புத்தக அறிமுகம்

சயந்தனின் பூரணம், ஓர் அறிமுகம்

போரும் புலப்பெயர்வும் மனித உறவுகளிலும் நினைவுகளிலும் அறவுணர்விலும் நிகழ்த்தும் மாற்றங்களைச் சயந்தனின் ‘பூரணம்’ சிறுகதைத் தொகுப்பு நெருங்கிப் பார்க்க முனைகிறது. உயிர்பிழைக்கும் அவசரத்தில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகள், அவற்றுக்குப் பிறகு அவர்களைத் தொடரும் குற்றவுணர்வு, எதிர்பாராத இடங்களில் கிடைக்கும் அரவணைப்பு ஆகியவற்றால் உருவாகும் இக்கதைகளின் உலகத்தில் மனிதர்கள் தங்கள் அன்றாட விருப்பங்களையும் பலவீனங்களையும் சுமந்தபடியே வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றிய நமது முதல் மதிப்பீடு, பிறகு அவர்களுடைய வாழ்வை நெருங்கியறியும்போது மாற்றமடைகிறது. இந்த மாற்றத்தை வாசிப்பின் அனுபவமாக்கும் ஆறு சிறுகதைகள் ‘பூரணம்’ தொகுப்பாக வெளியாகின்றன.  

போர்க்களம், அகதிமுகாம், விசாரணைக்கூடம், நீதிமன்றம் என இக்கதைகளின் வெளிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மனித உடல் தன் தேவைகளுடனும் இயலாமைகளுடனும் இருக்கிறது. பசி எடுக்கிறது. தூங்க விரும்புகிறது. ஒரு தொடுகைக்காக ஏங்குகிறது. உயிர் பிழைக்க எதையாவது பற்றிக்கொள்ளத் துடிக்கிறது. இந்த எளிய உண்மைகளோடு அதிகாரமும் வன்முறையும் மோதும்போது உருவாகும் சிக்கல்களைச் சயந்தன் நெருங்கிப் பார்க்கிறார். கருத்தாகச் சொல்லிவிடக்கூடிய ஒன்றை, ஒரு மனிதருடன் சிறிது நேரம் வாழ்ந்த அனுபவமாக மாற்றும் கதைமொழியே இத்தொகுப்பின் பலம்.

‘இரண்டாவது கடிதம்’, ஊரிலிருந்து வரும் கடிதத்தின் நெருக்கத்தையும் அகதி முகாமை எரித்துவிடுவதாக வரும் மிரட்டலையும் ஒரே வாழ்விற்குள் நிறுத்துகிறது. குறும்பும் துடுக்கும் கொண்ட திருச்சிற்றம்பலம், சந்திரனின் பயத்தைச் சீண்டிக்கொண்டே இருப்பவன், வன்முறையை எதிர்கொண்ட பிறகே அச்சத்தின் உடல்மொழியை அறிகிறான். வரதன் மாஸ்டரின் நாடுகடத்தலும் பண்ணைக் கிழவனின் அக்கறையும் அகதி வாழ்வின் முரண்பட்ட அனுபவங்கள். கடலற்ற நாட்டில் கடலாகப் பெருகும் இருள், மாட்டுத் தொழுவத்தின் மணம் என விரியும் விபரங்கள் வழியே ஓர் இளைஞனின் உலகம் நம்மைச் சூழ்கிறது. அவன் தேர்ந்தெடுக்கும் தற்காப்பின் வழியிலேயே அடையாளம் குறித்த கதையின் நெருக்கடியும் கூர்மையடைகிறது.

‘பூரணம்’ கதையில் வைகறையின் சொல்லுக்கும் மௌனத்திற்கும் இடையில் அவளுடைய துயரம் படிந்திருக்கிறது. பதுங்கு அகழியின் இருளில் நிகழ்ந்தது, குழந்தையின் தந்தை யார் என்ற கேள்வியால் அவளை மூடுகிறது. அவளைக் கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து காப்பாற்ற உதவும் கதிர் அண்ணனே, சனங்கள் வெளியேற முயலும்போது அவர்களைத் தடுக்கிறவனாகவும் இருக்கிறான். இத்தகைய முரண்பாடுகளை வைகறையின் அணுக்கமான பார்வைக்குள் வைத்தே கதை நகர்கிறது. ஒரு புகைப்படத்தைச் சுற்றி உருவாகும் உறவில் வைகறையின் பாதுகாப்புக்கான தேவையும் பூரணக் கிழவியின் இழப்பும் சந்திக்கின்றன. நடுங்கும் விரல்களிலும் தொட்டு ஏந்தும் கைகளிலும் அந்தச் சந்திப்பின் உணர்ச்சி செறிவாகிறது. தலைப்பின் நிறைவுக்குள் சொல்லப்படாத காயத்தின் நிழலும் தங்குகிறது.

‘இறுதி வணக்கம்’, ஒரு குழந்தையின் செய்கையைப் புரிந்துகொள்ள முயலும் பெரியவரின் பார்வை. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பும் கதைசொல்லி, ஆறு வயதுகூட நிறையாத வளவன் சிற்றுயிர்களைக் கொல்வதைக் கண்டு கலங்குகிறான். அங்கிருந்து விரியும் நினைவுகளில், வெடிச்சத்தத்துக்கு நடுங்கிய அக்கா போராளியாகவும் மருத்துவப் பணியாளராகவும் தாயாகவும் மாறியிருக்கிறாள். பூவரச இலையைக் கையாளும் வளவனின் கவனத்தில் அவன் செய்கையின் மற்றொரு பொருள் தெரியத் தொடங்குகிறது. பெரியவர்களின் சடங்குகள் குழந்தையின் விளையாட்டுக்குள் நுழைந்திருப்பதை உணரும் கணத்தில், அவனைப் பற்றிய நமது தீர்ப்பும் நிலைகுலைகிறது.

சயந்தனின் பூரணம், ஓர் அறிமுகம்

‘உளவாளி’யின் பதினாறு வயதுக் கதைசொல்லி, இயக்க முகாமிலிருந்து தப்பி வீட்டுக்குச் செல்ல விரும்புகிறான். இடையில் பிடிபட்டதும் பழைய முகாமுக்கே திரும்பினால் போதும் என்கிற அளவுக்கு விருப்பம் சுருங்கிவிடுகிறது. அவனோடு தண்டனை அனுபவிக்கும் முத்தப்பாவைத் துரோகியாகக் கருதித் தன்னை அவரிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ள முயல்கிறான். முத்தப்பாவின் வாழ்வு இரவுகளில் சிறிது சிறிதாகத் திறக்கிறது. குற்றத்தை அறிந்துகொண்டே மனிதரிடம் நெருங்கிச் செல்லும் இந்த வாசிப்பில் கதையின் அறச்சிக்கல் உயிர்பெறுகிறது.

‘பார ஊர்தி’யில் சாலை விபத்தொன்றைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிற்கும் பரந்தாமனின் கவனம், கேள்விகளிலிருந்து விலகி ஒரு குழந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறது. குழந்தையை அணைக்க விரும்பிய தருணமும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து விலகிய தருணமும் ஒன்றையொன்று உறுத்திக்கொண்டிருக்கின்றன. தேங்காய்களை ஏற்றிய ஊர்தியின் பாரம் அவனுடைய மனத்திற்குள் இடம்பெயர்கிறது. வாழ்க்கை துக்கத்திற்குப் பிறகும் நகர்ந்திருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் அருகாமையிலிருந்து அவன் அறிகிறான். ஊர்தியின் சுமையும் மனத்தின் சுமையும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதில் கதையின் உருவகம் முழுமை பெறுகிறது.

‘கந்தக வண்டி’, மாங்குளம் முகாமில் முற்றுகைக்குள் சிக்கிய சிங்கள இராணுவ வீரனின் குரலில் விரிகிறது. தாயின் சோறும் வீட்டுக் கூரையைத் திருத்தும் ஆசையும் ஊரிலிருக்கும் பெண்ணின் நினைவும் அந்த நேரத்திற்குள் வந்து செல்கின்றன. தன்னைக் கொல்ல வரக்கூடிய வெடிமருந்து வண்டியின் சாரதிக்கு ஒரு முகத்தைக் கற்பனை செய்யத் தொடங்கும்போது கதைசொல்லியின் அகம் மேலும் விரிகிறது. கற்பனையில் தாயின் முகமும் வீட்டின் தோற்றமும் வழிபாட்டின் அடையாளங்களும் மாறிக் கலப்பது, மற்றொருவரின் இழப்பை உணரும் தருணத்திற்கு ஆழம் சேர்க்கிறது.

‘பூரணம்’ தொகுப்பின் ஆறு கதைகளிலும் மனிதர்கள் தங்களுடைய பலவீனங்களைக் கடந்தும், அல்லது அவற்றைச் சுமந்துமே பிறரை அணுகுகிறார்கள். ஈழத்துப் பேச்சின் நெருக்கம், உடல் அசைவுகளின் துல்லியம், நிலம் சார்ந்த உவமைகள், நகைச்சுவைக்குள் மறைந்திருக்கும் துயரம் ஆகியவை இந்த அனுபவங்களுக்குப் புனைவின் அடர்த்தியை அளிக்கின்றன. கதைகளின் முடிவுகள், ஏற்கெனவே வாசித்த சாதாரண விவரங்களுக்கும் புதிய கனத்தைச் சேர்க்கின்றன.

பூரணம்
சிறுகதைகள்
சயந்தன்
தமிழினி வெளியீடு
பக்கங்கள் 169
விலை 230
புத்தகத்தை வாங்க..

தமிழினி

தமிழினி

1 கருத்து

  1. allirajcovai15@gmail.com
    17.11.26

    வாழ்த்தும் வரவேற்பும்
    அல்லிராஜ்

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

Font size
Line spacing
Background