பல முக்கியமான திரைப்பட ஆக்கங்களில் ஒளிப்பதிவாளராகப் பங்காற்றியவர் வேணு. முன்னறியிப்பு, கார்பன் போன்ற படங்களை இயக்கியவர். அவர் கே.ஜி.ஜார்ஜுடன் இணைந்து பணியாற்றிய காலங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வருகையில், ஒன்றை மிக முக்கியமாகக் குறிப்பிட்டார். படப்பிடிப்பில் ஒரு காட்சி எடுத்து முடித்த பிறகு வேணுவிற்கு அது சம்பந்தப்பட்ட வேறு ஒரு ஷாட் எடுக்கலாம் என்று தோன்றியிருக்கிறது. அதை அவர் ஜார்ஜிடம் சொல்லுகிறார். ஜார்ஜ் சில கணங்கள் யோசித்துவிட்டு, புன்னகையுடன் கைகளை விரித்து ‘எதற்காக?’ என்கிறார். ஆம், எதற்காக! அதை அனுபவித்துச் சொல்லிச் சிரிக்கிற வேணு, மறுபடியும் அதைச் சொல்லிச் சிரிக்கிறார், எதற்காக. ஒரு திரைப்படத்திற்கு வேண்டியவைகள் பலவும் இருக்கலாம். நல்ல இயக்குநராக இருக்கிற ஒருவருக்கு வேண்டாதவைகள் பலவும் இருக்கும். ஜார்ஜ் அங்கேதான் தன்னுடைய திரைப்படங்களுடைய கச்சிதங்களின் அழகில் உயர்ந்து நிற்கிறார்.
அவருடைய படங்கள் அனைத்துமே வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான். கொஞ்சம் கமர்ஷியல் கலந்து செய்து பார்த்த ‘கதைக்குப் பின்னில்’ என்கிற படத்திலுமே அந்தக் கண்டிப்பு பராமரிக்கப்பட்டு இருந்ததைக் கவனிக்க முடியும். அது சினிமா என்கிற அப்பட்டமான வணிகத்துக்கு உகந்தது அல்ல. ‘சொல்ல வேண்டியதை, நான் நினைத்த அளவில் சொல்லுவேன்’ என்கிற வைராக்கியத்தைப் பணம் போடுகிற முதலாளிகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்த வேளை சோற்றில் மண் விழுந்துவிடுமா என்று சதா சர்வகாலமும் பீதிகொண்டு பிழைக்கக்கூடிய ஸ்டார்களுக்கு ஜார்ஜ் ஒரு அபாய அறிகுறி. எனவே ஜார்ஜ் எப்போதுமே சினிமா அவரைத் தள்ளி நிறுத்திய வட்டத்துக்குள் நின்றவாறே தனது கத்தியைச் சுழற்றியவாறு இருந்திருக்கிறார். குறைந்தபட்சம் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்.
சில வீழ்ச்சிகள் இல்லாமல் இல்லை. அவை ஒருபோதும் பொருட்படுத்தக் கூடியதல்ல. அவர் தயாரித்த, மற்றும் அவர் கடைசியாக இயக்கிய படங்கள் இந்தக் கட்டுரைத் தொடரில் இடம்பெறவில்லை. அதற்கு மேலே சொன்ன காரணம்தான். அதே நேரத்தில் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும் இந்நேரத்தில் ஜார்ஜ் இயக்கிய மேலும் இரண்டு படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவைகள் அவருடைய புகழ்பெற்ற படங்களோ அல்லது விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட படங்களோ அல்ல. இதைச் சொல்லும்போது வேறொன்றைச் சொல்லியாக வேண்டும், இரண்டுமே தரமான படங்கள். அவற்றில் கண்டிப்பாக அவருடைய கையெழுத்து இருக்கிறது.
தூர்தர்ஷன் தயாரித்த ஒரு படம் அது, பாறப்புரத் எழுதிய கதை. இலக்கியவாதி எழுதின இலக்கியச் சுவையுள்ள படைப்பு எனலாம். இந்தப் படம் வெளிவந்த காலத்தில் சினிமா என்பதே களியாட்டமாக உணரப்பட்டிருக்க, சினிமா பார்வையாளர்கள் பல போதாமைகளை உணர்ந்திருக்கக்கூடும். மனித வாழ்வைப் பற்றின, மரணத்தைப் பற்றின யோசனைகள் படத்தின் கரு. இரண்டு நண்பர்களைப் பற்றியது. அதில் ஒருவன் எழுத்தாளன். வாசகனும் எழுதாத படைப்பாளியாகவும் இருக்கிற நண்பனைக் காண்பதற்காகப் பேருந்தில் வந்துகொண்டிருக்கிறான். இருவருடைய பழக்கமும் வாழ்வும் பிளாஷ்பேக்கில் சொல்லப்படும். பஸ்சில் கல்யாண கோஷ்டி ஒன்று வருகிறது, ஒரு மரணமும் நிகழ்கிறது. வாழ்க்கை அங்கே பிரமித்து நிற்பதை வேடிக்கை பார்க்கிற எழுத்தாளன், கடைசிக் காலத்தில் மனதை உறுத்திய துயர்களுடன் நண்பனும் இறந்துவிட்டிருப்பதைக் காண்கிறான். நண்பனின் மரணமும், பேருந்தில் கண்ட மரணமும் அடிப்படையில் ஒன்றுதானா? மரணம் ஒன்று மட்டும்தான் தவிர்க்கவே ஆகாத நிஜமா?
எழுத்தாளன் நண்பனின் வீட்டைச் சுற்றிப் பார்ப்பதில் ஜார்ஜ் நமக்குக் காட்ட விரும்புகிற சுவை தெரிந்துவிடுகிறது. நண்பனின் சுதந்திர வாழ்க்கையை நாம் அவ்வளவு விரும்பிவிடுவது இயக்குநரின் நோக்கம். ஆனால் எழுத்தாளன் மனைவியைப் பிரிகிற முடிவுடன் ஒருமுறை தத்தளிக்கும் போது நண்பன் அதைத் தடுத்து அவர்கள் சேர்ந்து வாழ்வதற்குக் காரணமாக இருக்கிறான். ஒரு கட்டத்தில் எழுத்தாளனுக்கும் நமக்கும் புரிந்துவிடுகிறது, நண்பனுக்கேகூட வந்து சேர்ந்துவிடுகிற தனிமை. எங்கே போயிற்று அவன் நமக்குக் காட்டின ஆத்மபலம்? வாழ்க்கை, நாம் அறுதியிடுகிற தீர்ப்புகளை மதிப்பதே இல்லை.
படத்தின் பெயர், யாத்ரயோடே அந்த்யம் (1989). பயணங்களின் முடிவு.
அடுத்த படத்தின் பெயர், ஈ கன்னி கூடி (1990). வழக்கமாக அவர் எடுத்துக்கொள்கிற கருப்பொருள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு மரணம். ஒரு துப்பறிதலில் துவங்கிச் சென்று ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சிறிது சிறிதாக விளக்கிச் செல்லுகிறது. ஜார்ஜ் இம்முறை ஒரு வேசித்தொழில் செய்கிற பெண்ணின் கதையைச் சொல்லுகிறார். ஆனால் அவள் எங்கோ வேற்றுக்கிரகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு பூமியில் இறக்கிவிட்டது போல மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிற பலருடைய நம்பிக்கைகளைத் தகர்க்கிறார். அந்தக் குழியில் யாரும் விழுந்துவிடலாம். அந்த இழிவு வாழ்வைத் தொடர்ந்து நடத்த நேர்கிற சவால்கள் பாரபட்சம் இல்லாமல் யாருக்கும் வரும். படத்தில் மேலும் சிக்கலான முடிச்சுகள் உள்ளன. உண்மையில் ஒரு பெண்ணுக்குக் கணவன் என்று சொல்லப்படுகிறவன் யார்? குடும்பப் பாங்கோ, வேசி வாழ்வோ இந்தப் பெண்கள் எல்லாம் அவனைப் பற்றிக் கருதியிருப்பது என்ன? ஓர் ஆண் தன்னை வீழ்த்திய பிறகு அடுத்த ஆணின் மீது நம்பிக்கை வைக்கிற பெண்கள், இருவருக்கும் நடுவே என்ன வேற்றுமையை எதிர்பார்க்கிறார்கள்? படம் பார்க்கும்போது நமக்கு இம்மாதிரி கேள்விகள் எழுந்தவாறு இருக்கின்றன.
ஒரு பெண்ணாக இருக்கிறவள் தன்னைச் சுற்றியிருக்கிற கண்ணிய வட்டத்தில் இருந்தும், கண்காணிப்பு வட்டத்தில் இருந்தும் விலகி வெளியே வரும்போது, அடிப்படையான காவல்கள் இல்லையென்றால் அடிபட்ட புறாவைக் காக்கைகள் கும்பல் கூடிக் கொத்துவது போல, அல்லது குப்பையில் எறியப்பட்ட மாமிசத்தை ஈக்கள் மொய்ப்பது போலத் தொடர்ச்சியாகச் சுற்றி வளைக்கப்படுவது திண்ணம். உலகம் முழுக்க வாயைத் திறந்துகொண்டு ஆவலுடன் காத்திருக்கிற இந்த இருட்டு வணிகம் பற்றி யாருக்குமே தெரியும். அது மனரீதியாகத் தங்களிடம் இருந்து தாமே பெண்கள் விடுபடுவதைத் தடுத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம். ஆனால் இதுவொரு பொதுப் பிரச்சினை என்று உணர்வதில் தாமதங்கள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன.
ஒருமுறை வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு ரயில் ஏறி ஒரு பெண் சென்னைக்கு வந்து இறங்கிவிட்டாள். ரயில்வே நிலையம் அருகே அவள் அறையெடுத்துத் தங்கியிருப்பதை வேறு ஒரு பெண் தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்லவே கூட்டமாகச் சென்று அவளை மீட்டோம். ஒரு பெரிய பருந்துக் கூட்டமே அவளைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தது. ஒருவேளை, பத்தே நிமிடத் தாமதம்கூட அந்தப் பதினான்கு வயதுச் சிறுமியைக் காணாமல் அடித்திருக்கலாம் என்பதை நேரில் அறிந்ததில் இப்போது நினைத்தாலும் மனம் அச்சம் கொள்கிறது. மற்றொரு முறை ராமேஸ்வரம் வரை கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளை மீட்டோம். இவை யாவும் மனிதர்களை நம்புவது சம்பந்தப்பட்டவை. நம்பிக்கைத் துரோகங்கள் சம்பந்தப்பட்டவை. படத்தின் கதாநாயகி அப்படித்தான், எப்படி அந்த வழிக்கு வந்து ஒரு முழு விபச்சாரி ஆனோம் என்பதை அவளால்கூடச் சொல்லிவிட முடியாது.
நிறைய முகங்கள். அவற்றின் மூலம் பல்வேறு வாழ்க்கைக் கோலங்கள். ஒவ்வொருவரும் அவர்கள் அறிந்த கதைகளைச் சொல்கிறார்கள். இந்த யுக்தி புதியது இல்லை. ஆனால் மனிதர்களைக் கார்ட்டூன் கீச்சிக் காட்டுவதில் ஜார்ஜ் முற்றிலும் உண்மையானவர். அவருடைய அத்தனை படங்களிலும் உண்மைகள்தான் மூல ஆதாரம். கேரளத்தில் பல அடுக்குகளில் இருந்தும் பன்மைத்துவம் கொண்ட படங்கள் வந்துகொண்டு இருந்ததில், வந்துகொண்டு இருப்பதில் அவருக்கென்று தனி இடம் இருக்கிறது என்பதை முக்கியமாகச் சொல்ல வேண்டும். மேம்போக்காகப் பொழுதுபோக்கு பண்ணச் சொல்கிற போலித்தனமான பைங்கிளிக் கதைகள் அங்கே உண்டு. அதே நேரம் அடூர் கோபாலகிருஷ்ணனும் அரவிந்தனும் அங்கே படம் பண்ண முடியும். சினிமா என்பதன் பார்வையை மாற்றி படைப்பாளியின் முக்கியத்துவத்தை உறுதிசெய்த பரதனும் பத்மராஜனும் அங்கே வெற்றி பெற்றவர்களே. எளிய மொழியில் வாழ்வின் உணர்ச்சிகளுக்குள் மக்களை அழைத்துச் சென்ற லோகியின் திரைக்கதைகள் ஒரு பொற்காலத்தில் நின்று மக்களுடன் உரையாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவைகள் அனைத்தும் இன்றுமேகூட உள்ள அளவில், ஜார்ஜின் புகழ் அப்படியே மங்காமல் இருக்கிறது என்பதையே சொல்ல வருகிறேன். அவரைக் கவனித்து அவருடைய படங்களைச் சிலாகிக்கும் புதிய தலைமுறையை அறியலாம். ஆமாம், பிடிவாதமாக இருந்து அவர் எடுத்துக்கொண்ட இடம் அது.
அவர் வெறுமனே ஒரு வறண்ட அறிவுஜீவியாக இருந்து மக்களின் வாழ்வுக்குச் சம்பந்தம் இல்லாத நான்சென்ஸ் செய்து வைத்திருக்கவில்லை. அவரைக் குற்றம் சொன்னவர்கள் மேலே இருப்பதைப் பலமுறை சுட்டி, இப்போது பின்வாங்கி இருக்கிறார்கள். அவர் வனைந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ஜீவன் கொண்டு நடந்தவை. அந்த சர்க்கஸ் குள்ளனை மறக்க முடியுமா? அவர் அந்தப் படத்தில் சொல்லி வந்த, நடந்தே ஆக வேண்டிய, உண்மையை மறுக்க முடியுமா? மனிதனின் மகத்தான தருணங்கள் அலுக்கும் வரை சொல்லப்பட்டுவிட்டன. அவனுடைய இயலாமையை பாக்ஸ் ஆபீஸ் வட்டங்களுக்குள் முகத்தில் அறைவது போலச் சொல்லி முடித்தவர் அவர். மற்றொராளில் ‘கைமள்’ என்று ஒரு பாத்திரம் மனைவியைக் கொலை செய்யக் கத்தி வாங்கி வைத்துக்கொண்டு இறுதியில் தன்னைதானே குத்திக்கொள்ளும். எவ்வளவு குரூரமான பழிக்குப் பழி? மனிதன் தனது சாவை ஒரு ஆயுதமாக்குகிற உபாயத்தை நாம் இன்று வரையில் ஒரு உரையாடலாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லாமல் கொல்கிற அந்த அற்பத்தனம் படத்தில் மிகச் சரியான இடத்தில் சொல்லப்படும். பார்வையாளர்களை அவ்வளவு அசௌகரியம் உண்டாக்கும் ஒரு கிளைமாக்ஸ் அது. அவர் நினைத்திருந்தால் ஒரு ஹாப்பி எண்டு வைத்து மக்களைத் திருப்தி செய்திருக்க முடியும். அவர் நாம் மறைத்து வைக்கப் பார்க்கிற வக்கிரத்தை வெளியேற்றி முச்சந்தியில் நிறுத்தி நமக்கு நம்மை அறிமுகப்படுத்த நினைத்தார். அதுவே அவருடைய தனித்தன்மையாக இன்று கண்டறியப்பட்டு அது நிலைபெற்றும்விட்டது. முடிந்த அளவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, அவர் குறைந்த அளவிலேயே திரைப்பணி செய்திருந்தாலும் அவற்றின் வலிமை கொண்டு இன்று சீரஞ்சீவியாகி இருக்கிறார்.
ஒரு வளவள சினிமாவில் பத்து நிமிடம் வரக்கூடிய காட்சியை அல்லது பத்து ஷாட்டுகள் அடுக்கி நம்மை எழவெடுக்கக்கூடிய காட்சியை அவர் ஒரு ஷாட்டில் எடுத்திருப்பதை இப்போதும் அவருடைய பல படங்களைக் கூர்ந்து கவனிப்போரால் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் வேணுவிடம் அவர் ‘எதற்காக’ என்று கேட்டார். அப்படி அவர் எதற்காக எதைக் கேட்டாரோ அவைகளையே இதுதான் சினிமா என்று நிரூபிக்கிற குட்டிக்கரணங்களையும் பார்த்து வருகிறோம்.
எல்லாம் ஒரு நம்பிக்கைதான், ஒரு காலத்தில் எதற்காக என்கிற எள்ளல், அர்த்தம் பெறும்.
*
முந்தைய பகுதிகள்:
- ஸ்வப்னாடனம்
- உள்கடல்
- மேள
- கோலங்கள்
- யவனிகா
- லேகயுடே மரணம், ஒரு பிளாஷ்பேக்
- ஆதாமிண்டே வாரியெல்லு
- பஞ்சவடிப் பாலம்
- இரைகள்
- கதைக்குப் பின்னில்
- மற்றொராள்