முறை தவறும் உறவுகளைப் பற்றிக் கதை சொல்லும் போக்கிற்கு எதிர் விளைவுகள் உண்டு. கே.ஜி.ஜார்ஜின் மற்றொராள் (1988) என்கிற படத்தின் தலைப்பேகூட ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தும். இந்தக் கதை சொல்லப்பட்ட முறையால் சீண்டப்பட்டு வெகுண்டவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். மறைத்து வைக்கப்பட வேண்டிய, மழுப்பிக்கொண்டு நகர்ந்துவிட வேண்டிய அவலங்களை அவ்வப்போது துணிச்சலாக உரையாடி வந்ததால்தான் அந்தச் சாக்கில் மலையாளப் படங்கள் என்கிற பெயரில் பிட்டுப் படங்கள் எல்லாம் முளைத்து வந்தன. (அந்த இண்டஸ்ட்ரி செயல்பட்டதே சென்னையில் இருந்துதான் என்பது ஊரறிந்த ரகசியம். நான் துணை இயக்குநராகப் பணிபுரிந்த காலத்தில் ஒரு நாளைக்குப் பதினைந்தாயிரம் தருவதாகச் சொல்லிப் படம் பிடித்துத் தரச்சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.) இரட்டை வேடமும், பத்தினி வேஷமும் அனுஷ்டிக்கிற ஜனங்களுக்குப் பக்கவாட்டில் சொறிந்து ஆசுவாசம் கொடுத்த விஷயங்கள் பிட்டுகளில் வரும்போது சௌகரியமாகவும், அதுவொரு கலாச்சாரப் படமாக வரும்போது அசௌகரியமாகவும் இருப்பதைக் கவனித்தால் அறிய முடியும். நானறிந்த பல மலையாளிகளும் ஜார்ஜின் இந்தப் படத்தை வெறுத்தார்கள். படத்தின் திரைக்கதை அந்த அளவிற்குக் கூர்மையாகச் செயல்பட்டிருந்தது.
நமது சுரணையில் பதிவான லட்சோப லட்சம் குடும்பங்களில் ஒன்றுதான் கைமளின் குடும்பமும். பண்பு மேவியவை என்று சொல்லலாமா? கண்ணுக்குத் தெரியாத ஒழுக்கத்தில் தானியங்கி போலத் தொழிற்படுகிறவை. பிள்ளைகள் உறுத்தாத விதம் வளர்ந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். மனைவி சமைக்கிறாள், வீட்டு வேலைகள் செய்கிறாள், தனது உடலின் மற்றொரு உறுப்பு போன்ற கணவனுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்கிறாள். அவளுக்கு உதவி செய்ய ஒரு வேலைக்காரியும் உண்டு. கைமள் நல்ல சமூக அந்தஸ்தில் இருக்கிறார். மதிப்பு, மரியாதை இருக்கிறது. வாழ்வில் திருப்தி இருக்கிறது. அலுவலகத்தில் தனக்கு இருக்கிற நிறைவுகளின் பொருட்டு அதிகாரம் பண்ணுகிற இடத்திலும் அவரால் தன்னைப் பொருத்திக்கொள்ள முடிகிறது. எல்லா விஷயங்களும் நூல் பிடித்த ஒழுங்கில் சென்றுகொண்டிருக்கும்போது, ஒருநாள் அவர் வீட்டிற்கு வரும்போது, வீட்டில் மனைவி இல்லை.
அவள் அவ்வீட்டிற்கு வந்துபோகிற மெக்கானிக்குடன் ஓடிப்போய்விட்டிருக்கிறாள்.
நான் எப்போதும் சொல்லுவதுதான். ஒரு கதையை விளக்கம் பண்ணுவது மட்டுமே திரைக்கதையின் வேலை அல்ல. அது எப்போதும் பார்வையாளர்களைக் குறி வைத்துக் காத்திருக்கும் ஒன்று. இருளில் அமர்ந்து திரையை வெறித்திருக்கிறவர்களுக்குச் சலனங்கள் உண்டாக்குகிற திராணியைத் திரைக்கதையில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும். கைமளின் மனைவி பற்றிச் சொல்லியிருக்கலாம். அவளுடைய வெறுமைகள், தனிமைகள், தவிப்புகள், தாகங்கள் என்று வழக்கமான ஜல்லியடித்திருக்கலாம். அவளும் ஒரு பெண்தானே, மனிதப் பிறப்புதானே, அவளுக்கென்று ஆசைகள் இருக்காதா என்கிற சிபாரிசைப் பார்வையாளர் மனதில் ஏற்றிவிட்டிருக்கலாம், ஆனால் ஜார்ஜ் இது எதையுமே செய்யவில்லை. அவர் சொல்லுவது, அவள் மெக்கானிக்குடன் சென்றுவிட்டாள், அவ்வளவுதான். ஒரு குடும்பத்தலைவன் படத்தில் அடைகிற அதிர்ச்சியைப் படம் பார்க்கிறவர்களும் அடைகிறார்கள்.
எவ்வளவோ சிந்தனைகளும், மனப் போராட்டங்களும் இருந்திருக்கக்கூடும். எனினும் ஒரு நொடியில் முடிவெடுத்து குடும்பத்தைத் துறந்துசென்ற சுசீலாவின் மனதில் இருந்ததுதான் என்ன? இயக்குநர் அங்கே மெளனமாக இருந்துவிட்டுப் போகிறார். அதில்தான் படத்தின் வீரியமும் அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு இடைவெளி அது, அவைகளை நம்மால்தான் நிரப்ப முடியும். பெண் எனும் ஜென்மம். அவள் எப்படி ஒரு கலாச்சாரப் புனிதமாக இருக்க முடியும்? அவள் நமது தாயாக, தமக்கையாக, தாரமாக, வாழ்வுடன் இணைந்து வருகிற போதிலும் அவளுடைய விசித்திர விதிகள் புதிர்களாகத் தொடர்கின்றன. அவளைத் தெய்வமென்றோ பிசாசு என்றோ தனிமைப்படுத்தி ஒதுங்கியிருப்பதில் உள்ள அச்சமென்ன? ஆயிரம் வருடங்களின் அடக்குமுறையை ஏறிட்ட பெண்களின் குருதியில் இப்போது நுரைப்பது எந்த மாதிரியான பழியுணர்ச்சி, அல்லது கலகம்? இப்படி எவ்வளவோ இருக்கின்றன. அதற்கு ஒரு முடிவில்லை.
பொண்டாட்டி ஓடிப்போன கைமளை வேடிக்கை பார்க்கக் கூட்டமுண்டு. தலை நிமிராமல் பள்ளிக்குச் சென்று திரும்புகிற குழந்தைகளை அவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். காயம்பட்ட புண்ணில் குத்திப் பார்த்து மகிழ்ந்து செல்கிறவர்களைக் கடிந்துகொள்ள முடியாத கையறு நிலை. என்றாலும் கைமளுக்குப் பாலன் என்கிற ஒரு நண்பன் கிடைத்தது பாக்கியம். அவன் அவருக்கு ஆறுதலாக இருக்கிறான். சில இடங்களில் தேற்றுகிறான். பல உதவிகளையும் செய்கிறான். அவனால் ஒரு வீட்டினுள் நிகழ்ந்துவிட்ட உடைப்பை முழுமையாகப் பார்க்க முடிகிறது. அவன் மூலம் படத்துக்கு ஒரு சிறிய ஆசவாசப் பெருமூச்சு கிடைக்கிறது என்றால், படத்தில் காட்டப்படுகிற அவனுடைய மனைவியால் வேறு ஒரு பரிமாணமும் கிடைக்கிறது. பாலன் தனது மனைவியைக் கட்டுக்குள் வைப்பது என்கிற நிலையில் இருந்து மீண்டு எவ்வகை பொறியிலும் சிக்கிக்கொள்ளாதவன். மனைவியைச் சுதந்திரமாக இருக்க விடுவது என்கிற பேறினால், தன்னுடைய சுதந்திரத்தை அனுபவிக்கிறவன். அந்தப் பக்கமும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. பாலனின் மனைவி ஒருமுறை பெண் ஜென்மங்களைப் பற்றிச் சொல்லி நொந்துகொள்ள நேர்கிறது.
பிள்ளைகளைப் படிக்க ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, மனைவியைக் கொல்ல வேண்டும் என்கிற பிடுங்கலுடன் கத்தியை வாங்குகிற கைமளைப் புரிந்துகொள்வது எளிது. நமக்கு இது புதிதே இல்லை. கள்ளக்காதல் சமாச்சாரங்களில் வழக்கமாகச் செயற்படும் ஒரு நடைமுறை. சில நாட்களில் அவளைக் கொல்ல முடியாது என்கிறார். அவளைக் கொல்லுவது ஒரு ஆட்டுக்குட்டியைக் கொல்லுவது போல என்கிறார். அவளுக்கு எதுவும் தெரியாது என்று அழுகிறார்.
ஆண்கள் முட்டுச்சந்துகளில் செய்வதறியாமல் திகைத்து நின்றுவிடக் கூடியவர்கள்.
இந்தப் படத்தின் மற்றொரு ஆணைப் பற்றி மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. சுசீலாவை அவளது இடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு சென்றவன். அவன் எப்படி ஒரு அயோக்கியன் இல்லையோ, வாழும் முறையால் அவன் பொருட்படுத்தத் தகுந்தவனும் அல்ல. பசிக்கும்போது ஏதாவது ஓட்டல்களில் கிடைத்ததை வாங்கிக்கொண்டு வந்து வயிற்றை நிறைத்துக்கொள்ளுவது போலத்தான் தோதுப்படுகிற பெண்களுடன் இருந்து கொள்கிறான். அவனுக்கு இருப்பது ஒரு எலிப்பொந்து வீடுதான். கொஞ்சம் சம்பாத்தியம், கொஞ்சம் சோக்கு என்று அவன் எதிலும் நிரம்ப முடியாதவன். சொல்லப்போனால், சுசீலாவைக் கூட்டி வந்த கொஞ்ச நாட்களுக்குள் அவன் அவளை எதற்குக் கூட்டி வந்திருக்க வேண்டும் என்பதற்கு மலைத்துவிடுவான்.
படத்தில் காட்டப்படவில்லை என்றாலும் அவனால் எவளையும் சுலபமாக விரட்டியடித்துவிட முடியும். வாழ்வை சட்டை செய்யாதவன், பெண்கள் மீது அசட்டையாக இருப்பதில் என்ன விநோதம் இருந்துவிடப் போகிறது? ஆனால் கொஞ்சம் ஆழமாகப் போனால் பெரும்பான்மை ஆண்கள் பெண்களின் காரியத்தில் அந்த மெக்கானிக்கை ஒத்தவர்கள்தான் என்பதையும் அறியலாம். பொதுவாக, பெண்களை சக ஜீவிகளாக ஏற்றுக்கொள்வதிலேயே பெரும் குழப்பங்கள் நிலவுகின்றன.
சுசீலாவுக்கு மன்னிப்பு இருக்கிறது.
அப்படித் தோன்றுவதால்தான் பாலன் அதை வற்புறுத்துகிறான். ஒரு சமரசம் நடந்து அவளைத் திரும்பக் கொண்டுவர முடியும் என்பதில் கைமளுக்கு ஆர்வம் இருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும், அனைத்தும் முன்பு போலாகிவிடும் என்று பாலன் சொல்லுவதை அவர் நம்பவே விரும்புகிறார் என்பதும் நமக்குத் தெரிகிறது.
பாலன் சுசீலாவை அழைத்து வருகிறான்.
கிளைமாக்சில் நடப்பது வேறு.
தன்னைப் பொருட்டாக மதிக்காமல் இம்மியளவு திரும்பிவிட்டாலும், அந்தப் பெண்ணைப் பழி வாங்கவே ஓர் ஆண் கற்பிக்கப்பட்டிருக்கிறான். கைமள் சுசீலாவுக்கு அதைத்தான் செய்கிறார்.
ஒரு திரைப்படமாகப் பார்த்து முடிக்கும்போது இதன் ஆக்கம் மிகுந்த வியப்பூட்டியது. கச்சிதம் என்றால் அத்தனை கன கச்சிதம்.
திரைக்கதையில் ஒரு வரிகூட அதிகமாக எழுதப்பட்டிருக்காது என்பதுடன், காட்சிகளில் எங்கேனும் மருந்துக்குக்கூட மிகுதன்மை இல்லை. நடிகர்கள், நடிகைகள் அனைவரும் அவர்கள் ஏற்றிருந்த பாத்திரத்துக்குப் பொறுப்பாக இருப்பதைத் தவிர்த்து எங்கேயும் நடித்துத் தள்ளவில்லை. யாரையும், ஒரு நபரைக்கூடக் குறிப்பிட்டு நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லிவிட முடியாது. ஒளிப்பதிவாளர், தான் இருப்பதையே காட்டிக்கொள்ள விரும்பியிருக்கவில்லை. இசையமைப்பாளரும் அப்படித்தான். தொழில்நுட்பங்கள் அனைத்துமே இயக்குநரின் கனவை முழுமை செய்து ஒதுங்கி நின்றிருக்கின்றன.
பெண்ணின் ஒழுக்கத்தைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னாலும், ஒரு காலத்தில் அது அவளைக் கேவலம் செய்கிறது என்றார்கள். அம்மாதிரியான படங்களை எடுக்கக்கூடாதோ என்று படம் எடுத்துவிட்டவர்கள் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் ‘கல்யாணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘சாவித்திரி’ என்கிற படம் பரதன் இயக்கியது. ஒரு மனநிலைக்குள் இருந்து இயங்க முடியாத இளம்பெண் சற்றே வழுக்கி அப்புறம் தற்கொலை செய்துகொள்கிறாள். அதுவொரு சூழலைச் சொல்லிய முக்கியமான படம். ஆனால் அசோகமித்திரன் அதை வன்மையாகக் கண்டித்தார். அந்த விமர்சனம் அவர் சொன்ன ஒன்றாகப் பொருந்தவே இல்லை. எப்போதும் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. உதிரிப்பூக்கள் படத்துக்கு அப்புறம் மகேந்திரன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். அடுத்து வந்த பூட்டாத பூட்டுகள் வரவேற்பு பெறவில்லை. இத்தனைக்கும் தரமாகவே சொல்லப்பட்ட படம். பின்னொரு நாளில், மகேந்திரன் அந்தப் படம் எடுத்து தவறு செய்துவிட்டதாக அவரே வருத்தப்பட்டார்.
இன்று உலகம் மாறியிருக்கிறதா? மனிதனை ஆதியோடந்தமாகப் புரட்டிப் போட்டு விண்வெளிகளில், காலநிலைப் பயணங்களுக்கு முன்னேறின திரைப்படங்கள் சென்றுவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், மனித உணர்வுகள் அப்படியே தட்டையாகத் தூசு படிந்து கிடக்கின்றன. ஆண் பெண் உறவுகளில், போலித்தனமான உறவுகளை உடனடியாகக் கொண்டாடிச் சலித்து, உடனடியாக வெறுமைக்குத் திரும்புகிறார்கள். இக்காலத்தின் அவசரங்களுக்குத் துணை வருகிற அத்தனை கருவிகள் வழியாகவும் பதற்றங்கள் இரட்டிப்பாகின்றன. ஒரு கணத்தில் கழுத்தை அறுத்துக்கொள்கிறவர்கள் பெருகியவாறு இருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டுகளில் கலை, இலக்கியம் வழியாக எட்டிய உரையாடல்களில் பெரும்பகுதியை சினிமா இன்னும் அடையவே இல்லை.
எனினும் உலகம் மாறியிருக்கிறது என்பதற்கான வேறுவித சமிக்ஞைகள் உள்ளன. பெண்களின் ஒழுக்கத்தை இன்று வேறு விதமான பரிசீலனைகளுக்குக் கொண்டுசெல்கிற திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தக் காரியங்களைப் பெரும்பாலும் பெண் இயக்குநர்களே செய்துகொண்டிருக்கிறார்கள். நோக்கமும் பார்வையும் மாறும்போது ஒரு காலத்தைய நியாயங்கள் முறிக்கப்படுவதையும் உணர முடிகிறது. வருங்காலத்தின் பெண், கற்பைப் பேணுவதைக் காட்டிலும் அதிமுக்கியமான வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பல்லிக்கு வாலைப் போல, பெண்ணின் இன்றைய நெறிகள் உதிர்ந்து பின்னொரு நாளில் கேலிக்குள்ளாகும்.
இந்த வழியில் வந்து பார்த்துதான், கே.ஜி.ஜார்ஜின் சமூக விமர்சனப் படங்களை முக்கியமானதாகக் கருதுகிறேன். முக்கியமாக, மற்றொராள் படத்தை விசேஷமான படமாகப் பரிந்துரை செய்கிறேன்.
*
முந்தைய பகுதிகள்:
- ஸ்வப்னாடனம்
- உள்கடல்
- மேள
- கோலங்கள்
- யவனிகா
- லேகயுடே மரணம், ஒரு பிளாஷ்பேக்
- ஆதாமிண்டே வாரியெல்லு
- பஞ்சவடிப் பாலம்
- இரைகள்
- கதைக்குப் பின்னில்