கார்க்கியின் படைப்பாற்றலைப் பாராட்டியபடியே அவரது எழுத்தின் மிகைகளைச் சுட்டிக்காட்டுகிறார் செகாவ். இயற்கை வருணனைகளின் நீளம், சொற்களின் பொருத்தம், உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் அளவு ஆகியவை இந்தக் கடிதங்களில் விவாதமாகின்றன. தமது விமர்சனத்தில் தனிப்பட்ட ரசனையின் பங்கையும் செகாவ் ஒப்புக்கொள்கிறார். கார்க்கியோ அதை ஏற்றுக்கொள்வதுடன், மொழி இறுக்கமாகிவிடுமோ என்ற அச்சத்தையும் வாழ்வாதாரத்துக்காக அவசரமாக எழுதவேண்டிய நிலையையும் விளக்குகிறார்.
1898ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய இவர்களது கடிதப் பரிமாற்றத்தில், எழுத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகளுடன் நெருக்கமும் பெருமதிப்பும் வெளிப்படுகின்றன. செகாவின் தெளிவான கலைப்பார்வையும் கார்க்கியின் உணர்ச்சிப் பெருக்கும் இந்த க கடிதப் பரிமாற்றத்துக்குச் சிறப்பிடம் அளிக்கின்றன. எளிமை என்பது உணர்வைக் குறைப்பதா, அல்லது அதைத் துல்லியமாக வெளிப்படுத்துவதா என்ற கேள்வியோடு இக் கடிதங்களை வாசிக்கலாம்.
முதல் இரண்டு கடிதங்களும் முழுமையாகவும், மூன்றாவது கடிதத்தின் எழுத்துநடை சார்ந்த பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டும் இங்கே தரப்பட்டுள்ளன.
1. செகாவ் கார்க்கிக்கு
யால்டா, 3 டிசம்பர் 1898
மதிப்பிற்குரிய அலெக்சேய் மக்ஸிமவிச்,
உங்கள் கடைசிக் கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மனமார நன்றி கூறுகிறேன். ‘வான்யா மாமா’வை நான் எழுதிப் பல காலமாகிவிட்டது. அதை நான் மேடையில் பார்த்ததே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக மாநில நாடக அரங்குகளில் அது அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது. ஒருவேளை, என் நாடகங்களைத் தொகுத்து வெளியிட்டிருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாகவே என் நாடகங்களின்மீது எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. நாடக உலகிலிருந்து விலகிப் பல காலமாகிவிட்டது. இப்போது மேடைக்காக எழுத வேண்டும் என்ற விருப்பமும் இல்லை.
உங்கள் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறீர்கள். என் கருத்தா? உங்கள் திறமை சந்தேகத்துக்கு இடமற்றது. அது உண்மையான, மகத்தான திறமை. உதாரணமாக, ‘ஸ்டெப்பி வெளியில்’1 கதையில் அது கூடுதல் வலுவுடன் வெளிப்பட்டிருக்கிறது. அந்தக் கதையை நான் எழுதவில்லையே என்று பொறாமைகூட ஏற்பட்டது. நீங்கள் ஒரு கலைஞர்; அறிவுள்ள மனிதர்; எதையும் ஆழமாக உணர்கிறீர்கள். காட்சிகளை வடித்தெடுக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. அதாவது, ஒன்றைச் சித்தரிக்கும்போது அதைப் பார்க்கிறீர்கள்; உங்கள் கைகளால் தொட்டுணர்கிறீர்கள். அதுதான் உண்மையான கலை. உங்களைப் பற்றிய என் கருத்து இதுவே. இதை உங்களிடம் சொல்ல முடிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
மீண்டும் சொல்கிறேன், மிகுந்த மகிழ்ச்சி. நாம் அறிமுகமாகி ஓரிரு மணி நேரம் பேச முடிந்தால், உங்களை எவ்வளவு உயர்வாக மதிக்கிறேன் என்பதையும் உங்கள் திறமையின்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
இப்போது குறைகளைப் பற்றிப் பேசட்டுமா? ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு திறமையாளரின் குறைகளைப் பற்றிப் பேசுவது, தோட்டத்தில் வளர்ந்திருக்கும் பெரிய மரத்தின் குறைகளைப் பற்றிப் பேசுவதைப் போன்றது. இங்கே முதன்மையாகக் கவனிக்க வேண்டியது மரத்தையே அல்ல; அதைப் பார்ப்பவரின் ரசனையைத்தான். இல்லையா?
முதலில், உங்கள் எழுத்தில் அளவு பற்றிய தெளிவு இல்லை என்பது என் கருத்து. நாடக அரங்கில் தனது பரவசத்தை அளவின்றி ஆர்ப்பரித்து தானும் நாடகத்தைப் பார்க்க முடியாமல் மற்றவர்களையும் பார்க்கவிடாமல் செய்யும் பார்வையாளரைப் போல இருக்கிறீர்கள். உரையாடல்களின் ஓட்டத்தை இடைமறிக்கும் உங்கள் இயற்கை வருணனைகளில் இந்த அளவுமீறல் குறிப்பாகத் தெரிகிறது. அவற்றைப் படிக்கும்போது, இன்னும் செறிவாகவும் சுருக்கமாகவும், இரண்டு மூன்று வரிகளுக்குள் அமைந்திருக்கலாமே என்று தோன்றுகிறது. சுகம், முணுமுணுப்பு, வெல்வெட்டின் மென்மை போன்றவற்றைத் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவது அந்த வருணனைகளுக்குச் சொல்லாடம்பரத்தையும் ஒரே சாயலையும் அளிக்கிறது. வாசிப்பின் உற்சாகத்தைத் தணித்து, ஏறத்தாழச் சோர்வடையச் செய்துவிடுகிறது.
பெண்களைச் சித்தரிப்பதிலும் – ‘மால்வா’, ‘தெப்பத்தில்’1 ஆகிய கதைகளில் – காதல் காட்சிகளிலும் இதே அளவுமீறல் தெரிகிறது. அது படைப்பின் வீச்சோ, தூரிகையின் அகன்ற தீற்றலோ அல்ல; அளவுமீறல்தான். அடுத்து, உங்களுடைய வகைக் கதைகளுக்குச் சற்றும் பொருந்தாத சொற்களை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள். ‘ பக்க வாத்தியம்’, ‘ வட்டத்தட்டு’, ‘ஒத்திசைவு’ போன்ற சொற்கள் இடையூறாக இருக்கின்றன. அலைகளைப் பற்றி அடிக்கடி பேசுகிறீர்கள்.
அறிவாளிகளைச் சித்தரிக்கும்போது ஒருவித இறுக்கமும் எச்சரிக்கையுணர்வும் தெரிகின்றன. அவர்களை நீங்கள் போதுமான அளவு கவனித்ததில்லை என்பதால் இது ஏற்படவில்லை. அவர்களை உங்களுக்குத் தெரியும். ஆனால் எந்தப் பக்கத்திலிருந்து அவர்களை அணுகுவது என்று தெரியாததுபோல் இருக்கிறது.
உங்களுக்கு என்ன வயது? உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், யார் என்பதும் தெரியாது. ஆனால் இளமையாக இருக்கும்போதே நீங்கள் நிஜ்னியை விட்டு வெளியேறி, இரண்டு மூன்று ஆண்டுகள் இலக்கியத்துடனும் இலக்கியவாதிகளுடனும் நெருங்கிப் பழக வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. எங்கள் சேவலிடம் பாடம் கற்றுக்கொள்ளவோ3, உங்கள் சாமர்த்தியத்தை மேலும் கூர்மைப்படுத்திக் கொள்ளவோ அல்ல; முழுமையாக இலக்கியத்தில் இறங்கி, அதன்மீது தீரா ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதற்காக. தவிர, மாநிலப் பகுதியில் வாழ்வது மனிதனை விரைவிலேயே முதுமையடையச் செய்துவிடுகிறது.
கொரலென்கோ, பொத்தபென்கோ, மாமின், எர்தெல் ஆகியோர் அருமையான மனிதர்கள். ஆரம்பத்தில் அவர்களுடன் பழகுவது சற்று சலிப்பூட்டுவதாகத் தோன்றலாம். ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அவர்களுடன் பழகிவிடுவீர்கள்; அவர்களுக்குரிய மதிப்பையும் உணர்ந்துகொள்வீர்கள். தலைநகர வாழ்க்கையின் சங்கடங்களையும் சிரமங்களையும் ஈடுகட்டுவதற்கும் மேலான பலனை அவர்களது நட்பு உங்களுக்கு அளிக்கும்.
அஞ்சலகத்துக்கு விரைகிறேன். உடல்நலமும் நல்வாழ்வும் உங்களுக்கு வாய்க்கட்டும். உங்கள் கையை இறுகக் குலுக்குகிறேன். கடிதத்துக்கு மீண்டும் நன்றி.
உங்கள் அ. செகாவ்
யால்டா
2. கார்க்கி செகாவுக்கு
6 டிசம்பர் 1898க்குப் பிறகு, நிஜ்னி நோவ்கரோத்
அருமையான கடிதம் எழுதியிருக்கிறீர்கள், அந்தோன் பாவ்லவிச். ஆடம்பரமான சொற்களைப் பற்றி நீங்கள் கூறியது துல்லியமானது; சரியானது. அவற்றை என் சொற்களஞ்சியத்திலிருந்து என்னால் அகற்றவே முடியவில்லை. என் மொழி முரட்டுத்தனமாகிவிடுமோ என்ற அச்சமும் அதற்குத் தடையாக இருக்கிறது. அதோடு, எப்போதும் எதையோ நோக்கி அவசரப்படுகிறேன். என் படைப்புகளைச் சரிவரச் செம்மைப்படுத்துவதில்லை. எல்லாவற்றையும்விட மோசமானது, எழுத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்கிறேன். வேறு எதையும் செய்ய எனக்குத் தெரியாது.
நான் சுயமாகக் கற்றுக்கொண்டவன். எனக்கு முப்பது வயது. இப்போது இருப்பதைவிட மேம்படுவேன் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஏறி வந்திருக்கும் படியிலாவது நிலைத்திருக்கக் கடவுள் அருளட்டும். அது பெரிய உயரமில்லை. ஆனாலும் எனக்குப் போதும். மொத்தத்தில் நான் அவ்வளவு சுவாரசியமான மனிதனும் அல்ல.
நீங்கள் வேறு. வியக்கவைக்கும் ஆற்றல், திறமை உங்களுடையது. நாடக மேடைக்காக எழுத விருப்பமில்லை என்று நீங்கள் கூறியிருப்பதால், உங்களைப் புரிந்துகொள்ளும் பார்வையாளர்கள் உங்கள் நாடகங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ‘வான்யா மாமா’, ‘கடற்பறவை’ ஆகியவை நாடகக் கலையின் புதிய வடிவம் என்கிறார்கள். அவற்றில் யதார்த்தவாதமானது உயிரோட்டமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட குறியீடாக உயர்கிறது என்கிறார்கள். அது மிகவும் சரியான கருத்து என்றே நினைக்கிறேன்.
உங்கள் நாடகத்தைப் பார்த்தபோது, ஒரு விக்கிரகத்திற்குப் பலியிடப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், மனிதர்களின் வறிய வாழ்க்கைக்குள்ளும் அழகு மிளிர்வதைப் பற்றியும், இன்னும் பல அடிப்படையான, முக்கியமான விஷயங்களைப் பற்றியும் சிந்தித்தேன். வாழ்வின் குறிப்பிட்ட நிகழ்வுகளிலிருந்து பொதுவான தத்துவப் புரிதல்களுக்கு மற்ற நாடகங்கள் ஒருவரை அழைத்துச் செல்வதில்லை. உங்கள் நாடகங்கள் அதைச் செய்கின்றன.
ஆனால் மன்னியுங்கள்! தேவைக்கு அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் நாடகங்கள் எழுதாவிட்டால் சிறுகதைகள் எழுதுவீர்கள். அதனால் எனக்கோ வாழ்க்கைக்கோ இழப்பொன்றுமில்லை. உங்களைப் போன்ற சிறுகதை எழுத்தாளர் ரஷ்ய இலக்கியத்தில் இதுவரை இருந்ததில்லை. இப்போது எங்களிடம் இருக்கும் மதிப்புமிக்க, பேராளுமை நீங்கள்தான்.
மாப்பசான் சிறந்த எழுத்தாளர். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவரைவிட உங்களை அதிகமாக நேசிக்கிறேன். உங்கள்மீது எனக்குள்ள பெருமதிப்பை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. சொற்கள் கிடைக்கவில்லை. நம்புங்கள், இதை மனப்பூர்வமாகச் சொல்கிறேன். நீங்கள் பேராற்றல் கொண்ட கலைஞர். நலமாக வாழ வாழ்த்துகிறேன்.
ஆமாம், ‘வாழ்க்கை’ இதழில்4 எழுத உங்களுக்கு அழைப்பு வந்ததா? அவர்களுடைய நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒப்புக்கொள்ளுங்கள்! அந்த இதழில் மிகவும் இனிய மனிதர் ஒருவர் இருக்கிறார். வி. அ. போஸ்ஸே. அவர் என்னை அழைத்தார்; நானும் ஒப்புக்கொண்டேன்.
கொரலென்கோவை எனக்குத் தெரியும். மற்றவர்கள், உண்மையைச் சொன்னால், எனக்குச் சுவாரசியமாகத் தோன்றவில்லை.
பீட்டர்ஸ்பர்க்கில் குடியேறப் போகமாட்டேன். பெரிய நகரங்களை எனக்குப் பிடிக்காது. இலக்கியத்துக்கு வருமுன் நாடோடியாக அலைந்தவன் நான். பீட்டர்ஸ்பர்க்குக்குப் போனால் சீக்கிரமே செத்துவிடுவேன். ஏனென்றால், எனக்குக் கொஞ்சம் காசநோயும் இருக்கிறது. உங்கள் கையைக் குலுக்குகிறேன்.
அ. பேஷ்கோவ்5
பொலெவாயா, 20
3 செகாவ் கார்க்கிக்கு
யால்டா, 3 ஜனவரி 1899
…என்னை நீங்கள் சற்றுத் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என்று தோன்றுகிறது. உங்கள் நடையின் முரட்டுத்தனத்தைப் பற்றி நான் எழுதவில்லை. ரஷ்ய மொழிக்கு இயல்பாகச் சொந்தமில்லாத அந்நியச் சொற்களோ, அரிதாகப் புழங்கும் சொற்களோ பொருந்தாமல் இடம்பெறுவதைப் பற்றித்தான் எழுதினேன். மற்ற எழுத்தாளர்களிடம், உதாரணமாக ‘விதிவாதமாக’ போன்ற சொற்கள் கவனத்தில் படாமல் கடந்துபோகின்றன. ஆனால் உங்கள் படைப்புகள் இசைத்தன்மையும் ஒத்திசைவும் கொண்டவை. அவற்றில் ஒவ்வொரு சிறு கரடுமுரடும் கடுமையாக உறுத்துகிறது.
இது ரசனை சார்ந்த விஷயம்தான். ஒருவேளை, அளவுக்கு மீறிய என் எரிச்சலுணர்வே இப்படிப் பேசவைக்கிறதோ என்னவோ. அல்லது, நீண்ட காலத்துக்கு முன்பே தனக்கெனச் சில பழக்கங்களை வரித்துக்கொண்ட ஒருவனின் பழைமைப் பிடிப்பாகவும் இருக்கலாம். ‘கொலீஜியேட் அசெஸர்’ என்ற அரசுப் பதவிப் பெயரையும், ‘இரண்டாம் தர கேப்டன்’ என்ற பதவிப் பெயரையும் வருணனைகளில் பொறுத்துக்கொள்கிறேன். ஆனால் ‘ காதல் குறும்பு’, ‘ வெற்றிவீரன்’2 போன்ற சொற்கள் வருணனைகளில் வரும்போது எனக்கு வெறுப்பூட்டுகின்றன.
நீங்கள் சுயமாகக் கற்றுக்கொண்டவரா? உங்கள் கதைகளில் நீங்கள் முழுமையான கலைஞராக இருக்கிறீர்கள். அதோடு, உண்மையான பொருளில் பண்பட்ட அறிவாளியாகவும் இருக்கிறீர்கள்.
உங்களுக்குச் சற்றும் பொருந்தாத பண்பு முரட்டுத்தனம். நீங்கள் அறிவுள்ளவர்; நுட்பமாகவும் நயமாகவும் உணர்கிறீர்கள். ‘ஸ்டெப்பி வெளியில்’, ‘தெப்பத்தில்’ ஆகியவை உங்கள் சிறந்த படைப்புகள். இதைப் பற்றி உங்களுக்கு எழுதியிருந்தேனா? அவை அருமையான படைப்புகள்; முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கவை. மிகச் சிறந்த தேர்ந்த கலைஞரை அவற்றில் காண முடிகிறது. நான் தவறாகக் கணிக்கிறேன் என்று தோன்றவில்லை. ஒரே குறை, அளவு குறித்த கவனம் இல்லை; நளினம் இல்லை என்பதுதான். ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய ஒருவர் மிகக் குறைந்த அசைவுகளையே பயன்படுத்துகிறார் என்றால், அதுதான் நளினம். ஆனால் நீங்கள் வெளிப்படுத்துவதில் மிகை இருப்பதை உணர முடிகிறது.
உங்கள் இயற்கை வருணனைகள் கலைத்தன்மை கொண்டவை. நீங்கள் உண்மையான நிலக்காட்சி ஓவியர். ஆனால் இயற்கைக்கு அடிக்கடி மனிதப் பண்புகளை ஏற்றுகிறீர்கள்: கடல் மூச்சுவிடுகிறது; வானம் பார்க்கிறது; ஸ்டெப்பி வெளி சுகத்தில் திளைக்கிறது; இயற்கை முணுமுணுக்கிறது, பேசுகிறது, துயரப்படுகிறது. இவ்வாறு மனிதப் பண்புகளை ஏற்றுவது வருணனைகளை ஓரளவு ஒரே சாயல் கொண்டவையாகவும், சில நேரங்களில் திகட்டும் இனிமை கொண்டவையாகவும், சில நேரங்களில் தெளிவற்றவையாகவும் ஆக்குகிறது.
இயற்கை வருணனைகளில் வண்ணச்செறிவும் வெளிப்பாட்டு வலிமையும் எளிமையால்தான் கிடைக்கின்றன. ‘சூரியன் மறைந்தது’, ‘இருட்டிவிட்டது’, ‘மழை பெய்யத் தொடங்கியது’ போன்ற எளிய சொற்றொடர்களால்தான் அவை கைகூடுகின்றன. புனைவெழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே காணக்கூடிய அளவுக்கு அந்த எளிமை உங்களிடம் இருக்கிறது…
தமிழில்: அ.ராஜேந்திரன்
குறிப்புகள்
1. ‘ஸ்டெப்பி வெளியில்’ (1897) கார்க்கியின் சிறுகதை. செகாவின் ‘ஸ்டெப்பி வெளி’ (The Steppe, 1888) குறுநாவல் வேறு. ‘தெப்பத்தில்’ என்பது கார்க்கியின் ஒரு கதையின் ரஷ்யத் தலைப்புக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது; ஆங்கிலத் தொகுப்பில் அது On the Raft என வருகிறது.
2. ரஷ்ய மொழியில் பயன்படுத்தப்பட்ட அந்நியச் சொற்களின் பொருத்தத்தைச் செகாவ் விவாதிப்பதால், அவற்றின் ஒலிவடிவங்கள் கடிதங்களில் பேணப்பட்டுள்ளன. ‘அக்கம்பனிமென்ட்’ என்பது இசைத் துணை அல்லது பக்கவாத்தியம்; ‘டிஸ்க்’ என்பது வட்டத்தட்டு; ‘ஹார்மனி’ என்பது ஒத்திசைவு; ‘ஃப்ளர்ட்’ என்பது காதல் சீண்டல் அல்லது காதல் குறும்பு; ‘சாம்பியன்’ என்பது வெற்றியாளர். இவை தவறான சொற்கள் என்பதல்ல, கார்க்கியின் கதைகளில் அவை பொருந்துகிறதா என்பதே செகாவின் கேள்வி.
3. ‘எங்கள் சேவலிடம் பாடம் கற்றுக்கொள்ள’ என்ற தொடர், இவான் கிரிலோவின் ‘கழுதையும் வானம்பாடியும்’ நீதிக்கதையிலுள்ள கூற்றைச் செகாவ் மாற்றிப் பயன்படுத்தியது.
4. ‘வாழ்க்கை’ என்பது (Zhizn) என்ற ரஷ்ய இதழின் பெயரின் தமிழாக்கம். கடிதத்தில் குறிப்பிடப்படும் வி. அ. போஸ்ஸே அதன் ஆசிரியராகச் செயல்பட்டவர்.
5. கார்க்கியின் இயற்பெயர் அலெக்சேய் மாக்ஸிமவிச் பேஷ்கோவ். இக்கடிதத்தில் ‘அ. பேஷ்கோவ்’ என்ற பெயரில் கையொப்பமிட்டுள்ளார்.
அன்டன் செகாவ்
அன்டன் செகாவ் (1860–1904) ரஷ்யச் சிறுகதை எழுத்தாளரும் நாடகாசிரியரும் மருத்துவரும் ஆவார். நவீனச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவரான இவர், மனித வாழ்வின் நுட்பமான உணர்வுகளையும் முரண்பாடுகளையும் எளிமையான, மிகையற்ற மொழியில் சித்திரித்தவர். ஆறாம் வார்டு, நாயுடன் வந்த பெண் ஆகியவை இவரது புகழ்பெற்ற கதைகள். கடற்புறா, செர்ரித் தோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்க நாடகங்கள்.