இருபதாம் நூற்றாண்டின் உலக இலக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கும் அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே (1899–1961), தனது சிக்கனமான மொழிநடைக்கும் தனித்துவமான கதைசொல்லலுக்கும் பெயர்பெற்றவர். நவீன இலக்கியப் புனைவின் மொழியிலும் வடிவத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய அவரை, அவருடைய சொற்களிலேயே அறிந்துகொள்ள உதவும் விரிவான நேர்காணல் இது.
எழுத்தாளரும் The Paris Review இதழின் நிறுவன ஆசிரியர்களில் ஒருவருமான ஜார்ஜ் பிளிம்ப்டன் மேற்கொண்ட இந்த நேர்காணல், 1958ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் வெளியான அதன் 18ஆவது இதழில், The Art of Fiction No. 21 என்ற தலைப்பில் வெளியானது.
ஒரு கதையை எழுதத் தொடங்குவது எப்படி? எழுத்தை எப்போது நிறுத்த வேண்டும்? ஒரு நாவலின் கடைசிப் பக்கத்தை முப்பத்தொன்பது முறை திருத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது? வாழ்க்கையில் அறிந்தவற்றில் எதை எழுத வேண்டும், எதைச் சொல்லாமல் விட வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கு ஹெமிங்வே அளிக்கும் பதில்கள், படைப்பாக்க நுட்பங்களையும் எழுத்தின் பின்னாலிருக்கும் ஒழுங்கையும் உழைப்பையும் சுட்டுகின்றன.
குறிப்பாக, பனிப்பாறையின் பெரும்பகுதி நீருக்கடியில் மறைந்திருப்பதைப் போல, ஒரு புனைவிலும் எழுத்தாளர் அறிந்திருக்கும் பல விஷயங்கள் சொல்லப்படாமல் இருக்கலாம் என்ற அவரது விளக்கம் முக்கியமானது. ஆனால் தெரியாததால் ஒன்றை விட்டுவிடுவதற்கும், நன்றாகத் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே சொல்லாமல் விடுவதற்கும் இடையில் அவர் தெளிவான வேறுபாட்டைச் சுட்டுகிறார்.
எழுத்தாளரின் அனுபவம், கற்பனை, இலக்கிய முன்னோடிகள், அரசியல், கதைமாந்தர் உருவாக்கம், வாசகரின் பங்கு எனப் பல தளங்களை இந்த உரையாடல் தொட்டுச் செல்கிறது. பிளிம்ப்டனின் கேள்விகளுக்கு ஹெமிங்வே சில நேரங்களில் பொறுமையாகவும் சிலவேளை எரிச்சலாகவும் கிண்டலாகவும் பதிலளிக்கிறார். எழுத்தைப் பற்றிய எல்லாவற்றையும் விளக்கிவிட முடியும் என்று அவர் நம்பவில்லை.
இலக்கியக் கோட்பாடுகளை அலசும் உரையாடலாக மட்டுமல்லாமல், ஓர் எழுத்தாளர் தனது படைப்பாக்க அனுபவத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்பதாகவும் இதை வாசிக்கலாம்.
புனைவு என்பது நிகழ்ந்தவற்றை அப்படியே எழுதுவதல்ல; கற்பனையின் வழியாக அவற்றிலிருந்து புதியதொரு வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்குவது என்பது ஹெமிங்வேயின் நம்பிக்கை.
ஹெமிங்வே: நீங்கள் குதிரைப் பந்தயங்களுக்குச் செல்வதுண்டா?
பிளிம்ப்டன்: ஆம், எப்போதாவது.
ஹெமிங்வே: அப்படியானால் Racing Form வாசிப்பீர்கள்… உண்மையான புனைவுக்கலை அதில்தான் இருக்கிறது.
மாட்ரிட் நகரக் காபிக்கடையில் நிகழ்ந்த உரையாடல், மே 1954.
எர்னஸ்ட் ஹெமிங்வே, ஹவானாவின் புறநகரான சான் பிரான்சிஸ்கோ டி பவுலாவிலுள்ள தனது வீட்டின் படுக்கையறையில்தான் எழுதுகிறார். வீட்டின் தென்மேற்கு மூலையிலுள்ள சதுர மாடத்தில் அவர் எழுதுவதற்கென்று ஓர் அறை உள்ளது. ஆனாலும் படுக்கையறையில் எழுதுவதையே விரும்புகிறார். ‘கதைமாந்தர்’ (characters) அவரை அங்கே துரத்தும்போது மட்டுமே மாடத்து அறைக்குச் செல்கிறார்.
தரைத்தளத்திலுள்ள படுக்கையறை வீட்டின் பிரதான அறையுடன் இணைந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையிலுள்ள கதவு சிறிதளவு திறந்திருக்கும்படி, The World’s Aircraft Engines என்ற கனமான நூலை முட்டுக்கொடுத்திருக்கிறார்கள். உலகின் விமான இயந்திரங்களைப் பட்டியலிட்டு விவரிக்கும் நூல் அது. படுக்கையறை பெரியது. வெள்ளைச் சுவர்கள். இளமஞ்சள் ஓட்டுத் தரை. கிழக்கும் தெற்கும் நோக்கிய சன்னல்கள் பகலொளியைப் பரப்புகின்றன. நிறைய வெளிச்சம்.
எதிரெதிர்ச் சுவர்களிலிருந்து அறைக்குள் நீளும், மார்பளவு உயரமுள்ள இரண்டு புத்தக அடுக்குகள் அறையை இரண்டு தனிப் பகுதிகளாகப் பிரிக்கின்றன. ஒரு பகுதியில் பெரிய, தாழ்வான இரட்டைக் கட்டில் ஆக்கிரமித்திருக்கிறது. அதன் கால்மாட்டில் பெரிய செருப்புகளும் லோஃபர் காலணிகளும் ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன. தலைமாட்டிலுள்ள இரண்டு சிறு மேசைகளிலும் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மற்றப் பகுதியிலும் பெரிய மேசை ஒன்று. அதன் இருபுறமும் ஒவ்வொரு நாற்காலி. அதன் மேற்பரப்பில் காகிதங்களும் நினைவுப்பொருட்களும் குவிந்துள்ளன. அறை மூலையில் பீரோவின் மேல் சிறுத்தைத்தோல் விரிக்கப்பட்டிருக்கிறது. பிற சுவர்களையொட்டி வெள்ளைப் புத்தக அலமாரிகள் நிற்கின்றன. அவற்றில் இடம் போதாமல் நூல்கள் தரையிலும் கிடக்கின்றன. அலமாரிகளின் மேலே பழைய செய்தித்தாள்கள், காளைச்சண்டை இதழ்கள், ரப்பர் வளையங்கள் இறுக்கிய கடிதக் கட்டுகள் ஆகியவற்றுக்கு இடையிலும் புத்தகங்கள் குவிந்துள்ளன.
இப்படி நெரிசலாக இருக்கும் அலமாரிகளில் ஒன்றின் அருகில்தான் ஹெமிங்வேயின் ‘எழுதுமேசை’ இருக்கிறது. கிழக்குச் சன்னலுக்கு அருகிலுள்ள சுவரையொட்டி, அவரது படுக்கையிலிருந்து மூன்றடி தொலைவில் இருக்கும் அலமாரிஅது. கொள்ளளவு கொஞ்சம்தான். புத்தகங்கள் செய்தித்தாள்கள் காகிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், சிறு வெளியீடுகள் அங்கே நெருக்கியடித்துக் கிடக்கின்றன. ஒரு தட்டச்சு இயந்திரம், மர வாசிப்புப் பலகை, சில பென்சில்கள், செப்புக் கட்டி ஆகியவற்றுக்குத்தான் அலமாரியின் மேல் இடமிருக்கிறது. கிழக்குச் சன்னலிலிருந்து காற்று வீசும்போது காகிதங்கள் பறக்காமல் இருக்க அந்தத் உலோகக் கட்டி.
ஹெமிங்வே தொடக்கத்திலிருந்தே நின்றுகொண்டு எழுதிப் பழகியவர். பெரிய லோஃபர் காலணிகளை அணிந்தபடி, தேய்ந்துபோன மான் தோல்மீது நிற்கிறார். தட்டச்சு இயந்திரமும் வாசிப்புப் பலகையும் எதிரே மார்பளவு உயரத்தில் இருக்கின்றன.
புதிய படைப்பைத் தொடங்கும்போது எப்போதும் பென்சிலையே பயன்படுத்துகிறார். வெங்காயத்தோல் போல மெல்லிய தட்டச்சுத் தாளை வாசிப்புப் பலகையின்மீது வைத்து எழுதுகிறார். தட்டச்சு இயந்திரத்தின் இடப்புறமுள்ள கிளிப் பொருத்திய பலகையில் வெற்றுத்தாள்களின் கற்றை இருக்கிறது. “இதைக் காசு கொடுத்து வாங்க வேண்டும்” என்று உலோகக் கிளிப்பின் அடியிலிருந்து ஒவ்வொரு தாளாக உருவுகிறார். தாளைப் பலகையின்மீது சாய்வாக வைத்து, இடது முன்கையைப் பலகையில் ஊன்றி, கையால் தாளைப் பிடித்துக்கொண்டு எழுதுகிறார். ஆண்டுகள் செல்லச் செல்ல அவரது கையெழுத்து பெரிதாகவும் சிறுவனின் கையெழுத்தைப் போலவும் மாறியிருக்கிறது. நிறுத்தக்குறிகள் குறைவு; ஆங்கிலப் பேரெழுத்துகள் மிகக் குறைவு. முற்றுப்புள்ளிக்குப் பதிலாகப் பெரும்பாலும் ‘X’ குறியையே இடுகிறார். பக்கத்தை எழுதி முடித்ததும், எழுதிய பக்கம் கீழிருக்கும்படி திருப்பி, தட்டச்சு இயந்திரத்தின் வலப்புறமுள்ள மற்றொரு பலகையில் கிளிப் மாட்டி வைக்கிறார்.
எழுத்து வேகமாக, நன்றாகச் செல்லும்போது, அல்லது உரையாடல்களைப் போன்ற, தனக்கு எளிதாகக் கைவரும் பகுதிகளை எழுதும்போதுதான் எழுதுபலகையை விட்டுத் தட்டச்சு இயந்திரத்திற்கு மாறுகிறார்.
“என்னையே நான் ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்க” தினமும் எழுதிய சொற்களின் எண்ணிக்கையைக் குறித்து வைக்கிறார். ஓர் அட்டைப் பெட்டியின் பக்கவாட்டில் வெட்டிய பெரிய அட்டையில் இந்தக் கணக்கு இருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் கலைமான் தலைக்குக் கீழே, அந்த அட்டை சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. மான் மூக்கிற்கு அடியில் நாள்தோறும் எண்ணிக்கைகள் 450, 575, 462, 1250 மீண்டும் 512 என்று மாறுகின்றன. மறுநாள் கல்ஃப் ஸ்ட்ரீம் நீரோட்டப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லவிருந்தால், தாழ்வுணர்வு வராமலிருக்க அன்று கூடுதலாக எழுதுகிறார். அந் நாட்களில் சொற்கள் கூடுகின்றன.
தன் வழக்கங்களை மாற்றிக்கொள்ளாத ஹெமிங்வே, அந்த அறையிலுள்ள வசதியான மேசையைப் பயன்படுத்துவதில்லை. அங்கே எழுதுவதற்கு அதிக இடம் இருந்தாலும், அதிலும் பலவிதப் பொருட்கள் இருக்கின்றன: கடிதக் கட்டுகள், பஞ்சடைக்கப்பட்ட சிங்கப் பொம்மை, ஊனுண்ணி விலங்குகளின் பற்கள் பொதிந்த சிறிய சணல் பை; வேட்டைத் துப்பாக்கித் தோட்டாக்கள்; சிங்கம், காண்டாமிருகம், இரண்டு வரிக்குதிரைகள், மருப்புள்ள காட்டுப்பன்றி ஆகியவற்றின் மரச்சிற்பங்கள். இந்த மரச்சிற்பங்கள் மேசையில் நிரலாக நேர்த்தியாக நிற்கின்றன. இவற்றுடன், வழக்கம்போலப் புத்தகங்களும். நாவல்கள், வரலாற்று நூல்கள், கவிதைத் தொகுப்புகள், நாடகங்கள், கட்டுரைகள் என அவை மேசை மீதும் சிறு மேசைகளின் அருகிலும் குவிந்தும், அலமாரிகளில் வகை பிரிக்கப்படாமல் நெருக்கியடித்தும் கிடக்கின்றன.
தலைப்புகளைப் பார்த்தாலே அவற்றின் பல்வகைமை தெரிகிறது. ‘எழுதுமேசை’ முன் அவர் நிற்கும்போது, முழங்காலுக்கு எதிரே உள்ள அடுக்கில் வர்ஜீனியா வுல்ஃபின் The Common Reader, பென் ஏம்ஸ் வில்லியம்ஸின் House Divided, The Partisan Reader, சார்ல்ஸ் ஏ. பியர்டின் The Republic, தார்லேவின் Napoleon’s Invasion of Russia, பெக்கி வுட்டின் How Young You Look, ஆல்டன் புரூக்ஸின் Shakespeare and the Dyer’s Hand, பால்ட்வினின் African Hunting, டி. எஸ். எலியட்டின் Collected Poems, லிட்டில் பிக் ஹார்ன் போரில் ஜெனரல் கஸ்டரின் வீழ்ச்சி பற்றிய இரண்டு நூல்கள்…
முதல் பார்வையில் அறை ஒழுங்கற்றதாகத் தோன்றலாம். உற்றுப் பார்த்தால், அதன் உரிமையாளர் அடிப்படையில் ஒழுங்கானவர்; ஆனால் எதையும், குறிப்பாக நினைவுகளுடன் ஒன்றிய எதையும், தூக்கி எறிய மனமில்லாதவர் என்பது தெரிகிறது. ஓர் அலமாரியின் மேல் பலவிதமான நினைவுப்பொருட்கள் குவிந்திருக்கின்றன: மரமணிகளால் செய்த ஒட்டகச்சிவிங்கி, சிறிய வார்ப்பிரும்பு ஆமை, ரயில் எஞ்சின் மாதிரிகள், இரண்டு ஜீப்புகள், வெனிஸ் கொண்டோலா படகு, முதுகில் சாவியுடன் கரடிப் பொம்மை, இரண்டு தாளங்களை ஏந்திய குரங்கு, சிறிய கிட்டார். அமெரிக்கக் கடற்படையின் இரட்டை இறக்கை விமானத்தைப் போன்ற தகரப் பொம்மை வட்டமான வைக்கோல் விரிப்பின்மீது கோணலாய்ச் சாய்ந்து கிடக்கிறது. அதற்கு ஒரு சக்கரம் இல்லை. சிறுவன் ஒருவனின் அலமாரிக்குப் பின்னால் இருக்கும் காலணிப் பெட்டியைத் திறந்தால் கிடைக்கும் சில்லறைப் பொருட்களை இந்தச் சேகரிப்பு நினைவூட்டுகிறது.
ஆனாலும் இவை அவருக்கு மதிப்புள்ளவை. படுக்கையறையில் வைத்திருக்கும் மூன்று எருமைக் கொம்புகளும் அவருக்கு இப்படித்தான் நெருக்கமானவை. அவை பெரியவை என்பது காரணமல்ல. அந்தக் கொம்புகளைப் பிடுங்கக் காட்டில் மேற்கொண்ட முயற்சியில் நிலைமை மோசமாகி, கடைசியில் நல்லபடியாக முடிந்ததுதான் காரணம். “இவற்றைப் பார்த்தால் எனக்கு உற்சாகமாக இருக்கிறது” என்கிறார்.
இத்தகைய மூடநம்பிக்கைகள் தனக்கு இருப்பதை ஹெமிங்வே ஒப்புக்கொள்ளக்கூடும். ஆனால் அவற்றைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால், அதன் மதிப்பு போய்விடும் என்று நினைக்கிறார். எழுத்தைப் பற்றியும் கிட்டத்தட்ட இதே மனநிலைதான். அளவுக்கு மீறி ஆராய்ந்து எழுத்துக்கலையைக் குலைத்துவிடக் கூடாது என்று இந்த நேர்காணலின்போது பலமுறை வலியுறுத்தினார்:
“எழுத்தில் உறுதியான ஒரு பகுதி இருக்கிறது; அதைப் பற்றிப் பேசுவதால் தீங்கில்லை. ஆனால் மற்றொரு பகுதி நொய்மையானது. அதைப் பற்றிப் பேசினால் கட்டமைப்பு விரிசலடையும்; உங்களிடம் எதுவும் எஞ்சாது.”
சுவையாகக் கதைசொல்லும் திறனும் வளமான நகைச்சுவை உணர்வும் கொண்டவர் ஹெமிங்வே. தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் வியக்கத்தக்க அளவு அறிந்துவைத்திருக்கிறார். இருந்தாலும் எழுத்தைப் பற்றிப் பேசுவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. அதைப் பற்றிய கருத்துகள் அவரிடம் குறைவு என்பதல்ல காரணம். அவற்றை வெளிப்படுத்தக் கூடாது என்று அவர் உறுதியாக நம்புகிறார். அவற்றைப் பற்றிக் கேள்விகள் கேட்டால் ‘மிரண்டுவிடுகிறார்.’ அவருக்குப் பிடித்த சொற்களில் ஒன்று அது. கிட்டத்தட்டப் பேசவே முடியாத நிலைக்குச் சென்றுவிடுகிறார். இந்த நேர்காணலின் பல பதில்களைத் தனது பலகையிலேயே வைத்து எழுதித் தர விரும்பினார். எழுத்து என்பது தனிமையில் மேற்கொள்ளும் அந்தரங்கமான பணி; படைப்பு முடிவதற்கு முன் அதற்குச் சாட்சிகள் தேவையில்லை என்று அவர் தீவிரமாக உணர்கிறார். பதில்களில் அவ்வப்போது தெரியும் சிடுசிடுப்பும் இந்த உணர்வின் வெளிப்பாடுதான்.
தனது கலைக்கு அவர் காட்டும் இந்த அர்ப்பணிப்பு, வாசக மனத்தில் படிந்திருக்கும் ஹெமிங்வேயின் பிம்பத்திற்கு மாறாகத் தோன்றலாம்., கவலையின்றி உல்லாசமாக உலகைச் சுற்றிக் களிக்கும் மனிதர் என்பதே அந்தப் பிம்பம். உண்மையில், வாழ்க்கையை வெளிப்படையாக ரசிக்கும் ஹெமிங்வே, தான் செய்யும் எல்லாவற்றிலும் இதே அளவு அர்ப்பணிப்பைக் காட்டுகிறார். மோசடி, ஏமாற்று, அரைகுறை முயற்சி, நேர்த்தியின்மை ஆகியவற்றை வெறுக்கும், எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை அது.
இளமஞ்சள் ஓடுகள் பதித்த இந்தப் படுக்கையறையில்தான் தனது கலைக்கு அவர் காட்டும் அர்ப்பணிப்பு மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதிகாலையில் எழுந்து, முழுக் கவனத்துடன் எழுதுபலகையின் முன் நிற்கிறார். ஒரு காலிலிருந்து மற்றொரு காலுக்குத் தன் எடையை மாற்றுவது மட்டுமே அசைவு. எழுத்து வேகமாகச் செல்லும்போது வியர்த்துக் கொட்டுகிறது; சிறுவனைப் போல உற்சாகமடைகிறார். எழுத்தின் கலைத்திறன் கணநேரம் கைகூடாமல் போனாலும் பதற்றமடைகிறார். போதாமையை உணர்கிறார். தனக்குத்தானே விதித்த ஒழுங்கின் வேலிக்குள் நண்பகல் வரை நிற்கிறார். பின்னர் முண்டுகள் தழும்பாகிய மரக் கைக்கோலை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார். அன்றாடம் அரை மைல் நீந்தும் நீச்சல் குளத்தை நோக்கிச் செல்கிறார்.
பிளிம்ப்டன்: எழுதிக்கொண்டிருக்கும் அந்த நேரம் உங்களுக்கு உவப்பாக இருக்கிறதா?
ஹெமிங்வே: மிகவும்.
எழுதும் முறையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? எப்போது எழுதுவீர்கள்? குறித்த நேரத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கிறீர்களா?
ஒரு நூலையோ கதையையோ எழுதிக்கொண்டிருக்கும்போது, தினமும் விடிந்ததும் இயன்றவரை சீக்கிரமாக எழுதத் தொடங்குவேன். தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். குளிர் குளுமையாக இருக்கும். எழுத எழுத உடல் கதகதப்பாகிவிடும். ஏற்கெனவே எழுதியதை வாசிப்பேன். அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்த இடத்தில்தான் எப்போதும் நிறுத்தியிருப்பேன் என்பதால், அங்கிருந்து தொடர்வேன்.
எழுதும் தெம்பு இன்னும் எஞ்சியிருக்கும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்த ஓரிடத்தில் நிறுத்திக்கொள்வேன். மறுநாள் அதை மீண்டும் தொடங்கும்வரை இடைப்பட்ட நேரத்தைக் கடந்துசெல்ல முயல்வேன். காலை ஆறு மணிக்குத் தொடங்கினேன் என்று வைத்துக்கொள்வோம். நண்பகல் வரை எழுதலாம்; அதற்கு முன்பே கூட முடித்துவிடலாம். நிறுத்தும்போது வெறுமையாக இருக்கும். அதேவேளை வெறுமையே இல்லாமல் ததும்பிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும். நேசிக்கும் ஒருவருடன் கலவிக்குப் பின் ஏற்படும் உணர்வைப் போல. எதுவும் இடர் படுத்தாது. எதுவும் நேர்ந்துவிடாது. மறுநாள் மீண்டும் எழுதும்வரை வேறெதற்கும் பொருளில்லை. மறுநாள் வரை காத்திருப்பதுதான் கடினம்.
நிச்சயமாக. ஆனால் அதற்குச் சுயகட்டுப்பாடு வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டைப் பயிற்சியால் பெற வேண்டும். பெற்றே ஆக வேண்டும்.
முந்தைய நாள் நிறுத்திய இடம் வரை வாசிக்கும்போது திருத்தி எழுதுவீர்களா? அல்லது முழுப் படைப்பும் முடிந்த பிறகுதான் அதைச் செய்வீர்களா?
ஒவ்வொரு நாளும், முந்தைய நாள் நிறுத்திய இடம் வரை திருத்தி எழுதுவேன். எல்லாம் முடிந்த பிறகு, இயல்பாகவே முழுவதையும் மீண்டும் பார்ப்பேன். வேறொருவர் தட்டச்சு செய்த சீரான பிரதியைப் பார்க்கும்போது திருத்தவும் மீண்டும் எழுதவும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது. கடைசி வாய்ப்பு அச்சு மெய்ப்பு திருத்துகையில் கிடைக்கும். இப்படிக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்கும் நன்றியோடு இருப்பேன்.
எந்த அளவு வரை திருத்தி எழுதுவீர்கள்?
அது படைப்பைப் பொறுத்தது. Farewell to Arms நாவலின் முடிவை, அதன் கடைசிப் பக்கத்தை, எனக்குத் திருப்தி வரும்வரை முப்பத்தொன்பது முறை திருத்தி எழுதினேன்.
அங்கே எழுத்தில் உத்தி சார்ந்த சிக்கல் ஏதும் இருந்ததா? எது உங்களைத் திணறடித்தது?
சொற்கள் சரியாக அமைவதுதான்.
மீண்டும் வாசிப்பதுதான் அந்த ‘எழுதும் தெம்பை’ உந்துகிறதா?
மீண்டும் வாசிக்கும்போது, அதுவரை இயன்ற அளவுக்கு நன்றாக எழுதியிருக்கிறேன் என்பது தெரிகிறது. இனி தொடர்ந்து எழுதித்தான் ஆக வேண்டும் என்ற இடத்திற்கு அது கொண்டுவந்து நிறுத்துகிறது. எழுதும் உந்துதல் எப்போதும் இருக்கும்.
படைப்பூக்கமே இல்லாத நேரங்களும் உண்டா?
நிச்சயமாக உண்டு. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்த இடத்தில் நிறுத்தியிருந்தால், உங்களால் தொடர முடியும். தொடங்கி விட்டால் பிரச்சனையில்லை. தெம்பு வந்துவிடும்.
எழுத்தாளர் அன்றைய வேலையைத் தொடங்க உதவும் நினைவூட்டல் உத்திகளைப் பற்றி தோர்ன்டன் வைல்டர் பேசுகிறார். இருபது பென்சில்களைச் சீவி வைப்பதாக ஒருமுறை நீங்கள் அவரிடம் சொன்னீர்களாம்.
இருபது பென்சில்களை நான் வைத்திருந்ததாகவே நினைவில்லை. இரண்டாம் நம்பர் பென்சில்கள் ஏழை எழுதித் தேய்த்தால், அன்றைக்கு நன்றாக உழைத்திருக்கிறோம் என்று சொல்லலாம்.
எழுதுவதற்கு மிகவும் ஏற்றதாக நீங்கள் கண்ட இடங்கள் எவை? அங்கு நீங்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், ஆம்போஸ் முண்டோஸ் விடுதி அவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும். அல்லது சுற்றுப்புறம் எழுத்தில் அவ்வளவாகத் தாக்கம் ஏற்படுத்துவதில்லையா?
ஹவானாவிலுள்ள ஆம்போஸ் முண்டோஸ் எழுதுவதற்கு மிக நல்ல இடம். அந்த ஃபிங்கா பண்ணை இல்லம் அருமையான இடம். அல்லது முன்னர் அப்படியிருந்தது. ஆனால் எல்லா இடங்களிலும் நன்றாக எழுதியிருக்கிறேன். அதாவது, வெவ்வேறு சூழல்களில் என்னால் இயன்ற அளவுக்கு நன்றாக எழுத முடிந்திருக்கிறது. தொலைபேசியும் வருகையாளர்களும்தான் வேலையைக் கெடுப்பவை.
நன்றாக எழுத மனம் சமநிலையில் இருப்பது அவசியமா? காதலில் இருக்கும்போதுதான் உங்களால் நன்றாக எழுத முடியும் என்று ஒருமுறை என்னிடம் சொன்னீர்கள். அதை இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?
என்ன ஒரு கேள்வி. இருந்தாலும் முயற்சி செய்ததற்கு முழு மதிப்பெண்கள். மற்றவர்கள் உங்களைத் தனியாக விட்டுவிட்டால் எந்த நேரத்திலும் எழுதலாம். இன்னும் சரியாகச் சொன்னால், யாரும் இடையூறு செய்யாதபடி இரக்கமின்றிக் கண்டிப்பாக நடந்துகொள்ள முடிந்தால் எழுதலாம்.
ஆனால் மிகச் சிறந்த எழுத்து நிச்சயமாக காதலில் இருக்கும்போதுதான் வருகிறது. உங்களுக்குச் சம்மதம் என்றால், அதைப் பற்றி மேலும் விளக்காமல் இருக்க விரும்புகிறேன்.
பொருளாதாரப் பின்புலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது நல்ல எழுத்துக்குப் பாதிப்பாக இருக்குமா?
இளமையிலேயே பொருளாதாரப் பாதுகாப்பு கிடைத்துவிட்டால், எழுத்தை நேசிக்கும் அளவுக்கு வாழ்க்கையையும் நேசிக்கலாம். அது தரும் கவர்ச்சியான வசதிகள் தேவைப்படும். எழுத்தே உங்களுடைய முதன்மையான பழக்கமாகவும் பேரின்பம் தருவதாகவும் மாறிவிட்டால், மரணத்தால் மட்டுமே அதை நிறுத்த முடியும். அப்போது பொருளாதாரப் பாதுகாப்பு பெரிதும் உதவும்; அது உங்களை அன்றாடக் கவலையிலிருந்து காக்கிறது. கவலை எழுதும் திறனை மழுங்கடிக்கிறது. உடல்நலிவு எந்த அளவுக்கு மனவேதனை ஏற்படுத்துகிறதோ, அந்த அளவுக்கு எழுத்துக்கும் தீங்கு விளைவிக்கிறது. துயர் ஆழ்மனதைத் தாக்கி, உள்ளுக்குள் ஊறும் ஆற்றலை அழிக்கிறது.
எழுத்தாளராக வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்த குறிப்பிட்ட தருணம் நினைவிருக்கிறதா?
இல்லை. எழுத்தாளராக எப்போதுமே விரும்பியிருந்தேன்.
1918இல் மோர்ட்டார் குண்டால் உங்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயத்தின் அதிர்ச்சி, எழுத்தாளராக உங்களை ஆழமாகப் பாதித்தது என்று ஃபிலிப் யங் உங்களைப் பற்றிய நூலில் கூறுகிறார். மாட்ரிட்டில் அவரது இந்தக் கருத்தைப் பற்றி நீங்கள் சுருக்கமாகப் பேசியது நினைவிருக்கிறது. அதில் அதிகம் பொருளில்லை என்று கூறிவிட்டு, கலைஞனின் ஆற்றல் பின்னாளில் வளர்த்துக்கொள்ளும் பண்பல்ல, மெண்டல் கூறியபடி மரபுவழியில் வருவது என்று நீங்கள் கருதுவதாகச் சொன்னீர்கள்.
அந்த ஆண்டு மாட்ரிட்டில் என் மனநிலை மிகவும் சரியாக இருந்தது என்று சொல்ல முடியாது. யங்கின் நூலைப் பற்றியும், இலக்கியத்தை மனஅதிர்ச்சியால் விளக்கும் அவரது கோட்பாட்டைப் பற்றியும் சுருக்கமாக மட்டுமே பேசினேன். அந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டு மூளை அதிர்ச்சிகளும், மண்டையோட்டு உடைவும் என் பேச்சைப் பொறுப்பற்றதாக ஆக்கியிருக்கலாம். ஓர் இனத்தின் அனுபவம் மரபுவழியாகக் கடத்தப்படுவதிலிருந்து கற்பனை தோன்றலாம் என்று உங்களிடம் சொன்னது நினைவிருக்கிறது. மூளை அதிர்ச்சிக்குப் பின் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அப்படிச் சொல்வது நன்றாகத் தோன்றலாம். ஆனால் அதை அங்கேயே கைவிடுவதுதான் சரி என்று நினைக்கிறேன். ஆகவே, ‘விடுதலை தரும் அடுத்த அதிர்ச்சி’ வரும்வரை அதை அங்கேயே விட்டுவிடுவோம். சரிதானே!
இதில் நான் இழுத்துவிட்ட உறவினர்களின் பெயர்களை நீக்கியதற்கு நன்றி. கருத்துகளை அலசிப் பார்ப்பதுதான் உரையாடலின் சுவாரசியம். ஆனால் அப்படிப் பேசுவதில் பெரும்பகுதியை எழுத்தில் ஏற்றக் கூடாது. பொறுப்பில்லாமல் சொல்லும் எதையும் எழுதக் கூடாது. எழுதிவிட்டால் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும். தானே அதை நம்புகிறேனா என்று உறுதிப் படுத்துவதற்காகக்கூட அதைச் சொல்லியிருக்கலாம்.
உங்கள் கேள்விக்கு வருவோம். காயங்களின் விளைவுகள் வேறுபட்டவை. எலும்பு முறிவில்லாத சாதாரணக் காயங்கள் அவ்வளவு பொருட்டல்ல. சில சமயம் நம்பிக்கையைக்கூடத் தரும். எலும்புகளையும் நரம்புகளையும் அதிக சேதப்படுத்தும் காயங்கள் எழுத்தாளர்களுக்கும் சரி, வேறு யாருக்கும் சரி, நல்லதல்ல.
எழுத்தாளராக விரும்புகிறவருக்கு மிகச் சிறந்த அறிவுப் பயிற்சி எது என்று நினைக்கிறீர்கள்?
நன்றாக எழுத முடியவில்லை. அது மிகக் கடினம் என்று உணர்ந்து, அவர் தூக்கில் தொங்கப் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். பிறகு இரக்கம் காட்டாமல் அவர் தன்னைக் கீழே இறக்கித் தப்பிக்க வேண்டும். எஞ்சிய வாழ்நாளெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு நன்றாக எழுத முனைய வேண்டும். அவர் தன்னையே ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் தொடங்குவதற்குத் தூக்கில் தொங்க முயன்ற கதையாவது அவரிடம் இருக்கும்.
கல்விப்பணிக்குச் சென்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆசிரியப் பணியிலிருக்கும் ஏராளமான எழுத்தாளர்கள் தங்கள் இலக்கிய வாழ்க்கையில் சமரசம் செய்துகொண்டார்களா?
‘சமரசம்’ என்று எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு பெண்ணின் நற்பெயர் கெட்டுவிட்டது என்ற பொருளிலும் அந்த ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார்களே, அதுவா? அரசியல்வாதி செய்துகொள்ளும் சமரசமா? அல்லது மளிகைக் கடைக்காரரிடமோ தையல்காரரிடமோ, கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கிறேன், ஆனால் பிறகு கொடுக்கிறேன் என்று செய்துகொள்ளும் சமரசமா?
எழுதுவதற்கும் கற்பிப்பதற்கும் ஆற்றலுள்ள எழுத்தாளரால் இரண்டையும் செய்ய முடியும். திறமையான எழுத்தாளர்கள் பலர் அதைச் செய்திருக்கிறார்கள். என்னால் முடியாது என்பது எனக்குத் தெரியும். செய்ய முடிந்தவர்களை மதிக்கிறேன். இருந்தாலும், கல்விப்புல வாழ்க்கை வெளியுலக அனுபவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்றும், அதனால் உலகைப் பற்றிய அறிவு விரிவடையாமல் போகலாம் என்றும் நினைக்கிறேன். ஆனால் அறிவு செறியும்போது எழுத்தாளரின் பொறுப்பும் அதிகரிக்கிறது; எழுதுவது மேலும் கடினமாகிறது.
நிலைத்த மதிப்புள்ள ஒன்றை எழுத முயல்வது முழுநேர வேலைதான். உண்மையில் எழுதுவதற்குச் சில மணிநேரங்கள் மட்டுமே செலவானாலும் அப்படித்தான். எழுத்தாளரை ஒரு கிணற்றுடன் ஒப்பிடலாம். எழுத்தாளர்கள் எத்தனை வகையோ கிணறுகளும் அத்தனை வகை. கிணற்றில் நல்ல தண்ணீர் இருப்பதுதான் முக்கியம். அதை வற்ற இறைத்துவிட்டு மீண்டும் நிரம்பக் காத்திருப்பதைவிட, போதுமான அளவு நீரை எடுத்துக்கொள்வது நல்லது. கேள்வியிலிருந்து விலகிவிட்டேன். ஆனால் கேள்வி அவ்வளவு சுவாரசியமானதல்ல.
இளம் எழுத்தாளருக்குச் செய்தித்தாள் பணியைப் பரிந்துரைப்பீர்களா?Kansas City Starஇதழில் உங்களுக்குக் கிடைத்த பயிற்சி எவ்வளவு உதவியது?
Star இதழில், ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்லும் எளிய வாக்கியத்தை எழுதக் கற்றாக வேண்டும். அதுவே அனைவருக்கும் பயன் தரும். செய்தித்தாள் பணி இளம் எழுத்தாளருக்குத் தீங்கு செய்யாது; சரியான நேரத்தில் அதிலிருந்து வெளியேறினால் உதவவும் செய்யும். சொல்லிச் சொல்லிப் புளித்துப்போன அறிவுரைகளில் இதுவும் ஒன்று. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால் பழைய, இற்றுப்போன கேள்விகளைக் கேட்டால், சலிப்பான பதில்கள்தான் கிடைக்கும்.
பத்திரிகை எழுத்தில் ஈடுபடுவதற்கான ஒரே காரணம் நல்ல ஊதியம் பெறுவதுதான் என்று ஒருமுறைTransatlantic Reviewஇதழில் எழுதினீர்கள். “உங்களிடமுள்ள மதிப்புமிக்கவற்றைப் பற்றி எழுதுவதால், அவற்றை உங்களிலிருந்து போக்கும்போது, அதற்குப் பெரிய தொகை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்” என்றீர்கள். எழுதுவதை ஒரு வகையான சுயஅழிவாகக் கருதுகிறீர்களா?
அப்படி எழுதியதாக நினைவில்லை. விவேகமான பதிலொன்றைச் சிரமப்பட்டுச் சொல்வதைத் தவிர்க்க நான் இப்படி ஏதாவது சொல்லியிருக்கக்கூடும். அக்கூற்று அந்த அளவுக்கு முட்டாள்தனமாகவும் மூர்க்கமாகவும் இருக்கிறது. எழுதுவதைச் சுயஅழிவாக நான் நிச்சயமாகக் கருதவில்லை. இருந்தாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு பத்திரிகை எழுத்து, தீவிரமான படைப்பெழுத்தாளருக்கு நாள்தோறும் நிகழும் சுயஅழிவாக மாறலாம்.
மற்ற எழுத்தாளர்களின் நட்பு தரும் அறிவுத் தூண்டுதல் ஓர் எழுத்தாளருக்கு உதவுமா?
நிச்சயமாக.
1920களின் பாரிஸில் மற்ற எழுத்தாளர்களுடனும் கலைஞர்களுடனும் பழகியபோது ஒரு ‘குழு உணர்வு’ இருந்ததா?
இல்லை. குழு உணர்வு இல்லை. ஒருவரையொருவர் மதித்தோம். பல ஓவியர்களை மதித்தேன். கிரிஸ், பிக்காசோ, பிராக், மோனே என அவர்களில் சிலர் என் வயதினர்; சிலர் மூத்தவர்கள். மோனே அப்போது உயிரோடிருந்தார். ஜாய்ஸ், எஸ்ரா பவுண்ட் போன்ற சில எழுத்தாளர்களையும், கெர்ட்ரூட் ஸ்டெய்னிடம் இருந்த நல்ல அம்சங்களையும் மதித்தேன்.
எழுதிக்கொண்டிருக்கும்போது, அந்தச் சமயத்தில் வாசிப்பவை உங்கள் எழுத்தைப் பாதிப்பதுண்டா?
ஜாய்ஸ் Ulysses எழுதிக்கொண்டிருந்த காலத்திற்குப் பிறகு அப்படி இல்லை. அவரது தாக்கமும் நேரடியானதல்ல. நமக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்துவதில் இடர் இருந்தது; ஒவ்வொரு சொல்லுக்காகவும் போராட வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எல்லாவற்றையும் மாற்றியது அவரது படைப்பின் தாக்கம்தான். கட்டுப்பாடுகளை உடைத்து வெளியேற அது வழிகாட்டியது.
மற்ற எழுத்தாளர்களிடமிருந்து எழுத்தைப் பற்றி ஏதாவது கற்றுக்கொள்ள முடிந்ததா? உதாரணமாக, ஜாய்ஸுக்கு எழுத்தைப் பற்றிப் பேசுவது பிடிக்காது என்று நேற்று சொன்னீர்கள்.
எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்களுடன் இருக்கும்போது பொதுவாக மற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் பற்றிப் பேசுவார்கள். ஓர் எழுத்தாளர் எவ்வளவு சிறந்தவரோ, அவ்வளவு குறைவாகவே தான் எழுதியதைப் பற்றிப் பேசுவார். ஜாய்ஸ் மகத்தான எழுத்தாளர். தான் செய்வதை முட்டாள்களுக்குத்தான் விளக்குவார். அவர் மதித்த மற்ற எழுத்தாளர்கள், அவர் எழுதியதை வாசித்தே புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
அண்மைக் காலமாக மற்ற எழுத்தாளர்களின் நட்புவட்டத்திலிருந்து நீங்கள் விலகியிருப்பதாகத் தெரிகிறது. ஏன்?
அதற்கான காரணம் சற்று சிக்கலானது. எழுத்தில் முன்னேற முன்னேறத் தனிமை அதிகரிக்கிறது. பழைய நண்பர்களில் பெரும்பாலோர் இறந்துவிட்டார்கள். மற்றவர்கள் தூரமாகச் சென்றுவிடுகிறார்கள். அரிதாகத்தான் அவர்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் கடிதம் எழுதுவதுண்டு. பழைய நாட்களில் காபிக்கடையில் ஒன்றாக இருந்ததுபோலவே நட்பு தொடர்கிறது. நகைச்சுவையான கடிதங்களைப் பரிமாறிக்கொள்வோம்; சில சமயம் உற்சாகமாக, சில சமயம் ஆபாசமும் பொறுப்பற்ற பேச்சுமாகக் கலந்து கட்டியிருக்கும். அது கிட்டத்தட்ட நேரில் பேசுவது போலத்தான்.
இருந்தாலும் தனிமை அதிகமாகிறது. ஏனென்றால் தனிமையில்தான் எழுதியாக வேண்டும். கிடைக்கும் நேரமும் குறைந்துகொண்டே வருகிறது. அதை வீணாக்கிவிட்டால், மன்னிப்பே இல்லாத பாவத்தைச் செய்த உணர்வு.
உங்கள் சமகாலத்தவர்களான இவர்களில் சிலரின் தாக்கம் உங்கள் படைப்பில் எப்படி இருந்தது? ஏதாவது இருக்குமானால் கெர்ட்ரூட் ஸ்டெய்னின் பாதிப்பு என்ன? எஸ்ரா பவுண்டின், மேக்ஸ் பெர்க்கின்ஸின் பாதிப்பு?
மன்னிக்கவும். இந்தப் பிரேதப் பரிசோதனைகளில் நான் வல்லவனல்ல. இதையெல்லாம் கவனிக்க இலக்கியப் புலத்திலும் அதற்கு வெளியேயும் மரண விசாரணை அதிகாரிகள் இருக்கிறார்கள். என் எழுத்தில் தனது தாக்கம் பற்றி ஸ்டெய்ன் நீளமாகவும் கணிசமான தவறுகளுடனும் எழுதியிருக்கிறார். The Sun Also Rises என்ற எனது நூல் வந்த பிறகு, உரையாடல் எழுதக் கற்றுக்கொண்ட பிறகு, அவர் அப்படிச் சொல்கிறார். அவரிடம் மிகுந்த அன்பு பாராட்டினேன். உரையாடல் எழுத அவரிடம் கற்றுக்கொண்டது அருமை என்று நினைத்தேன். உயிரோடிருப்பவரோ இறந்தவரோ, யாரிடமிருந்து முடியுமோ அவரிடமிருந்து கற்றுக்கொள்வது எனக்குப் புதிதல்ல. அது கெர்ட்ரூட்டை அவ்வளவு கடுமையாகப் பாதிக்கும் என்று எனக்குத் தெரியாது. மற்றபடி அவர் ஏற்கெனவே நன்றாக எழுதியவர். எஸ்ரா தனக்கு உண்மையிலேயே தெரிந்த விஷயங்களில் மிகுந்த அறிவுக்கூர்மை கொண்டவர்.
இந்தப் பேச்சு உங்களுக்குச் சலிப்பாக இல்லையா? முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய அழுக்குத் துணிகளைத் துவைத்துக்கொண்டு, வீட்டின் பின்புறத்தில் வம்பு பேசுவதுபோல அருவருப்பாக இருக்கிறது. முழு உண்மையையும் சொல்ல முயன்றால் அது வேறு விஷயம். அதற்குக் கொஞ்சம் மதிப்பிருக்கும்.
அதற்குப் பதிலாக, சொற்களுக்கிடையிலான அருவமான உறவு பற்றிக் கெர்ட்ரூட்டிடம் கற்றுக்கொண்ட அனைத்திற்கும் நன்றி சொல்லலாம்; அவரை எவ்வளவு நேசித்தேன் என்பதைச் சொல்லலாம். மகத்தான கவிஞரும் நம்பிக்கையான நண்பருமான எஸ்ராவிடம் எனக்குள்ள விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்தலாம். மேக்ஸ் பெர்க்கின்ஸிடம் கொண்டிருந்த அன்பால், அவர் இறந்துவிட்டார் என்பதை இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்லலாம். இங்கே இப்படிச் சொல்வது எளிமையானது. அதுவே சிறந்தது.
அப்போது அச்சிட முடியாத சில சொற்களை நீக்கச் சொன்னதைத் தவிர, நான் எழுதிய எதையும் மாற்றும்படி பெர்க்கின்ஸ் கேட்டதில்லை. அந்த இடங்கள் வெறுமையாக விடப்பட்டன. அந்தச் சொற்களை அறிந்தவர்களுக்கு அங்கே என்ன இருந்திருக்கும் என்று தெரியும். என்னளவில் அவர் பதிப்பாசிரியர் அல்ல; விவேகமிக்க நண்பர், அருமையான தோழர். அவர் தொப்பி அணியும் விதமும், அவரது உதடுகள் அசையும் விசித்திரமான முறையும் எனக்குப் பிடிக்கும்.
யாரை உங்கள் இலக்கிய முன்னோடிகளாகச் சொல்வீர்கள்? யாரிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டீர்கள்?
மார்க் ட்வைன், ஃபுளோபேர், ஸ்டெந்தால், பாஹ், துர்கனேவ், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ், ஆண்ட்ரூ மார்வெல், ஜான் டன், மாப்பசான், கிப்ளிங்கின் நல்ல படைப்புகள், தோரோ, கேப்டன் மரியட், ஷேக்ஸ்பியர், மொஸார்ட், கெவேடோ, தாந்தே, வெர்ஜில், டின்டோரெட்டோ, ஹியரோனிமஸ் போஷ், பிரூகெல், பாட்டினிர், கோயா, ஜியோட்டோ, செசான், வான் கோ, கோகேன், சான் ஹுவான் டி லா க்ரூஸ், கொங்கோரா… அனைவரையும் நினைவுக்குக் கொண்டுவர ஒரு நாள் ஆகும். அப்படிப் பட்டியலிட்டால், என் வாழ்க்கையிலும் படைப்பிலும் தாக்கம் செலுத்தியவர்களை நினைவுகூர்வதாகத் தெரியாது; எனக்கு இல்லாத புலமையைக் காட்டிக்கொள்வதுபோல் தோன்றிவிடும்.
இது பழைய, சலித்துப்போன கேள்வியல்ல. மிக நல்ல கேள்வி; ஆனால் தீவிரமானது. மனசாட்சியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய கேள்வி. ஓவியர்களையும் இதில் சேர்த்தேன் – அல்லது சேர்க்கத் தொடங்கினேன். ஏனென்றால் எப்படி எழுதுவது என்பதை எழுத்தாளர்களிடமிருந்து கற்ற அளவுக்கு ஓவியர்களிடமிருந்தும் கற்றிருக்கிறேன். அது எப்படி என்று கேட்கிறீர்களா? விளக்க இன்னொரு நாள் தேவைப்படும். இசையமைப்பாளர்களிடமிருந்து கற்பதும், இசை ஒத்திசைவையும் எதிரிசையையும் பயில்வதும் எழுத்துக்கு எப்படி உதவும் என்பது வெளிப்படையானது என்றே நினைக்கிறேன்.
இசைக்கருவி ஏதாவது வாசித்திருக்கிறீர்களா?
செல்லோ வாசித்ததுண்டு. இசையையும் எதிரிசையையும் கற்க வேண்டும் என்பதற்காக என் தாய் ஒரு வருடம் முழுவதும் என்னைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. எனக்கு இசைத்திறன் இருப்பதாக நினைத்தார். ஆனால் எனக்குத் துளியும் அந்தத் திறமை இல்லை. சிறிய குழுவாக அறைக்குள் இசைப்போம். வயலின் வாசிக்க ஒருவர் வருவார்; என் அக்கா வயோலாவும் தாய் பியானோவும் வாசிப்பார்கள். அந்தச் செல்லோவை உலகிலேயே என்னைவிட மோசமாக வாசித்தவர் இருந்திருக்க மாட்டார். அந்த ஆண்டு வெளியே போய் வேறு காரியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.
உங்கள் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களை மீண்டும் வாசிப்பீர்களா? உதாரணமாக ட்வைனை?
ட்வைனை மீண்டும் வாசிக்க இரண்டு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அவர் எழுதியவை அவ்வளவு தெளிவாக நினைவில் நிற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஷேக்ஸ்பியரைச் சிறிது வாசிப்பேன். Lear மட்டும் தவறாமல் வாசிப்பேன். அதை வாசித்தால் உற்சாகம் வரும்.
அப்படியானால் வாசிப்பு உங்களுக்குத் தொடர்ச்சியான செயலாகவும் இன்பமூட்டுவதாகவும் இருக்கிறது.
எப்போதுமே நூல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எத்தனை கிடைத்தாலும் வாசிப்பேன். வாசிப்பதற்கு எப்போதும் ஏதாவது மிச்சமிருக்க வேண்டும் என்பதற்காக அளவோடு வாசிக்கிறேன்.
கையெழுத்துப் பிரதிகளை வாசிப்பதுண்டா?
எழுதியவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாவிட்டால், அப்படிச் செய்வதால் சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் என்மீது இலக்கியத் திருட்டு வழக்குத் தொடுத்தார். தான் எழுதிய, வெளியிடப்படாத திரைக்கதையிலிருந்து For Whom the Bell Tolls நாவலை நான் திருடிவிட்டதாகக் கூறினார். ஹாலிவுட் விருந்தொன்றில் அந்தத் திரைக்கதையை வாசித்தாராம். நான் அங்கே இருந்தேனாம். ‘எர்னி’ என்று அழைக்கப்பட்ட ஒருவன் அங்கே கேட்டுக் கொண்டிருந்தானாம். பத்து லட்சம் டாலர் கேட்டு வழக்குத் தொடுக்க அவருக்கு அது போதுமானதாக இருந்தது.
அதே சமயம் Northwest Mounted Police, Cisco Kid ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மீதும் வழக்குத் தொடுத்தார். அவையும் அதே வெளியிடப்படாத திரைக்கதையிலிருந்து திருடப்பட்டவையாம். நீதிமன்றத்திற்குச் சென்றோம். வழக்கில் வென்றோம். அந்த மனிதருக்குக் கடன்களை அடைக்கக்கூட வசதியில்லை என்று தெரியவந்தது.
அந்தப் பட்டியலுக்குத் திரும்பி, ஓவியர்களில் ஒருவரை எடுத்துக்கொள்வோமா? உதாரணமாக ஹியரோனிமஸ் போஷ். அவரது ஓவியங்களின் கொடுங்கனவு போன்ற குறியீட்டுத் தன்மை உங்கள் படைப்புகளிலிருந்து மிகவும் விலகியிருப்பதாகத் தோன்றுகிறதே.
எனக்குக் கொடுங்கனவுகள் வருகின்றன. மற்றவர்களுக்கு வருபவையும் தெரியும். ஆனால் அவற்றையெல்லாம் எழுதியாக வேண்டியதில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றை எழுதாமல் விட்டாலும், அது உங்கள் எழுத்துக்குள் இருக்கும்; அதன் தன்மையும் வெளிப்படும். ஆனால் எழுத்தாளன் தனக்குத் தெரியாத, கதைக்குத் தேவைப்படும் விஷயங்களை விட்டுவிட்டால், அவை அவனுடைய எழுத்தில் ஓட்டைகளாகத் தெரியும்.
அப்படியானால், உங்கள் பட்டியலிலுள்ளவர்களின் படைப்புகளை நெருக்கமாக அறிந்திருப்பது, சற்றுமுன் நீங்கள் சொன்ன ‘கிணற்றை’ நிரப்ப உதவுகிறதா? அல்லது எழுத்து உத்திகளை வளர்த்துக்கொள்ள அவற்றைத் திட்டமிட்டுப் பயன்படுத்தினீர்களா?
பார்க்கவும் கேட்கவும் சிந்திக்கவும் உணரவும் உணராமல் இருக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டதன் ஒரு பகுதியாக அவை இருந்தன. கிணற்றில்தான் உங்கள் ‘எழுதும் தெம்பு’ இருக்கிறது. அது எதனால் ஆனது என்று யாருக்கும் தெரியாது; அதிலும் உங்களுக்குத்தான் அது மிகக் குறைவாகத் தெரியும். அது இப்போது உங்களிடம் இருக்கிறதா, மீண்டும் வரும்வரை காத்திருக்க வேண்டுமா – இது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும்.
உங்கள் நாவல்களில் குறியீடுகள் இருக்கின்றன என்று ஒப்புக்கொள்வீர்களா?
விமர்சகர்கள் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதால் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; அவற்றைப் பற்றிப் பேசுவதும் கேள்விகள் கேட்கப்படுவதும் எனக்குப் பிடிக்காது. நூல்களையும் கதைகளையும் எழுதுவதே போதுமான சிரமம். அவற்றுக்கு விளக்கமும் கேட்காமல் இருந்தால் நல்லது. நானே விளக்கம் சொன்னால், விளக்க உரையாளர்களின் வேலையையும் பறித்துவிடுவேன். ஐந்தாறு நல்ல விளக்கவுரையாளர்கள், அதற்கும் மேற்பட்டவர்கள், தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடிகிறதென்றால், நான் ஏன் தலையிட வேண்டும்? நான் எழுதுவதையெல்லாம் வாசிப்பின் இன்பத்திற்காக வாசியுங்கள். அதில் வேறெதையும் கண்டடைகிறீர்கள் என்றால், வாசிப்பில் உங்களுடைய பங்களிப்பு எவ்வளவு என்பதையே அது காட்டும்.
இதை ஒட்டி இன்னொரு கேள்வி மட்டும். எங்கள் ஆலோசனைக் குழுவிலுள்ள ஆசிரியர் ஒருவர்,The Sun Also Risesநாவலின் மாந்தருக்கும் காளைச்சண்டைக் களத்தில் பங்கேற்பவர்களுக்கும் இடையே ஓர் ஒற்றுமையைக் காண்பதாகக் கருதுகிறார். ராபர்ட் கோன் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதை நாவலின் முதல் வாக்கியமே சொல்கிறது என்று சுட்டுகிறார். பின்னர், காளைகளைத் தடுப்புகளிலிருந்து அவிழ்த்துவிடும் போது, காளை தனது கொம்புகளால் ஒரு குத்துச்சண்டை வீரனைப்போல வளைத்துக் குத்துவதாகவும் நேராகத் தாக்குவதாகவும் வருணிக்கப்படுகிறது. காயடிக்கப்பட்ட காளையின் அருகாமையால் சண்டைக் காளை ஈர்க்கப்பட்டு அமைதியடைவதுபோல், காயடிக்கப்பட்ட காளையைப் போலவே ஆண்மை நீக்கப்பட்ட ஜேக்கிற்கு ராபர்ட் கோன் பணிகிறான். கோனைத் திரும்பத் திரும்பச் சீண்டும் மைக்கைக் குதிரை மேலிருந்து காளையை ஈட்டியால் தாக்கும் பிக்காடோராக அவர் பார்க்கிறார். அவரது விளக்கம் இன்னும் நீள்கிறது. காளைச்சண்டைச் சடங்கின் துயர நாடகத்தை நாவலுக்கும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதினீர்களா என்பதே அவரது கேள்வி.
அந்த ஆலோசனைக் குழு ஆசிரியருக்குக் கொஞ்சம் மரை கழன்றிருக்கிறது போல. ஜேக் ‘காயடிக்கப்பட்ட காளையைப் போலவே ஆண்மை நீக்கப்பட்டவன்’ என்று யார் சொன்னது? உண்மையில் அவனுக்கு ஏற்பட்ட காயம் முற்றிலும் வேறுவிதமானது. அவனுடைய விரைகள் முழுமையாகவும் சேதமின்றியும் இருந்தன. ஆகவே ஓர் ஆணுக்குரிய இயல்பான உணர்வுகள் அனைத்தும் அவனுக்கு இருந்தன; ஆனால் அவற்றை உடலுறவின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. அவனுடைய காயம் உடலில்தான், உளவியலில் அல்ல என்பதும், அவன் காயடிக்கப்படவில்லை என்பதும்தான் முக்கியமான வேறுபாடு.
எழுத்து உத்திகளை ஆராயும் இந்தக் கேள்விகள் உண்மையிலேயே எரிச்சலூட்டுகின்றன.
விவேகமான கேள்வி மகிழ்ச்சியையோ எரிச்சலையோ தருவதில்லை. இருந்தாலும் தான் எப்படி எழுதுகிறேன் என்று ஓர் எழுத்தாளன் பேசுவது மிகவும் தீங்கானது என்றே இன்னும் நம்புகிறேன். கண்களால் வாசிக்கப்படுவதற்காக அவன் எழுதுகிறான். அதற்கு விளக்கங்களோ ஆய்வுரைகளோ தேவைப்படக் கூடாது. முதல் வாசிப்பில் புலப்படுவதைவிட அதிகம் அதில் இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். அதை உருவாக்கிவிட்ட பிறகு, விளக்கம் சொல்வதோ தனது படைப்பின் கடினமான பகுதிகளுக்குள் வாசகரைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதோ எழுத்தாளனின் வேலையல்ல.
எழுதிக்கொண்டிருக்கும் படைப்பைப் பற்றிப் பேசுவது ஆபத்து என்றும், அதைப் ‘பேசியே தீர்த்துவிடலாம்’ என்றும் நீங்கள் எச்சரித்தது நினைவிருக்கிறது. அது ஏன் அப்படி? ட்வைன், வைல்ட், தர்பர், ஸ்டெஃபென்ஸ் போன்ற பலர், கேட்பவர்களிடம் சொல்லிப் பரிசோதித்துத்தான் தங்கள் கருப்பொருளைச் செம்மைப்படுத்தியதாகத் தோன்றுவதால்தான் கேட்கிறேன்.
ட்வைன் Huckleberry Finn கதையைக் கேட்பவர்களிடம் சொல்லிப் ‘பரிசோதித்தார்’ என்பதை என்னால் நம்ப முடியாது. அப்படிச் செய்திருந்தால், கேட்டவர்கள் நல்லவற்றை நீக்கிவிட்டு மோசமான பகுதிகளைச் சேர்க்க வைத்திருப்பார்கள். வைல்ட் எழுதுவதைவிட நன்றாகப் பேசுவார் என்று அவரை அறிந்தவர்கள் சொன்னார்கள். ஸ்டெஃபென்ஸ் எழுதியதைவிட நன்றாகப் பேசினார். சில நேரங்களில் அவரது எழுத்தையும் பேச்சையும் நம்புவது கடினமாக இருக்கும். வயதாக ஆக அவர் சொன்ன பல கதைகள் மாறுவதைக் கேட்டிருக்கிறேன். தர்பர் எழுதுவதைப்போலவே பேசவும் வல்லவரென்றால், மிகச் சிறந்த, சலிப்பே ஏற்படுத்தாத பேச்சாளர்களில் ஒருவராக இருப்பார். தன் தொழிலைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசக்கூடியவரும், பேச்சில் இனிமையும் குறும்பும் மிகுந்தவரும் எனக்குத் தெரிந்தவரையில் காளைச்சண்டை வீரர் ஹுவான் பெல்மோன்டேதான்.
உங்களுக்கென்று ஒரு தனித்துவமான நடை உருவாவதற்குச் சிந்தித்துத் திட்டமிட்டு எந்த அளவு முயற்சி செய்தீர்கள்?
நெடுநேரம் எடுத்துக்கொள்ளும், களைப்பூட்டும் கேள்வி இது. இதற்குப் பதிலளிக்க இரண்டு நாட்கள் செலவிட்டால், உங்கள்மீதே கவனம் குவிந்து, இயல்பாக எழுத முடியாமல் போய்விடும். இதுவரை உருவாக்கப்படாத ஒன்றை முதன்முறையாக உருவாக்க முயலும்போது தவிர்க்க முடியாமல் சில கோணல்கள் ஏற்படும். பெரும்பாலும் அவற்றைத்தான் அனுபவமற்றவர்கள் ‘நடை’ என்கிறார்கள். புதிய செவ்வியல் படைப்புகளில் கிட்டத்தட்ட எதுவும் முந்தைய செவ்வியல் படைப்புகளை ஒத்திருப்பதில்லை. முதலில் அந்தக் கோணல்கள் மட்டும்தான் மக்களுக்குத் தெரிகின்றன. பின்னர் அவை அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆரம்பத்தில் அந்தக் கோணல்கள் வெளிப்படையாகத் தெரியும்போது, அவற்றையே நடை என்று நினைத்துப் பலரும் பின்பற்றுகிறார்கள். அது வருந்தத்தக்கது.
வெவ்வேறு படைப்புகள் எழுதப்பட்ட சூழ்நிலைகளைத் தெரிந்துகொள்வதிலிருந்தே மேலும் கற்றுக்கொள்ளலாம் என்று ஒருமுறை எனக்கு எழுதினீர்கள். The Killers கதையை எடுத்துக்கொண்டு இதை விளக்க முடியுமா? அதையும் Ten Indians, Today Is Friday ஆகியவற்றையும் ஒரே நாளில் எழுதியதாகச் சொன்னீர்கள். உங்கள் முதல் நாவலானThe Sun Also Risesபற்றியும் சொல்லலாமே?
பார்ப்போம். The Sun Also Rises நாவலை என் பிறந்தநாளான ஜூலை 21 அன்று வலென்சியா நகரில் தொடங்கினேன். ஜூலை 24இல் தொடங்கும் ஃபெரியா திருவிழாவுக்கு நல்ல நுழைவுச்சீட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக என் மனைவி ஹாட்லியும் நானும் வலென்சியாவுக்கு முன்னதாகவே சென்றிருந்தோம். என் வயதிலிருந்த எல்லோரும் நாவல் எழுதியிருந்தார்கள். நானோ ஒரு பத்தி எழுதவே சிரமப்பட்டேன். அதனால் பிறந்தநாளில் நூலைத் தொடங்கினேன். திருவிழா நடந்த நாட்களெல்லாம் காலையில் படுக்கையில் இருந்தபடியே எழுதினேன். மாட்ரிட் சென்ற பிறகும் தொடர்ந்தேன். அங்கே திருவிழா இல்லை. மேசையுடன் கூடிய அறை கிடைத்தது. அந்த மேசையில் இருந்து சொகுசாக எழுதினேன். விடுதிக்கு அருகே தெருமுனையைத் தாண்டியிருந்த பாசாஹே அல்வாரெஸின் பீர் கடையிலும் அமர்ந்து எழுதினேன். அங்கே குளிர்ச்சியாக இருக்கும்.
கடைசியில் எழுத முடியாத அளவுக்கு வெயில் அதிகரித்ததால் ஹெண்டாயே சென்றோம். நீண்ட அழகான கடற்கரையில் சிறிய மலிவான விடுதி ஒன்று இருந்தது. அங்கேயும் நன்றாக எழுதினேன். பிறகு பாரிஸ் சென்றேன். ரூ நோட்ரு–டாம்–தே–ஷாம் தெருவின் 113ஆம் எண்ணில், மரம் அறுக்கும் ஆலைக்கு மேலிருந்த குடியிருப்பில் முதல் வரைவை முடித்தேன். தொடங்கிய நாளிலிருந்து ஆறு வாரங்கள் ஆகியிருந்தன. முதல் வரைவை நாவலாசிரியர் நாதன் ஆஷிடம் காட்டினேன். அப்போது அவர் பேசும் ஆங்கிலத்தில் பிறமொழி உச்சரிப்பு அழுத்தமாகத் தெரியும். “ஹெம், நாவல் எழுதியதாகச் சொல்கிறாயே, என்ன சொல்கிறாய்? நாவலா ஹெம்? நீ எழுதுவது ஒரு பயண நூல்” என்றார். நாதன் சொன்னதைக் கேட்டு நான் அதிகம் சோர்ந்துவிடவில்லை. வோரார்ல்பெர்க்கின் ஷ்ரூன்ஸ் நகரிலுள்ள டாவ்பே விடுதியில் நூலை மீண்டும் எழுதினேன். பயணப் பகுதிகளை – மீன்பிடிப் பயணம், பம்ப்லோனா பற்றிய பகுதிகளை – வைத்துக்கொண்டேன்.
நீங்கள் குறிப்பிட்ட கதைகளை மே 16 அன்று மாட்ரிட்டில் ஒரே நாளில் எழுதினேன். பனிப்பொழிவால் சான் இசிட்ரோ காளைச்சண்டைகள் ரத்தான நாள் அது. முதலில் The Killers ஐ எழுதினேன். முன்பு எழுத முயன்று முடியாமல் போன கதை அது. மதிய உணவுக்குப் பிறகு கதகதப்புக்காகப் படுக்கையில் படுத்துக்கொண்டு Today Is Friday எழுதினேன். எழுதும் வேகம் அப்படிப் பொங்கியது; எனக்குப் பைத்தியம் பிடிக்கிறதோ என்று தோன்றியது. எழுதுவதற்கு இன்னும் ஆறு கதைகள் இருந்தன. ஆகவே ஆடை அணிந்து, காளைச்சண்டை வீரர்களின் பழைய காபிக் கடையான ஃபோர்னோஸுக்கு நடந்துசென்று காபி குடித்தேன். பிறகு திரும்பி வந்து Ten Indians எழுதினேன். அது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. கொஞ்சம் பிராந்தி குடித்துவிட்டுத் தூங்கினேன். சாப்பிட மறந்துவிட்டிருந்தேன். பணியாளர் ஒருவர் சிறிது பக்கலாவ் உப்புமீனும், சிறிய இறைச்சித் துண்டும், வறுத்த உருளைக்கிழங்கும், ஒரு பாட்டில் வால்டெபென்யாஸ் ஒயினும் கொண்டுவந்தார்.
தங்குமிடத்தை நடத்திய பெண்மணிக்கு நான் போதுமான அளவு உண்பதில்லை என்ற கவலை இருந்தது. அவர்தான் பணியாளரை அனுப்பியிருந்தார். படுக்கையில் எழுந்து அமர்ந்து வால்டெபென்யாஸ் குடித்தது, தின்றது நினைவிருக்கிறது. இன்னொரு பாட்டில் கொண்டுவருவதாகப் பணியாளர் சொன்னார். நான் இரவு முழுவதும் எழுதப் போகிறேனா என்று அம்மாள் கேட்டதாகவும் சொன்னார். இல்லை, கொஞ்சம் ஓய்வெடுக்க நினைக்கிறேன் என்றேன். இன்னொரு கதை எழுதிப் பார்க்கலாமே என்று கேட்டார். ஒன்றுதான் எழுத முடியும் என்றேன். முட்டாள்தனம் என்றார். ஆறு கதைகள்கூட எழுதலாம் என்றார். நாளை முயல்கிறேன் என்றேன். “இன்றிரவே முயலுங்கள். கிழவி எதற்காக உணவை அனுப்பினாள் என்று நினைக்கிறீர்கள்?” என்றார்.
களைப்பாக இருக்கிறது என்றேன். முட்டாள்தனம் என்றார். இல்லை, அவர் பயன்படுத்திய சொல் முட்டாள்தனம் அல்ல. “இந்த மூன்று அற்பச் சிறுகதைகளை எழுதியதற்கே களைப்பா? ஒன்றை எனக்கு மொழிபெயர்த்துச் சொல்லுங்கள்” என்றார்.
“என்னைத் தனியாக விடுங்கள். தனியாக விடாவிட்டால் எப்படி எழுதுவது?” என்றேன். பிறகு படுக்கையில் அமர்ந்து வால்டெபென்யாஸ் குடித்துக்கொண்டிருந்தேன். முதல் கதை நான் நம்பிய அளவுக்கு நன்றாக இருந்ததால், நான் எப்பேர்ப்பட்ட எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு சிறுகதையின் முழு வடிவமும் உங்கள் மனத்தில் எந்த அளவுக்குத் தெளிவாக இருக்கும்? எழுதிச் செல்லும்போது அதன் கருப்பொருளோ நிகழ்ச்சிப் பின்னலோ கதாபாத்திரமோ மாறுமா?
சில நேரங்களில் கதை முன்னரே தெரியும். சில நேரங்களில் எழுதிக்கொண்டே உருவாக்குவேன்; அது எப்படி முடியும் என்று தெரியாது. கதை நகரும்போது எல்லாமே மாறுகின்றன. அந்த மாற்றங்களில்தான் கதையை உருவாக்கும் இயக்கம் இருக்கிறது. சில நேரங்களில் அது அவ்வளவு மெதுவாக இருக்கும்; நகர்வதே தெரியாது. ஆனாலும் மாற்றமும் இயக்கமும் எப்போதும் உண்டு.
நாவலும் அப்படித்தானா? அல்லது எழுதத் தொடங்குவதற்கு முன்பே முழுத் திட்டத்தையும் வகுத்து, அதிலிருந்து விலகாமல் எழுதுவீர்களா?
For Whom the Bell Tolls நாவலை ஒவ்வொரு நாளும் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையாகவே கையாண்டேன். அடிப்படையில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தது. ஆனால் அதில் என்னென்ன நிகழும் என்பதை ஒவ்வொரு நாளும் எழுதும்போதே கற்பனையில் உருவாக்கினேன்.
The Green Hills of Africa,To Have and Have Not,Across the River and Into the Treesஆகியவை சிறுகதைகளாகத் தொடங்கி நாவல்களாக வளர்ந்தவையா? அப்படியானால், அணுகுமுறையை முழுமையாக மாற்றிக்கொள்ளாமலேயே சிறுகதையிலிருந்து நாவலுக்கு மாறிவிடும் அளவுக்கு இந்த இரண்டு வடிவங்களும் ஒத்திருக்கின்றனவா?
இல்லை. அது உண்மையல்ல. The Green Hills of Africa நாவல் அல்ல. முற்றிலும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலை எழுதிப் பார்க்கும் முயற்சி அது. ஒரு நாட்டின் நிலப்பரப்பையும் ஒரு மாத நிகழ்வுகளின் போக்கையும் உண்மையாகக் காட்டினால், அவற்றால் கற்பனைப் படைப்புடன் போட்டியிட முடியுமா என்று பார்க்க விரும்பினேன்.
அதை எழுதிய பிறகு, The Snows of Kilimanjaro, The Short Happy Life of Francis Macomber என்ற இரண்டு சிறுகதைகளை எழுதினேன். அதே நீண்ட வேட்டைப் பயணத்தில் கிடைத்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டு கற்பனையில் உருவாக்கிய கதைகள் அவை. அந்தப் பயணத்தின் ஒரு மாதத்தைத்தான் The Green Hills நூலில் உண்மையாக கூற முயன்றிருந்தேன். To Have and Have Not, Across the River and Into the Trees இரண்டும் சிறுகதைகளாகத் தொடங்கியவைதான்.
ஒரு படைப்பிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாறிவிடுவீர்களா? அல்லது தொடங்கியதை முடிக்கும் வரை தொடர்வீர்களா?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக நான் தீவிரமாகச் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்தியிருக்கிறேன். இதிலிருந்தே, கடுந் தண்டனைக்குரிய முட்டாள் நான் என்பது தெரிகிறது. தண்டிக்கப்படுவேன். கவலைப்படாதீர்கள்.
மற்ற எழுத்தாளர்களுடன் போட்டியிடுவதாக நினைக்கிறீர்களா?
ஒருபோதும் இல்லை. இறந்துபோன சில எழுத்தாளர்களின் மதிப்பில் எனக்கு ஐயமில்லை. அவர்களைவிடச் சிறப்பாக எழுத முன்பு முயன்றிருக்கிறேன். இப்போது நீண்ட காலமாக, என்னால் இயன்ற அளவுக்கு நன்றாக எழுத மட்டுமே முயல்கிறேன். சில சமயங்களில் அதிர்ஷ்டம் வாய்த்து, என்னால் முடிந்ததைவிடச் சிறப்பாக எழுதுகிறேன்.
வயதாகும்போது எழுத்தாளரின் ஆற்றல் குறைகிறதா?The Green Hills of Africaநூலில், ஒரு குறிப்பிட்ட வயதில் அமெரிக்க எழுத்தாளர்கள் ‘ஓல்ட் மதர் ஹப்பார்ட்’களாக மாறிவிடுகிறார்கள் என்று சொல்கிறீர்களே?
அது எனக்குத் தெரியாது. தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்தவர்கள், மூளை வேலை செய்யும்வரை தொடர்ந்து எழுதித் தீர வேண்டும். நீங்கள் சொன்ன நூலை எடுத்துப் பார்த்தால் தெரியும்: வேறு ஏதோ செய்ய விரும்பிய என்னைப் பேச வற்புறுத்திய, நகைச்சுவை உணர்வே இல்லாத ஓர் ஆஸ்திரியரிடம் அமெரிக்க இலக்கியத்தைப் பற்றி வாய்க்குவந்தபடி பேசிக்கொண்டிருந்தேன். அந்த உரையாடலைத் துல்லியமாக எழுதினேன். என்றென்றைக்கும் நிலைக்கும் தீர்ப்புகளைச் சொல்வது என் நோக்கமல்ல. இருந்தாலும் அவற்றில் கணிசமானவை நன்றாகத்தான் இருக்கின்றன.
கதை மாந்தரைப் பற்றி இன்னும் பேசவில்லை. உங்கள் படைப்புகளில் வரும் எல்லா மாந்தரும் நிஜ வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவர்களா?
நிச்சயமாக இல்லை. சிலர் நிஜ வாழ்க்கையிலிருந்து வருகிறார்கள். பெரும்பாலும் மனிதர்களைப் பற்றிய அறிவையும் புரிதலையும் அனுபவத்தையும் கொண்டே மனிதர்களைப் படைக்கிறேன்.
நிஜ வாழ்க்கையில் இருக்கும் ஒருவரைப் புனைந்த ஆளாக மாற்றுவது எப்படி என்று சொல்ல முடியுமா?
சில நேரங்களில் அது எப்படிச் செய்யப்படுகிறது என்பதை விளக்கினால், அவதூறு வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களுக்கான கையேடாகிவிடும்.
ஈ. எம். ஃபார்ஸ்டரைப் போல, ஒருபரிமாணப் பாத்திரங்களுக்கும் பல்பரிமாணப் பாத்திரங்களுக்கும் – flat and round characters – இடையே வேறுபாடு காண்கிறீர்களா?
ஒருவரை வருணித்தால், அது புகைப்படத்தைப் போலத் தட்டையாக இருக்கும். என் பார்வையில் அது தோல்வி. உங்களுக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு அவரைக் கற்பனையில் படைத்தால், அவரிடம் எல்லாப் பரிமாணங்களும் இருக்கும்.
உங்கள் பாத்திரங்களில் யாரைக் குறிப்பாக அன்புடன் நினைவுகூர்கிறீர்கள்?
அது மிக நீண்ட பட்டியலாகிவிடும்.
அப்படியானால், திருத்த வேண்டும் என்ற எண்ணம் வராமல் உங்கள் சொந்த நூல்களை மீண்டும் வாசித்து மகிழ்கிறீர்களா?
எழுதுவது சிரமமாக இருக்கும்போது, உற்சாகம் பெறுவதற்காகச் சில நேரங்களில் அவற்றை வாசிப்பேன். அது எப்போதுமே கடினமாகத்தான் இருந்தது என்பதும், சில நேரங்களில் கிட்டத்தட்ட முடியாததாகவே இருந்தது என்பதும் அப்போது நினைவுக்கு வரும்.
பாத்திரங்களுக்கு எப்படிப் பெயர் வைக்கிறீர்கள்?
என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக.
கதையை எழுதிக்கொண்டிருக்கும்போதே தலைப்பு தோன்றிவிடுமா?
இல்லை. கதையையோ நூலையோ முடித்த பிறகு தலைப்புகளின் பட்டியலைத் தயாரிப்பேன். சில நேரங்களில் நூறு வரைகூட இருக்கும். பிறகு ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்குவேன். சில நேரங்களில் எல்லாவற்றையுமே நீக்கிவிடுவேன்.
கதையின் போக்கிலிருந்தே தலைப்பு கிடைத்தாலும் இப்படிச் செய்வீர்களா? உதாரணமாக Hills Like White Elephants?
ஆம். தலைப்பு பின்னர்தான் வருகிறது. மதிய உணவுக்கு முன் சிப்பிகள் உண்ணப் புரூனியருக்குச் சென்றிருந்தபோது ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவள் கருக்கலைப்பு செய்துகொண்டவள் என்பது எனக்குத் தெரியும். அருகில் சென்று பேசினேன். நாங்கள் பேசியது அதைப் பற்றியல்ல. ஆனால் வீட்டிற்குத் திரும்பும் வழியில் கதை தோன்றியது. மதிய உணவைத் தவிர்த்துவிட்டு அந்தப் பிற்பகல் முழுவதும் அதை எழுதினேன்.
எழுதாத நேரத்திலும், பயன்படக் கூடியவற்றைத் தேடித் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறீர்கள், அப்படித்தானே?
நிச்சயமாக. கவனிப்பதை நிறுத்திவிட்டால் எழுத்தாளன் முடிந்துவிட்டான். ஆனால் திட்டமிட்டுக் கவனிக்க வேண்டியதில்லை; இது எப்படிப் பயன்படும் என்று யோசிக்கவும் வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒருவேளை அப்படி இருக்கலாம். பின்னர் அவன் அறிந்ததும் கண்டதும் அவனுக்குள் பெரும் சேமிப்பாக உருவாகிவிடுகின்றன. புதிதாகப் பார்க்கும் எல்லாமே அதில் சேர்ந்துவிடுகின்றன. இதைத் தெரிந்துகொள்வது பயன்படுமென்றால் சொல்கிறேன்: நான் எப்போதும் பனிப்பாறைக் கோட்பாட்டின்படி எழுத முயல்கிறேன். அதன் எட்டில் ஏழு பங்கு நீருக்கடியில் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த எதையும் எழுதாமல் விடலாம். அது கண்ணுக்குத் தெரியாத பகுதியாக இருந்து, உங்கள் பனிப்பாறையை வலுப்படுத்தவே செய்யும். ஆனால் தெரியாததால் ஒன்றை எழுதாமல் விட்டால், கதையில் ஓட்டை இருக்கும்.
The Old Man and the Sea ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் நீண்டிருக்கலாம். கிராமத்தின் ஒவ்வொரு மனிதரையும் அதில் கொண்டுவந்திருக்கலாம். அவர்கள் எப்படிப் பிறக்கிறார்கள், பிழைக்கிறார்கள், கல்வி கற்கிறார்கள், பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் எழுதியிருக்கலாம். மற்ற எழுத்தாளர்கள் அவற்றை அருமையாகச் செய்திருக்கிறார்கள். எழுத்தில் ஏற்கெனவே நன்றாகச் செய்து முடிக்கப்பட்டவை, புதிதாக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கும் வரம்பு விதிக்கின்றன. அதனால் வேறொன்றைச் செய்யக் கற்றுக்கொள்ள முயன்றேன். முதலில், ஓர் அனுபவத்தை வாசகர் உணர்வதற்குத் தேவையில்லாத அனைத்தையும் நீக்க முயன்றேன். அவர் வாசித்து முடித்ததும், அது அவரது அனுபவத்தின் ஒரு பகுதியாகிவிட வேண்டும்; உண்மையில் நிகழ்ந்ததுபோல் தோன்ற வேண்டும். அதைச் செய்வது மிகக் கடினம். அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன்.
எப்படிச் செய்தேன் என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். இந்த முறை நம்ப முடியாத அளவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அனுபவத்தை வாசகருக்கு முழுமையாக உணர்த்த முடிந்தது; அதுவும் இதுவரை யாரும் எழுத்தில் தந்திருக்காத ஓர் அனுபவத்தை. ஒரு நல்ல மனிதனும் நல்ல சிறுவனும் எனக்குக் கிடைத்ததுதான் அதிர்ஷ்டம். அப்படிப்பட்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை அண்மைக் கால எழுத்தாளர்கள் மறந்துவிட்டார்கள். மனிதனைப் போலவே கடலும் எழுதத் தகுதியானது. அதிலும் அதிர்ஷ்டம் இருந்தது.
மார்லின் மீன்கள் இணைசேர்வதைப் பார்த்திருக்கிறேன்; அதைப் பற்றி எனக்குத் தெரியும். அதனால் அதை எழுதாமல் விடுகிறேன். அதே கடற்பரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்பெர்ம் திமிங்கலங்கள் சேர்ந்த கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை ஏறக்குறைய அறுபதடி நீளமுள்ள திமிங்கலத்தை ஈட்டியால் தாக்கி, பிடிக்க முடியாமல் இழந்திருக்கிறேன். அதனால் அதையும் எழுதாமல் விட்டேன். மீனவக் கிராமத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த கதைகள் அனைத்தையும் விட்டுவிட்டேன். ஆனால் அந்த அறிவுதான் பனிப்பாறையின் நீருக்கடியிலுள்ள பகுதியை உருவாக்குகிறது.
வாசகருக்கு ஓர் அனுபவத்தை உணர்த்தும் முறையைப் பற்றி ஆர்ச்சிபால்ட் மெக்லீஷ் பேசியிருக்கிறார்.Kansas City Starஇதழில் பேஸ்பால் போட்டிகளைப் பற்றிச் செய்தி எழுதிக்கொண்டிருந்தபோது நீங்கள் அதை உருவாக்கியதாகச் சொன்னார். சிறுசிறு விவரங்களை நுணுக்கமாகப் பதிவுசெய்து, அவற்றின் வழியாக அனுபவத்தை உணர்த்துவது அந்த முறை. வாசகர் அதுவரை ஆழ்மனதில் மட்டுமே உணர்ந்திருந்த ஒன்றை அவர் தெளிவாக உணரச் செய்வதன் வழியாக, அந்தச் சிறிய விவரங்கள் முழுமையையும் சுட்டுகின்றன…
அந்தச் சம்பவம் உண்மையல்ல. Star இதழுக்காக நான் பேஸ்பால் பற்றி எழுதியதே இல்லை. 1920 வாக்கில் சிகாகோவில் நான் எழுதக் கற்றுக்கொள்ள முயன்ற முறையைத்தான் ஆர்ச்சி நினைவுகூர முயன்றார். யாரும் கவனிக்காமல் விட்டுவிடும், ஆனால் உணர்ச்சிகளைத் தூண்டும் சிறு விஷயங்களைத் தேடினேன். வெளிக்கள வீரர் தனது கையுறையை வீசிவிட்டு, அது விழுந்த இடத்தைத் திரும்பிப் பார்க்காத விதம்; குத்துச்சண்டை வீரரின் தட்டையான பயிற்சிக் காலணிகளுக்கடியில் கேன்வாஸில் ஒட்டிய பிசின் எழுப்பும் கீச்சொலி; சிறையிலிருந்து வெளியே வந்திருந்த ஜாக் பிளாக்பர்னின் தோலிலிருந்த சாம்பல் நிறம் – ஓவியர் வரைந்துவைப்பதுபோல் இவற்றையும் இதுபோன்ற பிற விஷயங்களையும் குறித்துவைத்தேன். பிளாக்பர்னின் வரலாறு தெரிவதற்கு முன்பே, அவரது விசித்திரமான நிறத்தையும் பழைய சவரக்கத்தி வெட்டுத் தழும்புகளையும் எதிராளியை அவர் சுழற்றியடிக்கும் விதத்தையும் பார்த்தீர்கள். அவரது கதை தெரியுமுன்பே உங்களுக்குள் உணர்ச்சியை எழுப்பியவை இவைதான்.
உங்களுக்கு நேரடியாகவோ தனிப்பட்ட முறையிலோ தெரியாத சூழ்நிலைகளை எப்போதாவது எழுதியிருக்கிறீர்களா?
விசித்திரமான கேள்வி. தனிப்பட்ட முறையில் தெரியும் என்கிறீர்களே – பாலுறவு அனுபவத்தையா சொல்கிறீர்கள்? அப்படியானால், ஆம். திறமையான எழுத்தாளன் வெறுமனே விவரிப்பதில்லை. நேரடியாகவும் பிற வழிகளிலும் பெற்ற அறிவைக் கொண்டு கற்பனையில் படைக்கிறான்; புதிதாக ஒன்றை உருவாக்குகிறான். சில நேரங்களில், எங்கிருந்து வந்தது என்று விளக்க முடியாத அறிவும் அவனிடம் இருப்பதாகத் தோன்றும். அவனது இனத்தின் அனுபவத்திலிருந்தோ குடும்பத்தின் அனுபவத்திலிருந்தோ மறந்துபோன அது வந்திருக்கலாம். தன் இருப்பிடம் திரும்பும் புறாவுக்கு அப்படிப் பறக்க யார் கற்றுத்தருகிறார்கள்? சண்டைக் காளைக்கு அதன் துணிச்சல் எங்கிருந்து வருகிறது? வேட்டை நாய்க்கு அதன் மோப்பத் திறன் எங்கிருந்து வருகிறது? என் மூளை சரியாக வேலை செய்யாத அந்தக் காலத்தில் மாட்ரிட்டில் நாம் பேசிய விஷயங்களின் விரிவாக்கம் – அல்லது சுருக்கம் – இது.
ஓர் அனுபவத்தைப் புனைவாக எழுதுவதற்கு முன், அதிலிருந்து எந்த அளவுக்கு விலகியிருக்க வேண்டும்? உதாரணமாக, ஆப்பிரிக்காவில் நீங்கள் சிக்கிய விமான விபத்துகள்?
அது அனுபவத்தைப் பொறுத்தது. உங்களுக்குள் ஒரு பகுதி தொடக்கத்திலிருந்தே முழுவதுமாக விலகி நின்று அதைப் பார்க்கிறது. மற்றொரு பகுதி அதில் ஆழமாக உழல்கிறது. எவ்வளவு சீக்கிரம் அதைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்கு விதி ஏதுல்லை. அந்த மனிதரின் மனச் சமநிலையையும் மீண்டுவரும் ஆற்றலையும் பொறுத்தது அது.
விபத்துக்குள்ளாகித் தீப்பிடிக்கும் விமானத்தில் இருப்பது, பயிற்சிபெற்ற எழுத்தாளனுக்கு நிச்சயமாக மதிப்புள்ள அனுபவம்தான். முக்கியமான பல விஷயங்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறான். அவை அவனுக்குப் பயன்பட வேண்டுமென்றால் முதலில் அவன் உயிர்பிழைக்க வேண்டும். கண்ணியத்துடன் உயிர்வாழ்வது எப்போதும்போலக் கடினமானதுதான். ‘கண்ணியம்’ வழக்கொழிந்த சொல்லாக இருக்கலாம்; ஆனால் மிகவும் முக்கியமானது. எழுத்தாளனுக்கும் கண்ணியத்துடன் உயிர்வாழ்வது மிக முக்கியம்.
நீடித்து நிற்காதவர்களையே எப்போதும் அதிகம் நேசிக்கிறார்கள். இறப்பதற்கு முன் ஒன்றைத் தாங்கள் சரி என்று நம்பும் விதத்தில் செய்துவிட வேண்டும் என்பதற்காகச் சிலர் நீண்ட, சலிப்பூட்டும், ஓயாத போராட்டத்தை நடத்துகிறார்கள். யாருக்கும் இரக்கம் காட்டாமலும் யாரிடமும் இரக்கம் பெறாமலும் நடக்கும் அந்தப் போராட்டத்தை, நீடித்து நிற்காதவர்களிடம் யாரும் பார்க்க முடியாது. சீக்கிரமாகவும் எளிதாகவும், நியாயமான காரணங்களாலும் இறந்துவிடுகிறவர்களோ விலகிக்கொள்கிறவர்களோதான் அதிகம் விரும்பப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது; மனிதத்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். தோல்வியும் மறைக்கப்பட்ட கோழைத்தனமும் இன்னும் மனிதத்தன்மை மிக்கவை; இன்னும் அதிகமாக நேசிக்கப்படுபவை.
தனது காலத்தின் சமூக – அரசியல் பிரச்சனைகளில் எழுத்தாளர் எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று மனசாட்சி இருக்கிறது. மனசாட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு விதிகள் கூடாது. அரசியல் சார்புள்ள எழுத்தாளரைப் பற்றி உறுதியாகச் சொல்லக்கூடியது ஒன்றுதான்: அவரது படைப்பு காலத்தைக் கடந்து நிலைத்திருந்தால், அதை வாசிக்கும்போது அதன் அரசியல் பகுதிகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும். அரசியலுக்கு அணி சேர்ந்த எழுத்தாளர்கள் எனப்படுபவர்களில் பலர் தங்கள் அரசியலை அடிக்கடி மாற்றுகிறார்கள். அது அவர்களுக்கும் அவர்களுடைய அரசியல் – இலக்கிய இதழ்களுக்கும் மிகுந்த பரபரப்பைத் தருகிறது. சில சமயங்களில் தங்களது நிலைப்பாடுகளை மீண்டும் எழுதவும் வேண்டியிருக்கிறது… அதுவும் அவசரமாக. ஒருவேளை மகிழ்ச்சியைத் தேடும் ஒரு வழியாக அதை மதிக்கலாம்.
இனப்பிரிவினையை ஆதரிக்கும் காஸ்பர் மீது எஸ்ரா பவுண்ட் செலுத்திய அரசியல் செல்வாக்கு, செயின்ட் எலிசபெத்ஸ் மருத்துவமனையிலிருந்து கவிஞரை விடுவிக்க வேண்டும் என்ற உங்கள் நம்பிக்கையைப் பாதித்திருக்கிறதா?
இல்லை. அறவே இல்லை. அரசியலில் எந்த விதத்திலும் ஈடுபடமாட்டேன் என்று அவர் உறுதியளித்தால், எஸ்ராவை விடுவித்து இத்தாலியில் கவிதை எழுத அனுமதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்.[1] காஸ்பரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிறையில் அடைத்தால் மகிழ்வேன். மகத்தான கவிஞர்கள் பெண் சாரணர்களாகவோ சாரணர் தலைவர்களாகவோ இருந்தாக வேண்டியதில்லை; இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. சில பெயர்களைச் சொல்கிறேன்: வெர்லேன், ரேம்போ, ஷெல்லி, பைரன், போதலேர், புரூஸ்ட், ஜீத். உள்ளூர்க் காஸ்பர்கள் இவர்களுடைய சிந்தனையையோ நடத்தையையோ ஒழுக்கத்தையோ நகலெடுத்துவிடுவார்கள் என்பதற்காக இவர்களை அடைத்துவைத்திருக்கக் கூடாது. இன்னும் பத்து ஆண்டுகளில் காஸ்பர் யார் என்று விளக்க இந்தப் பத்திக்கு ஓர் அடிக்குறிப்பு தேவைப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் படைப்பில் போதனை நோக்கம் இருப்பதாகச் சொல்வீர்களா?
‘போதனை’ என்பது தவறாகப் பயன்படுத்தப்பட்டுச் சீரழிந்துவிட்ட சொல். Death in the Afternoon அதைக் கற்றுத்தரும் ஒரு நூல்.
ஓர் எழுத்தாளர் தனது எல்லாப் படைப்புகளிலும் ஒன்றிரண்டு கருத்துகளைத்தான் கையாள்கிறார் என்று சொல்லப்படுகிறது. உங்கள் படைப்புகளும் ஒன்றிரண்டு கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன என்று சொல்வீர்களா?
யார் சொன்னது? அளவுக்கு மீறி எளிமைப்படுத்திச் சொல்வதாக இது இருக்கிறது. அதைச் சொன்னவரிடம்தான் ஒருவேளை ஒன்றிரண்டு கருத்துகள் இருந்திருக்கலாம்.
ஒருவேளை இப்படிக் கேட்டால் சரியாக இருக்கும். ஓர் எழுத்தாளர் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளும் விஷயம், அலமாரி நிறைய அவர் எழுதியிருக்கும் நாவல்களை ஒரே கோட்டில் இணைக்கிறது என்று கிரஹாம் கிரீன் சொன்னார். அநீதியை உணர்வதிலிருந்துதான் மகத்தான எழுத்து பிறக்கிறது என்று நீங்களும் சொன்னதாக நினைக்கிறேன். இதுபோல வலுவான ஏதோ ஓர் உணர்வு நாவலாசிரியரை ஆட்கொண்டிருப்பது முக்கியமா?
கிரீனுக்குத் தீர்ப்புகளைச் சொல்லும் சாமர்த்தியம் உண்டு; எனக்கு அது இல்லை. அலமாரியில் வரிசையாக இருக்கும் நாவல்களாகட்டும், உள்ளான் பறவைகளின் கூட்டமாகட்டும், வாத்துக் கூட்டமாகட்டும் – எதைப் பற்றியும் என்னால் பொதுப்படையாக ஒரு தீர்ப்பைச் சொல்ல முடியாது. இருந்தாலும் ஒன்றை முயல்கிறேன். நீதியும் அநீதியும் பற்றிய உணர்வு இல்லாத எழுத்தாளன், நாவல் எழுதுவதைவிட ‘விதிவிலக்கான குழந்தைகளுக்கான’ பள்ளியின் ஆண்டுமலரைத் தொகுப்பது நல்லது. இன்னொரு பொதுமைப்படுத்தல். பாருங்கள், வெளிப்படையாகத் தெரிந்தவற்றைச் சொல்வதென்றால் இவை அவ்வளவு கடினமல்ல.
நல்ல எழுத்தாளனுக்கு மிகவும் அவசியமான திறன், அவனுக்குள்ளேயே இயல்பாக அமைந்த, அதிர்ச்சியால் பழுதடையாத ஒரு ‘பம்மாத்து மோப்பக் கருவி.’ அதுதான் எழுத்தாளனின் ரேடார். மகத்தான எழுத்தாளர்கள் எல்லோருக்கும் அது இருந்திருக்கிறது.
இறுதியாக ஓர் அடிப்படைக் கேள்வி: படைப்பெழுத்தாளராக, உங்கள் கலையின் பணி என்ன என்று நினைக்கிறீர்கள்? உண்மை நிகழ்வே இருக்கும்போது, அதைச் சித்தரிக்கும் ஒரு படைப்பு எதற்கு?
இதில் குழப்பமடைய என்ன இருக்கிறது? நடந்தவற்றிலிருந்தும் இப்போது இருப்பவற்றிலிருந்தும், உங்களுக்குத் தெரிந்த அனைத்திலிருந்தும் அறிய முடியாத அனைத்திலிருந்தும்கூட, கற்பனையின் வழியாக ஒன்றைப் படைக்கிறீர்கள். அது வெறும் சித்தரிப்பு அல்ல. உண்மையாகவும் உயிரோடும் இருக்கும் எதையும்விட உண்மையான, முற்றிலும் புதிய ஒன்றாகிறது. அதற்கு உயிர் கொடுக்கிறீர்கள். அதைச் சிறப்பாக உருவாக்க முடிந்தால், அதற்கு அழிவில்லாத வாழ்வையும் தருகிறீர்கள். அதற்காகத்தான் எழுதுகிறீர்கள்; உங்களுக்குத் தெரிந்த வேறெந்தக் காரணத்திற்காகவும் அல்ல. ஆனால் யாருக்கும் தெரியாத மற்ற எல்லாக் காரணங்களும் இருக்கின்றனவே!
எர்னஸ்ட் ஹெமிங்வே
எர்னஸ்ட் ஹெமிங்வே (1899–1961) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர். சிக்கனமான மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், சொல்லப்படாதவற்றின் வழியாக அர்த்தத்தை உணர்த்தும் தனித்துவமான கதைசொல்லல் ஆகியவற்றால் நவீன உலக இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். The Sun Also Rises, A Farewell to Arms, For Whom the Bell Tolls, The Old Man and the Sea ஆகியவை இவரது முக்கியமான படைப்புகள். The Old Man and the Sea நாவலுக்காக 1953ஆம் ஆண்டு புலிட்சர் பரிசையும், 1954ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார். இவரது பல படைப்புகள் உலகின் பல மொழிகளிலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.