
கனியும் காமம்
கனலும் இக்காமம்
எரிமலையின் அறிதுயில்.
அழகை அடுத்தறிய அகந்தை
ஆர்த்தெழும் அலை அடிப்பு.
முறுவெயில் நின்றெரிய
நீராலும் தீரா விடாய்.
உயிர் திரண்டு உயிருற
முனியும் மோகம்.
பால் ஊற விழையும்
பசுவின் இயல்பசி.
பதி உணரக் கதியும்
பாறை நெகிழ்வு.
பாசம் சூல் கொளும்
கூட்டில் இடும் பரமுட்டை.
ஈருயிர் இயங்க
இயல்வதோர் ஈர்ப்பு.
பருவச் சிறகிசை அருகுணர
எழிலே மலராய் விரிய
ஏரார்ந்து ஊறும் தேனமுது.
உயிரொளி
மயங்கி ஆடும் பிழம்பினுக்கு
மாத்திரை அளவு உரைப்பாருண்டோ?
பாதத்தில் பாய்ந்த முள்ளினைக் கெல்ல
ஒளியின் கதிர் உதவுவதுண்டோ?
ஒளியின் வீச்சை மறித்தால்
வீழும் நீழல் ஒழிவதுண்டோ?
ஒளியும் உயிரும் மாறாதியங்க
உடலின் தேவை காமமென்றிருக்க,
ஓகமும் நோன்பும் பதறுவதெதற்கோ?
தவமும் தனிமையும் தவிப்பதெதற்கோ?
வடவைத் தீ
மயலுற்ற கண்டமென்றே
மையல்குல் பணிவேன்.
மால் ஆகி மயனாகி அலைந்து
பாழ்வெளியெலாம் உழன்று
வினை விளைவாய் ஊழ் உந்த
விடமுண்டு நீலகண்டமாகி
நான் அழிந்து நான் பிறக்க
ஆயிரம் தீமுகமாய் இந்திர தாபம்
மாளாது எரிந்தெரிந்து விளிக்க..
இருமையின் ஒரு முகமாகி வந்த நீ
நீர்ச்சுழியின் வஜ்ரதாகினி!
பூங்கொடியேந்தும் யோகயட்சினி!
புத்தேள் உலக மாயமோகினி!
வாமசாக்த லலிதாங்கினி!
சக்தியின் வீறுடல் ஊடே
கனிந்த சுடரே வாழி!
வடவைத் தீயே வாழி!
பாலாழி அமுதே வாழி!
போழ் பிழம்பே! உயிர்ப்போதமே!
வாலுணர்வின் போதே!
ஆற்றலின் அறாச்சுழலே!
வாழிய நின் கொற்றம்!
உடனுறை
பொம்மைக்குத் தாயாகிப்
பேதையர் களிகூரும் கனிவு
பித்தர்க்குச் சோறளித்து
வள்ளியம் உறும் பரிவு
வினைவல்லார் வியர்ப்படங்க
நீரருந்தித் தணியும் மகிழ்வு
பெண்ணணங்கே உனைக் கூடி
என் உடனுறை வாழ்வு.
முடியா முயக்கம்
பலநூறு களிற்றுப் பிளிறல்
பல்லாயிரப் பருந்துத் தேடல்
கோடிமீன்களின் ஓயா நீந்தல்
இமைக்கா விழி மோகம்
மதநீர் ஒழுகக் காம ஓலம்
சிறகு சிலிர்க்க விரக தாபம்
அளந்தறியா அல்குல் நாட்டம்
விழைந்ததும் வென்றதும்
அடைந்ததும் கடந்ததும்
தூறலில் பறந்தலைந்த
சிற்சில ஈசல்கள்.
பாடினி இசை
துறவிக்கு இன்பம்
தனியிருந்து உலகணைத்தல்
கருமிக்கு இன்பம்
ஈயாது பொருள் குவித்தல்
கள்வர்க்கு இன்பம்
ஒட்டுண்ணியாய் உயிர்தரித்தல்
கயவர்க்கு இன்பம்
எளியரை ஏமாற்றி ஆளுதல்
ஐயைக்கு இன்பம்
மாளாக்காதல் திருவிளையாடல்
ஐயனுக்கு இன்பம்
விடாமுயற்சி திருவினையாதல்
பாணர்க்கு இன்பம்
காமமதைப் பாடிக் களித்திருத்தல்.
பிரிவு ஆற்றாமை
செறியாமம்
சினவாத நிலவு
திரையறையும் கரை
சிதலரித்த படகு
நீரெழுந்த கரும்பாறை
அறைந்து புலம்பும் அலை
நானொருவன் தனியன்.
நினைவெங்கும்
நின் சீண்டல் நகையொலி.
என் மயிர்க்கூச்செறிய
நின் கொலுசுச் சிணுங்கொலி.
பேடும் குருகும் குலவி மாளா
கொஞ்சித் தீராக் குனுகொலி.
சீவிய கள்ளியில் சிந்தும் பால்
ஊழ் அரிந்த நம் உறவு அறுந்த சீழ்.
ஏறுடைப் பீடு
உன் விழி நிழலில் இமை நினைவில்
என்றும் ஒன்றித் திளைத்த மாரன்
உன் கொடியிடையை நறு விழியைக்
கொழுகொம்பாய்க் கோர்த்த நரன்
உன் பணை இணைக் குவை நான்கில்
பின்னும் முன்னும் பற்குறியிட்ட யுவன்
உன் விரியரையின் வெஞ்சுடர்க்கு
எச்சிற்கோலமிட்டு நெய்வார்த்த மயன்
உன் ஈரமுன்றிலில் அகப்புறமாய்
புயல் ஓச்சிப் பெயலாடிய வீரன்
உன் களியாட்டிற் சுவறு வியர்ப்பை
முத்தி முத்தி ஒற்றி உறிஞ்சிய சுரன்
உன்சீறும் வெம்மாந்த பொன்தாரையை
மாந்தி மாந்தியும் அவா அறாத் தீரன்
உன் இதழ் இழியும் திங்கட் செம்மணம்
நாசியறிய நாவறியக் கனன்ற பித்தன்
உன் உருச் சுரப்பெலாம் யோக நெறியார்ந்து
அமுதமுதென்றே அருந்தி மாளாப் போகன்
உன் உயிர் விசையே அணுவும் அண்டமும்
என்றே வெறியாட்டயரும் வேலன்
உன் எழுநிலைச் சுழியை மடியேந்திப்
பன்னிரு கரத்தால் இறுகத் தழுவும் யோகன்
உன் தீச்செவ்வுடலின் வஜ்ர தாக வேகத்தை
ஆயிரம் நாவால் எரித்த பனிமலைக் கிருகன்
என்பதல்லால்
வேறு வெற்றுப் பீடெதுவும்
எனக்கிலை என்னருஞ் சிவையே!
காமத்தியல்பு
நிலத்தியல்பால்
நீர் திரியும் வழியும்.
வளியியல்பால்
தீ விரியும் அவியும்.
விசும்பியல்பால்
புள் ஏகும் தாழும்.
காமத்தியல்பால்
குணம் புரக்கும் இரக்கும்.
மாரன் மாயம்
கண்ணிலகு மையும்
கையழகு வளையும்
கழுத்தருவு சரமும்
கார்குழல் பூமலர்வும்
காதணிப் பொற்குழையும்
நாசிமடல் மின்னொளியும்
தாளநடை மணிக்கொலுசும்
மருதாணிக் கோலமும்
மஞ்சள் பொலியும் மேனியும்
மயக்குறு ஆடை நேர்த்தியும்
அணிவதல்லால் அழகல்ல.
அவ் அணிநலம் பூண
உன் அகத்தைத் தூண்டும்
இயல்பெழிலில் கரைய
என் வீறை ஆர்க்கும்
காமமே நல்லணி
மாயமாம் நுண்ணணி.
மாசறு நிலை
பிறவாமை
வேண்டுமென்றேன்
அறியாமை
இருள்தோறும்.
இறவாமை
வேண்டுமென்பேன்
எழிலி இன்மணம்
உறுந்தோறும்.
சார்புணர்ந்து
சால்புணர்ந்து
உயிர் ஓர்ந்து
உடல் ஓர்ந்து
முக்கண் ஓம்பி
உமையொரு பாகனாக
முலைக்குவட்டு முத்தை
விரல் மீட்டிய பின்னே
கால்முகட்டுத் தேனை
நாவுறிஞ்சிய பின்னே
துழவும் இணை நாக்குழறப்
பெருமூச்சு சீறிய பின்னே
வேகப் பாய்ச்சலில் வெங்குருதித்
துடித்தாளம் எகிறிய பின்னே
இருமை ஒருமையாய் நாகவுடல்
பிணைந்தாடிய பின்னே
காண்பதெல்லாம்
காண்பதெல்லாம்
மாசறு காட்சி
காமமெனும் மாட்சி.
உயிரியற்கை
பற்று விடப்
பலநூறு நெறி.
பற்றுற ஒன்றே வழி
இணை விழைவு.
பிறகெலாம்
பிறகென்றாகும்.
பிறவெலாம்
பிறகு நீறாகும்.
அறிவும் அற்றமாகும்
இருப்பும் இன்மையாகும்
பற்றறுப்பதேன்
பாசப் பிணைப்பிருக்க!
அறிவுக் குருட்டாட்டமேன்
ஆரணங்கின் அணைப்பிருக்க!
மதிகெடுக்கும் மதங்களேன்
மாதிவள் மடியேந்த!
மற்றீடிலா மாக்கலவி
இறப்பும் பிறப்பும் அகன்ற கணம்
விழிப்பும் துயிலும் விதிர்ந்த கணம்
நினைப்பும் மறப்பும் அற்ற கணம்
எழுத்தும் எண்ணும் மறந்த கணம்
ஐயமும் தெளிவும் அறுந்த கணம்
ஈருயிரும் உடலும் ஒன்றிய கணம்
மண்ணும் விண்ணும் மயங்கிய கணம்
நாளும் கோளும் சுழன்ற கணம்
இக்கணம் இக்கணம் இக்கணம்
மாமகளின் மடிதவழும் மாக்கணம்!
விழியின் மொழி
அம்மன் ஆலயச் சுடர்களில்
நான் பணிந்த கனிவை
சிவ மன்றில் நீறணிந்து
யான் ஆழ்ந்த அமைதியை
மால் இருந் தளியில்
எனை ஊக்கிய தேர்விழவை
மானுடத்தை வியந்து விலகி
அறிவு வழிப்படும் என் துணிவை
மானே! மயிலே!
மலர்விழியே!
மௌனமே மொழியாக
பைய நகுதலும்
பூத்த நாணமும்
பரிந்த பாவமும்
கண்சொல்லும் கதையும்
கண்ணோட்டக் காவலும்
கண்வீச்சின் ஆணையும்
கண்சுருங்கப் பீறிடும் சிரியும்
கண்விளியின் காமவேட்டலும்
எக்கணமும் வழங்கும்போது
எங்கெழில் என் மதி?
கல்லாலம்
உன் உடனுறைவு
உதவியும் ஊணும் கலவியும்
குடைநிழலும் குடும்பமும்
மட்டுமன்று.
யார் நீ?
வறியவனுக்கு ஈயும் கொடைமடம்.
பித்தனை மயக்கும் இன்னிசை.
மூடனுக்குக் கிடைத்த மூலிகை.
மூர்க்கனை அடக்கும் அங்குசம்.
விழியற்றவன் கைக்கு ஊன்றுகோல்.
வெளியிருள் விளக்காகும் சீவஞானம்.
பாழும் உலகறியாக் கவியெனக்கு
மௌனம் அருளும் கல்லாலம்.
ஐவினை நலம்
கண்ணுக்கினிய
கொடியுடல் எழிற்கோலம்.
நாசிக்கினிய
ஈரிதழ்பூந் தேன்மணம்
செவிக்கினிய
கொஞ்சல் குழறுமொழி ஏவல்.
நாவிற்கினிய
நின் நிலம் பூத்த உவர்ப்பு.
உணர்வுக்கினிய
உன் கடல் கடைந்து நீராடல்
உயிர்க்கினிய
உற்றறிந்து வியக்கும் பெண்ணமுது.
விஸ்வரூபிணி
நாகிளமையின் முன்
நிற்கவியலாது
ஆணின் நனிகூர் அறிவு
வெல்விளிக்கும் மறம்
ஆணதிகார அகந்தை
மீச்செல்வ மமதை
தவப்பெரும் ஒடுக்கம்
நானெனும் அகப்பற்றும்
எனதெனும் புறப்பற்றும்
கன்னி வனப்பின் முன்
கண் பேசும் கதை முன்
காலோடு வால் மடக்கிப் பணியுமடி!
மலரடி மேல் வீணீர் நாவு நீளுமடி!
வளர் தென்றல்
தோகை சரிய மதிலில் நடையிடும்
மயிலின் விளியகவல் கடந்து
தாய்க்கோழி குஞ்சுகளைக்
கேறி மேய்க்கும் காப்பொலி கடந்து
அன்னையர் அலுப்போடு
நெல் குற்றும் ஓசை கடந்து
குமரிகள் சொல் வளர்க்க
நகை பூக்கும் முற்றம் கடந்து

அண்டை வீட்டாரின் அழுக்காறும்
அலர் தூற்றலும் கடந்து
உள்ளத் தவிப்பைத் தழுவி வீசும்
சிரித்தவாறு நீ அரைக்கும்
மருதாணிப் பசுமணம்.
ஆற்றுப்படை
சிவையே! செவ்வொளியே!
சீராரும் செம்பொருளே!
சினம் கனலும் எனை அவிக்கச்
செம்பாதம் ஈந்து முத்தச் செய்வாய்.
அகந்தைப் பெருநஞ்சு முறிய
முகமெடுத்து முலை அணைவாய்.
தர்க்கத் தற்பெருமைப் பீடழியக்
கடிதடம் புதைத்து நல்வழியாவாய்
அச்சமொழிய ஆற்றலை ஏறெடுக்க
துஞ்சா விழியல்குல் சேர்ப்பாய்
பித்தேறிய பேய்க்கணங்கள் அகல
ஏற்றினை ஆற்றுப்படுத்தி அருள்வாய்
திமிலின் திமிர் அடங்கிக் கண்வளர
மடியேந்தி எனைத் தாலாட்டுவாய்!
வேட்டை
உதிர உதிரப் பூக்கும்
மழைமொக்கு உன் நாணம்
மீள மீளத் தழுவும்
அலை ஆர்ப்பு உன் சிரிப்பு
மறைந்து மறைந்து தோன்றும்
மீன் துள்ளல் உன் மீறல்
ஓடி ஓடித் திரும்பிக் கனி நாடும்
அணில் தவிப்பு உன் ஆர்வம்
மருள மருள மான்விழியோடக்
காலெடுக்கும் கவனம் உன் களவு
பதுங்கிப் பதுங்கிப் பாயும்
புலிவேகம் உன் காமம்.
சக்தி பீடம்
புரக்கும் ஒளியொரு கன்னி
ஒளி கரந்த இருளொரு கன்னி
வெளிமேவும் வளியொரு கன்னி
விசும்பிருந்த விரிவொரு கன்னி
அண்டமறியும் பிண்டமொரு கன்னி
அன்னையாகிய பின்னுமொரு கன்னி
வியனுலகக் காமமொரு கன்னி
விழைவின் வினையொரு கன்னி
கனிவின் மழையொரு கன்னி
இமையா நெடுவிழியொரு கன்னி
நிகழ் முயக்கம் ஒரு கன்னி
நிகழும் கணமெலாம் கன்னி
உயிரொரு கன்னி
கமமொரு கன்னி
சிவை ஒரு கன்னி
கன்னி அருளுமொரு யோகக்கலவி
எனை ஆட்கொண்டதொரு அருங்கன்னி.
அறா விழிப்பு
சுழியாச் சுடரோ!
அழியா அருளோ!
தொல்வினை தொடரும் இடமோ!
பேராற்றுப் பெருந்துறையோ!
பிறவிக்கு ஏமப்புணையோ!
பணிந்து நான் தொழ
நின்றிலங்கும் சூலமோ!
காலம் நீளக் கணம் அவிழப்
பூத்த நறுங் கமலமோ!
இசையெலாம் உள் ஒடுங்க
விசும்பெழுந்த ஓங்காரமோ!
எழிலாரும் மாமகளே நின்
விழி இமையா அல்குல்?
ரதி வேதம்
எங்கே உண்டு
வேட்கையை அறுக்கும்
அறிவார்ந்த வெட்டரிவாள்?
எவரிடம் உண்டு
உணர்ச்சியைத் தளையிடும்
பண்பாட்டுப் புரிகயிறு?
எவ்விடம் உண்டு
இணை விழைவை
இழிவெனும் இறைநெறி?
எக்காலத்தில் உண்டு
எதிர்ப்பாலரை நினையாது
கடக்கும் ஒருகணம்?
எவ்வுலகில் உண்டு
மண்ணும் மழையும் மயங்கிக்
குலவாச் செம்புனல்?
எங்குண்டு எங்குண்டு
ஆளுங்காமம் அறியா
ஐம்புலன்?
சிவை
விண்ணும் நீ மண்ணும் நீ
அணுவும் நீ ஆற்றலும் நீ
உயிரும் நீ உருவும் நீ
வினையும் விசையும் நீ
அறிவும் அருளும் நீ
சிவை நீ சிவை நீ
முனியும் சிவை நீ
கனியும் சிவை நீ.
எழிலாய் வடிவெடுத்துப்
பெண்ணாய்க் கொலுவீற்ற
முழுமுதல் இறைவி நீ !
ஏறங்கோள்
ஏறு தழுவ இளையர் முனைந்திறங்க
போர்ப் பகரி விழாக் கண்டு களிகூர
ஊரார் யாவரும் வாடிக்களம் சூழ
கன்னிநீயும் காளைநானும் தனியிருந்த
தண்ணிழல் மகிழ மரத்தடி.
காதல் இடந்தர பருவம் வழிவிட
இளவேகம் துகில் கலைக்கும்.
கண்ணைக் குத்திக் கருத்தில் தெறித்து
உன்னித்தெழும் மாமைத் திமில்.
கருங் கண்ணிரண்டும் கூர்கொம்பாய்
விடைத்து எதிர்நோக்கும்.
செவ்வரியேறிய கண்பட மோகக் கைதொட
ஒசியும்மேனி சிலிர்க்க உந்தி சுழிக்கும்.
காமமும் தாளமும் இசைபட
ஆரோகணமாகும் வீறியற்கை.
திமிலணையும் அங்கை பட்டுத்
தாமிழையும் தடமுலைகள்.
இடை இழுத்துத் தாழும் கையிரண்டில்
கலைந்து பூரிக்கும் பின்னெழில்.
கொம்பும் பம்பையும் பறையும்
எங்கோ அதிர அதிர..
கொம்மை இளமார்பும் அகலரையும்
இங்கே பதறப் பதற..
…கேணி மதில் வாளி
சரிந்ததிர்ந்து கிணற்றில் பாய..
..குழைந்தமுலை மயிர்மார்பழுந்த
மெய்முயங்க மெய்யுருகிப்
பூத்த வியர்ப்பு மணம் முகிழ..
..பண்ணார்ந்த இசை முழக்கில்
கண் செருகி இதழ் இளகி..
..மடல் துடிக்க உடல் விதிர்க்கக்
கலந்திருந்த அவ்வேளை..
..மங்களமாய் மேனியில் மகிழம்பூ வீழ
காளை அணைந்த ஓசை
காதில் மெல்லக் கேட்டதென்ன!
ஆடியில் தெரிவை
மனங்கவர் மலர்முகமும்
மின்னொளிர் பார்வையும்
மூக்குநுனி நிமிர்வும்
ஈர்க்கும் ஈர உதடுகளும்
வளமுலை வனப்பும்
கொடியிடை வளைவும்
பின்னெழில் வளமும்
வீணை வடிவழகும்
வளையிசை விளியும்
கொலுசசைக் குறிப்பும்
ஒருங்கிசைந்து ஒருத்தியில்
பண்வளர்த்த மெல்லிசையும்
மங்கிய நிழல் அசைவாய்
இளமை கழிந்த வாடலாய்
குருதித் துடிப்பு குறைய
மினுங்கிய மேனி வறள
முதுமையில் நுழைந்த பிறகும்
நில்லாது நினைவில் சுரக்கும்
காமச்சுனை ததும்ப ஏதேதோ
நிறைவேறா ஏக்கத்தில்
கண்ணாடிமுன் அமர்ந்து
தன்னைத் தானே காமுறுகிறாள்
தெரிவையிற் கடந்த முதுமகள்.
நற்காமம்
பெருஞ்சுடரென்றோ
உறுபிரக்ஞைப் பிழம்பென்றோ
அரும்பசி அரவமென்றோ
கள்ளுண்ட மந்தியின்
உள்வெறியென்றோ
நீர் புகைய நிலம் அடித்தாடும்
பேரருவிப் பெருக்கென்றோ
எனது காமத்தைக்
கூறாதே சிற்பரையே!
தன்புண்ணைத் தான்சொறிந்து
இன்வலியில் இனிமை காணும்
இன்னுமொரு குரங்கு என்று சொல்.
சங்கினுள் சரண்புகுந்த
ஓலத்தின் நாதமென்று சொல்.
தீக்கங்கினுள் திளைத்திருந்து
கனிந்ததொரு பொன்னென்று சொல்.
நினைவுகளில் வெளி வளர்த்து
நீந்தித் துளையும் புள்ளென்று சொல்.
வெம்மை மணம் கரைந்துவிட்ட
செம்மைத் திருவொளி என்று சொல்.
தனக்குள்ளே தானிருந்து
தன்னைத்தான் தொழுதுகொள்ளும்
இறையென்று சொல்.
சங்கல்பம்
ஆகக்கடவேன் இந்திரப்பித்தன்
அல்குல் ஆயிரமாய் அலருந்தோறும்
ஆகக்கடவேன் கிடை நெடுமால்
பெண்ணுடற் கடல் உணருந்தோறும்
ஆகக்கடவேன் சிவஞான அர்த்தநாரி
கலவிக் களிப்பின் கணந்தோறும்
ஆகக்கடவேன் ஆகம ஆதிசக்தி
சிவையே குருதியாய் ஊறுந்தோறும்.
காமம் பெரிதே
ஓங்குயர் உச்சியில்
கூக்கூ என்றது காமம்
கதிர்மணி மார்பில் கட்டிநின்ற
பூம்பாலின் பொலிவெல்லாம் காமம்
சூரிய வெம்மையும் புரத்தலும் காமம்
சந்திரத் தண்மையும் சாயலும் காமம்
மழையின் சுரமும் மௌனமும் காமம்
அண்ட விரிவும் அணுப் பணிவும் காமம்
உடல் வாசமும் உயிர் மணமும் காமம்
வானப் பெரிதும் ஆன அமைதியும் காமம்
காற்றின் சீரிளமையும்
வன்மையும் காமம்
காமத்தில் உள்ளதெல்லாம்
கடவுளில் கண்டான் மனிதன்.
கடவுளில் உள்ளதெல்லாம்
கருணையில் உண்டு என்றான் முனிவன்.
காமமில்லாக் கருணையினைக்
கண்டறியேன் பராபரமே.
மனப்பாடுகள்
சதா புணர்ந்திருக்க அவா.
ஏங்கி ஏங்கி உந்தும் அகம்
சரிவராது மச்சி! அடங்குடா
என்று சோரும் உடல்
ஒருவர்க்கொருவர் என்று
ஓங்கரிக்கும் பண்பாடு
காட்சியெல்லாம் கருத்தெல்லாம்
கணமும் காமக் கூப்பாடு
ஒனக்கு வேற
வேலை மயிரே இல்லையா?
என மறுகி மறுகிக்
குறுகும் மனப்பாடு.
காமம் காழ்க்கொளின்
நடிப்பில் தேறினோம்
என்பதைத் தவிர
நமதிந்த உறவில்
என்னதான் உண்டு?
உன்னிடம் நானும்
என்னிடம் நீயும்
மறைத்துக் காக்கும்
நேர்மையின்மை
நம்பிக்கையின்மை
பொறுப்பின்மை
எத்தனை! எத்தனை!
உனது அன்பை மீறித்
தறி கெட்டோடும் எனது
கரவான துரோகமும்
எனது ஆறுதலை மீறி
வழிவேறு தேடும்
உனது ஆற்றாமையும்
ஓயாது சொல்வது
ஒன்றே ஒன்றுதான்.
“காமம் காழ்க்கொளின்
உயிர்க்கின்னா!”
வழுவமைதி
என் குறை மறைக்க
உன் குறை பொறுத்து
உன் குறை சுட்ட
என் நிறை வியந்து
உன் நிறை மறைக்க
என் நிறை மறந்து
நாம் ஆடும் அபத்த நாடகத்தில்
காமம் ஒன்றே மெய்மை.
சீறிச் செருத்துக் கீறிச் சதையில்
குருதி உறைந்த காயத்தோடே
புணர்ந்து வாழும் விலங்கு
இணைகள் வீட்டில் நாம்.
இராவணம்
மண்டோதரியிடம்
மணந்த ஒன்றை
நர்த்தன திலோத்தி
மறுக்காத ஒன்றை
கவரி வீசிய கன்னியர்
காட்டத் துடித்த ஒன்றை
சீதையிடம் கேட்டுச்
சீரழிந்ததே நின்
பெருங்காமம்.
உள்ளிருந்து உடற்றும் பசி
சீவிவைத்த சாரல் வானில்
வீசிப் பறந்தது சிட்டு.
குறைத்துவைத்த விளக்கின்
ஒளி போல
அந்தியை இரவாக்கியது
மழைப் பெயல்.
ஓமையங்காட்டில் ஒதுங்க,
தலை உடைந்த சிலையின்
முலைக்காம்பில்
வட்டமிட்டுக் கொண்டிருந்த
சிற்றெறும்பு கண்டு
உழத்தியின் நினைவெழுந்தது
அவனுக்கு.
அடுப்பின் வெளிச்சத்தில்
பல்லியின் கண் மினுங்கியது.
மலர்ந்திருந்தது சிலந்திவலை.
அரிசியைக் கொத்துகையில்
இடைப்பட்ட எறும்புகளையும்
சேர்த்தே முழுங்கியது நீலச்சேவல்.
பூச்சிகள் பொறுக்கிய உழுநிலம் விட்டுச்
சடசடத்துப் பறந்தன பறவைகள்.
மனோரஞ்சிதம் பூத்த முற்றத்தில்
அவன் வரவு பார்த்திருந்தாள் உழத்தி.
எப்படி நினைத்தாளோ
அப்படியே பார்த்தான் உழுதவன்.
கொடையின் பெயல்
உடல்களில் இறங்கியது.
அரையிருட்டில் இசைந்தது
காமஸ்வரம்.
பூனை இருளிலிருந்து மெல்ல
வாசல் வந்தது.
விழும் துளிகளைப் பார்த்து
உடலை முறுக்கியது
வரிப்புலி.
எட்டுப் புள்ளிக் காமம்
திரிபுரசுந்தரி கோலமிடுகிறாள்.
நகையுணர்ச்சி மேலோங்க
மாவெடுத்து சிறு புள்ளி.
தலைவனின் இழிவெண்ணி
அழுகை மேலோங்க
சிறு புள்ளி.
மூப்பானாலும்
பூப்பூக்கும் காமமெண்ணிச்
சிறு புள்ளி.
தன்னையும் நோக்கும்
ஆடவரை எண்ணித்
தான் வியந்து சிறு புள்ளி.
கசடறக் கற்றது காமமென்ற
பெருமிதத்தில் சிறு புள்ளி.
மனமெனும் இருப்பை
மஞ்சத்தில் இழப்பதெண்ணி
இன்பக் கோபத்தில்
இன்னொரு புள்ளி.
உடலை ஓர்ந்த உவகையில்
சற்றுப் பெரிய புள்ளி.
கிண்ணத்தில் கிடக்கும்
புள்ளிகளெல்லாம்
மண்படுந்தோறும்
மாக்கோலமாகும்.
கொல்லிப் பாவை
காமம் என்பது
ஆதியெனில்
அது அகந்தையோ?
கன்மமோ?
மாயையோ?
பதிமை அறியாப்
பசுவோ?
பசுவில் கனக்கும்
பாழோ?
அழிபசியோ?
ஆனா நோயோ?
இரக்கம் மறந்த
மூர்க்கமோ?
மிச்சம் நிற்கும்
அச்சமோ?
ஒளிக்கும் முந்தைய
குருடோ?
இருளின் நித்திய
விரிவோ?
காமம் என்பது
ஆதியெனில்
உதற முடியா ஊழோ?
உள் சுரக்கும் நஞ்சோ?
உட்செறிந்த தீங்கோ?
ஆதியில் வந்தது
காமமெனில்
நான் அற்பன் ஆனதில்
பிழையுளதோ?
தில்லேலே
விம்மும் முலையின்
வெம்மைச் சூட்டில்
விளக்கேற்றினாள் சூரரமகள்.
விம்முந்தோறும் ஏற்றினாள்
ஒவ்வொரு விளக்கு.
சுற்றிலும் பற்றியெரிந்தது
நூற்றுவ சுடர்த்தோகை.
காற்றின் அசைவிற்கேற்ப
சுழன்று சுழன்று ஆடினாள்.
கனன்றதிரும் சுடர்ப்பெருக்கில்
தீக்குடைந்து ஆடவந்தான்
திண்தோள் சேயோன்.
சேயோனே சேயோனே
கான் உகந்த சேயோனே!
காமத்தால் கனன்றெழும்
செம்மாந்த சேயோனே!
வெறியாட்டு அயர வரும்
எறிவேல் தடக்கைச் சேயோனே!
ஆணெல்லாம் ஆடகப்பொன்
ஆவார் பெண்ணாலே
என்பதை யான்
கண்ணாலே கண்டேனே உன்னாலே
தில்லேலே தில்லேலே.
ஒரிஜினல் காமம்
அலைபேசி எடுத்து
எனது நண்பிகளின்
எண்களை அழித்தாய்.
விருந்தாட வீடு வந்த
தோழி ஒருத்திக்குத்
காப்பியில் காறித்துப்பிக்
கலந்து கொடுத்தாய்.
அப்படி இப்படித்
திருகுதாளம்
ஏதேதோ செய்தாய்.
எனது அம்மையை
அடிக்கப் போனாய்
எனைப் பெற்ற
அப்பனை ஏசினாய்
ஆட்களிடம் உனக்கு
ஆற்றமாட்டாத நிம்பிரி.
உனக்கு உளநோயாம்
ஐயப்பேய் ஆட்டுகிறதாம்
என் இல்லத்தார் சொல்கிறார்கள்.
எனக்குத் தெரியும்
இதுதான் ஒரிஜினல் காமம்.
நாம் இருவரும்
ஒரிஜினல்ஸ் கண்ணே!
பலி பீடம்
நச்சரவாய்த் தீண்டும் உன்
தீச் சொல் மறந்து
பொறாமை நுரைத்துப்
புளித்து நாறும் வாய் மறந்து
ஒப்புரவில்லா உன்
காழ்ப்பும் கசப்பும் மறந்து
தன்னலமே பேணும் உன்
தற்பெருமைப் பீடை மறந்து
பகுத்துண்டு ஓம்பும் பண்பற்று
நொதிக்கும் நெடி மறந்து
பாடறிந்து வாழா உன்
கொதிக்கும் திமிர் மறந்து
பல்லிளித்துப் பல்லிளித்து
மேனி மதர்ப்பையே வேண்டுவதேன்
புற்றரவல்குலைப் பிணைந்து
புணர்ந்து தினவு தீர்வதேன்
காமக் கறைப் பலிபீடத்தில் மீண்டும்
மீண்டும் குருதி தெறிப்பதேன்?
உள்ளிருக்கும் முள்
ஊர் பேரெல்லாம் மறந்த பின்னும்
முட்டி தட்டிக் காலோய்ந்த பின்னும்
கஞ்சிக்குக் காத்திருந்த பின்னும்
கோயில் திண்டே கதியான பின்னும்
பேசக் கொள்ள ஆளில்லாத பின்னும்
குடத்துக்கு நீர் கேட்டு வந்தவளும்
சடங்குக்குச் சேதி சொல்ல வந்தவளும்
ஓடையில் கரும்புச் சக்கையானவளும்
கதிரறுக்க வந்த அக்காதங்கச்சியும்
காறித் துப்பலும் கன்னம் பழுத்ததும்
ஊர்க் கூட்டத்தில் தண்டம் கட்டியதும்
ஆள் கூடித் தர்ம அடி தின்றதும்
நெஞ்சைவிட்டுப் போகலையே
நெருஞ்சிமுள்ளுந் தேவலையே !
கடைசி முகம்
கனக்கும் இமை திறந்த
அவன் அமைதியாக
மனைவியைப் பார்த்தான்.
இனி இல்லை அவன்
என்றுணர்ந்தவள்
இதழ் இறுக்கி அழுதாள்.
மெல்ல வாயசைத்து
“செல்லக்குட்டி..“ என்றான்.
உள்ளே போய் மகளின்
முதல் மழலைப் படத்தை
எடுத்து வந்து தந்தாள்.
என்றும் அவன் மிக விரும்பும்
“காதல் சிறகை” பாடலை
ஒலிக்கவிட்டு அமர்ந்தாள்.
இருவர் முகத்திலும்
துயர் விலகும் தெளிவு.
நெய்தீர்ந்த அகலின் அருஞ்சுடர்.
முகத்தை வேறுபுறம் திருப்பி
சாரதா என்றான்.
கேட்கவும் சொல்லவும் நிறைய இருந்தும்
அழுகையை அடக்கியவாறே
வெளியேறினாள் சாரதா.
மூன்றுநாழிகை கடந்தபின்
மூடிய கண்
முன்னிருந்தாள் மனைவி.
பெய்யத் தொடங்கியது பெருமழை.
இடியுடன் சடசடத்தது
மெல்ல மெல்ல மெல்ல
அடங்கியது.
