கட்டுரை

டால்ஸ்டாயுடன் சில நாட்கள்

கார்க்கியின் முன்னுரை

நான் ஒலேய்ஸிலும், லியோ நிக்கோலாயேவிச் கிரிமியாவிலுள்ள காஸ்ப்ராவிலும் வாழ்ந்த காலத்தில் எழுதிய துண்டுக் குறிப்புகளால் ஆனது இந்தச் சிறிய நூல். டால்ஸ்டாய் கடுமையாக நோயுற்றிருந்த காலத்தையும் அதிலிருந்து மீண்ட காலத்தையும் இவை காட்டுவன. துண்டுத் தாள்களில் ஒழுங்கின்றி அவசரமாகக் குறித்துவைத்தவை இவை. அவற்றைத் தொலைத்துவிட்டதாக நினைத்திருந்தேன். ஆனால் அண்மையில் அவற்றில் சில கிடைத்தன.

யாஸ்னாயா பொலியானாவை விட்டு டால்ஸ்டாய் ‘வெளியேறியதும்’, பின்னர் அவர் இறந்ததும் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பில் எழுதிய, முடிவுபெறாத ஒரு கடிதத்தையும் இதில் சேர்த்திருக்கிறேன். அப்போது எழுதிய வடிவிலேயே, ஒரு சொல்லைக்கூடத் திருத்தாமல் அதனை வெளியிடுகிறேன். அதைச் சரியாக்கி முடித்து எழுதவும் இல்லை. ஏனோ அது என்னால் இயலவில்லை.

— மாக்சிம் கார்க்கி

I

மற்ற எல்லாவற்றையும்விட அடிக்கடியும் வெளிப்படையாகவும் அவரை அரித்துக்கொண்டிருப்பது கடவுளைப் பற்றிய எண்ணம்தான். சில தருணங்களில் அது ஓர் எண்ணமாகக்கூடத் தோன்றுவதில்லை. தனக்கு மேலே இருப்பதாக அவர் உணரும் ஏதோவொன்றுக்கு எதிரானது. அது கடுமையான எதிர்ப்பாகவே தெரிகிறது. அதைப் பற்றி அவர் அதிகம் பேசுவதில்லை. ஆனால் எப்போதும் அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

இதை முதுமையின் அறிகுறி என்றோ மரணம் நெருங்குவதைப் பற்றிய முன்னுணர்வு என்றோ சொல்லிவிட முடியாது. அவரது நுட்பமான மனிதப் பெருமிதத்திலிருந்தும், சற்றே அவமான உணர்விலிருந்தும் இது பிறப்பதாக நினைக்கிறேன். லியோ டால்ஸ்டாயாக இருந்துகொண்டு, நோயில் ஒரு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நுண்ணுயிரிக்குத் தன் சித்தத்தை அடிபணியச் செய்ய வேண்டியிருப்பது அவமானம்தானே! அவர் ஓர் அறிவியலாளராக இருந்திருந்தால், நிச்சயமாக மிக நுட்பமான கருதுகோள்களை உருவாக்கி, பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பார்.

II

அவருக்கு அற்புதமான கைகள். அழகானவை அல்ல; புடைத்த நரம்புகள் முடிச்சுகளாகத் திரண்டிருக்கும் கைகள். இருந்தாலும், தனித்துவமான எழுத்துத் திறனும் படைப்பாற்றலும் கொண்டவை. லியோனார்டோ டா வின்சியின் கைகளும் ஒருவேளை இப்படி இருந்திருக்கலாம். இத்தகைய கைகளால் எதையும் செய்ய முடியும்!

பேசிக்கொண்டிருக்கும்போது சில சமயம் விரல்களை அசைப்பார். மெல்ல அவற்றை முஷ்டியாகக் குவிப்பார். பிறகு திடீரென்று கையை விரித்து, ஒரு கனமான சொல்லை உதிர்ப்பார்.

அவர் ஒரு கடவுளைப் போலிருக்கிறார். சபாவோத் கடவுளோ ஒலிம்பியக் கடவுளோ அல்ல; ‘பொன்னிற லிண்டன் மரத்தின்கீழ், மேபிள் மரச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்’ ரஷ்யக் கடவுளைப் போல. அவ்வளவு கம்பீரமில்லை. ஆனால் மற்ற எல்லாக் கடவுள்களையும்விடத் தந்திரமும் உளச்சிக்கலும் மிகுந்தவராக இருக்கலாம்.

III

ஒரு பெண்ணின் பரிவோடு சுலேர்ழிட்ஸ்கியை அவர் நடத்துகிறார். செகாவிடம் அவர் காட்டும் அன்பு தந்தைமை கொண்டது; அதில் ஒரு படைப்பாளியின் பெருமிதம் கலந்திருக்கிறது. சுலேரோ அவரிடம் பரிவையும் தீராத ஆர்வத்தையும் பரவசத்தையும் எழுப்புகிறான். அந்த மந்திரவாதிக்கு இந்தப் பரவசம் ஒருபோதும் அலுப்பூட்டுவதில்லை போலும். இந்த உணர்வில் சற்றே வேடிக்கையான ஒன்றும் இருக்கலாம் – வயதான திருமணமாகாத பெண் தன் கிளியிடமோ பக் நாயிடமோ ஆண்பூனையிடமோ காட்டும் அன்பைப் போல. ஏதோ அறியாத பிரதேசத்திலிருந்து வந்த வசீகரமான காட்டுப்பறவை சுலேர்.

அவனைப் போன்ற நூறு பேர் இருந்தால் ஒரு சிறுநகரத்தின் முகத்தையும் ஆன்மாவையும் மாற்றிவிடலாம். அதன் முகத்தை மாற்றி, அதன் ஆன்மாவுக்குள் ஒளிமிக்க, கட்டுக்கடங்காத வனவாழ்வின் வேட்கையை நிரப்பிவிடுவார்கள். சுலேரை எளிதாக மகிழ்ச்சியாக நேசிக்க முடிகிறது. பெண்கள் அவனை எவ்வளவு விருப்புடன் கவனமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பு; கூடவே கோபமும் வருகிறது. எனினும் அந்த கவனமின்மைக்குள் ஓர் எச்சரிக்கை உணர்வும் மறைந்திருக்கலாம். சுலேரை நம்ப முடியாது. நாளை என்ன செய்வான்? குண்டு வீசலாம். அல்லது மதுச்சாலைகளில் இசைபாடும் ஒரு குழுவில் சேர்ந்துவிடலாம். மூன்று ஆயுளுக்குப் போதுமான ஆற்றல் அவனிடம் இருக்கிறது. அவனிடம் எவ்வளவு உயிர்த்தழல்! சிவந்து கனலும் இரும்பைப் போல! தீப்பொறிகளை வியர்வையாகச் சிந்துகிறான்.

IIIa

[ஆனால் ஒருமுறை சுலேரிடம் லியோ கடுமையாகக் கோபப்பட்டார். சுலேர் அரசின்மைவாதத்தின் பக்கம் சாய்ந்தவன். தனிமனிதச் சுதந்திரம் சார்பாக அடிக்கடி கடுமையாக வாதிடுவான். அப்போதெல்லாம் லியோ நிக்கோலாயேவிச் அவனைக் கேலி செய்வார்.

ஒருமுறை இளவரசர் குரோபோட்கினின் சிறிய துண்டுப்பிரசுரம் ஒன்று சுலேருக்குக் கிடைத்தது. உடனே அவன் அதைப் பற்றிக்கொண்டான். அரசின்மைவாதத்தின் நியாயத்தை அன்று முழுவதும் எல்லோருக்கும் விளக்கினான். தன் தர்க்கப் பேச்சால் அவர்களைத் திணறடித்தான்.

“போதும். நிறுத்து லியோவுஷ்கா” என்று எரிச்சலுடன் சொன்னார் லியோ நிக்கோலாயேவிச். “நீ வெறுப்பேற்றுகிறாய். கிளியைப் போலச் சுதந்திரம் சுதந்திரம் என்று ஒரே சொல்லை உளறிக்கொண்டிருக்கிறாய். அதற்கு என்ன அர்த்தம்? உனக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால் என்ன நடக்கும் என்று நினைக்கிறாய்? தத்துவ நோக்கில் பார்த்தால் அடியற்ற வெற்றிடம். நடைமுறை வாழ்க்கையிலோ நீ சோம்பேறியாகவும் ஒட்டுண்ணியாகவும் மாறுவாய். நீ சொல்கிற பொருளில் நீ சுதந்திரமானவன் ஆகிவிட்டால், வாழ்க்கையோடும் மனிதர்களோடும் உன்னைப் பிணைப்பது எது? பறவைகள் சுதந்திரமாக இருக்கின்றன. இருந்தாலும் கூடு கட்டுகின்றன. நீயோ ஒரு கூடு கட்டச் சுள்ளியைக்கூட எடுக்கமாட்டாய். நாயைப் போல எங்கேயும் எப்படியும்  உன் பாலுணர்வைத் தீர்த்துக்கொள்வாய். தீர யோசித்துப் பார். உனது இந்தச் சுதந்திரம் கடைசியில் வெற்றிடமாகும்; வரையறை இல்லாமல் போகும் என்பதை நீ காண்பாய்; உணர்வாய்.”

கோபத்துடன் முகத்தைச் சுளித்த அவர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் அமைதியாகச் சொன்னார்:

“கிறிஸ்து சுதந்திரமானவர். புத்தரும் அப்படித்தான். இருவரும் உலகின் பாவங்களைத் தங்கள் மீது ஏற்றுக்கொண்டு, மண்ணுலக வாழ்க்கை என்னும் சிறைக்குள் தாமாகவே நுழைந்தார்கள். அவர்களைவிட மேலே யாரும் சென்றதில்லை. யாருமே. ஆனால் நீ – சரி, நாம் – இதைப் பேசுவதால் என்ன பயன்? சக மனிதர்களுக்காக ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான் நாம் எல்லோரும் முயல்கிறோம். ஆனால் அந்தக் கடமை உணர்வுதான் நம்மை மனிதர்களாக ஆக்கியிருக்கிறது. அந்தக் கடமைகள் இல்லாவிட்டால் மிருகங்களைப் போலத்தான் வாழ்வோம்.” அவர் புன்னகைத்தார்.

“இப்போது எப்படி வாழ வேண்டும் என்று இங்கே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் என்ன பயன்? அப்படியாயினும் அது அவ்வளவு பெரிதில்லைதான். இருந்தாலும் ஏதோ இருக்கிறது. உதாரணமாக, நீ என்னுடன் வாதிடுகிறாய். கோபத்தில் உன் மூக்குநுனி நீலமாகிறது. இருந்தும் என்னை நீ அடிப்பதில்லை. திட்டுவதுகூட இல்லை. ஆனால் உண்மையிலேயே சுதந்திரமாக உணர்ந்திருந்தால், என்னை இங்கேயே கொன்றிருப்பாய். பேச்சு அத்துடன் முடிந்திருக்கும்.”

சற்று மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்:

“எல்லோரும் எல்லாமும் என்னுடன் உடன்படுவதில்தான் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அப்படி நடந்தால் ‘நான்’ என்பவனே இருக்க மாட்டேன். ஏனெனில் மோதல்களிலும் முரண்பாடுகளிலும்தான் நம்மைப் பற்றிய உணர்வு நமக்கு ஏற்படுகிறது.”]

IV

ஷோப்பனின் இசையை கோல்டன்வைசர் வாசித்தார். அதைக் கேட்ட லியோ நிக்கோலாயேவிச் இவ்வாறு பேசினார்:

“ஒரு ஜெர்மானியக் குறுநில இளவரசன் சொன்னான்: ‘உங்களுக்கு எங்கே அடிமைகள் வேண்டுமோ, அங்கே முடிந்தவரை தொடர்ந்து இசையை மீட்டுங்கள்.’ அது மெய்தான்; சரியான அவதானிப்பு. இசை மனத்தை மழுங்கடிக்கிறது. கத்தோலிக்கர்கள் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். நமது பாதிரியார்களோ தேவாலயத்தில் மெண்டல்ஸோனின் இசையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

துலாவைச் சேர்ந்த ஒரு பாதிரியார், கிறிஸ்து யூதர் அல்ல என்று என்னிடம் உறுதியாகச் சொன்னார். ஆனால் கிறிஸ்து யூதக் கடவுளின் மகன்; அவரது தாயும் யூதப் பெண் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருந்தாலும் ‘அதற்கு வாய்ப்பேயில்லை’ என்றார். ‘அப்படியானால் எப்படி?’ என்று கேட்டேன். தோள்களைக் குலுக்கிவிட்டு ‘அதுதானே மர்மம்’ என்றார்.”

V

“பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே ‘நம் காலத்தில் அற்புதங்கள் நடக்காது’ என்று ‘துணிச்சலாக’ அறிவித்த கலீசிய இளவரசர் விளாதிமிர்கோவைப் போன்றவர்தான் அறிவாளி. அறுநூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அறிவாளிகள் எல்லோரும் ‘அற்புதங்கள் என ஏதுமில்லை, அற்புதங்கள் ஏதுமில்லை’ என்று ஒருவரையொருவர் சாடிக்கொண்டிருக்கிறார்கள். மக்களோ பன்னிரண்டாம் நூற்றாண்டில் நம்பியதைப் போலவே இப்போதும் அற்புதங்களை நம்புகிறார்கள்.”

VI

“ஒருசிலருக்குக் கடவுள் தேவைப்படுகிறார்; ஏனெனில் மற்ற எல்லாமும் அவர்களிடம் இருக்கின்றன. பெரும்பாலோருக்குக் கடவுள் தேவைப்படுகிறார்; ஏனெனில் அவர்களிடம் எதுவுமே இல்லை.”

நான் இதை வேறுவிதமாகச் சொல்வேன்: பெரும்பாலோர் கோழைத்தனத்தால் கடவுளை நம்புகிறார்கள். ஒருசிலரே ஆன்மாவின் நிறைவால் அவரை நம்புகிறார்கள்.

VIa

“ஆண்டர்சனின் கதைகள் உனக்குப் பிடிக்குமா?” என்று லியோ  யோசனையுடன் கேட்டார். “மார்க்கோ வோவ்சோக்கின் மொழிபெயர்ப்பில் முதலில் வெளிவந்தபோது அவற்றை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் பத்து ஆண்டுகள் கழித்து அந்த நூலை எடுத்து வாசித்தபோது, ஆண்டர்சன் மிகவும் தனிமையானவர் – முற்றிலும் தனிமையானவர் – என்று திடீரென்று தெளிவாக உணர்ந்தேன். அவரது வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவர் கட்டுப்பாடின்றி வாழ்ந்ததாகவும் நிறையப் பயணம் செய்ததாகவும் தெரிகிறது. அது அவர் தனிமையானவர் என்ற என் உணர்வையே உறுதிப்படுத்துகிறது. அதனால்தான் குழந்தைகளை நோக்கிப் பேசினார். ஆனால் பெரியவர்களைவிடக் குழந்தைகள் ஒரு மனிதன்மீது அதிக இரக்கம் காட்டுவார்கள் என்று நினைப்பது தவறு. குழந்தைகள் எதற்கும் இரங்குவதில்லை. இரக்கம் என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது.”

VII

பௌத்த தத்துவ நூல்களை வாசிக்குமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார். பௌத்தத்தையும் கிறிஸ்துவையும் பற்றி எப்போதும் நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். ஆனால் கிறிஸ்துவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரது சொற்கள் விசித்திரமாக வறண்டுபோகின்றன. அவற்றில் உற்சாகமில்லை, உணர்ச்சியில்லை, மெய்யான எரிதழலின் சிறுபொறிகூட இல்லை. கிறிஸ்துவை எளியவராகவும் இரக்கத்திற்கு உரியவராகவும் அவர் கருதுகிறார் என்று நினைக்கிறேன். சில சமயம் அவரைப் போற்றினாலும், நேசிப்பதாகத் தெரியவில்லை. அவரிடம் ஒருவித அமைதியின்மை இருப்பதுபோல் தெரிகிறது. கிறிஸ்து ஒரு ரஷ்ய கிராமத்திற்கு வந்தால், அங்குள்ள குமரிகள் அவரைப் பார்த்துச் சிரித்துவிடக் கூடுமோ என்ற கவலைபோல!

VIII

இன்று இளவரசர் நிக்கொலாய் மிகைலோவிச் டால்ஸ்டாயின் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அறிவுக்கூர்மை கொண்டவர் என்பது தெரிந்தது. மிகவும் அடக்கமாக நடந்துகொள்கிறார். அதிகம் பேசுவதில்லை. பரிவான கண்கள், சீரான உடலமைப்பு, அமைதியான அசைவுகள். லியோ அவரைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தார். மாறிமாறிப் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் பேசினார். ரஷ்ய மொழியில் அவர் சொன்னார்:

“கரம்சின் ஜார் மன்னருக்காக எழுதினார். சொலோவியோவ் நீளமாகவும் சலிப்பூட்டும்படியும் எழுதினார். கிளூச்செவ்ஸ்கி தனது மகிழ்ச்சிக்காக எழுதினார்; அவர் தந்திரமான ஆள். முதலில் அவர் பாராட்டுவதாகத் தோன்றும். தொடர்ந்து வாசிக்கும்போதுதான் குறைகூறுகிறார் என்பது புரியும்.”

யாரோ ஸபெலினைக் குறிப்பிட்டார்கள்.

“அவர் நல்லவர். ஆர்வத்தின் பேரில் கலைப்பொருள்கள் சேகரிப்பவர். பயன்படுகிறதோ இல்லையோ, எல்லாவற்றையும் சேகரிப்பார். ஒரு நாளும் வயிறாரச் சாப்பிட்டதில்லை என்பதுபோல உணவை விவரிப்பார். ஆனால் மிக வேடிக்கையானவர்.”

IX

கையில் ஒரு கோலுடன் வாழ்நாள் முழுக்க உலகைச் சுற்றும் யாத்ரீகர்களை அவர் எனக்கு நினைவூட்டுகிறார். ஒரு மடத்திலிருந்து இன்னொன்றுக்கும், புனிதச் சின்னம் இருக்கும் ஆலயத்திலிருந்து இன்னொன்றுக்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் நடப்பவர்கள்! வீடற்றவர்கள்!  சக மனிதர்களிடமிருந்து அந்நியமானவர்கள்! விழைவுகளிலிருந்து விலகியவர்கள். உலகம் அவர்களுக்கானது அல்ல. கடவுளும்கூட அவர்களுக்கானவர் அல்லர்.

பழக்கத்தின் காரணமாகக் கடவுளிடம் வேண்டுகிறார்கள். ஆனால் ஆன்மாவின் ஆழத்தில் அவரை வெறுக்கிறார்கள். ஏன் அவர் தங்களைப் பூமியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குத் துரத்துகிறார்? எதற்காக? பிற மனிதர்கள் அவர்களது வழியில் கிடக்கும் மரக்கட்டைகள், வேர்கள், கற்கள். அவற்றில் கால் இடறுகிறது. சில சமயம் காயமும் ஏற்படுகிறது. அவர்கள் இல்லாமலேயே வாழலாம். இருந்தாலும், சில வேளைகளில் ஒரு மனிதனுக்கு, தான் பிறரைப் போன்றவன் அல்லன் என்பதைக் காட்டி வியப்பூட்டுவதும், தனது வேறுபாட்டை உணர்த்துவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

X

“பிரஷ்யாவின் ஃபிரெட்ரிக் மிகவும் சரியாகச் சொன்னார்: ‘ஒவ்வொருவரும் தத்தமது வழியில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.’ இன்னொன்றும் சொன்னார்: ‘எவ்வளவு வேண்டுமானாலும் வாதிடுங்கள். ஆனால் கீழ்ப்படியுங்கள்.’ இறக்கும்போதோ ‘அடிமைகளை ஆள்வதில் சலித்துவிட்டேன்’ என்று ஒப்புக்கொண்டார்.

பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எப்போதும் பெரும் முரண்பாடுகளுடன் இருக்கிறார்கள். அவர்களுடைய மற்ற முட்டாள்தனங்களுடன் சேர்த்து இதுவும் மன்னிக்கப்படுகிறது. என்றாலும் முரண்படுவது முட்டாள்தனம் அல்ல. முட்டாள் பிடிவாதமாக இருப்பான். ஆனால் தனக்குத்தானே முரண்படுவது எப்படி என்று அவனுக்குத் தெரியாது. ஆம், ஃபிரெட்ரிக் விசித்திரமானவர். ஜெர்மானியரிடையே மிகச் சிறந்த மன்னர் என்ற பெயரைப் பெற்றார். ஆனால் அவரால் அவர்களைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கதேயையும் வீலாண்டையும்கூட அவருக்குப் பிடிக்காது.” – லியோ.

XI

“உண்மையின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும் அச்சத்திலிருந்துதான் கற்பனாவாதம் பிறக்கிறது” என்று நேற்று பால்மாண்டின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது சொன்னார். சுலேர் அதை ஏற்கவில்லை. உணர்ச்சிவசப்பட்டு நாக்குழறியபடி, மேலும் சில கவிதைகளை மிக உருக்கமாக வாசித்தான்.

“லியோவுஷ்கா, இவை கவிதைகள் அல்ல. ஏமாற்றுவேலை, குப்பை. இடைக்காலத்தில் சொன்னதைப் போல, அர்த்தமில்லாமல் சொற்களைக் கோத்துவைப்பது. கவிதை செயற்கைத்தனமற்றது. ஃபெட் எழுதியிருக்கிறாரே:

‘எதைப் பாடப்போகிறேன் என்று எனக்கே தெரியாது,

என் பாடல் கனிந்துகொண்டிருக்கிறது என்பது மட்டுமே தெரியும்.’

“இதில் கவிதை பற்றிய மக்களின் உண்மையான, அசலான உணர்வை அவர் வெளிப்படுத்தினார். விவசாயிக்கும் தான் ஒரு கவிஞன் என்று தெரியாது. ‘ஓ… ஓய்… ஆ…’ என்று பாடுகிறான். பறவையின் பாடலைப் போல, ஆன்மாவிலிருந்து நேராக ஓர் உண்மையான பாடல் பிறக்கிறது. உன்னுடைய இந்தப் புதிய கவிஞர்களோ புனைந்துகொண்டிருக்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்களிடம் articles de Paris என்று அழைக்கப்படும் சில அற்பப் பொருட்கள் இருக்கின்றன. உன்னுடைய இந்தச் செய்யுள் கோப்பவர்களும் அதைத்தான் உற்பத்தி செய்கிறார்கள். நெக்ராசோவின் பரிதாபகரமான கவிதைகளும்கூடத் தொடக்கத்திலிருந்து முடிவுவரை புனையப்பட்டவைதான்.”

“அப்படியானால் பெராஞ்சே?” என்று சுலேர் கேட்டான்.

“பெராஞ்சே! அது வேறு. பிரெஞ்சுக்காரர்களுக்கும் நமக்கும் என்ன பொதுவாக இருக்கிறது? அவர்கள் புலனின்பத்தை நாடுபவர்கள். உடலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஆன்ம வாழ்க்கைக்கு அவர்கள் அளிப்பதில்லை. ஒரு பிரெஞ்சுக்காரனுக்குப் பெண்ணே எல்லாமும். மழுங்கிப் போனவர்கள், ஆண்மையற்றவர்கள் அவர்கள். காசநோயாளிகள் எல்லோரும் புலனின்பத்தை நாடுபவர்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.”

சுலேர் தனக்கே உரிய நேரடித்தன்மையுடன் வாதிடத் தொடங்கினான். தாறுமாறாகச் சொற்களைக் கொட்டினான். லியோ அவனைப் பார்த்து அகலமாகப் புன்னகைத்தார்.

“திருமண வயதாகியும் காதலன் கிடைக்காத பெண்ணைப் போல இன்று நீ எரிச்சலுடன் இருக்கிறாய்.”

XII

நோய் அவரை மேலும் வற்றச் செய்துவிட்டது. அவருக்குள் இருந்த ஏதோவொன்றை எரித்துவிட்டது. அகத்தில் அவர் மேலும் இலகுவாகி விட்டார். ஒளி புகும் மென்மை! நிகழ்வதை ஏற்றுக்கொள்பவராக மாறியிருப்பதுபோல் தோன்றியது. அவரது கண்கள் அதிகூர்மை கொள்கின்றன. பார்வை எதையும் ஊடுருவுகிறது. மறந்துபோன எதையோ நினைவுகூர்வதுபோல, அல்லது அறியாத புதிய ஒன்றுக்காகக் காத்திருப்பதுபோல, கவனமாகக் கேட்கிறார். யாஸ்னாயா பொலியானாவில் அவர் எல்லாவற்றையும் அறிந்தவராக, மேலும் கற்றுக்கொள்ள எதுவும் இல்லாதவராக, எல்லாக் கேள்விகளுக்கும் முடிவு கண்டவராக எனக்குத் தோன்றினார்.

XIII

அவர் ஒரு மீனாக இருந்தால், நிச்சயமாகப் பெருங்கடலில் மட்டுமே நீந்துவார். குறுகிய நீர்நிலைகளுக்கும், குறிப்பாக மண்ணிலோடும் நதிகளின் மென்சலனப் பரப்புகளுக்கும் வரவே மாட்டார். அவரைச் சுற்றியுள்ள சிறுமீன்கள் இங்கே ஓய்வெடுக்கின்றன; அங்குமிங்கும் விரைகின்றன. அவர் பேசுவது அவற்றுக்கு ஆர்வமூட்டுவதில்லை; தேவையாக உணர்வதுமில்லை. அவரது மௌனம் அவற்றை அச்சுறுத்துவதில்லை, நெகிழ்த்துவமில்லை.

ஆனாலும் அவரது மௌனம், இவ்வுலகிலிருந்து விரட்டப்பட்ட உண்மையான துறவியின் மௌனத்தைப் போல, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலவற்றைப் பற்றிக் கடமைக்காக அவர் நிறையப் பேசினாலும், அதைவிடப் பெரியதாக அவரது மௌனம் உணரப்படுகிறது. சிலவற்றை யாரிடமும் சொல்ல முடியாது. அவரே அஞ்சும் சில எண்ணங்கள் நிச்சயமாக அவரிடம் இருக்க வேண்டும்.

XIV

கிறிஸ்துவின் ஞானப்பிள்ளையைப் பற்றிய கதையின் சிறந்த வடிவம் ஒன்றை யாரோ அவருக்கு அனுப்பியிருந்தார்கள். அதை சுலேருக்கும் செகாவிற்கும் மகிழ்ச்சியுடன் உரக்க வாசித்தார். அற்புதமாக வாசித்தார். நிலப்பிரபுக்களைப் பிசாசுகள் சித்திரவதை செய்யும் பகுதியை அவர் குறிப்பாக ரசித்துச் சிரித்தார். அதில் எனக்குப் பிடிக்காத ஏதோவொன்று இருந்தது. அவர் நேர்மையற்றவராக இருக்க முடியாது. ஆனால் இது உண்மையான உணர்வாக இருந்தால், அது இன்னும் மோசம். பிறகு சொன்னார்:

“விவசாயிகள் எவ்வளவு நன்றாகக் கதைகளைப் புனைகிறார்கள்! எல்லாமே எளிமையாக இருக்கின்றன. சொற்கள் குறைவு; உணர்ச்சி அதிகம். உண்மையான ஞானம் மிகச் சில சொற்களையே பயன்படுத்துகிறது. உதாரணமாக, ‘கடவுளே, எங்கள்மீது இரக்கம் காட்டும்.’”

ஆனாலும் அந்தக் கதை கொடூரமானதுதான்.

XV

என்மீது அவர் காட்டும் ஆர்வம் இனவியல் ஆய்வு சார்ந்தது. அவரது பார்வையில், அவருக்குப் பழக்கமில்லாத ஓர் இனத்தைச் சேர்ந்தவன் நான். அவ்வளவுதான்.

XVI

எனது ‘காளை’ (The Bull) கதையை அவருக்கு வாசித்துக்காட்டினேன். ரசித்துச் சிரித்தார். ‘மொழியின் வித்தைகளை’ நான் அறிந்திருப்பதைப் பாராட்டினார்.

“ஆனால் நீ சொற்களைத் திறம்படக் கையாளவில்லை. உன் விவசாயிகள் எல்லோரும் சாதுரியமாகப் பேசுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அவர்கள் பேசுவது முட்டாள்தனமாகவும் கோர்வையின்றியும் இருக்கும். ஒரு விவசாயி என்ன சொல்ல வருகிறான் என்பது முதலில் உனக்குப் புரியாது. அவன் வேண்டுமென்றே அப்படிச் செய்கிறான். அவனுடைய பேச்சின் முட்டாள்தனத்திற்குப் பின்னால், எதிராளியின் மனதில் இருப்பது வெளிப்படட்டும் என்ற நோக்கம் எப்போதும் மறைந்திருக்கும். விவரம் தெரிந்த விவசாயி தனது மனத்தில் இருப்பதை உடனே காட்ட மாட்டான். அதில் அவனுக்கு ஆதாயமில்லை.

“ஒரு முட்டாளை மக்கள் ஒளிவுமறைவின்றி நேரடியாக அணுகுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு வேண்டியதும் அதுதான். நீ அவன் முன்னால் உன்னை வெளிப்படுத்தியபடி நிற்கிறாய். உடனே உன் பலவீனங்கள் எல்லாவற்றையும் அவன் பார்த்துவிடுகிறான். அவன் சந்தேகப்படுகிறவன். தனது தீவிரமான எண்ணங்களை மனைவியிடம் கூடச் சொல்ல அஞ்சுவான். ஆனால் உன் கதைகளில் வரும் விவசாயிகளிடம் எல்லாமும் வெளிப்படையாக இருக்கின்றன. அது உலகளாவிய ஞானிகள் சபையைப் போல இருக்கிறது. அவர்கள் எல்லோரும் பொன்மொழிகளாகப் பேசுகிறார்கள். அதுவும் வாழ்க்கைக்கு உண்மையாக இல்லை. பொன்மொழிகளாகப் பேசுவது ரஷ்ய மொழியின் இயல்பல்ல.”

“அப்படியானால் சொலவடைகளும் பழமொழிகளும்?”

“அவை வேறு. இன்று புதிதாகச் செய்யப்பட்டவை அல்ல.”

“ஆனால் நீங்களே அடிக்கடி பொன்மொழிகளாகப் பேசுகிறீர்களே.”

“ஒருபோதும் இல்லை. அதோடு, எல்லாவற்றையும் நீ ஒப்பனை செய்கிறாய். மனிதர்களையும் இயற்கையையும்; குறிப்பாக மனிதர்களை. லெஸ்கோவும் அப்படித்தான் செய்தார். அளவுக்கு மீறி மெருகேற்றிச் செயற்கையாக எழுதியவர். இப்போது அவரை யாரும் வாசிப்பதில்லை. யாருடைய செல்வாக்குக்கும் ஆட்படாதே. யாரைக் கண்டும் அஞ்சாதே. அப்போது சரியாக எழுதுவாய்.”

XVII

அவர் வாசிக்கக் கொடுத்த நாட்குறிப்பில் ஒரு விசித்திரமான பொன்மொழி என்னைத் திடுக்கிட வைத்தது: ‘கடவுள் என்பது என் விருப்பம்.’

இன்று அந்தக் குறிப்பேட்டைத் திருப்பிக் கொடுத்தபோது, அதன் பொருளைக் கேட்டேன்.

“முற்றுப்பெறாத எண்ணம்” என்று அந்தப் பக்கத்தைப் பார்த்து, கண்களைச் சுருக்கியபடி சொன்னார். “‘கடவுள் என்பது அவரை அறிந்துகொள்ளும் என் விருப்பம்’ என்று சொல்ல நினைத்திருக்க வேண்டும்… இல்லை, அதுவல்ல…”

சிரிக்கத் தொடங்கினார். குறிப்பேட்டைக் குழாய்போலச் சுருட்டி, தனது சட்டையின் பெரிய பைக்குள் வைத்தார். கடவுளுடன் அவருக்குள்ள உறவு மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. சில சமயம் அது ‘ஒரே குகையில் இருக்கும் இரண்டு கரடிகளின்’ உறவை நினைவூட்டுகிறது.

XVIII

அறிவியலைப் பற்றி:

“ஏமாற்றுக்கார இரசவாதி ஒருவன் உருவாக்கிய தங்கக்கட்டிதான் அறிவியல். அதை எளிமைப்படுத்தி எல்லோரும் அணுகும்படி செய்ய விரும்புகிறாய். முடிவில், ஏராளமான கள்ள நாணயங்களைச் செய்திருக்கிறாய் என்பதைப் பார்க்கிறாய். அந்த நாணயங்களின் உண்மையான மதிப்பை மக்கள் அறிந்துகொள்ளும்போது, உனக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்.”

XIX

யூசுபோவ் பூங்காவில் நடந்தோம். மாஸ்கோ பிரபுக்களின் பழக்கங்கள் நடத்தைகளைப் பற்றி லியோ அற்புதமாகப் பேசினார். திமிர்த்த உடல்வாகுள்ள ரஷ்ய வேளாண்குடிப் பெண் ஒருத்தி மலர்ப்பாத்தியில் வேலை செய்துகொண்டிருந்தாள். இடுப்பை வளைத்துக் குனிந்தபடி, யானைத்தந்தக் கால்கள் தெரிய, பருத்த கொங்கைகள் அசைய வேலை செய்தாள். அவர் அவளைக் கவனமாகப் பார்த்தார்.

“இந்தப் பெண்ணுருவத் தூண்கள்தான் அந்தப் பிரபுக்குடிப் பகட்டையும் ஊதாரித்தனத்தையும் தாங்கி நிற்கின்றன. பண்ணைப் பணியாளரான ஆண்களும் பெண்களும் தங்கள் உழைப்பாலும் செலுத்தும் வரிகளாலும் மட்டும் அதைத் தாங்கவில்லை. நேரடியாகத் தங்கள் இரத்தத்தாலும் தாங்குகிறார்கள். இவளைப் போன்ற பெண்குதிரைகளுடன் பிரபுக்கள் அவ்வப்போது கூடாதிருந்தால், அவர்கள் எப்போதோ அழிந்துபோயிருப்பார்கள். என் காலத்து இளைஞர்கள் செய்ததைப் போல, தங்கள் ஆற்றலை வீணடித்துவிட்டு விளைவுகளிலிருந்து தப்பியிருக்க முடியாது.

“ஆனால் தங்கள் இளமை வேகத்தைத் தீர்த்துக்கொண்ட பிறகு, பலர் பண்ணையடிமைப் பெண்களை மணந்து நல்ல சந்ததியை உருவாக்கினார்கள். அந்த வகையிலும் விவசாயிகளின் வலிமை அவர்களைக் காப்பாற்றியது. அந்த வலிமை எங்கும் பொருந்திப் போகும். பிரபுக்களில் ஒரு பாதியினர் தங்கள் ஆற்றலைத் தங்களுக்குள்ளேயே மடைமாற்றிக் கொள்கின்றனர். மற்றப் பாதியினர் தங்கள் இரத்தத்தை வேளாண்குடி இரத்தத்துடன் கலக்கின்றனர். புதிய சந்ததியினர் கிளைத்துப் பரவுகின்றனர். அது பயனுள்ளது.”

XX

பிரெஞ்சு நாவலாசிரியரைப் போலப் பெண்களைப் பற்றித் தயக்கமின்றி நிறையப் பேசுகிறார். ஆனால் ரஷ்ய விவசாயியின் கரடுமுரடான தொனி எப்போதும் அதில் இருக்கும். முன்னர் அது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இன்று வாதா மரப் பூங்காவில் அன்டன் செகாவிடம் கேட்டார்:

“இளமையில் பரத்தையரிடம் நிறையப் போனாயா?”

சங்கடமான புன்னகையுடன் தனது குறுந்தாடியை இழுத்தபடி, அன்டன் பாவ்லோவிச் காதில் விழாத குரலில் ஏதோ முணுமுணுத்தார். கடலைப் பார்த்தபடி லியோ ஒப்புக்கொண்டார்:

“நான் சளைக்காத ஒரு …. …..”

மனம் வருந்தியே இதைச் சொன்னார். வாக்கிய முடிவில் விவசாயிகளின் காரமான ஒரு சொல்லை எறிந்தார். இதைவிடப் பொருத்தமான சொல் தெரியாததுபோல, எவ்வளவு இயல்பாக அதைச் சொன்னார் என்பதை அப்போதுதான் கவனித்தேன். அடர் முடி சூழ்ந்த அவரது உதடுகளிலிருந்து இத்தகைய சொற்கள் வரும்போது, அவை இயல்பாகவும் சாதாரணமாகவும் ஒலிக்கின்றன. அவற்றிலுள்ள படைவீரனின் கரடுமுரடும் ஆபாசமும் எங்கோ மறைந்துவிடுகின்றன.

அவரை முதலில் சந்தித்ததும், ‘வாரியென்கா ஒலேசோவா’, ‘இருபத்தாறு பேரும் ஒருத்தியும்’ ஆகிய கதைகளைப் பற்றி அவர் பேசியதும் நினைவுக்கு வருகின்றன. வழக்கமான பார்வையின்படி அவர் பேசியது ஆபாசச் சொற்களின் தொடர்தான். நான் திகைத்தேன். என் மனம் புண்பட்டது. வேறுவிதமாகப் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியாது என்று அவர் கருதுவதாக நினைத்தேன். மனம் புண்பட்டது முட்டாள்தனம் என்பது இப்போது புரிகிறது.

XXI

சைப்ரஸ் மரங்களின் நிழல் படிந்த கல் திண்டில் அவர் அமர்ந்திருந்தார். மெலிந்து சிறுத்து நரை கூடித் தோன்றினார். சற்றுக் களைப்புடன் இருந்தும், சாஃபின்ச் பறவையின் பாடலுக்கு இசையச் சீட்டியடித்துப் பொழுதுபோக்கும் சபாவோத் கடவுளைப் போலிருந்தார். அடர் பசுமைச் செறிவுக்குள் பறவை பாடியது. கூர்மையான சிறு கண்களை இடுக்கி அவர் மேலே பார்த்தார். குழந்தை போல உதடுகளைக் குவித்தபடி, சரியாக வராத சீட்டியை முயன்றார்.

“என்ன ஒரு கோபக்காரச் சிறு உயிர்! ஆத்திரத்தில் இருக்கிறது. இது என்ன பறவை?”

சாஃபின்ச் பறவையைப் பற்றியும் அதற்கே உரிய பொறாமைக் குணத்தைப் பற்றியும் சொன்னேன்.

“வாழ்நாள் பூராவும் ஒரே பாட்டு” என்றார். “ என்றாலும் அதற்குப் பொறாமை. மனிதனின் இதயத்தில் ஆயிரம் பாடல்கள் நிலவுகின்றன. இருந்தும் பொறாமைக்காரன் என்று அவன் தூற்றப்படுகிறான். இது நியாயமா?”

தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்வதுபோல யோசனையுடன் பேசினார்.

“ஒரு பெண் தன்னைப் பற்றித் தான் அறிந்திருக்கும் அளவைவிட அதிகமாகக் கூறி ஓர் ஆண் அவளை நயந்துவிடும் தருணங்கள் இருக்கின்றன. அவன் சொல்கிறான், மறந்துவிடுகிறான். அவளோ நினைவில் வைத்திருக்கிறாள். தனது ஆன்மாவைத் தாழ்த்திக்கொள்வோமோ, அவமானத்திற்கும் கேலிக்கும் ஆளாவோமோ என்ற அச்சத்திலிருந்து ஒருவேளை பொறாமை பிறக்கிறதோ? ஓர் ஆணின் …பிடித்து வைத்திருக்கும் பெண் ஆபத்தானவள் அல்ல. அவனுடைய ஆன்மாவைப் பிடித்து வைத்திருப்பவள்தான் ஆபத்தானவள்.”

அவருடைய கிராய்ட்சர் சொனாட்டா கதையுடன் இந்தக் கருத்து முரண்படுவதைச் சுட்டிக்காட்டினேன். திடீர்ப் புன்னகையின் ஒளி அவரது தாடி முழுவதும் பரவியது.

“நான் சாஃபின்ச் பறவை அல்ல” என்றார்.

*  *  *

டால்ஸ்டாயுடன் சில நாட்கள்

ஒரு மாலை வேளையில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென்று சொன்னார்:

“நிலநடுக்கங்கள், கொள்ளைநோய்கள், நோயின் வதைப்புகள், ஆன்மாவின் எல்லா வேதனைகளையும் தாண்டி மனிதன் வாழ்கிறான். ஆனால் அவனை மேலும் கூடுதலாக வதைக்கும் துன்பியல் நாடகம் எது? எல்லாக் காலத்திலும் இருந்ததும் இருப்பதும் இனி இருக்கப் போவதும் – படுக்கையறை நாடகம்தான்.”

இதைச் சொல்லும்போது வெற்றிப் புன்னகை பூத்தார். மிகவும் கடினமான ஒன்றை வென்ற மனிதனின், அல்லது நெடுநாள் தீராதிருந்த கடுவலியிலிருந்து திடீரென்று விடுபட்ட மனிதனின் அமைதியான புன்னகை சில சமயம் அவரிடம் தோன்றும். ஒவ்வொரு எண்ணமும் ஓர் உண்ணியைப் போல அவரது ஆன்மாவுக்குள் குடைகிறது. அதை உடனே பிய்த்து எறிந்துவிடுவார். அல்லது தனது இரத்தத்தை அது வயிறாரக் குடிக்க அனுமதிப்பார். குருதி பருகியதும் நிறைவாக அதுவே உதிர்ந்துவிடும்.

*  *  *

‘தந்தை செர்கியஸ்’ கதையில் செர்கியஸ் வீழ்ச்சியடையும் காட்சியின் வேறொரு வடிவத்தை சுலேருக்கும் எனக்கும் வாசித்துக் காட்டினார். இரக்கமற்ற காட்சி. சுலேர் உதட்டைப் பிதுக்கி, சங்கடத்துடன் நெளிந்தான்.

“என்ன ஆயிற்று? பிடிக்கவில்லையா?” என்று லியோ கேட்டார்.

“மிகவும் கொடூரமாக இருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்தைப் போல. அவள் அழுக்கான பெண்; மார்பகங்கள் தட்டையாக அப்பங்களைப் போல இருக்கின்றன; இன்னும் என்னென்னவோ. அவர் ஏன் அழகான, இயல்பான பெண்ணுடன் பாவம் செய்யவில்லை?”

“அப்படியென்றால் நியாயப்படுத்த முடியாத பாவமாகிவிடும். இப்போதோ அந்தப் பெண்ணின் மீதான இரக்கத்தால் அதை நியாயப்படுத்த முடிகிறது. இப்படியிருக்கும் அவளை யார் விரும்புவார்கள் என்ற விதமாக!”

“எனக்குப் புரியவில்லை…”

“உனக்குப் புரியாதவை நிறைய இருக்கின்றன, லியோவுஷ்கா. நீ சூட்சுமம் தெரிந்தவன் அல்ல…”

அப்போது அந்த்ரேய் ல்வோவிச்சின் மனைவி வந்தார். உரையாடல் தடைப்பட்டது. அவரும் சுலேரும் வெளியேறிச் சென்றதும், லியோ என்னிடம் சொன்னார்:

“எனக்குத் தெரிந்தவர்களிலேயே மிகவும் தூய்மையானவன் லியோபோல்ட் சுலேர். அவன் அப்படிப்பட்டவன். ஏதாவது தீங்கு செய்தால்கூட, யாரோ ஒருவர்மீது கொண்ட இரக்கத்தினால்தான் அதைச் செய்வான்.”

XXII

கடவுளையும் விவசாயிகளையும் பெண்களையும் பற்றிதான் அதிகம் பேசுகிறார். இலக்கியத்தைப் பற்றிப் பேசுவது அரிது; பேசினாலும் அது குறைவு. ஏதோ அது அவருக்குத் தொடர்பில்லாத ஒன்றைப்போல. பெண்களை அவர் தீராத எரிச்சலுடன் நோக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு பெண் கிட்டியோ, நடாஷா ரோஸ்டோவோ அல்லாதவளாக, அதாவது அவ்வளவு குறுகிய வரம்புக்குள் அடங்காதவளாக இருந்தால், அவளை நிந்திக்க அவர் விரும்புகிறார். இது தனக்குக் கிடைக்கக்கூடிய இன்பங்கள்  எல்லாவற்றையும் பெறாத ஆணின் எரிச்சலாக இருக்கலாம். அல்லது ‘உடலின் உந்துதல்களுக்கு, இழிதகைமைக்கு’ மாறான ஆன்மாவின் எரிச்சலாக இருக்கலாம். ஆனால் இது வெறுப்புதான். அன்னா கரேனினாவில் இருப்பதுபோலக் குளிர்ந்த வெறுப்பு.

ரூஸோவின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றி செகாவுடனும் யெல்பாத்யெவ்ஸ்கியுடனும் ஞாயிறன்று பேசும்போது, ‘இழிவேற்படுத்தும் உடலின் உந்துதல்கள்’ பற்றி நன்றாகப் பேசினார். அவர் சொன்னதை சுலேர் குறித்து வைத்தான். பிறகு காபி தயாரிக்கும்போது அந்தத் தாளை எரிசாராய விளக்கில் எரித்துவிட்டான். இதற்கு முன்பும் இப்சனைப் பற்றிய லியோவின் கருத்துகளை அவன் எரித்திருக்கிறான். திருமணச் சடங்குகளின் குறியீடுகள் பற்றிய ஓர் உரையாடல் குறிப்புகளையும் தொலைத்துவிட்டான். அந்த உரையாடலில், வி. வி. ரோசனோவின் சில கருத்துகளை ஏற்றுக்கொண்டு, பழைய பேகன் மரபுச் சாயலுள்ள பலவற்றை லியோ சொல்லியிருந்தார்.

XXIII

காலையில் ஃபியோடோசியாவிலிருந்து சில ‘ஸ்டுண்டிஸ்டுகள்’ டால்ஸ்டாயைப் பார்க்க வந்தார்கள். இன்று நாள் முழுவதும் விவசாயிகளைப் பற்றிப் பரவசத்துடன் பேசினார்.

மதிய உணவின்போது சொன்னார்:

“அவர்கள் இருவரும் நல்ல உடல்வலுவுடன் வந்தார்கள். ஒருவன் சொல்கிறான்: ‘சரி, அழைக்காமலேயே வந்துவிட்டோம்.’ மற்றவன் சொல்கிறான்: ‘கடவுள் கருணையால் அடிபடாமல் திரும்புவோம்.’”

குழந்தையைப் போல உடல் குலுங்கச் சிரித்தார்.

மதிய உணவிற்குப் பிறகு, உப்பரிகையில் நிற்கையில் கூறினார்:

“மக்களின் மொழியைப் புரிந்துகொள்ளும் திறனை விரைவில் முற்றிலுமாக இழந்துவிடுவோம். இப்போது நாம் ‘முன்னேற்றக் கோட்பாடு’, ‘வரலாற்றில் தனிமனிதனின் பங்கு’, ‘அறிவியலின் பரிணாமம்’ என்றெல்லாம் சொல்கிறோம். விவசாயியோ, ‘சாக்குக்குள் குத்தூசியை மறைத்துவைக்க முடியாது’ என்கிறான். உடனே நமது கோட்பாடுகளும் வரலாறுகளும் பரிணாமங்களும் பரிதாபமாகவும் வேடிக்கையாகவும் தோன்றுகின்றன. ஏனெனில் மக்களுக்கு அவை புரியாதவை; தேவையில்லாதவை. ஆனால் விவசாயி நம்மைவிட வலிமையானவன். வாழ்க்கையை இறுகப் பற்றிக்கொண்டிருப்பவன். அட்சூர் இனத்தவர்களுக்கு நேர்ந்தது நமக்கும் நேரலாம். அவர்களைப் பற்றி ஓர் அறிஞரிடம் இவ்வாறு சொல்லப்பட்டது:

“‘அட்சூர் மக்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆனால் அவர்களுடைய மொழியில் சில சொற்களை அறிந்த கிளி ஒன்று இங்கே இருக்கிறது.’”

XXIV

“உடலால் பெண் ஆணைவிட நேர்மையானவள். ஆனால் மனத்தால் அவள் பொய் சொல்கிறாள். பொய் சொல்லும்போது அவளே அதை நம்புவதில்லை. ரூஸோ பொய் சொன்னார்; தன் பொய்களைத் தானே நம்பவும் செய்தார்.”

XXV

“தான் நம்பாத ஒரு கொள்கைக்குச் சேவை செய்வதாக, பிறகு தன்னையும் பிறரையும் பழிவாங்கியபடி வாழ்வதாகத் தனது பித்துப் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றைத் தஸ்தயேவ்ஸ்கி சித்தரித்தார். அதில் தன்னைப் பற்றித்தான் எழுதினார். அதாவது, அதையே தன்னைப் பற்றியும் அவர் சொல்லியிருக்கலாம்.”

XXVI

“தேவாலய உச்சாடனத்தில் சில வாக்கியங்கள் புதிரானவை. வியப்பூட்டும் அளவுக்குத் தெளிவற்றவை. உதாரணமாக, ‘பூமியும் அதன் நிறைவும் கடவுளுடையவை’ என்ற சொற்களுக்கு என்ன பொருள்? அது புனித வேதத்தின் மொழியல்ல. பொதுமக்களுக்காகச் சொல்லப்படும் ஒருவகை அறிவியல் பொருள்முதல்வாதம்.”

“ஆனால் அந்த வரிக்கு நீங்களே ஓரிடத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறீர்களே” என்றான் சுலேர்.

“எத்தனையோ விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது… ‘விளக்கம் கத்தியின் கைப்பிடிவரை போவதில்லை.’”

தந்திரமான சிறு புன்னகை பூத்தார்.

XXVII

சிக்கலான, விஷமத்தனமான கேள்விகளைக் கேட்பதில் அவருக்கு விருப்பம்:

உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

உன் மனைவியை நேசிக்கிறாயா?

என் மகன் லியோவுக்குத் திறமை இருப்பதாக நினைக்கிறாயா?

சோஃபியா ஆந்தரேயெவ்னாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? [1]

ஒருமுறை கேட்டார்: “அலெக்சி மாக்சிமோவிச், உனக்கு என்னைப் பிடிக்குமா?”

இது ஒரு ‘போகதீரின்’[2] விஷமத்தனம். வாஸ்கா புஸ்லாயேவ் இளமையில் இப்படித்தான் குறும்புகள் செய்தான். குறும்புக்காரப் பயல். டால்ஸ்டாய் பரிசோதிக்கிறார். சண்டைக்குத் தயாராவதுபோல எப்போதும் எதையோ சோதித்துக் கொண்டிருக்கிறார். சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவர் பிசாசு. நானோ இன்னும் கைக்குழந்தை. அவர் என்னைச் சும்மா விட்டுவிட வேண்டும்.

XXVIII

அவருக்கு விவசாயி என்றாலே தோன்றுவது உழைப்பின் வாடைதானோ என்னவோ. எப்போதும் அதை உணர்கிறார். தன்னையறியாமலே அதைப் பற்றியே பேசுகிறார்.

ஜெனரல் கொர்னெட்டின் மனைவியை நான் அடிக்கும்படி ஆனதைப் பற்றி நேற்று மாலை லியோவிடம் சொன்னேன். கண்ணில் நீர் துளிர்க்கக் குலுங்கிச் சிரித்தார். விலாவில் வலியெடுத்து முனகினார். மெலிந்த கீச்சுக்குரலில் திரும்பத் திரும்பச் சொன்னார்:

“மண்வாரியாலா! புட்டத்தில் மண்வாரியால் அடித்தாயா? சரியாகப் புட்டத்திலேவா! மண்வாரியின் அகலமான சட்டகத்தாலா?”

சிறிது நேரத்திற்குப் பிறகு தீவிரமாகச் சொன்னார்:

“அப்படி அடித்ததே உன் பெருந்தன்மைதான். வேறொருவனாக இருந்திருந்தால் அவள் திமிருக்குத் தலையில் அடித்திருப்பான். உனது பெருந்தன்மை! அவள் உன்னை விரும்பினாள் என்பது உனக்குப் புரிந்ததா?”

“நினைவில்லை. புரிந்ததா என்றும் தெளிவில்லை.”

“என்ன சொல்கிறாய்! அது வெளிப்படையாகத் தெரிகிறதே. நிச்சயமாக அவள் உன்னை விரும்பினாள்.”

“அப்போது நான் அதற்காக வாழவில்லை.”

“நீ எதற்காக வாழ்ந்தாலும் அதில் வேறுபாடில்லை. நீ பெண்களை வசப்படுத்தும் ஆளல்ல என்று தெரிகிறது. உன் இடத்தில் வேறொருவன் இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திருப்பான். நிலப்பிரபு ஆகியிருப்பான். இறுதியில் அவளுடன் சேர்ந்து ஜோடிக் குடிகாரனாக முடிந்திருப்பான்.”

சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

“நீ வேடிக்கையானவன்… மிக வேடிக்கையானவன். இதைக் கேட்டு சுணங்காதே. நீ வன்மம் கொண்டவனாக மாறியிருக்க வாய்ப்பிருந்தும், இன்னும் நல்லியத்துடன் இருப்பது அதிவிசித்திரமாக இருக்கிறது… ஆம், நீ வன்மவாதியாக மாறியிருக்க வந்த வாய்ப்பு… ஆனால் நீ வலிமையானவன்… இதுவே நல்லது…”

மீண்டும் சற்று மௌனத்திற்குப் பிறகு யோசனையுடன் சேர்த்தார்:

“உன் மனத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மிகவும் சிக்கலான மனம். ஆனால் உன் இதயத்தில் விவேகம் இருக்கிறது… ஆம், விவேகமுள்ள இதயம்.”

கார்க்கியின் குறிப்பு: கசானில் வசித்தபோது ஜெனரல் கொர்னெட்டின் மனைவியிடம் வாயிற்காவலனாகவும் தோட்டக்காரனாகவும் வேலைக்குச் சேர்ந்தேன். அவள் பிரெஞ்சுக்காரி.   ஒரு ஜெனரலின் விதவை. இளமை விளிம்பில் பூரித்த பருத்த உடல். சிறுமியினதைப் போல் சிறிய பாதங்கள். ஈர்க்கும் அவள் கண்கள் வியத்தகு அழகு! நிலையற்று அவை அலையும். அவ்விழிகளில் எப்போதும் பேராவல். திருமணத்திற்கு முன்பு அவள் கூடை வியாபாரியாகவோ சமையல்காரியாகவோ இருந்திருக்கலாம். ஒருவேளை பரத்தையாகவும் இருந்திருக்கலாம்!

காலையில் எழுந்தவுடனே குடித்துவிடுவாள். உள்ளாடைக்கு மேல் ஆரஞ்சு நிற அங்கியை அணிந்துகொண்டு முற்றத்திற்கோ தோட்டத்திற்கோ வருவாள். கால்களில் சிவப்பு தாத்தாரியச் செருப்புகள். மொராக்கோ தோலால் செய்தவை. அலட்சியமாக வாரப்பட்ட பிடரிபோல அடர்ந்த அந்தக் கூந்தல் சிவந்த கன்னங்களையும் தோள்களையும் சுற்றிப் படிந்திருக்கும். இளம் சூனியக்காரி! பிரெஞ்சுப் பாடல்களை முணுமுணுத்தபடி தோட்டத்தில் நடப்பாள். நான் வேலை செய்வதைப் பார்ப்பாள். அவ்வப்போது சமையலறைச் சன்னலிடம் சென்று அழைப்பாள்:

“பாலின், எனக்கு ஏதாவது கொடு.”

‘ஏதாவது’ என்பது எப்போதும் ஒரே பானம்தான்: பனிக்கட்டிகள் மிதக்கும் ஒரு கோப்பை ஒயின்.

அவளுடைய வீட்டின் அடித்தளத்தின் மறுபகுதியில் மூன்று குமரிகள் வசித்தார்கள். அவர்கள் டி. ஜி. என்ற இளவரசிகள். தாய் இறந்துவிட்டார். இராணுவத் தளவாடத் துறை ஜெனரலான தந்தை வேறெங்கோ சென்றுவிட்டார். ஜெனரல் கொர்னெட்டின் விதவைக்கு அந்தப் பெண்களைப் பிடிக்கவில்லை. அவர்களை வெளியேற்ற முனைந்தாள். சகலவிதங்களிலும் அவமதித்தாள். அவளுடைய ரஷ்யப் பேச்சுமொழி தடுமாறும். ஆனால் கெட்டிக்காரப் பாரவண்டிக்காரனைப் போல படுமோசமாகக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவாள். அந்த அப்பாவிப் பெண்களிடம் அவள் நடந்துகொண்ட விதம் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவர்கள் பயந்து போய் சோகமாக உலவினார்கள். பாதுகாக்க யாருமற்றவர்களாகவும் தெரிந்தார்கள்.

ஒருநாள் பிற்பகலில் அந்தப் பெண்களில் இருவர் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். ஜெனரலின் விதவை திடீரென்று வந்தாள். வழக்கம்போலக் குடித்திருந்தாள். தோட்டத்திலிருந்து அவர்களை விரட்டுவதற்காகக் கத்தினாள். அவர்கள் அமைதியாக வெளியே செல்லத் தொடங்கினார்கள். ஆனால் விதவை தோட்ட நுழைவாயிலில் நின்று, அடைப்பானைப் போலத் தனது பெருஉடலால் வழியை அடைத்தாள். வண்டிக்காரன் வசைகளை வீசினாள். சரமாரியாக அவர்களைத் திட்டினாள். நான் இடைப்பட்டேன். ஏசுவதை நிறுத்திவிட்டு அந்தப் பெண்களை தோட்டத்திற்கு வெளியே செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன். அவள் கத்தினாள்: “உன்னை எனக்குத் தெரியும்! இரவில் சன்னல் வழியாக அவர்கள் அறைக்குள்ளே நுழைகிறாய்!”

கோபத்தில் அவளுடைய தோள்களைப் பிடித்து நுழைவாயிலிலிருந்து விலக்கித் தள்ளினேன். ஆனால் அவள் திமிறி விடுபட்டு, என்னை எதிர்த்தாள். சட்டென மேலங்கியை அவிழ்த்து, உள்ளாடையைத் தூக்கியபடி கத்தினாள்:

“இந்தப் பெட்டை எலிகளைவிட நான் அழகிதான்!”

அப்போது நிதானம் இழந்தேன். பொறுமை ஓடி விட்டது. அவளது கழுத்தைப் பிடித்துத் திருப்பினேன். வேலை செய்து கொண்டிருந்த மண்வாரியால் புட்டத்தில் அடித்தேன். அவள் நுழைவாயிலிலிருந்து துள்ளிச்சாடி முற்றத்தின் குறுக்கே ஓடினாள். வியப்பும் திகைப்புமாக மூன்று முறை கத்தினாள்: “ஓ..! ஓ..! ஓ..!”

பிறகு அவளது நம்பிக்கைக்குரிய பாலினிடமிருந்து என் கடவுச்சீட்டை வாங்கினேன். பாலினும் குடிகாரிதான். ஆனால் தந்திரசாலி, சூழ்ச்சிக்காரி. என் மூட்டையைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். கையில் சிவப்புச் சால்வையுடன் ஜன்னலருகே நின்றபடி ஜெனரலின் விதவை கத்தினாள்:

“போலீஸை அழைக்க மாட்டேன்… பரவாயில்லை, சொன்னால் கேள்! திரும்பி வா! பயப்படாதே…”

XXIX

நான் அவரிடம் கேட்டேன்:

“மருத்துவர்கள் ஆயிர நூறாயிரக்கணக்கில் மக்களை அழித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று போஸ்னிஷேவ்[3] சொல்கிறாரே, அதை நீங்கள் ஏற்கிறீர்களா?”

“அதை அறிந்துகொள்ள அவ்வளவு ஆர்வமா?”

“ அதி ஆர்வம்.”

“அப்படியானால் சொல்ல மாட்டேன்.”

விரல்களை விளையாட்டாக அசைத்தபடி புன்னகைத்தார்.

அவரது கதைகளில் ஒன்றில், கிராமத்துப் போலிக் கால்நடை மருத்துவரையும் மனிதனுக்கான மருத்துவம் பயின்றவரையும் ஒப்பிட்டிருப்பது நினைவிருக்கிறது:

“‘கில்சாக்’, ‘பொட்செட்னி’, ‘இரத்தம் வடித்தல்’[4] என்ற சொற்களுக்கும், ‘நரம்புகள்’, ‘வாதநோய்’, ‘உயிரினங்கள்’ போன்ற சொற்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?”

ஜென்னர், பெஹ்ரிங், பாஸ்டர் ஆகியோருக்குப் பிறகுதான் இது எழுதப்பட்டது.

என்னவொரு விதண்டாவாதம்!

XXX

சீட்டு விளையாடுவதில் அவருக்குப்  பெருவிருப்பம் இருப்பது எத்தனை விசித்திரமானது! பேராவலுடன் வெறியோடு விளையாடுகிறார். சீட்டுகளை எடுக்கும்போது அவரது கையில் பதற்றம் தெரிகிறது. உயிரற்ற அட்டைச் சீட்டுகளுக்குப் பதிலாக உயிருள்ள பறவைகளைப் பிடித்திருப்பதுபோல!

XXXI

“டிக்கன்ஸ் மிகவும் அறிவார்ந்த ஒன்றைச் சொன்னார்: ‘கடைசிவரை துணிவுடன் அதைக் காக்க வேண்டும் என்ற தெளிவான நிபந்தனையுடன்தான் வாழ்க்கை நமக்கு அளிக்கப்படுகிறது.’ மொத்தத்தில் அவர் உணர்ச்சிவசப்படுபவர்; வளவளவென்று பேசுபவர்; அவ்வளவு அறிவுக்கூர்மை இல்லாத எழுத்தாளர். ஆனால் வேறு யாருக்கும் தெரியாத அளவுக்கு நாவலைக் கட்டமைக்க அவருக்குத் தெரிந்திருந்தது. நிச்சயமாக பால்சாக்கைவிட நன்றாகத் தெரிந்திருந்தது. யாரோ சொன்னார்கள்: ‘நூல்கள் எழுதும் பேரார்வம் பலருக்கு இருக்கிறது. எழுதிய பிறகு அவற்றுக்காக வெட்கப்படுபவர்களோ சிலர்தான்.’ பால்சாக் வெட்கப்படவில்லை. டிக்கன்ஸும் வெட்கப்படவில்லை. இருவருமே நிறைய மோசமான நூல்களை எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் பால்சாக் ஒரு மேதை! அல்லது, மேதைமை என்றல்லாமல் வேறு எப்படியும் அழைக்க முடியாத ஒன்று…”

XXXIa

[டிகோமிரோவின் நான் ஏன் புரட்சியாளனாக இருப்பதை நிறுத்தினேன் என்ற நூலை யாரோ கொண்டுவந்தார்கள். லியோ மேசையிலிருந்து அதை எடுத்துக் காற்றில் ஆட்டியபடி சொன்னார்:

“அரசியல் கொலையைப் பற்றி இதில் அவர் சொல்வது நன்றாக இருக்கிறது. அந்தக் கொலைத் தீர்வில் தெளிவான கருத்து எதுவும் இல்லை என்கிறார். வெறிபிடித்த கொலையாளி ஒருவன் சொல்வதுபோல, அதன் பின்னால் உள்ள கருத்து தனி ஒருவனின் அரசின்மைவாதத் தனியதிகாரமே. சமூகத்தையும் மனிதகுலத்தையும் இகழ்வதாக மட்டுமே அது இருக்க முடியும். அது உண்மை. ஆனால் ‘அரசின்மைவாதத் தனியதிகாரம்’ என்பது கருத்துப் பிசகு. அது ‘மன்னராட்சித் தனியதிகாரம்’ என்றிருக்க வேண்டும். அதில் உண்மையான கருத்து அதுவே. எல்லாப் பயங்கரவாதிகளும் அதில் இடறுவார்கள் – நேர்மையானவர்களைச் சொல்கிறேன். இயல்பிலேயே கொலை செய்வதை விரும்புகிறவன் இடற மாட்டான். அவன் இடறுவதற்கு எதுவும் இல்லை. அவன் வெறும் கொலையாளி. தற்செயலாகத்தான் பயங்கரவாதி ஆகியிருக்கிறான்.”]

XXXII

சில சமயம் வோல்கா வட்டாரப் போதகரைப் போலத் தற்பெருமையும் சகிப்பின்மையும் கொண்டவராகத் தெரிகிறார். இந்த உலகின் தேவ மணியோசையாக இருப்பவரிடம் இது பெருமுரணாக இருக்கிறது. நேற்று என்னிடம் சொன்னார்:

“உன்னைவிட என்னிடம் விவசாயியின் இயல்பு அதிகம். ஒரு விவசாயியைப் போல என்னால் இன்னும் நன்றாக உணர முடிகிறது.”

கடவுளே! இதற்காக அவர் பெருமைப்படக் கூடாது. கூடவே கூடாது!

XXXIII

எனது அடியாழத்தில் (The Lower Depths) நாடகத்தின் சில காட்சிகளை அவருக்கு வாசித்துக் காட்டினேன். கவனமாகக் கேட்டார். பிறகு வினவினார்:

“இதை ஏன் எழுதுகிறாய்?”

என்னால் முடிந்தவரை விளக்கினேன்.

“சேவலைப் போல எல்லாவற்றின் மீதும் நீ எப்போதும் பாய்வது தெரிகிறது. அதோடு, எல்லாப் பள்ளங்களையும் விரிசல்களையும் உன் சொந்த வண்ணத்தால் பூசிவிட விரும்புகிறாய். ஆண்டர்சன் சொன்னது நினைவிருக்கிறதா? ‘தங்கமுலாம் உதிர்ந்துவிடும்; பன்றித்தோல்தான் மிஞ்சும்.’ நமது விவசாயிகள் சொல்வதைப் போல, ‘எல்லாம் கடந்து போகும்; உண்மை மட்டுமே நிலைக்கும்.’ நீ பூசி மெழுகாமல் இருப்பதே நல்லது. இல்லாவிட்டால் பிறகு நீயே அதற்காக வருந்துவாய்.

“மீண்டும் சொல்கிறேன், உன் மொழி சகல வித்தைகளுடனும் மிகத் தேர்ச்சியாக இருக்கிறது. அது நல்லதல்ல. இன்னும் எளிமையாக எழுத வேண்டும். மக்கள் எளிமையாகப் பேசுகிறார்கள். சில சமயம் கோர்வையின்றிக்கூடப் பேசுகிறார்கள். அது நல்லதுதான். ‘நான்கு எப்போதும் மூன்றைவிடப் பெரியது என்றால், மூன்றில் ஒரு பங்கு மட்டும் எப்படி நான்கில் ஒரு பங்கைவிடப் பெரிதாகிறது?’ என்று நாடகத்தில் ஒரு படித்த இளம்பெண் கேட்டாளே, அப்படி ஒரு விவசாயி கேட்பதில்லை. தயவுசெய்து வித்தைகள் வேண்டாம்.”

எரிச்சலுடன் பேசினார். நான் வாசித்தவை அவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சிறிய மௌனத்திற்குப் பிறகு, என் தலைக்கு மேலே பார்த்தபடி இருண்ட குரலில் சொன்னார்:

“உன் கிழவன் பாத்திரத்தின்மீது பரிவு ஏற்படவில்லை. அவனுடைய நல்ல குணத்தை நம்ப முடியவில்லை. நடிகன் பாத்திரம் சரியாக வந்திருக்கிறது. நன்றாக இருக்கிறது. ஞானத்தின் கனிகள் (Fruits of Enlightenment) தெரியுமா? அதில் வரும் என் சமையல்காரன் உன் நடிகனைப் போன்றவன். நாடகங்கள் எழுதுவது கடினம். ஆனால் உன் பரத்தைப் பெண் நன்றாக இருக்கிறாள். அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களில் பலர் உனக்குப் பழக்கமா?”

“முன்பொரு காலத்தில்…”

“ஆம், அது தெரிகிறது. உண்மை எப்போதும் தன்னைக் காட்டிக்கொள்ளும். நீ சொல்வதில் அதிகமும் உன்னிடமிருந்தே வருகின்றன. அதனால்தான் உன் எழுத்தில் தனித்தன்மையுள்ள கதைமாந்தர் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் ஒரே முகம்தான் இருக்கிறது. நீ பெண்களைப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அவர்களை உன்னால் சரியாக உருவாக்க முடியவில்லை. அவர்கள் நினைவில் நிற்பதில்லை…”

அப்போது ஏ.எல்.லின் மனைவி உள்ளே வந்து தேநீர் அருந்த அழைத்தார். உரையாடலை முடிப்பதில் மகிழ்ச்சி அடைந்தவரைப் போல, அவர் விரைவாக எழுந்து வெளியே சென்றார்.

XXXIV

“நீ கண்டதிலேயே மிகவும் பயங்கரமான கனவு எது?” என்று டால்ஸ்டாய் கேட்டார்.

எனக்குக் கனவுகள் வருவது அரிது. வந்தாலும் அவை தெளிவாக நினைவில் நிற்பதில்லை. ஆனால் இரண்டு கனவுகள் மட்டும் நினைவில் தங்கியிருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் அவை நினைவில் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஒருமுறை வானம் நோய்ப்புண்கள் படர்ந்து அழுகி, பசுமஞ்சள் நிறத்தில் இருப்பதாகக் கனவு கண்டேன். அதிலிருந்த நட்சத்திரங்கள் உருண்டையாகவும் தட்டையாகவும் இருந்தன. கதிர்களில்லை; ஒளியில்லை. நோயாளியின் தோலிலிருக்கும் புண்களின் பொருக்குகளைப் போலிருந்தன. அழுகிய அந்த வானத்தின் குறுக்கே, கிளைபிரியும் செம்மின்னல் ஒன்று பாம்பைப் போல சரேலென நழுவியது. அது ஒரு நட்சத்திரத்தைத் தொட்டதும், அந்த நட்சத்திரம் பந்துபோல வீங்கியது. சத்தமின்றி வெடித்தது. புகையின் சாயலில் சிறிய கரும்புள்ளி ஒன்றை விட்டுச்சென்றது. பிறகு அந்தப் புள்ளியும் மங்கி வெளிர்வானில் விரைந்து மறைந்தது. அப்படி ஒளிர்மீன்கள் ஒவ்வொன்றாக வெடித்து அழிந்தன. வானம் மேலும் இருண்டு, கோரமாகி, இறுதியில் மேல்நோக்கிச் சுழன்றது. குமிழியிட்டது. வெடித்துச் சிதறி, குளிர்ந்த ஜெல்லியைப் போல என் தலையில் விழத் தொடங்கியது. அந்தத் துண்டுகளுக்கு இடைப்பட்ட இடைவெளிகளில் இரும்பைப் போலப் பளபளக்கும் கருமை தெரிந்தது.

லியோ சொன்னார்:

“இது ஓர் அறிவியல் நூலிலிருந்து வந்திருக்கிறது. வானியலைப் பற்றி எதையாவது படித்திருப்பாய். அதனால்தான் இந்தக் கொடுங்கனவு. மற்றக் கனவு?”

மற்றக் கனவு:

காகிதத் தாளைப் போல வழவழப்பான வெண்பனிச் சமவெளி. எங்கும் சிறு மேடு கூட இல்லை. மரமும் புதரும் இல்லை. பனிக்குள்ளிருந்து சில குச்சிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தன. அவையும் அரிதாகவே தெரிந்தன. உயிரற்ற அந்தப் பாழ்நிலத்தின் பனிமீது, அடிவானிலிருந்து தொடுவான்வரை, தெளிவாகப் புலப்படாத சாலையொன்று மஞ்சள் பட்டையாக நீண்டிருந்தது. அந்தச் சாலையில், சாம்பல் நிற ஃபெல்ட் கம்பளியால் ஆன உயரமான புதைகாலணிகள் ஒரு ஜோடி மெதுவாக நடந்துசென்றன. உள்ளே கால்கள் ஏதுமில்லை.

ஓநாய் மனிதனுடையவை போன்ற தனது அடர்ந்த புருவங்களை அவர் உயர்த்தினார். என்னைக் கூர்ந்து பார்த்துச் சற்று நேரம் யோசித்தார்.

“பயங்கரமாக இருக்கிறது. உண்மையிலேயே இப்படிக் கனவு கண்டாயா? நீயாகப் புனையவில்லையே? ஆனால் இதிலும் ஏதோ புனைவுத்தன்மை இருக்கிறது.”

திடீரென்று கோபமடைந்தார். முழங்காலில் விரலால் தட்டியபடி, எரிச்சலுடன் கடுமையான குரலில் சொன்னார்:

“ஆனால் நீ குடிப்பவன் அல்லவே? ஒருபோதும் அதிகம் குடித்திருப்பாய் என்று தோன்றவில்லை. இருந்தும் இந்தக் கனவுகளில் ஏதோ போதையேறி இருக்கிறது. ஹோஃப்மான் என்று ஒரு ஜெர்மானிய எழுத்தாளர் இருந்தார். சீட்டு விளையாட்டு மேசைகள் தெருவில் ஓடுவதாகவும் இன்னும் அதுபோலவும் கனவு கண்டார். ஆனால் அவர் குடிகாரர் – நமது எழுத்தறிவுள்ள வண்டிக்காரர்கள் சொல்வதைப் போல அவர் ஒரு ‘ஆல்கஹோலிக்.’ வெறும் புதைகாலணிகள் தாமே நடந்துசெல்வது உண்மையிலேயே பயங்கரம். நீயாகப் புனைந்திருந்தாலும்கூட நன்றாக இருக்கிறது. பயங்கரம்!”

திடீரென்று நீளப் புன்னகைத்தார். கன்ன எலும்புகள்கூட ஒளிர்ந்தன.

“இப்படிக் கற்பனை செய்து பார்: கலால் வரித்துறை எழுத்தர்கள் மூன்று பகலிரவுகள் இடைவிடாமல் ஒரு மேஜை மேல் விஸ்ட் விளையாடுகிறார்கள். மேசையால் தாங்க முடியவில்லை. திடீரென்று த்வெர்ஸ்காயா தெருவில், ஒரு சீட்டாட்ட மேஜை தனது வளைந்த கால்களால் ஓடுகிறது. அதன் பலகைகள் படபடக்கின்றன. சாக்குப்பொடி பறக்கிறது. பச்சைத் துணியில் இருக்கும் எண்களைக்கூட இன்னும் பார்க்க முடிகிறது…”

சிரித்தார். அவர் காட்டிய என் மீதான நம்பிக்கை இன்மையால் நான் சற்று வாடியிருப்பதை ஒருவேளை கவனித்திருக்கலாம். பிறகு சொன்னார்:

“உன் கனவுகள் புனைவுத்தன்மை கொண்டவை என்று சொன்னதால் கவலையா? வருத்தப்படாதே. சில சமயம் ஒருவன் தனக்கே தெரியாமல் எதையாவது புனைந்துவிடுகிறான் என்பது எனக்குத் தெரியும். நம்ப முடியாத ஒன்றை, நம்பவே முடியாத ஒன்றைப் புனைவான். பிறகு, அதைக் கனவு கண்டதாகவும் தானாகப் புனையவே இல்லை என்றும் நினைத்துக் கொள்வான்.

“வயதான நிலப்பிரபு ஒருவர் சொன்ன கதை ஒன்று இருக்கிறது. அவர் ஒரு காட்டிற்குள் நடந்துசென்று, அதிலிருந்து புல்வெளிக்கு வந்ததாகக் கனவு கண்டார். புல்வெளியில் இரண்டு குன்றுகளைப் பார்த்தார். அவை திடீரென்று ஒரு பெண்ணின் மார்பகங்களாக மாறின. அவற்றுக்கு இடையே கரிய முகமொன்று எழுந்தது. அதில் கண்களுக்குப் பதிலாக வெண்ணிறப் புள்ளிகளைப் போல இரண்டு நிலவுகள் இருந்தன. தான் அந்தப் பெண்ணின் கால்களுக்கு இடையே நிற்பதாகக் கிழவர் கனவு கண்டார். அவருக்கு முன்னால் ஆழமான இருண்ட பள்ளத்தாக்கு. அது அவரை உள்ளிழுத்தது. அந்தக் கனவிற்குப் பிறகு அவரது முடியில் நரையேறியது. கைகள் நடுங்கமுற்றன. நீர் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்த மருத்துவர் க்னைப்பிடம் சென்றார். ஆனால் உண்மையில், அதுபோல ஏதோவொன்றை அவர் பார்த்திருக்க வேண்டும். ஒழுக்கங்கெட்ட மனிதர் அவர்.”

லியோ என் தோளில் தட்டினார்.

“ஆனால் நீ குடிகாரனுமில்லை; ஒழுக்கக்கேடனுமில்லை. உனக்கு எப்படி இப்படிக் கனவுகள் வருகின்றன?”

“தெரியவில்லை.”

“நம்மைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது.”

பெருமூச்சு விட்டார். கண்களை இடுக்கிச் சிறிது யோசித்தார். பிறகு தாழ்ந்த குரலில் தொடர்ந்தார்:

“நமக்கு எதுவுமே தெரியாது.”

இன்று மாலை நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது, என் கையைப் பிடித்துச் சொன்னார்:

“புதை காலணிகள் நடந்துசெல்கின்றன…. பயங்கரம், இல்லையா? முற்றிலும் காலியாக… கால்களின்றி… தியொப்… தியொப்… பனி நறநறக்கிறது. ஆம், நன்றாக இருக்கிறது. ஆனால் நீ புனைவாற்றல் மிக்கவன். ஆமாம். கோபப்படாதே. சினம் மோசமானது. உனக்குத் தடையாக இருக்கும்.”

அவரைவிட நான் ஒன்றும் அதிகப் புனைவாற்றல் உள்ளவன் அல்லன்; கதை விடுபவன் அல்லன். அவர் சொன்ன இனிமையான சிறுசிறு சொற்களைத் தாண்டி, அந்த நேரத்தில் அவரை இரக்கமற்ற பகுத்தறிவாளர் என்றே கருதினேன்.

XXXV

மனிதர்கள் வேறுவிதமாகச் சிந்தித்தும் உணர்ந்தும் வாழ்கிற, உறவுகளும் மொழியும் வேறுபட்டிருக்கும் தொலைதூர நாடொன்றிலிருந்து லியோ இப்போதுதான் வந்திருப்பதுபோலச் சில சமயம் தோன்றுகிறது. வேறேதோ மண்ணின் தூசி படிந்தவராக, நரைத்துச் சோர்ந்து ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார். அந்நியரைப் போல, பேச முடியாத மனிதரைப் போல எல்லாவற்றையும் கவனமாகப் பார்க்கிறார்.

நேற்று இரவு உணவிற்கு முன்பு வரவேற்பறைக்கு வந்தபோது அப்படித்தான் இருந்தார். அவரது எண்ணங்கள் தொலைவில் மிதந்தன. சோபாவில் அமர்ந்தார். சற்று மௌனத்திற்குப் பிறகு, மெதுவாக அசைந்து, உள்ளங்கையை முழங்காலில் தேய்த்தபடி முகத்தைச் சுளித்தார். திடீரென்று சொன்னார்:

“ஆனாலும் அதுவே எல்லாமாக இல்லை எல்லாமாக இல்லை.”

இஸ்திரிப்பெட்டியைப் போல மந்தமான முட்டாளாக எப்போதும் இருக்கும் ஒருவர் கேட்டார் “என்ன சொல்கிறீர்கள்?”

கேட்டவரை உற்றுப் பார்த்தார். பிறகு முன்புறம் சாய்ந்து, மருத்துவர் நிகிடினுடனும் யெல்பாத்யெவ்ஸ்கியுடனும் நான் அமர்ந்திருந்த உப்பரிகையைப் பார்த்துக் கேட்டார் “எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?”

“பிளேவ்.”

“பிளேவ்… பிளேவ்…”

சற்று நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெயரை முதன்முதலாகக் கேட்பவரைப் போல யோசனையுடன் திரும்பச் சொன்னார். பிறகு பறவையைப் போல உடலைச் சிலிர்த்துக்கொண்டு, மெலிந்த புன்னகையுடன் சொன்னார்:

“இன்று அதிகாலையிலிருந்து ஒரு முட்டாள்தனமான விஷயம் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கல்லறை ஒன்றில் இந்த வாசகத்தைப் பார்த்ததாக யாரோ ஒருமுறை என்னிடம் சொன்னார்கள்:

‘இந்தக் கல்லின்கீழ் இவான் எகோரியேவ் ஓய்வெடுக்கிறார்;

தொழிலால் தோல் பதனிடுபவர். எப்போதும் தோல்களை ஊறவைப்பவர்.

அவரது உழைப்பு நேர்மையானது; இதயம் இனியது. இருந்தும், இதோ அவர் மறைந்தார். தன் தொழிலை மனைவியிடம் விட்டுச்சென்றார்.

அவர் முதுமை அடையவில்லை; இருந்திருந்தால் மேலும் எவ்வளவோ வேலை செய்திருக்கலாம்.

ஆனால் பணிப் பாடுகளின் வாரத்தில், வெள்ளிக்கும் சனிக்கும் இடைப்பட்ட இரவில்,

கடவுள் அவரைச் சொர்க்க வாழ்வுக்கு அழைத்துக்கொண்டார்…’

“அப்படியோ வேறேதோ…”

அவர் அமைதியானார். பிறகு தலையசைத்து மெதுவாகப் புன்னகைத்துச் சொன்னார்:

“மனித முட்டாள்தனம் தீங்கற்றதாக இருக்கும்போது, அதில் நெஞ்சம் தொடும் ஏதோவொன்று இருக்கிறது. அழகான ஒன்றும்கூட… அது எப்போதுமே இருக்கிறது.”

இரவு உணவிற்கு எங்களை அழைத்தார்கள்.

XXXVI

“மனிதர்கள் குடிபோதையில் இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் லேசாகப் போதை ஏறியதும் சுவாரசியமாக மாறும் சிலரை எனக்குத் தெரியும். போதையற்ற நிலையில் அவர்களிடம் இயல்பாக இல்லாத நகைச்சுவை, சிந்தனையின் அழகு, சுறுசுறுப்பு, மொழிவளம் ஆகியவை அப்போது வெளிப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒயினை வாழ்த்த நான் தயாராக இருக்கிறேன்.”

ஒருமுறை த்வெர்ஸ்காயா தெருவில் லியோவுடன் நடந்துசென்றதை சுலேர் சொல்கிறான். தொலைவில் பாதுகாவல் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களை டால்ஸ்டாய் கவனித்தார். அவர்களுடைய சீருடை அணிகலன்களின் உலோகம் வெயிலில் மின்னியது. காலணிகளில் பொருத்திய குதிமுள்ளுகள் ஒலித்தன. இருவரும் ஒரே மனிதனைப் போல ஒரே தாளத்தில் நடந்தார்கள். வலிமையும் இளமையும் தரும் தன்னம்பிக்கை அவர்களுடைய முகங்களிலும் ஒளிர்ந்தது.

அவர்களைப் பார்த்து டால்ஸ்டாய் முணுமுணுக்கத் தொடங்கினார்:

“என்ன தோரணை! முட்டாள்கள்! சவுக்கால் பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்களைப் போல…”

ஆனால் அந்த வீரர்கள் அவருக்கு நேராக வந்ததும் அவர் நின்றுவிட்டார். அன்புடன் அவர்களைக் கண்களால் பின்தொடர்ந்தபடி உற்சாகமாகச் சொன்னார்:

“எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்! பழைய ரோமானியர்களைப் போல, இல்லையா லியோவுஷ்கா? இந்த வலிமையும் அழகும்! கடவுளே! மனிதன் அழகாக இருப்பது எவ்வளவு வசீகரமாக இருக்கிறது. எவ்வளவு வசீகரம்!”

[1] டால்ஸ்டாயின் மனைவி.

[2] ரஷ்ய வீர கதைகளில் வரும் வீரன்; துணிச்சலானவன். ஆனால் குழந்தையைப் போல முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவன்.

[3] கிராய்ட்சர் சொனாட்டா படைப்பில் வரும் கதாபாத்திரம்.

[4] குதிரைகளின் நோய்களைக் குறிப்பிடப் போலிக் கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்தும் சொற்கள்.

தமிழில்: அ.ராஜேந்திரன்

குறிப்பு: முன்னுரையில் கார்க்கி குறிப்பிட்ட எழுதி முடிவுறாத கடிதம் இங்கே இணைக்கப்படவில்லை. அது தனியாக வெளியாகும்.

மாக்சிம் கார்க்கி

மாக்சிம் கார்க்கி

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (1868 – 1936) ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றான தாய் நாவலை எழுதியவர்.

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

Font size
Line spacing
Background