோடு நேசித்தான். இருந்தும் சில சமயம் அவரைவிடத் தானே உயர்ந்தவன் என்பதுபோல் நடந்துகொள்வான். என் குறிப்புகளையும் எங்கோ வைத்து விட்டேன். தொலைந்து போயிற்று. ஒருவேளை ரஷ்யாவில் யாரிடமாவது அவை கிடைத்திருக்கலாம்.

டால்ஸ்டாயை நான் மிகக் கூர்ந்து கவனித்ததற்குக் காரணம் ஒன்று உண்டு. தனது நம்பிக்கையைச் செயலாக வெளிப்படுத்தும் ஓர் உயிருள்ள மனிதனைத் தேடினேன். இப்போதும் தேடுகிறேன். சாகும்வரை தேடுவேன். இன்னொரு காரணமும் இருந்தது. நம்மிடம் பண்பாட்டுணர்வு குறைவாக இருப்பதைப் பற்றிப் பேசும்போது செகாவ் ஒருமுறை வருந்திச் சொன்னார்:

“கதே சொன்னவை எல்லாம் ஜெர்மனியில் பதிவாகியிருக்கின்றன. டால்ஸ்டாய் சொல்வதோ காற்றோடு போய்விடுகிறது. நண்பரே, இதைவிடத் தாங்க முடியாத ரஷ்யப் பழக்கம் வேறில்லை. அவர் இறந்த பிறகுதான் எல்லோரும் பரபரப்பார்கள். நினைவுக் குறிப்புகள் எழுதுவார்கள். பொய்யும் சொல்வார்கள்.”

மீண்டும் ஷெஸ்தோவுக்கு வருகிறேன். “பயங்கரமான ஆவிகளைப் பார்த்தபடி வாழ முடியாது’ என்கிறான். அது பயங்கரமானது என்று இவனுக்கு எப்படித் தெரியும்? அவன் உண்மையில் அவற்றைப் பார்த்திருந்தால் இந்த அபத்தங்களை எழுதமாட்டான். புத்தர் தன் வாழ்நாள் முழுவதும் செய்ததுபோல் ஏதாவது முக்கியமான செயலைச் செய்திருப்பான்” என்றார் டால்ஸ்டாய்.

“ஷெஸ்தோவ் ஒரு யூதர்” என்று அப்போது ஒருவர் சொன்னார்.

“இருக்க வாய்ப்பில்லை” என்றார் டால்ஸ்டாய் சந்தேகத்துடன். “இல்லை. அவன் யூதனைப் போல இல்லை. நம்பிக்கையில்லாத யூதர் என்று யாருமில்லை. ஒருவரையாவது சொல்ல முடியுமா? முடியாது.”

இந்த முதிய மந்திரவாதி சில நேரங்களில் மரணத்தோடு விளையாடுவதுபோல் தோன்றுவார். மரணதேவியைக் கவர்ந்து, எப்படியாவது ஏமாற்ற முயல்வதுபோல் இருப்பார். “நான் உனக்குப் பயப்படவில்லை. உன்னை நேசிக்கிறேன். உனக்காக ஏங்குகிறேன்” என்று அவளிடம் சொல்வதுபோல்.

அதே நேரத்தில் தன் கூரிய சிறு கண்களால் மரணத்தையே உற்றுப் பார்த்துக் கேட்பதுபோலும் இருப்பார்: “நீ எப்படியிருப்பாய்? உனக்குப் பின்னால் என்ன இருக்கிறது? என்னை முற்றாக அழித்துவிடுவாயா? என்னுள் ஏதேனும் ஒன்று தொடர்ந்து வாழுமா?”

“நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வெகுவாக மகிழ்ந்திருக்கிறேன். மட்டுமீறி மகிழ்வில் திளைக்கிறேன்” என்று அவர் சொல்வது விசித்திரமான உணர்வைத் தரும். அதன் அடுத்த நொடியே “துன்பப்பட வேண்டும்” என்பார். துன்பப்பட வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் உண்மையாக இருந்தது. இன்னும் நோயிலிருந்து முழுமையாக மீளாத நிலையில் அவரைச் சிறையில் அடைத்திருந்தாலோ நாடு கடத்தியிருந்தாலோ, ஒரு தியாகியின் மகுடத்தை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

தியாகியாக இறப்பது, மரணத்திற்கு ஏதோ ஒரு நியாயத்தை அளிக்குமோ? வெளியிலிருந்து பார்க்கும்போதாவது மரணத்தைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் அது உதவுமோ? ஆனால் அவர் உண்மையில் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. எங்கேயும் எப்போதும் இல்லை. இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. ஞான நூல்களிலோ, குதிரையேற்றத்திலோ, பெண் முயக்கிலோ, இவ்வுலக வாழ்வில் சொர்க்கத் திளைப்பை அவர் முழுமையாக அனுபவித்ததில்லை. அதற்கு மாறாக, வாழ்க்கையையும் மனிதர்களையும் மிக நன்றாக அறிந்த பகுத்தறிவாளர் அவர். அவரது இன்னொரு கூற்று நினைவுக்கு வருகிறது:

“கலீஃபா அப்துர் ரஹ்மானுக்கு வாழ்நாளில் பதினான்கு மகிழ்ச்சியான நாட்கள் இருந்ததாம். எனக்கு அவ்வளவுகூட இருந்ததில்லை என்று உறுதியாகச் சொல்வேன். ஏனென்றால் நான் எனக்காக ஒருபோதும் வாழ்ந்ததில்லை. என்னால் எனக்காக வாழ முடியாது. பிறர் பார்ப்பதற்காகவே வாழ்கிறேன்; மனிதர்களுக்காக வாழ்கிறேன்.”

நாங்கள் வெளியே வந்தபோது செகாவ் என்னிடம் “அவர் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்பதை நான் நம்பவில்லை” என்றார். நானோ நம்புகிறேன். அவர் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. அதே நேரத்தில், பிறர் பார்ப்பதற்காகவே வாழ்ந்தார் என்பது உண்மையல்ல.

தனக்குத் தேவையில்லாதவற்றை அவர் மனிதர்களிடம் கொடுத்தார்; பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுவதுபோல். அவர்களை வற்புறுத்துவதும் அவருக்குப் பிடித்திருந்தது. படிக்க வேண்டும்; நடக்க வேண்டும்; மரக்கறியே உண்ண வேண்டும்; விவசாயிகளை நேசிக்க வேண்டும்; லியோ டால்ஸ்டாயின் பகுத்தறிவும் மதமும் கலந்த சிந்தனைகள் குறையற்றவை என்று நம்ப வேண்டும் – இப்படியெல்லாம் வற்புறுத்துவார். மனிதர்களைத் திருப்திப்படுத்தவோ மகிழ்விக்கவோ ஏதாவது ஒன்றைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். அடிப்படையான அந்த மகா கேள்வியின் அடியற்ற பிலத்தின் முன், ஒரு மனிதனைத் தனியே விட்டுவிட வேண்டும். அவனுக்குப் பழகிய, வேதனையான, சிற்சில நேரங்களில் இதமான தனிமையில் நிம்மதியாக இருக்க விட வேண்டும்.

அவாக்குமையும், ஒருவேளை ஸாதோன்ஸ்கியையும் தவிர, ரஷ்யாவின் மதபோதகர்கள் அனைவரும் இணக்கமான மனிதர்களே. செயலில் வெளிப்படும் உயிர்ப்புள்ள நம்பிக்கை அவர்களிடம் இல்லை. அடியாழத்தில் என்ற எனது நாடகத்தில் லூகாவை எழுதும்போது அப்படிப்பட்ட ஒரு முதியவரைத்தான் உருவாக்க விரும்பினேன். ஒவ்வொரு தீர்விலும் அவருக்கு ஆர்வம் உண்டு; மனிதர்களிடம் இல்லை. தவிர்க்க முடியாமல் மனிதர்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு ஆறுதல் கூறுவார். ஆனால் அவர்கள் தன்னைத் தனியே விட்டுவிட வேண்டும் என்பதற்காகத்தான் அது.

இத்தகைய மனிதர்களின் தத்துவமும் போதனையும் ஒருவித வெறுப்பை மறைத்துக்கொண்டு அவர்கள் போடும் பிச்சைதான். அவர்களது ஆசிகளுக்குப் பின்னால் ஏழ்மையும் துயரமும் நிறைந்த ஒரு குரல் ஒலிக்கிறது: “வெளியே போ! கடவுளை நேசி; அண்டை அயலானை நேசி; இப்போது வெளியே போ! கடவுளைச் சபித்தாலும் சபி; அந்நியனை விரும்பினால் நேசி; என்னை மட்டும் தனியாக விட்டுவிடு! நான் ஒரு மனிதன். சாக வேண்டியவன். என்னைத் தனியாக விடு!”

ஐயோ, அப்படித்தான் இருக்கிறது; அப்படித்தான் இருக்கவும் போகிறது. வேறுவிதமாக இருக்க முடியாது; இனிமேலும் முடியாது. மனிதர்கள் களைத்துவிட்டார்கள். ஒருவரிடமிருந்து ஒருவர் வெகுதொலைவாகப் பிரிந்துவிட்டார்கள். ஆன்மாவையே வற்றச்செய்யும் தனிமைக்குள் ஒவ்வொருவரும் உழல்கிறார்கள்.

லியோ பழந்திருச்சபையுடன் சமரசம் செய்துகொண்டிருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். அதற்கும் ஒரு தர்க்கம் இருந்திருக்கும். பேராயர்களாக இருந்தாலும் எல்லா மனிதர்களும் சம அளவில் அற்பர்கள்தானே! உண்மையில் அது சமரசமாகவே இருந்திருக்காது. “என்னை வெறுப்பவர்களை நான் மன்னிக்கிறேன்” என்ற அவரது மனநிலைக்கு ஏற்ப நிகழ்ந்த செயலாக இருந்திருக்கும். ஒரு கிறிஸ்தவச் செயல். அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சிறிய, கூரிய, புன்னகையின் எள்ளல், மூடர்களுக்கு மேதை அளிக்கும் பதிலடியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும்.

இதோ நான் எழுதுவதெல்லாம் நான் உணர்த்த நினைப்பதல்ல. என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. என் அகத்திலோர் ஓநாய் ஊளையிடுகிறது. ஏதோ தீங்கு நேரப்போகிறது என்ற அச்சம். செய்தித்தாள்கள் இப்போதுதான் வந்துள்ளன. அங்கே, ரஷ்ய நாட்டில், ஏற்கெனவே அவரைப் பற்றிய ஒரு புனிதக் கதையை உருவாக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்பது தெரிகிறது. சோம்பேறிகளும் எதற்கும் உதவாதவர்களும் இருந்த இடத்திலிருந்தபடியே ஒரு புனிதரை உண்டாக்கிவிட்டார்கள்!

இந்த நேரத்தில் அது நாட்டுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஏமாற்றம் கொண்ட மனிதர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள். பெரும்பாலோர் உள்ளம் வெறுமையாக இருக்கிறது. புத்திசாலிகளின் உள்ளங்கள் துயரத்தால் நிரம்பியிருக்கின்றன. நோயுற்றும் பட்டினியோடும் கிடக்கும் மனிதர்கள் ஒரு புனிதக் கதைக்காக ஏங்குகிறார்கள். தங்கள் வலி குறைய வேண்டும்; துன்பத்துக்கு ஆறுதல் வேண்டும் என்பதற்காக அத்தனை ஆவலாக இருக்கிறார்கள்.

அவர்கள் டால்ஸ்டாய் விரும்பியதையே உருவாக்குவார்கள். ஆனால் அது தேவையற்ற ஒன்று: ஒரு புனிதரின் வாழ்க்கை வரலாறு. அவரோ மனிதராக இருப்பதால்தான் மகத்தானவர்; அதனால்தான் புனிதமானவர். கிட்டத்தட்ட நம்மைப் பித்தேற்றும் அளவுக்குத் துயரும் அழகும் நிறைந்த மனிதர். மனிதகுலம் முழுவதற்குமான மாமனிதர். இங்கே எனக்கு நானே முரண்படுகிறேன் என்று தோன்றுகிறது. பரவாயில்லை.

அவர் கடவுளைத் தேடுகிறார். தனக்காக அல்ல; மனிதர்களுக்காக. தான் தேர்ந்தெடுத்த பாலையின் அமைதியில், கடவுளே தன்னைத் தனியாக விட்டுவிட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ! கிறிஸ்துவிடம் இருந்த முரண்பாடுகளை நாம் மறந்துவிட வேண்டும் என்பதற்காக அவர் நமக்கு நற்செய்திகளை அளித்தார். கிறிஸ்துவின் உருவத்தை எளிமைப்படுத்தினார். போராடும் கூறுகளை அகற்றி, “என்னை அனுப்பியவரின் சித்தம்” என்ற பணிவான பகுதியை முன்னிறுத்தினார்.

ரஷ்ய மக்களின் நோய்க்கு ஆறுதலாக இருப்பதால்தான் டால்ஸ்டாயின் நற்செய்தி எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதில் சந்தேகமில்லை. மனிதர்களுக்கு அவர் ஏதாவது கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் புலம்புகிறார்கள்; முனகுகிறார்கள்; பூமியையே தொந்தரவு செய்கிறார்கள். அதன் மூலம் ‘முக்கியமான ஒன்றிலிருந்து’ அவரது கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்.

ஆனால் போரும் அமைதியும் போன்ற படைப்புகள் ரஷ்யாவின் பனி மேவிய நிலத்தில் நிறைந்திருக்கும் துயரத்தையும் விரக்தியையும் ஆற்றப்போவதில்லை. போரும் அமைதியும் பற்றி அவரே “பொய்யான தன்னடக்கம் இல்லாமல் சொல்கிறேன்; இது இலியட் போன்றது” என்றார். குழந்தைப் பருவம், இளமைப் பருவம் பற்றியும் இதே மதிப்பீட்டை அவரே சொன்னதை சாய்கோவ்ஸ்கி கேட்டிருக்கிறார்.

நேப்பிள்ஸிலிருந்து நிருபர்கள் வந்திருக்கிறார்கள். ஒருவர் ரோமிலிருந்தே அவசரமாக வந்துள்ளார். டால்ஸ்டாய் ‘தப்பிச் சென்றது’ பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறார்கள். அவர்களே அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்: “தப்பிச் சென்றது.” நான் பேச மறுத்துவிட்டேன். என் உள்ளம் எவ்வளவு கலங்கியிருக்கிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். டால்ஸ்டாயை ஒரு புனிதராகப் பார்க்க நான் விரும்பவில்லை. பாவங்கள் நிறைந்த இந்த உலகத்திற்கும், பாவம் செய்யும் நம் ஒவ்வொருவருக்கும் நெருக்கமான ஒரு பாவியாகவே அவர் இருக்கட்டும். புஷ்கின்! டால்ஸ்டாய்! அவர்களைவிட உயர்ந்தவர்களோ நமக்குப் பிரியமானவர்களோ வேறு யாருமில்லை.

லியோ டால்ஸ்டாய் இறந்துவிட்டார்.

ஒரு தந்தி வந்தது. மிகச் சாதாரணமான இரண்டு சொற்கள்: “இறந்து விட்டார்.”

அந்தச் சொற்கள் என் இதயத்தைத் தாக்கின. வலியிலும் சினத்திலும் அழுதேன். 

இப்போது கிட்டத்தட்ட பித்துப் பிடித்தவன்போல, நான் அறிந்த, நேரில் பார்த்த டால்ஸ்டாயையே மனத்தில் கொண்டுவருகிறேன். அவரோடு மீண்டும் பேச வேண்டும் என்ற ஆசை என்னை வதைக்கிறது. சவப்பெட்டிக்குள் அவர் படுத்திருப்பதைக் கற்பனை செய்கிறேன். ஓடையின் மடியில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கல்லைப் போல இருக்கிறார். அவரது நரைத் தாடிக்குள் அந்தத் மர்மச் சிறு புன்னகை விண்மீனாகத் தொலைதூரத்தில் அமைதியாக மறைந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இறுதியாக அவரது கைகள் மடங்கி நிம்மதியாக ஓய்ந்திருக்கின்றன. அவை தங்களது செயற்கரிய கடினமான பணியை முடித்துவிட்டன.

எதையும் ஊடுருவிப் பார்த்த அவரது கூரிய கண்கள் நினைவுக்கு வருகின்றன. காற்றிலிருந்து எதையோ தொடர்ந்து செதுக்குவதுபோல் அசையும் விரல்கள், அவரது பேச்சு, நகையாடல், அவருக்குப் பிடித்த கிராமப்புறச் சொற்கள், எளிதில் பிடிபடாத குரல்தொனி – எல்லாமே நினைவில் வருகின்றன. எத்தனை மகத்தான வாழ்க்கை அந்த ஒரு மனிதனுக்குள் அடங்கியிருந்தது! மனிதனால் இயலும் அளவுக்கு மேலே அறிவுள்ளவர் அவர். அதை எண்ணிப்பார்ப்பதே அச்சம் தருகிறது.

ஒருமுறை அவரை நான் பார்த்ததுபோல் வேறு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். காஸ்ப்ராவில் கடற்கரையை ஒட்டி அவரைப் பார்க்க நடந்து சென்றுகொண்டிருந்தேன். யூசுபோவின் தோட்டத்துக்குப் பின்னால், பாறைகளுக்கு நடுவே அவர் அமர்ந்திருந்தார். சாம்பல் நிறத்தில் கிழிந்த உடை; தலையில் கசங்கிய தொப்பி. சிறிய, கோணலான உருவம்.

தலையைக் கையில் தாங்கியபடி தொலைவிலிருந்த கடலைப் பார்த்தவாறு இருந்தார். கடற்காற்று அவரது தாடியின் வெள்ளி மயிர்களைக் கோதி விளையாடியது. பசுநீலச் சிற்றலைகள் பணிவோடு அவரது காலடியைத் தழுவ வந்தன. அந்த முதிய மந்திரவாதியிடம் தங்களைப் பற்றிய செய்தியைச் சொல்வதுபோல் அவரது பாதங்களை வருடிச் சென்றன.

அன்று வெயிலும் மேக மூட்டமுமாக இருந்தது. முகில் நிழல்கள் பாறைகளின் மீது நகர்ந்தன. அவற்றோடு சேர்ந்து கிழவரும் மாறிமாறி ஒளியிலும் இருளிலும் மூழ்கினார். பெரிய பாறைகள் பிளவுபட்டுக் கிடந்தன. கடல் ஓதத்தில் ஏறிவந்ததால் அவற்றின்மீது நாறும் பாசி படிந்திருந்தது.

அவரும் உயிர்பெற்ற ஒரு பழைய பாறையைப் போல எனக்குத் தோன்றினார். யாவற்றின் முதலும் முடிவும் அறிந்த பாறை. கற்களும் புற்களும் கடலும், ஒரு கூழாங்கல்லிலிருந்து சூரியன்வரை பரந்த பிரபஞ்சமும் எப்போது முடியும், எப்படித்தான் முடியும் என்று சிந்திக்கும் பாறை. கடல் அவரது ஆன்மாவின் ஒரு பகுதியாக இருந்தது. சூழ இருப்பவை எல்லாமே அவரிடமிருந்தே, அவருக்குள்ளிருந்தே வந்தவைபோலத் தோன்றின.

அசைவின்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த அந்த முதியவரிடம் ஊழ் போன்ற, மந்திரத்தைப் போன்ற ஒன்றை உணர்ந்தேன். அது அவருக்குக் கீழேயுள்ள இருளுக்குள் இறங்கியது. மறுபுறம், தேடுவிளக்கின் ஒளியைப் போலப் பூமிக்கு மேலிருக்கும் நீலவெளியை நோக்கி உயர்ந்தது. அவருடைய ஒருமுகப்பட்ட மனவுறுதியே அலைகளைத் தன்னருகே இழுத்து மீண்டும் தள்ளுகிறதோ? முகில்களையும் நிழல்களையும் இயக்குகிறதோ? பாறைகளுக்கு உயிர் அளிக்கிறதோ?

அவர் திடீரென்று எழுந்து கையை அசைத்தால் என்ன நடக்கும் என்று ஒரு கிறுக்குக் கணத்தில் தோன்றியது. கடல் அப்படியே இறுகிக் கண்ணாடியாகிவிடும். பாறைகள் எகிறிக் கூக்குரலிடும். சுற்றியுள்ள அனைத்தும் உயிர்பெறும். ஒவ்வொன்றும் தனக்கெனக் குரல் பெற்று, தன்னைப் பற்றியும் அவரைப் பற்றியும் புலம்பும். அவரை ஏற்றும் எதிராகவும் பேசும். 

அப்போது நான் சிந்தித்ததைவிட உணர்ந்ததே அதிகம். அந்த உணர்வைச் சொற்களால் எட்ட முடியவில்லை. என் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் ஒன்றாக எழுந்தன. இறுதியில் அவை அனைத்தும் ஒரு மகிழ்ச்சியான எண்ணமாக மாறின: “இந்த மனிதர் பூமியில் உயிரோடு இருக்கும் வரை நான் அநாதையல்ல.”

அவரது சிந்தனையைக் கலைக்க விரும்பவில்லை. காலடியில் கூழாங்கற்கள் பிறழ்ந்து ஒலியெழக்கூடாது என்பதற்காக விரல்நுனியில் நடந்து அங்கிருந்து விலகினேன்.

இப்போது நான் அநாதை என்று உணர்கிறேன். இதை எழுதும்போதே அழுகிறேன். இப்படித் தேற்ற முடியாத துயரத்துடனும் கசந்த விரக்தியுடனும் இதற்குமுன் ஒருபோதும் அழுததில்லை. நான் அவரை நேசித்தேனா என்பதுகூடத் தெரியவில்லை. நேசித்தேனா, மறுத்தேனா – அது என்ன முக்கியம்? அவர் என்னுள் எழுப்பிய உணர்வுகள் அனைத்தும் மகத்தானவை; கற்பனைக்கு எட்டாதவை. அவர் என்னில் தூண்டிய இணக்கமின்மையும் சினமும்கூட என் உள்ளத்தை ஒடுக்கவில்லை. மாறாக அதைத் தகர்த்துத் திறந்தன. இன்னும் அதிகம் உணரக்கூடியதாகவும் மேலும் விசாலமானதாகவும் மாற்றின.

எங்கிருந்தோ திடீரென்று வருவார். ஒரு கதவின் பின்னாலிருந்தோ அறையின் மூலையிலிருந்தோ வெளியே வந்து உங்களை நோக்கி நடப்பார். தரையின் மேடுபள்ளங்களைத் தன் காலணிகளால் தேய்த்துச் சமப்படுத்துவதுபோல் அதிகாரத்துடன் அடியெடுத்து வைப்பார். பூமியில் அதிகம் நடந்து பழகிய மனிதரின் இலகுவான, விரைவான நடை அது. அந்த நேரத்தில் அவரிடம் அபாரமான கம்பீரம் இருக்கும். கைக் கட்டைவிரல்களை இடுப்புப் பட்டைக்குள் செருகிக்கொண்டு ஒரு கணம் நிற்பார். சுற்றிலும் வீச்சாகப் பார்ப்பார். புதிய எதையும் அந்தப் பார்வை தவறவிடாது. பார்த்தவற்றின் பொருளையும் ஒரே கணத்தில் அறிந்துகொள்வார்.

“எப்படி இருக்கிறீர்கள்?” என்பார்.

அந்தக் கேள்விக்குள் இன்னொரு உள்ளுறையை ஊகித்துக்கொள்வேன்: “எப்படி இருக்கிறீர்கள்? உங்களிடம் இப்படிக் கேட்பது எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கு இதில் என்ன பயன் இருக்கப்போகிறது? இருந்தாலும் சொல்லுங்கள், எப்படி இருக்கிறீர்கள்?”

தோற்றத்தில் அவர் சிறியவராக இருப்பார். ஆனால் அவர் வந்த அடுத்த நொடியே அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் அனைவரும் இன்னும் சிறியவர்களாகத் தெரிவார்கள். உழவன் தாடி, கரடுமுரடான ஆனால் அபூர்வமான கைகள், எளிய உடை – இவற்றால் அவர் எல்லோருக்கும் எளிதில் அணுகக்கூடியவராகத் தோன்றுவார். அந்த வெளிப்புற எளிமை பலரை ஏமாற்றியது.

உடையை வைத்து மனிதரை மதிப்பிடுவது ரஷ்யர்களின் பழைய அடிமைப் பழக்கம். அப்படிப்பட்டவர்கள் அவரிடம் தங்கள் அருவருப்பான ‘வெளிப்படையான பேச்சை’ அள்ளிக்கொட்டுவதைக் கண்டிருக்கிறேன். உண்மையில் அது வெளிப்படைத் தன்மையல்ல; தொழுவத்தில் புழங்குவதுபோன்ற அத்துமீறிய நெருக்கம்.

“ஆஹா! நீங்கள் நம்மில் ஒருவர்! கடைசியில் கடவுள் அருளால் எங்கள் தாய்நாட்டின் மகத்தான புதல்வரை நேரில் பார்க்கிறேன். என்றென்றும் வாழ்க! உங்களுக்குத் தலைவணங்குகிறேன்!”

எளிமையும் அன்பும் கலந்த மாஸ்கோ ரஷ்யனின் பேச்சுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 

இதோ இன்னொரு வகை; இவர் தன்னைச் சுதந்திரச் சிந்தனையாளராகக் கருதுபவர்:

“லியோ நிகொலாயெவிச், உங்கள் மத, தத்துவக் கருத்துகளுடன் நான் உடன்படவில்லை. ஆனால் மிகப் பெரிய கலைஞரான உங்களை வெகுவாக மதிக்கிறேன்.”

அவ்வளவுதான்; உழவன் தாடிக்கும் கசங்கிய எளிய சட்டைக்கும் அடியில் மறைந்திருந்த பழைய ரஷ்யப் பெருநிலப்பிரபு உடனே வெளிப்படுவார். அப்போது இந்த எளிமையானவர்களும் படித்தவர்களும் தாங்க முடியாது வீசும் கடுங்குளிர் காற்றில் மூக்கு நீலமாகிச் சுருங்கிவிடுவார்கள். அவரது பிரபுத்துவமான அசைவுகள் எவ்வளவு நேர்த்தியானவை! பேச்சில் என்ன பெருமிதமான கட்டுப்பாடு! உயிரையே அறுக்கும் சொற்களில் என்ன கூர்மை! அதை நேரில் பார்ப்பது எனக்குப் பிடிக்கும்.

இந்த அடிமை மனப்பான்மை கொண்ட மனிதர்களுக்குத் தேவையான அளவுக்கே அவர் தன்னுள் இருக்கும் நிலப்பிரபுவை வெளிப்படுத்துவார். அவர்களே அந்தப் பிரபுவை அவரிடமிருந்து வரவழைப்பார்கள். வெளிப்பட்டதும் அதன் கனம் அவர்களை நசுக்கும். அவர்கள் கூனிக்குறுகி முனகத் தொடங்கிவிடுவார்கள்.

ஒருமுறை யாஸ்னாயா பொலியானாவிலிருந்து மாஸ்கோவுக்குத் திரும்பும்போது அப்படிப்பட்ட மாஸ்கோவாசி ஒருவனுடன் பயணம் செய்தேன். நீண்ட நேரமாக அவனால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. பரிதாபமாகப் புன்னகைத்தபடி மீண்டும் மீண்டும் சொன்னான்: “அப்பாடா! என்னவொரு பனிநீர்க் குளியல்! எவ்வளவு கடுமையான மனிதர்… அப்பப்பா!”

இடையில் வருத்தத்துடன் “அவர் உண்மையில் அரசின்மைவாதி என்றுதான் நினைத்தேன். எல்லோரும் அப்படியே சொன்னார்கள். நானும் நம்பிவிட்டேன்” என்றான்.

அவன் பெரிய தொழிற்சாலை முதலாளி. பணக்காரன். செல்லத் தொப்பை. உரித்த இறைச்சி நிற முகம். டால்ஸ்டாய் அரசின்மைவாதியாக இருக்க வேண்டும் என்று இவனுக்கு ஏன் ஆசை? ரஷ்ய ஆன்மாவின் ‘ஆழமான மர்மங்களில்’ இதுவும் ஒன்று!

லியோ நிகொலாயெவிச் யாரையாவது மகிழ்விக்க நினைத்தால், ஓர் அறிவழகியை விட எளிதாக அதை அவரால் செய்ய முடியும். அவரது அறையில் எத்தனை விதமான மனிதர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்: மாபெரும் இளவரசர் நிகொலாய் மிகைலோவிச், வீடுகளுக்கு வண்ணம் பூசும் இலியா, யால்ட்டாவிலிருந்து வந்த சமூக ஜனநாயகவாதி, ஸ்டுண்டிஸ்ட் பட்சுக், ஓர் இசைக்கலைஞர், ஒரு ஜெர்மானியர், கவுண்டஸ் க்ளைன்மிச்சலின் பண்ணை மேலாளர், கவிஞர் புல்காகோவ்… இப்படி எத்தனையோ பேர். எல்லோரும் அவரை ஒரேவிதமான அன்புப் பார்வையால் நோக்குவார்கள்.

அவர் அவர்களுக்கு லாவோட்ஸேயின் போதனைகளை விளக்கிக்கொண்டிருப்பார். அப்போது ஒரே நேரத்தில் பல இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய ஒற்றை மனித இசைக்குழுவைப் போல எனக்குத் தோன்றுவார். குழல், துடி, பியானோ, புல்லாங்குழல்… எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாசிப்பவர்போல. மற்றவர்களைப் போலவே நானும் அவரைப் பார்த்துக்கொண்டிருப்பேன். 

இப்போது இன்னொரு முறை அவரைப் பார்க்க எவ்வளவு ஆசையாக இருக்கிறது! இனி எப்போதும் பார்க்க முடியாது.

ரோமுக்கு வந்த தந்தி, “டால்ஸ்டாய் இறந்தார் என்ற செய்தி பொய்” என்று கூறுவதாக நிருபர்கள் ஓடிவந்து சொல்கிறார்கள். பரபரப்பாகப் பேசுகிறார்கள். ரஷ்யாவுக்கு ஆறுதல் கூறுவதாகக் கருதிக்கொண்டு தேவையில்லாத சொற்களை அள்ளிவிடுகிறார்கள். ஆனால் ரஷ்யச் செய்தித்தாள்களைப் பார்த்தால் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

இரக்கத்தினால்கூட அவரிடம் பொய் சொல்ல முடியாது. அவர் கடுமையாக நோயுற்ற போதுகூட அவர்மீது பரிதாபப்பட முடியவில்லை. அவரைப் போன்ற மனிதருக்குப் பரிதாபம் காட்டுவது அற்பமான செயல். அவர்களைப் பாதுகாக்க வேண்டும்; பேண வேண்டும். உயிரற்ற, தேய்ந்துபோன சொற்களின் தூசியை அவர்கள்மீது கொட்டிச் சுமையாக்கக்கூடாது.

“உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா?” என்று கேட்பார். “இல்லை, பிடிக்கவில்லை” என்றுதான் பதிலளிக்க வேண்டும்.

மகாத்மா டால்ஸ்டாய்

“நீ என்னை நேசிக்கவில்லையா?”

“இன்று நான் உங்களை நேசிக்கவில்லை.”

கேள்விகளில் இரக்கம் காட்ட மாட்டார். அவர் பதில் சொல்லும்போது மட்டும் ஒரு ஞானிக்குரிய கட்டுப்பாடு இருக்கும்.

கடந்தகாலத்தைப் பற்றி அபாரமான அழகுடன் பேசுவார். குறிப்பாகத் துர்கனேவைப் பற்றிப் பேசும்போது. ஃபெட்டைப் பற்றிப் பேசினால் அன்பான புன்னகையும் வேடிக்கையும் தெறிக்கும். நெக்ராசோவைப் பற்றிப் பேசும்போது குரல் தாழ்ந்துவிடும்; சந்தேகம் நிறையும். ஆனால் எந்த எழுத்தாளரைப் பற்றிப் பேசினாலும் அவர்கள் எல்லோரும் தன் பிள்ளைகள், அவர்களது குறைகள் அனைத்தும் தந்தையான தனக்குத் தெரியும் என்பதுபோல் பேசுவார். 

நிறைகளைக் கூறுவதற்கு முன்பே குறைகளைச் சுட்டிவிடுவார். ஒருவரைக் குறை கூறும்போதெல்லாம், கேட்பவர்களின் வறுமையை நினைத்துப் பிச்சை போடுவதுபோல் எனக்குத் தோன்றும். அதைக் கேட்கச் சங்கடமாக இருக்கும். பிறகு அவரது கூர்மையான சிறு புன்னகை. பார்வையைத் தாழ்த்திக்கொள்வோம். புன்னகையைக் கண்டபிறகு அவர் சொன்னவற்றில் ஒன்றும் நினைவில் நிற்காது.

ஒருமுறை ஜி. யு. உஸ்பென்ஸ்கி துலா வட்டார மொழியில் எழுதுவதாகவும் அவருக்குத் திறமையே இல்லை என்றும் கடுமையாகக் கூறினார். இன்னொருமுறை செகாவ்விடம் லியோ பேசுகையில் உடனிருந்தேன். “உஸ்பென்ஸ்கியா? அவன் உண்மையான எழுத்தாளன்! அவனது நேர்மையின் வலிமை தஸ்தயெவ்ஸ்கியை நினைவூட்டுகிறது. தஸ்தயெவ்ஸ்கிதான் அரசியலில் புகுந்து கவர்ச்சி காட்டிக்கொண்டிருந்தார். உஸ்பென்ஸ்கி எளிமையானவன்; இன்னுமதிக நேர்மையானவன். கடவுளை நம்பியிருந்தால் ஒரு மதவாதியாக மாறியிருப்பான்.”

“ஆனால் உஸ்பென்ஸ்கிக்குத் திறமையில்லை, அவர் துலா வட்டார வழக்கு எழுத்தாளர் என்று சொன்னீர்களே?”

அடர்ந்த புருவங்களைத் தாழ்த்தி, “அவன் எழுதும் விதம் மோசம். அது என்ன மொழி? சொற்களைவிட நிறுத்தற்குறிகளே அதிகம்! திறமை என்பது அன்புதான். நேசிக்கத் தெரிந்தவனுக்குத் திறமை உண்டு. காதலர்களைப் பாருங்கள். எல்லோரும் திறமைசாலிகள்!” என்றார்.

தஸ்தயெவ்ஸ்கியைப் பற்றிப் பேசும்போது மட்டும் தயங்குவார். ஏதோ ஒன்றை மறைப்பதுபோல், உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொள்வதுபோல் பேசுவார். “அவன் கன்பூசியஸையோ பௌத்தர்களையோ படித்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் அமைதியடைந்திருப்பான். எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள் அவை. அவனது உடலே கிளர்ச்சியானது. கோபப்பட்டால் வழுக்கைத் தலையில் நரம்புமுடிச்சுகள் எழும்பும்; காதுகள் அசையும். நிறைய உணர்ந்தான்; ஆனால் சிந்திக்கத் தெரியவில்லை. ஃபூரியரின் சீடர்களிடமிருந்தும் புடாஷெவிச்சிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும்தான் சிந்திக்கக் கற்றுக்கொண்டான். பிறகு வாழ்நாள் முழுவதும் அவர்களை வெறுத்தான்.

அவனது இரத்தத்தில் ஏதோ யூதத்தன்மை இருந்தது. காரணமின்றிச் சந்தேகப்படும் மனிதன்; பேராசையும் பாரமும் துரதிர்ஷ்டமும் நிறைந்தவன். இத்தனை பேர் அவனை ஏன் வாசிக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. எனக்குப் புரியவில்லை. எல்லாமே வேதனையும் பயனற்றதும்தான். அந்த முட்டாள்கள், வளரிளம் பருவத்தினர், ரஸ்கோல்னிகோவ்கள்… அவரது மனிதர்களெல்லாம் உண்மையானவர்கள் அல்ல. வாழ்க்கை அதைவிட எளிமையானது; புரிந்துகொள்ளக்கூடியது. லெஸ்கோவை மக்கள் வாசிக்காததுதான் எனக்கு வருத்தம். அவன்தான் உண்மையான எழுத்தாளன். நீ வாசித்திருக்கிறாயா?”

“ஆம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவரது மொழி.”

“மொழியை என்ன அற்புதமாக அறிந்திருந்தான்! அதன் நுணுக்கங்களையும் தெரிந்திருக்கிறான். உனக்கு அவனைப் பிடிப்பது ஆச்சரியம்தான். நீ எதனாலோ ரஷ்யனைப் போலவே இல்லை. உன் சிந்தனைகளும் ரஷ்யச் சிந்தனைகள் அல்ல. இப்படிச் சொன்னதற்குக் கோபமில்லையே? நான் கிழவனாகிவிட்டேன். ஒருவேளை நவீன இலக்கியம் எனக்குப் புரியாமல் போயிருக்கலாம். ஆனால் அதெல்லாம் ரஷ்ய இலக்கியமாகவே தோன்றவில்லை. விசித்திரமான கவிதைகள் எழுதுகிறார்கள். என்ன கவிதைகள் அவை? என்ன பொருள்? எனக்குத் தெரியவில்லை. புஷ்கின், தியூட்செவ், ஃபெட் ஆகியோரிடமிருந்துதான் கவிதை எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“ஆனால் நீ” – செகாவை நோக்கித் திரும்பினார் – “நீ ரஷ்யன். ஆம், உண்மையாகவே ரஷ்யன்.”

பாசத்துடன் புன்னகைத்து செகாவின் தோளில் கையை வைத்தார். செகாவுக்குச் சங்கடமாகிவிட்டது. தன் சிறிய வீட்டைப் பற்றியும் தாத்தாரியர்களைப் பற்றியும் மெதுவாக ஏதோ முணுமுணுத்தார்.

செகாவ்வை அவர் மிகவும் நேசித்தார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் கனிவு தெரியும். அந்தப் பார்வையே செகாவ் முகத்தை வருடுவதுபோல் இருக்கும். ஒருமுறை செகாவ் அலெக்சாந்திரா லிவோவ்னாவுடன் புல்வெளியில் நடந்துகொண்டிருந்தார். டால்ஸ்டாய் அப்போது இன்னும் நோயாளியாக இருந்தார்; வராந்தாவில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர்களை நோக்கி உடலை நீட்டியபடி மெல்லச் சொன்னார்: “ஆஹா! எவ்வளவு அழகான, அற்புதமான மனிதன்! ஒரு பெண்ணைப்போல் அடக்கமும் அமைதியும் கொண்டவன். நடப்பதும் ஒரு பெண்ணைப்போலத்தான். எவ்வளவு அருமையான மனிதன்!”

ஒருநாள் அந்திப்பொழுதில் தான் எழுதிய தந்தை செர்கியஸ் கதையிலிருந்து ஒரு காட்சியின் நீட்சியை அவர் வாசித்தார். அந்தக் காட்சியில் துறவியை மயக்க ஒரு பெண் வருகிறாள். கண்களைப் பாதி மூடி, புருவங்களை அசைத்தபடி முழுவதையும் வாசித்தார். முடித்ததும் தலையை உயர்த்திக் கண்களை மூடினார். “கிழவன் நன்றாக எழுதியிருக்கிறான். நன்றாக!” என்று தெளிவாகச் சொன்னார். அவர் அதைச் சொன்ன எளிமை அற்புதமானது. தன் எழுத்தின் அழகில் அவர் அடைந்த மகிழ்ச்சி உண்மையானது. அதைக் கேட்டு எனக்குண்டான பரவசத்தை ஒருபோதும் மறக்க முடியாது. அதை வெளிப்படுத்த என்னால் முடியவில்லை; எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை. மிகுந்த முயற்சியால்தான் அடக்கிக்கொண்டேன். என் இதயத்துடிப்பு ஒருகணம் நின்றதுபோல் இருந்தது. சுற்றியிருந்த அனைத்தும் புத்துணர்ச்சியோடு உயிர்பெற்றதுபோல் தோன்றின.

டால்ஸ்டாய் பேசுவதை நேரில் கேட்டிருந்தால்தான் அவரது பேச்சின் அழகைப் புரிந்துகொள்ள முடியும். அதைச் சொற்களால் விளக்க முடியாது. அவரது பேச்சு இலக்கணப்படி எப்போதும் சரியாக இருக்காது. ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவார். ஊர்ப் புற மனிதர்களின் எளிமை அதில் இருக்கும். சொற்களுக்கும் குரலுக்கும் அப்பால், முகபாவமும் கண்களில் மின்னிடும் ஒளியும் அவரது பேச்சுக்கு உயிரளித்தன. நான் பார்த்ததிலேயே அதிகம் பேசக்கூடிய கண்கள் அவை. லியோவின் இரண்டு கண்களுக்குள் ஆயிரம் கண்கள் இருந்தன.

ஒருமுறை சுலேர், செர்கேய் லிவோவிச், செகாவ், மேலும் ஒருவர் பூங்காவில் அமர்ந்து பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் நீண்ட நேரம் எதுவுமே சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு திடீரென்று சொன்னார்:

“பெண்களைப் பற்றிய உண்மையை நான் எப்போது சொல்வேன் தெரியுமா? ஒரு கால் கல்லறைக்குள் செல்லும்போது! அப்போது எல்லாவற்றையும் சொல்வேன். உடனே சவப்பெட்டிக்குள் குதித்து மூடியை இழுத்து மூடிவிட்டு, ‘இனி உங்களுக்கு விருப்பமானதைச் செய்துகொள்ளுங்கள்!’ என்பேன்.”

அப்போது அவர் எங்களைப் பார்த்த மருண்ட பார்வையில் அத்தனை காட்டுத்தனமும் இருந்தது. அனைவரும் சற்று நேரம் வாயடைத்துப் போனோம்.

அவருக்குள் வாஸ்கா புஸ்லாயேவின் ஆர்வமும் குறும்பும் கலந்த கட்டுக்கடங்காத தன்மை இருந்தது என்று நினைக்கிறேன். தலைமை மதகுரு அவாக்குமின் பிடிவாதமும் இருந்தது. அவற்றின் அருகிலோ மேலாகவோ சாடாயெவின் சந்தேக மனமும் மறைந்திருந்தது. அவாக்குமின் குணம் தன் போதனைகளால் அவருக்குள் இருந்த கலைஞனைத் துன்புறுத்தியது. நோவ்கோரோட் போன்ற அந்த முரட்டுத்தனம் ஷேக்ஸ்பியரையும் தாந்தேயையும் விமர்சித்துக் கலங்கடித்தது. சாடாயெவின் சந்தேகம் அவரது உள்ளத்தின் விளையாட்டுகளையும், ஏன், அதன் வேதனைகளையும்கூட எள்ளி நகையாடியது. மனித வாழ்வைச் சிறப்பாக்க முயன்றும் பயனின்றிப் போனதால், அரசின்மைவாதத்தின் செயலின்மைக்குத் தள்ளப்பட்ட பழைய ரஷ்ய மனிதன் அவருக்குள் அறிவியலையும் அரசையும் தாக்கினான்.

விசித்திரம் என்னவென்றால், டால்ஸ்டாயிடம் இருந்த இந்தப் புஸ்லாயேவ் தன்மையை சிம்ப்ளிசிசிமஸ் இதழின் கேலிச்சித்திரக்காரர் ஓலாஃப் குல்பிரான்சன் ஏதோ ஓர் உள்ளுணர்வால் கண்டுகொண்டிருக்கிறார். அவரது ஓவியத்தை உற்றுப் பாருங்கள். உண்மையான டால்ஸ்டாயின் சாயல் அதில் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது! பாதி மறைந்த கண்களைக் கொண்ட அந்த முகத்தில் என்ன துணிச்சல்! என்ன அறிவு! அதற்கு எதுவும் புனிதமானதல்ல. ‘தும்மலையோ கனவையோ பறவையின் கரைதலையோ’ நம்பாத கண்கள் அவை.

அந்த முதிய மந்திரவாதி என்முன் நிற்கிறார். எல்லோருக்கும் அந்நியமானவர். எல்லாவற்றையும் தழுவும் ஓர் உண்மையைத் தேடிச் சிந்தனையின் பாலைநிலங்கள் அனைத்திலும் தனியாக அலைந்தவர். ஆனால் அந்த உண்மையை அவர் கண்டடையவில்லை. அவரை இழந்த துயரம் எனக்குள் இருக்கிறது. அதே நேரத்தில் அந்த மனிதரை நேரில் கண்டிருக்கிறேன் என்ற பெருமையும் இருக்கிறது. அந்தப் பெருமை என் துயரத்தைச் சற்றுத் தணிக்கிறது.

‘டால்ஸ்டாய் தாசர்கள்’ நடுவே டால்ஸ்டாய் நிற்பதைப் பார்ப்பது வியப்புறு அனுபவம். கம்பீரமாக மணிக்கோபுரம் ஒன்று நிற்கிறது; அதன் ஆலயமணி உலகம் முழுவதும் ஓயாமல் ஒலிக்கிறது. சிறிய, பயந்த நாய்கள் அதைச் சுற்றித் திரிகின்றன. மணியோசையை நோக்கி ஊளையிடுகின்றன. பிறகு ஒன்றையொன்று சந்தேகத்துடன் பார்த்து, “நம்மில் யார் நன்றாக ஊளையிட்டது?” என்று கேட்டுப் பிணங்குகின்றன.

அந்த மனிதர்கள் யாஸ்னாயா பொலியானா வீட்டிலும் கவுண்டஸ் பானினின் மாளிகையிலும் போலித்தனத்தையும் கோழைத்தனத்தையும் பரப்பினார்கள் என்று நினைக்கிறேன். சுயநலம், அற்பப் பேராசை, சொத்துக்காகக் காத்திருத்தல் – இவை எல்லாவற்றாலும் அந்த வீடுகளை நிரப்பினார்கள். ரஷ்யாவின் இருண்ட மூலைகளில் அலைந்து திரியும் சில போலித்துறவிகளை அவர்கள் நினைவூட்டினார்கள். நாய்களின் எலும்புகளை எடுத்துச் சென்று புனிதர்களின் நினைவுச் சின்னங்கள் என்று விற்பவர்கள்; “எகிப்தின் இருள்”, “மரியன்னையின் கண்ணீர்த்துளி” என்ற பெயர்களில் போலிப் புனிதப் பொருட்களை விற்பவர்கள்.

யாஸ்னாயா பொலியானாவில் இருந்த டால்ஸ்டாய் தாசர் ஒருவர் கோழிகளுக்குத் தீங்கு செய்ய விரும்பவில்லை என்று முட்டை உண்ண மறுத்தார். ஆனால் துலா ரயில் நிலையத்தில் நான் கண்டபோது இறைச்சியை ஆசையோடு மென்று தின்றார். “கிழவர் எதையும் அளவுக்கு மீறிச் சொல்வார்” என்றும் கூறினார்.

அவர்களில் பெரும்பாலோருக்குப் புலம்புவதும் ஒருவரையொருவர் முத்தமிடுவதும் பிடிக்கும். எலும்பில்லாதது போன்ற வியர்த்த கைகள்; பொய்மைக் கண்கள். ஆனால் நடப்பு விவகாரங்களைத் தமக்கேற்பச் சாமர்த்தியமாகக் கையாள்வார்கள். டால்ஸ்டாய் தாசர்களின் உண்மையான மதிப்பு என்ன என்பதை லியோவும் அறிந்திருந்தார். இளமைத்தீவிரத்தோடு கனிவாக அவரால் நேசிக்கப்பட்ட சுலேரும் அறிந்திருந்தான்.

ஒருமுறை டால்ஸ்டாயின் போதனைகளை ஏற்ற பிறகு தன் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாகிவிட்டது, தன் ஆன்மா எவ்வளவு தூய்மையாகிவிட்டது என்று ஒரு சீடர் நீட்டி முழக்கிப் பேசிக்கொண்டிருந்தார். டால்ஸ்டாய் என்னை நோக்கிக் குனிந்து மெதுவாகச் சொன்னார்: “போக்கிரி தொடர்ந்து பொய் சொல்கிறான். என்னை மகிழ்விப்பதாக நினைத்து அப்படிச் செய்கிறான்.” பலரும் அவரை மகிழ்விக்க முயன்றார்கள். ஆனால் அதை யாரும் திறமையாகச் செய்ததாக நான் கண்டதில்லை. எல்லோரையும் மன்னிப்பது, பிறரை நேசிப்பது, நற்செய்திகள், பௌத்தம் போன்ற தனது வழக்கமான கருத்துகளை என்னிடம் அவர் அரிதாகவே பேசுவார். அந்தப் போதனைகள் என்னிடம் எடுபடாது என்பதை அவர் உடனே புரிந்துகொண்டார். அதற்காக அவரை நான் மிகவும் மதித்தேன்.

அவர் விரும்பினால் அபாரமான வசீகரத்துடனும் கனிவுடனும் நயத்துடனும் நடந்துகொள்வார். அவரது பேச்சு வியப்பூட்டும் எளிமையும் அழகும் கொண்டது. ஆனால் சில சமயம் அதைக் கேட்பதே வேதனையாக இருக்கும். பெண்களைப் பற்றி அவர் பேசியது எனக்கு எப்போதும் வெறுப்பூட்டியது. கேட்க முடியாதபடி கொச்சையாக இருக்கும். அதில் ஏதோ செயற்கைத்தனமும் நேர்மையின்மையும் தெரியும். அதேசமயம் மிகத் தனிப்பட்ட காயத்தின் நிணமும் கசியும். எவளோ எப்போதோ அவரைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதை மறக்கவோ மன்னிக்கவோ அவரால் முடியவில்லை போலும். அப்படித்தான் தோன்றியது.

அவரை முதன்முதலில் சந்தித்த மாலை நினைவுக்கு வருகிறது. மாஸ்கோவின் காமோவ்னிகியிலுள்ள அவரது வீட்டில்தான் சந்தித்தேன். என்னைத் தன் படிப்பறைக்கு அழைத்துச் சென்று எதிரே அமர வைத்தார். வர்யென்கா ஒலேசோவா, இருபத்தாறு பேரும் ஒருத்தியும் ஆகிய எனது படைப்புகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் தொனி என்னை நிலைகுலையச் செய்தது. சொல்லப்போனால், என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விட்டது. இளமை பூரிக்கும் பெண்ணிடம் கற்பு இயல்பானதல்ல என்று எந்தத் தயக்கமுமின்றிக் கடுமையாக வாதிட்டார்.

“பதினைந்து வயதைத் தாண்டிய குமரி கொழிக்கும் உடலுடன் இருந்தால், யாராவது தன்னைத் தொட்டுத் தழுவ வேண்டும் என்று விரும்புவாள். ஆனால் தெரியாததையும் புரியாததையும் அவளுடைய மனம் இன்னும் அஞ்சும். அதைத்தான் மனிதர்கள் கற்பு என்றும் தூய்மை என்றும் அழைக்கிறார்கள். அவளது மதர்த்த உடலும், புரியாத அந்த விழைவும் இயல்பானது; அதற்கு உரிமை உண்டு என்பதை ஏற்கெனவே அது அறிந்திருக்கிறது. மனம் மறுத்தாலும் உடல் அந்த இயற்கை விதி ஈடேற வேண்டும் எனக் கோருகிறது. நீ வர்யென்கா ஒலேசோவாவை நலமிகு பெண்ணாக எழுதுகிறாய். ஆனால் அவளது உணர்ச்சிகளிலோ உயிர்ப்பில்லை. அது வாழ்க்கை உண்மையல்ல.”

பின்னர் இருபத்தாறு பேரும் ஒருத்தியும் கதையில் வரும் பெண்ணைப் பற்றிப் பேசினார். கொச்சையான சொற்களைத் தொடர்ந்து உதிர்த்தார். அவற்றை அவர் சொன்ன விதம் எனக்கு இரக்கமற்றதாக, எள்ளலாகத் தோன்றியது. என் மனமும் புண்பட்டது. பின்னர்தான் புரிந்துகொண்டேன்: அந்தச் சொற்கள்தான் துல்லியமானவை, கூர்மையானவை என்று நினைத்ததால் மட்டுமே அவற்றை எய்திருக்கிறார். ஆனால் அன்றைக்கு அவற்றைக் கேட்க எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் எதுவுமே சொல்லவில்லை. 

உடனே அவரது போக்கு மாறியது. கனிவும் அக்கறையுமாக என் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். என்ன படிக்கிறேன், என்ன வாசிக்கிறேன் என்று விசாரித்தார்.

“நீ நிறைய வாசித்திருக்கிறாய் என்று சொல்கிறார்களே. உண்மையா? கொரோலென்கோ இசைக்கலைஞரா?”

“இல்லையென்று நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாகத் தெரியாது.”

“தெரியாதா? அவரது கதைகள் உனக்குப் பிடிக்குமா?”

“மிகவும் பிடிக்கும்.”

“அதுதான் வித்தியாசம். அவரிடம் கவித்துவம் இருக்கிறது; உன்னிடம் அது இல்லை. வெல்ட்மானை வாசித்திருக்கிறாயா?”

“வாசித்திருக்கிறேன்.”

“நல்ல எழுத்தாளன் அல்லவா? அறிவாளி. துல்லியமாக எழுதுகிறான்; மிகைப்படுத்துவதில்லை. சில சமயம் கோகோலை விடச் சிறந்தவன். பால்சாக்கை அவனுக்குத் தெரியும். கோகோல் தான் மார்லின்ஸ்கியைப் பின்பற்றினான்.”

கோகோலின் மீது ஹோஃப்மான், ஸ்டெர்ன், ஒருவேளை டிக்கன்ஸ் ஆகியோரின் தாக்கம் இருந்திருக்கலாம் என்றேன். என்னைப் பார்த்து, “இதை எங்கேயாவது வாசித்தாயா? இல்லையா? அப்படியானால் சொல்கிறேன் – அது உண்மையல்ல. கோகோலுக்குத் டிக்கன்ஸை அதிகம் தெரியாது. ஆனால் நீ நிறைய வாசித்திருக்கிறாய் என்பது தெரிகிறது. கவனம்! அது ஆபத்து. கோல்த்சோவ் அதனால்தான் தன்னைக் கெடுத்துக்கொண்டான்” என்றார்.

வாசல்வரை வந்து என்னை அணைத்து முத்தமிட்டார். “நீ உண்மையான ரஷ்ய விவசாயி. எழுத்தாளர்கள் நடுவே வாழ்வது உனக்குக் கடினமாக இருக்கும். பரவாயில்லை, பயப்படாதே. உனக்குத் தோன்றுவதை எப்போதும் சொல். கரடுமுரடாக இருந்தாலும் பரவாயில்லை. அறிவுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார்.

முதல் சந்திப்புக்குப் பிறகு எனக்குள் இரண்டு உணர்வுகள் இருந்தன. டால்ஸ்டாயைப் பார்த்ததில் மகிழ்ச்சியும் பெருமையும். ஆனால் அவருடனான உரையாடல் ஒரு தேர்வில் அமர்ந்திருப்பதைப் போன்றிருந்தது. கசாக்குகள், கோல்ஸ்தோமெர், போரும் அமைதியும் ஆகிய படைப்புகளை எழுதியவரை நான் அங்கே காணவில்லை. என் நிலைக்கு ஏற்றவாறு இறங்கி வந்து நடத்த வேண்டியவன் என்று நினைக்கும் ஒரு நிலப்பிரபுவைத்தான் கண்டேன். தெருவிலும் சந்தையிலும் பேசும் சாதாரண மொழியில் என்னிடம் பேசுவதே பொருத்தமானது என்று அவர் கருதியதுபோல் தோன்றியது. அவரைப் பற்றிப் பல காலமாக வளர்த்து, அன்புடன் பாதுகாத்த என் மனச்சித்திரம் குலைந்துபோனது.

மீண்டும் அவரைச் சந்தித்தது யாஸ்னாயா பொலியானாவில். இலையுதிர் காலத்தின் மேகமூட்டமான ஒரு நாள். மழை தூறியது. கனமான மேலங்கியும் உயர்ந்த புதை காலணிகளும் அணிந்துகொண்டு என்னை பிர்ச் மரக்காட்டுக்கு நடைப் பயிற்சியாக அழைத்துச் சென்றார். பள்ளங்களையும் நீர் தேங்கிய நொடிகளையும் சிறுவனைப் போலத் தாண்டிக் குதித்தார். கிளைகளை அசைத்து மழைத்துளிகளை உதிர்த்தார். அந்தக் காட்டில்தான் ஃபெட் தனக்கு ஷோபென்ஹாவரை எவ்வாறு விளக்கினார் என்று அற்புதமாகச் சொன்னார். பட்டுப்போல வழவழப்பான பிர்ச் மரங்களின் ஈரத் தண்டுகளை அன்போடு வருடியபடி “அண்மையில் ஒரு கவிதை வாசித்தேன்” என்றார்:

“காளான்கள் மறைந்துவிட்டன; ஆனால் சரிவுகளில்
காளான் முளைத்த ஈரமண்ணின் கனமான மணம் இன்னும் நிற்கிறது…”

“நன்றாக இருக்கிறது. எவ்வளவு உண்மை!” என்றார்.

திடீரென எங்கள் காலருகே ஒரு முயல் துள்ளியெழுந்தது. டால்ஸ்டாய் பரபரப்புடன் நிமிர்ந்தார். முகம் ஒளிர்ந்தது. பழைய வேட்டைக்காரனைப் போல ஆரவாரித்தார். பிறகு என்னைப் பார்த்து ஒரு குறும்புப் புன்னகை பூத்தார். உடனே மனம்விட்டுச் சிரித்தார். அந்தக் கணத்தில் அவர் அளவிலா வசீகரத்துடன் இருந்தார்.

இன்னொரு முறை பூங்காவில் ஒரு பருந்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மாட்டுத் தொழுவத்தின் மேலே பெரிய வட்டங்களாக வானில் சுற்றியது. சிறகுகளைச் சற்றே அசைத்தபடி காற்றில் மிதந்தது. கீழே பாய்ந்து தாக்கும் தருணம் வந்துவிட்டதா என்று தீர்மானிக்க முடியாததுபோல இருந்தது. டால்ஸ்டாய் எழுந்து நின்று கண்ணுக்கு மேல் கையை வைத்துப் பார்த்தார். “போக்கிரி! நம் கோழிக் குஞ்சுகளைக் காவ வருகிறான். இதோ… இப்போது… இறங்கிவிடுவான்… ஓ, பயப்படுகிறான்! குதிரைக்காரன் அங்கே இருக்கிறானா? அவனைக் கூப்பிடுகிறேன்” என்று பரபரப்பாக முணுமுணுத்தார்.

குதிரைக்காரனைக் கூவி அழைத்தார். அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பருந்து பயந்து மேலேறி விலகிப் பறந்து மறைந்தது. டால்ஸ்டாய் பெருமூச்சுவிட்டார். தன்னையே கடிந்துகொள்பவர்போல் “நான் கத்தியிருக்கக் கூடாது. எப்படியும் அது பாய்ந்திருக்கும்” என்றார்.

ஒருமுறை திஃப்லிஸைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது வி. வி. ஃப்ளெரோவ்ஸ்கி பெர்வியின் பெயரைக் குறிப்பிட்டேன். “உனக்கு அவரைத் தெரியுமா? எப்படிப்பட்ட மனிதர்? சொல்!” என்று டால்ஸ்டாய் ஆர்வத்துடன் கேட்டார்.

ஃப்ளெரோவ்ஸ்கியைப் பற்றி விவரித்தேன். உயரமானவர்; நீண்ட தாடி, மெலிந்த உடல், பெரிய கண்கள். தடித்த பாய்த்துணியாலான நீண்ட சட்டை அணிவார். செம்மதுவில் சமைத்த உணவுப் பொதியை இடுப்பில் கட்டியிருப்பார். பெரிய துணிக்குடை ஒன்றும் கையில் இருக்கும். அந்தக் குடையோடு என்னுடன் டிரான்ஸ் காகேசிய மலைப் பாதைகளில் அலைந்திருக்கிறார். ஒருமுறை குறுகிய மலைப்பாதையில் எங்களுக்கு எதிரே ஓர் காட்டெருமை வந்தது. குடையை விரித்துக் காட்டி அதை மிரட்டியபடியே எச்சரிக்கையுடன் பின்வாங்கினோம். ஒவ்வோர் அடியிலும் பள்ளத்தில் விழுந்துவிடும் அபாயம். 

இவற்றைச் சொன்னபோது திடீரென்று டால்ஸ்டாயின் கண்களில் கண்ணீர் இருப்பதைக் கண்டேன். நான் குழம்பிப் பேச்சை நிறுத்தினேன்.

“பரவாயில்லை. சொல், தொடர்ந்து சொல்” என்றார். “நல்ல மனிதரைப் பற்றிக் கேட்பதே மகிழ்ச்சி. நான் கற்பனை செய்தது போலவே இருக்கிறார்; தனித்துவமானவர். தீவிரச் சிந்தனையாளர்கள் பலரில் முதிர்ச்சியும் அறிவும் கொண்டவர் அவர்தான். தனது அகரவரிசை நூலில் நமது நாகரிகம் எவ்வளவு காட்டுத்தனமானது என்பதைத் தெளிவாக நிறுவுகிறார். பண்பாட்டை உருவாக்குபவை வலிமையான நாடுகள் அல்ல; பலவீனமான அமைதியான தேசங்கள்தான் என்கிறார். ‘உயிர்வாழ்வுக்கான போராட்டம்’ என்பது தீமையை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பொய்யென்றும் வாதிடுகிறார். இதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாய், அல்லவா? ஆனால் தோதே ஒப்புக்கொள்கிறார். அவரது போல் ஆஸ்தியரை நினைவிருக்கிறதா?”

“ஐரோப்பிய வரலாற்றில் நார்மானியர்கள் வகித்த பங்கை ஃப்ளெரோவ்ஸ்கியின் கோட்பாட்டுடன் எப்படிப் பொருத்துவீர்கள்?” என்று கேட்டேன்.

“நார்மானியர்களா? அது வேறு விஷயம்.”

பதில் சொல்ல விரும்பாத போதெல்லாம் அவர் இப்படித்தான் சொல்வார்: “அது வேறு விஷயம்.”

இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இல்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. நான் கருதுவது பிழையல்ல என்றே நம்புகிறேன். ஆனால் எழுத்தாளரின் ஆளுமை மீது அவருக்கு ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. “அவரை உனக்குத் தெரியுமா? எப்படிப்பட்டவர்? எங்கே பிறந்தார்?” என்ற கேள்விகளை அடிக்கடி கேட்பார். ஏறத்தாழ அவரது ஒவ்வொரு கருத்தும் அந்த எழுத்தாளரைப் பற்றி ஏதாவது புதிய பார்வை தரும்.

வி. கே. பற்றிச் சிந்தித்தபடி “அவர் ரஷ்யப் பேரினத்தைச் சேர்ந்தவர் அல்ல. அதனால் நம்மைவிட நன்றாகவும் உண்மையாகவும் ரஷ்ய வாழ்க்கையைப் பார்க்க முடியும்” என்றார். மிகவும் நேசித்த செகாவைப் பற்றி “மருத்துவத் தொழில் அவருக்குத் தடையாக இருக்கிறது. அவர் மருத்துவராக இல்லாவிட்டால் இன்னும் சிறந்த எழுத்தாளராக இருப்பார்” என்றார். இளம் எழுத்தாளர் ஒருவரைப் பற்றி “ஆங்கிலேயனாக நடிக்கிறான். அந்த வேடம் மாஸ்கோவாசிக்கு ஒருபோதும் சரியாகப் பொருந்தாது” என்றார்.

என்னைப் பார்த்து ஒருநாள் “நீ ஒரு புனைவாளன். உன் குவால்டாக்களெல்லாம் நீ கற்பனையில் உருவாக்கிய மனிதர்கள்” என்றார்.

குவால்டா நிஜ வாழ்க்கையில் நான் பார்த்த மனிதனை அடிப்படையாகக் கொண்டவன் என்று சொன்னேன். “எங்கே பார்த்தாய்?” என்று கேட்டார்.

கசான் நகர நீதிமன்றத்தில் நான் பார்த்த கொனோவாலோவின் நிகழ்ச்சியை விவரித்தேன். அங்கே சந்தித்த மனிதனைத்தான் குவால்டா என்ற பெயரில் எழுதினேன். அதைக் கேட்டதும் டால்ஸ்டாய் வயிறு குலுங்கச் சிரித்தார். கண்ணீரைத் துடைத்தபடி, “நீல இரத்தம்! அதுதான்… நீல இரத்தம்! உயர்வகை! எவ்வளவு அருமை! எவ்வளவு வேடிக்கை! நீ எழுதுவதைவிட நன்றாகக் கதை சொல்கிறாய். ஆம், நீ கற்பனையாளன்; மிகை உணர்வாளன். ஒப்புக்கொள்!” என்றார்.

எழுத்தாளர்கள் அனைவருமே ஓரளவு புனைந்து கதை விடுகிறவர்கள்தான் என்று பதிலளித்தேன். வாழ்க்கையில் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே எழுதுகிறோம் என்றேன். வன்முறையாக இருந்தாலும் சரி, கிடைக்கும் எல்லா வழிகளாலும் வாழ்வின் தீமைகளை எதிர்க்க விரும்பும் செயலூக்கமுள்ள மனிதர்களை நான் நேசிக்கிறேன் என்றும் சொன்னேன்.

“வன்முறைதானே முதன்மையான தீமை!” என்று கத்தினார்; என் கையைப் பிடித்துக்கொண்டார். “அந்த முரண்பாட்டிலிருந்து எப்படித் தப்புவாய், புனைவாளனே? உனது என் பயணத் தோழன் கதை நீ கற்பனையில் உருவாக்கியது அல்ல. அதனால்தான் அது நன்றாக இருக்கிறது. ஆனால் நீயாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அமடிஸ்களையும் சீக்ஃபிரீட்களையும் போன்ற மாவீரர்களைத்தான் படைக்கிறாய்!”

மனிதர்களாக நம்மைச் சுற்றிவரும் தவிர்க்க முடியாத ‘பயணத் தோழர்’களின் குறுகிய உலகத்திற்குள் நாம் வாழும் வரை, நமது கட்டுமானம் எல்லாமே சரியும் மணல் மீதுதான்; நமக்கு எதிரான சூழலுக்குள்தான் என்று சொன்னேன்.

சிரித்தபடி முழங்கையால் என்னை மெல்ல இடித்தார். “இதிலிருந்து மிக மிக ஆபத்தான முடிவுகளுக்கு வரலாம். நீ சந்தேகத்துக்குரிய சோசலிஸ்ட். நீ ஒரு மிகை உணர்வுக்காரன். அவர்கள் மன்னராட்சியின் ஆதரவாளர்களாகத்தான் இருக்க வேண்டும். எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.”

“அப்படியானால் விக்தோர் ஹ்யூகோ?”

“ஹ்யூகோவா? அது வேறு விஷயம். எனக்குப் பிடிக்காது. ஒரே சத்தம்!”

நான் என்ன வாசிக்கிறேன் என்று அடிக்கடி விசாரிப்பார். அவரது கருத்தில், மோசமான நூலைத் தேர்ந்தெடுத்திருந்தால் உடனே திட்டிவிடுவார்.

“கொஸ்டோமாரோவைவிட கிப்பன் மோசமானவர். மாம்ஸனை வாசிக்க வேண்டும். அவரை வாசிப்பது பெருஞ் சலிப்பு; ஆனால் எல்லாமே உறுதியான ஆய்வு.”

நான் வாழ்க்கையில் முதலில் வாசித்த நூல் செம்கானோ சகோதரர்கள் என்று கேட்டதும் கோபப்பட்டார்.

“பார்த்தாயா? முட்டாள்தனமான நாவல்! அதுதான் உன்னைக் கெடுத்தது. பிரெஞ்சுக்காரர்களிடம் மூன்று எழுத்தாளர்கள்தான் இருக்கிறார்கள்: ஸ்டெந்தால், பால்ஸாக், ஃப்ளோபேர். சரி, மாப்பசானையும் சேர்க்கலாம். ஆனாலும் செகாவ் அவரைவிடச் சிறந்தவர். கோன்கூர் சகோதரர்களா? வெறும் கோமாளிகள். தீவிரமான எழுத்தாளர்கள் என்று பாசாங்கு செய்தார்கள். தங்களைப் போன்ற கற்பனையாளர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து வாழ்க்கையைக் கற்றார்கள். அதை ஒரு பெரிய வேலையாக நினைத்தார்கள். ஆனால் அதனால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை.”

அவருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது அவரைச் சற்று எரிச்சலடையச் செய்தது. எதிர்ப்பைத் தாங்கிக்கொள்வது அவருக்குச் சிரமம். அவரது கருத்துகளும் சில சமயம் விசித்திரமாக இருக்கும். திடீரென்று மாறுபடும். 

 “மரபுச் சீரழிவு என்றெல்லாம் ஒன்றில்லை” என்று ஒருநாள் சொன்னார். “அதை இத்தாலிய லொம்ப்ரோசோ உருவாக்கினான். அவனைத் தொடர்ந்து யூதனான நோர்டாவ் கிளியைப் போலக் கத்திக்கொண்டு வந்தான். இத்தாலி ஏமாற்றுக்காரர்களும் சாகசக்காரர்களும் நிறைந்த நாடு. அரெந்தீனோக்களும் காசனோவாக்களும் காக்லியோஸ்த்ரோக்களும்தான் அங்கே பிறக்கிறார்கள்!”

“காரிபால்டி?” என்று கேட்டேன்.

“அது அரசியல். அது வேறு விஷயம்.”

ரஷ்யாவின் வணிகக் குடும்பங்களின் வாழ்க்கையிலிருந்து பல உண்மை நிகழ்வுகளை அவரிடம் எடுத்துச் சொன்னேன். “அதெல்லாம் உண்மையல்ல. நூல்களில்தான் புத்திசாலித்தனமாக அப்படி எழுதுவார்கள்” என்றார்.

எனக்குத் தெரிந்த ஒரு வணிகக் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் உண்மை வரலாற்றைச் சொன்னேன். மரபுச் சீரழிவு என்ற கருத்து மிகக் கொடூரமாகப் பொருந்தும் குடும்பம் அது. உடனே பரபரப்பாகி என் கையைப் பிடித்து இழுத்தார். “இப்போது நீ சொல்வதுதான் உண்மை! துலாவில் இதுபோன்ற இரண்டு குடும்பங்களை எனக்குத் தெரியும். இதை எழுத வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்பட்ட ஒரு நீண்ட நாவல். புரிகிறதா? நீ கட்டாயம் எழுத வேண்டும்!” அவரது கண்கள் ஒளிர்ந்தன.

“ஆனால் அப்படிச் செய்தால் மாவீரர்களும் வந்துவிடுவார்களே!” என்றேன் இடக்காக.

“வேண்டாம் மாவீரர்கள் வேண்டாம். இது உண்மையாகவே முக்கியமான கதை. மொத்தக் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்யத் துறவியாகப் போகிறவன் – அற்புதம்! அதுதான் உண்மை. ‘நீங்கள் பாவம் செய்யுங்கள்; நான் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து பாவத்தைப் போக்குகிறேன்’ என்கிறான். குடும்பத்தில் தொடரும் சோர்வான, பணத்தாசை கொண்ட மற்றவன் – அவனும் உண்மையான மனிதன் தான். குடிகாரன், ஒழுக்கம் கெட்ட மிருகம்; எல்லோரையும் நேசிக்கிறான்; திடீரென்று கொலையும் செய்கிறான்! ஆஹா, அருமை! நீ இதை எழுத வேண்டும். திருடர்களிடமும் பிச்சைக்காரர்களிடமும் மாவீரர்களைத் தேடாதே. ஒருபோதும் தேடாதே. மாவீரர்கள் எல்லாம் பொய்யும் புனைவும்தான். இருப்பவர்கள் மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே.”

என் கதைகளில் உள்ள மிகைப்படுத்தல்களை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டுவார். ஆனால் ஒருமுறை இறந்த ஆன்மாக்கள் பற்றிப் பேசும்போது அன்புடன் புன்னகைத்துச் சொன்னார்:

“நாம் எல்லோருமே மோசமான புனைவாளர்கள். நானே எழுதும்போது ஒரு கதாபாத்திரத்தின் மீது திடீரென்று இரக்கம் தோன்றும். உடனே அவனுக்கு ஒரு நல்ல பண்பைக் கொடுத்துவிடுவேன். அல்லது மற்றொரு ஆளிடமிருந்து ஒரு நல்ல பண்பைப் பிடுங்கிவிடுவேன். அப்போதுதான் இந்த ஆளை மற்றவர்களோடு ஒப்பிடும்போது மிகக் கருப்பாகத் தோன்றாது.”

அடுத்த கணம் இரக்கமற்ற நீதிபதியின் கடுமையான குரலில் தொடர்ந்தார் “அதனால்தான் கலை பொய் என்கிறேன். நம் விருப்பப்படி உருவாக்கும் போலி; மக்களுக்குக் கேடு விளைவிப்பது. வாழ்க்கை உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை நாம் எழுதுவதில்லை. வாழ்க்கையைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதைத்தான் எழுதுகிறோம். அந்தக் கோபுரத்தை நான் எப்படிப் பார்க்கிறேன், கடலை அல்லது தாத்தாரியனை எப்படிப் பார்க்கிறேன் என்று எழுதுகிறோம். அது மற்றவர்களுக்கு எதற்குத் தேவை? அதில் அவர்களுக்கு என்ன ஆர்வம், என்ன பயன்?”

[சில நேரங்களில் அவரது சிந்தனைகளும் உணர்ச்சிகளும் காரணமின்றித் திசை திரும்புவதாக, வேண்டுமென்றே முரணாக இயங்குவதாக எனக்குத் தோன்றும். ஆனால் மனிதர்களைக் கவர்ந்ததும் கலங்கடித்ததும் அவரது சிந்தனையின் இரக்கமற்ற நேரடித்தன்மையே. கொடூரமான கடவுளை அஞ்சாமல் கேள்வி கேட்ட யோபைப் போன்ற நேரடித்தன்மை. ஒருமுறை அவர் சொன்னார்:

“மே மாத இறுதியில் கீவுக்குச் செல்லும் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். பூமி சொர்க்கமாக இருந்தது. எங்கும் இன்பம். பறவைகள் பாடின; தேனீக்கள் ரீங்காரமிட்டன; சூரியன் ஒளிர்ந்தான். எல்லாமே அழகாக, அன்பாக, மகிழ்ச்சியாக இருந்தது. பேருவகை! என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. பூத்த பூக்கள் எல்லாம் தனக்காக என்றிருக்கும் தேனீயாக என்னை உணர்ந்தேன். கடவுள் என் ஆன்மாவுக்கு அருகே இருப்பதை உணர்ந்தேன்.

“அப்போது சாலையோரம் ஓர் ஆணும் பெண்ணும் படுத்திருப்பதைக் கண்டேன். யாத்திரிகர்கள். இருவரும் முதியவர்கள்; சாம்பல் நிறமாக அழுக்காக இருந்தார்கள். புழுக்களைப் போல நெளிந்தார்கள்; முனகினார்கள்; முணுமுணுத்தார்கள். அவர்களுடைய உடையற்ற நிறம் மங்கிவிட்ட கால்களின்மீதும் வற்றிய உடல்களின்மீதும் இரக்கமற்ற வெயில் சுட்டு வருத்தியது. அந்தக் காட்சி என் உள்ளத்தைத் தாக்கி நொறுக்கியது. ‘அழகைப் படைத்த கடவுளே, உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கூவ நினைத்தேன். முற்றிலுமாக உடைந்துபோனேன்.

“பார்த்தாயா, என்னவெல்லாம் நடக்கிறது! பிசாசின் படைப்பு என்று இயற்கையைப்பற்றி பக்தர்கள் சொன்னார்கள். இயற்கையவள் மனிதனை எவ்வளவு கேலியாக, கொடூரமாகத் துன்புறுத்துகிறாள்! உடலின் ஆற்றலை எடுத்துக்கொள்கிறாள்; ஆசையை மட்டும் விட்டு வைத்திருக்கிறாள். உயிர்ப்புள்ள உள்ளம் கொண்ட எல்லோரும் இதை உணர்கிறார்கள். ஆனால் இந்த அவமானத்தையும் வேதனையையும் தன் உடலிலேயே முழுமையாக அனுபவிக்க நேர்கிறவன் மனிதன்தான். தப்ப முடியாத தண்டனையாக அதை நமக்குள் சுமக்கிறோம். எந்தப் பாவத்திற்கான தண்டனை இது?”

இதைச் சொன்னபோது அவரது கண்கள் விசித்திரமாக மாறின. ஒருகணம் குழந்தையைப்போல் பரிதாபமாக; மறுகணம் கடுமையாகக் கூர்மையாக ஒளிர்ந்தன. உதடுகள் நடுங்கின; நரைமீசை சிலிர்த்தது. பேசி முடித்ததும் சட்டைப் பையிலிருந்து கைத்துண்டை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்தார். முகத்தில் ஈரமே இல்லை. பிறகு உழவனது போல நாளங்கள் புடைத்த வலுவான கைவிரல்களால் தாடியை வருடினார். “ஆம், எந்தப் பாவத்திற்காக?” என்று மெதுவாக மீண்டும் கேட்டார்.]

ஒருமுறை டியுல்பெரிலிருந்து ஐ – தோதோர் செல்லும் கீழ்ப்பாதையில் அவருடன் நடந்துகொண்டிருந்தேன். இளைஞனைப் போல இலகுவாக விரைந்து நடந்தார். ஆனால் வழக்கத்தைவிடப் பதற்றமான குரலில் திடீரென்று சொன்னார்

“உடல் என்பது ஆன்மாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் நாயாக இருக்க வேண்டும். ஆன்மா சொல்வதைச் செய்ய ஓட வேண்டும். ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம்? உடல் வெறிகொண்டு துள்ளிக் குதிக்கிறது. ஆன்மாவோ ஏதும் செய்ய முடியாமல் துயரத்துடன் அதன் பின்னால் ஓடுகிறது.”

இதயத்துக்கு மேலாகக் கையை வைத்து நெஞ்சில் அழுத்தித் தேய்த்தார். புருவங்களை உயர்த்தினார். பிறகு ஏதோ நினைவு வந்தவர்போல் தொடர்ந்து சொன்னார்:

“ஒருமுறை இலையுதிர் காலத்தில் மாஸ்கோவில் சுகாரியோவ் வாயிலுக்கு அருகேயுள்ள ஒரு சந்தில் நுழைந்தேன். அங்கே சாக்கடையோரம் மதுபோதையில் ஒரு பெண் கிடந்தாள். ஒரு வீட்டின் முற்றத்திலிருந்து கழிவுநீர் ஓடி வந்து அவளுடைய முதுகுக்கடியில் சென்றவாறிருந்தது. அந்தக் குளிர்ந்த கழிநீரில் அவள் கிடந்து முணுமுணுத்தாள். நடுங்கினாள். நெளிந்தாள். ஆனால் அவளால் எழ முடியவில்லை.”

அதை நினைத்து அவர் உடல் நடுங்கியது. கண்களைப் பாதி மூடித் தலையை அசைத்தார். பிறகு மெல்லச் சொன்னார்

“இங்கே சற்று அமர்வோம்… மதுபோதையின் உச்சத்தில் செயலிழந்துவிட்ட ஒரு பெண்ணைப் பார்ப்பதைவிடக் கோரமான, அருவருப்பான காட்சி வேறில்லை. அவளைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அவ்வளவு அருவருப்பாக இருந்தது! அவள் உடல் முழுக்கக் கசடு படிந்திருந்தது. தொட்டிருந்தால் என் கையை ஒரு மாதம் கழுவினாலும் சுத்தமாகாது என்று தோன்றியது. அகோரம்!

“அங்கே அவளருகில் நடைபாதை ஓரத்தில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். ஒளிரும் பூனைக்கண்கள். கண்ணீர் வழியும் கன்னங்கள். கையறுநிலை. களைத்துப்போன அழுகுரலில் திரும்பத் திரும்பக் கெஞ்சினான் ‘அம்… மா… அம்மா… எழுந்திரும்மா…’

“அவள் கைகளை அசைப்பாள். முனகுவாள். தலையைத் தூக்க முயல்வாள். மறுகணம் கழுத்து மீண்டும் அந்தக் கழிவுநீரில் பொத்தென்று விழும்.”

அவர் அமைதியானார். சுற்றிப் பார்த்துவிட்டு கிசுகிசுப்பாகத் தொடர்ந்தார்:

“ஆமாம் ஆமாம். படு நீசம். மதுபோதையில் நிலைகெட்ட பெண்களை நீ நிறையப் பார்த்திருக்கிறாயா? நிறையவா? கடவுளே! நீ இதைப் பற்றி எழுதக்கூடாது. வேண்டாம், எழுதவேண்டாம்.”

“ஏன்?” என்று கேட்டேன்.

நேராக என் கண்களைப் பார்த்தார். “ஏன்?” என்று புன்னகையுடன் திரும்பக் கேட்டார். பிறகு மெதுவாக, யோசனையுடன் சொன்னார்:

“எனக்குத் தெரியவில்லை. அப்படி வாயிலிருந்து வந்துவிட்டது. நீசத்தைப் பற்றி எழுதுவதில் வெட்கப்பட ஏதோ இருக்கிறது. ஆனால் ஏன் எழுதாமலிருக்க வேண்டும்? ஆமாம், எழுதவும் வேண்டும். எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும். எல்லாவற்றையும்.”

அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. துடைத்த கைத்துண்டைப் புன்னகைத்தபடி பார்த்தார். ஆனால் முகச் சுருக்கங்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.

“அழுகிறேன்” என்றார். “கிழவனாகிவிட்டேன். கோரமான ஒன்றை நினைத்தாலே இதயம் நோகிறது.”

பிறகு முழங்கையால் என்னை மிக மெதுவாகத் தொட்டார்.

“நீயும் ஒருநாள் வாழ்ந்து முடித்துவிடுவாய். அப்போதும் எல்லாமே இப்படித்தான் இருக்கும். நீயும் அழுவாய். என்னைவிட அதிகமாக அழுவாய். அருவிபோல் அழுவாய் – நம் கிராமத்துப் பெண்கள் சொல்வதுபோல். எல்லாவற்றையும் எழுத வேண்டும், எல்லாவற்றையும். இல்லாவிடில் ஒளிமிகு கண்களோடிருந்த அந்த வளரிளம் சிறுவன் வருந்தக்கூடும். அவன் நம்மைக் குற்றம் சாட்டக்கூடும். ‘அது உண்மையல்ல; அது முழு உண்மையல்ல’ என்பான். உண்மைகளை அளப்பதில் அவன் மிகக் கண்டிப்பானவன்.”

திடீரென்று உடலை உலுக்கிக்கொண்டு கனிவான குரலில் சொன்னார்:

“சரி, இப்போது ஒரு கதை சொல். உனக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். ஒரு குழந்தையைப் பற்றி… உன் குழந்தைப் பருவத்தைப் பற்றிச் சொல். நீயும் ஒருகாலத்தில் குழந்தையாக இருந்திருப்பாய் என்பதை நம்புவது கடினம்! விசித்திரமான பிறவி நீ. பிறக்கும்போதே பெரிய மனிதனாகப் பிறந்ததுபோல் இருக்கிறாய். உன் எண்ணங்களில் குழந்தைமையும் முதிர்ச்சியின்மையும் நிறைய இருக்கின்றன. ஆனால் வாழ்க்கையைப் பற்றி அளவுக்கு மேல் தெரிந்து வைத்திருக்கிறாய். வாழ்க்கையை விட ஒருவனிடம் செவிமடுக்க வேறென்ன இருக்க முடியும்? சரி, ஒரு கதை சொல்…”

அருகிலிருந்த பைன் மரத்தின் வெளிப்பட்ட வேர்கள்மீது வசதியாகச் சாய்ந்து படுத்துக்கொண்டார். உதிர்ந்த மங்கிய ஊசியிலைகளுக்கு ஊடே எறும்புகள் பரபரப்பாகத் திரிவதைப் பார்த்தவாறிருந்தார்.

வடக்குப் பனிப்பாலை நிலத்திலிருந்து வந்த மனிதனுக்கு, தெற்கின் பசுமை பொங்கும் இயற்கை விசித்திரமாகத் தோன்றும். தம் அழகைக் கூவிமுழக்கும் கொழிக்கும் பசுஞ்செடிகொடிகள்; கட்டுக்கடங்காத ஒளிர்பசுமை. அவற்றுக்கிடையே டால்ஸ்டாய் சின்னஞ்சிறிய மனிதராகத் தெரிந்தார். ஆனால் ஆழ நிலத்தில் ஓடும் வலுவான வேர்கள் பின்னி முடிச்சிடப் பிணைந்தவரைப் போன்ற உறுதி அவரிடம் இருந்தது. அவரது பெயரில்கூட அவரது உள்ளார்ந்த உறுதி ஒலிப்பதாகத் தோன்றும்.

கிரிமியாவின் வளங்கொழிக்கும் நிலக்காட்சியில் அவர் பொருந்தாமலும் அதேவேளை மிகச் சரியாகப் பொருந்தியும் இருந்தார். பண்டைக் காலத்தைச் சேர்ந்த மனிதர் அவர். சுற்றியிருப்பவை அனைத்துக்கும் அதிபதி. பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓர் அரண்மனையைக் கட்டிவிட்டு, இப்போது மீண்டும் அதற்குத் திரும்பிவந்த மகா சிற்பவினைஞனைப் போல. அரண்மனைக்குள் இருந்த பலவற்றை அவர் மறந்துவிட்டார்; பல புதிதாகத் தோன்றுகின்றன. எல்லாமே இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கின்றன. இருந்தும் ஏதோ ஒன்று சரியாக இல்லை. எது தவறு, ஏன் தவறு என்று உடனே கண்டறிய வேண்டியிருக்கிறது.

பூமியை நன்கு அறிந்த ஆய்வாளனின் விரைவான, உறுதியான காலடிகளோடு பாதைகளில் நடந்தார். அவரது கூரிய கண்களிலிருந்து ஒரு சிறு கல்லும் சிற்றுயிரும் தப்பாது; ஓர் எண்ணமும் தப்பாது. பார்த்தார், அளந்தார், சோதித்தார், ஒப்பிட்டார். திமிறும் எண்ணங்களின் உயிர்ப்புள்ள தீராவிதைகளைத் தன்னைச் சுற்றிலும் தூவிக்கொண்டே சென்றார்.

ஒருமுறை சுலேரிடம் இப்படிச் சொன்னார்:

“லியோவுஷ்கா, கனம் போதாத எந்த நூலையும் உன் தற்பெருமையால் நீ வாசிப்பதில்லை. கார்க்கியோ தன்னை நம்பாததால் நல்லதல்லாத நூல்களையும் நிறைய வாசிக்கிறான். நானும் நல்லதல்லாத பலவற்றை எழுதுகிறேன். அது கிழவனின் பேராசை; எல்லோரும் என்னைப்போலவே சிந்திக்க வேண்டும் என்ற ஆசை. நிச்சயமாக, நான் எழுதுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. கார்க்கிக்கோ அது நல்லதல்ல என்று தோன்றுகிறது. நீயோ எதையும் சிந்திப்பதில்லை. கண்களைச் சிமிட்டியபடி எதைப் பிடுங்கலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறாய்.

“ஒருநாள் உனக்கு உரியதல்லாத ஒன்றைப் பிடுங்குவாய். முன்பும் அப்படிச் செய்திருக்கிறாய். நகங்களை அதற்குள் பதித்துச் சற்று நேரம் பற்றிப் பிடித்திருப்பாய். அது உகிர் விட்டு நழுவுகையில் அதைத் தக்கவைக்கவும் முயல மாட்டாய். செகாவ் எழுதிய செல்லக்கண்ணே என்ற அருமையான கதை உனக்குத் தெரியுமல்லவா? அந்தக் கதையில் வரும் பெண்ணைப் போலத்தான் நீ.”

“எந்த குணத்தில்?” என்று சிரித்தபடி சுலேர் கேட்டான்.

“நேசிக்க உனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தேர்ந்தெடுக்கத் தெரியாது. சின்னஞ் சிறு பாடுகளிலேயே உன் ஆற்றலை வீணாக்கிக்கொள்வாய்.”

“எல்லோரும் அப்படித்தானா?”

“எல்லோருமா?” என்று லியோ திரும்பக் கேட்டார்.

“இல்லை. எல்லோரும் அல்ல.”

பிறகு, திடீரென வலி வந்தது போல், என்னை அடிப்பதுபோல் ஒரு வினாவை வீசினார்:

“நீ ஏன் கடவுளை நம்புவதில்லை?”

“எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, லியோ நிகொலாயெவிச்.”

“அது உண்மையல்ல. இயல்பாகவே நீ நம்பிக்கை கொண்டவன். கடவுள் இல்லாமல் உன்னால் இருக்க முடியாது. ஒருநாள் அதைப் புரிந்துகொள்வாய். உனக்கு நம்பிக்கை இல்லாதது உன் பிடிவாதத்தால்தான். நீ அடிபட்டுக் காயப்பட்டிருக்கிறாய். உலகம் நீ விரும்பியபடி இல்லை. அதனால்தான் நம்ப மறுக்கிறாய்.

சில மனிதர்கள் வெட்கத்தினால்கூட நம்பாமல் இருப்பார்கள். இளைஞர்களிடம் இது நடக்கும். ஒரு பெண்ணை ஆழமாக நேசிப்பார்கள். ஆனால் அவள் தங்கள் அன்பைப் புரிந்துகொள்ள மாட்டாளோ என்று பயப்படுவார்கள். அன்பை வெளிப்படுத்தத் துணிச்சலும் இருக்காது. அன்பைப் போலவே நம்பிக்கைக்கும் துணிபு தேவை. வினைமுனைப்பும் வேண்டும்.

“‘நான் நம்புகிறேன்’ என்று ஒருவன் தனக்குத்தானே உறுதி கொள்ள வேண்டும். பிறகு எல்லாம் சரியாகிவிடும். அவன் விரும்பியபடி உலகம் தோன்றும். அவனுக்குத் தானாகவே விளங்கும்: தன்னையும் உலகு ஈர்க்கும்.

“உனக்குத் தீவிரமாக நேசிக்கத் தெரிகிறது. நம்பிக்கை என்பது அதைவிடப் பெரிய அன்புதான். இன்னும் அதிகமாக நேசி. அப்போது உன் அன்பு நம்பிக்கையாக மாறும். ஒருவன் ஒரு பெண்ணை நேசிக்கும்போது அவள்தான் உலகிலேயே சிறந்த பெண் என்று அவனுக்குத் தோன்றும். ஒவ்வொருவனும் உலகின் மிகச் சிறந்த பெண்ணையே நேசிப்பதாக நினைக்கிறான். அதுதான் நம்பிக்கை.

“நம்பிக்கையில்லாத மனிதனால் நேசிக்க முடியாது. இன்று ஒரு பெண்ணைக் காதலிப்பான். அடுத்து இன்னொருத்தியை. அத்தகைய ஆசாமிகள் நாடோடிகள்; அவர்தம் வாழ்க்கை வறண்டது. அது நல்லதல்ல. ஆனால் நீ பிறப்பிலேயே நம்பிக்கை கொண்டவன். உன்னை நீயே மறித்துக் கொள்வதில் பயனில்லை.

“சரி, அழகைப் பற்றி என்ன சொல்வாய்? அழகு என்றால் என்ன? அதி உயர்ந்த, முற்ற முழுமையான அழகு கடவுள்தான்.”

இந்த விஷயத்தைப் பற்றி அவர் என்னிடம் ஏறத்தாழப் பேசவே மாட்டார். அன்று திடீரென்று இவ்வளவு தீவிரமாகப் பேசியது என்னைத் திகைக்க வைத்தது. நான் அமைதியாக இருந்தேன்.

கால்களை மடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார். வெற்றிக்களிப்புடன் ஒரு சிறு புன்னகை பூத்தார். என்னை நோக்கி விரலை ஆட்டியபடி சொன்னார்:

“அமைதியாக இருந்துவிட்டால் இதிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைக்காதே. அது முடியாது!”

கடவுளை நம்பாத நானோ, ஏனோ அவரை மிகுந்த எச்சரிக்கையுடனும் சற்றே அச்சத்துடனும் பார்த்தேன். பார்த்துக்கொண்டே நினைத்தேன்:

“இந்த மனிதர் கடவுளைப் போன்றவர்.”

தமிழில்: அ. ராஜேந்திரன்

மாக்சிம் கார்க்கி

மாக்சிம் கார்க்கி

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (1868 – 1936) ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றான தாய் நாவலை எழுதியவர்.

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

Font size
Line spacing
Background