தமிழினி வெளியீடாக வெளிவரவுள்ள, வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய தற்கணம் – ஜென் மனம் நூலின் பின்னிணைப்பை இங்கே வாசகர்களுக்காகத் தருகிறோம்
புத்தத்தின் முப்பள்ளிகளான தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் (திபெத்) ஆகியவற்றின் ஒத்த நோக்கை விளக்கும் ‘சிறுபடகு – மாமலை: இயல்கிற மகாமுழுமை குறித்த தேரவாத சிந்தனைகள்’ எனும் அஜான் அமரோ நூலிலிருந்து இந்த இணைப்பு ‘தற்கணம் – ஜென் மனம்’ நூலின் வாசகத் தெளிவுக்காக இங்கே சாரமாகக் கொடுக்கப்படுகிறது.
‘பல சமயங்களில் ‘ட்சோக்சென்’ (வஜ்ஜிராயனம்) போதனைகளினூடே திளைக்கையில் எனது குருக்களான அஜான் சா, அஜான் சுமேதோவின் எதிரொலிகளைக் கேட்பதாகவும் அவர்களின் பிம்பங்களைக் காண்பதாகவும் ஒரு விசித்திர உணர்வு ஏற்படுகிறது. அப் போதனைகள் அறிமுகமான கொள்கைகளை விவரிக்கும் விதத்தில் மட்டுமல்ல, அதே உவமைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துவதாகவே உணர வைக்கும். இந்த ஒத்திசைவு முதன்முதலில் என் மனத்தில் ஆழமாகப் பதிந்தபோது, என் துறவற வாழ்வின் பிற்பாதியிலாவது, நான் ஓரளவிற்கு ட்சோக்சென் கூறும் ஒரு வழியில்தான் பயிற்சி செய்து வருகிறேன் என்று உணர்த்தியது.
ஒருவேளை இந்த ஒற்றுமை அவ்வளவு ஆச்சரியப்படத் தக்கதுமில்லை. எனில் நம் அனைவர்க்கும் ஒரே குருதான்: தம்மம் புத்தரிடமிருந்து வருகிறது. அது நம் ஒவ்வொருவரின் மெய்யியல்பில் வேரூன்றியுள்ளது. 84,000 வெவ்வேறு தம்ம வாயில்கள் இருந்தால் கூட அடிப்படையில் ஒரேயொரு தம்மம்தான் உள்ளது. நான் பாராட்டும் பல திபெத்திய போதனைகளில் முக்கியமானது ‘ரிக்பா’ ஆகும். ‘அகக்காட்சி’, ‘அகதரிசனம்’ என்றும் அது அழைக்கப்படுகிறது.
அஜான் சா ‘மனத்தின் இயல்பு நிலையானதாயினும் அது பாய்ந்தோடுகிறது’ என்பார். அது பாய்ந்தோடுகிறது எனினும் அது நிலையானது என்றும் கூறலாம். அறியும் மனம், அதாவது விழிப்பு மனம் என்பதைக் குறிக்க ‘சித்தம்’ என்பார். அச் சித்தம் முற்றிலும் நிலையானது. அதற்கு செயலூக்கம் என்பதில்லை; தோன்றி மறையும் அனைத்துடனும் அது தொடர்பற்றது. அது அமைதியும் விசாலமும் மிக்கது. புலன் உணர்வுகளான காட்சி, ஒலி, மணம், சுவை, தொடுதல், எண்ணம் எல்லாம் மனத்தூடே பாய்ந்தோடுகின்றன.
நாம் தானெனும் உணர்வில் திளைக்கிறோம். அது உறுதியானது மெய்யானது என்று நம்புகிறோம். அந்த உணர்வை அறிவதன் மூலம், ‘இது வெறுமனே ஓர் உணர்வுதான்’ என்று புரிந்துணர முடிகிறது. ‘நான்’, ‘எனது’ போன்ற உணர்வுகள் (பாலி மொழியில் அகம்காரம், மமகாரம்) மற்ற எந்த உணர்வுகளையும் போலவே கரைந்து போகக்கூடிய பண்புள்ளவை.
மனம் அமைதியுற்றும் நிலைபெற்றும் திகழ்கையில், அதைப் பார்த்துக்கொண்டிருப்பது யார்? அல்லது ‘உணர்வது யார்? அல்லது ‘அறிவது யார்?’ என்ற கேள்விகள் எழும். ‘அறிவது என்றால், உணர்வது என்றால் என்ன?’ ‘தியானமில்லாப் பயிற்சி என்றால் என்ன?’ என்றும் கேட்பது இங்கு பொருத்தமானது. இக் கேள்விகளின் முழு நோக்கம் பதில்களைத் தேடுவதல்ல. உண்மையில், அதற்கான ஒரு வாய்மொழிப் பதில் கிடைத்தால், அது தவறானதாகவே இருக்கும். ‘யார்’ அல்லது ‘என்ன’ என்ற கேள்விகளின் நோக்கம், நமது வழக்கமான அனுமானங்களைத் தகர்ப்பதே. மனத்தின் விரிவெளியில், ‘யார்’, ‘என்ன’ என்ற சொற்கள் அபத்தமாவை. அங்கே மெய்யான ‘யார்’ அல்லது ‘என்ன’ என்று ஏதுமில்லை. அங்கே திகழ்வது முழுதான அறிதல் மட்டுமே.
மேலும், தியானத்தின் ஆழ்நுட்பத்துடன் அவ்வுணர்வை ஆராய்கையில் அத் தானெனும் தனியுணர்வு மேலும் வெளிப்படையாகத் தெளிவுறுகிறது; அதன் திடத்தன்மை கரைந்து மேன்மேலும் விரிந்து பின்வாங்குகிறது. திறந்த வெளியாகிறது.
அஜான் சா தனது குருவான அஜான் மூன் அவர்களைச் சந்திக்கும் வரை, மனமும் அதன் அறிபொருள்களும் தனித்தனி குணங்களால் ஆனவை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. அவ்விரண்டையும் குழப்பிப் பிணைத்ததால் தான் ஒருபோதும் அமைதியில் ஆழ இயலவில்லை என்றும் கூறினார்.
ஆனால், அஜான் மூனுடன் பயின்ற மூன்றே நாட்களில், ‘அறிமனம்’, அதாவது அறிபவர், அறிபொருள் பிம்பங்கள் எனப் பிரிந்துள்ளதைத் தெளிவாக உணர முடிந்தது. அது ஆடியையும் அது பிரதிபலிக்கும் பிம்பங்களையும் ஒத்தது. அக் கண்ணாடி, அதில் தோன்றும் பொருட்களின் அழகாலோ அவலட்சணத்தாலோ சலனனப்படுவதில்லை. எதுவுமே பிரதிபலிக்காத போதுகூட, முற்றிலும் சமநிலையில் அமைதியாய் இருக்கிறது. அன்றிலிருந்து அப் புரிந்துணர்வு அஜான் சா அவர்களின் தியானத்திற்கும் போதனைக்கும் மெய்யான அர்த்தத்தை உணர்த்தியது.
அந்த அர்த்தத்தில் மனம் என்பது ஒன்று என்றும், மன அறிபொருள் பிம்பம் வேறொன்று எனவும் அறிந்துணர முடிகிறது. நம் அனுபவங்களையும், உலக வாழ் நிகழ்வுகளையும் உணரும் மனத்தின் இயல்பண்பை, சாரத்தைக் காணமுடிகிறது. அம் மேலான பண்பானது தனியொருவர், வெளி, காலம், இயக்கம் ஆகியவற்றுடன் எத் தொடர்பும் அற்றது என்பதையும் காண முடிகிறது. உலகின் அனைத்து இயக்கங்களும் – அதன் மக்கள், அன்றாடச் செயல்பாடுகள், மனநிலைகள் – அவ் வெளிக்குள் தோன்றி மறையும் தற்காலிகங்களே எனப் புரிந்துணர முடிகிறது.
ஞானம் அடைவதை விட, ஞானமாய்த் திகழ்வதை அஜான் சுமேதோ தொடர்ந்து வலியுறுத்தினார். தற்போதில் விழித்திருங்கள். நிகழ்கணத்தில் ஞானமாய் விளங்குங்கள். அது எதிர்காலத்தில் ஞானமடையும் பொருட்டு இப்போது ஒன்றைச் செய்வதல்ல. அத்தகு சிந்தனை, தன்னையும் காலத்தையும் சார்ந்தது, அதில் எப் பலனும் வாய்க்காது.
ட்சோக்சென் போதனைகள் வலியுறுத்துவது – ‘ரிக்பா’ எனும் அகக்காட்சியைக் கண்டுபிடிப்பதோ, எதிர்காலத்தில் ரிக்பாவைப் பெறுவதற்காகவோ இப்போது ஏதேனுமொன்றைச் செய்வதல்ல. மாறாக, இப்போதே உண்மையில் ரிக்பாவாகத் திகழ்வதைப் பற்றியது. நாம் அதைக் கொண்டு ஏதேனும் செய்யத் தொடங்கும்போதோ, ‘ஏய், பார்! எனக்கு இது கிடைத்துவிட்டது’ என்றோ, ‘இதை நான் எப்படித் தக்கவைத்துக் கொள்வது?’ எனும்போதோ, மனம் அந்தக் குறிக்கோளையே பற்றிக்கொண்டு ரிக்பாவை விட்டு வெளியேறி விடுகிறது.
புத்தர் எனும் விழிப்புணர்வு
புத்த இயல்பைப் பொறுத்தவரை, அஜான் சா போதனைகளும் ட்சோக்சென் பார்வையையே ஒத்திருக்கின்றன. ஆழ்ந்து நோக்கின், அகவிழிப்பு ஒரு குறித்த நிலையல்ல. அது மன இயல்பின் அடிப்படைப் பண்பு. அஜான் சா, அந்த அகவிழிப்பையும் அந்த அறிபண்பையுமே புத்தர் என்று குறிப்பிடுகிறார். அறியும் தளமே மெய்யான புத்தர்.

அஜான் சா போல பிற வன மரபு குருமார்களும், அகவிழிப்பு என்பதை ‘புத்தர்’ என்ற சொல்லின் அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர். அதாவது, மனத்தின் முழுமையான விழிப்பும் அந்த அகவிழிப்புப் பண்புமே புத்தம். அதனாலேயே, ‘2,500 ஆண்டுகளுக்கு முன்பு பரிநிர்வாணம் அடைந்த புத்தர், இன்றும் நமக்கு அடைக்கலம் தர, அருள் பாலிக்கத் தேவையில்லை; நாமே புத்தர்’ என்றுரைப்பார் அஜான் சா.
‘அக் காலத்து புத்தர் எப்படி இன்றைய புகலிடமாக இப்போதும் இருக்க முடியும்? அவர் போய்விட்டார். போயே போய்விட்டார். அவரல்ல புகலிடம். பாதுகாப்பானதோர் இடமே புகலிடம். அப்படியிருக்க, 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த இம் மகான் எப்படிப் பாதுகாப்பை வழங்க முடியும்? அவரது நினைவு நல்லுணர்வைத் தரக்கூடும். ஆனால் அவ்வுணர்வும் நிலையற்றதுதான். அது ஓர் எழுச்சியூட்டும் உணர்வாயினும் எளிதில் கலங்கிக் கரைந்துவிடக் கூடியது.’
உடலுக்கும், உணர்வுகளுக்கும், புலன்காட்சிகளுக்கும் என்ன நேர்கிறது என்பது இரண்டாம் பட்சமே. அந்த அறிதல் புலனுலகிற்கு அப்பாற்பட்டது. எனவே அதுவே மெய்யான புகலிடம். நாம் மேன்மை கீழ்மை, இன்ப துன்பம், வெற்றி தோல்வி, புகழ் அவமானம் என எதை அனுபவித்தாலும், மனத்தின் அந்த உணர்திறன் முற்றிலும் மௌனம் சாதிப்பது, கலங்காதது, களங்கமற்றது. அந்த உணர்தலை எவ்வொரு காட்சியாலோ புலனின்பத்தாலோ சிந்தனையாலோ உணர்ச்சியாலோ மனநிலையாலோ தீண்ட முடியாது. அது யாவற்றிலும் மேலான பண்பு கொண்டது. ட்சோக்சென் போதனைகளும் இதையே கூறுகின்றன: ‘அறிதலிலும், மனத்தின் இயல்பிலும் எஞ்ஞான்றும் மனபிம்பங்களுக்கு ஏதொரு உறவுமில்லை.’ அதனாலேயே அகவிழிப்பே புகலிடம் என்றாகிறது. நம் மெய்யியல்பின் ஆணிவேர் அகவிழிப்பே.
நம் கண்களையே நாம் காண இயலாது எனினும் பிறவற்றைக் காண முடியும். இதன் பொருள், அகவிழிப்பு ஒரு பொருளாக இன்றித் தன்னியல்பில் விழிப்புணர்வாகத் திகழ முடியும். அஜான் சா, பிற வன குருமார்கள் அதை ‘அறிதலில் அமைதல்’ என்பர். அது ரிக்பா எனும் வெறும் அகக்காட்சியாகவே திகழ்வது. அந் நிலையில், மனம் தன்னியல்பில் தகைந்துள்ளது. தம்மம் அத் தன்னியல்பை அறிந்துள்ளது. அவ்வளவுதான். அதையொரு பொருளாக மாற்ற முயலும் தருணத்தில் இருமை உருவாகிறது. ஒன்று இன்னொன்றைப் பார்ப்பது போல. அந்த இருமையைக் கைவிட்டு, அத் ‘தேடுதலை’ விட்டு விலகும் போதுதான் தீர்வு ஏற்படுகிறது. அப்போது மனம் அந்த அறிதலில் தகைந்திருக்கும்.
நீங்குதலை உய்த்தறிதல்
இக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானது, ‘துன்ப நீக்கம்’ எனும் விலக்க அனுபவத்துடன் அது ஒத்திருப்பது. ரிக்பா அனுபவம், துன்ப நீக்கம் எனும் துக்க விலக்கத்திற்கு இணையானது. அதில் தன்னுணர்வு என்பது உள்ளுக்குள் ஒளிரும் கட்புலனாகா வரம்பிலா வெறுவெளியாகும்.
பல வேளைகளில், ட்சோக்சென் மரபின் மொழியும் தேரவாத மரபின் மொழியும் வியக்கத்தக்க விதத்தில் ஒத்திருக்கின்றன. ட்சோக்சென், அகவிழிப்பிற்கான ரிக்பாவின் பொதுவான முப்படி விளக்கமான ‘சாராம்சத்தில் வெறுமை, இயல்பில் அறிதல், திறனில் வரம்பற்றது’ என்பதை ஒத்ததாகும்.
ட்சோக்சென் அணுகுமுறையில் இருமை கடந்த விழிப்பு என்பது சாரத்தில் வெற்றுமையை உணர்வதும், இயல்பில் அறிந்துணர்வதும், திறனில் வரம்பற்றுத் திகழ்வதாகும். இம் முக்குணங்களின் பிறிதொரு கூறுமுறை ‘வெற்றுமை, அறிதல், தெளிதல்’ ஆகும். பாலி நூல்களில் புத்தர் அரகத மனத்தை ‘உருவற்ற, குறியீடற்ற, எல்லையிலாத, எத்திசையிலும் ஒளிரும் உணர்வு’ என்கிறார். அதற்கான பாலிச் சொற்கள்: விஞ்ஞானம் (தன்னுணர்வு); அனித்தசனம் (வெறுமை, கட்புலனாகாதது அல்லது உருவற்றது); அனந்தம் (எல்லையற்றது); சப்பாத்த பபம் (எத் திக்கிலும் ஒளிர்வது, எங்கிருந்தும் அணுகக்கூடியது).
இதுவே ‘சித்தம் பபஸ்ஸரம், அகண்டுகேஹி கிலேசேஹி’ என்பதாகும். இதன் பொருள், ‘மனத்தின் இயல்பு உள்ளார்ந்து ஒளிர்வது. அதில் களங்கங்கள் வந்துபோகும் விருந்தாளிகள் மட்டுமே.’ அதாவது மனத்தின் இயல்பு உள்ளார்ந்த தூய்மையும் பரிபூரணமும் கொண்டது எனும் உண்மையைச் சுட்டுவது. இத் தூய்மையைக் கெடுப்பதாகத் தோன்றுவன அவ் வழியே கடந்தேகும் விருந்தினரோ வேறு அலைந்து திரிபவரோ மட்டுமே. மனத்தின் மெய்யியல்பை அவற்றில் எதனாலும் கெடுக்கவே முடியாது.
ட்சோக்சென் போதனைகளைக் கேட்கையில் மூன்றாம் குலவழி ஜென் குருவின் ‘அனைத்தும் வெற்றுமையானது. மன ஆற்றலின் துணையின்றித் தெளிந்து தன்னொளி வீசுவது’ எனும் பாடல் வரிகள் ஒத்துள்ளன. திபெத்திய மரபின்வழி பெறக்கூடிய வழிகாட்டுதல் இதுவே. குறிப்பாக அக் கடைசி வரி ‘மன ஆற்றலின் துணையின்றி’ – அதாவது, எவ்வொரு குறிப்பிட்ட செயலூக்கமும் இன்றி என அர்த்தமாகும். இது மனத்தின் உள்ளார்ந்த தூய்மையையும் சுதந்திரப் போக்கையும் சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக, மனத்தை அமைதிப்படுத்துவது, ஒளிரச் செய்வது, விழித்தெழத் தூண்டுவது போன்ற சில வழக்கமான தியான முறைகளை மேற்கொள்கிறோம். எனின் நாம் கட்டுண்ட ஓர் உலகை, ஏற்கெனவே அமையப்பெற்ற அடிப்படை வாழ்வை சீரமைக்கவே முயல்கிறோம். அவ்வளவுதான். மனத்தின் உள்ளார்ந்த இயல்பு ஏற்கெனவே முற்றிலும் அமைதியுற்றதும், குறைவற்ற ஆற்றல் மிக்கதும், பூரண அகவிழிப்புற்றதுமாகும். அதுவே அதன் உள்ளார்ந்த மெய்யியல்பு.
புத்தம் எனும் பதம் விழிப்படைவு, அறிந்துணர்வைக் குறிக்கிறது. ஆகையால் புத்தரிடம் சரணடைவது அகவிழிப்பில் சரணடைவதேயாகும். புத்தர் தம்மத்திலிருந்தே உதிக்கிறார். புத்தர் ஒரு குணாம்சம், அறிதல் என்பது அந்த அடிப்படை உண்மையின் ஒரு பண்பு. தம்மம் என்பது இறுதிப் பொருள், மன பிம்பங்கள் திகழும் விதம், அதன் பண்பு வெற்றுமையே. எனில் புத்தமே அறுதிக் கருப்பொருளும் அறிந்துணர்வும் விழிப்புமாகும்.
ஆகவே, அறுதிக் கருப்பொருள் இறுதிப் பொருளை அறிகையில், அறியும் மனம் உலக இயல்பை உணர்கையில் அதிலிருந்து வெளிப்படுவது சங்கம் எனும் கருணைமிகு செயல். சங்கம் இயல்பாகவே அக் குணத்தை வெளிப்படுத்துகிறது. உலக இயல்பு பற்றிய விழிப்புணர்வில், கருணையுற்ற திறமிகு வழிமுறைகள் அதிலிருந்து இயல்பாக உதிக்கின்றன. அதாவது முச்சரணங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.
தன்னியல்பு உணர்ந்த தம்மம்
புத்தம் கருணை, இரக்கம், ஞானம் ஆகிய நற்பண்புகளைப் பொழிவதால், அதன்வழி பொலியும் இவ்வுடல் பேரொளியால் நிரம்புகிறது. அப் பேரொளியால் முழுமையாக ஆட்கொள்ளப்படுகிறோம். உள்ளிருக்கும் ‘சிறு சுயம்’ விரட்டப்பட்டு, புத்தம் மட்டுமே இவ்வுடலில் வியாபித்திருக்கிறது. திகழ் ஞானம் புத்தரின் மெய்ஞ்ஞானத்திலிருந்து இம்மியளளவும் வேறுபடவில்லை என்பதே உண்மை.
‘இது தன்னியல்பை உணர்ந்த தம்மம் மட்டுமே’ எனும்போது நம்மில் எப் பகுதி தம்மம் அல்லாதது? எப் பாகம் இயற்கையின் ஒரு பகுதியல்ல? அப்படியொன்றைக் குறிப்பிட முடியுமா? மானுடச் சிக்கல்களா? மன உளைச்சல்களா? மனமா? மனச்சாரமா? எண்ணங்களா? இவை அனைத்தும், இதன் ஒவ்வொரு பகுதியும், இயல் ஒழுங்கின் ஓர் அங்கமாகும். நமது இருப்பிலோ சூழும் பௌதீக, உள ரீதியான எதிலுமோ இயற்கை ஒழுங்கிற்கு உட்படாத எக் கூறுகளும் இல்லை. மேலும், ‘இது தன்னியல்பை உணர்ந்த தம்மம்’ எனும்போது அந்த அறியும் மனம்கூட தம்மத்தின் ஓர் அம்சமாகவே அமைகிறது.
அஜான் மூனுடன் சில நாட்கள் தங்கியிருந்து பயின்றபோது அஜான் சா பெற்ற அகப்பார்வையானது மனம் இருக்கிறது, அதன் பிம்பங்கள் இருக்கின்றன; எனின் இவ்விரண்டும் உள்ளார்ந்து ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை என்பதே. தேரவாதச் சொற்களில், விரிமனம் ஒன்று, மன பிம்பம் வேறொன்று. ட்சோக்சென் மரபும் இதே அகப்பார்வையை இதே போன்ற ஒரு வழியில் அணுகுகிறது: குறுமனம் இருக்கிறது, மனச்சாரம் இருக்கிறது. இங்கு ‘மனம்’ என்ற சொல் பக்குவப்பட்ட மனம், இருமை மனமாகும். ‘மனச்சாரம்’ பக்குவப்படாத மனத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. பக்குவப்பட்டதும் பக்குவப்படாததும் இணைந்தே உள்ளன.
இவ்விரண்டு நடைமுறைகளும் ஒரே போன்ற சொற்களை வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தினாலும், அவற்றுக்கிடையே ஒரு வலுவான ஒத்திசைவு நிலவுகிறது. இதை அஜான் மூன் கந்தங்களிடமிருந்து விடுதலை எனும் பாடலொன்றில் எழுதுகிறார்: ‘தம்மம் தம்மமாகவே நிலைத்திருக்கையில் கந்தங்கள் கந்தங்களாகவே திகழ்கின்றன.’
கந்தங்களாவன: உடல், உணர்வுகள், புலக்காட்சிகள், மன அமைப்புகள், பிரக்ஞை. எனவே தம்மம் என்பது தம்மம், கந்தங்கள் என்பவை கந்தங்கள். நிபந்தனைக்குட்பட்டது ஒன்று, நிபந்தனையற்றது ஒன்று. மனம் உண்டு, மனச்சாரம் உண்டு. அவ்வளவுதான். நாம் அறிந்துகொள்ள வேண்டியது இது மட்டுமே. தன்னுணர்வு எவ்வளவு தீவிரமாக, உறுதியாகத் தோன்றினாலும் உணரப்பட்டாலும், அது உண்மையில் கலையக்கூடியது.
புத்தர் கூறிய பாம்பும் கயிறும் உவமை மிகப் பொருத்தமானது. புல்வெளியில் நடக்கையில் பாதையில் ஏதோவொன்று சுருண்டு கிடக்கிறது. அதுவொரு பாம்பு போலத் தென்படுகிறது. பயம் மேலிடுகிறது. உற்றறிந்தால் அது பாம்பே அல்ல, வெறும் கயிற்றுச் சுருள். உடனே உடல் அமைதியுறுகிறது. இந்த உவமையில் புத்தர் ‘கயிற்றுச் சுருள் அடையாளம் காணப்பட்டபோது பாம்பு என்ன ஆனது?’ என்று கேட்கிறார். ‘பாம்புக்கு எதுவும் ஆகவில்லை. ஏனெனில் அங்கே அப்படியொன்று இருக்கவே இல்லை.’
அதேபோல, ‘உடல் இறந்த பிறகு ஆன்மாவிற்கு என்ன ஆகிறது?’ என்பதற்கான பதிலும் அடிப்படையில் ஒன்றுதான். ஆன்மா பற்றிய முழுமையான கருத்தாக்கமே தவறானதொரு புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்திருப்பதால், அக் கேள்வியே பொருத்தமற்றது. நாம் நம்மைக் கண்டுணரும் விதமே, சீரமைக்கப்பட வேண்டிய, அடிப்படையிலொரு தவறான புரிந்துணர்வாகும். இத் தியானப் பயிற்சி தெள்ளத்தெளிவாகப் பார்க்கக் கற்றுக்கொள்வதும், உண்மையில் அங்கு என்ன இருக்கிறதோ அதை உணர்ந்து விழித்தெழுவதுமாகும்.
அறிந்துணர்வில் நிலைத்திருக்கையில் எதுவும் மனத்தைத் தீண்ட முடியாது. அறியும் மனத்தின் நிலைப்புதான் புத்தரை ஒரு புகலிடமாக ஆக்குகிறது. அந்த அறியும் இயல்பு எவ்வொன்றாலும் பாதிக்கப்படாதது; பாதிக்க முடியாதது.
