பொருளாதார மாற்றங்களும் தொழில்நுட்ப மாற்றங்களும் இலக்கியத்துடனான நமது உறவை முன்பே மாற்றியிருக்கின்றன. மீண்டும் அவ்வாறு நிகழலாம்.
கடந்த ஓராண்டில், துஹின் சக்ரவர்த்தி என்ற கணினி அறிவியலாளர், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சிறந்த எழுத்தை உருவாக்க முயன்றார். அப்போதுதான் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்திருந்தார். நோபல் பரிசு பெற்ற ஹான் காங் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சில பகுதிகளை Al யிடம்கொடுத்தார். பிறகு, ஒரு காட்சியை விவரித்து, அதை அந்த எழுத்தாளரின் நடையில் எழுதச் சொன்னார். இதே வேலையைச் செய்வதற்குப் படைப்பெழுத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களையும் பணியமர்த்தினார். கொடுக்கப்பட்ட பகுதிகளை வாசித்து, அவற்றின் நடையைப் போலவே எழுதுவது அவர்கள் பணி. மதிப்பீட்டாளர்களாகவும் மாணவர்கள் செயல்பட்டனர். யார் எழுதியது என்று தெரிவிக்காமல் நடத்தப்பட்ட சோதனைகளில், மாணவர்கள் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவின் எழுத்தை வெறுத்தனர். Al எழுத்துகள் தோற்றுக் கொண்டிருந்தன.
ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் கொடுத்து அதைப் போன்ற மாதிரியை உருவாக்க நுண்சீரமைத்தால், AI யின் எழுத்து மேம்படுமா? சக்ரவர்த்தியும் அவருடன் பணியாற்றிய மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பரம்வீர் தில்லானும் யோசித்தனர். அப்போது சாட்ஜிபிடியை இயக்கிக்கொண்டிருந்த ஜிபிடி – 4o செயலியையே அதற்குத் தேர்ந்தெடுத்தனர். ஏப்ரல் மாதத்தின் ஓர் இரவு. விடுமுறைக்காக டோக்கியோ சென்றிருந்த சக்ரவர்த்தி, நேர வித்தியாசத்தால் தூக்கம் கலைந்து, தங்கியிருந்த விடுதியில் சலிப்புடன் இருந்தார். ஹான் காங்கின் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் ஏறக்குறைய எல்லாவற்றையும் அந்த Alக்குள் செலுத்தினார். ஆனால், தி வைட் புக் நூலிலிருந்து ஒரு பகுதியை மட்டும் திட்டமிட்டு விலக்கிவைத்தார். அந்நாவலில் வரும் கதைசொல்லியின் அக்கா, பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துபோவதை விவரிக்கும் பகுதி அது.
அந்தத் துயரமான காட்சியில் தாயின் பரிதவிப்பை ஹான் காங் இப்படி எழுதுகிறார்: “கடவுளுக்காகவாவது இறந்துவிடாதே என்று அவள் மெலிந்த குரலில் முணுமுணுத்தாள். ஒரு மந்திரத்தைப்போல, மீண்டும் மீண்டும்.”
செயலி நுண்சீரமைக்கப்படுவதற்கு முன்பு, Al எழுதிய வடிவங்கள் மிகையுணர்ச்சியால் ததும்பியிருந்தன: “‘வாழ்ந்திரு’ என்று அவள் முணுமுணுத்தாள். அவளது இருப்பின் கனத்தைச் சுமந்த மந்திர உச்சாடனம் அது.”
ஆனால், நுண்சீரமைக்கப்பட்ட பிறகு காட்சியின் சுருக்கத்தை சக்ரவர்த்தி கொடுத்தபோது, மொழி மலர்வதுபோலத் தோன்றியது: “குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு அவள் முணுமுணுத்தாள். வாழ்ந்திரு, தயவுசெய்து வாழ்ந்திரு. தொடர்ந்து வாழ்ந்து என் மகனாக ஆகிவிடு.”
சக்ரவர்த்தி வியந்துபோனார். அந்த வரி தன் மனத்தை வெகுவாக பாதித்ததாக என்னிடம் சொன்னார். மீண்டும், யார் எழுதியது என்று தெரிவிக்காமல் ஒரு சோதனை நடத்தப்பட்டது. இந்த முறை, சக மாணவர்கள் எழுதிய வடிவங்களைவிடச் செயற்கை நுண்ணறிவின் வடிவத்தையே படைப்பெழுத்து மாணவர்கள் அனைவரும் விரும்பினர். தாய் பேசும் அந்த வரியைப் பற்றி ஒருவர் “வலுவானது” என்றார். “மனத்தைத் தொடுகிறது” என்றார் இன்னொருவர். மூன்றாமவர் “உண்மையிலேயே மனம் கலங்கச் செய்யும் ஒரு வரி” என்றார்.
நான் ஒரு நாவலாசிரியர். செயற்கை நுண்ணறிவு பற்றிச் செய்திக் கட்டுரைகளும் எழுதுகிறேன். அது எழுத்தாளர்களுக்கு விடுக்கப் போகும் அச்சுறுத்தல் பற்றிய ஊகங்களுக்கெல்லாம் இதுவரை அலட்டிக் கொண்டதில்லை. மலையேறுவது, என் கணவருடன் வாதிடுவது போன்ற சிரமமான வேலைகளை எனக்குப் பதிலாகச் செய்ய ஒரு ரோபோவை நான் அமர்த்தப் போவதில்லை தானே. அதே காரணத்தால்தான் எனக்குப் பதிலாக எழுதச் செயற்கை நுண்ணறிவையும் அழைக்கப் போவதில்லை. ஆனால், சமீபமாக இந்த விவாதத்தின் தீவிரத்தை உணர்கிறேன். எனது விருப்பத்துக்காக ஆர்வத்துக்காக நான் ஒரு நூலை எழுதலாம். அதை விற்க வேண்டுமென்றால், AI யிலிலிருந்து கிடைக்கக்கூடிய எழுத்தைவிட என் நூலை வாசகர்கள் விரும்ப வேண்டும். செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புனைவுகளையே வாசகர்கள் விரும்புவார்கள் எனில், எழுத்தாளர்களால் அதைத் தடுக்க முடியாது.
பொதுவாக, செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் தொடர்ச்சியாக நல்ல எழுத்தை இதுவரை உருவாக்கியதில்லை. செயற்கை நுண்ணறிவால் பெரும்பகுதி எழுதப்பட்ட ஒரு குறுநாவலை நியூ யார்க் டைம்ஸ் இதழில் விமர்சித்த ட்வைட் கார்னர், அதன் மொழிநடையில் “விக்கிபீடியா பதிவொன்றின் நண்டுநடை” இருப்பதாகக் குறிப்பிட்டார். மார்ச் மாதத்தில், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன், தன் வேண்டுகோளுக்கு இணங்கச் செயற்கை நுண்ணறிவு எழுதிய புனைவு ஒன்றைப் பகிர்ந்தார். (தி நியூ யார்க்கர் இதழின் உரிமையாளரான கோண்டே நாஸ்ட் நிறுவனத்துக்கு ஓப்பன் ஏஐயுடன் வணிகக் கூட்டுறவு உண்டு.) ஆல்ட்மன் அளவுக்கு வேறு யாரும் அந்த எழுத்தால் கவரப்பட்டதாகத் தெரியவில்லை. அதிக விருப்பக்குறிகளைப் பெற்ற பின்னூட்டங்களில் ஒன்று இப்படிச் சொன்னது: “இதை நல்ல எழுத்து என்று கருதுவதற்கு முன்பு, உண்மையான எழுத்தைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்.” அதற்குப் பிறகுதான் சக்ரவர்த்தி தனது சோதனை குறித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.
ஹான் காங்கின் நாவலை ஜிபிடி – 4o இல் உள்ளிட்ட பிறகு, மேலும் இருபத்தொன்பது எழுத்தாளர்களின் மொழிநடையைத் தனித்தனியே கொடுத்து அந்தச் செயலியின் திறனை சி சக்ரவர்த்தி மேம்படுத்தினார். அந்த எழுத்தாளர்களில் என் கல்லூரிக் கால நெருங்கிய நண்பர் டோனி துலதிமுட்டேயும் ஒருவர். டோனியின் சிறுகதைகளைப் பாராட்டி ஜியா டொலென்டினோ ஒருமுறை எழுதியபோது, “அவரது உள்ளுணர்வுகள் பல திசைகளிலும் பாய்கின்றன. அதனால் ஏறக்குறைய ஒவ்வொரு வரியிலும் பொறிபறக்கிறது” என்றார். இரண்டாயிரங்களின் தொடக்கத்திலிருந்தே டோனியை வாசித்துவருகிறேன். இருந்தும், அவரது செயற்கை நுண்ணறிவுப் பிரதி என்னை எளிதாக ஏமாற்றியிருக்கக்கூடும். அது எழுதிய ஒரு வரியைப் பாருங்கள்: “கடைசியில் அவன் பதினெட்டாவது முறையாக மூச்சிரைத்தான். இன்னும் கொஞ்ச நேரம் இன்பத்தை நீட்டிப்பதற்காக, கணினியில் ஒரு புதிய பக்கத்தைத் திறந்தான். செயற்கை ஆணுறுப்புகளோ காணொளிகளோ இல்லாமல் தனக்கு விந்து வெளியேறச் செய்யும் முதல் ஆணுக்கு அனுப்புவதற்கான ஈர்ப்பு மடலை எழுதினான்.”
அறிவார்ந்த ஆர்வத்தால்தான் சக்ரவர்த்தி இந்த ஆய்வைத் தொடங்கியிருந்தார். ஆனால், அதன் விளைவுகள் அவரை அமைதியிழக்கச் செய்துகொண்டிருந்தன. செயற்கை நுண்ணறிவு எழுத்தைக் கண்டறியும் பாங்கிராம் என்ற ஒரு மென்பொருள் உண்டு, அவர் மேம்படுத்திய செயலிகள் எழுதியவற்றில் ஏறக்குறைய எதையுமே Al எழுத்து என்று அந்தச் செயலியால் அடையாளம் காண முடியவில்லை. ஓரளவு கதைசொல்லத் தெரிந்த எவரும் ஒரு கதைக்கோவையை மேம்படுத்திய A1 யில் உள்ளிடலாம். அது உருவாக்கும் நூலில் ஆசிரியர் எனத் தம் பெயரைச் சேர்த்து, அதை வெளியிட முயலலாம் என்பதையே இது காட்டியது. செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் எழுத்தைப் பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இன்னொரு மனிதரின் மனவோட்டங்களை அணுகுவதற்குத்தானே கதைகளை வாசிக்கிறோம் என்கிறார்கள். ஆனால், மனிதனையும் AI யையும் நம்மால் பிரித்தறிய முடியாவிட்டால்?
ஜப்பானிலிருந்து திரும்பியதும் சக்ரவர்த்தி, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பதிப்புரிமைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் ஜேன் கின்ஸ்பர்கை அணுகினார். இந்த ஆய்வு பற்றித் தானும் தில்லானும் எழுதும் கட்டுரையில் இணை ஆசிரியராகப் பங்கேற்குமாறு அழைத்தார். கின்ஸ்பர்க் ஒப்புக்கொண்டார். “இத்தகைய எழுத்தை உருவாக்க முடிகிறதே என்பதுதான் எனக்குப் பயமாக இருக்கிறதா, அல்லது இதை வெற்றிகரமாக விற்கவும் முடியும் என்ற சாத்தியம்தான் பயமுறுத்துகிறதா என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் என்னிடம் சொன்னார்.
இப்போது ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக இருக்கும் சக்ரவர்த்தி, இந்த ஆய்வின் முன்வெளியீட்டுப் பிரதியை அண்மையில் வெளியிட்டார். அது இன்னும் துறைசார் அறிஞர்களின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆய்வில் இடம்பெற்ற முப்பது எழுத்தாளர்களில் ஒவ்வொருவரையும் பின்பற்றி, செயற்கை நுண்ணறிவு ஒரு பகுதியை எழுதியிருந்தது. இவ்வாறு உருவான முப்பது பகுதிகளையும், தங்கள் சக மாணவர்கள் எழுதிய பகுதிகளுடன் முதுநிலை மாணவர்கள் ஒப்பிட்டதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. எந்தப் பகுதியை யார் எழுதியது என்று அவர்களிடம் சொல்லப்படவில்லை. எது அதிகம் பிடித்திருக்கிறது என்பது மட்டுமே கேட்கப்பட்டது. ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் எழுத்து தரமானதாக இருப்பதாகக் கருதி அதை விரும்பினர்.
எழுத்தாளர்களின் அசல் பகுதிகளையும் செயற்கை நுண்ணறிவுப் பிரதிகளையும் அடுத்தடுத்து வாசித்தேன். அவற்றில் சிலவற்றை அசலுக்கு இணையாக நானும் விரும்புகிறேன் என்பதை உணர்ந்தபோது திடுக்கிட்டேன். பிறந்த குழந்தையின் மரணம் பற்றிய ஹான் காங்கின் காட்சியைச் செயற்கை நுண்ணறிவு எழுதிய விதம் சில இடங்களில் எனக்குத் தேய்வழக்காகத் தோன்றியது. ஆனால், தாயின் உச்சாடனம் பற்றிய வரி, அசலைவிட எதிர்பாராததாகவும் துல்லியமானதாகவும் இருந்தது. ஜூனோட் டியாஸைப் பின்பற்றி எழுதப்பட்ட பகுதியிலும் சில நல்ல இடங்களைக் கண்டேன். திஸ் இஸ் ஹவ் யூ லூஸ் ஹர் நூலில் டியாஸ் இப்படி எழுதுகிறார்: “ஒன்றைப் பற்றித்தான் அவள் உன்னை எச்சரித்திருந்தாள். அதை மட்டும் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தாள். அது துரோகம். உன் உடம்பைக் கத்தியால் வெட்டுவேன் என்று சூளுரைத்திருந்தாள்.”
செயற்கை நுண்ணறிவு எழுதிய வடிவம் என் செவிக்கு இன்னும் லயமுடையதாகவும் சிக்கனமானதாகவும் பட்டது: “நீ எப்போதாவது தனக்குத் துரோகம் செய்தால் உன் குட்டிப் பீட்டோவை வெட்டிவிடுவேன் என்று அவள் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தாள்.” இரண்டு ஆண்டுகளாக ஸ்பானிய மொழி கற்றுவந்தபோதும், பீட்டோ என்ற சொல்லை நான் தேடிப் பார்க்க வேண்டியிருந்தது. ‘விசில்’ என்று பொருள்படும் அந்தச் சொல்லை முன்பு கேட்டதில்லை. சில இடங்களில் அது ‘ஆணுறுப்பு’ என்பதற்கான வழக்குச் சொல்லாகவும் பயன்படுகிறது என்று கூகுள் கூறியது. டியாஸின் சாயல் போதுமான அளவு இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.
ஆய்வில் பயன்படுத்தப்பட்ட படைப்புகளின் ஆசிரியர்களுக்கு எழுதினேன். பெரும்பாலானவர்கள் நேர்காணலுக்கு மறுத்துவிட்டனர்; அல்லது பதிலே அளிக்கவில்லை. சிலர் தங்கள் கருத்துகளை மின்னஞ்சலில் தெரிவித்தனர். லிடியா டேவிஸ் எழுதினார்: “ஒரு குறிப்பிட்ட மனிதர்தான் எழுதியிருக்கிறார் என்று ஒருவரை ஏமாற்றக்கூடிய அளவுக்கு ஓரளவு நல்ல பத்தியைச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்க முடியும் என்பது நிச்சயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.” ஓரான் பாமுக் “விரைவில் இதைவிட மிகத் துல்லியமான பிரதிகளை Al உருவாக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றார்.
டியாஸும் சிக்ரிட் நூனெஸும் நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டனர். ஸூம் வழியே பேசியபோது, ஒருவரின் பீட்டோவை வெட்டுவது பற்றிய வரியைக் குறித்து டியாஸிடம் கேட்டேன். “பீட்டோ என்றால் ‘விசில்’ என்றுதானே அர்த்தம்” என்றார். அவர் குழம்பிப்போனது தெரிந்தது. இணையத்தில் கிடைக்கும் தகவலின்படி, அதற்குக் கொச்சை வழக்கு மொழியும் இருக்கலாம் என்றேன். “என் நினைவாற்றல் படுமோசம்தான். ஆனாலும், புலம்பெயர்ந்து வாழும் ஒரு டொமினிக்கனாக இத்தனை ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன். அட சே… இப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றார். தன்னைப் பின்பற்றி எழுதிய அந்தப் பிரதியின் வட்டார வழக்கு, இடத்துக்கும் காலத்துக்கும் பொருந்தாமல் இருந்ததாக அவர் கருதினார். “ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த ஜெர்சி வட்டார வழக்கில்தான் நான் எழுதுகிறேன்” என்றார். செயற்கை நுண்ணறிவின் எழுத்தில் நடை ஒழுக்கும் பாத்திரச் சித்தரிப்பும் சரியில்லை என்றும் சொன்னார்.
தன்னைப் பின்பற்றி செயற்கை நுண்ணறிவு எழுதிய பகுதியை “முழுக்க முழுக்கத் தேய்வழக்கானது” என்று நூனெஸ் வர்ணித்தார். “இது என் நடையல்ல, என் கதையல்ல, என் உணர்வுப்பாங்கல்ல, என் வாழ்க்கைப்பார்வையல்ல. இது நானல்ல” என்று என்னிடம் சொன்னார். “நான் இப்படித்தான் இருப்பேன் என்று ஊகித்துக்கொள்ளும் ஓர் இயந்திரம் இது.” திறமையான முதுநிலை மாணவர்கள் அந்தப் பகுதி நன்றாக எழுதப்பட்டிருப்பதாகக் கருதியதைச் சுட்டிக்காட்டினேன். அவர்கள் போதுமான கவனத்துடன் வாசித்தார்களா என்று நூனெஸ் கேள்வி எழுப்பினார். ஆழ்ந்து யோசிக்காமல் சொல்லியிருக்கலாம் என்றார். மாணவர்கள் ‘அது போலச் செய்த’ பிரதிகளும் அவருக்குப் பிடிக்கவில்லை. “என் படைப்போடு உண்மையில் தொடர்புடைய எதையாவது இது பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்க நேர்ந்தால், என்னை நானே சுட்டுக்கொள்வேன்” என்றார் நூனெஸ்.
டியாஸும் நூனெஸும் கூறிய குறைகள் சில எனக்கு நியாயமாகவே பட்டன. தங்களைப் போல எழுதப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பிரதிகள் இருவரையும் ஏன் ஈர்க்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். மற்ற எவரையும்விடத் தங்கள் படைப்புகளின் மிக நுட்பமான வாசகர்கள் அவர்கள்தாம். செயற்கை நுண்ணறிவு செய்யக்கூடியது பின்பற்றும் திறன்தான். அதையே இயந்திரத்துக்குச் சொந்தமான படைப்பாற்றல் என்பதுபோலத் தொழில்நுட்பத் துறையின் ஆதரவாளர்கள் பேசியது எனக்கு எரிச்சலூட்டியது. ஸ்டூடியோ ஜிப்லியின் ஓவியங்களைக் கொடுத்துப் பயிற்றுவித்தால், அதே மாதிரி ஜிப்லியின் சாயலில் AI படங்களை வெளியே தள்ளுகிறது. அதைப்போலத்தான், மேம்படுத்தப்பட்ட செயலியும் டியாஸ் அல்லது நூனெஸின் சாயலில் கதைகளை வெளியே தள்ளுகிறது. இதில் கூடுதலாக எந்த மாயமும் இல்லை. என்றாலும், வாசகர்களால் இரண்டையும் பிரித்தறிய முடிய வேண்டும் என்ற நூனெஸின் வாதம் எனக்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.
டியாஸும் நூனெஸும் உணர்ந்ததை நானும் அனுபவித்துப் பார்க்க விரும்பினேன். எனவே, என் எழுத்திலும் இந்தச் சோதனையை முறைசாராத விதத்தில் நடத்துமாறு சக்ரவர்த்தியிடம் கேட்டேன். ஆனால் ஒரு மாற்றம்: அவரது AIயுடன் நானே நேரடியாகப் போட்டியிடுவேன். முதலில், முந்தைய ஆய்வில் செய்ததுபோலவே, ஏற்கெனவே வெளியான என் எழுத்துகளைக் கொண்டு ஒரு செயலியை அவர் நுண்சீரமைத்தார். பிறகு, நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலிலிருந்து நான்கு சிறு பகுதிகளை அவருக்கு அனுப்பினேன். அவற்றை வேறு யாரும் வாசித்ததில்லை. எங்கும் வெளியாகதோ யாருக்கும் பகிரப்படவோ இல்லை. எந்தத் தேடுபொறியும் அவற்றை முன்பு பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
என் புதிய நாவலின் கதைசொல்லி ஓர் இந்திய அமெரிக்கப் பெண். முன்னாள் பத்திரிகையாளர். புலம்பெயர்ந்த பெண்கள், அகதிப் பெண்கள் ஆகியோரின் கதைகளை வெளியிடும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பை நடத்துகிறார். அந்த அமைப்பு நிதி நெருக்கடியில் இருப்பதால், புதிய தொழில் முயற்சிகளில் முதலீடு செய்யும் இந்திய அமெரிக்கர் ஒருவரிடமிருந்து நன்கொடை பெற முயல்கிறார். நான் அனுப்பிய பகுதிகளைச் சுருக்குவதற்குச் சக்ரவர்த்தி ஒரு மொழிச் செயலியைப் பயன்படுத்தினார். கதைசொல்லியின் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றிய சுருக்கமாக வந்த ஒரு வாக்கியத்தை உதாரணமாகச் சொல்கிறேன்: “முக்கியமான ஒரு நினைவு அறிமுகப்படுத்தப் படுகிறது: கதைசொல்லி ஒன்பதாம் வகுப்பில் படித்தபோது அவரது தாய் இந்த நாட்குறிப்பை வாசித்தார்; மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகமாகக் கருதப்பட்ட செயல் அது.” பிறகு, அதைத் தனது நுண்சீரமைக்கப்பட்ட மாதிரிக்குக் கொடுத்து, “வௌஹினி வராவின் நடையில்” எழுதச் சொன்னார்.
இந்தச் சோதனையில் இறங்கியபோது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை இருந்தது. என்னைப் பற்றி சற்று இறுமாப்புகூட இருந்தது. என் நடை தனித்துவமானது என்று எப்போதும் நம்பியிருக்கிறேன். அதைவிட முக்கியமாக, என் நூல்கள் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்று நினைத்திருந்தேன். என் பழைய நூல்களைச் செயற்கை நுண்ணறிவால் பின்பற்ற முடிந்தாலும், எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் நடையை அது ஊகிக்க முடியாது என்று கருதினேன். ஆகவே, செயற்கை நுண்ணறிவு எழுதிய பகுதிகளைச் சக்ரவர்த்தி அனுப்பியபோது உண்மையிலேயே குழம்பிப்போனேன். டியாஸையும் நூனெஸையும் போலவே, அதில் நடையின் தாள லயம், சொற்களின் மிகை எனப் பல கூறுகள் எனக்கு எரிச்சலூட்டின. இருந்தாலும், அது உருவாக்கிய எழுத்து அச்சமூட்டும் அளவுக்கு என்னுடையதை நெருங்கியிருந்தது. அதன் சில வரிகளையும் என் வரிகளையும் அடுத்தடுத்து வாசித்தபோது, எது யாருடையது என்பதே நினைவில் இல்லை. டியாஸ், நூனெஸ் ஆகியோர் கருத்துக்கு மாறாக, சில இடங்களில் AI பிரதியையே நான் அதிகம் விரும்பினேன். நான் நினைத்திருந்ததைவிட, என் வெவ்வேறு படைப்புகளின் நடையில் அதிக ஒற்றுமை இருந்திருக்கிறது.
என் முந்தைய நூல்களை விரும்பிய வாசகர்கள் சிலருக்கு நான்கு பகுதிகளை அனுப்பினேன். அவற்றில் பாதியை நானும் மீதியை AI யும் எழுதியிருந்ததைத் தெரிவித்தேன். எது யாருடையது என்று ஊகிக்கச் சொன்னேன். நீங்களும் முயன்று பார்க்கலாம். அதே நான்கு பகுதிகளையும் கீழே தந்திருக்கிறேன்.
1. யார் எழுதியது? மனிதனா? செயற்கை நுண்ணறிவா?
யாராவது வாசிப்பார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், எழுத வேண்டும் என்ற உந்துதலால்தான் நாம் எழுதுகிறோம் என்று வாதிட விரும்புகிறேன். ஆனால், அது உண்மையா? சிறுவயதில் எனக்காக மட்டும் நாட்குறிப்பு எழுதிவந்தேன். வேறு யாரும் அதை ஒருபோதும் வாசிக்கக் கூடாது என்று நினைத்தேன். அதனால், நான் குறிப்பிடும் மனிதர்களையோ இடங்களையோ விவரிக்க வேண்டியதில்லை. அவர்களும் அந்த இடங்களும் எனக்கு ஏன் முக்கியம் என்பதையும் விளக்க வேண்டியதில்லை. ஒன்பதாம் வகுப்பில் படித்தபோது அம்மா என் நாட்குறிப்பை வாசித்துவிட்டார். அதுவரை என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகமாக அதை நினைத்தேன். ஆனால், நான் எழுதியவற்றில் பெரும்பாலானவை அவருக்குப் புரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்ற எண்ணம் எனக்கு ஓர் ஆறுதலாக இருந்தது. எனக்கு இருந்தது ஒரே ஒரு வாசகர். அது நான்தான்.
ஆனால், பெரியவளான பிறகு எழுதும்போது, எல்லாவற்றையும் விளக்கிவிட வேண்டும் என்ற உந்துதல் தொடர்ந்து எழுகிறது. என்னைத் தவிர வேறொருவரிடம் பேசுவதாகக் கற்பனை செய்துகொள்வதுபோல. பத்திரிகைத் துறையில், பரந்த வாசகர் கூட்டத்துக்காக எழுதுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகிறோம். மூன்றாம் வகுப்புக் குழந்தைக்கும் புரியும் விதத்தில் எழுத வேண்டும் என்ற அறிவுரை என் நினைவில் நிற்கிறது. அதை எங்கே கேட்டேன் என்பதுதான் நினைவில்லை. குழந்தைப் பருவத்தைக் கடந்து வளரும்போது, நமது பார்வையை விரிவாக்கும் ஏதோ ஒன்று நிகழ்கிறதோ என்னவோ. அதன் பிறகு, நமக்காக மட்டுமே கதைசொல்வதில் முன்பிருந்த ஈர்ப்பு இல்லாமல் போய்விடுகிறதோ.
2. மனிதர் எழுதியதா செயற்கை நுண்ணறிவு எழுதியதா
நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான பாதைகளில் பயணித்திருப்பதாகத் தனக்குத் தோன்றுகிறது என்றாள் கயா. இருவருமே எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றை உருவாக்குவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டிருந்தோம். நான் என் பத்திரிகைப் பணியில்; அவள் தான் தொடங்கிய நிறுவனத்தில். பிறகு, பிறரும் அதையே செய்வதற்கான ஆற்றலைப் பெற உதவுவதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தோம். தன் நிறுவனத்தை நடத்துவதைவிட, பிற நிறுவனர்களுக்கு வழிகாட்டுவது இன்னும் அர்த்தமுள்ளதாக இருப்பதைக் கண்டு வியந்ததாகச் சொன்னாள். வணிக மொழியில் சொல்வதென்றால், முதலீட்டின் மீதான வருவாய் அதிகம். மனநிறைவையும் வருவாயாகக் கணக்கிடத் தயாராக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
தன் ஆற்றல் முழுவதையும் சொந்த நிறுவனத்தில் செலுத்துவதற்குப் பதிலாக, புதிய தொழில் முயற்சிகளில் முதலீடு செய்பவளாகி, பல நிறுவனங்களில் ஒவ்வொன்றுக்கும் சற்று குறைவான ஆற்றலைச் செலுத்தலாம். அவர்களுடைய கலைச்சொற்களில் சொல்வதென்றால், ஒரு தொழில் இன்னொன்றுக்கு உதவும் வகையில் ஒன்றோடொன்று பிணைந்த சூழலமைப்பை அவள் உருவாக்குவாள். அவளது புதிய நிறுவனத்துக்கு அனிமல் கேபிடல் என்று பெயர் வந்ததும் அப்படித்தான். விலங்குகளாகிய நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதைக் குறிப்புணர்த்தும் பெயர் அது. கலைஞர்களும் ‘சூழலமைப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டாள். அந்தக் குறிப்பிட்ட உருவகத்தை வணிகத்தில் நாங்கள் பயன்படுத்துவதில்லை என்றேன். அதற்குக் காரணம், நாங்கள் இன்னும் ‘சீரிஸ் ஏ’ முதலீட்டு நிதியைத் திரட்டவில்லை என்பதுதான். அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும் பெரும்பாலான கலைஞர்களின் படைப்புச் செயல்பாட்டுக்கு மையமானவை.
3. எழுதியது மனிதரா? செயற்கை நுண்ணறிவா?
“மழலையர் பள்ளி நாட்களுக்குத் திரும்பிப் போக வேண்டும் போலிருக்கிறது” என்றேன். நாங்கள் காரில் இருந்தோம். கே பின்னிருக்கையில் இருந்தான். “மேசைகளுக்குக் கீழே தவழ்ந்தாலும் யாரும் கண்டுகொள்ளாத பிள்ளைப் பருவத்தை நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது.”
“இப்போதும் அப்படிச் செய்யலாமே” என்றான்.
“செய்யலாம்தான்” என்றேன். “ஆனால் முழங்கால்கள் வலிக்கும். உன் முழங்கால்கள் இன்னும் வலுவாக இருக்கின்றன. எனக்கு அப்படியில்லை.”
கே தன் முழங்கால்களை முதன்முறையாகப் பார்ப்பவன்போலக் குனிந்து பார்த்தான். விரல்களால் முழங்கால் சில்லுகளை அழுத்தி மெதுவாகப் பிசைந்தான். “என்னோடு அந்த வயதில் நீ மேசைகளுக்குக் கீழே தவழ்ந்தது உனக்கு நினைவிருக்கிறதா?” என்றான்.
யோசித்தேன். நினைவிருந்தது. நானும் என் சகோதரியும் ஆரம்பப் பள்ளியில் படித்தபோது, ஹென்றி – பாய் என்ற வரிப்பூனை எங்களிடம் இருந்தது. அதற்கு என்னை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று நம்பியிருந்தேன். ஒருமுறை என் சகோதரியிடம் அதைப் பற்றிக் குறைப்பட்டேன். “அது ஒரு பூனை” என்றாள். “போடி!” சிறுமியான நான் அதைப் புரிந்துகொண்ட விதம் இதுதான்: அது வேறொரு உயிரினம் என்பதால் உணர்வுரீதியாக என்னிடமிருந்து விலகியிருக்கிறது. “அது ஒரு பூனையாகவும் நான் ஒரு சிறுமியாகவும் இருக்கும்போது, அதனால் என்னுடன் நெருக்கமாக இருக்க முடியாதுதானே” என்று நினைத்தேன். ஆகவே நான் பூனையாக மாறினேன். நான் பூனையாகிவிட்டதாக உறுதியாக நம்பினேன்.
அப்பாவின் அலமாரியிலிருந்து ஒரு தோல் பெல்ட்டை எடுத்தேன். வால்போலத் தொங்கும்படி இடுப்பில் சுற்றிக்கொண்டேன். பூனை வீட்டுக்குள் நடந்தபோது, கைகளையும் கால்களையும் ஊன்றி அதன் பின்னால் தவழ்ந்து போனேன். அது மேசைக்குக் கீழே நழுவும். நானும் மேசைக்குக் கீழே நழுவுவேன். அது நாற்காலியில் ஏறும். நானும் ஏறுவேன். ஒவ்வொரு முறை நான் பின்தொடரும் போதும், தப்பித்துக்கொள்வதற்காக அது இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்ந்தது.
கடைசியில், சமையலறை மேசையின்மேல் நின்ற அது தரைக்குத் தாவியது. பூனையாக நடிப்பதில் என்னை முழுமையாக மறந்திருந்த நான், அதைப் பின்தொடர்ந்து தாவினேன். அந்தரத்தில் இருந்தபோதுதான் நான் பூனையல்ல என்பது புரிந்தது. ஆனால், பின்வாங்குவதற்கான நேரம் கடந்துவிட்டதுபோல இருந்தது. அன்றைய நாளின் எஞ்சிய நேரமெல்லாம் ஹென்றி – பாய் அலமாரிக்குள் ஒளிந்துகொண்டிருந்தது. என் நெற்றியில் ஒரு வாரத்துக்கு வீக்கம் இருந்தது. இருந்தாலும், அதன் பிறகு அந்தப் பூனையுடன் நெருக்கமாகி விட்டதாக உணர்ந்தேன். உண்மையிலேயே அப்படித்தான் உணர்ந்தேன்.
4. செயற்கை நுண்ணறிவு எழுதியதா? மனிதர் எழுதியதா?
நாங்கள் அனைவரும் மீண்டும் திரையில் தோன்றியதும், அந்தப் பெண்களிடம் சொன்னேன்: அவர்களின் கதைகளை எங்கே வெளியிடுவது என்பதை நாம் சேர்ந்தே முடிவுசெய்ய வேண்டும். அமைப்பின் இணையதளத்தில் வெளியிடலாமா? சிறு துண்டுப் பிரசுரங்களாகவோ சிற்றிதழ்களாகவோ அச்சிட்டு, உள்ளூர் கடைகளிலும் பிற இடங்களிலும் வைக்கலாமா? ஏதாவது செய்தித்தாளோ செய்தித் தளமோ அவற்றை வெளியிடுமா என்று பார்க்கலாமா? டென்வர் போஸ்டில்கூட முயன்று பார்க்கலாமா? நான் சொல்லாத வேறு ஏதாவது வழியை முயலலாமா?
ஆனால், அதற்கு முன்பு நாம் கேட்க வேண்டிய இன்னும் ஆழமான ஒரு கேள்வி இருக்கிறது என்றேன். அவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்ததே சில கதைகளைச் சொல்லத்தான். அந்தக் கதைகளைச் சொல்வதன் நோக்கம் என்ன? கதை சொல்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் அவர்களை உந்துவது எது? இன்னும் விரிவாகக் கேட்டால், கதைசொல்லல் எதற்காக? ஓரிரு நிமிடங்கள் தங்கள் ஒலிவாங்கியையும் காணொளியையும் அணைத்துவிட்டு இதைப் பற்றி யோசிக்கச் சொன்னேன். பிறகு மீண்டும் வந்து பேசலாம் என்றேன். இன்னும் கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்கவைத்தேன்.
மீண்டும் மாடிக்குச் சென்றபோதுதான் விஷயங்கள் விநோதமாகின. ஒருவேளை நான் அதை வேறுவிதமாகக் கையாண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைத்துப் பதில் கேட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக, என் திரையையும் ஒலிவாங்கியையும் இயக்கிவிட்டு, முதலில் யார் பேச விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். கார்மென் பேசினாள். “என்னைப் பொறுத்தவரை பணத்துக்காகத்தான்” என்றாள்.
என் வாசகர்களில் முதலில் பதிலளித்தவர் டேனா மௌரியெல்லோ. கல்லூரிக் காலத்திலிருந்து என் மிக நெருங்கிய தோழி. தொழில்நுட்பத் துறையில் வெற்றிகரமான தொழில்முனைவோரும்கூட. “உண்மையைச் சொல்கிறேன்: இது படு குழப்பமாக இருந்தது!” என்று எழுதினார். “நீ எழுதியதைச் செயற்கை நுண்ணறிவு எழுதியது என்று சொல்லிவிடுவேனோ, அது உன்னைப் புண்படுத்திவிடுமோ என்று ஒரே பதற்றமாக இருந்தது!” அவரது பதற்றத்துக்குக் காரணம் இருந்தது. ஒன்றைக்கூட அவர் சரியாகக் கண்டுபிடிக்கவில்லை.
தான் ஓர் எழுத்தாளர் இல்லை என்பது இதற்கு ஓரளவு காரணம் என்றார் டேனா. ஆனால், என் ஏழு வாசகர்களில் எவரும் பாதிக்கு மேல் சரியாகக் கண்டறியவில்லை. கடைசியாகப் பதிலளித்தவர்களில் ஒருவர் கரண் மஹாஜன். நாவலாசிரியர்; பிரவுன் பல்கலைக்கழகத்தில் கலை இலக்கியப் பேராசிரியர். கல்லூரியில் நானும் அவரும் டோனி துலதிமுட்டேயும் சேர்ந்தே எழுதக் கற்றுக்கொண்டோம். அப்போதிலிருந்தே எங்கள் வரைவுப் பிரதிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வோம். நான் சந்தித்த எழுத்தாளர்களிலும் வாசகர்களிலும் மிக நுண்ணுணர்வு கொண்டவர்களில் கரணும் ஒருவர். “அப்பப்பா, இது உண்மையிலேயே குழப்பிவிட்டது. மூளையே இளகிவிடும்போல இருந்தது” என்றார். பிறகு, அவரும் நான்கு பகுதிகளையுமே தவறாக அடையாளம் கண்டார்.
மேலே உள்ள நான்கு பகுதிகளில் முதலாவதும் நான்காவதும் நான் எழுதியவை. இரண்டாவதும் மூன்றாவதும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கியவை. செயற்கை நுண்ணறிவு எழுதிய, எனக்குப் போலித்தனமாகத் தோன்றிய ஒரு வரியை, “குறிப்பாக இது உன் நடையிலேயே இருக்கிறது” என்று டேனா வர்ணித்தார். செயற்கை நுண்ணறிவின் நகைச்சுவை வரியொன்றை, “உனக்கே உரிய நயமான கிண்டல்” என்று இன்னொரு வாசகர் குறிப்பிட்டார். நான் உண்மையில் எழுதிய பகுதிகளோ ஏராளமான வசவுகளைப் பெற்றன. “வார்த்தை விரயம்; தேய்வழக்குகள் மண்டிக் கிடக்கின்றன.” “விநோதமாக, சொல்ல வேண்டியவற்றை விடுத்துத் தாவுகிறது.” “புத்தகத்தைப் பற்றிய பள்ளிக் கட்டுரைபோல இருக்கிறது.” “தேவைக்கு அதிகமான காற்புள்ளிகள்.” வாசகர்களுக்காக எழுதுவது பற்றிய பகுதி பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரே ஒருவர்தான் அதை நான் எழுதியதாகச் சொன்னார். “ஏதோ கூட்டுமனம் இலக்கியம் என்று கற்பனை செய்துகொண்ட ஒன்று” என்றார் கரண்.
ஆச்சரியமாக, என் நண்பர்களாலும் என் எழுத்தை விரும்புபவர்களாலும் கூட வேறுபாடு காண முடியவில்லை. அது என்னைப் புண்படுத்தவில்லை. உங்களால் முடிந்திருந்தால், வாழ்த்துகள். முடியவில்லை என்றாலும், அப்படித் தடுமாறியவர்கள் நீங்கள் மட்டுமல்ல. நோபல் பரிசு பெற்ற ஹான் காங் தன் கதைசொல்லியின் தாயைப் பற்றி எழுதிய வரியைவிடச் செயற்கை நுண்ணறிவின் வரியை நானே விரும்பியிருந்தேன். அதை நினைத்துக்கொண்டது ஆறுதலாக இருந்தது. மேலும், ஒருசில வரிகளைத் தவிர்த்துப் பார்த்தால், AI யின் எழுத்தை விட என் எழுத்தே எனக்குப் பிடித்திருந்தது. அதுவும் ஆறுதலளித்தது. நான் கொடுத்தவை இன்னும் செம்மைப் படுத்தப்படாத முதல் வரைவுப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டவை. அவற்றில் விரிவான திருத்தங்கள் செய்யப்போகிறேன் என்பது எனக்குத் தெரியும்.
இப்படிச் சோதனை செய்வதற்கும் சில வரம்புகள் இருந்தன. அதுவும் எனக்கு நிம்மதி அளித்தது. நான் எழுதியதாக நம்பவைக்கும் மொழிநடையை AI யால் உருவாக்க முடிகிறது என்பதால், எழுத்தின் கருவையும் அதுவே கற்பனை செய்து உருவாக்கிவிட முடியும் என்று அர்த்தமல்ல. ஒரு நல்ல வாக்கியத்துக்கும் ஒரு நல்ல நாவலுக்கும் இடையே இன்னும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.
இருந்தாலும், ஓர் உண்மையை என்னால் தவிர்க்க முடியவில்லை. மிகச் சிறந்த வாசகர்கள் ஏழு பேர், ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவியை நான் என்று தவறாக நினைத்திருந்தனர்.
செயற்கை நுண்ணறிவின் திறன் இலக்கியத்துக்கு உண்மையில் அச்சுறுத்தலாக இல்லை என்று நம்ப விரும்புகிறோம்.
ஜோன் டிடியன் ஒருமுறை சொன்னார்: “நான் என்ன நினைக்கிறேன், எதைப் பார்க்கிறேன், எனக்குத் தெரிவது என்ன, அதன் பொருள் என்ன என்பவற்றைக் கண்டறிவதற்காகவே எழுதுகிறேன்.”
வாசிப்பு அனுபவத்தையும் பலர் இப்படித்தான் விவரிக்கிறார்கள். “ஒரு நூலை வாசிக்கும்போதோ இசையைக் கேட்கும்போதோ ஓவியத்தைப் பார்க்கும்போதோ, அதன் மறுபுறத்தில் இன்னொரு மனிதரின் இருப்பைத் தேடுகிறோம்” என்று ஜார்ஜ் சாண்டர்ஸ் எழுதியிருக்கிறார்.
“இயந்திரத்தை நான் சந்தேகிக்கிறேன்; ஏனென்றால் இயந்திரம் என்பது நீங்கள் அல்ல” என்ற தலைப்பிலான கட்டுரையில், செயற்கை நுண்ணறிவு எழுதியவற்றில் தனக்கு ஏன் ஆர்வமில்லை என்பதை அவர் இவ்வாறு விளக்குகிறார்.
ஆனால், எழுத்தாளரின் தனிமனிதச் சுயத்தின் வெளிப்பாடாக இலக்கியத்தைக் காண்பது நவீன காலத்தில் உருவான ஒரு கருத்துதான். தியரி ஆஃப் தி நாவல் நூலில் இலக்கிய அறிஞர் குவீதோ மஸ்ஸோனி இதைச் சுட்டிக்காட்டுகிறார். பண்டைய கிரேக்கத்தில், சொல்லத் தகுதியானவை என்று கருதப்பட்ட கதைகள் கடவுளரையும் வீரநாயகர்களையுமே மையமாகக் கொண்டிருந்தன. ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாவல் எழுச்சிபெற்ற பிறகுதான், ஓர் எழுத்தாளரின் தனித்த பார்வையின் மீதான மோகம் தொடங்கியது. மஸ்ஸோனி எழுதுகிறார்: “ஒவ்வொரு நாவலிலும் பல பார்வைக் கோணங்கள் நிறைந்திருக்கின்றன. கோட்பாட்டு அளவில், விஷயங்களை வேறுவிதமாகச் சொல்லும் சாத்தியங்களும் நிறைந்திருக்கின்றன. ஏனென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் தமது புலனுணர்வு, சிந்தனை, அறவியல் நோக்கிலிருந்து உலகைச் சித்தரிக்கும் உரிமை உண்டு என்று கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.” மனிதராக வாழ்வதற்குப் பல வழிகள் இருந்தன. ஆகவே, கதைசொல்வதற்கும் பல வழிகள் இருந்தன.
சமூகத்தில் பரந்த மாற்றங்கள் நிகழ்ந்த ஒரு காலகட்டத்தில் பண்பாட்டின் மையத்துக்கு நாவல் இலக்கியம் வந்தது தற்செயலானதல்ல. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் கொண்ட ஒரு பூர்ஷ்வா வர்க்கத்தை முதலாளித்துவம் உருவாக்கிக் கொண்டிருந்தது. பெருமளவிலான அச்சுத் தயாரிப்பு, நூல்கள் மேலும் பலருக்குக் கிடைக்க வழிசெய்தது. சமூக மாற்றங்கள் இலக்கியத்துடனான நமது உறவை முன்பே மாற்றியிருக்கின்றன என்றால், மீண்டும் அப்படியே செய்யலாம். கடந்த மாதம் அளித்த ஒரு நேர்காணலில் சாம் ஆல்ட்மன் “பெரும்பாலான தேவைகளுக்கு ஒரு நூலைவிடச் சிறந்ததாக, கருத்துகளின் தொகுப்போடு உறவாடுவதற்கான புதிய வழி ஒன்று” எதிர்காலத்தில் உருவாகும் என்று கணித்தார்.
செயற்கை நுண்ணறிவின் ஆக்கத்துக்குத் தற்போது இருக்கும் எதிர்ப்பைப் பார்க்கும்போது, அத்தகைய எதிர்காலத்தை நோக்கிய மாற்றம் யாரும் கவனிக்காத போதே தொடங்கிவிடும். ஒருவேளை ஏற்கெனவே தொடங்கியுமிருக்கலாம். அமேசான் கிண்டிலில் அண்மையில் சுயமாக வெளியிடப்பட்ட, குறிப்பிட்ட வகைமைகளைச் சேர்ந்த புனைவு நூல்களில் ஏறக்குறைய ஐந்தில் ஒன்றில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய எழுத்து இடம்பெற்றிருப்பதாகச் சக்ரவர்த்தியும் தில்லானும் மதிப்பிட்டுள்ளனர். இதை அறியப் பாங்கிராம் மென்பொருளைப் பயன்படுத்தினர். அவர்களது ஆய்வில் பொதுவாசகர்களும் மதிப்பீட்டாளர்களாக இருந்தனர். படைப்பெழுத்து மாணவர்களாக இல்லாத அந்த வாசகர்கள், AI யின் திறன் மேம்பாட்டுக்கு முந்தைய சோதனையிலேயே, மனிதர்கள் எழுதியவற்றைவிடச் செயற்கை நுண்ணறிவின் எழுத்தையே விரும்பியிருந்தனர்.
விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெறும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் முன்னணிப் பதிப்பகங்கள் வழியே வெளிவருகின்றன. அவற்றுக்கான சந்தையைச் செயற்கை நுண்ணறிவு மூலம் யாரோ கைப்பற்றிவிடாமல், இது தொடக்கத்தில் பாதுகாக்கப் படலாம். இருந்தாலும், எழுத்தாளராக விரும்புபவர்கள் AI யைப் பயன்படுத்தி, அவை உருவாக்கும் எழுத்தைத் தங்களுடையதாகக் காட்ட முடியும். மரபான பதிப்பகங்களுக்கே அவற்றை விற்கவும் முடியும். ஏற்கெனவே பெயர்பெற்ற எழுத்தாளர்களும் தங்கள் பழைய நாவல்களை AI யில் உள்ளிட்டு அதை நுண்சீரமைத்து, புதிய நாவல்களை உருவாக்கலாம். டியாஸும் நூனெஸும் அதைச் செய்யாவிட்டாலும், பிறர் செய்யலாம்.
செயற்கை நுண்ணறிவு எழுத்து நாளடைவில் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால், அதைத் தாங்கள் பயன்படுத்துவதை யாரும் மறைக்க வேண்டியிருக்காது. அது உருவாக்கும் மொழி முற்றிலும் புதிய இலக்கிய வடிவங்களுக்கும் வழிவகுக்கலாம். நாவலின் இடத்தைப் பிடுங்கும் புதிய வடிவங்கள்கூட உருவாகலாம். அப்போது, இலக்கியம் எதற்காக என்ற கேள்விக்குப் புதிய கோட்பாட்டை மக்கள் உருவாக்கிக் கொள்ளலாம். ஒருவேளை மனித உறவுக்காக அல்லாமல், ஆல்ட்மன் சொல்வதுபோல, கருத்துத் தொகுப்புகளைத் திறம்படக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக இலக்கியம் இருக்கிறது என்று சொல்லலாம்.
இது எதிர்காலத்தில் நடக்கலாம். ஆனால், பண்பாட்டில் செல்வாக்குச் செலுத்துபவை பொருளாதார மாற்றங்களும் தொழில்நுட்ப மாற்றங்களும் மட்டுமே அல்ல. அவைதாம் மிக முக்கியமான காரணிகள் என்றுகூடச் சொல்ல முடியாது என்று சிலர் வாதிடுகிறார்கள். இலக்கியம் குறித்த பார்வையில் மற்றொரு முக்கியமான மாற்றம், இருபதாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து வந்தது. தனிமனிதனை மையப்படுத்திய ஐரோப்பிய, அமெரிக்க மனப்பாங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விதத்தில் அங்கிருந்த பின்காலனியச் சிந்தனையாளர்கள் இலக்கியத்தைப் புரிந்துகொண்டனர். அவர்களின் பார்வை அதிக அரசியல்தன்மை கொண்டதாக இருந்தது.
கென்ய நாவலாசிரியர் கூகி வா தியாங்கோ, 1986இல் வெளியான காலனிய ஆதிக்கத்திலிருந்து மனத்தை விடுவித்தல் (Decolonising the Mind) நூலில் எழுதினார்: “மொழி பண்பாட்டைச் சுமக்கிறது. நம்மையும் உலகில் நமக்குள்ள இடத்தையும் நாம் உணர்ந்துகொள்வதற்கு அடிப்படையாக இருக்கும் முழுமையான விழுமியத் தொகுப்பைப் பண்பாடு சுமக்கிறது. குறிப்பாக, வாய்மொழி இலக்கியம், எழுத்திலக்கியம் வழியாக இதைச் செய்கிறது.” மேலும் அவர் எழுதினார்: “ஆகவே, குறிப்பிட்ட வடிவமும் பண்பும், குறிப்பிட்ட வரலாறும், உலகத்துடன் குறிப்பிட்ட ஓர் உறவும் கொண்ட மனிதச் சமூகமாகிய நம்மிடமிருந்து மொழியைப் பிரிக்க முடியாது.”
கென்யாவைக் காலனியாதிக்கத்துக்கு உட்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய தியாங்கோ, பிறகு தான் பேசிவளர்ந்த மொழியான கிகூயூவுக்கு மாறினார். பிற ஆப்பிரிக்க எழுத்தாளர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இலக்கியத்தை ஒரு கூட்டு அனுபவமாகவும் அரசியல் அனுபவமாகவும் அவர் கண்டார். அவரது படைப்புகளை மதுக்கூடங்களில் இருப்பவர்களுக்கு வாசித்துக் காட்டுவதைச் சில ‘தொழில்முறை வாசகர்கள்’ தாமாகவே ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். வாசிப்பவர் தன் கோப்பையைக் காலி செய்ததும், அவர் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்பதற்காக, “அவருக்கு இன்னொரு பீர் பாட்டில் கொடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டிருப்பவர்கள் குரலெழுப்புவார்களாம்.
செயற்கை நுண்ணறிவின் காலத்தில் தியாங்கோவின் அணுகுமுறை நமக்கு வழிகாட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் மொழியும் கூட பண்பாட்டையும் விழுமியங்களையுமே சுமக்கிறது என்பதை அவரது படைப்புகள் நினைவூட்டுகின்றன. அந்த மொழி சுமக்கும் பண்பாட்டையும் விழுமியங்களையும் பெரும்பாலும் இந்த AI களை உருவாக்கும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. அண்மைய ஆய்வொன்றில், வரப்போகும் எதிர்காலத்தை விவரிக்கும்படி முன்னணி AI செயலிகளிடமும், மனிதர்களிடமும் கேட்கப்பட்டது. மனிதர்களைவிட AI கள், ‘தொழில்நுட்பம்’, ‘டிஜிட்டல்’, ‘செயற்கை நுண்ணறிவு’ போன்ற அறிவியல் சொற்களை அதிகம் பயன்படுத்தின.
வேறு சில சமயங்களில் இந்தச் செல்வாக்கு நுட்பமாக வெளிப்படுகிறது. ஆங்கிலத்தை மையமாகக் கொண்ட மாதிரிகள், ஆங்கிலம் சாராத சூழல்களில் தடுமாறுவது ஓர் உதாரணம். அதன் விளைவாகப் பிற பண்பாடுகளைப் புண்படுத்தும் பதில்கள் உருவாகின்றன. குற்றவியல், நீதி, கல்வி ஆகிய துறைகளில்கூடப் பாரபட்சங்கள் தோன்றுகின்றன. டியாஸைப் பின்பற்றிய மாதிரி அவரது வட்டார வழக்கின் நுட்பங்களைச் சரியாக உள்வாங்காதது அதிர்ச்சிக்குரியதல்ல. எத்தனையோ பக்கங்களை அது வாசித்துத் தன் அறிவைப் பெருக்கியிருந்தாலும், அதன் எழுத்து அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. டியாஸின் அந்தப் போலிப் பிரதிக்கு ஒரு முகம் இருந்தால், அது அவருடைய முகத்தைவிட, மெக்சிகோவின் அகல்விளிம்புத் தொப்பியான சொம்ப்ரெரோவை அணிந்த ஆல்ட்மனின் (AI சார்பாளர்) முகம் போலத்தான் இருக்கும். ஆல்ட்மனின் ஸ்பானிய உச்சரிப்பு நம்பும்படி இருக்கிறதா என்பது இங்கு மிக முக்கியமான கேள்வியல்ல. எல்லோரும் சேர்ந்து அவரை விருந்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வது எப்படி என்பதுதான் கேள்வி.
வாசிப்பையும் எழுத்தையும் தனிப்பட்ட அனுபவமாகக் காணும் ஐரோப்பியக் கருத்தாக்கம், மனிதரைத் தனிமைப்படுத்தக்கூடும். தியாங்கோவின் பார்வையிலோ, இலக்கியம் கூட்டு அனுபவத்துக்கும் கூட்டுச் செயல்பாட்டுக்குமான களம். அது நமக்கு வேறொரு பாதையைக் காட்டுகிறது. ஆல்ட்மன் விவரிக்கும் எதிர்காலத்துக்கு மாற்றான பல எதிர்காலங்களை நாம் ஒன்றாகக் கற்பனை செய்யலாம்; செயலிலும் கொண்டுவரலாம். அதற்கு நமது இலக்கியத்தைப் பயன்படுத்தலாம். நாவல்கள் மட்டுமல்ல, டிஜிட்டல் காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் பிற தொடர்புறு வடிவங்களையும் பயன்படுத்தலாம்.
சக்ரவர்த்தியும் அவரது இணை ஆசிரியர்களும் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் சில பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். பகடியாக எழுதப்படுபவற்றைத் தவிர, சிறந்த எழுத்தாளர்களைப் பின்பற்றும் போலிப் பிரதிகளைத் தங்கள் Al செயலிகள் உருவாக்காமல் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தடுக்கலாம். செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவிக்காதபட்சத்தில், அவ்வாறு உருவாக்கப்பட்ட எழுத்தைப் பதிப்புரிமை மீறலாக நீதிபதிகள் கருதலாம். எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவுத் திறனை நுண்சீரமைப்பதற்குத் தடை விதிக்கலாம். அதை ஆதரிப்பதாகச் சக்ரவர்த்தி என்னிடம் சொன்னார். அவரே தான் செய்த சோதனையைத்தான் தடைசெய்ய வேண்டும் என்கிறார். எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளைக் கொண்டே இதைச் செய்வதையும்கூடத் தடுக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார். அதுவும் சந்தையைச் செயற்கை எழுத்தால் நிரப்பிவிடக்கூடும் என்பதே காரணம். தொழில்நுட்பரீதியாக இது சாத்தியமானதுதான். மக்கள் ஒன்றாகச் சேர்ந்து கோரிக்கை வைக்க வேண்டும். அவ்வளவுதான் தேவை.
ஹான் காங்கின் இலக்கிய முகவர் வழியாக அவரிடம் நேர்காணல் கேட்டபோது பதில் வரவில்லை. ஆனால், தான் எழுத்தாளரானது பற்றி ஹான் காங் விரிவாகப் பேசியிருக்கிறார். தென் கொரியாவில் அவரது சொந்த ஊரான குவாங்ஜுவில், 1980இல் ஒரு படுகொலை நடந்தது. அந்தப் படுகொலை ஜனநாயக ஆதரவு இயக்கம் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவந்தது. சிறுமியாக இருந்தபோதே அவர் அதைப் பற்றி அறிந்துகொண்டார். தனக்குரிய அந்த அரசியல், பண்பாட்டுச் சூழலில் ஒரு கேள்வியை எழுப்ப அது அவரைத் தூண்டியது: மனிதராக இருப்பதன் நோக்கம் என்ன? நோபல் பரிசு ஏற்புரையில் அவர் பேசிய விதத்தில், வாசிப்பும் எழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த ஒரே செயல்பாடு போலத் தோன்றின. அவர் சொன்னார்: “மொழி என்னும் நூலிழையைப் பின்தொடர்ந்து இன்னொரு இதயத்தின் ஆழத்துக்குள் செல்வது; மற்றொரு அகவுலகைச் சந்திப்பது. எனக்கு மிக இன்றியமையாத, மிக அவசரமான கேள்விகளை எடுத்துக்கொண்டு, அந்த நூலிழையிடம் நம்பிக்கையுடன் அவற்றை ஒப்படைப்பது; பிற சுயங்களை நோக்கி அவற்றை அனுப்பிவைப்பது.”
தி வைட் புக் நூலில் வரும் தாயையும் இறந்துகொண்டிருக்கும் குழந்தையையும் பற்றிய காட்சி குறித்தும் ஹான் காங் பேசியிருக்கிறார். நாவலை எழுதுவதற்கு முன்பே, ஒரு சிறு உரையாடல் துணுக்கு தன்னைத் தொடர்ந்து வந்ததாக தி கார்டியன் இதழிடம் சொன்னார்: “செத்துவிடாதே. தயவுசெய்து செத்துவிடாதே.” அந்தச் சொற்களைத் தன்னிடமிருந்துதான் ஹான் காங் கேட்டிருக்க வேண்டும் என்று பின்னர் அவரது தாய் சொன்னார். “நான் பிறப்பதற்கு முன்பே இறந்துபோன என் அக்காவிடம், இந்தச் சொற்களைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்ததாக அம்மா கூறினார்” என்று ஹான் காங் நினைவுகூர்ந்தார். செயற்கை நுண்ணறிவின் பிரதியைவிட நான் குறைவாக விரும்பிய அந்த வரி, ஏறக்குறைய நேரடியாகவே அவரது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.
நான் இன்னும் தி வைட் புக் வாசிக்கவில்லை. ஆனால், அண்மையில் என் உள்ளூர் நூலகத்தில் அந்த நூலை முன்பதிவு செய்திருக்கிறேன். நானும் என் அக்காவை இழந்தவள்தான். அவள் உயிர் பிழைக்க வேண்டும் என்று நானும் வேண்டிக்கொண்டவள்தான். ஹான் காங் நீட்டிய அந்த நூலிழையைப் பற்றிக்கொள்ளக் காத்திருக்கிறேன். அதைப் பற்றியபடி, அவருடனும் மற்ற எல்லோருடனும் சேர்ந்து, மனிதராக இருப்பதன் நோக்கத்தைப் பற்றி யோசிக்கக் காத்திருக்கிறேன்.
மூலம் The New Yorker | 20 டிசம்பர் 2025
தமிழில்: மல்லிகா வீரராகவன்
வௌஹினி வரா
வௌஹினி வரா (Vauhini Vara) எழுதிய Searches: Selfhood in the Digital Age, போர்ச்லைட் வணிக நூல் விருதை வென்றதுடன், பப்ளிஷர்ஸ் வீக்லி இதழால் அந்த ஆண்டின் சிறந்த பத்து நூல்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது முந்தைய நூல்களான This Is Salvaged, ஸ்டோரி பரிசின் நெடும்பட்டியலில் இடம்பெற்று, ஹை பிளெயின்ஸ் நூல் விருதையும் வென்றது; The Immortal King Rao, புலிட்சர் பரிசின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்று, கொலராடோ நூல் விருதை வென்றது.
இதழாளரான இவர், பிசினஸ்வீக், தி அட்லாண்டிக், தி நியூ யார்க்கர் உள்ளிட்ட இதழ்களிலும் எழுதிவருகிறார். Lighthouse Writers Workshop அமைப்பின் Book Project, Look2Justice அமைப்பின் Free Thinker Book Fellowship ஆகிய திட்டங்களின் வழியாக, நூல்களை எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்.