கட்டுரை

AI ஏன் கலையைப் படைக்கப் போவதில்லை?

1953-இல் ரோல்ட் டால், ‘The Great Automatic Grammatizator’ என்ற சிறுகதையை வெளியிட்டார். எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசையை மனத்துக்குள் வளர்த்திருக்கும் மின்பொறியாளர் ஒருவரைப் பற்றிய கதை அது. உலகிலேயே மிக வேகமாகக் கணக்கிடும் இயந்திரத்தை உருவாக்கி முடித்த பிறகு, ஒருநாள் அந்தப் பொறியாளருக்கு ஒன்று புலப்படுகிறது: ‘ஆங்கில இலக்கணத்தின் விதிகளும் கிட்டத்தட்ட கணித விதிகளைப் போலவே கறாரானவை.’ அவர் புனைவு எழுதும் ஓர் இயந்திரத்தை உருவாக்குகிறார். அந்த இயந்திரத்தால் முப்பது நொடிகளில் ஐயாயிரம் சொற்கள் கொண்ட சிறுகதையை எழுத முடியும். ஒரு நாவலுக்குப் பதினைந்து நிமிடங்கள் தேவை. நகைச்சுவையும் அவலச்சுவையும் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த, காரை ஓட்டுவதுபோலவோ ஆர்கன் என்ற இசைக்கருவியை வாசிப்பதுபோலவோ, அதை இயக்குபவர் கைப்பிடிகளையும் கால்மிதிகளையும் பயன்படுத்த வேண்டும். இப்படி உருவாகும் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஓராண்டுக்குள், ஆங்கிலத்தில் வெளியாகும் புனைவுகளில் பாதி அந்தப் பொறியாளரின் கண்டுபிடிப்பிலிருந்தே வருகின்றன.

டால் எழுதிய கற்பனைக் கதை நடைமுறையில் இயல்வதா? , ஒரு பொத்தானை அழுத்தியதும் கலைப்படைப்பு உருவாகிவிட முடியாது என்று நாம் கருதுவதற்குக் கலையின் இயல்பிலேயே ஏதாவது காரணம் இருக்கிறதா? இப்போது சாட் ஜிபிடி போன்ற செய்யறிவுச் செயலிகள் உருவாக்கும் புனைவுகள் படுமோசமாக இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இத்தகைய செயலிகள் மேம்படக்கூடும் என்று ஊகிக்கலாம். எவ்வளவு தூரம் அவற்றால் முன்னேற முடியும்? கூட்டல், கழித்தலில் கணிப்பான்கள் நம்மைவிடச் சிறப்பாகச் செயல்படுவதைப் போல, புனைவு எழுதுவதிலும் ஓவியங்கள் திரைப்படங்களை உருவாக்குவதிலும் மனிதர்களைவிட அவற்றால் சிறப்பாக ஆக்க முடியுமா?

கலையை வரையறுப்பது கடினம். சிறப்பான கலைக்கும் மோசமான கலைக்கும் உள்ள வேறுபாடுகளை வரையறுப்பதும் அப்படித்தான். இருந்தாலும், ஒரு பொதுவான கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்: கற்பனையில் தோன்றும் ஏராளமான யுக்திகளில்  தேர்வுகளைச் செய்வதன் விளைவே கலை. புனைவு எழுதுவதை உதாரணமாக எடுத்துக்கொண்டால் இதை எளிதாக விளக்கலாம். நீங்கள் புனைவு எழுதும்போது, தட்டச்சிடும் ஒவ்வொரு சொல்லையும் உணர்ந்தோ உணராமலோ தேர்ந்தெடுக்கிறீர்கள். மிகவும் எளிமைப்படுத்திச் சொல்வதானால், பத்தாயிரம் சொற்கள் கொண்ட ஒரு சிறுகதைக்கு ஏறத்தாழ பத்தாயிரம் தேர்வுகள் தேவைப்படுவதாகக் கற்பனை செய்துகொள்ளலாம். எழுத்து, படம் போன்ற உள்ளடக்கங்களை உருவாக்கித் தரும் ஓர் ஏஐ செயலிக்கு நீங்கள் ஒரு வழிகாட்டுக் குறிப்பை (prompt) கொடுக்கும்போது, மிகக் குறைவான தேர்வுகளையே செய்கிறீர்கள். நூறு சொற்களில் ஒரு குறிப்பைக் கொடுத்தால், ஏறத்தாழ நூறு தேர்வுகளைச் செய்திருக்கிறீர்கள்.

அந்தக் குறிப்பை அடிப்படையாக வைத்து ஏஐ பத்தாயிரம் சொற்களில் ஒரு கதையை உருவாக்குகிறது என்றால், நீங்கள் செய்யாத தேர்வுகள் அனைத்தையும் அதுவே செய்தாக வேண்டும். இதைப் பல வழிகளில் அது செய்யலாம். இணையத்தில் கிடைக்கும் எழுத்துகளில் மற்ற எழுத்தாளர்கள் செய்துள்ள மொழித் தேர்வுகளைச் சராசரியாக்குவது ஒரு வழி. அந்தச் சராசரி மொழியானது சாத்தியமானவற்றிலேயே சுவாரசியம் குறைந்ததாகவே இருக்கும். அதனால்தான் ஏஐ உருவாக்கும் எழுத்து பெரும்பாலும் அவ்வளவு ஈர்ப்பற்றதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் மொழிநடையைப் பின்பற்றி, அவரது பாணியை நகலெடுக்கும்படி செயலிக்குக் கட்டளையிடுவது இன்னொரு வழி. இதில் உருவாகும் கதை, மற்றொருவரின் மொழியைப் பெரிதும் சார்ந்ததாக இருக்கும். இரண்டு வழிகளிலுமே அது தனித்த திறனுடனான நேர்த்தியான கலையை உருவாக்குவதில்லை.

ஓவியர் ஒருவரின் வண்ணத் தேர்வுகளை தீற்றல் பாணியை அறுதியிடுடுவது கடினம். இதே அடிப்படைக் கோட்பாடு காட்சிக் கலைக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். உண்மையான ஓவியங்களில் எண்ணற்ற கற்பனைகளின் தடங்கள் பதிந்திருக்கும். இதற்கு மாறாக, எழுத்துவழிக் குறிப்புகளிலிருந்து படங்களை உருவாக்கும் DALL-E போன்ற செயலியைப் பயன்படுத்துபவர், ‘கவசமணிந்த ஒரு வீரன், நெருப்பைக் கக்கும் டிராகனுடன் சண்டையிடுகிறான்’ என்று குறிப்பிட்டுவிட்டு, மீதியை செயற்கருவியிடம் விட்டுவிடுகிறார். DALL-E-யின் அண்மைய பதிப்பு, நாலாயிரம் எழுத்துக்குறிகள் வரை கொண்ட குறிப்புகளை ஏற்றுக்கொள்கிறது. அது சில நூறு சொற்களுக்குச் சமம். ஆனால், ஒரு காட்சியின் ஒவ்வொரு விவரத்தையும் விளக்க அந்தச் சொற்கள் போதாது. உருவாகும் படத்திலுள்ள பெரும்பாலான தேர்வுகளை, இணையத்தில் இருக்கும் இதே போன்ற ஓவியங்களிலிருந்துதான் செயலி கடன்வாங்க வேண்டியிருக்கிறது. படம் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதைத் தமது சாதனையாகக் குறிப்பை உள்ளிட்டவர் உரிமை கொண்டாட முடியாது.

ஒருகாலத்தில் புகைப்படத்தின் வருகை ஏற்படுத்திய அளவுக்குப் படங்களை உருவாக்கும் ஏஐ நிரல்களும் காட்சித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிலர் கருதுகிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நம்பத்தக்கதாகத் தோன்றலாம். ஆனால், புகைப்படமும் உள்ளடக்கங்களை உருவாக்கும் ஏஐயும் ஒரே மாதிரியானவை என்ற கருத்தை மேலும் கவனமாக ஆராய வேண்டும். புகைப்படம் முதன்முதலில் தோன்றியபோது, அது ஒரு கலை ஊடகமாகத் தோன்றியிருக்காது என்று நினைக்கிறேன். அதில் ஏராளமான தேர்வுகளைச் செய்ய முடியும் என்பது அப்போது வெளிப்படையாகத் தெரிந்திருக்காது. கேமராவை நிறுத்திப் படம் பிடிக்க வேண்டியதுதானே. ஆனால், கேமராவைக் கொண்டு எண்ணற்ற விஷயங்களைச் செய்ய முடியும் என்பதைப் போகப்போக மக்கள் உணர்ந்தார்கள். புகைப்படக் கலைஞர் செய்யும் பல தேர்வுகளில்தான் அதன் கலைத்தன்மை இருக்கிறது. அந்தத் தேர்வுகள் என்னென்ன என்பதைச் சொற்களில் விளக்குவது எப்போதும் எளிதாக இருக்காது. ஆனால், பொழுதுபோக்காகப் படம் எடுப்பவரின் புகைப்படங்களையும் ஒரு தொழில்முறைப் புகைப்படக் கலைஞர் எடுத்தவற்றையும் ஒப்பிட்டால், வேறுபாட்டைப் பார்க்க முடியும். அப்படியானால் கேள்வி இதுதான்: எழுத்துவழிக் குறிப்புகளிலிருந்து படங்களை உருவாக்கும் செயலியிலும், இதேபோல எண்ணற்ற தேர்வுகளைச் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இல்லை என்றே நினைக்கிறேன். டிஜிட்டல் முறையில் வேலை செய்தாலும் சரி, வண்ணங்களைக் கொண்டு வரைந்தாலும் சரி, ஓர் ஓவியத்தை உருவாக்கும் போதும் கலைஞர் உள்ளார்ந்து எடுக்கும் முடிவுகள், சில நூறு சொற்கள் கொண்ட ஏவலில் அடங்கக்கூடியவற்றைவிட மிக அதிகம்.

பல அமர்வுகளில் பெருவாரியான சொற்களை உள்ளிட அனுமதித்து, அவற்றிலிருந்து படங்களை உருவாக்கும் ஒரு செயலியை நாம் கற்பனை செய்யலாம். அதன் மூலம் நாம் உருவாக்கும் படத்தின் மிக நுண்ணிய விவரங்களைக்கூடக் கட்டுப்படுத்த முடியும். முழுக்க முழுக்க எழுத்துவழியாக மட்டுமே இயக்கப்படும் போட்டோஷாப் போன்றதாக அது இருக்கும். அத்தகைய செயலியைப் பயன்படுத்துபவரையும் கலைஞர் என்று அழைக்கலாம் என்றே சொல்வேன். திரைப்பட இயக்குநர் பெனெட் மில்லர், DALL-E 2-ஐப் பயன்படுத்தி உருவாக்கிய மிகவும் கவனத்தை ஈர்க்கும் சில படங்கள் ககோசியன் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை உருவாக்க, அவர் விரிவான குறிப்புகளை எழுதினார். பின்னர் உருவான படங்களை மீண்டும் மீண்டும் திருத்தவும் மாற்றியமைக்கவும் DALL-E-க்குக் கட்டளையிட்டார். காட்சியில் இடம்பெற்ற இருபது படங்களைப் பெறுவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கினார். ஆனால், DALL-E-யின் பிந்தைய பதிப்புகளில் அதற்கு இணையான படங்களை உருவாக்க முடியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

DALL-E செயலியின் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றுக்காக மில்லர் அதைப் பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணமாக இருக்கலாம். மைக்ரோசாஃப்ட் பெயின்ட்டில் சில தந்திரங்களைச் செய்து, அது போட்டோஷாப்பைப் போலச் செயல்படும்படி மாற்றிவிட்டதாக வைத்துக்கொள்வோம். பெயின்ட்டின் புதிய பதிப்பு வந்தவுடன் அந்தத் தந்திரங்கள் வேலைசெய்யாமல் போய்விடுகின்றன. இது அதைப் போன்றது. மில்லரைப் போன்ற பயனர்களுக்கான ஒரு கருவியை உருவாக்க ஓப்பன் ஏஐ முயலவில்லை என்றே தோன்றுகிறது. எதிர்பார்க்கும் விதத்தில் ஒரு படத்தை உருவாக்கப் பயனர் பல மாதங்கள் உழைக்க வேண்டிய ஒரு கருவி, பெரும்பாலானவர்களை ஈர்க்காது. சிறிதளவு முயற்சியிலேயே படங்களை உருவாக்கித் தரும் ஒரு தயாரிப்பைத்தான் நிறுவனம் வழங்க விரும்புகிறது.

ஒரு நல்ல நாவலை எழுத, பல அமர்வுகளாக உங்களுக்கு உதவும் செயலியைக் கற்பனை செய்வது இன்னும் கடினம். நீங்கள் மனத்தில் வைத்திருக்கும் நாவலுக்கான ஒரு லட்சம் சொற்களை உருவாக்க, அந்தக் கற்பனையான எழுத்துச் செயலி உங்களிடமிருந்து ஒரு லட்சம் சொற்களில் குறிப்புகளைக் கேட்கலாம். நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து முற்றிலும் வேறான ஒரு லட்சம் சொற்களாக அந்த நாவல் இருக்கும். அத்தகைய செயலி எப்படி இயங்கும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. கோட்பாட்டளவில் அப்படி ஒரு செயலி இருந்தால், அதைப் பயன்படுத்துபவரை ஒருவேளை அந்த நாவலின் ஆசிரியர் என்று அழைக்கலாம். ஆனால், ஒரு நாவலை ஆரம்பத்திலிருந்து எழுதுவதற்கு நிகரான உழைப்பைப் பயனரிடம் கோரும் சாட் ஜிபிடி பதிப்புகளை உருவாக்க ஓப்பன் ஏஐ போன்ற நிறுவனங்கள் விரும்பும் என நான் நினைக்கவில்லை. இத்தகைய ஏஐயின் முக்கிய ஈர்ப்பே, நீங்கள் அதற்குக் கொடுப்பதைவிடப் பல மடங்கு அதிகமாக அது உருவாக்கித் தருவதுதான். அந்த அம்சமே இந்தச் செயலிகள் கலைஞர்களுக்குப் பயனுள்ள கருவிகளாக இருப்பதற்குத் தடையாகவும் இருக்கிறது.

இந்த ஏஐ செயலிகளை முன்னிறுத்தும் நிறுவனங்கள், இவை படைப்பாற்றலைக் கட்டவிழ்த்துவிடும் என்று கூறுகின்றன. அவர்கள் சொல்வதன் சாரம் இதுதான்: கலைக்கு வேண்டியது முழுக்க முழுக்கப் படைப்பூக்கம்தான்; வியர்வை சிந்த வேண்டியதில்லை. ஆனால், இரண்டையும் அவ்வளவு எளிதாகப் பிரித்துவிட முடியாது. சலிப்பூட்டுமளவு வேலைப்பளுவுடன் படைப்புக் கலை இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்த வடிவம் தொடங்கி நுண்விவரங்கள் வரை, கலைப் படைப்பில் கற்பனைகளும் அதிலிருந்து பொருத்தமான தேர்வுகளும் செய்தாக வேண்டும் என்றுதான் சொல்கிறேன். ஒரு படைப்பைக் கருத்தளவில் உருவாக்கும்போது மேற்கொள்ளப்படும் சில பெரிய தேர்வுகள் எவ்வளவு முக்கியமோ, அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும்போது செய்யப்படும் எண்ணற்ற சிறிய தேர்வுகளும் இறுதிப் படைப்புக்கு அவ்வளவு முக்கியம். கலை உருவாக்கத்தில் செய்யப்படும் தேர்வுகளைப் பொறுத்தவரை, ‘பெரியவை’ என்பதையே ‘முக்கியமானவை’ என்பதற்குச் சமமாகக் கருதுவது தவறு. இந்தப் பெரிய தேர்வுகளும் சிறிய தேர்வுகளும் ஒன்றோடொன்று கொள்ளும் உறவில்தான் கலைத்தன்மை இருக்கிறது.

மற்ற எல்லாவற்றையும்விடப் படைப்பூக்கமே முக்கியம் என்று ஒருவர் நம்புகிறார் என்றால், அந்தக் கலைவடிவம் அவருக்குப் பழக்கமில்லை என்பதன் அறிகுறியாக அது இருக்கலாம். உயர்கலையைப் படைப்பதற்குப் பதிலாகப் பொழுதுபோக்கை உருவாக்குவதே நோக்கமாக இருந்தாலும் இது பொருந்தும் என்பதே எனது வாதம். பிறரை மகிழ்விப்பதற்குத் தேவைப்படும் உழைப்பைப் பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஒரு த்ரில்லர் நாவல், ‘நமக்குள் உறைந்திருக்கும் பனிக்கடலைப் பிளக்கும் கோடரி’யாகப் புத்தகம் இருக்க வேண்டும் என்ற காஃப்காவின் இலட்சியத்தை எட்டாமல் போகலாம். இருந்தாலும், அது ஒரு சுவிஸ் கடிகாரத்தைப் போல அது நுட்பமாகச் வடிவமைக்கப் பட்டிருக்கலாம். வாசகரை ஈர்க்கும் ஒரு த்ரில்லர் நாவல், அதன் கதைக்கருவையும் கதையமைப்பையும் மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதிலுள்ள ஒவ்வொரு சொற்றொடரையும் அதே பொருள் தரும் வேறொரு சொற்றொடரால் மாற்றிவிட்டால், அதே அளவுக்கு விறுவிறுப்பான நாவல் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு த்ரில்லர் நாவலின் தாக்கத்தைத் தீர்மானிப்பதில் அதன் மொழி நடைக்கும், அதன் சொல் தேர்வுக்கும் பங்கு இருக்கிறது என்பதே இதன் பொருள்.

நாவலுக்கு அற்புதமான ஒரு கரு தன்னிடம் இருப்பதாக நம்பும் ஒருவரைச் சந்தித்த அனுபவம் பல நாவலாசிரியர்களுக்கு இருக்கும். வருமானத்தில் சரிபாதி கிடைத்தால் அந்தக் கருவைப் பகிர்ந்துகொள்ளத் தயார் என்று அவர் சொல்வார். உரைநடையில் கதை சொல்வதன் அடிப்படையாக மொழி இயங்குவதை அவர் கருதவில்லை; அதை ஓர் இடைஞ்சலாகவே நினைக்கிறார் என்பதைத் தன்னையறியாமல் வெளிப்படுத்திவிடுகிறார். ஒரு கலைவடிவத்தில் உழைக்காமலேயே அதன் வழியாகத் தங்களை வெளிப்படுத்த முடியும் என்று நினைப்பவர்களை, உள்ளடக்கங்களை உருவாக்கும் ஏஐ ஈர்க்கிறது. ஆனால், வழக்கமான முறையில் நாவல்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் படைப்பவர்கள் அந்த வடிவங்களால் ஈர்க்கப்படுவதற்குக் காரணம், ஒவ்வொன்றும் வழங்கும் தனித்துவமான வெளிப்பாட்டு வாய்ப்புகள்தான். அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே அவர்களுடைய படைப்புக்கு நிறைவளிக்கும் தன்மையைத் தருகிறது; அது பொழுதுபோக்குப் படைப்பாக இருந்தாலும் கலைப்படைப்பாக இருந்தாலும் சரி.

கட்டுரைகளோ அறிக்கைகளோ மின்னஞ்சல்களோ, பெரும்பாலான எழுத்துகள் தக்க சொல்தேர்வுகளைத் தம்முள் கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருப்பதில்லை என்பது உண்மைதான். அப்படிப்பட்ட வேலைகளைத் தானியங்கியாகச் செய்வதில் என்ன தீங்கு இருக்கிறது? 

AI ஏன் கலையைப் படைக்கப் போவதில்லை?

இன்னொரு பொதுவான கருத்தைக் கூறுகிறேன்: ஒரு வாசகராக உங்கள் கவனத்துக்குத் தகுதியான எந்த எழுத்தும், அதை எழுதியவர் செலவிட்ட உழைப்பின் விளைவுதான். எழுதும்போது உழைத்திருக்கிறோம் என்பதாலேயே இறுதியில் உருவானது வாசிக்கத் தகுதியானதாக இருக்கும் என்று உறுதியளிக்க முடியாது. ஆனால், அந்த உழைப்பு இல்லாமல் வாசிக்கத் தகுந்த படைப்பை உருவாக்க முடியாது. தனிப்பட்ட மின்னஞ்சலை வாசிக்கும்போது நீங்கள் செலுத்தும் கவனமும், ஒரு வணிக அறிக்கையை வாசிக்கும்போது செலுத்தும் கவனமும் வெவ்வேறானவை. ஆனால், இரண்டிலுமே எழுதியவர் ஓரளவாவது சிந்தித்து எழுதியிருந்தால்தான், நீங்கள் செலுத்தும் கவனத்துக்கு அந்த எழுத்து தகுதியுடையதாக இருக்கும்.

அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது, ஓப்பன் ஏஐயின் ஜிபிடி-4-க்குப் போட்டியாக உருவாக்கிய ஜெமினிக்காக கூகுள் ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது. ஒரு சிறுமி, தனக்கு ஊக்கமளிக்கும் ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஒருவருக்கு அனுப்பவிருக்கும் ரசிகர் கடிதத்தை, அவளுடைய தந்தை ஜெமினியின் உதவியுடன் எழுதுவதாக அந்த விளம்பரம் காட்டியது. இதபார்வையாளர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, கூகுள் விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது. ‘நான் பார்த்தவற்றிலேயே மிகவும் கலக்கமூட்டிய விளம்பரங்களில் ஒன்று’ என்று ஊடகவியல் பேராசிரியர் ஒருவர் அதைக் குறிப்பிட்டார். கலைப் படைப்பாற்றலுக்கு மாற்றாக இங்கு ஏஐ பயன்படுத்தப்படாத போதும்கூட, மக்கள் இவ்வாறு எதிர்வினையாற்றியது கவனிக்கத்தக்கது. ஒரு விளையாட்டு வீரருக்கு ஒரு சிறுமி எழுதும் ரசிகர் கடிதம் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அந்தச் சிறுமியே கடிதத்தை எழுதியிருந்தால், எண்ணற்ற பிற கடிதங்களிலிருந்து அதைப் பிரித்தறிய முடியாமல் இருந்திருக்கலாம். எழுதும் சிறுமிக்கும் பெறும் விளையாட்டு வீரருக்கும் அந்தக் கடிதம் முக்கியமானதாக இருப்பது அதன் மொழிநயத்தால் அல்ல; அது மனமார எழுதப்பட்டிருப்பதால்தான்.

கடையில் வாங்கிய வாழ்த்து அட்டைகளை நம்மில் பலர் அனுப்பியிருக்கிறோம். அவற்றிலுள்ள சொற்களை நாமே எழுதவில்லை என்பது பெறுபவருக்குத் தெளிவாகத் தெரியும் என்பதையும் அறிவோம். ஹால்மார்க் வாழ்த்து அட்டையிலுள்ள சொற்களை நம் கையெழுத்தில் நகலெடுத்து எழுதுவதில்லை. அப்படிச் செய்வது நேர்மையற்றதாகத் தோன்றும். பெருமொழி மாதிரிகளுக்குப் பயிற்சியளிப்பதை, ‘கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதுபோல, பதிப்புரிமையுள்ள தரவுகளை வெள்ளையாக்குவது’ என்று நிரலாளர் சைமன் விலிசன் வர்ணித்திருக்கிறார். உள்ளடக்கங்களை உருவாக்கும் ஏஐ நிரல்கள் ஏன் ஈர்க்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன். படைப்புத் திருட்டைப் போன்ற ஒன்றில் ஈடுபட அவை உங்களை அனுமதிக்கின்றன. ஆனால், அதற்கான குற்றவுணர்வு உங்களுக்கு ஏற்படுவதில்லை. ஏனெனில், நீங்கள் நகலெடுக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெளிவாகத் தெரிவதில்லை.

பெருமொழி மாதிரிகள், பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்துகளை இவ்வாறு வெள்ளையாக்குவதில்லை; மனித எழுத்தாளர்கள் தாங்கள் வாசித்த நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதுபோல, அவையும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், ஒரு பெருமொழி மாதிரி எழுத்தாளர் அல்ல. அது மொழியைப் பயன்படுத்தும் ஒன்றுகூட அல்ல. வரையறையின்படி, மொழி என்பது தொடர்பாடலுக்கான ஓர் அமைப்பு. எதையாவது தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கம் அதற்கு அவசியம். உங்கள் தொலைபேசியில் சொற்களைத் தானாக நிரப்பும் வசதி நல்ல பரிந்துரைகளை வழங்கலாம்; மோசமானவற்றையும் வழங்கலாம். ஆனால், இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, உங்களிடமோ நீங்கள் செய்தி அனுப்பும் நபரிடமோ எதையும் சொல்ல அது முயல்வதில்லை. கோவையான வாக்கியங்களைச் சாட்ஜிபிடி உருவாக்குவதால், தொலைபேசியின் தானியங்கி சொல் நிரப்பியைப் போலல்லாமல் அது மொழியைப் புரிந்துகொள்கிறது என்று கற்பனை செய்யத் தூண்டப்படுகிறோம். ஆனால், எதையாவது தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கம் இதற்கும் இல்லை.

‘உங்களைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி’ போன்ற சொற்களைச் சாட்ஜிபிடி வெளியிடச் செய்வது மிக எளிது. பெருமொழி மாதிரிகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதில் நாம் புரிந்துகொள்ளாதவை ஏராளம். ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்: உங்களைப் பார்த்ததில் சாட்ஜிபிடிக்கு மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. ஒரு நாயால், உங்களைப் பார்ப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்பதைத் தெரிவிக்க முடியும். இன்னும் பேசக் கற்றுக்கொள்ளாத குழந்தையாலும் அதைச் செய்ய முடியும். இரண்டுக்குமே சொற்களைப் பயன்படுத்தும் திறன் இல்லை என்றாலும் இது சாத்தியம். சாட்ஜிபிடி எதையும் உணர்வதில்லை; எதையும் விரும்புவதில்லை. இந்த நோக்கம் இல்லாததால்தான், அது உண்மையில் மொழியைப் பயன்படுத்துவதில்லை. ‘உங்களைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி’ என்ற தொடரை மொழிவழி வெளிப்பாடாக ஆக்குவது, அதிலுள்ள சொற்கூறுகள் ஒழுங்காக அமைந்திருக்கின்றன என்பது அல்ல. எதையாவது தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அதை மொழிவழி வெளிப்பாடாக ஆக்குகிறது.

நமக்குள் ஒன்றை உணர்வதும், அந்த உணர்வைப் பிறருக்குத் தெரிவிக்க விரும்புவதும்தான் மொழிக்கு அடித்தளமாக உள்ள அனுபவங்கள். மொழி நமக்கு அவ்வளவு இயல்பாக வருவதால் இதை எளிதில் மறந்துவிடுகிறோம். ஒரு பெருமொழி மாதிரி கோவையான வாக்கியங்களை வெளியிடும்போது, அந்த அனுபவங்களும் அதற்கு இருப்பதாக நாமே கற்பித்துக்கொள்ளத் தூண்டப்படுகிறோம். அப்படிச் செய்வது போலித் தோற்றத்தைக் கண்டு ஏமாறுவதுதான். சில பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெரிய கரும்புள்ளிகள் தோன்றியிருப்பதைப் போன்றது இது. அந்தப் பட்டாம்பூச்சிகளைப் பெரிய கண்களைக் கொண்ட வேட்டை விலங்குகள் என்று பறவைகள் தவறாக நினைக்கும்படி அந்தப் புள்ளிகள் செய்யக்கூடும். ஒரு குறிப்பிட்ட சூழலில், அந்தக் கரும்புள்ளிகள் மட்டுமே போதுமானவை. அவற்றைக் கொண்ட பட்டாம்பூச்சியைப் பறவைகள் தின்றுவிடுவதற்கான வாய்ப்பு குறைவு. உயிர் பிழைத்திருந்தால் போதும்; தான் ஏன் உண்ணப்படவில்லை என்பது பற்றிப் பட்டாம்பூச்சிக்கு உண்மையில் அக்கறையில்லை. ஆனால், ஒரு பட்டாம்பூச்சிக்கும் பறவையை அச்சுறுத்தக்கூடிய ஒரு வேட்டை விலங்குக்கும் இடையே பெரும் வேறுபாடு இருக்கிறது.

தான் எழுதுவதற்கு ஏஐயின் உதவியை நாடுபவர், அந்த மாதிரிக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துகளிலிருந்து படைப்பூக்கம் பெறுவதாகக் கூறலாம். ஆனால், ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரிடமிருந்து படைப்பூக்கம் பெறுகிறார் என்று நாம் வழக்கமாகச் சொல்லும் பொருளிலிருந்து இது வேறுபட்டது என்பதே எனது வாதம். ஒரு புத்தகத்திலிருந்து ஐந்து பக்கங்களை அப்படியே மேற்கோளாக எடுத்துக் கொடுத்து, அதையே தனது கட்டுரையாகச் சமர்ப்பிக்கும் கல்லூரி மாணவி ஒருவரைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். தான் சொல்ல நினைத்ததைத் தன்னால் சொல்ல முடிவதைவிடச் சிறப்பாக அந்த மேற்கோள் சொல்கிறது என்று அவர் கூறுகிறார். தான் என்ன செய்தார் என்பதை ஆசிரியரிடம் முழு நேர்மையுடன் தெரிவித்திருந்தாலும், அந்தப் புத்தகத்திலிருந்து அவர் படைப்பூக்கம் பெற்றிருக்கிறார் என்று சொல்வது துல்லியமானதல்ல. ஒரு பெருமொழி மாதிரியால் அந்த மேற்கோளின் சொற்களை மாற்றி, அது எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடி செய்துவிட முடியும் என்பதால், அங்கே நடப்பதன் அடிப்படைத் தன்மை மாறிவிடுவதில்லை.

மொழியியலாளர் எமிலி எம். பெண்டர் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, உலகுக்கு இன்னும் அதிகமான மாணவர் கட்டுரைகள் தேவை என்பதற்காக ஆசிரியர்கள் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொல்வதில்லை. அவர்களுடைய விமர்சனச் சிந்தனைத் திறனை வலுப்படுத்துவதே அதன் நோக்கம். ஒரு விளையாட்டு வீரர் எந்த விளையாட்டில் ஈடுபட்டாலும், எடைப் பயிற்சி அவருக்குப் பயன்படும். அதுபோல, ஒரு கல்லூரி மாணவர் பின்னாளில் எந்த வேலைக்குச் சென்றாலும் தேவைப்படும் திறன்களைக் கட்டுரை எழுதுவது வளர்க்கிறது. பாடப்பணிகளை முடிக்கச் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவது, எடைப் பயிற்சி அறைக்குள் பாரந்தூக்கும் வண்டியைக் கொண்டுவருவதைப் போன்றது. அப்படிச் செய்து உங்கள் சிந்தனைத் திறனை ஒருபோதும் வளர்த்துக்கொள்ள முடியாது.

எல்லா எழுத்துகளும் படைப்பாற்றல் மிக்கவையாகவோ, உள்ளத்திலிருந்து எழுபவையாகவோ, ஏன், சிறப்பாக எழுதப்பட்டவையாகவோகூட இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில், ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டும்; அவ்வளவுதான். விளம்பரங்களுக்காகப் பார்வையாளர்களை ஈர்ப்பது, நிர்வாக நடைமுறைகளின் தேவைகளை நிறைவேற்றுவது போன்ற பிற நோக்கங்களுக்கு அத்தகைய எழுத்து உதவலாம். இப்படிப்பட்ட எழுத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கும்போது, வேலையை வேகமாக முடிக்கக் கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதற்காக அவர்களைக் குறைசொல்ல முடியாது. ஆனால், மிகக் குறைவான உழைப்பில் உருவான ஆவணங்கள் அதிகரிப்பதால் உலகம் மேம்படுகிறதா? பெருமொழி மாதிரிகளைப் பயன்படுத்த மறுத்துவிட்டால், தரமற்ற எழுத்துகளை உருவாக்க வேண்டிய தேவைகளும் மறைந்துவிடும் என்று சொல்வது யதார்த்தமானதல்ல. இருந்தாலும், அந்தத் தேவைகளை நிறைவேற்ற நாம் பெருமொழி மாதிரிகளைப் பயன்படுத்தப் பயன்படுத்த, அந்தத் தேவைகளும் அதிகரித்துக்கொண்டே போவது தவிர்க்க முடியாதது என்று நினைக்கிறேன். ஒருவர் பட்டியலாக உள்ள சில குறிப்புகளைப் பெருமொழி மாதிரியிடம் கொடுத்து ஓர் ஆவணத்தை உருவாக்கி அனுப்பலாம். அதைப் பெறுபவர் ஒரு பெருமொழி மாதிரியைக் கொண்டு, மீண்டும் அதைச் சில குறிப்புகளாகச் சுருக்கிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒரு காலத்துக்குள் நாம் நுழைந்துகொண்டிருக்கிறோம். இது ஒரு முன்னேற்றம் என்று உண்மையாகவே யாராவது வாதிட முடியுமா?

ஒருநாள் மனிதனால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யும் கணினி நிரல்கள் நம்மிடம் இருக்கக்கூடும்; அது சாத்தியமே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ஏஐயை முன்னிறுத்தும் நிறுவனங்கள் கூறுவதற்கு மாறாக, அடுத்த சில ஆண்டுகளில் நாம் அதைப் பார்க்கப்போவதில்லை. படைப்பாற்றலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத துறைகளில்கூட, இன்றைய ஏஐ நிரல்களுக்குக் கடுமையான வரம்புகள் இருக்கின்றன. எனவே, அவற்றை அறிவுத்திறன் கொண்டவை என்று அழைப்பதே பொருத்தமா என்ற கேள்வியை எழுப்ப நியாயமான காரணங்கள் உள்ளன.

கணினி அறிவியலாளர் ஃபிரான்சுவா ஷோலே பின்வரும் வேறுபாட்டை முன்வைத்திருக்கிறார். ஒரு செயலை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறீர்கள் என்பது திறன்; புதிய திறன்களை எவ்வளவு திறம்படக் கற்றுக்கொள்கிறீர்கள் என்பது அறிவுத்திறன். மனிதர்களைப் பற்றிய நமது இயல்பான புரிதலை இது நன்றாகவே பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். போதிய பயிற்சி கிடைத்தால் பெரும்பாலானவர்களால் புதிய திறன் ஒன்றைக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒருவர் எவ்வளவு விரைவாக அதைக் கற்றுக்கொள்கிறாரோ, அவ்வளவு அறிவுத்திறன் மிக்கவராக அவரைக் கருதுகிறோம். இந்த வரையறையின் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், ஐக்யூ சோதனைகளைப் போலல்லாமல், மனிதரல்லாதவற்றுக்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியும். ஒரு நாய் புதிய செயல் ஒன்றை விரைவாகக் கற்றுக்கொண்டால், அதை அறிவுத்திறனின் அடையாளமாகக் கருதுகிறோம்.

2019-இல் நடந்த ஒரு பரிசோதனையில், ஆய்வாளர்கள் எலிகளுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தார்கள். மூன்று செப்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட சிறிய பிளாஸ்டிக் கலன்களில் எலிகளை வைத்தார்கள். அவற்றில் ஒரு கம்பியின்மீது எலி தனது பாதத்தை வைத்தால் கலன் முன்னோக்கிச் செல்லும்; மற்றவற்றில் வைத்தால் இடப்பக்கமோ வலப்பக்கமோ திரும்பும். அறையின் மறுபக்கத்தில் இருந்த உணவுத் தட்டை எலிகளால் பார்க்க முடிந்தது. தங்கள் வாகனங்களை அதை நோக்கிச் செலுத்த அவை முயன்றன. ஒவ்வொரு முறையும் ஐந்து நிமிடங்கள் ஆய்வாளர்கள் எலிகளுக்குப் பயிற்சியளித்தார்கள். இருபத்து நான்கு பயிற்சி அமர்வுகளுக்குப் பிறகு, எலிகள் வாகனம் ஓட்டுவதில் திறமை பெற்றுவிட்டன. அந்த இனத்தின் பரிணாம வரலாற்றிலேயே எந்த எலியும் சந்தித்திருக்க வாய்ப்பில்லாத ஒரு செயலில் தேர்ச்சிபெற, இருபத்து நான்கு முயற்சிகளே போதுமானவையாக இருந்தன. அறிவுத்திறனுக்கு இது ஒரு நல்ல சான்று என்று நினைக்கிறேன்.

இப்போது, தங்கள் செயல்திறனுக்காகப் பெரிதும் பாராட்டப்படும் ஏஐ நிரல்களைப் பாருங்கள். கூகுளின் டீப்மைண்ட் உருவாக்கிய ஆல்ஃபாசீரோ, எந்த மனித வீரரையும்விடச் சிறப்பாகச் சதுரங்கம் விளையாடுகிறது. ஆனால், பயிற்சியின்போது அது நான்கு கோடியே நாற்பது லட்சம் ஆட்டங்களை விளையாடியிருக்கிறது. ஒரு மனிதர் வாழ்நாள் முழுவதும் விளையாடக்கூடியதைவிட இது மிக மிக அதிகம். புதிய விளையாட்டு ஒன்றில் தேர்ச்சிபெற, அதேபோன்ற மிகப் பெரிய அளவிலான பயிற்சியை அது மீண்டும் பெற வேண்டும். ஷோலேயின் வரையறையின்படி, ஆல்ஃபாசீரோ போன்ற நிரல்கள் மிகுந்த திறன் கொண்டவை; ஆனால், அறிவுத்திறனில் அவை சிறந்தவை அல்ல. ஏனெனில், புதிய திறன்களை அவை திறம்படக் கற்றுக்கொள்வதில்லை. ஒரு செயலைப் பற்றிய தகவல்கள் நிரலாளருக்கு முன்கூட்டியே தரப்படவில்லை என்றால், அந்தச் செயல் எளிமையானதாக இருந்தாலும்கூட, அதை இருபத்து நான்கு முயற்சிகளில் கற்றுக்கொள்ளக்கூடிய நிரலை எழுதுவது இப்போது சாத்தியமில்லை.

பல மில்லியன் மைல் ஓட்டத் தரவுகளைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்ட தானியங்கிக் கார்கள்கூட, கவிழ்ந்து கிடக்கும் டிரெய்லர் லாரியின்மீது மோதிவிடக்கூடும். ஏனெனில், அவற்றின் பயிற்சித் தரவுகளில் இத்தகைய காட்சிகள் பொதுவாக இருப்பதில்லை. ஆனால், முதல் முறையாக வாகனம் ஓட்டக் கற்கும் மனிதருக்குக்கூட அங்கே நிறுத்த வேண்டும் என்று தெரியும். இயற்கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்கும் ஆற்றலைவிட, பழக்கமில்லாத சூழல்களைச் சமாளிக்கும் நமது ஆற்றல்தான் மனிதர்களை அறிவுத்திறன் கொண்டவர்களாக நாம் கருதுவதற்கான அடிப்படையான காரணங்களில் ஒன்று. அத்தகைய ஆற்றலைப் பெறும்வரை கணினிகளால் மனிதர்களுக்கு மாற்றாகச் செயல்பட முடியாது. அந்த நிலையை எட்ட இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. இப்போதைக்கு, பன்மடங்கு ஆற்றலூட்டப்பட்ட தானியங்கி சொல் நிரப்பியால் செய்யக்கூடிய வேலைகளையே நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

பல ஆண்டுகளாகப் பெரிதாகப் பேசப்பட்டாலும், உள்ளடக்கங்களை உருவாக்கும் ஏஐயால் பொருளாதார உற்பத்தித் திறனைப் பெருமளவில் உயர்த்த முடியும் என்பது இன்னமும் கோட்பாட்டளவில்தான் இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ‘Gen AI: Too Much Spend, Too Little Benefit?’ — அதாவது, ‘உள்ளடக்க உருவாக்க ஏஐ: செலவு அதிகம், பயன் குறைவா?’ — என்ற தலைப்பில் கோல்ட்மேன் சாக்ஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இத்தகைய ஏஐ மிக வெற்றிகரமாகச் செய்திருப்பது நமது எதிர்பார்ப்புகளைக் குறைத்திருப்பதைத்தான். நாம் வாசிக்கும் எழுத்துகளிடமிருந்து எதிர்பார்ப்பதையும், மற்றவர்கள் வாசிப்பதற்காக நாம் எழுதும்போது நம்மிடமே எதிர்பார்ப்பதையும் அது குறைத்திருக்கிறது. அர்த்தத்தை உருவாக்குபவர்களாகவும் புரிந்துகொள்பவர்களாகவும் நாம் இருக்கிறோம். ஆனால், நாம் உண்மையில் இருப்பதைவிடக் குறைவானவர்களாக இந்தத் தொழில்நுட்பம் நம்மை நடத்துகிறது. அந்த வகையில் இது அடிப்படையிலேயே நமது மனிதத்தன்மையை மறுக்கிறது. உலகில் மனித நோக்கத்துக்கான இடத்தை இது குறைக்கிறது.

மனிதர்கள் சொல்லும் அல்லது எழுதும் பெரும்பாலானவற்றில் பெரிதாகப் புதுமை ஏதும் இல்லை என்று கூறிப் பெருமொழி மாதிரிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். அது உண்மைதான். ஆனால், இங்கே பேசப்படும் விஷயத்துக்கு அது பொருத்தமற்றது. ஒருவர் உங்களிடம் ‘மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லும்போது, அதற்கு முன்பு மற்றவர்களும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல. புள்ளிவிவர அடிப்படையில் ‘மன்னித்துவிடுங்கள்’ என்ற சொற்றொடரில் அசாதாரணமாக எதுவும் இல்லை என்பதும் ஒரு பொருட்டல்ல. ஒருவர் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால், அதற்கு மதிப்பும் அர்த்தமும் இருக்கின்றன. ஏற்கெனவே பலர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்பதால் அது மாறுவதில்லை. அதேபோல, ஒருவரைப் பார்ப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்று நீங்கள் அவரிடம் சொல்லும்போது, அதில் புதுமை இல்லாவிட்டாலும், அர்த்தமுள்ள ஒன்றைத்தான் சொல்கிறீர்கள்.

கலைக்கும் இதேபோன்ற உண்மை பொருந்தும். நீங்கள் ஒரு நாவலையோ ஓவியத்தையோ திரைப்படத்தையோ உருவாக்கும்போது, அதன் வழியாக வாசகர்களுடனோ பார்வையாளர்களுடனோ தொடர்புகொள்கிறீர்கள். உங்கள் படைப்புக்கு மதிப்பு இருக்க வேண்டுமென்றால், மனித வரலாற்றில் அதற்கு முன் வந்த ஒவ்வொரு கலைப்படைப்பிலிருந்தும் அது முற்றிலும் வேறுபட்டிருக்க வேண்டியதில்லை. அதைச் சொல்வது நீங்கள்தான்; அது உங்கள் தனித்துவமான வாழ்க்கை அனுபவத்திலிருந்து வருகிறது; உங்கள் படைப்பை எதிர்கொள்பவரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அது அவரை வந்தடைகிறது. இவையே அதைப் புதியதாக்குகின்றன. நமக்கு முன்பு வந்தவற்றின் விளைவுகள்தான் நாம் அனைவரும். ஆனால், மற்றவர்களுடன் உறவாடி நம் வாழ்க்கையை வாழ்வதன் மூலம்தான் உலகுக்கு அர்த்தத்தைக் கொண்டுவருகிறோம். தானாகச் சொற்களை நிரப்பும் ஒரு கணினி வழிமுறையால் இதை ஒருபோதும் செய்ய முடியாது. இதற்கு மாறாக யார் சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்.

தமிழில்: அ.ராஜேந்திரன்

ஆங்கில மூலம்: The New Yorker, 31 August 2024.

டெட் சியாங்

டெட் சியாங்

டெட் சியாங் (Ted Chiang) அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளர். Stories of Your Life and Others, Exhalation ஆகிய சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ஹியூகோ, நெபுலா உள்ளிட்ட முக்கிய இலக்கிய விருதுகளைப் பெற்றவர். இவரது ‘Story of Your Life’ குறுநாவலைத் தழுவியே Arrival திரைப்படம் உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தின் சமூக விளைவுகள், மனிதப் படைப்பாற்றல் ஆகியவை குறித்தும் தி நியூயார்க்கர் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

Font size
Line spacing
Background