கட்டுரை

மாப்பசானின் படைப்புகளுக்கு ஒரு முகவுரை

இக்கட்டுரை 1894-இல், மாப்பசானின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ரஷ்யப் பதிப்பிற்கு முகவுரையாகத் டால்ஸ்டாயால் எழுதப்பட்டது.

1881-ஆம் ஆண்டாக இருக்கும் என நினைக்கிறேன்; என்னைக் காண வந்திருந்த துர்கேனேவ் தனது தோல்பையிலிருந்து La Maison Tellier என்ற தலைப்பைக் கொண்ட ஒரு சிறிய பிரெஞ்சுப் புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

“நேரம் கிடைக்கும்போது இதைப் படித்துப் பாருங்கள்” என்று அவர் சாதாரணமான தொனியில் கூறினார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான், அப்பொழுதுதான் எழுதத் தொடங்கியிருந்த கார்ஷினின் கட்டுரை அடங்கிய ‘ரஷ்யன் வெல்த்’ இதழின் சில பிரதிகளை அவர் என்னிடம் அளித்திருந்தார். கார்ஷினின் விஷயத்தில் போலவே, இப்போதும் என் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த விரும்பாமல், எனது நடுநிலையான சுய அபிப்பிராயத்தை அறியவே அவர் விழைந்தார்.

“இது ஓர் இளம் பிரெஞ்சு எழுத்தாளரின் படைப்பு” என்றார். “படித்துப் பாருங்கள், மோசமில்லை. அவருக்கு உங்களைத் தெரியும்; உங்கள் மீது மிகுந்த மதிப்பும் வைத்திருக்கிறார்” என்று என்னைச் சமாதானப்படுத்துவது போல் மேலும் கூறினார். “மனிதனாக அவர் எனக்கு துருஷினினை நினைவூட்டுகிறார். துருஷினினைப் போலவே அவரும் ஒரு நல்ல மனிதர், மிகச் சிறந்த நண்பர், நம்பகமான தோழர். அதுமட்டுமன்றி, உழைக்கும் மக்களுடன் பழகி, அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்கிறார். பெண்களுடனான நட்பிலும்கூட அவர் எனக்கு துருஷினினையே நினைவூட்டுகிறார்.” மேலும், பெண் விஷயத்தில் மாப்பசானின் நடத்தை பற்றி வியப்பூட்டும், நம்பமுடியாத செய்திகள் சிலவற்றைக் கூறினார்.

அந்தக் காலத்தில் (1881) வாழ்க்கையைப் பற்றிய எனது ஒட்டுமொத்தப் பார்வையிலும் தீவிரமான அகமுக மறுசீரமைப்பைச் செய்துகொண்டிருந்தேன். நுண்கலைகளுக்கு எனது முழு ஆற்றலையும் முன்பு அர்ப்பணித்திருந்தேன். அந்த மறுசீரமைப்பில், நான் முன்பு நுண்கலைகளுக்கு அளித்திருந்த முக்கியத்துவத்தை இப்போது தரவில்லை. என் வாழ்க்கையிலும் பொதுவாக வசதி படைத்த வர்க்கத்தினரின் மதிப்பீட்டிலும் அது

வகித்து வந்தது செயற்கையான இடம்தான். இதன் காரணமாக எனக்குள் விலக்கமும் ஒவ்வாமையுமே உருவாகியிருந்தது.

எனவே, துர்கேனேவ் எனக்குப் பரிந்துரைத்த அதுபோன்ற படைப்புகளில் அப்போது எனக்கு எள்ளளவும் ஆர்வம் இருக்கவில்லை. ஆயினும், அவரது மனத்தை நோகச் செய்யக் கூடாது என்பதற்காக அவர் கொடுத்த அந்தப் புத்தகத்தைப் படித்தேன்.

முதல் கதையான La Maison Tellier-ஐப் படித்தபோதே, அதன் கருவில் ஆபாசமும் அற்பத்தனமும் இருந்தபோதிலும், ஆசிரியருக்குத் ‘திறமை’ இருக்கிறது என்பதைக் கண்டேன். 

ஆசிரியரின் ரசனைக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது தனது தீவிரமான கவனத்தைச் செலுத்தும் ஆற்றலே ‘திறமை’ எனப்படுகிறது. அது இயல்பில் வந்த சிறப்புக் கொடையாகலாம்; முயன்றும் அடையலாம். அத் திறனைப் பெற்றவன் ஒரு விஷயத்தில் மற்றவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு புதிய பரிமாணத்தைக் காண்கிறான். மற்றவர்கள் காணாததைக் காணும் இந்த ஆற்றல் மாப்பசானிடம் அமைந்திருந்தது. அது வெளிப்படையாகவே தெரிவது. ஆனால், நான் படித்த அந்தச் சிறிய நூலை வைத்துப் பார்க்கும்போது, திறமையைத் தவிர்த்து, ஒரு உண்மையான கலைப் படைப்பிற்கு இன்றியமையாதன அதில் இல்லை. அதற்கு மூன்று முதன்மை நிபந்தனைகள் உள்ளன. மிக முக்கியமான முதலாவது நிபந்தனைக்கான பதில் அவரிடம் இல்லை என்பது புலப்பட்டது. 

1. தான் எடுத்துக்கொண்ட கருப்பொருளுடன் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய சரியான, அதாவது அறம் சார்ந்த தொடர்பு. 

2. வெளிப்பாட்டில் தெளிவு, வடிவத்தின் அழகு – இரண்டும் ஒன்றே. 

3. நேர்மை, அதாவது கலைஞன் சித்தரிக்கும் பொருளின் மீது அவன் கொண்டிருக்கும் மெய்யான ஈடுபாடு. 

இந்த மூன்றில், மாப்பசான் பிந்தைய இரண்டை மட்டுமே பெற்றிருந்தார். முதலாவதில் அவர் முற்றிலும் பின்தங்கியிருந்தார். தான் சித்தரித்த நிகழ்வுகளுடன் அவருக்குச் சரியான, அதாவது அறம் சார்ந்த தொடர்பு இருக்கவில்லை.

நான் படித்தவற்றிலிருந்து – மாப்பசானுக்குத் திறமை இருந்தது. அதாவது, தான் கையாளும் கதையில், வாழ்க்கை நிகழ்வுகளில் மற்றவர்கள் உணராத கூறுகளைக் கவனித்து வெளிப்படுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அதை நான் உணர்ந்தேன். உறுதியாக.

தான் சொல்ல விரும்புவதைத் தெளிவாக, எளிமையாக, எழிலாக வெளிப்படுத்தும் அழகிய நடையில் அவர் வல்லவர். கலைப்படைப்பு தன் செல்வாக்கை ஏற்படுத்துவதற்கு எது இன்றியமையாதது? ‘நேர்மை.’ அதுவும் அவருக்கு இருந்தது. தான் விவரித்ததை நேசிப்பதாகவோ வெறுப்பதாகவோ அவர் பாசாங்கு செய்யவில்லை, மாறாக உண்மையிலேயே நேசித்தார் அல்லது வெறுத்தார். 

எழுத்தாளன் தான் விவரிப்பவற்றுடன் சரியான அறத் தொடர்பு கொண்டிருப்பது, அதாவது நன்மை தீமைக்கு இடையிலான வேறுபாட்டைப் பற்றிய அறிவு அவரிடம் இல்லை. ஆதலால் நேசிக்கக்கூடாத, விவரிக்கக்கூடாத விஷயங்களை அவர் ரசித்து விவரிக்கிறார். இங்ஙனம், அந்தச் சிறிய நூலில், பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் எவ்வாறு மயக்குகிறார்கள் என்பதை சகல விவரங்களுடனும் ஆசிரியர் விரும்பி விவரித்துள்ளார்; La femme de Paul என்ற கதையில், புரிந்துகொள்ளக் கடினமான சில ஆபாசங்களையும்கூட அவர் எழுதுகிறார். மேலும் கிராமப்புற உழைக்கும் மக்களை படுஅலட்சியமாக மிருகங்களாய்க் கருதி அருவருப்போடும் எள்ளலோடும் சித்தரிக்கிறார்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வேறுபாட்டைப் பற்றிய இந்த உணர்வின்மையை Une partie de campagne என்ற கதையில் குறிப்பாக சுட்டிக்காட்டலாம். அதில், படகில் வெறும் கைகளுடன் துடுப்பு வலிக்கும் இரு ஆண்கள், ஒரே நேரத்தில், வயதேறிய ஒரு தாயையும் அவளது இளம் மகளையும் மயக்கிச் சீரழிக்கும் விரிவான விவரணை இனிமையான, வேடிக்கையான நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியரின் அனுதாபம் முழுவதிலும் இந்த இரு பாவிகளின் பக்கமே இருக்கிறது; அதனால், சீரழிக்கப்பட்ட தாய், மகள், அந்த மகளைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளைஞன், அவன் தந்தை ஆகியோரின் உணர்வுகளை அவர் அலட்சியப் படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதைக் காணவே தவறுகிறார். எனவே, அருவருப்பான குற்றம் ஒன்றின் வெறுக்கத்தக்க விவரிப்பு ஒரு வேடிக்கையான விளையாட்டு போல வழங்கப்படுகிறது. மட்டுமன்றி, அந்த நிகழ்வே பொய்மையுடன் விவரிக்கப்படுகிறது. ஏனெனில், இதில் நிகழ்வுகளின் ஒரு பக்கமே, அதுவும் மிக அற்பமான பக்கமே – அந்த அயோக்கியர்கள் அடைந்த இன்பம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

அதே சிறிய நூலில், Histoire d’une fille de ferme என்றொரு கதை உள்ளது. அதைத் துர்கேனேவ் எனக்குக் குறிப்பாகப் பரிந்துரைத்தார். ஆனால் தன் கருப்பொருளுடன் ஆசிரியருக்கு இருந்த இந்தத் தவறான பார்வையால் அதுவும் எனக்கு மிகவும் வெறுப்பூட்டியது. தான் விவரிக்கும் உழைக்கும் மக்கள் அனைவரையும் அவர் காமம், தாய்மை அன்பிற்கு மேல் உயர முடியாத மந்தபுத்தி மிருகங்களாகவே காண்கிறார். அதனால் அவரது விவரிப்புகள் முழுமையற்ற, செயற்கையான உலகையே காட்டுகின்றன.

உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ளாமையும், சிற்றின்பம், வஞ்சம், பேராசையால் மட்டுமே இயக்கப்படும் அரை – மிருகங்களாக அவர்களைச் சித்தரிப்பதுமே மாப்பசான் உள்ளிட்ட பெரும்பாலான அண்மைக் கால பிரெஞ்சு எழுத்தாளர்களின் முதன்மையான குறை. அதுவே மிக முக்கியமான குறைபாடாகும். மாப்பசான் இதில் மட்டுமல்ல, உழைக்கும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் தனது அனைத்துக் கதைகளிலும் அவர்களைக் கரடுமுரடான மந்தமான மிருகங்களாகவே எப்போதும் எள்ளலோடு விவரிக்கிறார். நிச்சயமாக, பிரெஞ்சு எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மக்களின் இயல்பை என்னை விட நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஆனால் நான் ரஷ்யனாக இருந்து பிரெஞ்சு விவசாயிகளிடையே வாழாத போதிலும், தங்கள் மக்களை இவ்வாறு சித்தரிப்பதில் பிரெஞ்சு ஆசிரியர்கள் தவறுகிறார்கள் என்றும், பிரெஞ்சு தொழிலாளர்கள் அவர்கள் சித்தரிப்பது போல் இருக்க முடியாது என்றும் உறுதியாகக் கூறுகிறேன். நாம் அறிந்த பிரான்ஸ் உண்மையிலேயே சிறந்த மனிதர்களையும், அறிவியல், கலை, குடியுரிமை, அறவளர்ச்சிக்கு அந்தப் பெருமக்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளையும் கொண்டது. பிரான்ஸில் அத்தகைய பண்பாடு நிலவுகிறது என்றால், அந்தப் பெருமக்களைத் தன் தோள்களில் தாங்கி நிற்கும் உழைக்கும் வர்க்கம் மிருகங்களால் ஆனதாக இருக்க முடியாது. மாறாக விழுமியங்களைப் பேணும் சமூகமாக, நற்குண மனிதர்களைப் போற்றும் சமூகமாகவே அமைந்திருக்க வேண்டும். எனவே La terre போன்ற நாவல்களிலும் மாப்பசானின் கதைகளிலும் நான் படிப்பதை நம்பவில்லை; அஸ்திவாரமே இல்லாமல் ஒரு அழகான மாளிகை நிற்பதாகக் கூறினால் அதை எப்படி நம்பமாட்டேனோ அப்படியே இதையும் நம்பமாட்டேன். மக்களின் இந்த உயர் குணங்கள் La petite Fadette, La mère aux diables ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளவாறு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இந்த உயர் குணங்கள் நிலவுகின்றன என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு. பிரிட்டிஷ் பணிப்பெண்களின் இடுப்பையும் கழுத்தையும் மட்டுமே உற்சாகத்துடன் விவரித்து, உழைக்கும் ஆண்களின் வாழ்க்கையை வெறுப்புடனும் எள்ளலுடனும் விவரிக்கும் மாப்பசானைப் போன்ற ஒரு எழுத்தாளன் ஒரு மாபெரும் கலைப் பிழையைச் செய்கிறான். ஏனெனில் அவன் தன் கருப்பொருளை மிகத் தட்டையாக, அதுவும் மிகக் குறைந்த ஆர்வமூட்டும் உடல் தோற்றத்திலிருந்து மட்டுமே விவரிக்கிறான்; மனங்களின் சாராம்சமாக அமைந்திருக்கும் மிக முக்கியமான மானுடப் பொது அறம், ஆன்மீகப் பக்கத்தை முற்றிலும் தன் கண்ணோட்டத்திலிருந்து விலக்கிவிடுகிறான்.

மொத்தத்தில், துர்கேனேவ் என்னிடம் அளித்த அந்தச் சிறிய புத்தகத்தைப் படித்ததில், அந்த இளம் எழுத்தாளர் மீது எனக்கு எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை.

Une partie de campagne, La femme de Paul, L’histoire d’une fille de ferme ஆகிய கதைகள் எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்ததால், Le papa de Simon என்ற அழகிய கதையையும், இரவின் விவரிப்பில் மிகச் சிறந்த கதையான Sur l’eau என்பதையும் நான் அப்போது கவனிக்கத் தவறிவிட்டேன்.

“எழுத விரும்பும் ஆர்வலர் பலர் இருக்கும் இக் காலத்தில், எழுத்தாற்றலை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள் இருக்கிறார்களே! விவரிக்கக் கூடாத, விவரிக்கத் தேவையில்லாத விஷயங்களைத் துணிச்சலாக விளக்கும் திறமையாளர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களே!” என்று நினைத்தேன். துர்கனேவிடமும் அதையே கூறினேன். அதன்பின் மாப்பசானைப் பற்றி மறந்தே போனேன்.

அதன் பிறகு என் கையில் கிடைத்த அவரது முதல் படைப்பு Une Vie; அதை யாரோ என்னைப் படிக்கும்படி தூண்டினார். அந்த நூல் மாப்பசானைப் பற்றிய எனது முந்தைய அபிப்பிராயத்தை உடனடியாக மாற்றியது, அன்றிலிருந்து அவர் பெயரில் வெளியான அனைத்தையும் ஆர்வத்துடன் படித்தேன். Une Vie மிகச் சிறந்தது; அது அவரது நாவல்களிலேயே ஒப்பிட மிகச் சிறந்தது மட்டுமன்றி, விக்டர் ஹியூகோவின் Les Misérables-க்குக்குப் பிறகு வெளிவந்த மிகச் சிறந்த பிரெஞ்சு நாவலாகவும் இருக்கலாம். இதில் வியத்தகு திறமை தெரிகிறது. மெய்யான கலைப் படைப்பின் மூன்று அடிப்படைக் குணங்களும் ஏறக்குறைய சம அளவில் ஒன்றிணைந்துள்ளன: முதலாவதாக, ஆசிரியருக்குத் தன் கருப்பொருளுடன் இருக்கும் சரியான, அதாவது அறம் சார்ந்த தொடர்பு; இரண்டாவதாக, வடிவத்தின் அழகு; மூன்றாவதாக, நேர்மை, அதாவது ஆசிரியர் விவரிப்பவற்றின் மீதான மெய்யான ஈடுபாடு. வாழ்க்கையின் பொருள் என்பது பல்வேறு காமுகர்களின் சாகசங்களில் அமைந்திருப்பதாக ஆசிரியர் முன்னர் கருதியதிலிருந்து இதில் விலகி வந்துவிட்டார். இங்கே, தலைப்பு சுட்டிக்காட்டுவது போல, கருப்பொருள் வாழ்க்கைதான். தன் முந்தைய கதைகளில் வாழ்க்கையின் மையப்புள்ளியாகவும் மற்ற அனைத்தையும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஆசிரியர் சித்தரித்த அதே கரடுமுரடான மிருகத்தனமான சிற்றின்ப மோகத்தால் அழிக்கப்பட்ட ஒருத்தியின் கதை. நன்மை அனைத்திற்கும் உகந்தவள். பாழாக்கப்பட்ட அப்பாவி. அந்த அன்பான பெண்ணின் வாழ்க்கையை வரையும் இந்த நூலில் ஆசிரியரின் முழுச் சாய்வும் நன்மையின் பக்கமே இருக்கிறது.

அவரது ஆரம்பக் கதைகளின் வடிவ அழகு, இந்நூலில் வேறு எந்த பிரெஞ்சு புதின எழுத்தாளரும் எட்டாத உச்சத்திற்குச் சென்றுள்ளது. இது பூரண வடிவழகு என்பது எனது அபிப்பிராயம். எல்லாவற்றிற்கும் மேலாக, தான் விவரிக்கும் அந்த நல்ல குடும்பத்தை ஆசிரியர் உண்மையிலேயே ஆழமாக நேசிக்கிறார்; மேலும் அந்தச் அழகான குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் பாழாக்கி, குறிப்பாக நாயகியின் வாழ்க்கையைச் சீரழிக்கும் அந்தப் பண்பாடற்ற காமுகனை அவர் வெறுக்கிறார்.

அதனால்தான் இந்த நாவலின் அனைத்து மாந்தரும் நிகழ்வுகளும் வெகு இயல்பாகவும் மறக்க முடியாததாகவும் உள்ளன. அன்பான, நலிவுற்ற தாய்; நேர்மையான, பலவீனமான, கவர்ச்சிகரமான தந்தை; எளிமை, கபடின்மை, நல்லன நாடுதலால் துலங்கும் மகள்; அவர்களுக்கும் உலகிற்குமான உறவுகளின் ஊடாட்டமே இப் புதினம். அவர்களின் வேலையாட்கள், அண்டை வீட்டார், அவர்களின் முதல் பயணம் என்று புதினம் வளர்கிறது. வழக்கமான அசுரத்தனமான உள்ளுணர்வுகளை மறைத்து கொள்கைவாதியாக நாடகமாடி அந்த அப்பாவிப் பெண்ணுக்கு வலைவிரிப்பவன் – பின்னர் அவனே மணமகன். அவன் ஏமாற்றுக்காரன், கணக்குப் போடுகிறவன், முரடன், காமுகன், இழிவானவன், அற்பன், அகந்தை பீடித்தவன். திருமணம், இயற்கை எழில் கொஞ்சும் கொர்சிகா, கிராம வாழ்க்கை, கணவனின் வன்செயல்கள், ஒழுக்கமிமின்மை, சொத்தின் மீது அவன் ஆசை, அதிகாரம் செலுத்துதல், மாமனாருடன் மோதல் எனக் கதை நீள்கிறது, நல்ல மனிதர்களின் விட்டுக்கொடுத்தல், அகந்தையின் வெற்றி; அண்டை வீட்டாருடனான உறவுகள் என இவை அனைத்துமே வாழ்க்கையின் சிக்கலும் பன்முகத்தன்மையும் கொண்டவை. இவை தெளிவாக நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி, இதன் உண்மையான உருக்கமான தொனி வாசகனையும் தொற்றிக் கொள்கிறது. ஆசிரியர் இந்தப் பெண்ணை அவளது தூயஆன்மாவிற்காக நேசிக்கிறார், அவளுக்காக இரக்கப்பட்டுத் துயருறுகிறார் என்பதை உணர முடிகிறது. இந்த உணர்வு வாசகருக்கும் இயல்பாகவே தொற்றுகிறது. ‘ஏன், எதற்காக இந்தத் தூயவள் பாழாக்கப்படுகிறாள்? உண்மையிலேயே இது இப்படித்தான் நடக்க வேண்டுமா?’ என்ற கேள்விகள் வாசக உணர்வில் எழுந்து, மனித மனத்தை, வாழ்க்கையின் பொருளைப் பற்றி அவனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.  

அந்த இளம் பெண்ணின் தோல் பற்றிய விரிவான விவரிப்பு, கைவிடப்பட்ட மனைவி ஒரு கிறிஸ்தவ மடாலய ஆலோசனையின் பேரில் மீண்டும் தாயானாள் என்ற சாத்தியமற்ற, தேவையற்ற விவரங்கள் – இவை நாயகியின் தூய்மை மதிப்பையெல்லாம் கெடுக்கின்றன. காயம்பட்ட கணவனின் பழிவாங்கும் உணர்ச்சிகரமான, இயற்கைக்கு மாறான கதை போன்ற சில போலித் தொனிகள் நாவலில் இருந்தபோதிலும், இந் நாவல் எனக்கு மிகச் சிறந்ததாகத் தோன்றியது. வாழ்க்கைக்குள் ஆழமாக ஊடுருவி, அதில் தன் வழியைக் காணத் தொடங்கிய ஒரு தீவிரமான மனிதனையே இந் நூலில் மாப்பசானிடம் கண்டேன். நன்மை தீமையை அறியாத, அறிய விரும்பாத திறமையான ஒரு அரட்டையாளனையும் நகைச்சுவையாளனையும், அதாவது முந்தைய மாப்பசானை நான் இதில் காணவில்லை, 

நான் படித்த மாப்பசானின் அடுத்த நாவல் Bel-Ami. Bel-Ami நாவலின் பெரும்பகுதி குப்பைதான். ஆசிரியர் தன்னை ஈர்ப்பவற்றைக் கொண்டாட்டாக விவரிக்கிறார். அதில் தனக்குத்தானே முழு சுதந்திரம் கொடுத்துக் கொள்கிறார். சில சமயங்களில் தனது நாயகன் மீதான விமர்சனப் பார்வையை இழந்து அவன் பக்கமே சாய்கிறார். ஆனாலும் ஒட்டுமொத்தமாக, Une Vie போலவே, Bel-Ami தன்னகத்தே ஒரு தீவிரமான போக்கையும் உணர்வையும் கொண்டுள்ளது. Une Vie-யில் அடிப்படைக் கரு  என்பது, ஒரு கொடூரமான காமுகனால் சீரழிக்கப்பட்ட ஒரு நல்ல பெண்ணின் துயர வாழ்வின் இரக்கமற்ற தன்மையை, அர்த்தமின்மையைக் கண்டு நாம் அடையும் திகைப்பாகும். ஆனால் இங்கே அது வெறும் திகைப்பு மட்டுமல்ல, ஆத்திரமும் தான். தன் காமக் களியாட்டத்தின் மூலமாகவே தன் வாழ்க்கையைக் கட்டியெழுப்பி சமூகத்தில் உயர் பதவியை அடையும் ஒரு பண்பற்ற காமாந்தகளின் செழிப்பை, வெற்றியைக் கண்டு அடையும் ஆத்திரம். அவன் புழங்கும் உயர் வட்டாரத்தின் சீரழிவைக் கண்டு அடையும் ஆத்திரம். முந்தைய நாவலில் ஆசிரியர் கேட்பது போல் தோன்றும்: ‘எதற்காக, ஏன் ஒரு நல்லவள் பாழாக்கப்பட்டாள்? அது ஏன் நடந்தது?’ இங்கே பிந்தைய நாவலில் அவர் பதிலளிப்பது போல் தோன்றுகிறது: ‘நமது சமூகம் சீரழிந்ததாக, அர்த்தமற்றதாக, பரிவற்றதாக இருக்கிறது. அதில் தூய்மையானவை, நல்லவை எல்லாம் அழிந்துவிட்டன, அழிந்து கொண்டிருக்கின்றன.’

நாவலின் கடைசிக் காட்சி – கௌரவப் பட்டத்தால் (Legion of Honour) அலங்கரிக்கப்பட்ட, வெற்றியடைந்த அந்த அயோக்கியனுக்கும், அவன் முன்னர் மயக்கிய ஒரு நல்ல பெண்மணியின் மகளான தூய்மையான பெண்ணுக்கும் ஒரு ஆடம்பரமான தேவாலயத்தில் நடக்கும் திருமணம்; ஆயரால் ஆசீர்வதிக்கப்பட்ட, எல்லோரும் ஏற்று வாழ்த்திய திருமணம். இந்தக் கதைத் திருப்பம் அசாதாரண ஆற்றலுடன் வெளிப்படுகிறது. அழுக்கான அற்பத்தனமான  விவரணைகள் நிரம்பியிருந்த போதிலும் (அதில் ஆசிரியர் இன்பம் காண்பதாகத் தோன்றுவது வருந்தத்தக்கது), இந் நாவலிலும் வாழ்க்கையைப் பற்றிய அதே தீவிரக் கேள்விகள் இருக்கின்றன.

நாவலில் முதிய கவிஞருக்கும் நாயகனுக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் படியுங்கள். முதிய கவிஞன் புலம்புகிறான். தன் வாழ்க்கையின் நிர்கதியை, தவிர்க்க முடியாத மரணத்தை உள்ளது உள்ளபடியே காட்டுகிறான்.

மரணத்தைப் பற்றிய அவன் கூற்று: “அவள் ஏற்கெனவே என்னைப் பீடித்துவிட்டாள், அந்தச் செருக்கி” என்கிறான். “அவள் என் பற்களை உதிர்த்துவிட்டாள், என் மயிரைப் பிடுங்கிவிட்டாள், என் உறுப்புகளை முடக்கிவிட்டாள், இப்போது என்னை விழுங்க வருகிறாள். அவள் பிடியில் சிக்கியிருக்கிறேன். ஒரு பூனை எலியுடன் விளையாடுவது போல அவள் என்னுடன் விளையாடுகிறாள், நான் தப்ப முடியாது என்று அவளுக்குத் தெரியும். புகழா? செல்வமா? ஒரு பெண்ணின் அன்பை வாங்க முடியாத போது அவற்றால் என்ன பயன்? ஏனெனில் ஒரு பெண்ணின் அன்புதான் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்றதாக்குகிறது, பின்னர் ஒருவனின் நலக்கேடு வாழ்க்கையையே பறித்துக்கொள்கிறது. எஞ்சியதையும் மரணம் பிடுங்கிக்கொள்கிறது. மனிதனின் கதி இது தான். இவ்வளவுதான். வேறு எதுவுமே இல்லை.”

தனக்குப் பிடித்த அனைத்துப் பெண்களையும் வீழ்த்தும் நாயக வெற்றியாளன் கிழவனின் புலம்பலைக் கேட்கிறான் கேட்கவில்லை, புரிகிறதோ புரியவில்லையோ! ஆனால் சிற்றின்ப வேட்கையின் தினவு அவனுக்குள் மிக வலுவாகத் துடிப்பதால், அவனுக்கும் அதே முடிவை முன்னறிவிக்கும் இந்த மறுக்க முடியாத உண்மை அவனை அசைப்பதில்லை.

இந்த அக முரண்பாடு, தன் எள்ளல் மதிப்பிற்கு அப்பாற்பட்டு, நாவலுக்கு அதன் முக்கியத்துவத்தை அளிக்கிறது. காசநோய் தின்ற பத்திரிகையாளனின் மரணம் பற்றிய பரிதாபக் காட்சிகளிலும் இதே போக்கு தொடர்கிறது. ஆசிரியர் தனக்குத்தானே இந்தக் கேள்வியை எழுப்புகிறார்: இந்த வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையின் மீதான பற்றுக்கும், தவிர்க்க முடியாத மரணத்தைப் பற்றிய அறிவிற்கும் இடையிலான முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது? அவர் தேடுவது போல் தோன்றுகிறது, நிறுத்துகிறார், இந்த வழியிலோ அந்த வழியிலோ முடிவு செய்யவில்லை. எனவே இந்த நாவலில் வாழ்க்கையுடனான அறத் தொடர்பு தொடர்ந்து சரியாகவே இருக்கிறது.

ஆனால் அடுத்து வரும் நாவல்களில், வாழ்க்கை பற்றிய அறப் பார்வை குழப்பமடைகிறது. நிகழ்வுகளைப் பற்றிய மதிப்பீடு தயங்குகிறது, மங்கலாகிறது, கடைசி நாவல்களில் அது முற்றிலும் பிறழ்ந்து விடுகிறது.

Mont-Oriol-இல் மாப்பசான் தனது முந்தைய இரு நாவல்களின் நோக்கங்களையும் ஒன்றிணைத்து, அதற்கேற்பச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். நுட்பமான ரசனை, அழகிய விவரிப்புகள் ஆங்காங்கே உள்ளன. இருந்தபோதிலும், Une Vie-யில் வரும் கணவனைப் போலவே இழிவான பொலிகாளை போன்ற நாயகனை இங்கும் காண்கிறோம்; அதே ஏமாற்றப்பட்ட, சாதுவான, பலவீனமான, தனிமையான – எப்போதும் தனிமையான – நல்ல பெண்ணையும் தான். Bel-Ami-யில் உள்ளது போலவே பேராசையும் காமமும் அற்பத்தனமும் வெற்றி பெறுகிறது. உணர்ச்சி ஏதுமற்ற அதே வெற்றி. பாழாய்ப் போன வெற்றி!

சிந்தனை ஒன்றுதான், ஆனால் வாழ்க்கை பற்றிய ஆசிரியரின் அறப்பார்வை ஏற்கெனவே மிகவும் தாழ்ந்துவிட்டது, முக்கியமாக Une Vie-யை விடக் கீழே போய்விட்டது. நன்மை தீமை பற்றிய ஆசிரியரின் அக மதிப்பீடு குழம்புகிறது. நடுநிலையான புறவடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அருவமான விருப்பம் அவருக்கு இருந்தபோதிலும், அயோக்கிய நாயகர்கள் பக்கமே அவரது முழு அனுதாபமும் இருக்கிறது. எனவே இந்த நாவலின் காதல் கதையும் அவனது மயக்கும் முயற்சிகளும் வெற்றியும் ஒரு பொருந்தாத உணர்வையே ஏற்படுத்துகின்றன. ஆசிரியரின் நோக்கம் என்னவென்று வாசகனுக்குத் தெரியவில்லை: இந்த நாயகனின் மன வெறுமையையும் இழிவையும் காட்டுவதா? (அவன் தன் குழந்தையைச் சுமப்பதால் இடுப்பு பாழாகிவிட்டது என்பதற்காக மட்டுமே ஒரு பெண்ணை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளி அவமதிக்கிறான்); அல்லது அவன் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது, எளிதானது என்பதைக் காட்டுவதா?

அடுத்தடுத்த நாவல்களான Pierre et Jean, Fort comme la mort, Notre cœur ஆகியவற்றில், தனது கதாமாந்தரின் போக்கு பற்றிய ஆசிரியரின் அற நோக்கு மேலதிகக் குழப்பமடைகிறது, கடைசி நாவலில் முற்றிலும் தொலைந்து போகிறது. அலட்சியம், அவசரத்துடன் எழுதிய இந்த நாவல்கள் அனைத்திலும் உண்மையின்மை உறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதே அறமின்மையால் நலிகின்றன. ஒரு புகழ்பெற்ற கதாசிரியராக மாப்பசானின் பெயர் பரவியதும் இந்த வீழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு புகழ்பெற்ற எழுத்தாளரும், குறிப்பாக மாப்பசானைப் போன்ற கவர்ச்சிகரமான எழுத்தாளரும் உட்படும் சோதனை தான் இது. நமது காலத்தின் பரிதாபக் கோலம்! முதலாவது காரணம், அவரது ஆரம்ப நாவல்களின் வெற்றி, பத்திரிகைகளின் பாராட்டு, சமூகத்தின், குறிப்பாகப் பெண்களின் புகழ்ச்சி. இரண்டாவதாக, தொடர்ந்து அதிகரித்து வரும் அவரது தேவைகளுக்கு ஒருபோதும் ஈடுகொடுக்க முடியாத ஊதியத்தின் அளவு. மூன்றாவதாக, பதிப்பாளர்களின் பிடிவாதம், ஒருவரையொருவர் மிஞ்சி ஏலம் கேட்பது, புகழ்வது, கெஞ்சுவது, ஆசிரியர் எழுதித் தரும் எதையும் அதன் தகுதியை மதிப்பிடாமல் அச்சிடுவது. மக்களிடம் இப்போது நிலைத்துவிட்ட அவர் பெயரே போதுமானது; கிறுக்கிய எதையும் முந்திக்கொண்டு ஏற்றுக்கொள்வது. இந்தச் சோதனைகள் அனைத்தும் மிகவும் கடுமையானவை. அவை வெளிப்படையாக அவரது தலையைச் சுற்ற வைக்கிறது. அவர் அவற்றுக்கு அடிபணிகிறார். மேலும் நிதானமாக சிந்தித்து எழுதவோ படைப்பைச் செழுமைப்படுத்தவோ முனைப்பில்லை, நேர அவகாசமும் இல்லை. விழுமியங்கள் நன்மை தீமைகள் பற்றிய ஆசிரியப் பொறுப்பின்றி தனக்குப் பிடித்தவை பிடிக்காதவை என்ற தட்டையான நோக்கில் வேக வேகமாக எழுதிக் குவிக்கின்றனர். 

Bel-Ami-யில் தொடங்கி, மாப்பசானின் அனைத்து நாவல்களிலும் இந்த அவசரக் கோலமும், செயற்கைத்தனமும் படிந்துள்ளது. அன்றிலிருந்து மாப்பசான் தன் முதல் இரு நாவல்களைக் கவனமாக எழுதியதைப் போல பிறகு எழுதவில்லை. அவர் சில அடிப்படைக் கேள்விகளைத் தன் நாவலின் அஸ்திவாரமாக எடுத்துக் கொண்டு, அதற்கான விடை தேடும் போக்கில் தன் கதாபாத்திரங்களின் செயல்களை விவரிக்கவில்லை; மாறாக அனைத்துப் போலி நாவலாசிரியர்களும் செய்வதைப் போல எழுதினார். அதாவது, மிகவும் சுவாரஸ்யமான, உருக்கமான அல்லது அதிநவீன மனிதர்களையும் சூழ்நிலைகளையும் உருவாக்குவது, கதையின் கட்டமைப்பிற்குள் பொருந்தாத விவரணைகள் அலங்கரிப்புகள், விழுமியங்கள் மீதான அலட்சியம் என்று நாவல்களை உற்பத்தி செய்தார். Pierre et Jean, Fort comme la mort, Notre cœur ஆகியவை அத்தகையவையே.

பிரெஞ்சு நாவல்களில் குடும்பத்தினர் எவ்வாறு மூவர் மட்டுமாக வாழ்கின்றனர், கணவனைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்த ஒரு காதலனுடன் எப்போதும் நாயகி திரிகிறாள் என்பதைப் படித்து படித்துப் பழகிவிட்டது. என்ற போதிலும், கணவர்கள் அனைவரும் எப்படி எப்போதும் முட்டாள்களாக, கேலிக்குரியவர்களாக இருக்கிறார்கள்? ஆனால் காதலர்கள் அனைவரும் கொம்பன்களாக, வசீகர நாயகர்களாக இருக்கிறார்கள் என்பது நமக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது! இவர்கள் மீது எள்ளல் இல்லை. இறுதியில் இவர்களும் இன்னொருத்தியை மணம் புரிந்து கணவர் அந்தஸ்து பெறுகிறார்கள்! மேலும், அனைத்துப் பெண்களும் எவ்வாறு சீரழிந்தவர்களாகவும், அதேசமயம் அவர்களே தாய்மார்களானதும் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியும் என்பது மேலும் மேலும் புரியாப் புதிர்தான். 

மாப்பசானின் படைப்புகளுக்கு ஒரு முகவுரை

இந்த இயற்கைக்கு மாறான, சாத்தியமற்ற, ஆழமற்ற, எல்லாவற்றிற்கும் மேலாக அறமற்ற கதைப் போக்குகளின் மீதே Pierre et Jean & Fort comme la mort ஆகியவை புனையப் பட்டுள்ளன; எனவே அத்தகைய சூழ்நிலையில் உள்ள மனிதத் துயரங்கள் நம்மை சற்றும் பாதிப்பதில்லை. கணவனை ஏமாற்றித் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கக்கூடிய ஒருத்தி, தன் மகனிடம் பாவத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படும் போதும், தனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்று கூறித் தன்னை அவள் நியாயப்படுத்தும்போதும் அனுதாபம் எழவில்லை. Fort comme la mort-இல், வாழ்நாள் முழுக்கத் தன் நண்பனை ஏமாற்றி, அவன் மனைவியைச் சுகித்த அந்தக் கயவன், இப்போது வயதாகிவிட்டதால் தன் காதலியின் மகளை மயக்க முடியவில்லையே என்று மட்டுமே வருந்தும்போது, அவனிடம் நாம் எப்படிப் பரிவு கொள்ள முடியும்? கடைசி நாவலான Notre cœur-இல், பல்வேறு வகையான பாலியல் கதைகளை விவரிப்பதைத் தாண்டி எந்தக் கருவும் இல்லை. தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாத ஒரு சோம்பேறிக் காமுகனின் சலித்துப்போன உணர்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. அவன் முதலில் தன்னை விடவும் சீரழிந்த ஒரு பெண்ணுடன் – சிற்றின்பத் தேவையின் சாக்குப்போக்குகூட இல்லாத, மனரீதியாகச் சீரழிந்த ஒரு பெண்ணுடன் – வாழ்கிறான். பின்னர் அவளை விட்டுவிட்டு ஒரு பணிப்பெண்ணுடன் வாழ்கிறான், பிறகு மீண்டும் முந்தையவளுடன் சேர்கிறான். இருவருடனும் வாழ்வதாகத் தோன்றுகிறது. Pierre et Jean & Fort comme la mort ஆகியவற்றில் சில உருக்கமான காட்சிகளாவது  இருந்தன. இந்தக் கடைசி நாவல் வெறுப்பை மட்டுமே தூண்டுகிறது.

மாப்பசானின் முதல் நாவலான Une Vie-யில் கேள்வி இதுதான்: இதோ ஒரு மனித ஜீவன் – நல்லவள், அறிவாளி, இனிமையானவள், நன்மையையே நாடுகிறவள்; இந்த ஜீவன் உலகிற்கு எதையும் வழங்காமல், முதலிலேயே ஒரு குறுகிய மனம் படைத்த, மிருகத்தனமான, முரட்டு முட்டாள் கணவனுக்குப் பலியிடப்படுகிறாள். இது ஏன்? ஆசிரியர் அந்தக் கேள்வியைக் கேட்கிறார், பதில் எதையும் தராதது போலத் தோன்றுகிறது. ஆனால் முழு நாவலும், அவள் மீதான அவரது பரிதாப உணர்வும், அவளைப் பாழாக்கியதன் மீதான அருவருப்பும் பதிலாக இழையோடுகின்றன. பைபிளில் யோபு தன் நண்பர்களிடம் தனது துயரங்களை யாருமே அறியமாட்டார்கள் என்று கூறினான். அது போல, அவளது துயரத்தைப் புரிந்துகொண்டு அவளை ஆதரிக்க யாரும் இருந்தால், அத் துயரிலிருந்து ஆறுதல் பெறலாம். பரிவு காட்டப்படும் போது துயரம் களையப்படுகிறது; இங்கே ஆசிரியர் இந்தத் துயரத்தை புரிந்துகொண்டு பரிவு காட்டியுள்ளார், அந்தத் துயரம் மீட்சியடைகிறது; ஏனெனில் மனிதர்களால் அது புரிந்துகொள்ளப்பட்டவுடன், அது விரைவில் அல்லது தாமதமாகவேனும் கடந்து போகும்.

அடுத்த நாவலான Bel-Ami-யில் கேள்வி: நல்ல மனிதர்கள் ஏன் துயருறுகிறார்கள் என்பது அல்ல; தகுதியற்றவர்களுக்குச் செல்வமும் புகழும் ஏன் சேர்கின்றன? செல்வமும் புகழும் என்றால் என்ன? அவை எவ்வாறு பெறப்படுகின்றன? முன்பு போலவே, கதையில் இந்தக் கேள்விகள் தமக்கான பதில்களையும் தாங்கி வருகின்றன. மனிதக் கூட்டம் மிகவும் உயர்வாக மதிக்கும் அனைத்தையும் நிராகரிப்பதில் பதில்கள் அடங்கியுள்ளன. இந்த இரண்டாவது நாவலின் கருப்பொருள் இன்னும் தீவிரமானது, ஆனால் ஆசிரியர் தான் விவரிக்கும் கருப்பொருளுடன் கொண்டுள்ள அறத் தொடர்பு ஏற்கெனவே கணிசமாகப் பலவீனமடைந்து விட்டது; முதல் நாவலில் அதைப் பாழாக்கும் புள்ளிகளும் காமமும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றியிருந்தன. Bel-Ami-யில் இந்தக் கரும்புள்ளிகள் அதிகரித்து, பல அத்தியாயங்கள் குப்பை கூளங்களால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இந்த விவரணைகள் ஆசிரியருக்கு இன்பம் தருவதாகவும் தோன்றுகிறது.

அடுத்த நாவலான Mont-Oriol-இல், ஏன் எதற்காக அன்பான பெண் துயருறுகிறாள், பண்பாடற்ற முரடன் வெற்றியையும் மகிழ்ச்சியையும் பெறுகிறான்? என்ற கேள்விகள் கேட்கப்படவேயில்லை. ஆனால் அது அப்படித்தான் இருக்கும் என்பது அமைதியாக ஏற்றுக்கொள்ளப் பட்டதாகத் தோன்றுகிறது. இங்கு எந்த விழுமியங்களும் உணரப்படவில்லை. ஆனால் எந்த அவசியமும் இன்றி, எந்தக் கலைக் கருதுகோளும் இன்றி, அழுக்கடைந்த சிற்றின்ப விவரிப்புகள் வாசகருக்கு வழங்கப்படுகின்றன. தன் கருப்பொருளுடன் ஆசிரியருக்கு உள்ள பொருட்டின்மையை இது சுட்டுகிறது. கலை அமைதியின் மீறலுக்கு உதாரணமாக, நாயகி குளிக்கும்போது வரும் விரிவான விவரிப்பு குறிப்பாக வியப்பளிக்கிறது. இது முற்றிலும் தேவையற்றது, மேலும் நாவலின் புறவய அகவய நோக்கத்துடன் எந்த வகையிலும் தொடர்பற்றது: “அவளது இளஞ்சிவப்பு மேனியில் நீர்க்குமிழ்கள் தோன்றுகின்றன.”

“சரி, அதனால் என்ன?” என்று வாசகன் கேட்கிறான். “வேறொன்றுமில்லை” என்ற ஆசிரியர் பதிலளிக்கிறார் “எனக்கு அத்தகைய வர்ணனைகள் பிடிக்கும் என்பதால் விவரிக்கிறேன்.”

அடுத்த நாவல்களான Pierre et Jean, Fort comme la mort ஆகியவற்றில் எந்த அறமோ அக்கறையோ இல்லை. இரண்டுமே சீர்கேடு, ஏமாற்று, பொய்மைகளையே மையம் கொண்டுள்ளன. அதனால்தான் கதைமாந்தர் துயரத்தில் தள்ளப்படுகின்றனர்.

கடைசி நாவலான Notre cœur-இல், மனிதர்களின் நிலை மிகவும் கொடூரமானதாக, பண்பாடற்றதாக, அறமற்றதாக உள்ளது. அவர்கள் நியாயத்துக்காக எதனுடனும் போராடுவதில்லை. மாறாக சிற்றின்பப் பிரியர்களாக கர்வத்தோடு திரிகிறார்கள், காமத் திருப்தியை மட்டுமே தேடுகிறார்கள்; ஆசிரியரும் அவர்களது நாட்டங்களை ரசிப்பதாகத் தோன்றுகிறது. இந்தக் கடைசி நாவலிலிருந்து பெறக்கூடிய ஒரே முடிவு என்னவென்றால், வாழ்க்கையின் பேரின்பம் காமக் கலவியில் உள்ளது, எனவே அந்த இனிய உவகையை எவ் வழியிலாவது பெற வேண்டும் என்பதாகும்.

அரை-நாவலான Yvette-இல் வாழ்க்கையுடனான இந்த அறமற்ற வெறுமை மேலும் வியப்பளிக்கிறது. தன் அறமின்மையால் குலைந்து போன இக் கதை பின்வருமாறு: தாயின் ஒழுக்கக்கேடான உயர்வட்டத்தில் கற்றுக்கொண்ட நடத்தைகளால் சீரழிகிறாள் மகள். ஆனால் அந்த அழகியின் ஆன்மா தூய்மையானது. அவள் ஒரு காமுகனைத் தீயவழிக்குத் தூண்டுகிறாள். அவன் அவள் மீது காதல் கொள்கிறான். ஆனால் இந்தப் பெண் தன் தாயின் சமூகத்தில் கற்றுக்கொண்ட நெறியற்ற போக்கை உணர்ந்து, அவள் முன்னரே முறை மீறியவள் என்று கற்பனை செய்து, அவன் அவளிடம் வேறொருவனுடன் தகா உறவுக்கு முயற்சி செய்யுமாறு அடாவடியாகக் கூறுகிறான். அத்துமீறிய இந்த யோசனையால் அவள் அதிர்ச்சியில் சினக்கிறாள் (ஏனெனில் அவள் அவனை நேசிக்கிறாள்). அது அவளது தாயும் அவளும் தாழ்ந்துவிட்ட இழிநிலையை உணர்த்துகிறது; அவளது கண்ணைத் திறக்கிறது. அவள் வெகுவாகத் துயருறுகிறாள். இந்த ஆழமான உருக்கமான காட்சி மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது: ஓர் அழகான தூய்மையான ஆன்மாவிற்கும் சமூகச் சீர்கேட்டுக்கும் இடையிலான மோதல். இத்துடன் அது முடிந்திருக்கலாம்; ஆனால் ஆசிரியர், எந்தத் தேவையுமின்றி, தொடர்ந்து எழுதி, இந்த மனிதனை இரவில் அந்தப் பெண்ணை அத்துமீறி மயக்க விடுகிறார். வெளிப்படையாகக் கதையின் முதல் பகுதியில் ஆசிரியர் பெண்ணின் பக்கத்தில் இருந்தார், ஆனால் பிந்தைய பகுதியில் திடீரென்று காமுகனின் பக்கத்திற்குச் சென்றுவிட்டார். ஒரு நோக்கம் மற்றொன்றை அழிக்கிறது. முழு நாவலிலும் சரியாகப் பிசையப்படாத மாவால் ரொட்டி வேகவில்லை.  

Bel-Ami-க்குப் பிறகு வெளிவந்த அனைத்து நாவல்களிலும் (அவரது முதன்மைத் தகுதியையும் புகழையும் உருவாக்கும் சிறுகதைகளைப் பற்றி நான் இப்போது பேசவில்லை, பின்னர் பேசுவோம்), பாரிஸ் எழுத்து வட்டத்தில் மட்டுமல்லாமல், இப்போது கலைஞர்களிடையே எங்கும் ஆதிக்கம் செலுத்தும் போக்கிற்கு மாப்பசான் பணிந்தார் என்பது வெளிப்படை. அதாவது ஒரு கலைப் படைப்பிற்குச் சரியானது எது, தவறானது எது என்பதைப் பற்றிய தெளிவான கருத்து இருக்கத் தேவையில்லை; மாறாக, ஒரு கலைஞன் அனைத்து அறக் கேள்விகளையும் அறவே அலட்சியப்படுத்த வேண்டும், அவ்வாறு செய்வதில் ஒரு குறிப்பிட்ட கலைத் தகுதியும் இருக்கிறது என்பதாகும். இந்தப் போக்கு காட்டுவது: வாழ்க்கையில் இயல்பாக இருப்பதை, அழகாக இருப்பதை, தனக்குப் பிடித்ததை, அல்லது ‘புதுமை’யை விரும்பியபடியெல்லாம் கலைஞன் சித்தரிக்கலாம் அல்லது சித்தரிக்க வேண்டும்; மானுட அறம், சமூக விழுமியம், சரி தவறு பற்றியெல்லாம் கருத்தில் கொள்வது ஒரு கலைஞனின் வேலையல்ல.

ஒரு புகழ்பெற்ற ஓவியர், தன் ஓவியங்களில் ஒன்றை எனக்குக் காட்டியது நினைவிருக்கிறது. அது சிறப்பாக வரையப்பட்டிருந்தது, சமய ஊர்வலம் ஒன்றைக் காட்டியது. ஆனால் தன் கருப்பொருளுடன் கலைஞனுக்கு இருக்க வேண்டிய எந்த ஈடுபாடும் புலப்படவில்லை.

“இந்தச் சடங்குகளை நல்லதாகக் கருதி, அவை நிகழவேண்டும் என்று நினைக்கிறீர்கள் இல்லையா?” என்று அவரிடம் கேட்டேன்.

எனது கபடமற்ற அறியாமைக்குச் சற்று இரங்கி, தனக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது என்றும் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை என்றும் கூறினார்; வாழ்க்கையைச் சித்தரிப்பதே தன் வேலை என்றார்.

“ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் அதை ஏற்கிறீர்களா?” “இதுவுமில்லை அதுவுமில்லை” என்றார். வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமலும், அதன் நிகழ்வுகளை நேசிக்காமலும் வெறுக்காமலும் சித்தரிக்கும் இந்த நவீனமான, மிகவும் பண்பட்ட கலைஞர் எனது முட்டாள்தனத்தைக் கண்டு இரக்கச் சிரிப்புடன் பதிலளித்தார்.

மாப்பசானும் அவ்வாறே நினைத்தார் – எழுத்துக்குக் கேடாக. Pierre et Jean-க்கான தனது முகவுரையில், ஓர் எழுத்தாளரிடம் வாசகன் கேட்பதாக அவர் எழுதுகிறார். அது பின்வருமாறு: ‘என்னைத் தேற்றுங்கள், என்னை மகிழ்வியுங்கள், என்னைச் சோகத்தில் ஆழ்த்துங்கள், என்னை நெகிழச் செய்யுங்கள், என்னைக் கனவு காண வையுங்கள், என்னைச் சிரிக்க வையுங்கள், என்னை நடுங்க வையுங்கள், என்னை அழ வையுங்கள், என்னைச் சிந்திக்க வையுங்கள்.’ தேர்ந்த வாசகர் சிலர் மட்டுமே கலைஞனிடம் கேட்கிறார்கள் “உங்கள் இயல்புக்கேற்ப உங்களுக்கு உகந்த வடிவத்தில் வாசகருக்காக அழகான ஒன்றை உருவாக்குங்கள்.”

இந்தத் தேர்ந்த வாசகர் கோரிக்கையை ஏற்கும் விதமாக, தனது வட்டத்தில் உயர்வாகக் கருதப்பட்டது, கலைச் சேவை செய்ய வேண்டியது ‘அழகு’தான் என்று கபடமில்லாமல் கற்பனை செய்துகொண்டு மாப்பசான் தனது நாவல்களை எழுதினார்.

மாப்பசான் நடமாடிய வட்டத்தில், கலைச் சேவை செய்ய வேண்டிய அழகு என்பது –  பெண். நாகரீகமான அழகிய இளம் பெண். அப்புறம் காதல் லீலைகளில் கதை அவளைப் பின்தொடரும். மாப்பசானின் கலைத் தோழர்கள் அனைவராலும் – நாவலாசிரியர்கள் கவிஞர்கள் ஓவியர்கள் சிற்பிகள் – மட்டுமன்றி, சிந்தனாவாதிகளாலும், புதிய தலைமுறையினராலும் இது அவ்வாறே கருதப்பட்டது. 

இப்படியாக, புகழ்பெற்ற ரெனான் தனது Marc Aurèle என்ற நூலில், பெண் அழகைப் புரிந்து கொள்ளாததற்காகக் கிறித்தவத்தைக் கண்டிக்கும் போது, வெளிப்படையாகக் எழுதுகிறார்: 

‘கிறித்தவத்தின் குறைபாடு இங்கே தெளிவாகத் தெரிகிறது. அது மிகவும் தனித்ததாக அறம் சார்ந்ததாக மட்டுமே உள்ளது; அழகு அதில் அறவே ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒரு முழுமையான தத்துவப் பார்வையில், அழகு என்பது ஒரு கண வியப்போ, சிறு உவகையோ, பிறழ் ஈர்ப்போ, இடரோ அல்ல. நற்பண்பைப் போலவே அதுவும் கடவுளின் கொடையாகும். அது நன்மைக்கு இணையானது. அழகான பெண்ணைப் படைத்ததில், மேதையான கடவுளின் நோக்கம், குறிக்கோள் தெளிவாகத் தெரிகிறது. அவள் அதை உணர்கிறாள், அதிலிருந்தே அவளது பெருமிதம் எழுகிறது. தன் உடலில் கொழிக்கும் எல்லையற்ற நிதியத்தை அவள் உள்ளுணர்கிறாள். நற்பண்போ எத்திறமையோ இல்லாதிருந்தாலும் கூட, கடவுளின் கொடை எனத் தன்னைச் சமூகம் பார்க்கிறது என்பதை அவள் நன்றாக அறிவாள். அவளுக்கு அருளப்பட்ட கொடையைப் பயன்படுத்தவும், அவளுக்குக் கிடைத்த வரத்தை சோதிக்கவும் அவளுக்குத் தடை விதிப்பது ஏன்? பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வதன் மூலம், ஒரு கடமையைச் செய்கிறாள்; ஒரு கலையைப் பயிற்சி செய்கிறாள். அது அதிநுட்பமான கலை, ஒருவகையில் கலைகளிலேயே மிக வசீகரமான கலை. அவளது புன்னகை அற்ப மனிதர்களிடம் தூண்டும் சில தடுமாற்றங்களால் நாம் வழிதவற வேண்டாம். அழகிய உடலை அலங்கரிப்பது, பூரணத்துவத்தையே அலங்கரிப்பதாகும். இந்த மிக நுட்பமான சிக்கலைத் தீர்க்கத் தெரிந்த கிரேக்கக் கலைஞனுக்கு மேதைமைக்கான உயர் விருது வழங்குவோம். கடவுளின் படைப்புகளிலேயே பேரழகு என்பது பெண் தான். ஆடை அலங்காரமே அந்த அழகைக் கூட்டிக் காட்டுகிறது என்று மட்டந்தட்ட குதர்க்கவாதிகள் விரும்புகிறார்கள்! பெண்ணின் அலங்காரம், அதன் அனைத்து நுண்திறன்களுடனும், தனக்கே உரித்தான வழியில் மாபெரும் கலையாகும். அதைப் போற்றத் தெரிந்த சமூகங்களும் காலச் சூழல்களுமே மாபெரும் நூற்றாண்டுகள், மாபெரும் நாடுகள். மேலும் கிறித்தவம் இத்தகைய நாட்டங்களின் மீது விதித்த விலக்கின் மூலம், அது கற்பனை செய்த சமூகக் கட்டமைப்பு ஈடேறவில்லை. ஆரம்பத்தில் தீவிர பக்தியின் பெயரால் அந்த மதம் சுமத்திய குறுகிய நுகத்தடியைப் பிற்காலத்தில் சமூகக் கிளர்ச்சிகள் உடைத்தெறிந்த பிறகே ஒரு முழுமையான சமூகம் உருவாகியது.’

(எனவே, இந்த இளம் தலைமுறைத் தலைவரின் அபிப்பிராயத்தில், பாரிஸின் ஆடை வடிவமைப்புக் கலைஞர்களும், கூந்தல் கலை நிபுணர்களும் மட்டுமே இப்போது கிறித்தவம் செய்த தவறைத் திருத்தி, அழகை அதற்குரிய உண்மையான உன்னதமான இடத்தில் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.)

அழகை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லாதவாறு, அதே புகழ்பெற்ற எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியரும், அறிஞருமான அவர், L’Abbesse de Jouarre என்ற நாடகத்தை எழுதினார்; அதில் ஒரு பெண்ணுடன் கலவி கொள்வது அந்த அழகுக்கு ஆற்றும் சேவையாகும்; அதாவது ஒரு நற்செயல், உன்னதமானது என்று எழுதிக் காட்டினார். ஆசிரியரின் திறனின்மையாலும், கரடுமுரடான உரையாடல்களாலும் நொண்டியடிக்கிறது அந்த நாடகம். முதல் காட்சியிலேயே அப்பாவியான நேர்மையான கன்னிகையுடன் எந்த வகையான காதலைப் பற்றி நாயகன் விவாதிக்கிறான் என்பது தெளிவாகிறது. அதனால் அவள் சற்றும் நோகவில்லை. அநீதியாக மரண தண்டனை விதிக்கப்பட்டவன் சாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன், தன் உடல் இச்சையைத் தீர்ப்பதை விட அழகான வேறு எதையும் செய்ய முடியாது என்று காட்டப்படுகிறது.

எனவே, மாப்பசான் வளர்ந்து கல்வியறிவு பெற்ற வட்டத்தில், பெண் அழகையும், பிறழ் காதலையும், காம நாட்டங்களையும் சித்தரிப்பது கலையில் மிக இயல்பானது என்பது புத்திசாலிகளாலும் அறிஞர்களாலும் வெகுகாலத்திற்கு முன்பே ஏற்கப்பட்டு விட்டது. அவை உன்னதமான கலையின் – Le grand art – மையக் கருப்பொருளாகவே மிகத் தீவிரமாகக் கருதப்பட்டது, இப்போதும் கருதப்படுகிறது.

இந்த அற்பமான மூடத்தனமான கருதுகோளுக்குத்தான் மாப்பசான் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரான போது பணிந்தார். எதிர்பார்த்தது போல, இந்தத் தவறான லட்சியம் அவரது நாவல்களில் தொடர்ச்சியான போதாமைகளுக்கும், மேலும் மேலும் பலவீனமான படைப்புகளுக்கும் அவரை வழிநடத்தியது.

நாவலுக்கும் சிறுகதைக்குமான அடிப்படை வேறுபாடுகளைப் பார்ப்போம். ஒரு நாவல் தன் இலக்காக, வெளிப்புற இலக்காகக்கூட, ஒரு முழு மனித வாழ்க்கையின் அல்லது பல மனித உறவுகளின் விவரிப்பைக் கொண்டுள்ளது, எனவே அதன் எழுத்தாளனுக்கு நல்லது கெட்டது பற்றிய தெளிவான திடமான பார்வை இருக்க வேண்டும். இது மாப்பசானிடம் இல்லை; உண்மையில் அவர் கொண்டிருந்த கருத்துகளின் படி, அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிற்றின்ப நாவல்களை எழுதும் திறமையற்ற சில எழுத்தாளர்களைப் போல அவர் இருந்திருந்தால், கெட்டதை நல்லதாகத் தன்போக்கில் விவரித்திருப்பார், அவருடைய நாவல்கள் எளிய ஒருமையைக் கொண்டிருந்திருக்கும், அவருடைய பார்வையை ஏற்றுக்கொண்ட வாசகர்களுக்கு ஆர்வமாக இருந்திருக்கும். ஆனால் மாப்பசானுக்குத் திறமை இருந்தது, அதாவது அவர் விஷயங்களை அவற்றின் சாராம்சத்தில் கண்டார், எனவே தன்னறிவுக்கு உட்பட்ட உண்மையைப் புரிந்து கொண்டார். அவர் நல்லதாகக் கருத விரும்பியதில் தீமையைத் தன்னிச்சையாகக் கண்டார். அதனால்தான், அவருடைய முதல் நாவலைத் தவிர மற்ற அனைத்திலும், அவருடைய பரிவும் பக்குவமும் தொடர்ந்து தயங்குகின்றன; பின்னர் தீமையை நல்லதாகக் காட்டுகின்றன; இப்போது தீமையைத் தீமை என்றும் நன்மையை நன்மை என்றும் ஒப்புக்கொள்கின்றன; ஆனால் ஒரு நிலைப்பாட்டிலிருந்து மற்றொன்றிற்குத் தொடர்ந்து மாறுகின்றன. 

இது எந்தவொரு கலை உணர்வின் அடிப்படைக்கும் முரணானது. அது கலையின் நோக்கத்தையும் கட்டமைப்பையும் அழிக்கிறது. கதையின் களமும் காலமும் குறுகியதாக இருக்கும்போது, நிகழ்வுகளும் மனித உணர்வுகளும் மேலோட்டமாக இருக்கும்போது அதில் ஒருமை கூடிவந்திருப்பதாக, கலை உணர்வற்ற வாசகர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. மேலோட்டமான பார்வையாளருக்கு மட்டுமே அது அவ்வாறு தோன்றுகிறது. எந்தவொரு கலைப் படைப்பையும் ஒரே முழுமையாகப் பிணைத்திருப்பது, புறநிகழ்வுகளின் பாற்பட்ட ஒருமை அல்ல; மாறாகத் தன் கருப்பொருளுடனான ஆசிரியரின் தற்பார்வையின், மானுடப் பொது அறத்தின் ஒருமையாகும். உண்மையில், நாம் ஒரு புதிய ஆசிரியரின் கலைப் படைப்பைப் படிக்கும்போது அல்லது பார்க்கும்போது, நமது உள்ளத்தில் எழும் அடிப்படைக் கேள்வி எப்போதும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்: “சரி, நீ எப்படிப்பட்ட மனிதன்? எனக்குத் தெரிந்த மனிதர்களிடமிருந்து நீ எதில் வேறுபடுகிறாய், வாழ்க்கையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி புதிதாக எனக்கு என்ன சொல்லப் போகிறாய்?” 

கலைஞனின் கருப்பொருள் எதுவாயினும்,  எதைச் சித்தரித்தாலும், பரிசுத்தவான்கள், கயவர்கள், அரசர்கள் ஏவலர்கள் பற்றியதாயினும் – நாம் கலைஞனின் சொந்த ஆன்மாவை மட்டுமே அதில் தேடுகிறோம், காண்கிறோம். அவர் நாம் ஏற்கெனவே அறிந்த நல்ல எழுத்தாளராக இருந்தால், கேள்வி இனி “நீ எப்படிப்பட்ட மனிதன்?” என்பதல்ல. மாறாக, “சரி, புதிதாக வேறு என்ன சொல்லப் போகிறாய்?” அல்லது “வாழ்க்கையை இப்போது எந்தப் புதிய கோணத்திலிருந்து காட்டி எனக்குப் புரிய வைப்பாய்?” என்பதாகும். எனவே சமூகத்தை, பிரபஞ்சத்தைப் பற்றிய தெளிவான, அறிவார்த்தமான பார்வை கொண்டிராத ஓர் எழுத்தாளன், குறிப்பாக இதெல்லாம் தேவையில்லை என்று கருதும் ஒரு மூடன், ஒரு கலைப் படைப்பை உருவாக்க முடியாது. அவன் அதிகமாக, அழகாகக் கூட எழுதலாம், ஆனால் ஒரு கலைப் படைப்பு உருவாகாது.

அவரது நாவல்களில் மாப்பசானுக்கும் அதுதான் நிகழ்ந்தது. அவரது முதல் இரண்டு நாவல்களில், குறிப்பாக முதலாவது நாவலான Une Vie-யில், வாழ்க்கையுடன் ஒரு தெளிவான, பரிவான ஈடுபாடு இருந்தது, ஆகவே அது ஒரு கலைப் படைப்பானது.  சூழலின் மேம்போக்கான கருத்துகளின் புதுவெள்ளத்தில் இழுபட்டு, ஆசிரியரின் வாழ்க்கைப் பார்வையும் அறநோக்கும் தேவையற்றது என்று முடிவு செய்து, வெறுமனே அழகான ஈர்ப்பான ஒன்றை உருவாக்கும் விதமாக எழுதத் தொடங்கியவுடன், அவரது நாவல்கள் கலைப் படைப்புகளாகவில்லை. Une Vie, Bel-Ami-யில் ஆசிரியர் யாரை எதற்காக நேசிக்க வேண்டும், யாரை ஏன் மறுக்க வேண்டும் என்பதை அறிவார், வாசகனும் அவருடன் உடன்பட்டு அவரை நம்புகிறான். அவர் விவரிக்கும் நிகழ்வுகளையும் அந்த மனிதர்களையும் நம்புகிறான். ஆனால் Notre cœur, Yvette-இல் ஆசிரியருக்கு அந்தத் தெளிவில்லை, வாசகரும் ஏற்கவில்லை. இந்த நோக்கக் குறைபாட்டால், வாசகர் விவரிக்கப்பட்ட நிகழ்வுகளை நம்புவதில்லை, அவற்றில் ஆர்வமும் கொள்வதில்லை. எனவே, முதல் இரண்டைத் தவிர, அல்லது உறுதியாகச் சொன்னால், முதல் நாவலைத் தவிர, மாப்பசானின் மற்ற நாவல்கள் நலிந்தவை. அவர் நமக்குத் தனது நாவல்களை மட்டுமே விட்டுச் சென்றிருந்தால் –  அவர் தான் வளர்ந்த பகட்டுப் போலிச் சூழலின் விளைவாகவும், கலையை நேசிக்காத புரிந்து கொள்ளாத ஆட்களால் உருவாக்கப்பட்ட கலைக் கோட்பாடுகளின் விளைவாகவும், சுடரக்கூடிய திறனாளிகள் எவ்வாறு அழியக்கூடும் என்பதற்கான ஒரு தெளிவான உதாரணமாக மட்டுமே இருந்திருப்பார். 

ஆனால் அதிர்ஷ்டவசமாக மாப்பசான் சிறுகதைகளையும் எழுதினார். அவற்றில் அழகைப் பற்றி ஈர்ப்பாக எழுதாமல், தன் உணர்வைத் தொட்ட, சினமூட்டிய நிகழ்வுகளை எழுதினார். இந்தச் சிறுகதைகளில் – அனைத்திலும் அல்ல, சிறந்தவற்றில் – அந்த நியாய உணர்வு ஆசிரியரிடம் எவ்வாறு வளர்ந்தது என்பதைக் காண்கிறோம்.

தவறான கருத்தோட்டங்களின் செல்வாக்கால் தெளிவற்றுப் போய் தனக்குத் தானே தீங்கிழைக்கும் வரை, ஒவ்வொரு உண்மையான கலைஞனின் இயல்பும் ஆற்றலும் இதுவே ஆகும். அவனது திறமை தனக்கே கற்பித்து, அறவளர்ச்சியின் பாதையில் அவனை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது. தீர்க்கமான கண்ணோட்டத்தில் வாழ்க்கையைக் கலையில் பிரதிபலிக்கச் செய்கிறது. அப்போது ஒரு எழுத்து வினைஞன் கலைஞனாகிறான், ஏனென்றால் அவன் நிகழ்வுகளை நிலவிவரும் கருத்துகளின் படி அல்லாமல் உள்ளதை உள்ளபடியே காண்கிறான். திறமையான மனிதன் கூட தவறுகளைச் செய்யக்கூடும். ஆனால் அவனது திறமைக்கு ஏற்ப சுதந்திரமும் தக்க ஆட்டக் களமும் அளிக்கப்பட்டால் அவன் வெல்வான். மாப்பசான் தனது சிறுகதைகளில் அத்தகைய சுதந்திரத்துடன்  விளையாடினார். ஆற்றல் வெளிப்பட்டது. ஒவ்வொரு உண்மையான கலைஞனும், தன் வட்டத்தின் செல்வாக்கின் கீழ் சித்தரிக்கக் கூடாததை எழுதும் போது, பாலாமுக்கு (Balaam) நடந்ததே நடக்கிறது; பாலாம் ஆசீர்வதிக்க விரும்பி, சபிக்கப்பட வேண்டியதைச் சபித்தான், சபிக்க விரும்பி, ஆசீர்வதிக்கப்பட வேண்டியதை ஆசீர்வதித்தான். தன்னிச்சையாக அவன் தான் செய்ய விரும்பியதைச் செய்யாமல், தான் செய்ய நேர்ந்ததைச் செய்கிறான். மாப்பசானுக்கும் இதுவே நடந்தது.

வாழ்க்கையின் அனைத்து இனிமைகளும், அனைத்து அர்த்தங்களும் பெண்ணில், காதலில் இருக்கிறது என்று அவ்வளவு ஆவலுடன் நினைத்த, அத்தகைய உணர்ச்சியுடன் ஆற்றலுடன் பெண்ணையும் காதலையும் எல்லாமுமாக, பொலிவாக விவரித்த மற்றொரு எழுத்தாளன் இருந்ததில்லை; அவன் மாப்பசானே தான். மேலும் வாழ்க்கையின் நன்மைகளில் மிக உயர்ந்ததாகவும் மாபெரும் காரியமாகவும் தனக்குத் தோன்றிய ஒன்றின் மறுபக்கத்தில் அதன் அனைத்துக் கேடுகளையும் காட்டுவதில் இத்தகைய தெளிவையும் துல்லியத்தையும் அடைந்த வேறொரு எழுத்தாளன் இருந்ததில்லை; அவனும் மாப்பசான்தான். அவன் ஒரு வினாவிற்குள் எவ்வளவு தீவிரமாக ஊடுருவினானோ, அவ்வளவுக்கு அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது, அவ்வளவுக்கு அதன் மூடிகள் கழன்று விழுந்தன, அதன் பயங்கரமான பதில்களும் இன்னும் பயங்கரமான சாராம்சமும் மட்டுமே எஞ்சியிருந்தன.

முட்டாள் மகனைப் பற்றியும், மகளுடனான இரவைப் பற்றியும் (L’ermite), தன் சகோதரியுடன் இருந்த மாலுமியைப் பற்றியும் (Le port), ஆங்கிலப் பெண்ணைப் பற்றியும் (Miss Harriet), L’armoire (அலமாரியில் தூங்கிவிட்ட பெண்), Sur l’eau-வில் உள்ள திருமணம், Le champ d’oliviers, La petite Roque, Monsieur Parent, மற்றும் கடைசியாக எழுதிய Un cas de divorce ஆகியவற்றைப் படியுங்கள். மார்க்ஸ் அரேலியஸ் (Marcus Aurelius) தன் கற்பனையில் இந்தப் பாவத்தின் கவர்ச்சியை அழிப்பதற்கான வழிகளை வகுத்தபோது கூறியதையே, மாப்பசான் மிகத் தெளிவான கலை வடிவங்களில் செய்து, ஒருவனின் ஆன்மாவைத் தலைகீழாகத் திருப்புகிறார். அவன் காதலை காமத்தைப் புகழ விரும்பினான், ஆனால் அதை எவ்வளவு சிறப்பாக அறிந்து கொண்டானோ அவ்வளவுக்கு அதைச் சபித்தான். ஈர்ப்பும் இச்சையும் தன்னகத்தே கொண்டுள்ள ஏமாற்றங்களுக்கும் துயரங்களுக்கும் வேதனைகளுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையற்ற காதலின் போலித்தனத்திற்கும், அதில் உள்ள மோசடிக்கும் அவன் அதை வெறுத்தான் சபித்தான். அந்த மோசடியை நம்பி மனிதன் எவ்வளவுக்குத் தன்னை ஒப்படைத்தானோ, அவ்வளவுக்கு அதில் துயர் உழல்கிறான்.

ஆசிரியரின் இலக்கியச் செயல்பாட்டின் போக்கில் அவரது ஆற்றலும், அறநோக்கின் வளர்ச்சியும் இந்த வசீகரமான சிறுகதைகளிலும் அவரது மிகச் சிறந்த நூலான Sur l’eau-விலும் அழியாத தடயங்களாக நிலை நிற்கிறது. 

காமத்தின் தன்னிச்சையான, தீவிரமான விவரிப்புகளில் மட்டுமே ஆசிரியரின் அறவளர்ச்சியைக் காண முடிவதில்லை; மாறாக வாழ்க்கையின் மீது மேலும் மேலும் அவர் வைக்கும் உன்னதமான அறக் கோரிக்கைகளில் அது காணப்படுகிறது.

காம இச்சையில் மட்டுமே மிருகத்தனத்திற்கும் பகுத்தறிவுள்ள மனிதனின் பண்புக்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாட்டை அவன் காண்பதில்லை; என்றாலும் சமூகத்தின் முழு அமைப்பிலும் முரணை அவன் காண்கிறான்.

பொருள் சார்ந்த சமூகம் உள்ளபடியே, மிகச் சிறந்த உலகம் அல்ல என்பது மட்டுமன்றி, சிறந்தது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கக் கூடும் என்பதையும் காண்கிறான். இந்தக் கருப்பொருள் Horla-வில் வியக்கத்தக்க வகையில் வெளிப்பட்டுள்ளது. அது பகுத்தறிவையும் வாழ்க்கையின் தேவைகளையும் திருப்திப் படுத்தவில்லை என்பதையும் அவன் காண்கிறான். வேறு ஏதோ உலகம் இருக்கிறது, அல்லது குறைந்தபட்சம் அத்தகைய மாற்று உலகத்திற்கான விழைவு மனிதனின் ஆன்மாவில் இருக்கிறது என்பதை அவன் காண்கிறான்.

பொருள்சார் உலகத்தின் பகுத்தறிவின்மையால், அதன் விகாரத்தால் மட்டுமல்ல, அதன் அன்பின்மையாலும் அதன் முரண்பாடுகளாலும் அவன் துயருறுகிறான். இந்த எண்ணத்தின் வெளிப்பாட்டை, வழிதவறித் தன் தனிமையை உணர்ந்த ஒருவனின் இதயத்தைக் கீறும் அலறலை, Solitude என்ற மிகச் சிறந்த கதையை விட வேறு எதிலும் நான் கண்டதில்லை.

மாப்பசானை மிகவும் துயரப்படுத்தியதும், அவன் பலமுறை மீள மீள வருவதுமான விஷயம், மனிதனின் வேதனையான தனிமை, ஆன்மீகத் தனிமை; அவனுக்கும் சக மனிதர்களுக்கும் இடையில் நிற்கும் தடை; உடல்கள் நெருங்க நெருங்க அந்தத் தடை மேலும் வேதனையாக உணரப்படுகிறது என்று அவன் கூறுகிறான்.

எது அவனைத் துயரப்படுத்துகிறது, அவன் என்ன விரும்புகிறான்? எது இந்தத் தடையை அழிக்க முடியும்? எது இந்தத் தனிமையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்? காதல்! அவன் அருவருக்கும் சீமாட்டிகளின் காதல் அல்ல, மாறாக தூய்மையான, தெய்வீகக் காதல். அதைத்தான் மாப்பசான் தேடுகிறான். அதை நோக்கி, நெடுங்காலமாக அனைத்து மனிதர்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் அந்த இரட்சிப்பை நோக்கி, தான் கட்டுண்டு கிடப்பதாக உணரும் இந்தத் தளைகளிலிருந்து விடுபடப் போராடுகிறான், வேதனையுடன் புறப்பட முயல்கிறான்.

தான் தேடுவதற்கு என்ன பெயரிடுவது என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை. தன் தூய்மையை புனிதத்தை களங்கப் படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அதைத் தன் உதடுகளால் பெயரிட அவன் விரும்பவில்லை. 

தனிமையின் மீதான அவனது பயத்தில் காட்டப்படும் ஊமைத் தத்தளிப்பு மிகவும் நேர்மையானது. அது உதடுகளால் மட்டுமே பேசப்படும் காதல் பற்றிய பல கொஞ்சல்களை விட வலுவாக ஒருவனைத் தொற்றுகிறது, ஈர்க்கிறது.

மாப்பசானின் வாழ்க்கையின் துயரம் என்னவென்றால், மிகவும் அற்பமான, அறமற்ற வட்டத்தில் வாழ்ந்தபோதிலும், தன் திறனால், ஆற்றலால், தனக்குள் சுடர்ந்த அந்த ஒளியால், அந்த வட்டம் கொண்டிருந்த வாழ்க்கைப் பார்வையிலிருந்து தப்பித்து, ஏற்கெனவே விடுதலையை நெருங்கியிருந்தான். ஏற்கெனவே சுதந்திரத்தின் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தான். ஆனால் போராட்டத்தில் தன் கடைசி ஆற்றலையும் செலவழித்து, இறுதி முயற்சியைச் செய்ய முடியாமல், அந்த சுதந்திரத்தை அடையாமலேயே மாண்டு போனான்.

அந்த அழிவின் துயரம், நமது காலத்துப் பண்பட்டவர்கள் என்று கருதப்படும் பெரும்பாலானவரை இன்னும் துன்புறுத்தும் விஷயமாகவே நீடிக்கிறது.

பொதுவாக மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் இல்லாமல் வாழ்ந்ததில்லை. எப்போதும் எங்கும், மற்றவர்களை விட முன்னே செல்லும் உயர் திறமையுடைய மனிதர்கள், தீர்க்கதரிசிகள் தோன்றி, மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் பொருளையும் நோக்கத்தையும் விளக்கியுள்ளனர்; மேலும் அந்தப் பொருளைத் தங்களுக்குத் தாமே விளக்கிக்கொள்ள ஆற்றலற்ற சாதாரண, சராசரி மனிதர்கள், தங்கள் தீர்க்கதரிசிகள் தந்த விளக்கத்தைப் பின்பற்றியுள்ளனர்.

அந்தப் பொருள் பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கிறித்தவத்தால் எளிமையாகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் நம்பிக்கையுடனும் விளக்கப்பட்டது. அதை ஏற்று, அது கூறும் நெறிகளைப் பின்பற்ற முயலும் அனைவரின் வாழ்க்கையாலும் இது நிரூபிக்கப்படுகிறது.

ஆனால் பின்னர் அந்தப் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட மனிதர்கள் தோன்றினர், அது அர்த்தமற்றதாக மாறியது. மேலும் மனிதர்கள் பழஞ்சபை, லூர்து (Lourdes), போப், கன்னிப் பிறப்புக் கோட்பாடு (Immaculate Conception) போன்றவற்றால் விளக்கப்படும் கிறித்தவத்தை ஏற்பதா என்பது ஒருபுறம், அல்லது ரெனான், அவரைப் போன்றவர்களின் போதனைகளின்படி வாழ்க்கையைத் தொடர்வதா – அதாவது வாழ்க்கையைப் பற்றிய எந்த வழிகாட்டுதலும் புரிதலும் இன்றி வாழ்வது, மனம் உடலில் வலுவாக இருக்கும் வரை தன் போக்கில் வாழ்வது, பலவீனமடையும்போது தங்கள் மரபுப் பழக்கங்களைப் பின்பற்றுவது – என்பது மறுபுறம் என்ற இருமைக்கு உள்ளாகிறார்கள்.

சாதாரண மனிதர்கள் ஒன்றை அல்லது மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள், சில சமயங்களில் இரண்டையும் தேர்ந்தெடுக்கிறார்கள். முதலில் ஒழுக்கக்கேடு, பின்னர் பழஞ்சபைக் கிறித்தவம்; இங்ஙனம் எல்லாத் தலைமுறையினரும், உண்மையை வெளிப்படுத்தாமல் அதை மறைப்பதற்காகப் புனையப்பட்ட பல்வேறு கோட்பாடுகளுக்குப் பின்னால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்கின்றனர். சாதாரணர்கள், குறிப்பாக மந்தமான மனிதர்கள் அதிலேயே மனநிறைவு அடைகிறார்கள்.

ஆனால் மற்றவர்கள் இருக்கிறார்கள் – அதிகமில்லை, அவர்கள் அரிதானவர்கள் – மாப்பசானைப் போன்றவர்கள்.  அவர்கள் தங்கள் சொந்தக் கண்களால் விஷயங்களை உள்ளபடியே காண்கிறார்கள், அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள், மனிதர்களிடமிருந்து மறைக்கப்பட்ட வாழ்க்கையின் முரண்பாடுகளைக் காண்கிறார்கள், இந்த முரண்பாடுகள் தங்களைத் தவிர்க்க முடியாமல் எங்கு இழுத்துச் செல்லும் என்பதைத் தெளிவாக உணர்கிறார்கள். அவற்றை முன்கூட்டியே தீர்க்க முற்படுகிறார்கள். இந்தத் தீர்வுகளை அவை எங்கு காணப்படுகின்றனவோ அங்கு தவிர, அதாவது கிறித்தவத்தில் தவிர, வேறு இடங்களில் தேடுகிறார்கள். ஏனெனில் கிறித்தவம் அவர்களுக்குக் கடந்துபோனதாகவும் கைவிடப்பட்டதாகவும் தோன்றுகிறது. அதன் அபத்தத்தால் அவர்களை விரட்டுகிறது. தமக்குத் தாமே இந்தத் தீர்வுகளைக் காண வீணாக முயன்று, எந்தத் தீர்வுகளும் இல்லை என்றும், தீர்க்கப்படாத இந்த முரண்பாடுகளை எப்போதும் சுமப்பது வாழ்க்கையின் இயல்பு என்றும் முடிவிற்கு வருகிறார்கள். இத்தகைய முடிவிற்கு வந்த பிறகு, இந்த மனிதர்கள் பலவீனமான, ஆற்றலற்றவர்களாக இருந்தால், அவர்கள் அத்தகைய அர்த்தமற்ற வாழ்க்கையைப் பொறுத்துக் கொண்டு, தங்கள் நிலையைப் பற்றிப் பெருமிதமும் கொள்கிறார்கள். தங்கள் அறியாமையைத் தனிக் குணமென்றும் பண்பாட்டின் அடையாளம் என்றும் கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் மாப்பசான் போல ஆற்றல்மிக்க, உண்மையான, திறமைசாலிகளாக இருந்தால், இதைப் பொறுத்துக் கொள்வதில்லை. மாறாக ஒருவழியில் அல்லது வேறொரு வழியில் இந்த அர்த்தமற்ற வாழ்க்கையிலிருந்து வெளியேற முயல்கிறார்கள்.

பாலைநிலத்தில் தாகத்தில் தவிக்கும் மனிதர்கள், அருகிலிருக்கும் சுனையை அறிவதில்லை; நீரூற்றைச் சுற்றி நாற்றமடிக்கும் சகதியில் நிற்கும் மனிதர்களுக்கு அருகிலும் செல்வதில்லை; மற்ற அனைத்து இடங்களிலும் தண்ணீரைத் தேடுவது போல இது இருக்கிறது. மாப்பசான் இந்த நிலையில் இருந்தான். தான் தேடிய உண்மை வெகுகாலத்திற்கு முன்பே உணரப்பட்டு தனக்கு அவ்வளவு அருகில் இருந்தது என்பதை அவன் அறியவில்லை. அது அவனது எண்ணத்தில் கூட உதிக்கவில்லை. ஆனால் அவன் வாழ்ந்திருந்த உணர்ந்திருந்த அத்தகைய முரண்பாட்டிலும் எத்தகையதிலும் மனிதன் வாழ்ந்தே தீர்வான் என்பதையும் அவனால் நம்ப முடியவில்லை.

அவன் வளர்க்கப்பட்ட அவனைச் சூழ்ந்திருந்த சமூகத்தில், அனைத்து ஆசைகளாலும் உந்தப்பட்ட கருதுகோள்களின்படி வாழ்க்கை என்பது இன்பத்தில் அடங்கியுள்ளது. அவனது இளமனதும் உடலும் வலுவாக வளர்ந்தது அங்குதான். அதில் முதன்மையானவள் பெண்! அவளது காதல்! இந்தக் காதலைச் சமர்ப்பிப்பது, காதலில் சரணடைவது, காதலைப் பிறரிடம் தூண்டுவது, காதலை யாசிப்பது, காதல் இன்பத்தை துன்பத்தைக் கலைகளில் பிரதிபலிப்பது, கதைகளில் மறுஉற்பத்தி செய்வது என விதவிதமான உறவுகளுக்கு ஏற்பக் காணப்படுகிறது. இதெல்லாம் நன்றாக இருக்கலாம்; ஆனால் இந்த இன்பங்களை ஆராயும்போது, இந்தக் காதலுக்கும் அழகிற்கும் அந்நியமான, பகைமையான பிற விஷயங்கள் வெளிப்படுகின்றன: பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக விகாரமடைகிறாள், விரும்பத்தகாத வகையில் கர்ப்பமாகிறாள், அருவருப்பானவளாக மாறுகிறாள், குழந்தைகளைப் பெறுகிறாள், விரும்பாத குழந்தைகளை! பின்னர் ஏமாற்றங்கள், கொடூரங்கள், துயரங்கள், அறக் கேள்விகள் வருகின்றன, பின்னர் முதுமை, வெறுமை நாட்கள், இறுதியாக மரணம்.

அப்படியானால் இந்த அழகுக்கு அர்த்தம் என்ன? மெய்யாகவே அது அழகு தானா? ஏன் இதெல்லாம் இப்படி இருக்கிறது? வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடிநதால் நன்றாக இருக்கும், ஆனால் வாழ்க்கை தொடர்கிறது. அப்படியென்றால் அதன் பொருள் என்ன? ‘வாழ்க்கை தொடர்கிறது’ என்றால் மயிர்கள் நரைக்கின்றன உதிர்கின்றன, பற்கள் விழுகின்றன, தோல் சுருக்கங்கள், உடல் நலிவு, கடைசிக் கிடப்பில் நாற்றம். அனைத்தும் முடிவதற்கு முன்பே, எல்லாமே தலைகீழாக, அருவருப்பானதாக மாறுகிறது. இளமைக் கால ஒப்பனைகள் கலைகின்றன; வேர்வை, துர்நாற்றம், வெறுப்பு ஆகியவை வெளிப்படையாகின்றன. அப்படியென்றால் அவள் பேணிக் காத்த, பகட்டிய அழகு எங்கே? அவன் சரணடைந்த, சேவை செய்த அழகு எங்கே? எங்கே அந்த அழகு? 

என்றாலும் அவளே எல்லாம்! அவள் இல்லை என்றால் எதுவுமே இல்லை. வாழ்க்கையே இல்லை!

வாழ்க்கையாகத் தோற்றம் தந்தது வாழ்க்கை இல்லை! அது மட்டுமல்ல, ஒருவன் அதைத்தானே கைவிடத் தொடங்குகிறான், பலவீனமடைகிறான், முட்டாளாகிறான், அழிகிறான்! ஒருவன் கண் முன்பே பிறர் வாழ்க்கையின் அனைத்து நன்மைகளிலும் இன்பங்களிலும் திளைக்கிறார்கள், அல்லது அப்படிக் கற்பனை செய்கிறான். 

அது மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்றொரு சாத்தியக்கூறு ஒருவன் மனதில் ஒளிரத் தொடங்குகிறது. வேறு ஏதோ ஒன்று, மனிதர்களுடனும் முழு உலகத்துடனும் விலகிய ஏதோ ஒன்று, இந்த ஏமாற்றங்களை அனுமதிக்காத ஒன்று, எந்த வகையிலும் மீற முடியாத ஒன்று இருக்கலாம். எது உண்மையானதோ, என்றென்றும் அழகானதோ அது. ஆனால் அது இருக்க முடியாது. எங்குமே மணலைத் தவிர வேறொன்றும் இல்லை. இது பாலைநிலம் என்பதும் நமக்குத் தெரியும். பாலை நமக்கு ஆசைகாட்டும் தரிசனம் மட்டுமே – அது.

சுற்றியுள்ள வாழ்க்கையின் பொய்மைக்கும், தான் உணர்ந்த வாழ்க்கையின் மெய்மைக்கும் இடையே போராட்டம் தொடங்கும். வாழ்க்கையின் அந்தத் துயரமான தருணத்தை மாப்பசான் அடைந்தான். ஆன்மீகப் பிறப்பின் வேதனைகள் அவனுக்குள் ஏற்கெனவே தொடங்கியிருந்தன. இந்தப் பிறப்பின் வேதனைகளே அவரது மிகச் சிறந்த படைப்புகளில், குறிப்பாக இந்தப் பதிப்பில் உள்ள சிறுகதைகளில் வெளிப்படுகின்றன.

அவன் துயருறும் போதே இறக்க விதிக்கப்படாமல், தனது அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் நிறைவேற்றி இருந்தால், அவன் நமக்கு ஒளியூட்டும் மாபெரும் படைப்புகளை விட்டுச் சென்றிருப்பான். ஆனால் தனது வேதனையினூடே அவன் நமக்குத் தந்ததே அதிகம். எனவே இந்தக் கலைஞனுக்கு, உண்மையான மனிதனுக்கு, அவன் நமக்கு அளித்த கலைக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

தமிழில்:  அ. ராஜேந்திரன்

லியோ டால்ஸ்டாய்

லியோ டால்ஸ்டாய்

லியோ டால்ஸ்டாய் (1828–1910) ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர். போரும் அமைதியும், அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். மனித வாழ்வின் சிக்கல்கள், அறம், ஆன்மிகம், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இவரது படைப்புகளின் அடிப்படைக் கருப்பொருள்களாக அமைந்தன. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் மட்டுமன்றி இலக்கியம், கலை, சமயம் சார்ந்த பல சிந்தனைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அகிம்சை குறித்த இவரது சிந்தனைகள் மகாத்மா காந்தி உள்ளிட்ட பல ஆளுமைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

Font size
Line spacing
Background