தமிழகத்தின் சமகால அரசியல், சமூக உரையாடல்களில் ஒருவரைச் சிறுமைப்படுத்தவோ அல்லது அடிமைத்தனத்தைச் சாடவோ பயன்படுத்தப்படும் “அவனுக்குக் கழுவிக் கொண்டே இரு”, “கக்கூஸ் கழுவு” போன்ற சொல்லாடல்கள் வெறும் வசவுச் சொற்கள் அல்ல. அவை ஒரு நீண்டகாலச் சமூகப் படிநிலையின் மொழியியல் எச்சங்கள் ஆகும். தூய்மைப் பணிகளை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது திணித்த வரலாற்றுப் பின்னணியில் இருந்துதான் இத்தகைய சொற்கள் பிறக்கின்றன. ஒருவரது அந்தரங்கமான கழிவுச் சுத்தம் செய்வதை இழிவான செயலாகக் கருதும் பொதுப்புத்தியும், அதை மற்றவர் மீது ஏவும் அதிகாரமுமே இச்சொற்களின் பின்னால் இருக்கும் உளவியல். எனவே கழிவறைப் பழக்கங்களின் வரலாற்றைப் பார்ப்பது என்பது நம் சமூகத்தின் அதிகார அமைப்பைப் புரிந்துகொள்வதும் கூட.
மொழியியல் ரீதியாக இத்தகைய வசைச்சொற்கள் தமிழுக்கு மட்டும் உரியவை அல்ல. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் “Kiss my ass” அல்லது “Shithead” போன்ற வசைகளும், பிரெஞ்சு மொழியில் உள்ள இதேபோன்ற வசவுகளும் ஒரு மனிதனின் கழிவை அதிகாரப் படிநிலையின் குறியீடாகவே பயன்படுத்துகின்றன. ஜெர்மன் மொழியில் “Arschloch” (மலத்துவாரம்) மற்றும் “Scheißkerl” (கழிசடை மனிதன்) ஆகிய சொற்கள் ஒருவரை மனிதத் தன்மையற்றவராகச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்பானிஷ் மொழியில் “Vete a la mierda” (கழிவுக்குள் போ) என்பது ஒருவரைத் தரம் தாழ்த்தும் வன்மமான சொல். இந்தி, உருது மொழிகளில் “Gandi naali ka keeda” (சாக்கடைக் கிருமி) என்ற வசவு, ஒரு மனிதனைச் சமூகத்தின் மிகக் கீழ்மட்ட வடிகால் அமைப்புடன் ஒப்பிட்டுச் சிறுமைப்படுத்துகிறது.
ஜப்பானிய மொழியில் “Kuso-kurae” (கழிவைத் தின்னு) போன்ற பதங்கள் ஒருவரைப் பண்பாட்டு ரீதியாகத் தரம் தாழ்த்தப் பயன்படுகின்றன. அரபு மொழியில் கூட, ஒருவரின் தூய்மையற்ற நிலையைக் குறிக்கும் சொற்கள் அவரது ஒழுக்கச் சிதைவாகவே அடையாளப் படுகின்றன. ஒரு மனிதனை அவனது கழிவாகவே உருவகிப்பதன் மூலம் அல்லது அவனது கழிவைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்பவரை இழிவானவராகச் சித்தரிப்பதன் மூலம் சமூகம் ஒருவகை வன்முறையை மொழியில் நிகழ்த்துகிறது. இந்த வசைச்சொற்கள் வெறும் சொற்களாக மட்டும் தங்கிவிடுவதில்லை. அவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உழைப்பையும் அந்த உழைப்பின் மீதான அதிகார வர்க்கத்தின் அருவருப்பையும் காலம் காலமாகச் சுமந்து வருகின்றன.
மானுடவியல் ரீதியாகப் பார்த்தால், இரு கால்நடை பரிணாம வளர்ச்சியில் உருவானபோது மனிதனின் சுகாதாரச் சவால்களும் உருவாகின. மற்ற விலங்குகளுக்கு இல்லாத தனித்த உடல் அமைப்பு மனிதனுக்கு உண்டு. நமது புட்டப் பகுதியின் தசை வளர்ச்சி (Gluteus maximus) உடல் கழிவுகளை நீக்கிய பிறகு அந்த இடத்தை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. ஆரம்பகால மனிதன் இந்தப் பகுதியைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினால் ஏற்படும் தோல் எரிச்சல் (Pruritus ani) மற்றும் ஒட்டுண்ணித் தொற்றுகள் மூலம் சுகாதாரத்தின் அவசியத்தைத் தன் உடல் வழியாகவே உணர்ந்தான்.
கழிவுகள் வழியாகப் பரவும் புழுக்கள், கிருமிகள் தோலில் ஊடுருவும்போது ஏற்படும் அவஸ்தைகளே, சுத்தப்படுத்துதல் என்பது வெறும் விருப்பமல்ல அது ஒரு வாழ்வாதாரத் தேவை என்பதை மனிதனுக்குப் புரியவைத்தன. மானுடவியலாளர்கள், பரிணாம உளவியலாளர்களின் ஆய்வுகள் இதனை “நடத்தை சார்ந்த எதிர்ப்புத் திறன்” (Behavioural Immune System) என்று அழைக்கின்றன. நோய்த்தொற்றுகளை உருவாக்கும் கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாப்பதற்காக மனித மூளை பரிணாம வளர்ச்சியில் இந்த அருவருப்பை ஒரு தற்காப்பு உணர்வாக வளர்த்தெடுத்துள்ளது. இந்த அருவருப்பு உணர்வே மனிதனைத் தூய்மைப் பழக்கவழக்கங்களை நோக்கி உந்தியது.
இந்தத் தேவையை நிவர்த்தி செய்ய மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினான். இது ஒரு திட்டமிட்ட கண்டுபிடிப்பு என்பதை விட அந்தந்த நிலப்பரப்பின் சூழலியல் சார்ந்த ஒரு தகவமைப்பு ஆகும். ஒரு மனிதன் “துடைப்பவனா” அல்லது “கழுவுபவனா” என்பதை அவனது பண்பாடு தீர்மானிப்பதற்கு முன்னரே அவனது நிலவியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது. வெப்ப மண்டல நாடுகளில் நீர் தாராளமாகக் கிடைத்ததால் நீரால் கழுவுவது ஒரு இயல்பான உடல்சார் ஒழுக்கமாக மாறியது.
சிந்து சமவெளி நாகரிகத்தில் மொஹஞ்சதாரோ – ஹரப்பா வீடுகளில் செங்கற்களால் கட்டப்பட்ட கழிவறைகள், அவற்றுடன் இணைக்கப்பட்ட மேம்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. லோத்தல் போன்ற இடங்களில் கழிவறை இருக்கைகளுக்கு அருகில் நீர் நிரப்பப்பட்ட பாத்திரங்கள் வைப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் நீரைக் கொண்டு தூய்மை செய்யும் முறையை ஒரு நகர்ப்புற ஒழுக்கமாகக் கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. சிந்து சமவெளியின் வடிகால் அமைப்புகள் வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் பொதுச் சுகாதார அக்கறையின் வெளிப்பாடுகள். செங்கற்களால் மூடப்பட்ட வடிகால்கள் கழிவை மக்கள் கண்ணிலிருந்து மறைத்து வைத்திருந்தன. இது அக் காலத்திலேயே கழிவு மேலாண்மை குறித்த ஒரு மேம்பட்ட அறிதல் நிலவியதைக் காட்டுகிறது.
நீர்நிலைகளிலிருந்து விலகி வாழ்ந்த சமூகங்கள் துடைக்கும் முறையைக் கையாண்டன. கடலோரங்களில் வாழ்ந்தவர்கள் மென்மையான கடல் சிப்பிகளையும் காய்ந்த கடல் பாசிகளையும் பயன்படுத்தினர். அடர்ந்த காடுகளில் வாழ்ந்தவர்கள் ஈரப்பதம் மிக்க மென்மையான பாசிகளையும் நச்சுத்தன்மையற்ற அகன்ற இலைகளையும் பயன்படுத்தினர். வறண்ட பாலைவன நிலங்களில் வாழ்ந்தவர்கள் மணல் அல்லது சிறுகற்களைப் பயன்படுத்தினர். இவ்வாறாகப் புவியியல் அமைப்பு மனிதனின் அந்தரங்கப் பழக்கங்களை வடிவமைத்தது. குளிர் பிரதேசங்களில் நீர் விரைவாகக் குளிர்ந்துவிடும் என்பதாலும் அங்குள்ள நீர்நிலைகள் உறைந்துவிடும் என்பதாலும் அவர்கள் நீரால் கழுவுவதைத் தவிர்த்து உலர்வான பொருட்களைப் பயன்படுத்தினர். இதுவே பின்னாட்களில் காகிதப் பயன்பாட்டிற்கான அடிப்படையாக அமைந்தது.
பண்டைய கிரேக்க ரோமானியப் பண்பாடுகளில் கழிப்பறை என்பது இன்று நாம் கருதுவது போல ஒரு தனிப்பட்ட அந்தரங்க இடமாக இருக்கவில்லை. அது ஒரு சமூக உரையாடல் கூடமாகவே திகழ்ந்தது. ரோமானியப் பொதுக் கழிப்பிடங்களில் மக்கள் வரிசையாக அமர்ந்து கழிவு நீக்கம் செய்தபடியே சமூக, அரசியல் விவாதங்களை மேற்கொண்டனர். அங்கு டெர்சோரியம் எனப்படும் ஒரு குச்சியில் கட்டப்பட்ட கடல் பஞ்சு பயன்படுத்தப்பட்டது. இவை வினிகர் அல்லது உப்பு கலந்த நீர் வாளியில் வைக்கப்பட்டிருக்கும். இது ஒரு பொதுச்சொத்தாகப் பகிரப்பட்டதால் குடல் சார்ந்த ஒட்டுண்ணிகள் பரவ இது முக்கியக் காரணமாக அமைந்தது.
கிரேக்கத்தில் பெஸோய் எனப்படும் சிறிய வழுவழுப்பான கற்கள் துடைக்கப் பயன்படுத்தப்பட்டன. இவை மனித உடல் பயன்பாட்டுக்காக இருந்திருக்கலாம் என்பதைக் காட்டும் வலுவான சான்றுகளாகப் பல மட்பாண்டத் துண்டுகள் ஆய்வாளர்களால் கருதப்படுகின்றன. சில துண்டுகளில் அரசியல்வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது ஒரு குறியீட்டு அரசியல் எதிர்ப்பாகக் கருதப்படுகிறது. தங்களுக்குப் பிடிக்காத ஒருவரின் பெயரைக் கொண்ட ஒரு துண்டைக் கொண்டு கழிவைத் துடைப்பது என்பது அக் காலத்தின் உச்சகட்ட இழிவாகப் பார்க்கப்பட்டது. அரசியல் பகையைத் தீர்த்துக் கொள்ளக் கழிவறைப் பழக்கங்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது மானுடவியலில் ஒரு சுவாரசியமான பதிவு ஆகும்.
தனிப்பட்ட அந்தரங்கக் கழிவறைகள் என்ற கருத்தாக்கம் மனித வரலாற்றில் மிக சமீபத்தியது. பழங்காலத்தில் கழிவறைகள் பொதுவெளியிலேயே இருந்தன. தனிமை என்பது ஒரு நவீன கட்டடக்கலை மற்றும் சமூகக் கண்டுபிடிப்பாகும். மத்திய கால ஐரோப்பாவில் வீடுகளில் ஒரு சிறிய பாத்திரத்தில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை தெருக்களில் நேரடியாக வீசப்பட்டன. பிரான்சின் வெர்சாய் அரண்மனை உலகப் புகழ் பெற்ற ஒன்றாக இருந்தாலும் அங்கு முறையான கழிவறைகள் இல்லை என்பது ஒரு வியப்பான வரலாற்றுத் தகவல். நூற்றுக்கணக்கான பிரபுக்களும் ஊழியர்களும் வாழ்ந்த அந்த அரண்மனையில் முறையான சுகாதார வசதிகள் இல்லாததால் தாழ்வாரங்களும் மறைவான இடங்களும் கழிவறை ஆகின. பிரபுக்கள் கூடத் தங்களின் அந்தரங்கச் சுத்தத்தைப் பேண முடியாமல் அவதிப்பட்டனர். வெர்சாய் அரண்மனையின் அந்தப் பிரம்மாண்டமான அழகிற்குப் பின்னால் தீராத துர்நாற்றம் நிலவியதாக அக் காலப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இது பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய மேல்மட்ட வர்க்கத்தின் சுகாதார அவல நிலையைத் வெளிப்படுத்துகிறது.
வரலாற்றுப் பதிவுகளின்படி, 1858 ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட “மகா துர்நாற்றம்” (The Great Stink) ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. தேம்ஸ் நதி கழிவுகளால் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட அந்த நெருக்கடியே நவீன கழிவுநீர் வடிகால் அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தது. லண்டனின் நாடாளுமன்றக் கூட்டங்களைக் கூட நடத்த முடியாத அளவிற்கு அந்தத் துர்நாற்றம் கடுமையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ஜோசப் பாசல்ஜெட் என்பவரின் தலைமையில் லண்டனில் மாபெரும் நிலத்தடி வடிகால் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது நவீன நகரமைப்புகளில் கழிவுநீர் மேலாண்மை குறித்த உலகளாவிய விழிப்புணர்வைத் தொடங்கியது. இந்த வடிகால் அமைப்புகள் ஒரு முக்கியமான உளவியல் மாற்றத்தைச் செய்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் தங்கள் கழிவைச் சுற்றுப்புறத்திலேயே கண்டு வந்தனர். ஆனால் நவீனக் குழாய்கள் கழிவை நிலத்தடிக்கு கொண்டு சென்றபோது கழிவு குறித்த சமூகப் பொறுப்புணர்வு மறைந்து போனது. கழிவு என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளாக மாறியது.
இதற்கு நேர்மாறாக ஜப்பானின் எடோ காலத்தில் மனிதக் கழிவு ஒரு முக்கியமான பொருளாதாரப் பொருளாக இருந்தது. நகரங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை விவசாயிகள் விலைக்கு வாங்கிச் சென்று உரமாகப் பயன்படுத்தினர். பணக்காரக் குடும்பங்களின் கழிவுகளில் சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றிற்கு அதிக விலை கிடைத்தது. இது ஒரு சிறந்த வட்டச் சூழலியல் பொருளாதாரமாகத் திகழ்ந்தது. கழிவு என்பது ஒரு அருவருப்பான பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அது ஒரு செல்வமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் நவீன மேற்கத்தியச் சுகாதார முறைகள் கழிவை ஒரு நச்சாகப் பார்த்து அதனை முற்றிலும் அப்புறப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. கழிவு குறித்த இந்தப் பார்வை மாற்றமானது, வெறும் குழாய்களோடு நின்றுவிடாமல் மனித உடலின் இயக்கத்தையே மாற்றியமைத்தது. கழிவை ஒரு நச்சாகக் கருதி விரைவாக வெளியேற்றி மறைக்க முற்பட்ட நவீன நாகரிகம், கழிவறைகளை வெறும் உடல் தேவைகளை நிறைவேற்றும் இடங்களாக மட்டும் பார்க்காமல், ஒரு சமூகத்தின் உடல்சார் ஒழுக்கத்தை வடிவமைக்கும் இடங்களாகவும் மாற்றியது.
நவீன மருத்துவ ஆய்வுகள், கதிரியக்கச் சோதனைகளின்படி (Radiological studies), குந்தும் முறையில் உடல் நிலை இயற்கையுடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது. இது Anorectal angle எனப்படும் மலக்குடல் கோணத்தைச் சரியாக அமைத்து கழிவு நீக்கத்தைச் சுலபமாக்குகிறது. குந்துதல் நிலையில் Puborectalis தசை முழுமையாகத் தளர்வடைந்து கழிவு வெளியேறுவதை எளிதாக்குகிறது.
மாறாக அமர்ந்து பயன்படுத்தும் கழிவறைகள் உடலை அறைக்கலன் பண்பாட்டிற்குள் கொண்டு வருகின்றன. மேலைநாடுகளில் குளிர்ந்த காலநிலையும் வீடுகளுக்குள் மரச்சாமான்களைப் பயன்படுத்தும் பழக்கமும் இத்தகைய மாற்றத்திற்குக் காரணமாயின. இந்த அமர்ந்து பயன்படுத்தும் முறையே பிற்காலத்தில் மலச்சிக்கல், மூல நோய் போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாக அமைந்தது என்று சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் இயற்கை இயக்கத்தை சமூக நாகரிகம் கட்டமைத்த ஒரு சூழலுக்குள் மாற்றியதன் விளைவு இதுவாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய உலகளாவிய உடல்சார் மாற்றங்களுக்கு இணையாகத் தமிழகத்தின் நிலவியல் பின்னணியைப் பார்க்கும்போது, அங்கு உடல் இயக்கமும் நிலத்தின் தன்மையும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது புலனாகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மருத நிலம் எனப்படும் ஆற்றுப்படுகை நாகரிகங்களே தமிழர்களின் தூய்மைப் பழக்கங்களைத் தீர்மானித்தன. சங்க இலக்கியங்களில் ‘நீராடல்’ என்பது உடலைத் தூய்மைப்படுத்துவதைத் தாண்டி ஒரு நற்செயலாகவே பார்க்கப்பட்டது. ஐங்குறுநூறு, பரிபாடல் போன்ற இலக்கியங்களில் நீர் நிலைகளுடன் தமிழர்களுக்கு இருந்த பிரிக்க முடியாத பிணைப்பு விவரிக்கப்படுகிறது. அரிக்கமேடு, கீழடி அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்ட உறைகிணறுகள், சுடுமண் வடிகால் குழாய்கள் தமிழர்களின் மேம்பட்ட நீர் மேலாண்மை அறிவிற்கு சான்றுகள் ஆகும். இவை நீர்நிலைகள் மாசுபடாமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காட்டுகின்றன.
மானுடவியலாளர் தொ. பரமசிவன் தனது “பண்பாட்டு அசைவுகள்” நூலில் தமிழர்களின் நீர்சார் பண்பாட்டை மிக நுட்பமாக விளக்குகிறார். “தமிழர் பண்பாட்டில் நீர் என்பது அழுக்கு நீக்கும் பயன் மட்டுமல்ல அது உடலின் உஷ்ணத்தைத் தணிக்கும் ஒரு மருந்தும் கூட” என்பது அவரது அவதானிப்பு. அவர் “கையில் இருக்கும் நீர்” என்பதை ஒரு உடல்சார் ஒழுக்கம் என்கிறார். ஒருவன் தன் உடலைச் சுத்தப்படுத்தத் தேவையான நீரைத் தன் கையிலேயே அதாவது சொம்பில் எடுத்துச் செல்வது ஒரு சமூகத் தற்பேணலின் குறியீடு என்கிறார்.
ஆனால் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் இந்தச் சொம்பு கலாச்சாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திறந்தவெளியில் சொம்புடன் செல்வது ஒரு ‘நாகரிகமற்ற’ செயலாகக் காலனிய உரையாடல்களில் சித்தரிக்கப்பட்டது. தமிழர்களின் நீர்சார் தன்னாட்சியைச் சிதைத்து, அவர்களை மேலைநாட்டுக் கழிவறைப் பழக்கங்களுக்குள் கொண்டுசெல்லும் ஒரு காலனிய அதிகாரப் பார்வை இந்த உரையாடல்களின் பின்னணியில் இருந்தது. சொம்பைப் பயன்படுத்துவது என்பது ஒரு சுதந்திரமான செயல் ஆனால் அது காலனியப் பார்வையில் கீழ்த்தரமானதாகக் கருதப்பட்டது.
வரலாற்று ரீதியாக இந்தத் தூய்மைப் பழக்கம் ஒரு சமூக ஒடுக்குமுறை ஆயுதமாக மாறிய தருணமே சாதியக் கட்டமைப்பின் வேர் ஆகும். ஆரம்பத்தில் மனிதர்கள் தங்கள் தூய்மையைத் தாங்களே செய்துகொண்டனர். ஆனால் நிலவுடைமைச் சமூகங்கள் உருவானபோது தூய்மை என்பது புனிதம் என்ற மதக் கருத்தியலோடு இணைக்கப்பட்டது. ஒரு நபர் தன் கழிவைத் தானே சுத்தம் செய்வது இழிவாகக் கருதப்பட்ட தருணத்தில் அந்தப் பணியைச் செய்ய ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
நவீன நகர்மயமாதல் மற்றும் வடிகால் கட்டமைப்புகள் உருவானபோது, இந்தச் சாதிய உழைப்பு ஒரு முறைசார்ந்த பணியாக (Institutionalized labour) மாற்றப்பட்டது. இது பொதுச் சுகாதாரத்தைப் பேணுதல் என்ற போர்வையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நிரந்தரமாகத் துப்புரவுப் பணியில் முடக்கி வைத்தது. நகரங்களின் வடிகால் அமைப்புகளைச் சுத்தம் செய்யும் பணி ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மீது நிரந்தரமாகத் திணிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, நகரங்களின் நிலத்தடி வடிகால் குழாய்களும் சாதியப் படிநிலையும் ஒரே நேர்க்கோட்டில் பிணைக்கப்பட்டன.
தூய்மை செய்பவர், அழுக்கு மூட்டை சுமப்பவர் என்ற பிரிவினை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது. தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் தற்பேணல் ஒருவனிடமிருந்து பறிக்கப்படும்போது அவன் அதிகாரத்தின் அடிமையாகிறான். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் உடலைச் சுத்தப்படுத்த மற்றவர்களைப் பயன்படுத்தத் தொடங்கியபோது சுகாதாரம் என்பது அதிகாரப் படிநிலையாக மாறியது. காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட நவீனக் கழிவுநீர் மேலாண்மை முறைகள் இந்தச் சாதிய உழைப்புச் சுரண்டலை நகரமைப்புகளுக்குள் முறைப்படுத்தின. சமூகப் படிநிலையை உழைப்பின் வழியாக நிலைநிறுத்திய அதே காலகட்டத்தில், துப்புரவுப் பணியில் மனித உழைப்பிற்கு மாற்றாக ‘பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியக்கூடிய’ பொருட்களை உருவாக்கும் ஒரு மாபெரும் சந்தைப் பொருளாதாரமும் மேற்கில் உருவெடுத்தது. உழைப்பைக் கொண்டு தூய்மை செய்வதற்கும், சந்தைப் பொருட்களைக் கொண்டு தூய்மை செய்வதற்கும் இடையிலான இந்தப் போட்டியில் காகிதப் பயன்பாடு மற்றும் நவீனக் கழிவறைத் தாள்களின் வரலாறு சுவாரசியமானது.
1857 ஆம் ஆண்டில் ஜோசப் காயெட்டி (Joseph Gayetty) கற்றாழைச் சாறு தடவப்பட்ட காகிதத்தை அறிமுகப்படுத்தியபோது, அது ஒரு சாதாரணத் தூய்மைப் பொருளாகக் கருதப்படவில்லை; மாறாக ஒரு மருத்துவப் பொருளாகவே சந்தைப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னால் அமெரிக்க, ஐரோப்பிய வீடுகளில் இதற்கான தாள் என்ற ஒன்றே இல்லை. மக்கள் பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் ‘சியர்ஸ் அண்ட் ரோபக்’ (Sears and Roebuck) போன்ற நிறுவனங்களின் வணிகப் பட்டியல்களை (Catalogs) இதற்காகப் பயன்படுத்தினர். குறிப்பாக, இந்த வணிகப் பட்டியல்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டவை என்பதாலும், அவை வீடுகளுக்கு இலவசமாகக் கிடைத்ததாலும், மக்கள் அவற்றையே கழிவறைகளில் தொங்கவிட்டனர்.
இந்தப் பட்டியல்களின் ஒரு மூலையில் துளையிடப்பட்டிருந்தது, அதனைத் தூய்மைக்காக எளிதாகக் கிழித்துப் பயன்படுத்தவே எனச் சொல்லப்பட்டது.
இருப்பினும், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் பத்திரிகைகள் பளபளப்பான தாள்களைப் (Glossy paper) பயன்படுத்தத் தொடங்கியபோது, அவை கழிவுகளைத் துடைக்க உகந்ததாக இல்லை. மேலும், செய்தித்தாள்களில் பயன்படுத்தப்பட்ட அச்சு மை மற்றும் காகிதத்தின் கரடுமுரடான தன்மை பலருக்குத் தோல் எரிச்சலையும், மூலநோய் (Hemorrhoids) போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. இதைக் கவனித்த ஜோசப் காயெட்டி, கற்றாழைச் சாறு தடவப்பட்ட மென்மையான தாள்களைக் கண்டறிந்து, அதனை ஒரு சிகிச்சை முறையாக மாற்றினார். 500 தாள்கள் கொண்ட ஒரு பெட்டி 50 சென்ட்களுக்கு விற்கப்பட்டது; இது அன்றைய காலகட்டத்தில் ஆடம்பரப் பொருளாகவே பார்க்கப்பட்டது. ஒவ்வொரு தாளிலும் அவரது பெயர் நீர்க்குறியாக (Watermark) அச்சிடப்பட்டிருந்தது, இது அவரது வணிக உத்தியாகவும் நம்பகத்தன்மையின் அடையாளமாகவும் இருந்தது.
காயெட்டியின் இந்தக் கண்டுபிடிப்பு, தனிநபர் சுகாதாரத்தைச் சந்தைப் பொருளாக மாற்றிய அதே வேளையில், கழிவறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒரு தனிநபரின் சமூக அந்தஸ்தையும் தீர்மானித்தன. இதன்பின்னர் 1890-களில் ஸ்காட் பேப்பர் நிறுவனம் (Scott Paper Company) துளையிடப்பட்ட சுருள் காகிதங்களை (Perforated rolls) அறிமுகப்படுத்தியபோது, அது ஒரு மாபெரும் வணிகப் புரட்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் காகிதங்களை வாங்குவதைச் சமூக ரீதியாக வெளிப்படையாகப் பேச மக்கள் வெட்கப்பட்டனர். ஆனால், தொழிற்புரட்சியின் விளைவாக உருவான நவீனக் குழாய் அமைப்புகளும் (Indoor plumbing), காகிதங்கள் தண்ணீரில் கரைந்து அடைப்புகளை ஏற்படுத்தாது என்ற வாக்குறுதியும், கழிவறைத் தாள்களை ஒவ்வொரு இல்லத்தின் இன்றியமையாத அங்கமாக மாற்றின.
ஆனால் இன்று உலகம் ஒரு பெரும் சூழலியல் முரணைச் சந்தித்து நிற்கிறது. இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சில் (NRDC) போன்ற அமைப்புகளின் ‘The Issue with Tissue’ ஆய்வுகளின்படி, மேலைநாடுகளில் பயன்படுத்தப்படும் கழிவறைத் தாள்களில் பெரும்பகுதி மறுசுழற்சி செய்யப்படாத ‘கன்னி மரக்கூழ்’ (Virgin pulp) மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக கனடாவின் ஆதிக்காடுகள் (Boreal Forest) போன்ற முக்கியமான சூழலியல் மண்டலங்கள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஏக்கர் பரப்பளவில் அழிக்கப்படுகின்றன.
அறிவியல் ரீதியான மதிப்பீடுகளின்படி, ஒரு சாதாரணக் கழிவறைத் தாள் சுருளை (Toilet roll) உற்பத்தி செய்யச் சுமார் 140 லிட்டர் (37 கேலன்கள்) தண்ணீர் தேவைப்படுகிறது. இது நீரால் கழுவும் முறையைப் பயன்படுத்துவதை விடப் பல மடங்கு அதிகமான நீர் நுகர்வு ஆகும். மேலும், காகிதத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் குளோரின் (Chlorine) போன்ற வேதிப்பொருட்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘டையாக்சின்’களை (Dioxins) வெளியிடுகின்றன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியப்படும் (Single-use) ஒரு பொருளுக்காக இவ்வளவு இயற்கை வளங்களைச் செலவிடுவது என்பது, நவீனச் சுகாதார முறையின் மிகப்பெரிய சூழலியல் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வின் காரணமாகவே, தற்போது ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் பிடே (Bidet) மற்றும் பம் கன் (Bum gun) போன்ற நீர்சார் கருவிகள் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் நீரால் கழுவும் முறை என்பது வெறும் சுகாதாரத் தேவை என்பதையும் தாண்டி, ஒரு பண்பாட்டு அடையாளமாகவே இன்றுவரை நீடிக்கிறது. இஸ்லாமியப் பண்பாட்டில் கடைப்பிடிக்கப்படும் இஸ்திஞ்சா (Istinja) முறை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இது உடல் கழிவுகளை நீக்கிய பிறகு நீரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதை ஒரு மார்க்கக் கடமையாகவும், வழிபாட்டிற்கு முந்தைய உடல் தூய்மையின் ஒரு பகுதியாகவும் முன்வைக்கிறது. இதேபோல் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற பகுதிகளில், டாபோ (Tabo) அல்லது காயுங் (Gayung) எனப்படும் சிறிய வாளிகளைப் பயன்படுத்தி நீரைக் கையால் மொண்டு ஊற்றிக் கழுவும் முறை இன்றும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு சமூக ஒழுக்கமாகவே நிலைபெற்றுள்ளது.
இத்தகைய ஆழமான நீர்சார் பண்பாடுகள் நவீன காலத்திலும் மறைந்துவிடவில்லை; மாறாக, அவை காலத்திற்கு ஏற்பத் தொழில்நுட்ப ரீதியாகத் தங்களை உருமாற்றிக் கொண்டன. இந்தத் தொழில்நுட்பப் பரிணாமத்தின் உச்சமாகவே ஜப்பானியர்களின் வாஷ்லெட்கள் (Washlets) திகழ்கின்றன. அவர்கள் ஒரு காலத்தில் காகித முறையைப் பயன்படுத்தினாலும், தங்களின் அடிப்படைப் பண்பாடான நீர்சார் தூய்மையைக் கைவிடாமல், அதனை வெப்பமூட்டப்பட்ட இருக்கைகள், துல்லியமான நீர் பீய்ச்சுதல் வசதிகளுடன் இணைத்து ஒரு நவீன சுகாதாரக் கலனாக மாற்றியுள்ளனர். ஜப்பானியப் பண்பாட்டில் தூய்மை என்பது ஒரு தார்மீக ஒழுக்கமாகவும் சமூக மரியாதையாகவும் பார்க்கப்படுவதே இத்தகைய அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை உந்துசக்தியாக அமைந்தது.
இந்தப் பரிணாமத்தின் அடுத்த கட்டமாக, கழிவுகள் அருவருப்பானவை என்ற நிலையிலிருந்து மாறி அவை ஒரு மருத்துவத் தரவாக (Medical Data) இன்று உருவெடுத்து வருகின்றன. எதிர்காலக் கழிவறைகள் வெறும் கழிவு நீக்க இடங்களாகத் தங்காமல், மனித ஆரோக்கியத்தை ஆய்வு செய்யும் ஸ்மார்ட் கருவிகளாக மாறி வருகின்றன. இவை மனிதர்களின் கழிவுகளை உடனுக்குடன் ஆய்வு செய்து, அவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற உடல்நிலை குறித்த மிக முக்கியமான தரவுகளை வழங்குகின்றன. இதன் மூலம் கழிவு நீக்கம் என்பது ஒரு சுகாதாரப் பழக்கத்திலிருந்து, தனிநபர் நலத்தைக் கண்காணிக்கும் ஒரு அறிவியல் தொழில்நுட்பமாகப் பரிணமித்துள்ளது.
சொம்பிலிருந்து பம் கன் வரை கருவிகள் மாறினாலும் அந்தக் கருவியைப் பயன்படுத்தும் மனிதர்களைப் பற்றிய சமூகப் பார்வை இன்னும் மாறவில்லை. கருவிகள் தனிமனிதத் தற்பேணலைத் திரும்பக் கொடுத்தாலும் நமது மொழியில் தங்கியிருக்கும் வசைச்சொற்கள் இன்னும் அந்தச் சமூக அதிகாரப் படிநிலையைப் பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன. கழிவு நீக்கம் என்பது ஒரு உயிரியல் தேவை ஆனால் அதன் மீதான சமூகப் பார்வையும் அந்தப் பணியைச் செய்பவர்கள் மீதான ஒடுக்குமுறையும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தூய்மை பேணுதல் என்பது வரலாற்றில் எப்படி ஒரு அதிகார ஆயுதமாக மாறியது என்பதை நாம் உணரும்போதுதான் உண்மையான சமூக மாற்றம் சாத்தியமாகும். இதுவே நமது மொழியில் உயிரோடு இருக்கும் சாதிய நினைவகம் ஆகும். ஒருவரை இழிவுபடுத்த “அவனுக்குக் கழுவிக் கொண்டே இரு” என்று சொல்லும் அந்த மொழி மாறாத வரை, தூய்மை பற்றிய எந்த நாகரிக முன்னேற்றமும் முழுமையானதாக இருக்க முடியாது.
ராஜண்ணா
மதுரையைச் சேர்ந்த பல் மருத்துவர், வாசகர், வலைப்பதிவாளர். வரலாறு, மானுடவியல், இயற்கை வரலாறு ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபட்டு வருவதோடு, பறவைகள், பாம்புகள் குறித்த ஆய்விலும் புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டவர்.